தடார்! தட்! தட்!
பரண்மேலிருக்கும் பழைய டிரங்க் பெட்டியை எடுக்க, மங்களா முயற்சி செய்தபோது புத்தகங்கள் சரிந்து விழுந்தன. பதறிக்கொண்டு ஓடி வந்தார் அம்மா.
“ஆஹா! என்னுடைய சர் எம்.வி. புத்தகம்!” என்றவாறே அம்மா அதைக் கையில் எடுத்தார். “இது, தன் கையெழுத்தைப் போட்டு சர் எம்.வி.யே நம்ம முத்தஜ்ஜிக்குக் கொடுத்தது. இதோ பார்!” என்றார். மங்களா தன் தாயின் பக்கத்தில் அமர்ந்தாள்.
“உனக்குத் தெரியுமா? உன்னோட கொள்ளுப்பாட்டி கல்லூரிக்குப் போனதற்கே எம்.வி.தான் காரணம்” என்றார் அம்மா பெருமையுடன். “ஆனால் சர்.எம்.வி ஒரு பொறியாளர் அல்லவா? அவருக்கும் நம்ம முத்தஜ்ஜியோட படிப்புக்கும் என்னம்மா சம்பந்தம்?” என்று கேட்டாள் மங்களா.
“ஆமாம். அவர் ஒரு பொறியாளர்தான். அவர் அணைக்கட்டுகள், பாலங்கள் மற்றும் பல கட்டிடங்களைக் கட்டினார். ஆனால், அவர் இன்னும் பல நற்காரியங்கள் செய்தார்.நாளைக்கு அவர் பிறந்த ஊரான முத்தேனஹள்ளிக்குப் போவோம், வா!” என்றார் அம்மா.
மலைப்பகுதியில் உள்ள வீடு
தற்போதைய பெங்களூருக்கு அருகிலுள்ள முத்தேனஹள்ளி என்ற சிறிய கிராமத்தில் பாறைகள் நிறைந்த குன்றுகளால் சூழப்பட்ட ஒரு வீடு இருந்தது. அந்த வீட்டில் 1860ஆம் ஆண்டு, செப்டம்பர் 15ஆம் தேதி ஒரு ஆண் மகவு பிறந்தது. அவர் பொறியாளர் ஆன பிறகு கட்டிய ஒரு சிறிய அலுவலகக் கட்டிடம் அந்த வீட்டுக்குப் பக்கத்தில் உள்ளது.
அந்த அலுவலகக் கட்டிடம் தற்போது ஒரு அருங்காட்சியமாக இருக்கிறது. அதில் உள்ள ஒவ்வொரு காட்சிப்பொருளும் அந்த பொறியாளரான சர் மோக்ஷகுண்டம் விஸ்வேஸ்வரய்யாவைப் பற்றி ஒரு கதையைச் சொல்லும். இந்தப் பெயர் மிகவும் நீளமானதல்லவா! எல்லோரும் அவரது பெயரைச் சுருக்கி சர் எம்.வி என்றே கூறத் தொடங்கினர். அவரது நண்பர்கள் அவரை விஸ்வா என்று அழைத்தனர்.
மாநகரை நோக்கி...
சிறுவனான விஸ்வா பள்ளிக்கூடம் செல்ல வெகுதூரம் நடக்க வேண்டியிருந்தது. பார்ப்பதற்கு மிகவும் பூஞ்சையாக இருந்த விஸ்வாவைப் பார்த்த ஒரு ஆசிரியர் இவன் வெகு நாட்கள் உயிர்வாழ மாட்டான் என்று சொன்னதாகக் கூறுவதும் உண்டு. ஆனால், இது விஸ்வாவையோ, அவரது குடும்பத்தாரையோ கவலைக்குள்ளாக்கவில்லை. அவனுக்கு நல்ல கல்வி கிடைக்கவேண்டுமென்ற ஒன்றே அவர்கள் விருப்பமாக இருந்தது.
விஸ்வாவுக்கு பதினைந்து வயதாகும் போது அவரது தந்தை இறந்துவிட்டார். ஆனாலும், அவர் தனது பள்ளிப் படிப்பை சிக்கபல்லாபுரா மற்றும் பெங்களூருவில் தொடர்ந்து, பிறகு சென்ட்ரல் கல்லூரியில் கலையியல் பட்டப்படிப்புப் படித்தார். அவர் கையில் பணம் அரிதாகவே இருந்தது. ஆனால், அதிர்ஷ்டவசமாக அவரை ஒரு தம்பதியர் தங்களுடைய குடும்பத்தில் சேர்த்துக் கொண்டனர். அவருக்கு உணவளித்து, தங்குவதற்கும் இடமளித்து, ஒரு சிறிய தொகையையும் கைச்செலவுக்காகக் கொடுத்து வந்தனர். அதற்குக் கைமாறாக விஸ்வா அந்த தம்பதியினருடைய இரண்டு பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தார்.
