ஆண்டவன் திருவருளினால், இப்போது எங்கள் வாழ்க்கையில் அமைதி குடிகொண்டிருக்கிறது. இன்பம் நிலவுகிறது. நானும் என் மனைவியும் அளவிறந்த அன்பு வெள்ளத்தில் மூழ்கியிருக்கிறோம். வேறெது எப்படியானாலென்ன?
பாவம் சுபத்திரை அனாதை. எனக்கும் தற்போது அவளைத் தவிர யாருமில்லை. அவளைக் கல்யாணம் செய்து கொண்ட நாளிலிருந்து எனது உற்றார் உறவினர் எல்லாரும் என்னைக் கைவிட்டு விட்டார்கள். என் தந்தைக்கு என்னிடமுள்ள அன்பு மாறவில்லையென்பது உண்மையே. அடிக்கடி கடிதங்களும் எழுதி வருகிறார். ஆனால் நானும் சுபத்திரையும் அவர் வீட்டுக்கு வருவது மட்டும் கூடாதாம். ஒரு காலத்தில் ஆசார சீர்திருத்த இயக்கத்தில் சேர்ந்து உபந்யாசங்களும் செய்து வந்த அவர் இம்மாதிரி நடந்து கொள்வது, முதலில் எனக்கு வினோதமாகவேயிருந்தது. ஆனால், இப்போது அவர் மீது நான் குறை கூறவில்லை, அவரென்ன செய்வார்? விவாகமாகாத தங்கைகள் இருவர் எனக்கிருக்கின்றனர். மேலும் வீட்டில் இப்போது எஜமாட்டி அவரது இரண்டாவது மனைவி. என் தாயார் காலஞ் சென்று பல வருஷங்களாகின்றன.
நானும் சுபத்திரையும் அன்பு மயமான வாழ்க்கை நடத்துகிறோம். இப்புவியில் யார் மீதும் எங்களுக்கு வருத்தமில்லை. உலகமெல்லாம் எங்களைப் பகைத்தாலும் நாங்கள் உலகத்தினிடம் அன்பு செலுத்துவோம். மேலும் நாங்கள் உலகத்தினிடம் அன்பு செலுத்துவோம். மேலும் நாங்கள் இப்போது வசிப்பது ஆந்திர நாட்டின் நடுவிலுள்ள ஒரு பட்டணம். இங்கே தமிழர்கள் மிகச் சிலரே வசிக்கிறார்கள். அவர்களுக்கும் எங்கள் வரலாறு தெரியாது. என் மனைவியைச் சுட்டிக்காட்டிப் பேசுவோர் யாரும் இங்கில்லை. எனவே எங்கள் வாழ்க்கையின் இன்பத்துக்கு இடையூறு எதுவுமில்லையல்லவா?
ஆனால், நீங்கள் பொறாமைப்படவேண்டாம். எத்துணை கொடிய துன்பங்களுக்குப் பின்னர், நாங்கள் இந்த இன்ப வாழ்வை எய்தியிருக்கிறோமென்பதை அறிந்தால் நீங்கள் நடுநடுங்கிப் போவீர்கள். பெரும் புயலினால் பயங்கரமாகக் கொந்தளித்துக் கொண்டிருந்த கடலானது புயல் நின்றதும் அமைதியடைந்திருக்கும் நிலையை உங்கள் மனோபாவத்தினால் உருவகப் படுத்த முடியுமா? ஆம் எங்கள் வாழ்வில் இப்போது அத்தகைய அமைதியே ஏற்பட்டிருக்கிறது. எங்கள் வாழ்க்கை இன்பமயமாயிருக்கிறது என்று மேலே சொன்னேனல்லவா? அது முற்றிலும் சரியன்று. இடையிடையே பழைய நினைவுகள் தோன்றும் போது - அப்பப்பா! எங்கள் உணர்ச்சிகளை விவரித்தல் இயலாத காரியம். அத்தகைய சமயங்களில் நாங்கள் அலமாரியில் வைத்துப் பூசை செய்யும் இராஜகோபாலன் படத்துக்கருகில் சென்று மௌனமாய்க் கண்ணீர் விடுகிறோம். இராஜகோபாலன் மனித உடலில் தங்கியிருந்தபோது, சுபத்திரையின் சகோதரனாயும், என் அரிய நண்பனாயும் இருந்தான். இப்போது எங்கள் குலதெய்வமாய் விளங்குகிறான்.
என் மனைவிக்கீடான பெண் இவ்வுலகில் ஒருத்தியுமில்லை என்பது என் எண்ணம். ஒவ்வொரு கணவனும் தன் மனைவியைப் பற்றி அப்படித்தான் சொல்வான் எனக் கூறுவீர்கள். உண்மையே. ஆனால், அவளைப் போல் இவ் இளம் வயதில் இவ்வளவு துக்கங்களுக்கு ஆளானவர்கள் யாருமிரார் என்பது திண்ணம். அவள் குணத்துக்கு ஓர் உதாரணம் சொல்லுகிறேன். இவ்வரலாற்றை எழுதி முடித்ததும் அவளிடம் கொடுத்து ஏதேனும் திருத்தங்கள் செய்ய விரும்பினால் செய்வதற்கு உரிமையளித்தேன். அவள் என்ன திருத்தங்கள் செய்தாள் என்று நினைக்கிறீர்கள்? அவளுடைய அழகைப் பற்றியோ குணாதிசயங்களைப் பற்றியோ கூறியிருந்த அந்தப் பகுதிகளையெல்லாம் அடித்து விட்டாள். பின்னர் கதைக்கு இன்றியமையாத சில இடங்களிலேனும் அவற்றை விட்டு வைக்கும்படி நான் அவளைக் கெஞ்ச வேண்டியதாயிற்று.
ஆனால் சுபத்திரையைப் பற்றியாவது, என்னைப் பற்றியாவது, எங்கள் இல்வாழ்க்கையைப் பற்றியாவது நான் இங்கு விவரிக்கப் புகுந்தேனில்லை. வீர புருஷனும் என் ஆருயிர்த் தோழனுமான சுபத்திரையின் சகோதரனுடைய சரித்திரத்தைக் கூறவே வந்தேன். ஸ்ரீராம சரிதம் பாண்டவ சரிதம் அரிச்சந்திரன் கதை முதலியவற்றைப் போல் இராஜ கோபாலனின் சரித்திரமும் போற்றப்பட வேண்டுமென்பது என் எண்ணம். இதென்ன அநீதி? ஒரு கொலைஞனுடைய வரலாற்றை இராம சரித்திரத்துடனும் அரிச்சந்திரன் கதையுடனும் ஒப்பிடுவதா என்று நீங்கள் திடுக்கிட்டு வினவலாம். நியாயந்தான். ஆனால் என் நண்பன் செய்த கொலையினால் அவனைப் பாவம் ஏதேனும் சார்ந்ததாயின் அதற்கு தகுந்த பிராயச் சித்தம் அவன் செய்து கொண்டுவிட்டான் என்பதே என் கருத்து. இவ்விஷயத்தில் உங்கள் அபிப்பிராயம் மாறுபடலாம்; ஆனால் அவனுடைய வரலாற்றைப் படிக்கும் உங்களில் எவரும் மனம் உருகாமலிருக்க மாட்டீர்கள் என்பதில் எள்ளலவும் எனக்கு ஐயமில்லை.
கதையின் ஆரம்பமே நன்றாயில்லையே? முடிவு முன்னுரையிலேயே வந்துவிடுகிறது. "இதற்குள் முன்னுக்குப் பின் முரண் வேறு" என்று நீங்கள் எண்ணலாம். ஆம், வினை கதைக்கு உண்மை வரலாற்றுக்கும் உள்ள வேற்றுமை அதுதான். கதையென்றால் அமைப்பு ஒழுங்காகவே இருக்கும் நிகழ்ச்சிகள் முன்னுக்குப் பின் முரண் இன்றி ஒன்றன்பின் ஒன்றாய் வரும், ஆனால் வாழ்க்கையின் உண்மை சம்பவங்களை அவ்வளவு பொருத்தமாகக் கூற முடியுமா? மேலும் இவ்விஷயத்தைப் பற்றிச் சிந்திக்கப் புகுந்தாலே என் மனம் குழம்பி விடுகிறது. எனவே இச் சரித்திரத்திலுள்ள குறைகளுக்காக என்னை மன்னித்துவிடும்படி கேட்டுக் கொள்கிறேன். பல குறைகள் நிகழ்வதாயினும் சரியே. இவ்வரலாற்றை எழுதி வெளியிடுவது என் ஆருயிர் நண்பனுக்கும் இவ்வுலகுக்கு நான் செலுத்த வேண்டிய கடமை என்னும் உறுதியினாலேயே இதை எழுதலானேன்.
