சிரஞ்சீவிக் கதை
தயவு செய்து தப்பாக எண்ணிக் கொள்ள வேண்டாம். நான் எழுதப் போகிற இந்தக் கதை "சிரஞ்சீவிக் கதை" என்பதாக நான் உரிமை கொண்டாடவில்லை. உண்மையில், இது தீர்க்காயுள் பெற்ற கதை கூட அன்று. இதனுடைய ஆயுள் மூன்று நிமிஷந்தான், வேகமாய்ப் படிப்பவர்களுக்கு. எழுத்துக் கூட்டிப் படித்தால் கூட ஐந்து நிமிஷந்தான் இக்கதையின் வாழ்வு.
இந்தக் கதைக்குத் தலைப்பாக அமைந்த "சிரஞ்சீவிக் கதை" ஒரு ஹாஸ்யப் பத்திரிகையிலே வெளியானது. அதில், ஒரு ஸ்திரீ எப்படித் தன் நாத்தனார் மீது வஞ்சம் தீர்க்கும் பொருட்டுத் தன் மூன்று குழந்தைகளைக் கொன்று, நான்கு பூனைக் குட்டிகளைக் கொன்று, தன்னையும் கொன்று கொண்டாள் என்பதும், இந்தச் சம்பவங்களினால் மனமுடைந்த அவளுடைய கணவன் வீதியோடு போகும்போது எப்படி ஒரு டிராம் வண்டி அவன் மீது ஏறி அவனை உடல் வேறு தலை வேறு ஆக்கிற்று என்பதும் ஆச்சரியகரமான முறையில் வியக்கத்தக்க நடையில் நகைச்சுவை ததும்ப விவரிக்கப்பட்டிருந்தது. அந்தக் கதையின் தலைப்பு "அமிர்தபானம்". தலைப்புக்கு மேலே பத்திரிகாசிரியர் கட்டங்கட்டி விசேஷக் குறிப்பு ஒன்றும் வெளியிட்டிருந்தார்.
அந்த விசேஷக் குறிப்பின் முதல் வரியைப் படித்ததுதான் என்னுடைய கதாநாயகர் ஸ்ரீமான் மார்க்கண்ட முதலியார் செய்த தப்பிதம். பத்திரிகை படிக்கும் விஷயத்தில் அவர் தம் வாணாளில் செய்த முதல் தப்பிதம் அது தான். கடைசித் தப்பிதமும் அதுவேதான்.
மேற்படி தப்பிதம் கூட அவர் வேண்டுமென்று மனமாரச் செய்யவில்லை. பணம் கொடுத்துப் பத்திரிகை வாங்கி, ஊசியைப் பெயர்த்து எடுத்து, பக்கங்களைப் புரட்டி வாசிப்பதற்கு வேண்டிய உற்சாகம் அவரிடம் லவலேசமும் கிடையாது. சாயங்காலம் ஆபீஸ் விட்டதும் வழக்கம் போல் மயிலாப்பூர் டிராம் வண்டியில் ஏறி உட்கார்ந்தார். வழியில் மௌண்ட் ரோட்டில் அந்த வண்டியில் ஏறி அவர் பக்கத்தில் உட்கார்ந்த ஒரு மனுஷன் கையில் மேற்படி பத்திரிகை இருந்தது. அந்தச் சிரஞ்சீவிக் கதை பிரசுரமாயிருந்த பக்கத்தை அவன் பிரித்து வைத்துக் கொண்டிருந்தான். தற்செயலாக ஸ்ரீமான் மார்க்கண்ட முதலியாருடைய பார்வை அந்தப் பக்கத்தின் மேல் அந்தக் கட்டத்திற்குள் விழுந்தது.
இது ஒரு சிரஞ்சீவிக் கதை. இதன் ஆசிரியர் ஆயுள் காலத்தில் இந்தக் கதை சாகாது. எனெனில், அவர் நம் உடம்பில் உயிருள்ள வரையில் தினம் ஒரு தடவையாவது, ஒருவரிடமாவது, "என்னுடைய 'அமிர்தபானம்' என்னும் கதையை வாசித்தாயா?" என்று கேட்டுக் கொண்டு தானிருப்பார்!...
"இது ஒரு சிரஞ்சீவிக் கதை..." என்று முதலியார் படித்தார். அவ்வளவு தான்; அதற்குமேல் அவருடைய பார்வை சொல்லவில்லை! ஆனால் மனம் என்னவோ வேலை செய்யத் தொடங்கிவிட்டது!