விஸ்வா 1881ஆம் ஆண்டு பட்டம் பெற்றார். பிறகு கல்வியுதவித் தொகை பெற்று பூனா நகரிலுள்ள காலேஜ் ஆஃப் சயின்ஸ் என்ற கல்லூரியில் கட்டிடப் பொறியியல் பட்டப்படிப்பைத் தொடர்ந்தார். அதிக மதிப்பெண் பெற்று முதல் மாணவனாகத் தேறினார்.
விஸ்வேஸ்வரய்யா, பெங்களூரு சென்ட்ரல் கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்த போது, கல்லூரி முதல்வர் திரு. சார்ல்ஸ் வாட்டர்ஸ் அவருக்கு ஒரு அகராதியை பரிசாக அளித்தார். விஸ்வேஸ்வரய்யா அதை அடுத்த 80 ஆண்டுகளுக்குப் பயன்படுத்தி வந்தார்.
பணத்தை வெகு சிக்கனமாகச் செலவழிக்கும் குணம் கொண்ட விஸ்வேஸ்வரய்யா, ஒரு சொற்பொழிவில், “உனக்குத் தேவையில்லாததை நீ வாங்கினால், உனக்குத் தேவைப்படுவதை நீ வாங்க முடியாமல் போய்விடும்” என்று கூறினார்.
பணிக்குச் செல்லக் குதிரை சவாரி
பல்கலைக்கழகத்திலேயே முதன்மை இடம் பெற்றுத் தேர்ச்சி பெற்றதனால் விஸ்வேஸ்வரய்யாவுக்கு அக்காலத்திய பம்பாய் மாநில பொதுப்பணித் துறையில் உதவிப் பொறியாளராக வேலை கிடைத்தது. பணியில் சேர்ந்த சில மாதங்களுக்குள்ளாகவே, பஞ்சாரா நதியிலிருந்து ததாரி என்னும் கிராமத்துக்கு தண்ணீர் கொண்டுவர சைஃபான் என்னும் ஒரு வடிகுழாய் அமைப்பைக் கட்டித் தந்தார். அந்தப் பணி நடந்துகொண்டிருந்தபோது, அவர் பஞ்சாரா நதியின் அக்கரையிலிருந்த முகாம் அலுவலகத்திலிருந்து இக்கரைக்குப் பணிக்கு வரவேண்டியிருந்தது. அவர் பணிக்கு வர எப்படிப் பயணம் செய்தார் தெரியுமா? நதியின் குறுக்கே குதிரை சவாரி செய்துதான்! ஆம், அது 1884ஆம் ஆண்டாயிற்றே!
ஒரு நாள் மாலை பலத்த மழை பெய்து நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. விஸ்வேஸ்வரய்யாவால் நதியின் குறுக்கே குதிரையில் பயணித்து அக்கரையிலுள்ள தனது தங்குமிடமாகிய பயணிகள் மாளிகைக்கு வந்து சேர இயலவில்லை. இரண்டு நாட்களுக்கு நந்தன்வன் மற்றும் ததாரி கிராம மக்கள் அவருக்கு உணவு மற்றும் தங்கும் வசதியைச் செய்து கொடுத்தனர். ஆனால், மூன்றாவது நாள் அவர் தனது முகாம் அலுவலகத்துக்குத் திரும்பிப் போக வேண்டியிருந்தது. அவர் என்ன செய்தார் தெரியுமா? தனது அலுவலக ஊழியர்கள் இருவரின் உதவியுடன் நதியை நீந்திக் கடந்தார். பள்ளிக்காலத்தில் நோஞ்சானாக கருதப்பட்ட நிலைமைக்கு மாறாக அவர் எவ்வளவு ஆற்றலுள்ள மனிதராகிவிட்டார் பாருங்கள்!
அப்போது தொடங்கிய விஸ்வேஸ்வரய்யாவின் பொதுப்பணி, எழுபது ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்தது.
ஓடையின் படுகையிலிருந்து மணலை அகற்றும் குழு
விஸ்வேஸ்வரய்யாவுக்குத் தண்ணீர் சேமிப்பில் மிகவும் அக்கறை உண்டு.அவர் நாடு முழுவதும் பற்பல குடிநீர் வசதி, கழிவுநீர் வடிகால் மற்றும் நீர்ப்பாசனத் திட்டங்களை வடிவமைத்தார்.