இக்கதையின் முக்கியமான நிகழ்ச்சிகள் 1924-ம் ஆண்டில் ஆரம்பமாகின்றன. ஆனால், அவற்றைத் தொடங்குவதற்கு முன் என் குடும்ப நிலைமையைப் பற்றியும், எனக்கு இராஜகோபாலனுடன் நட்பு ஏற்பட்ட விதத்தைப் பற்றியும் இரண்டொரு வார்த்தைகள் கூறிவிட வேண்டுவது அவசியம். என் தந்தை ஸ்ரீமான் சுந்தரமையர் மைலாப்பூரில் ஒரு வக்கீல். இப்போதுகூட அவருக்கு மாதம் ஐந்நூறு ரூபாய் வருமானங் கிடைத்து வருமென நினைக்கிறேன். அப்போது இன்னும் அதிகமாகவே கிடைத்து வந்தது. 1917-18 வரை அவர் அரசியல் துறையில் ஆசார சீர்த்திருத்த இயக்கத்திலும் ஈடுபட்டிருந்தார். ஆனால் அதற்குப் பிறகு அரசியல் கிளர்ச்சி கொஞ்சம் ஆபத்துக்கிடமான விஷயமாகப் போய்விடவே, அவர் சிறிது சிறிதாக பொது வாழ்விலிருந்து விலகி விட்டார். மேலும், அவரது இரண்டாம் மனைவியின் மூலமாகக் குடும்பம் பெருத்துவிட்டது. எனக்கு இப்போது நான்கு தம்பிகளும், இரண்டு தங்கைகளும் இருக்கிறார்களென்றால் அதிகம் சொல்ல வேண்டுவதில்லை. இத்தனைக்கும் என் தாயார் இறந்து 12 வருஷங்கள்தான் ஆகின்றன. இப்போது எனக்குத் தெரிந்த வரை, பணஞ் சேர்ப்பது, குடும்ப நலத்தைக் கவனிப்பது இவற்றைத் தவிர, என் தந்தைக்கு வேறெவ்விஷயத்திலும் சிரத்தையிருப்பதாகத் தெரியவில்லை.
இனி, இராஜகோபாலனைப் பற்றிச் சொல்கிறேன். அவனுடன் எனக்கு நட்பு ஏற்பட்ட விதம் மிக வினோதமானது. இன்றைக்கு ஐந்நுறு ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் எங்கள் வீட்டு மாடியின் முகப்பில் உட்கார்ந்து காற்று வாங்கிக் கொண்டிருந்தேன். எங்கள் வீட்டுக்கு அடுத்த கட்டிடத்தில் அப்போது ஹோட்டல் இருந்தது. அதன் மாடியின் மீதிருந்த அறைகளில் மாணாக்கர் சிலர் வசித்து வந்தனர். அவர்களில் ஒருவர் அந்த மாடியின் முகப்புக்கு வந்து பாடத் தொடங்கினார். அவருடைய இனிய குரல் என் மனதைக் கவர்ந்தது. அதிலும் அவர் பாடியது பாரதியின் பாட்டு. பாரதி பாட்டென்றால் எனக்கு ஏற்கெனவே பித்து உண்டு; ஆதலின், அவர் பாடி முடிந்ததும், 'தயவு செய்து இன்னொன்று பாடுங்கள்' என்று ஆங்கிலத்தில் மரியாதையுடனும் சங்கோசத்துடனும் கேட்டுக் கொண்டேன். அவர் புன்னகை செய்து, "ஓ! ஆகட்டும்" என்றார். உடனே 'சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா' என்ற கண்ணன் பாட்டை பாடத் தொடங்கினார். அவர் பாட்டுக்கு நான் அடிமையானேன். இப்படித்தான் எங்கள் நட்பு ஆரம்பமாயிற்று. அந்தோ! அந்நட்பின் பயன் இவ்வாறு முடியும் என்று அப்போது நான் கனவிலேனும் கருதியதுண்டா?
அவ்வாறு பாரதியின் பாட்டினால் என் சிந்தையைக் கவர்ந்த இளைஞர் வைத்தியகலாசாலையில் முதல் ஆண்டு மாணாக்கரென்றும், தஞ்சாவூர் ஜில்லா மன்னார்குடி தாலுகாவில் ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்தவரென்றும் அறிந்து கொண்டேன். நாள் ஆக ஆக எங்கள் நட்பும் வளருவதாயிற்று. அப்போது நான், இண்டர் மீடியட் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். தினந்தோறும் கலாசாலை விட்டதும், இருவரும் நேரே கடற்கரைக்கு வந்து சந்திப்பது என்று ஏற்படுத்திக் கொண்டோ ம். நாங்களிருவரும் கடற்கரையோரத்தில் மணலின் மேல் துணியை விரித்துப் படுத்துக் கொண்டு, உலக நினைவுகளை அடியோடு மறந்தவர்களாய் அளவாளாவிப் பேசிக் கொண்டும், பாரதியின் கவிச்சுவை சொட்டும் காதல் பாட்டுக்களைப் பாடிக் கொண்டும், ஆகாயக் கோட்டை கட்டிக் கொண்டும், ஆனந்தமாகக் கழிந்த மாலை நேரங்களை நினைக்கும் போதெல்லாம், என் உள்ளத்தில் பொங்கி எழும் உணர்ச்சிகளை விவரிக்க வல்லேனல்லன்.
நாட்கள் மாதங்களாயின, மாதங்கள் வருஷங்களாயின. எங்கள் நட்பும் வளர்ந்தது. தினந்தோறும் புதிய புதிய சுவைகலையும், புதிய புதிய இன்பங்களையும் தந்து கொண்டு வந்தது. என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான 1924-ஆம் ஆண்டு பிறந்தது. நான் பி.ஏ. (ஆனர்ஸ்) பரீட்சையில், தேறிவிட்டேன். சட்டக் கலாசாலையில் சேருவதாக உத்தேசித்திருந்தேன். இராஜகோபாலன் எம்.பி.பி.எஸ். பரீட்சைக்குக் கடைசி வருஷம் படிக்க ஆரம்பித்தான். ஒரு நாள் மாலை வழக்கம்போல் கடற்கரைக்குச் சென்று, இராணி மேரி கலாசாலைக் கெதிரில் அலைகள் வந்து மோதும் இடத்துக்கருகில் உட்கார்ந்து, இராஜகோபாலன் வரவை எதிர் நோக்கியிருந்தேன். அன்று அவன் கொஞ்சம் தாமதமாக வந்தான். அன்றியும் அவன் முகமும் வாட்டமுற்றிருந்தது. எப்போதும் கடற்கரைக்கு வந்ததும்.
மாலைப் பொழுதிலொரு மேடைமிசையே வானையும் கடலையும் நோக்கியிருந்தேன் மூலைக்கடலையவ் வான வளையம் முத்தமிட்டே தழுவி முகிழ்த்தல் கண்டேன்
என்றாவது,
மாலை இளவெயிலின் மாட்சி - அன்னை கண்ணெரி காட்டுகின்ற காட்சி
என்று சிறிதளவு பாரதியின் பாட்டை மாற்றியாவது பாட ஆரம்பித்துவிடுவான். இன்றோ, பாட்டுமில்லை, கூத்துமில்லை. அவன் முகக் குறியைக் கண்டு என் மனதிலும் சிறிது கவலை தோன்றியதாயினும், விளையாட்டுத்தனமாக "என்ன ராஜு? இன்றைக்கேன் 'குஷி' இல்லை? உபவாச விரதம் ஏதேனும் உண்டோ ?" என்று கேட்டேன்.
"சாப்பாடு இல்லாதது ஒன்றே உற்சாகக் குறைவுக்குக் காரணமாகக் கூடும் என்று நினைக்கிறாயா?" என்று அவன் வினவினான்.
"எனக்கு வேறொன்றும் தோன்றவில்லை."
"அப்படியானால் நீ பாக்கியசாலிதான்."
அப்பொழுது, அவன் கண்களில் நீர் ததும்பியதைக் கண்டேன். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. "அது போகட்டும், விஷயம் என்னவென்று சொல்லமாட்டாயா?" என்றேன்.
இராஜகோபாலன் பதில் சொல்லாமல், தன் சட்டைப் பையிலிருந்த ஒரு கடிதத்தை எடுத்துக் கொடுத்தான். அது அவன் தகப்பனார் அவனுக்கு எழுதியிருந்த கடிதம். நான்கு மூலையிலும் மஞ்சள் தடவியிருந்தது. உள்ளே, இராஜகோபாலன் தங்கை சுபத்திரையை அவ்வூர் வேம்பு ஐயர் குமாரர் கணபதி ஐயருக்கு மணஞ் செய்து கொடுக்கத் தீர்மானித்திருப்பதாகவும், முகூர்த்தம் அடுத்த புதன்கிழமை நடப்பதால் உடனே புறப்பட்டு வரும்படியும் எழுதியிருந்தது. அதைப் படித்தபோது, என் ஹிருதயம் படக்கென்று வெடித்து விடும்போல் தோன்றிற்று. முன் பின் தெரியாத கணபதி ஐயர் மீது ஏனோ கோபமும் பொறாமையும் ஏற்பட்டன. "காத்திருந்தவன் பெண்ணை நேற்று வந்தவன் கொண்டுபோனான்" என்னும் அசட்டுப் பழமொழி என்னையறியாமல் என் வாயினின்றும் புறப்பட்டுவிட்டது.
"சை, எப்போதும் விளையாட்டுப் பேச்சுத்தானா, தியாகு?" என்று நண்பன் கூறினான். அவன் கண்களினின்றும் கலகலவென்று நீர் பொழிந்தது. எனக்கு ஒன்றுமே புரியவில்லை! கணபதி ஐயர் யாராயிருப்பினும் அவர் மீது நான் பொறாமை கொள்வதும் நியாயம். ஆனால், தங்கையின் கல்யாணச் செய்தியைக் கேட்டு அவன் கண்ணீர் விடுவதன் கருத்தென்ன? அவன் கண்ணீரை என் அங்கவஸ்திரத்தின் தலைப்பினால் துடைத்து, "ராஜு, என் பிதற்றலை மன்னித்துவிடு. ஆனால் நீ ஏன் கண்ணீர் பெறுக்குகிறாய்? எனக்கு ஒன்றும் புரியவில்லையே!" என்றேன்.
