somberi mama

சோம்பேறி மாமா

சோம்பேறியான ரகு மாமா தனது நாற்காலியிலிருந்து நகராமலேயே சாகசப் பயணங்களை மேற்கொள்வதாகச் சொல்லும்போது, அமிஷும் சோனியும் ஆச்சரியம் அடைகிறார்கள். அதை எப்படிச் செய்கிறார்? அமிஷும் சோனியும் கூட அந்த சாகசப் பயணங்களில் உடன் செல்லமுடியுமா?

- Vetri | வெற்றி

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

டொக்!  டொக்!

அம்மா கதவைத் திறந்தார்.

“ரகு மாமா!” என்று கத்தியபடியே

அமிஷும் சோனியும்  ஓடிப்போய்

அவரை அணைத்துக்கொண்டார்கள்.

அம்மாவின் ஒரே சகோதரர் ரகு மாமா. அவர்  நல்ல கதைகளைச் சொல்வதோடு

அவர்களுக்கு ஆர்வமூட்டும் பரிசுகளையும் வாங்கி வருவார்.

ஆனால் ரகு மாமாவிடம் ஒரு பிரச்சனை இருந்தது.

ரகு மாமா பெரிய சோம்பேறி. அவரால் நாற்காலியில் உட்கார்ந்தபடி மணிக்கணக்காக வெறுமனே படித்துக்கொண்டோ, தொலைக்காட்சியைப்பார்த்துக்கொண்டோ இருக்கமுடியும். இல்லாவிட்டால் தூங்கிக்கொண்டிருப்பார்.

வீட்டில் எந்த வேலையும் செய்யமாட்டார். கடைத்தெருவுக்குப் போய் மளிகைசாமான்கள் கூட வாங்கிவரமாட்டார். அவர் சோம்பேறித்தனத்தைக் கண்டால் அம்மாவுக்கு எரிச்சலாக வரும்.

”என்ன ரகு, விடுமுறையை வழக்கம் போல உன்னோட பிரியமான நாற்காலியிலேயே கழிக்கத் திட்டமா?” என்று அம்மா கேட்டார்.

“அப்படி இல்லை அக்கா! இந்த முறை நான் நீருக்கடியில் இருக்கிற குகைகளில் ஆய்வுப்பயணம் போகவும், உயரமான மலைகளில் ஏறவும், காட்டில் புலிகளைத் துரத்தவும் போகிறேன்.”

என்றார் ரகு மாமா.

“எங்கே, எங்கே? நாங்களும் வருவோம்”

என்று அமிஷும் சோனியும் உற்சாகமாகக் கத்தினர்.

“அடடா! நல்ல வேடிக்கை!” என்றார் அம்மா.

ரகு மாமா மர்மமாகச் சிரித்தார்.

அடுத்த நாள் ரகு மாமா தனது அறையிலிருந்து யாருடனோ பேசிக்கொண்டிருப்பது அமிஷ், சோனியின் காதுகளில் கேட்டது.

“அடடா” என்றார்.

பின்னர், “என்ன அற்புதமாய் இருக்கு!” என்றார்.

சிறிது நேரம் கழித்து,

“ஓ! வேண்டாம், வேண்டாம்!” என்று கத்தினார்.

”என்னாச்சு மாமா?” என்று கேட்டபடி குழந்தைகள் இருவரும் அவர் அறையைத் திறந்துகொண்டு ஓடிவந்தனர்.

ரகு மாமா தடிமனான பெரிய கருப்புக் கண்ணாடி அணிந்துகொண்டு தனது பிரியமான நாற்காலியில் அமர்ந்திருந்தார். சுற்றிலும் யாருமே இல்லை! சோனியும் அமிஷும் ஆச்சரியத்தோடு ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.

“மாமா, உங்களுக்கு ஒன்றும் ஆகவில்லையே?” மாமாவின் முகத்தை ஏறக்குறைய முழுதாக மூடியிருந்த கருப்புக் கண்ணாடியைப் பார்த்துக்கொண்டே அமிஷ் கேட்டான்.

ரகு மாமா சிரித்துக்கொண்டே கண்ணாடியைக் கழற்றினார். “இந்தா, இதைப் போட்டுப் பாரு" என்று சோனியிடம் கொடுத்தார்.

“என்ன இது?” என்று சோனி கேட்டாள். அந்த கண்ணாடி மிகக் கனமாக இருந்ததால் அவள் இரு கைகளாலும் பிடித்துக்கொள்ள வேண்டியிருந்தது.