விஸ்வேஸ்வரய்யா அவர்கள் தற்போதைய ஏமன் நாட்டில் உள்ள ஏடன், கோலாப்பூர், இந்தூர், குவாலியர், போபால், நாக்பூர், கோவா, ராஜ்கோட், பவநகர், பரோடா, சங்க்லி மற்றும் பீஹார், ஒடிஸா மாநிலங்களிலுள்ள பல இடங்களிலும் தண்ணீர் விநியோக அமைப்புகளில் பணிபுரிந்தார்.
1894
சிந்து மாநிலத்தில் சேவை: ஒரு நதிக்கரையில் தண்ணீர் வடிகட்டும் அமைப்பை நிறுவி, சிந்து மாநிலத்தின் சுக்கூர் என்னும் ஊருக்கு (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) சுத்தமான குடிநீர் வசதி செய்து தந்தார்.
1889
புதிய நீர்ப்பாசன அமைப்பு: அன்றைய பம்பாய் மாகாணத்தில் ஒரு நீர்ப்பாசன வசதியை ஏற்படுத்தி, பல வட்டார நிலங்களுக்குத் தண்ணீர் கிடைக்கும் அமைப்புகளை வடிவமைத்து, அதன் வாயிலாக பயிர் மகசூல் அதிகரிக்கும் வகை செய்தார். அந்த வடிவமைப்பின் பெயர் பிளாக் சிஸ்டம் ஆஃப் இர்ரிகேஷன்(block system of irrigation).
1908
ஹைதராபாத்தில் கழிவுநீர் வடிகால் திட்டம்: ஒரு முறை, புயல் மழை சீற்றத்தால் முசிரி நதி, வெள்ளப் பெருக்கெடுத்தது, ஆயிரக்கணக்கான மக்கள் மாண்டனர். ஹைதராபாத் நிஜாம் விஸ்வேஸ்வரய்யாவை அழைத்து, இத்தகைய இழப்புகளைத் தவிர்க்கும் வகையில் ஒரு கழிவுநீர் வடிகால் அமைப்பு மற்றும் தண்ணீர் விநியோக அமைப்பையும் ஏற்படுத்தித் தருமாறு கேட்டுக்கொண்டார்.
தானியங்கி மடைக்கதவுகள்(sluice): பூனா நகருக்கு தண்ணீர் ஆதாரமான கதக்வசலா அணை ஒவ்வொரு பருவ மழையின் போதும் நிரம்பி வழியும். ஆனால் அணையில் தேங்கும் நீர் கோடைகாலத்துக்குப் போதுமானதாக இருப்பதில்லை. ஆகவே, அணையில் தேங்கி நிற்கும் நீரின் அளவை, அதிகரிக்கச் செய்யும் ஒரு தானியங்கிக் கதவமைப்பை வடிவமைத்து நிறுவினார் விஸ்வேஸ்வரய்யா. அதற்கு “ஆட்டோமாட்டிக் ஸ்லூயிஸ் சிஸ்டம்” என்று பெயரிட்டுக் *காப்புரிமைச் சான்றிதழும் பெற்றார். இதே போன்ற அமைப்புகள் குவாலியர் நகருக்கு அருகிலுள்ள திக்ரா அணைக்கட்டு மற்றும் மைசூருக்கு அருகிலுள்ள கிருஷ்ணராஜ சாகர் அணைக்கட்டிலும் பின்னர் நிறுவப்பட்டன.
*காப்புரிமைச் சான்றிதழ்: இது ஒரு அரசு அங்கீகாரம் அல்லது உரிமமாகும். இது புதிய விஷயங்களைக் கண்டுபிடித்தவர்கள், அந்தக் கண்டுபிடிப்பின் மீது, ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் முழு உரிமை கொண்டாட உதவுகிறது. அந்தக் காலகட்டத்தில் வேறு யாரும் அதற்கு செயல்வடிவம் கொடுக்கவோ, அதைப் பயன்படுத்தவோ அல்லது விற்பனை செய்யவோ தடைசெய்யப்படும்.
மைசூர் ஆண்டுகள்
ஹைதராபாத்தில் தன்னுடைய பொறியியல் ஆலோசனைப் பணியைச் செவ்வனே முடித்த பிறகு, 1909ஆம் ஆண்டில், அவருக்கு மைசூர் திவானிடமிருந்து ஒரு தந்தி வந்தது. விஸ்வேஸ்வரய்யாவை தலைமைப் பொறியாளராக நியமிக்க எண்ணுவதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், விஸ்வேஸ்வரய்யாவுக்கோ இத்தகைய வழக்கமான பணிகளில் ஈடுபட விருப்பமில்லை. அதனால், அவர் மைசூர் மாநிலத்தில் தொழிற்சாலைகளை நிறுவுவதிலும், தொழிற்கல்விச் சாலைகள் நிறுவுவதிலும் மட்டுமே ஆர்வம் கொண்டுள்ளதாகத் தெரியப்படுத்தினார். மைசூர் அரசும் அதை ஏற்றுக்கொண்டது.