அவன் சற்றுநேரம் மௌனமாயிருந்துவிட்டு, பின்னர் "என் அருமைச் சகோதரியைப் பாழுங்கிணற்றில் தள்ளப் போகிறார்கள். நான் கண்ணீர் விடாமல் என்ன செய்வேன்?" என்றான்.
நான் பல முறையும் வற்புறுத்திக் கேட்டதன்மேல் அவன் பின்னுஞ் சொல்வான்:- "எங்கள் கிராமத்துப் பெரிய குடித்தனக்காரர்களில் வேம்பு ஐயரும் ஒருவர். அவருக்கு இருபது வேலி நன்செய் நிலமும் ரூ.30,000 ரொக்கமும் உண்டு. கணபதி ஐயர் அவருடைய ஏகப் புதல்வர். அவருக்கு இப்போது 45 வயதுக்கு மேலிருக்கும். ஏற்கனவே அவருக்கு இரண்டு மனைவிகள் இருக்கின்றனர். ஆனால் குழந்தைகள் இல்லை. ஒருத்திக்குக் குழந்தையே பிறக்கவில்லை. மற்றொருத்திக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து இறந்து போய்விட்டது. அப்புறம் வேறு பிறக்கவில்லை. வம்சத்துக்குச் சந்ததியில்லாமல் சொத்து வீணாகப் போகக்கூடாதென்ற எண்ணத்தினால் பிள்ளைக்கு இன்னொரு கல்யாணம் செய்துவைக்க வேண்டுமென்று கிழவர் உத்தேசித்திருப்பதாக முன்னமே பிரஸ்தாபமுண்டு. நாங்கள் எல்லாரும் கேலி செய்துகொண்டிருந்தோம். ஆனால், இந்தக் கதி என் தங்கைக்கே நேரிடுமென்று நான் கனவிலும் கருதியதில்லை. கணபதி ஐயர் பார்வைக்கு மிக அவலட்சணமாயிருப்பார். வயிறு பெறுத்தவர். ஆதலால் சாதாரணமாகத் 'தொந்திக்கணபதி' என்று அவரை எல்லாரும் கூப்பிடுவார்கள். 'குள்ளநரி' என்ற பட்டப்பெயரொன்றும் அவருக்குண்டு. ஒரு சமயம் அவர், புதர் ஒன்றில் ஒளிந்திருந்து குடியானவன் களத்திலிருந்து நெற்கதிர் திருடிக் கொண்டு போனதைக் கண்டு பிடித்து விட்டாராம். அது முதல் குடியானவர்கள் 'குள்ளநரி ஐயர்' என்று அவரை அழைக்கத் தொடங்கினார்கள். அந்தப் பெயர் நிலைத்து விட்டது. அவ்வளவு ஏன்? போன வருஷங்கூடக் கணபதி ஐயர் வயலில் போகும் போது 'தொந்திக்கணபதி' 'குள்ளநரி' என்று சுபத்திரை கூறிவிட்டுச் சிரித்துக் கொண்டு உள்ளே ஓடி ஒளிந்து கொண்டாள். ஐயையோ! அவளுக்கா இந்த விதி வரவேண்டும்?" என்று நண்பன் கதறினான்.
நான் உள்ளமுருகி விட்டேன் என்று கூறவும் வேண்டுமா? "உன் தந்தை என்ன, அவ்வளவு மோசமானவரா? தந்தைதான் இப்படிச் செய்தாரென்றால், உன் தாயார் எப்படிச் சம்மதித்தாள்?" என்று நான் கேட்டேன்.
"என் அன்னை இந்தக் கல்யாணத்துக்கு ஒரு காலும் சம்மதித்திருக்க மாட்டாள் என்பது நிச்சயம். அந்தோ! அவள் என்னென்ன எண்ணியிருந்தாள்? என் தந்தை மீது தான் குற்றம் சொல்வதில் என்ன பயன்? இரண்டு வருஷமாக அவர் அலையாத இடமில்லை. ஒன்று பொருந்தியிருந்தால் மற்றொன்று பொருந்துவதில்லை. வரன் பிடித்திருந்தால், ஜாதகம் சரியாயிராது. இரண்டும் ஒற்றுமை பட்டிருந்தால், ஜாதகம் சரியாயிராது. இரண்டும் ஒற்றுமை பட்டிருந்தால், வரதட்சனை 2000, 3000 என்று கேட்கிறார்கள். அவர் என்ன செய்வார். பார்க்கப் போனால் நான் தான் ஒரு வழியில் இந்தப் பாதகத்துக்குக் காரணமாகிறேன். எங்கள் ஏழைக் குடும்பத்தில் ஏதேனும் கொஞ்சம் மீதியாவதை என்னுடைய படிப்புக்காக அவர் தொலைத்து வந்தார். இல்லாவிடில் இப்பொழுது பணச் செலவுக்காகப் பயப்பட வேண்டியிராது. ஏற்கனவே ஆயிரம் ரூபாய் கடன் இருக்கையில், இன்னும் 2000, 3000 எப்படி கடன் வாங்குவது, யார் கொடுப்பார்கள்? பாவி, நானாவது அவர் சொற்படி கேட்டு வரதட்சனை வாங்கிக் கல்யாணம் செய்து கொள்ள இசைந்தேனா? அவர் என்னையேயன்றோ நம்பியிருந்தார்?" இராஜகோபாலன் கூறினான்.
இது முழு உண்மையன்றென்பது எனக்குத் தெரியும். இராஜகோபாலன் வரதட்சனை வாங்கப் போவதில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தானாயினும், தகப்பனார் முடிவாக வற்புறுத்தும் போது மறுத்திருக்க மாட்டான். மற்ற அம்சங்களில் எத்தகைய சிறந்த குணங்கள் உடையவனாயினும், தந்தையை எதிர்ப்பதற்கு வேண்டிய தைரியம் அவனுக்கு உள்ளபடியே இல்லை. ஒத்துழையாமை இயக்கத்தில் ஆரம்பத்தில் அவன் கொஞ்சம் நாள் கலாசாலைப் பகிஷ்காரம் செய்ததும், பின்னர் தந்தையின் வார்த்தையைத் தட்ட மாட்டாமல் திரும்பப் போய்ச் சேர்ந்ததும், சிலநாள் வரை அவமானத்தில் மனமுடைந்து நின்றதும், நான் நேரில் அறிந்த விஷயங்கள். உண்மையென்னவெனில், இராஜகோபாலன் தந்தை 3000, 4000 என்று அவனை ஏலங் கூறி வந்தார். இன்னும் ஏலத்தொகை உயருமென்று அவர் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். எம்.பி.பி.எஸ். பரீட்சைக்குப் படித்த இராஜகோபாலன் இன்னும் பிரமச்சாரியாயிருந்த பேரதிசயத்துக்குக் காரணம் இதுதான். இவை எனக்குத் தெரிந்திருந்தும், நான் அப்பொழுது இராஜகோபாலனை மறுத்துக் கூறவில்லை. அற்ப விஷயங்களைப் பற்றி வாதிப்பதற்கு அது தருணமன்றல்லவா?
என் நண்பன் மீண்டும், "தியாகு, நீ என் உயிர்த் தோழனாதலால் என் மனத்தைத் திறந்து சொல்கிறேன். ஒரு வேளை என் தந்தை பணத்தாசையால் பீடிக்கப்பட்டிருக்கலாமோவென்று எனக்குத் சந்தேக முண்டாகிறது. சுபத்திரைக்கு ஒரு குழந்தை மட்டும் பிறந்துவிட்டால், இரண்டு லட்ச ரூபாய் சொத்தும் அடையுமன்றோ? சை, சை! இப்பாழும் பணத்தாசையால் விளையுங் கேடுகள் எத்தனை! உலகில் பணக்காரன், ஏழை என்ற வேற்றுமை அற்றுப் போகக் கூடாதா?" என்று இரங்கினான்.
"ராஜு, நான் சொல்வதைக் கேள். இந்தக் கல்யாணத்தை எப்படியாவது நிறுத்திவிடு. என் கருத்து உனக்கு விளங்குகிறதா?" என்று நான் கேட்டேன்.
அவன் சற்று நேரம் சிந்தனையுடனிருந்து பின்னர் கூறினான்:- "உன் கருத்து விளங்குகிறது. ஆனால் அது இயலாத காரியம். முகூர்த்தம் புதன்கிழமை. நானெப்படி அதை நிறுத்த முடியும்? பிரம்மதேவன் எங்களுக்குத் துக்கத்தை விதித்துவிட்டான். நீ இப்போது இவ்வாறு தெரிவிப்பது என் துக்கத்தை மிகுதிப் படுத்துகிறதேயன்றி வேறில்லை. சுபத்திரையின் அதிர்ஷ்டம் எப்படியிருந்திருக்க கூடுமென்பதை நினைத்தால்! - தியாகு, நீ உண்மையிலேயே இந்நோக்கங் கொண்டிருந்தால், உன் உயிர் நண்பனாகிய என்னிடம் கூட ஏன் முன்னமே சொல்லவில்லை?"