ரகு மாமா கவனமாக சோனியின் முகத்தில் அந்தக் கண்ணாடியை அணிவித்தார். கண்ணாடி கருப்பாக இருந்ததால், அவளால் முதலில் எதையுமே பார்க்க முடியவில்லை. பின்னர் அவர் ஒரு பொத்தானை அழுத்தினார்.

திடீரென சோனி கடலுக்கடியில் இருந்தாள்! அவளைச் சுற்றி வண்ண வண்ண மீன்கள் இருந்தன. இடது பக்கம் தலையைத் திருப்பினாள்; அவளுக்குப் பின்னே ஒரு பெரிய ஆமை நீந்திக்கொண்டிருப்பதைப் பார்த்தாள். அது மிக அருகில் இருந்தது. கையை நீட்டினால் அதைத் தொட்டுவிடலாம் என்று நினைத்தாள்.

பின்னர் தலையை வலது பக்கம் திருப்பினாள் .

“அம்மா!” ஒரு பெரிய சுறா மீன்  அவள் அருகே

நீந்தி வர அவள் அலறினாள்.

”நானும் பார்க்கிறேன், நானும் பார்க்கிறேன்!” என்று அமிஷ், அதிர்ச்சியடைந்திருந்த சோனியிடமிருந்து கண்ணாடியைப் பறிக்க முயன்றான்.

”அடுத்தது உன்னோட முறைதான் அமிஷ், உனக்காகவே ஒரு சாகசப் பயணம் வைத்திருக்கிறேன்.” என்றார் ரகு மாமா. அமிஷ் கண்ணாடியை அணிந்து கொள்ள மாமா இன்னொரு பொத்தானை அழுத்தினார்.

“ஆஹா! எனக்கு ஒரு புள்ளிமான் கூட்டமே தெரிகிறது! அட! அதோ லங்கூர் குரங்குகள்!” அமிஷ் மரங்கள் அடர்ந்த ஒரு காட்டில் இருந்தான். வித்தியாசமான பறவைகளின் சத்தங்கள் கேட்டன.

மேலே பார்த்தால், பல வாத்துகள் கூம்பு போன்ற வடிவமைப்பில் பறந்துகொண்டிருந்தன.

“அப்படியே உண்மையா இருந்த மாதிரியே இருந்தது. அந்தக் கண்ணாடியைப் போட்டதும் நீருக்கடியில நீந்திகிட்டிருந்த மாதிரியே இருந்தது,” என்றாள் சோனி. “ஆமாம், அதனால் தான் இதை ‘மெய்நிகர் தோற்றம்’ (virtual Reality) என்று சொல்கிறார்கள் போலும்.” என்றார் ரகு மாமா. சோனிக்குக் குழப்பம். “ ‘மெய்நிகர்’ என்றால் உண்மை இல்லை என்றுதானே அர்த்தம்?” என்று கேட்டாள். “இந்தத் தோற்றம் உண்மையானது இல்லைதானே?” “இது ஒரு புத்திசாலித்தனமான கேள்வி,” என்றார் ரகு மாமா. “இதை மெய்நிகர் தோற்றம்’ என்று ஏன் சொல்கிறோம் என்றால் நீங்கள் பார்க்கிற பொருளை அங்கே உண்மையாக இருப்பதுபோல உங்களை உணரவைப்பதால் தான். அதனால் இது கிட்டத்தட்ட உண்மை!” “காப்பாற்றுங்கள்! என்னை ஒரு புலி தின்னப் போகிறது!” என்று அமிஷ் அலறினான். ரகு மாமா சிரித்தார். “கவலைப்படாதே, நீ பத்திரமாகத்தான் இருக்கிறாய்!” என்று அமிஷிடம் சொன்னார். “இது ஒரு திரைப்படம் பார்க்கிற மாதிரியே இருக்கிறது. ஆனால் அதைவிட நன்றாக இருக்கிறது” என்று சோனி உற்சாகமாகச் சொன்னாள். “சரியாகச் சொன்னாய்! நாம் திரையரங்கத்தில் படம் பார்க்கிறபோது திரை நமக்கு முன்பக்கம் மட்டும்தான் இருக்கும். ஆனால் மெய்நிகர் தோற்றக் கண்ணாடியை அணிகிற போது, படம் நம்மைச் சுற்றி எல்லாப் பக்கமும் இருப்பது போல உணர்வோம்.”