மைசூர் மஹாராஜா நான்காம் ஸ்ரீ கிருஷ்ணராஜ உடையார், காவிரி நதியின் குறுக்கே ஒரு அணை கட்டுமாறு விஸ்வேஸ்வரய்யாவைக் கேட்டுக்கொண்டார். ஏற்கனவே, விஸ்வேஸ்வரய்யா எகிப்து நாட்டிலுள்ள அஸ்வான் அணைக்கட்டைப் போன்ற பெரிய அணைக்கட்டுகளைப் பார்வையிட்டிருந்தார். அங்குள்ள பொறியாளர்கள் எவ்விதம் அணைக்கட்டுகளைக் கட்டியிருந்தார்கள் என்பதைக் கூர்ந்து கவனித்திருந்தார். அந்த அனுபவத்தின் அடிப்படையில், கிருஷ்ணராஜ சாகர் அணைக்கட்டை வடிவமைத்தார். பல ஆண்டுகள் கடின உழைப்பில் கட்டப்பட்ட பிரம்மாண்டமான அந்த அணைக்கட்டை இன்றும் பல்லாயிரக்கணக்கானவர்கள் நாள்தோறும் பார்த்து மகிழ்கின்றனர். ஆண்டு 1912ஆல், கே.ஆர்.எஸ் அணை கட்டப்பட்ட போது: * கோலார் தங்க வயலுக்கு அதிலிருந்தே மின்சாரம் விநியோகிக்கப்பட்டது. * அதில் சுமார் மூன்று கிலோமீட்டர் நீளத்துக்கு மலையைக் குடைந்து உருவாக்கப்பட்ட ஒரு குகைப்பாதை இருந்தது. * இது, இந்தப் பகுதியில் கரும்புச் சாகுபடியை அதிகரித்து, பல சர்க்கரை ஆலைகள் நிறுவப்பட ஏதுவாகியது. * இதுதான் இந்தியாவின் மிகப்பெரிய அணைக்கட்டாக இருந்தது.
அனைவருக்கும் கல்வி
மைசூர் மஹாராஜா, 1912ஆம் ஆண்டில் விஸ்வேஸ்வரய்யாவுக்கு திவான் பதவியை மனமுவந்து அளித்தார். மாநிலமெங்கும் தொழில்நுட்பக் கல்வியையும் தொழிற்துறைகளையும் உருவாக்கும் வாய்ப்புகளை எதிர்நோக்கியிருந்த அவருக்கு பெரிய பதவிகளில் ஆர்வமில்லை. இருந்தாலும், மஹாராஹா வலியுறுத்தியதால் விஸ்வேஸ்வரய்யா திவானாகப் பதவியேற்றார். சிறந்த கல்வியின் முக்கியத்துவத்தை நன்கு அறிந்தவரான விஸ்வேஸ்வரய்யா பள்ளிக்கூடங்களையும், கல்லுரிகளையும் நிறுவ ஆவல் கொண்டார். திவானாக அவர் பதவி வகித்த 1912 முதல் 1918 வரையான காலகட்டத்தில், கல்விச் சாலைகளின் எண்ணிக்கை 4568இலிருந்து 11,294 ஆக உயர்ந்தது. மாநிலத்திலேயே பெண்களுக்கானப் பட்டப்படிப்பு வழங்கும் முதல் கல்லூரியாக, மைசூர் மஹாராணி கல்லூரியை உருவாக்கினார்.
தொழில்நுட்பக் கல்லுரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் விவசாயக் கல்லூரிகளையும் துவங்குவதற்கு விஸ்வேஸ்வரய்யாவே காரணமானார். இன்று, அரசியல் சட்டத்தில் அடிப்படை உரிமையாகக் கூறப்படும் கட்டாயக் கல்வியை விஸ்வேஸ்வரய்யா அன்றே அறிமுகப்படுத்தினார்.