"அது பெருங்குற்றந்தான் என்பதை ஒப்புக் கொள்கிறேன். உண்மையில், இதுவரை என் மனமே திடப்படவில்லை. சென்ற வருஷம் கோடை விடுமுறையில் நீ என்னை உன் வீட்டுக்கு அழைத்துச் சென்றிருந்தபோது, உன் தங்கையைப் பார்த்தேன். அவளிடம் எனக்குப் பிரியம் உண்டாயிற்று. அவளுடைய மோகன வடிவமும் இன்ப மொழிகளும் என் மனத்தைக் கவர்ந்தன. போதாதற்கு நீ அவளைப் பாடும்படியும் சொன்னாய். குயிலுனுமினிய குரலில் அவள் பாடியது, என் ஆன்மாவைப் பரவசப் படுத்தியது. ஆனால் சுபத்திரையிடம் எனக்குண்டான ஆசை எத்தகையது என்று எனக்கே விளங்கவில்லை. பன்னிரண்டு வயதுக் குழந்தையுடன் காதல் என்னும் பதத்தைச் சம்பந்தப்படுத்துவதே பைத்தியக்காரத்தனம் என்று தோன்றிற்று. வேறு யாரேனுமாயிருந்தால், உன்னிடம் யோசனை கேட்டிருப்பேன். ஆனால் சுபத்திரையின் சகோதரனான உன்னிடம் இதைப்பற்றி எப்படிச் சொல்வேன்? நீ என்ன எண்ணி கொள்வாயோவென்று அஞ்சினேன். ஆனால், இவ்விஷயமாகத் தனிமையில் அடிக்கடிச் சிந்தித்து வந்தேன். நமது சமூக வாழ்வு உள்ள நிலைமையில் பரஸ்பரம் காதல்கொண்டு கல்யாணம் செய்து கொள்வதென்பது இயலாத காரியமாதலின், சுபத்திரையின் மீது எனக்குண்டான பிரியம் எத்தகையதாயினும், அவளை மணம் புரிந்து கொண்டால் இன்ப வாழ்க்கை நடத்தலாமெனத் தோன்றிற்று. ஆனால், ராஜு நான் ஒரு கோழை என்பது உனக்குத் தெரியுமே! என் தந்தையின் எதிர்ப்புக்கும், என் சிற்றன்னையின் சீற்றத்துக்கும் அஞ்சினேன். ஆயினும், அவர்கள் பேசிமுடித்த கல்யாண ஏற்பாடுகளையெல்லாம் தட்டிக் கழித்துக் கொண்டே வந்தேன். சுபத்திரைக்கு வரன் தேட வேண்டுமென்று நீ சொல்லிய போதெல்லாம் என் இருதயம் படபடவென்று அடித்துக் கொள்ளும் உன்னிடம் என் கருத்தை தெரிவிப்பதற்குத் தகுந்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால், இவ்வளவு சீக்கிரத்தில் நான் மோசம் போவேனென்று எதிர்பார்த்தேனில்லையே?"
இராஜகோபாலன் பெருமூச்சுவிட்டான். "தலைவிதி தலைவிதி" என்று முணுமுணுத்தான். "நீ கொடுத்த கல்யாணக் கடிதத்தைப் பார்த்தபோதுதான் என் மனோ நிலையை நான் நன்கு கண்டறிந்தேன். முதலில் அந்தக் கணபதி ஐயர் மீது எனக்குப் பொறாமையுண்டாயிற்று. ஆனால் நீ கூறிய விவரங்களைக் கேட்ட பின்னர், அவர் மீது கடுங்கோபம் உண்டாகிறது. அவ்வாறே உன் தந்தை மீதும் உன் மீதும் கூட எனக்கு கோபம் வருகிறாது. சுபத்திரையை வேறொருவன் கல்யாணம் செய்து கொள்வது என்னும் எண்ணமே என்னால் சகிக்கக் கூடாததாயிருக்கிறது. அவளில்லாமல் இவ்வுலகில் நான் வாழ்க்கை நடத்த முடியாதெனத் தோன்றுகிறது. என் வாழ்க்கையை இன்பமயமாக்குவதும் துன்பமயமாக்குவதும் இப்போது உன் கையிலிருக்கின்றன" என்று கூறி முடித்தேன்.
"இவ்விஷயம் மட்டும் என் அன்னைக்குத் தெரிந்தால் அவள் இருதயம் பிளந்தே போய்விடும் தியாகு. அவள் என்னிடம் ஒரு நாள் என்ன கூறினாள் தெரியுமா? 'குழந்தாய், சுபத்திரைக்கு உன் நண்பனைப் போல் ஒரு கணவனைத் தேடிவர மாட்டாயா?' என்றாள் அப்போது அருகிலிருந்த சுபத்திரை புன்னகையுடன் வெட்கித் தலை குனிந்ததும், பின்னர் நான் தாயாரிடம் சுபத்திரை அருகிலிருக்கும்போது கல்யாணத்தைப் பற்றிப் பேச வேண்டாமென்று தனிமையில் கேட்டுக் கொண்டதும் நன்கு நினைவில் இருக்கின்றன. சில தினங்களுக்கு முன்பு மட்டும் இதைச் சொல்லியிருந்தாயானால் என் அன்னை எவ்வளவு மகிழ்ச்சியடைந்திருப்பாள்! இப்போது அவளுக்குத் துக்கமே அதிகமாகும்" என்று இராஜகோபாலன் கூறியபோது, எனக்கு மயிர்க்கூச்சம் உண்டாயிற்று. மனங் கசிந்து கண்ணீர் பெருகிற்று.
"ஏன் இப்படிப் பேசுகிறாய் ராஜு? இன்னும் முழுகிப் போகவில்லையே? இந்தக் கல்யாணத்தை எப்படியாவது நிறுத்திவிடு."
காற்றிலேறி அவ் விண்ணையும் சாடுவோம் காதற் பெண்கள் கடாக்கண் பணியிலே
என்றும்,
நூற்றி ரண்டு மலைகளைச் சாடுவோம் நுண்ணி டைப்பெண் ணொருத்தி பணியிலே
என்றும் பாடுவாயே? அதற்குத் தருணம் வந்திருக்கும் இப்போது ஏன் தயங்குகிறாய்?" என்று வினவினேன்.
"வெள்ளம் தலைக்குமேல் போய்விட்டது. இனி அதைப் பற்றிப் பேசுவதால் கவலை அதிகமாகுமேயன்றி வேறில்லை. சுபத்திரையைப் பாழுங் கிணற்றில் தள்ளுவது முடிந்து போன விஷயம்" என்றான் இராஜகோபாலன்.
"உன் தந்தை உன்னை வளர்த்துப் படிக்க வைத்ததனால்தான் என்ன? அவருக்கு அடிமையாகிவிட வேண்டுமா? உனக்கு மனச்சான்று என்பது தனியாக இல்லையா? உன் சகோதரிக்கும் எனக்கும் உன் தாய்க்கும் துரோகம் செய்யப் போகிறாயா?"
"தலைவிதி தலைவிதி!"
அன்றிரவு திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் வண்டியில் இராஜகோபாலன் ஊருக்குப் பிரயாணமானான். அவனை ரயில் ஏற்றிவிட்டு வருவதற்காக நானும் எழும்பூர் புகை வண்டி நிலையத்திற்குச் சென்றேன். வண்டி புறம்படுந்தறுவாயில் கடைசியாக அவன் என் கையைப் பிடித்துக் கொண்டு "தியாகு, மனிதர்கள் விதியை எதிர்த்துப் போராட நினைத்தல் மதியீனம். இது எனது கொள்கை. நீ மணஞ் செய்து கொள்வதற்கு இதுவரை இருந்த தடை இப்போது நீங்கிவிட்டப்படியால், நான் திரும்பி வந்ததும் இங்கே இன்னொரு கல்யாணச் சாப்பாடு கிடைக்குமென நம்புகிறேன்" என்று கூறிப் புன்னகை புரிந்தான். இயற்கையான மகிழ்ச்சியினின்றெழாமல் முயன்று வருவித்துக் கொண்ட அந்தப் புன்னகையிலே எல்லையற்ற துக்கம் குடி கொண்டிருந்தது. இதற்குமுன் எப்போதும் குதூகலமும் புன்னகையும் தவழ்ந்து கொண்டிருந்த என் நண்பனின் சுந்தரவதனத்தில், அன்றைக்குப் பிறகு நகை யென்பதையே காணமாட்டேன் என்று பாவியேன் அப்போது அறிந்தேனில்லையே!
புகை வண்டி நிலையத்திலிருந்து வீடு திரும்பியதும் உணவும் அருந்தாமல் படுக்கச் சென்றேன். நீண்ட நேரம் வரை தூக்கம் வரவில்லை. இராஜ கோபாலன் கூறிய விவரங்கள் என் மனதைக் கலக்கிக் கொண்டிருந்தன. அவனுடைய துயரத்தைப் பற்றி நினைத்து நினைத்து வருந்தினேன். என்னுடைய ஆசை நிராசையாய்ப் போனது குறித்துப் பெருமூச்சு விட்டேன். என்னுடைய வருங்கால வாழ்க்கையை முடிவற்ற ஒரு பாலைவனம் போல் உருவகப் படுத்திப் பார்த்தேன். இடையிடையே, சுபத்திரையின்,
அமுதூற்றினை யொத்த இதழ்களும் - அறி வூறித் ததும்பும் விழிகளும் - பத்து மாற்றுப் பொன்னொத்த (நின்) மேனியும்
என் மனக் கண்ணின் முன்பு தோன்றிக் கொண்டிருந்தன. அப்பாட்டை அவள் பாடியதும் இன்றுதான் பாடியது போல் என் செவிகளில் வந்து ஒலித்தது. நெடு நேரத்துக்குப் பின்னர் என் கண்ணிமைகள் சோர்வுற்று மூடிக் கொண்டன. எண்ணங்கள் பொருத்தமின்றிக் குழப்பமுற்றன.