”அப்போ நீங்களும் என்னைப் போலவே மெய்நிகர் தோற்றத்துல சாகசப் பயணம் போனபடி கோடை விடுமுறைய கழிக்க விரும்புறீங்களா?” என்று ரகு மாமா கேட்டார். அமிஷ் கண்ணாடியைக் கழட்டிவிட்டு சற்றுநேரம் யோசித்தான். “எனக்கு உண்மையான தோற்றமே பிடிக்கும்னு நினைக்கிறேன்” என்றான். “அப்படியா, ஏன்?” என்று ஆச்சரியமாகக் கேட்டார் ரகு மாமா. “நல்ல பழுத்த மாம்பழம் ஒண்ணைக் காட்டில பார்த்தேன். இப்போ எனக்கு மாம்பழம் சாப்பிடணும். அதை மெய்நிகர் தோற்றத்தில செய்யமுடியாதே.” என்றான் அமிஷ். ”எனக்கும் வேணும்” என்றாள் சோனி. இருவரும் சமையலறையை நோக்கி ஓடினர். “நானும் வர்றேன்! இருங்க” என்றபடி, ரகு மாமாவும் ஒருவழியாக தனது ப்ரியமான நாற்காலியிலிருந்து எழுந்து அவர்கள் பின்னால் ஓடினார்.

மெய்நிகர் தோற்றம் குறித்து சில செய்திகள்

1. டேமியன் ப்ரோடெரிக் என்ற எழுத்தாளர் தனது ‘ஜூடாஸ் மண்டலா’ என்ற அறிவியல் புனைகதையில்தான் 1983-ல் முதல்முறையாக மெய்நிகர் தோற்றம் (virtual Reality) என்னும் பதத்தைப் பயன்படுத்தினார்.

2. கண்ணாடிக்குள் அடங்கும் சிறிய திரைகளில் உண்மையான முப்பரிமாண உலகத்தைப் போலவே தோன்றமளித்து, அதை உணர வைக்கக்கூடிய இந்த மெய்நிகர் தோற்றம், மிகுந்த திறன்வாய்ந்த கணினிகளைக் கொண்டு உருவாக்கப்படுகிறது.

3. மெய்நிகர் தோற்றக் கண்ணாடிகளில் உங்கள் கண் எந்தப் பக்கம் நகர்கிறது என்பதை கண்டுணரக்கூடிய உணர்கருவிகள் (Sensors) இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, நீங்கள் மேலே பார்த்தால், கண்ணாடியின் திரை, நிஜ உலகத்தில் நீங்கள் மேலே பார்த்தால் என்ன காட்சியைக் காண்பீர்களோ அதையே காண்பிக்கும். எனவே, நீங்கள் அமிஷைப் போல ஒரு காட்டில் இருந்துகொண்டு மேலே பார்த்தால், கண்ணாடியின் திரை காட்டை விட்டுவிட்டு வானத்தைக் காண்பிக்கும்.

4. மெய்நிகர் தோற்றம் விளையாட்டுகளை விளையாடவும், புதிய இடங்களை காணவும் மட்டும் பயன்படுவதில்லை. அது கடினமான வேலைகளுக்குப் பயிற்சி அளிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. தீயணைப்பு வீரர்கள் மெய்நிகர் தோற்றத்தைப் பயன்படுத்தி எரியும் கட்டிடங்களிலிருந்து மக்களைக் காப்பாற்ற பயிற்சி எடுக்கவும், விண்வெளி வீரர்கள் விண்வெளியில் வாழப் பயிற்சி எடுக்கவும், அங்கு புதிய உலகங்களைக் காணவும் இதனைப் பயன்படுத்தலாம். செவ்வாய் கிரகத்திற்குச் செல்ல விண்வெளிக் கப்பலில் ஏறும் முன்னதாகவே, அங்கே வசிப்பதை உணர்ந்து புரிந்து கொண்டால் எப்படி இருக்கும் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள்!

5. இந்த முப்பரிமாண மெய்நிகர் தோற்றக் கண்ணாடிகள் குழந்தைகள் உபயோகிப்பதற்கு பாதுகாப்பானவையா? இதன் பின்விளைவுகள், கைபேசிகளின் சிறிய திரையைப் பார்ப்பதனால் ஏற்படும் பின்விளைவுகளைப் போன்றதே என்று பெரும்பாலான அறிவியலாளர்கள் நம்புகிறார்கள். எனவே அதை எவ்வளவு நேரம் தொடர்ந்து பயன்படுத்துகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.