ஒரு நாள், சர் எம்.வி., முத்தேனஹள்ளியில் உள்ள தனது பழைய பள்ளிக்கு, குழந்தைகளுக்காக ஒரு பொட்டலம் நிறைய சாக்லெட்டோடு சென்றபோது, அவரை ஒரு சொற்பொழிவு நிகழ்த்துமாறு கேட்டுக்கொண்டார்கள். அப்போது, அவர் சொற்பொழிவாற்ற ஆயத்தமாக வராததால், ஐந்து நிமிடங்கள் மட்டுமே பேசினார். அது அவருக்கு வருத்தமளித்தது. ஆகவே, பேசுவதற்குத் தன்னை நன்றாக ஆயத்தம் செய்துகொண்டு, சில நாட்கள் கழித்து அதே பள்ளிக்கு மீண்டும் வந்து சொற்பொழிவாற்றினார்.
தான் நிறுவிய ‘மைசூர் அயர்ன் வொர்க்ஸ்’ நிறுவனத்திலிருந்து விலகியபோது, அவருக்கு வரவேண்டிய ஒரு பெரிய தொகை பாக்கி இருந்தது. அவர், அத்தொகையைக் கொண்டு ஆண்கள் தொழில்ரீதியான கல்வி கற்க, பெங்களூரில் ‘ஸ்ரீ ஜயச்சாமராஜேந்திரா ஆக்யுபேஷனல் இன்ஸ்டிட்யூட்’டை நிறுவினார். அதுவே, இப்போது ‘ஸ்ரீ ஜயச்சாமராஜேந்திரா பாலிடெக்னிக்’ என அழைக்கப்படுகிறது.
பின்னாளில் 'விஸ்வேஸ்வரய்யா அயர்ன் அண்ட் ஸ்டீல் ப்ளாண்ட்’ என்று மறுபெயரிடப்பட்ட ‘மைசூர் அயர்ன் வொர்க்ஸ்’ உருவாக்கிய முதல் விநாயகர்
சர் எம்.வி. அவர்கள் துவங்க உதவிய கல்விச்சாலைகள்
அரசு பொறியியல் கல்லூரி (மறுபெயரிடப்பட்ட, பல்கலைக்கழக விஸ்வேஸ்வரய்யா பொறியியல் கல்லூரி), பெங்களூரு.
ஹெப்பால் வேளாண் பள்ளி, பெங்களூரு. இது விவசாய அறிவியல் பல்கலைக்கழகம் உருவாகக் காரணமானது.
ஸ்ரீ ஜயச்சாமராஜேந்திரா பாலிடெக்னிக், பெங்களூரு.
மைசூர் பல்கலைக்கழகம், மைசூரு. (மறுபெயரிடப்பட்ட யுனிவர்சிடி ஆஃப் மைசூர்)
மேதைக்கு கௌரவம்இதற்குள்ளாக, அவரது பணிகளால், விஸ்வேஸ்வரய்யா, ஒரு சிறந்த பொறியியல் வல்லுநர் என்றும், ஒரு செயல் தலைவர் என்றும் நாடு முழுவதும் பலரது அங்கீகாரத்தைப் பெற்றிருந்தார். அவர் மைசூர் திவானாகப் பணியாற்றி வந்த 1915ஆம் ஆண்டு, அன்றைய பிரிட்டிஷ் அரசு அவருக்கு ‘நைட் கம்மாண்டர் ஆஃப் த ஆர்டர் ஆஃப் த இண்டியன் எம்பையர்’(Knight Commander of the order of the Indian Empire-KCIE) என்ற பட்டம் வழங்கி கௌரவித்தது. அன்றிலிருந்து அவர் சர் எம். விஸ்வேஸ்வரய்யா என்று அழைக்கப்படலானார்.
தொலைநோக்குச் சிந்தனை கொண்ட விஸ்வேஸ்வரய்யா பல நாடுகளுக்குச் சென்று அங்குள்ள பெரிய தொழிற்சாலைகள் மற்றும் பெரும் கட்டுமானத் திட்டப்பணிகளைப் பார்வையிட்டார். அங்கே அவர்களுக்கு தனது ஆலோசனைகளை அளித்ததோடல்லாமல், அதேபோன்ற முன்னேற்றங்களை நமது நாட்டுக்குக் கொண்டுவர என்ன வழி என்றும் சிந்தித்தார். நமது நாட்டில் ஏழ்மை குறைய வேண்டுமென்றால் அது ஒவ்வொருவருக்கும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு அளிப்பதன் வாயிலாகவே சாத்தியம் என்றுணர்ந்தார்.
அதனால் அவர் அடிக்கடி அழுத்தந்திருத்தமாகக் கூறிய ஒரு வாசகம் இது: “நாட்டைத் தொழில்மயமாக்குங்கள், இல்லையேல் நமக்கு அழிவுதான்.” ஆனால், அதே காலகட்டத்தில், காந்திஜி “நாட்டைத் தொழில்மயமாக்கினால் நமக்கு அழிவுதான்,” என்று முழக்கமிட்டு வந்தார். இந்த இரண்டு பெரிய மனிதர்களும், துரதிர்ஷ்டவசமாக, தொழில்மயமாக்குதல் பற்றி ஒத்த கருத்து இல்லாதவர்களாக இருந்தபோதிலும் ஒருவரை ஒருவர் மதித்தனர்.