இதென்ன அதிசயம்? நான் எங்கே இருக்கிறேன். வீட்டில் படுத்துக்கொண்டிருந்தவன் இங்கெப்படி வந்தேன்? ஆச்சரியம்! ஆச்சரியம்! மேலும் கீழும் சுற்று முற்றும் பார்த்தேன். அழகிய சிறு படகு ஒன்றில் நான் உட்கார்ந்திருந்தேன். அதன் ஒரு மூலையில் ஏதேதோ விசைகள் வேலை செய்து கொண்டிருந்தன. அப்படகு தரையில் கிடந்ததோ? நீரில் மிதந்ததோ? இல்லை, இல்லை ஆகாய வெளியில் அதிவேகமாகப் பறந்து மேலே மேலே சென்று கொண்டிருந்தது! சந்திரன், அது சந்திரன் தானா? ஆயின், அதற்கு அவ்வளவு பிரமாண்டமான வடிவம் எங்கிருந்து வந்தது! சாதாரண சந்திரனைவிடச் சுமார் நூறு மடங்கு பெரிய ஒரு கோளம் வானத்தில் ஒளிமயமாய்ப் பிரகாசித்துக் கொண்டிருந்தது. அதன் ஒளி, பௌர்ணமியின் நிலவைவிடப் பன்மடங்கு பிரகாசமாயிருந்ததாயினும், வெயிலைப் போல் வெறுப்பளிப்பதாயில்லை. எல்லையற்ற இனிமையும் குளிர்ச்சியும் அவ்வொளியில் குடிகொண்டு, உடம்புக்கும் உயிருக்கும் உற்சாகமளித்தன. கீழே அதல பாதாள மென்னக்கூடிய தூரத்தில் பூமியின் மலைச்சிகரங்களும், நீர்ப் பரப்புகளும் காணப்பட்டன. கண்களை ஒரு முறை உற்றுப் பார்த்தேன். அந்தோ! அந்த விசைகளுக்கு அருகில் உட்கார்ந்து அவற்றை முடுக்கிக் கொண்டிருப்பவன் யார்? அவனுக்குப் பக்கத்தில் அமர்ந்திருப்பது யார்? வேறு யாருமில்லை! அவர்கள் என் ஆருயிர் நண்பன் இராஜகோபாலனும் என்னுயிரைக் கொள்ளை கொண்ட இன்பச் சிறுமி சுபத்திரையுமே. படகு செல்லும் வேகம் ஒருபுறம்; இவர்களைக் கண்ட ஆச்சரியம் ஒருபுறம் என் தலை கிறுகிறுவென்று சுழல ஆரம்பித்தது. சிறிது முயன்று சமாளித்துக் கொண்டேன்.
இராஜகோபாலன் பேசினான்:- "நண்பா, உறக்கம் தெளிந்து எழுந்தாயா?" என்றான்.
"ஆம். ராஜு, நாம் எங்கே போகிறோம்?"
"இன்னும் தெரியவில்லை? சந்திரமண்டலத்துக்குப் பிரயாணம் செய்து கொண்டிருக்கிறோம். ஜெர்மனிய ஆசிரியர் கொடார்ட் கண்டுபிடித்துள்ள புதிய விமானம் இது."
சமீபத்தில் இதைப்பற்றிப் பத்திரிகைகளில் படித்தது எனக்கு நினைவு வந்தது. ஆனால், படித்த விவரத்துக்கும் இந்தப் பறக்கும் படகுக்கும் அவ்வளவு பொருத்தமிருப்பதாகத் தோன்றவில்லை.
"சரிதான், ஆனால் சந்திர மண்டலத்துக்கு நாம் ஏன் போகிறோம்?" என்று வினவினேன்.
"அதென்ன புதிதாகக் கேட்கிறாய், ராஜு, நேற்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தேனே? இதோ இருக்கும் உன் இன்னுயிர் காதலியைக் குள்ளநரி கொண்டு போகாமல் காப்பாற்றும் பொருட்டுதான்."
அப்போது, அந்த நள்ளிரவிலே, ஆகாய வெளியிலே சோதிமயமான நிலவொளியிலே, வானம்பாடியின் இனிய கீதத்தினும் பன்மடங்கு இனியதாய், கல்லையும் மரத்தையும் கனியச் செய்யும் குரலில்,
பகைவனுக் கருள்வாய் - நன்னெஞ்சே பகைவனுக் கருள்வாய்
என்ற பாட்டு எழுந்தது. பாடியவள் சுபத்திரை. நான் புளகாங்கிதமடைந்தேன்.
திடீரென்று பயங்கரமான புயற்காற்று தோன்றிற்று. படகு மேலும் போகாமல் கீழும் போகாமல், அந்தரத்தில் அப்படியும் இப்படியும் ஆடிக் கொண்டு நின்றது. பிரமாண்ட கழுகு போன்ற ஒரு பறவை நெடுந்தூரத்திலிருந்து எங்கள் படகை நோக்கிப் பறந்து வருவதைக் கண்டேன். சில நிமிஷங்களில் அது எங்கள் படகை அணுகி விட்டது. அப்போது அதை உற்றுப் பார்த்தேன். அதன் முகம் மட்டும் குள்ளநரியின் முகம் போலிருப்பதைக் கண்டு திடுக்கிட்டுப் போனேன். அப்போது இராஜகோபாலன் சுபத்திரையை அவசரமாக அழைத்துக் கொண்டு வந்து அவளுடைய ஒரு கையை என் கையில் வைத்து, "நண்பா, இதோ என் தங்கையை உன்னடைக்கலமாக ஒப்புவிக்கின்றேன். அவளைப் பாதுகாப்பாய்!" இதற்குள், நரி முகங்கொண்ட அந்தப் பயங்கரப் பறவை படகுக்கு வந்து விட்டது. இராஜகோபாலன் அது படகில் வராமல் தடுக்கத் தொடங்கினான். பறவை, இராஜகோபாலனை லட்சியஞ் செய்யாமல் சுபத்திரையை அணுகமுயன்றது. அவன் அதை ஒரு தடியினால் அடித்து உள்ளே வரவொட்டாமல் செய்து கொண்டிருந்தான். சில நிமிஷங்கள் ஆனதும், அவன் திடீரென்று திரும்பி, "தியாகு இந்த விமானத்தின் விசை கெட்டுப் போய் விட்டது. இனிப் பயன்படாது. உடனே சுபத்திரையை அழைத்துக் கொண்டு இறங்கிவிடு" என்றான். சுபத்திரை நடுநடுங்கியவளாய்த் தன் இரு கரங்களாலும் என் கழுத்தைக் கட்டிக் கொண்டாள். அப்படியே இருவரும் படகை விட்டிறங்கி, ஆகாய வெளியில் எவ்வகை ஆதரவுமின்றி நின்று கொண்டு இராஜ கோபாலனையே பார்த்துக் கொண்டிருந்தோம். அவன் சிறிது நேரம் அந்தப் பறவையுடன் சண்டையிட்ட பிறகு, கையிலிருந்த தடியால் ஓங்கி ஒருமுறை அடித்தான். அது பயங்கரமாக ஒருமுறை கூவி விட்டுக் கிழே அதிவேகமாய் விழத் தொடங்கியது.
என்ன ஆச்சரியம்! இராஜகோபாலன், அப்போது புதியதோர் ஒளி வடிவமும் விசாலமான சிறகுகளும் பெற்றவனாய், அப்படகிலிருந்து மேலே கிளம்பிச் செல்லத் தொடங்கினான். "குழந்தைகளே, நான் சந்திர மண்டலத்துக்குச் செல்கிறேன். நீங்கள் நெடுங்காலம் பூமியில் வாழ்ந்துவிட்டு வந்து சேர்வீர்கள்" என்று கூறிவிட்டு அவன் மேலே மேலே பறந்து சென்று சிறிது நேரத்துக்கெல்லாம் மறைந்து போனான்.
ஆகாய வெளியில் அந்தரமாகத் தொங்கிக் கொண்டிருந்த என் கழுத்தைக் கட்டிக் கொண்டு நின்றாள் சுபத்திரை. அவள் முகம் என் மார்புக்கு நேராக இருந்தது. இப்போதுதான் குனிந்து அவள் முகத்தைப் பார்த்தேன். அவளுடைய அழகிய கண்களும் என்னை நோக்கின. ஓ! அந்தக் கண்கள்!
"சுபத்திரா! நஞ்சு தடவிய அம்புகள் போல் உன் கண்கள் என் இதயத்தில் பாய்கின்றனவே! என் செய்வேன்!" என்றேன்.
சுபத்திரை தன் பவழச் செவ்வாய் திறந்து, முத்தன்ன பற்கள் சிறிது வெளித்தோன்ற, தேனினுமினிய குரலில் "நாதா! தாங்கள் ஏன் கவலையுறவேண்டும்? அவற்றிற் கருகிலேயே அமுதூற்றிருக்கின்றதே?" என்று கூறிப் புன்னகை செய்தாள். நான் பரவசமடைந்தேன். பின்னர் - சொல்ல வெட்கமாயிருக்கிறது - அமுதூற்றென்று அவள் வருணித்த இதழ்களில் முத்தமிட்டேன். அந்தக் கணத்தில் என் தலை சுழல ஆரம்பித்தது. மயக்கங் கொண்டேன். கீழே இறங்குவது போன்ற உணர்ச்சி உண்டாயிற்று. வரவரக் கீழிறங்கும் வேகம் அதிகப்பட்டது. அளவிடப்படாத நெடுந்தூரத்துக்கு, மனதினாலும் எண்ணமுடியாத வேகத்துடன், கீழே கீழே கீழே போய்க் கொண்டிருப்பதாகத் தோன்றிற்று. கடைசியாகத் தொப்பென்று பூமியில் வீழ்ந்தேன்.