திடமான நம்பிக்கைகள்
விஸ்வேஸ்வரய்யா மிகவும் எளிமையான மனிதர். அனைத்து மக்களும் அவரவர் புரியும் பணிகளுக்காகவே மதிக்கப்பட வேண்டுமென்பதில் நம்பிக்கை கொண்டிருந்தார். மைசூரு தசரா கொண்டாட்ட சமயங்களில், ஆங்கிலேய அதிகாரிகள் இருக்கைகளில் அமர்ந்திருக்க, இந்திய அதிகாரிகள் தரையில் அமர்ந்திருக்கவோ அல்லது பின்னால் நின்று கொண்டிருக்கவோ வேண்டியிருந்தது. இத்தகைய வேறுபாடு காட்டப்படும் தர்பாருக்குப் போவதை விஸ்வேஸ்வரய்யா நிறுத்திக்கொண்டார்! அதைக் கவனித்த அரசாங்கத்தினர், இந்திய அதிகாரிகளுக்கும் இருக்கைகளை ஏற்பாடு செய்தனர்.
ஒரு விசேஷ மகிழ்வுந்துப் பயணம் தனது வயதான காலத்தில், ஒரு சமயம், சொந்த கிராமத்துக்குச் செல்ல விரும்பினார் விஸ்வேஸ்வரய்யா. அப்போதைய முதலமைச்சர், கெங்கல் ஹனுமந்தையா அரசாங்க மகிழ்வுந்தில் செல்லுமாறு கூறினார். விஸ்வேஸ்வரய்யா அதை ஏற்றுக்கொள்ளவில்லை, “நான் அரசாங்க வேலைக்காகச் செல்லவில்லையே!” என்று மறுத்துவிட்டார். அதனால், முதலமைச்சர் அவரைத் தனது வண்டியில் அமர்த்திக்கொண்டு தானே ஓட்டிச்சென்றார்.
உறுதியாகவும் முழுமையாகவும் பணியாற்றுபவர் பெரிய கட்டிடங்கள் மற்றும் கட்டமைப்புகளை ஒருவர் மட்டுமே கட்ட இயலாது. கனவு காண்பவர்கள், ஆராய்ச்சியாளர்கள், நிதியுதவி அளிப்பவர், கட்டிடம் கட்டும் கொத்தனார்கள், கூலிகள் மற்றும் இன்னும் பல பேர்கள் ஒன்று கூடியே ஒரு கட்டிடத்தைக் கட்டி முடிக்க இயலும். சர் எம்.வி. கடுமையாகவும், திறமையுடனும் உழைத்தார். தன்னுடன் பணியாற்றுபவர்கள் தங்களது பணிகளைச் சிறப்பாகச் செய்திட ஊக்கமும் அளித்தார். ஒருமுறை, விஸ்வேஸ்வரய்யா வட அமெரிக்காவுக்கு ஓர் ஆய்வுக்காகச் சென்றிருந்தார். அப்போது, அங்கே அவரை அழைத்துச் சென்றவர், நான்கு மாடி அளவு உயரமுள்ள ஓர் ஏணியைக் காட்டி, “இதில் ஏறினால்தான் நாம் பார்க்க வந்த இயந்திரத்தைப் பார்வையிட இயலும்” என்றார். இதைக்கேட்ட அனைவரும் பயந்துவிட்டனர். ஆனால், எம்.வி. அச்சப்படவேயில்லை! மிகவும் சுறுசுறுப்பாக அந்த ஏணியில் ஏறினார். அப்போது அவருக்கு வயது 85!
அவருக்கு 90 வயதாகும் போது, அன்றைய இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் அவரை அழைத்தார். கங்கை நதியின் குறுக்கே பாலங்கள் கட்டுவதற்கானத் திட்டங்களைப் பரிசீலிக்கும்படிக் கேட்டுக் கொண்டார். அதற்காக, எம்.வி. அவ்விடங்களை விமானத்தில் சென்று ஆய்வு செய்தார். மலைப்பாங்கான, அபாயம் மிகுந்த அந்த இடங்களை அவர் ஆய்வு செய்வார் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் சர் எம்.வி., முற்றிலும் ஆராய்ந்து பார்க்காமல், ஏற்பாடுகளைச் சரிவரச் செய்யாமல் எந்த ஒரு பணியிலும் ஈடுபடமாட்டார். ஆகவே, அவர் அந்தந்த இடங்களுக்குப் பயணம் செய்து குறிப்புகள் எடுத்துக்கொண்டார். அதன் அடிப்படையில் அவர் தேர்ந்தெடுத்த இடமான, பீகார் மாநிலத்திலுள்ள மொகாமாவில் சாலை மற்றும் இருப்புப்பாதையுடன் ஒரு பாலம் கட்டப்பட்டது.
படிப்பதில் மிகுந்த ஆர்வம் சர் எம்.வி. இடைவிடாது கற்பதில் ஆர்வம் கொண்டிருந்தார். அவருக்கு வயது நூறு ஆண்டுகளைக் கடந்த பிறகு ஒரு சமயம், அவரது உறவினர் ஒருவர், சென்னையிலிருந்து என்ன வாங்கிவர வேண்டுமெனக் கேட்டார். அதற்கு அவர், “எனக்கு ஒரு நல்ல நவீன அகராதி வாங்கி வாருங்கள்,” என்று பதிலளித்தார். அந்த அகராதி தற்போது முத்தேனஹள்ளி அருங்காட்சியகத்தில் உள்ளது. மைசூர் விவசாய உறைவிடப் பள்ளியைத் துவங்க எம்.வி உதவினார்.
அதுவே பிற்காலத்தில் விவசாய அறிவியல் பல்கலைக்கழகமாக உருவெடுத்தது. அங்கே, அவர் வழக்கமாக விரும்பி அமரும் பாறைக்கும் அவரது பெயரே இடப்பட்டது.
அவருடைய சொந்த நூலகத்தில் இருக்கும் புத்தகங்களில் சில, கபீரின் பாடல்கள், அரேபியன் நைட்ஸ், மார்க் ட்வைன் எழுதிய டாம் சாயர் அப்ராட், சார்ல்ஸ் டிக்கன்ஸ் எழுதிய பிக்விக் பேப்பர்ஸ், டா. பீட்டர் ஸ்கிமிட் எழுதிய டோன்ட் பீ டயர்ட், மாக்மில்லன் எழுதிய பிரமோஷன் ஆஃப் ஹாப்பினஸ், ரவீந்திரநாத் தாகூர் எழுதிய ஸ்ட்ரே பர்ட்ஸ் என்பவையாகும். அதே நூலகத்தில் அவர் எழுதிய நூல்களும் உள்ளன. அவை, மெமோயிர்ஸ் ஆஃப் மை வொர்க்கிங் லைஃப், கன்ஸ்டிரக்டிங் இண்டியா, நேஷன் பில்டிங்: எ ஃபைவ் இயர் ப்ளான் ஃபார் த ப்ராவின்சஸ் மற்றும் ப்ராஸ்பரிட்டி த்ரூ இண்ட்ஸ்ட்ரி ஆகும்.
ஒரு பொறியாளர் என்ற முறையில், கல்வி மற்றும் ஒழுங்குமுறைக்கு மதிப்பளித்த சர் எம்.வி., பல கோடி மக்களுக்கு ஊக்கமளிப்பவராகத் திகழ்ந்தார். அவர்களுள் ஒருவன் ராமு என்ற பையன். எம்.வி.க்கு பார்வை மங்கலான போது, அவருக்குச் செய்திதாள்களிலிருந்து செய்திகளைப் படிப்பது அவன் வேலையாக இருந்தது. ராமு சரியான நேரத்துக்கு வந்து, செய்திகளைப் படித்துவிட்டுப் பள்ளிக்கு நேரத்தோடு செல்லவேண்டுமென்று அவர் விரும்பினார். அதற்காக அவர், அவனுக்கு அன்றாடம் பத்துப் பைசா அளித்தார். இதனால் ராமுவின் கற்கும் திறனும் மேம்பட்டது.
ராமு பின்னாளில் ஓர் ஆசிரியரானார். பதவி ஓய்வு பெற்ற பிறகு அவர் தும்கூரில் ஸ்கௌட் மாஸ்டர் ஆனார். அங்கே தேகப்பயிற்சி, நினைவாற்றல் விளையாட்டுகள், முதலுதவி ஆகியவற்றைக் குழந்தைகளுக்கு கட்டணமின்றிக் கற்பித்தார்.
மங்களாவும், அம்மாவும் விஸ்வேஸ்வரய்யாவைப் பற்றி ஒரு வாரமாக கற்று வந்தனர்.
“அம்மா, சர் எம்.வி. மைசூரில் மகளிருக்காக பட்டப்படிப்பை அறிமுகப்படுத்தியதால், நம் முத்தஜ்ஜி ஒரு பட்டம் வாங்கினார் அல்லவா?” என்று மங்களா கேட்டாள். ஆமாம் என்பது போல் தலையை அசைத்தார் அம்மா.