திடீரென்று கண் விழித்துப் பார்த்தேன். கட்டிலிருந்து புரண்டு கீழே தரையில் வீழ்ந்திருப்பதைக் கண்டேன். விழுந்த அதிர்ச்சியினால், முதுகு வலித்துக் கொண்டிருந்தது. எழுந்து மீண்டும் கட்டிலில் படுத்துக் கொண்டேன். நான் கண்ட அதிசயக் கனவை நினைத்தபோது என் உடல் நடுங்கிற்று. அன்றிரவு நான் தூங்கவேயில்லை.
ஒரு வாரம் சென்றது. சுபத்திரைக்கு மணம் நடந்திருக்க வேண்டிய தினத்துக்கு இரண்டு நாளைக்குப் பின்னர் எனக்கு ஒரு கடிதம் வந்தது. உறையின் மீது விலாசம் இராஜகோபாலனுடைய கையெழுத்திலிருப்பதைக் கண்டேன். அதை ஆவலுடன் பிரித்துப் படித்தேன் என்று சொல்லவும் வேண்டுமா? ஆனால் அதனுள்ளே அவ்வளவு ஆச்சரியமும் துயரமும் எனக்குக் காத்திருக்கின்றனவென ஒரு கணமும் நினைத்தேனில்லை. அக்கடிதம் வருமாறு:-
என் ஆருயிர் நண்பனே!
என் சிந்தை கலங்கியிருக்கிறது. தலை சுழல்கிறது. மதிமயங்குகிறாது. கரைகாணாத துயரக்கடலில் மூழ்கியிருக்கிறேன். உன்னிடம் கூறி ஆறுதல் பெறலாமென்றால் நீயும் இங்கில்லை. என் செய்வேன்! கடிதத்தில் எழுதியாவது ஓரளவு மனச்சாந்தி பெறலாமென்று இதை எழுதத் தொடங்கினேன்.
நண்ப, இங்கே நான் கல்யாண தடபுடலில் களித்திருப்பேனென நீ எண்ணியிருப்பாய். இங்கே நேர்ந்தவைகளையும், என் மனம் படும் பாட்டையும் அறிந்தாயானால்! - அன்று நாம் கடற்கரையில் பேசிக் கொண்டிருந்த போது, இப்படியெல்லாம் நேரிடுமென்று எண்ணினோமா, தியாகு? 'இக்கல்யாணத்தை எப்படியாவது நிறுத்திவிடு' என்று கூறினாய். தெய்வம் உன் கோரிக்கையை நிறைவேற்றி விட்டது. ஆனால், அதே சமயத்தில் என் தலையில் பெரிய பாறாங்கல்லைப் போட்டுவிட்டது.
அந்தோ! என் தாய்! பாவிக் கைகளால் அவள் உடலுக்குத் தீ மூட்டிவிட்டேன். இன்று அவள் எலும்புகளைப் பொறுக்கியும் புதைத்துவிட்டு வந்தேன். ஐயோ! அன்பு கனிந்த அவள் திருமுக மண்டலத்தை நினைக்கும் போதெல்லாம் என் உடம்பு ஏன் இப்படித் துடிக்கிறது? உயிர்விடப் போகுந்தறுவாயில், அவள் என்னைப் பார்த்த பார்வை என் மனக் கண்ணின் முன்பு எப்போதும் நின்று கொண்டிருக்கிறது. மறவேன் மறவேன்! அன்பும் இரக்கமும் கருணையும் கனிவும் நிறைந்த அப்பார்வையை என் உயிருள்ளளவும் மறவேன்.
துயரக் கடலில் மூழ்கியிருக்கிறேன் என்று சொன்னேன்? தவறு. என்னை மன்னித்துவிடு. ஆனந்த சாகரத்திலன்றோ மிதக்கிறேன். நான்! என் கண்களினின்றும் அருவிபோல் பெருகி, இதோ இந்தக் கடிதத்தையும் நனைத்து எழுத்துக்களை நாசமாக்குகிறதே. அது துயரக் கண்ணீர் அன்று அது ஆனந்தக் கண்ணீர். ஆம் நான் பெருமை கொள்கிறேன். "என் தாயார் வீரத் தாயார்" என்றெண்ணி இறுமாப்படைகிறேன். வீரத் தாய்மார்களைப் பற்றி நாம் புத்தகங்களில் படித்திருக்கிறோம். ஆனால் என் அன்னைக்கு முன்னால் அவர்கள் எல்லாரும் எம்மாத்திரம்? அவள் வயிற்றிலே இந்தப் பாவி, இந்தக் கோழை எப்படிப் பிறந்தேன்? அதுதான் தெரியவில்லை.
நண்ப! அளவு கடந்த துக்கத்தினால் நான் தான் பைத்தியம் பிடித்தவன் போலாகி விட்டேனென்றால், பொருத்தமில்லாமல் பிதற்றி உன்னையும் ஏன் பைத்தியமாக்க வேண்டும்? தயவு செய்து மன்னித்துவிடு. நடந்த விஷயங்களைத் தொடர்ச்சியாகக் கூற முயல்கிறேன். பின்னர், உன்னால் கூடுமானால், உனக்குத் தைரியமிருந்தால், எனக்கு ஆறுதல் சொல்லு.
சனிக்கிழமை இரவு சென்னையை விட்டுப் புறப்பட்டேனல்லவா? மறுநாள் மாலை இங்கு வந்து சேர்ந்தேன். ஊருக்குள் அடி வைத்ததும், அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் ஓடி வந்து, "மாமா மாமா, தொந்திக் கணபதிக்கும் சுபத்திரைக்கும் கல்யாணம், தெரியுமா உனக்கு?" என்று கூவின. எனக்கோ வயிற்றெரிச்சல் பொறுக்க முடியவில்லை. வீடு சென்றதும் என் அருமைத் தங்கை வழக்கம்போல் ஓடி வந்து கட்டிக் கொண்டாள். ஆனால் அவள் வாயினின்றும் ஒரு வார்த்தையேனும் கிளம்பவில்லை. அவள் வதனத்தில் எப்போதும் குடி கொண்டிருந்த முல்லைச் சிரிப்பையும் காணோம். முன்னெல்லாம் நான் போனதும் எவ்வளவு கேள்விகள் கேட்பாள்? எப்படியெல்லாம் கொஞ்சுவாள்? எனக்கும் அவளுடன் பேசுவதற்கு நாவெழவில்லை. தாயார் நான் வந்த சத்தம் கேட்டு வெளியே வந்தாள். "ராஜு, வா அப்பா" என்றாள். அவள் கண்களில் நீர் ததும்புவதையும் மிகுந்த பிரயாசையுடன் அவள் கண்ணீரை அடக்கிக் கொள்வதையும் கண்டேன்.
பின்னர், சற்று நேரத்துக்கெல்லாம் என் தாயார் தனியாகச் சமையலறையில் இருக்கும் சமயம் பார்த்து அங்கே போனேன். இப்போது அவள் தங்கு தடையின்றித் தாராளமாகக் கண்ணீர் பெருக்கினாள். "அம்மா, இதென்ன அநியாயம்? அப்பாவுக்கு ஏன் இப்படிப் புத்திப் போயிற்று?" என்றேன். "குழந்தாய் அதைப் பற்றி இனிப் பேசுவதில் பயன் என்ன?" என்று பெருமூச்சு விட்டாள். நான் வற்புறுத்திக் கேட்டதின் மேல், இந்தக் கல்யாணம் ஏற்பாடானதைப் பற்றி அவள் ஆதியோடந்தமாகக் கூறினாள். நண்ப! நீயல்லாமல் வேறு யாராவதாயிருப்பின் எனக்கு அவ்விவரங்களைக் கூறவும் வெட்கமாக இருக்கும். நான் எதிர்பார்த்ததுபோல் பண ஆசையே முதன்மையான காரணம் என்று அன்னை தெரிவித்தாள். வேறு தகுந்த வரன்களும் அமையவில்லை. இவ்வருஷம் கல்யாணம் கட்டாயம் செய்துவிடவேண்டும் என்று ஊரிலுள்ளவர்கள் சொல்லி விட்டார்களாம். இந்த அநியாயம் வேறெங்கேனும் உண்டா தியாகு? அம்மா மட்டும் கூடாதென்று சொல்லி வந்தாளாம். ஆனால் வீட்டிலுள்ள கிழவிகள் - அத்தையும் பாட்டியும் அப்பாவும் அனுசரணையாம். இரண்டு மூன்று முறை வீட்டில் சண்டை ஏற்பட்டு அம்மா அப்பாவின் கையில் அடிபட்டாளாம். ஆனால், என் தாயார் கூறிய விவரங்களுள் எல்லாவற்றையும் விட ஒன்று என் உள்ளத்தை உருக்கிவிட்டது. இந்தக் கல்யாணத்தைப் பற்றிய பேச்சு நடந்து கொண்டிருந்தபோது ஒரு நாள் சுபத்திரை அடுத்த வீட்டில் இந்த விவரத்தை கேள்விப்பட்டு ஓட்டமாக ஓடி வந்து அம்மாவைக் கட்டிக் கொண்டு, "அம்மா குள்ளநரிக்கு என்னைக் கொடுக்கப் போகிறீர்களாமே! நிஜந்தானா?" என்று கதறினாளாம். "குழந்தாய் நான் உயிரோடிருக்கும்வரை அப்படி ஒன்றும் நேராது" என்று அன்னை பதில் சொன்னாளாம். இதைக் கேட்டதும் நான் சலசலவென்று கண்ணீர் பெருக்கிக் கோவென்று அழுது விட்டேன். "குழந்தைக்கு அப்படி வாக்குறுதி கொடுத்தேனே ராஜு இப்போது என்ன செய்வேன்?" என்று அம்மா என்னைக் கேட்டாள். நான் என்ன பதில் சொல்வேன்? ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் அவளுடைய வாக்குறுதியை இப்படி நிறைவேற்றி வைக்கப் போகிறாள் என்று நினைத்தேனோ?