“அம்மா, சர் எம்.வி. துவங்கிய மைசூர் வங்கியில் அஜ்ஜி ஒரு கணக்குக் கூட வைத்திருந்தார் அல்லவா?” ஆமாம் என்பது போல் தலையை அசைத்தார் அம்மா.
“அம்மா, நீங்கள் கன்னட சாஹித்ய பரிஷத்தில் பணி புரிந்தீர்கள் அல்லவா?” மறுபடியும் தலையை அசைத்தார் அம்மா.
“அம்மா, அவருடைய நினைவாகத் தொடங்கப்பட்ட விஸ்வேஸ்வரய்யா தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகத்தை நான் பார்க்க விரும்புகிறேன்!” என்றாள் மங்களா.
“கண்டிப்பாகப் போவோம். அடுத்த வாரம் அவருடைய பிறந்த நாள் வருகிறது. அன்றைக்குப் போகலாம்,” என்றார் அம்மா.
விஸ்வேஸ்வரய்யா தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம்
ஆண்டுதோறும் செப்டம்பர் 15ஆம் நாள், இந்திய நாடு பெற்றெடுத்த அருந்தவப் புதல்வர், தலை சிறந்த பொறியாளர் மற்றும் தொலைநோக்காளரான சர் மோக்ஷகுண்டம் விஸ்வேஸ்வரய்யா அவர்களை கௌரவிக்கும் பொருட்டு, ‘தேசியப் பொறியாளர் தினமா’கக் கொண்டாடப்படுகிறது.
விஸ்வேஸ்வரய்யா அவர்கள், கன்னட மொழியை, பல்வேறு வட்டார வழக்குகளில் பேசும் அனைத்து மக்களையும் ஒன்று சேர்த்திட பெங்களூரில் ‘கர்நாடக சாஹித்ய பரிஷத்’ என்ற அமைப்பை நிறுவ உதவினார். பின்னர் இது ‘கன்னட சாஹித்ய பரிஷத்’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
சர் எம்.வி.யின் அலுவலகம், இப்போது ஓர் அருங்காட்சியகம்
வாழ்க்கை நிகழ்வுகள்
செப்டம்பர் 15, 1860
முத்தேனஹள்ளியில் வெங்கடலக்ஷ்மம்மா மற்றும் ஸ்ரீநிவாச சாஸ்திரி ஆகியோருக்குப் பிறந்தார்.
1875
பி.ஏ. படிக்க பெங்களூருவுக்குச் சென்றார்.
1884
பம்பாய் அரசின் பொதுப்பணித்துறையில் பணியில் அமர்ந்தார்.
1883
பூனா காலேஜ் ஆஃப் சயின்ஸ் கல்லூரியில் கட்டிடப் பொறியியல் பட்டம் பெற்றார்.
1909
மைசூர் தலைமைப் பொறியாளராக பணியிலமர்த்தப்பட்டார்.
1912
மைசூர் திவானாக நியமிக்கப்பட்டார்.
1915
அவரது பொதுநல சேவையை மெச்சி, பிரிட்டிஷ் 5-ம் ஜார்ஜ் மன்னர், அவருக்கு 'நைட் கமாண்டர் ஆஃப் த ஆர்டர் ஆஃப் த இண்டியன் எம்பையர்'(KCIE) என்று பட்டமளித்ததனால் சர் எம்.வி. ஆனார்.
1955
பொறியியல்துறை, கல்வித்துறை மற்றும் தேச முன்னேற்றம் ஆகியவற்றுக்குச் சிறந்த பணிபுரிந்தமைக்காக‘பாரத ரத்னா’ விருது அளித்து கௌரவிக்கப்பட்டார்.
ஏப்ரல் 12,1962
தனது 102-வது வயது நிறைவடைவதற்கு ஐந்து மாதங்கள் இருந்த போதுஇறைவனடி சேர்ந்தார்.
கதக்வசலா, மஹாராஷ்டிரா
தூலே, மஹாராஷ்டிரா
கன்னட சாஹித்ய பரிஷத்
மைசூர் சந்தன எண்ணெய் தொழிற்சாலை
ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர்
என்றென்றும் ஊக்கமளிப்பவர்
முத்தேனஹள்ளி அருங்காட்சியகத்தில் பராமரிக்கப்படும் சர் எம்.வி. அவர்களின் அறை
ஒரு விவசாயியின் கட்டைமாட்டுவண்டியில் சர் எம்.வி.யின் சித்திரம்