"அம்மா கல்யாணத்தை நிறுத்திவிடத்தான் வேண்டுமென்று சண்டைபிடித்துப் பார்க்கட்டுமா?' என்று கேட்டேன். "ஐயோ! வேண்டாம். அவர் பிடிவாதத்தை மாற்ற முடியாது. நான் ஒருத்தி கேட்டுக் கொண்ட வசவுகள் போதும், அப்பா" என்றாள்.
மறுநாள் நான் என் கைப்பெட்டியைத் திறந்து ஏதோ எடுத்துக் கொண்டிருக்கும்போது, அம்மா அங்கு வந்து "எப்போதும் மருந்துகள் கொண்டு வருவாயே, ராஜு இம்முறை கொண்டு வந்திருக்கிறாயா?" என்று கேட்டாள். பெண்களின் உள்ளத்தைக் கண்டு பிடிக்க முடியாது என்று சொல்கிறார்களே, அது எவ்வளவு உண்மை! என் அன்னைதான்; ஆனால் அவள் என்ன கருத்துடன் கேட்கிறாள் என்பதை அப்போது அணுவளவும் அறிந்தேனில்லையே! நான் ஊருக்குப் போனால் 'டாக்டர் வந்துவிட்டார்' என்று எல்லோரும் வைத்தியத்துக்கு வந்துவிடுவார்களென்பதும், அதற்காக நான் எப்போதும் சிற்சில மருந்துகள் எடுத்துப் போவது வழக்கமென்பதும் உனக்குத் தெரியுமே! அவ்வாறே இம்முறை எடுத்துச் சென்றிருந்தேன். அவற்றை இன்னின்ன மருந்து என்றும், இந்த இந்த நோய்க்கு உபயோகமென்றும் அம்மாவுக்குக் காட்டினேன். அப்போது, விஷமருந்து இருந்த ஒரு புட்டியையும் பாவி ஏன் அவளுக்குக் காட்டி விட்டேன். மறுநாள் அதாவது கல்யாணத்துக்கு முதல் நாள் காலையில் என்னுடைய பெட்டிச் சாவியைக் கேட்டாள். "ஜாக்கிரதையாகச் சில நகைகள் உன் பெட்டியில் வைத்திருக்க வேண்டும், ராஜு! அந்தச் சாவி என்னிடமே இருக்கட்டும்" என்றாள். நான் நம்பிக் கொடுத்தேன். நம்பிய பிள்ளையைத் தாயே மோசம் செய்து விட்டாளே!
அன்றிரவுதான், தியாகு, மகா பயங்கரமான பேரிடி என் தலையில் விழுந்தது. நிச்சயதார்த்தத்துக்கு மாப்பிள்ளையை ஊர்வலத்துடன் அழைத்து வருவதற்காக எல்லாரும் மாப்பிள்ளை வீட்டுக்குப் போயிருந்தோம். வெற்றிலை பாக்கு வழங்கிக் கொண்டிருந்தபோது, ஒருவர் வேகமாக வந்து என் காதோடு அம்மா அவசரமாகக் கூப்பிடுவதாகத் தெரிவித்தார். என் அன்னை மற்ற பெண்களுடன் மாப்பிள்ளை வீட்டுக்கு வரவில்லையென்பதை அப்போதுதான் கவனித்தேன். ஏதோ முக்கிய விஷயமாகவே இருக்குமென்று எண்ணி உடனே வீட்டுக்கு விரைவாகச் சென்றேன். வீட்டில் சமையற்காரனையும் சுபத்திரையையும் தவிர வேறு யாருமில்லை. "அம்மா சாமான் அறையில் இருக்கிறாள் அண்ணா! உன்னை உடனே கூப்பிடுகிறாள்" என்றாள் சுபத்திரை. சாமான் அறையில் நான் கண்ட காட்சியை என்னவென்று சொல்வேன்? அம்மா படுத்துக் கொண்டிருந்தாள். பக்கத்தில் என் பெட்டியின் மேலிருந்த விஷமருந்துப் புட்டியில் பாதி காலியாய் இருந்தது. எனக்கு வயிற்றைப் பகீர் என்றது. அம்மா அருகில் ஓடிப் போய் பார்த்தேன். அவள் புன்னகை புரிந்தாள். ஆனால் விஷம் நன்கேறி விட்டதென்றும் இனி உயிர் பிழைக்க வழியில்லையென்றும் அறிந்தேன். அப்போது ஒரே எண்ணந்தான் தோன்றிற்று. அந்த விஷப் புட்டியைத் தாவி எடுக்கப் போனேன். அப்போது அன்னை சட்டென்று என் கைகளைப் பிடித்துக் கொண்டு, மிகுந்த பிரயாசையுடன் எழுந்து உட்கார்ந்தாள். "என்ன செய்யப் போகிறாய் குழந்தாய்?" என்று ஈனசுரத்தில் கேட்டாள். நான் பதில் சொல்லவில்லை.
"விஷத்துக்கு மாற்று மருந்து எடுக்கவா, இப்போது எழுந்தாய்?"
"இல்லை மாற்று மருந்து இனிப் பயன்படாது. அந்தப் புட்டியில் பாக்கியுள்ளதை நான் குடிக்கப் போகிறேன்.
"அது தெரிந்தே கையைப் பிடித்துக் கொண்டேன். நல்லது, ராஜு, நீ உயிரை விட விரும்பினால் நான் குறுக்கே நிற்கவில்லை. துன்பம் நிறைந்த இந்தப் பாழும் உலகில் இருந்து ஆவதென்ன? ஆனால் குழந்தாய் அவசரப்படாதே. நான் இன்னும் சற்று நேரந்தானே உயிரோடிருப்பேன்? அதற்குள் நான் சொல்ல விரும்புவதைக் கேட்டுவிட மாட்டாயா?"
"சரி, சொல்லு; கேட்கிறேன்."
"என் கண்மணி சுபத்திரைக்கு நான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டேன். நான் உயிரோடிருக்கும்போது இந்தக் கல்யாணம் நடைபெறாது. நீ என்ன செய்யப் போகிறாய் உன் தங்கைக்காக?"
"நீ செய்ததையே நானும் செய்கிறேன்."
"குழந்தாய் நீ சொல்வது நன்றாயில்லை. நான் பெண். உயிர் விடுவதைத் தவிர வேறெதுவும் செய்ய முடியாது. நீ ஆண் பிள்ளையாயிற்றே?"
"இனிச் செய்ய என்னவிருக்கிறது அம்மா?"
"நான் உயிர் துறந்தது வீண் போக வேண்டுமென்றா சொல்கிறாய்? இன்னமும் என் குழந்தையைப் பாழுங்கிணற்றிலேயா தள்ளப் போகிறீர்கள்?"
"அம்மா நான் என்ன செய்யவேண்டுமென்று சொல். செய்து முடிப்பதாக இதோ ஆணையிடுகிறேன்."
"குழந்தாய், ஆணை வேண்டாம் நீ சொன்னால் போதாதா? நான் இறந்தால் நாளை முகூர்த்தம் நின்றுவிடும். அபசகுனம் என்று சொல்லி இந்தக் கல்யாண ஏற்பாட்டையே மாற்றிவிடுவார்கள் அல்லது நீ கொஞ்சம் பிடிவாதம் செய்தால் முடிந்துவிடும். பின்னர், சுபத்திரைக்குத் தக்க வரன் தேடிக் கல்யாணம் செய்து வைப்பது உன் பொறுப்பு. ராஜு பிச்சை வாங்கிப் பிழைக்கும் பிரம்மசாரி பையன் ஒருவன் உனக்குக் கிடையாமலா போகிறான்? யாருக்கு வேண்டுமானாலும் கொடு. என் கண்மணியை இந்தக் கொடுமைக்கு மட்டும் ஆளாக்காதே. ஆகால மரணமடைந்தவர்களின் ஆவி பூமியின் மீதே சுற்றிக் கொண்டிருக்கும் என்பார்கள். மீண்டும் இந்த மாப்பிள்ளைக்கே சுபத்திரையைக் கொடுக்கும் பட்சத்தில், இவ்வுடலை நீத்த பிறகும் என் உயிர் ஒருக்காலும் அமைதியடையாது"
"அம்மா சத்தியமாகச் சொல்கிறேன். நான் உயிர் விடுவதாயிருந்தால் சுபத்திரைக்குத் தகுந்த கணவனை நிச்சயம் செய்துவிட்டே உயிர்விடுவேன். அதுவரை என் உயிர் நீங்காது" என்றேன்.
அப்போது அம்மாவின் முகம் மலர்ந்தது. பின்னர், நண்ப, அவளுக்கு இவ்விஷயமாக உன்னுடைய விருப்பத்தைப் பற்றியும் சொன்னேன். அவள் இணையற்ற மகிழ்ச்சியடைந்தாள் என்பதை அவள் முகக் குறியால் அறிந்தேன். சற்று நேரத்துக்கெல்லாம் என் ஆருயிர் அன்னை இப்பாவ உலக வாழ்வை நீத்துப் பரகதிக்குச் சென்றாள். அதுவரை கண்ணீர் ஒரு துளியும் பெருக்காமல் பிரமை கொண்டவன் போல் பேசி வந்த நான், கோவென்று கதறிப் புரண்டழுதேன். அப்போதும் ஆண்டவன் அருளால் கொஞ்சம் சுயபுத்தியிருந்தது. புட்டியைப் பெட்டிக்குள் வைத்துப் பூட்டினேன். பின்னர் என் வீட்டில் நேர்ந்த அலங்கோலத்தைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா?
நண்ப, கடைசியாக ஒன்று கூறி, உனக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய மனக் கவலையை நீக்கிவிட விரும்புகிறேன். சுபத்திரையைக் கல்யாணம் செய்து கொள்வதைப் பற்றி உன் விருப்பத்தை என் அன்னையிடம் கூறியதனால் அவள் மன நிம்மதியுடன் மரணமடைந்தாள். ஆனால், இது சம்பந்தமாக உன்னை நான் வற்புறுத்துவேனென்று நீ பயப்பட வேண்டாம். எனக்கு நேர்ந்த துயரத்தைக் கேட்டு மனங்கசிந்திருந்த போது கூறிய மொழியை ஆதாரமாகக் கொண்டு உன் வாக்குறுதியை நிறைவேற்றி வைக்கும்படி கேட்கமாட்டேன். ஆனால் சுபத்திரைக்குத் தக்க வரன் தேடிக் கல்யாணம் செய்து வைக்கும் முயற்சியில் உதவி செய்ய வேண்டுமென்று கேட்க எனக்குரிமை யுண்டென எண்ணுகிறேன். ஏனெனில் நண்ப, அம்மா இறந்தாலும், வேறு என்ன துயரம் நேர்ந்தாலும் சுபத்திரையின் கல்யாணத்தை என்னவோ இவ்வருஷமே நடத்தியாக வேண்டும். நமது சமூகக் கட்டுப்பாடுகளின் கொடுமையை என்னவென்பேன்?
இங்ஙனம், அபாக்கியனான நின் நண்பன் இராஜகோபாலன்.
மேற்கண்ட கடிதத்தைப் படித்து வரும்போது என் மனதிலெழுந்த பலவகை உணர்ச்சிகளை இங்கே எழுதி வாசகர்களின் காலத்தை வீண்போக்க நான் விரும்பவில்லை. கல்யாணம் நின்று போயிற்றென்பதைப் படித்ததும், அளவு கடந்த மகிழ்ச்சியுண்டாயிற்று. இராஜகோபாலன் அன்னை மரணமடைந்த செய்தியை படித்ததும், இடி விழுந்தது போல் திடுக்கிட்டேன். கடிதத்தின் பிற்பகுதியை அழுதுகொண்டே படித்தேன். கடைசிப் பகுதி, இராஜகோபாலன் மீது ஓரளவு கோபத்தை உண்டாக்கிற்று. நீண்ட பதில் எழுதினேன். அதில் முதலில் ஏதேதோ ஆறுதல் கூறியிருந்தேன். கடைசியில், சுபத்திரையும் நானும் மணம் புரிந்து கொள்ள வேண்டுமென்பது ஆண்டவன் விருப்பமென்று குறிப்பிட்டு என் உறுதியைச் சந்தேகித்தது குறித்த அவனைச் சிறிது கடிந்து கொண்டேன்.
அவ்வாண்டில் கடைசி முகூர்த்த நாளாகிய ஆனி மாதம் 30 ஆம் நாளன்று எனக்கும் சுபத்திரைக்கும் மணம் நடத்துவதென்று தீர்மானிக்கப்பட்டிருந்தது. இராஜகோபாலன் அன்னையின் பிரிவை ஓரளவு மறந்திருந்தான். இறுதிச் சடங்குகள் செய்து விட்டுச் சென்னைக்கு வந்து விட்டான். நானும் அவனும் சேர்ந்தே கல்யாணத்துக்கு முதல் நாள் ஊருக்குப் போவதென்று தீர்மானித்திருந்தோம்.
என் வீட்டில் யாருக்கும் இந்த விவாகம் சம்மதமில்லை. எதிர்ப்பு பலமாக இருந்தது. தந்தையும் இளைய தாயாரும் எவ்வளவோ சொன்னார்கள். அத்தனைப் பிடிவாதமும் மன உறுதியும், எனக்கு அப்போது எங்கிருந்து வந்தன என்பதை நினைக்கும் போது எனக்கே ஆச்சரியமாயிருக்கிறது. கடைசியாக, 'எப்படியாவது கெட்டலையட்டும்' என்று விட்டு விட்டார்கள்.
ஆனி மாதம் 28ஆம் நாள் இரவு வண்டியில் புறப்பட்டோ ம். தந்தையும் தாயும் கல்யாணத்துக்கு வரவில்லை. தந்தை வேலை அதிகமென்று சொல்லிவிட்டார். இளைய தாயார் உடம்பு அசௌக்கியமென்றாள். என் சொந்தத் தாயின் சகோதரர் மட்டும் குடும்பத்துடன் வந்தார். என் தம்பிமார் இருவரும் இரண்டொரு நண்பர்களும் கூட வந்தார்கள். ஆனால் அப்போது எனக்கிருந்த மனமகிழ்ச்சியிலும், உற்சாகத்திலும் தாய் தந்தையர் வராததைக் கூட நான் பொருட்படுத்தவில்லை. எல்லாரும் எழும்பூரில் ரயில் ஏறினோம்.
வண்டி புறப்பட்டதும், நண்பர்களில் ஒருவர் வாங்கிக் கொண்டு வந்திருந்த பத்திரிகையைப் பிரித்து புரட்டினேன். 'தென்னாட்டில் வெள்ளம்' 'கொள்ளிடம் பாலத்துக்கு அபாயம்' என்ற தலைப்புகளைப் பார்த்ததும், 'சொரேல்' என்றது. கீழே படித்துப் பார்த்தேன். காவேரியிலும் கொள்ளிடத்திலும் பெருவெள்ளம் வந்து பலவிடங்களில் உடைப்பெடுத்திருப்பதாகவும், ரயில் பாதை சிலவிடங்களில் உடைந்து போனதாய்த் தெரிவதாகவும், கொள்ளிடத்தின் ரயில் பாலத்தில் ஓரிடத்தில் பிளவு ஏற்பட்டிருப்பதாகவும், அன்றிரவு வண்டிகள் பாலத்தைத் தாண்டிவிடப்படுமா என்பது ஐயத்துக்கிடமான விஷயமென்றும் செய்திகள் காணப்பட்டன. உடனே இராஜகோபாலனிடம் காட்டினேன். அவன் படித்துவிட்டு பெருமூச்சு விட்டான். "ஆண்டவனே நமக்கு விரோதமாயிருக்கிறானா என்ன தியாகு?" என்றான். இதற்குள் மற்றவர்களும் அச்செய்திகளைப் படித்தனர். எங்கள் உற்சாகம் அடியோடு போயிற்று. எல்லோரும் மனக்குழப்பமுற்றனர். நானும் இராஜகோபாலனும் தனியாக யோசனை செய்தோம். என்ன இடையூறு நேர்ந்தாலும் நாங்கள் இருவருமாவது போய்ச் சேர்ந்து விடுவதென்று தீர்மானித்தோம்.
காலை 3 மணிக்கு வண்டி சிதம்பரத்தை அடைந்தது. அதற்குமேல் போகாதென்று பிரயாணிகளுக்கு அறிவிக்கப்பட்டது. ஒருவாறு இதை எதிர்பார்த்தோமாயினும் எங்கள் ஏமாற்றம் அளவிடற்பாலதாயில்லை. ரயிலிலிருந்து இறங்கி விசாரித்தோம். கொள்ளிடம் பாலத்தில் ஓரிடத்திலே பிளவு ஏற்பட்டிருப்பதோடல்லாமல், சீர்காழிக்கும் மாயவரத்துக்குமிடையே பயங்கரமான வெள்ளம் ஓடிக் கொண்டிருக்கிறதென்றும், பல மைல் நீளம் ரயில்பாதை அடித்துக் கொண்டு போகப்பட்டதென்றும், ரயில் போவது அசாத்தியம் என்பது மட்டும் அன்றி, மனிதர்கள் அப்பிரவாகத்தைக் கடந்து செல்வது இயலாத காரியம் என்றும் தெரிய வந்தன. இந்த விவரங்களை அறிந்ததும் எங்கள் மனோநிலை எப்படியிருக்குமென்பதை வாசகர்கள் கற்பனா சக்தியினால் பாவித்துக் கொள்ள வேண்டுமேயல்லாமல், என்னால் விவரிக்க இயலாது.
எல்லாரும் கலந்து ஆலோசனை செய்தோம். நானும் இராஜகோபாலனும் மட்டும் கால் நடையாகப் புறப்பட்டு மாயவரம் வரையில் போய், அங்கு மீண்டும் ரயிலேறிச் செல்வதென்றும், மற்றவர்கள் அங்கேயே தங்கியிருந்து இரண்டொரு தினங்களில் ரயில் விட்டால் வருவதென்றும், இல்லாவிடில் சென்னைக்குத் திரும்ப வேண்டுவதேயென்றும் தீர்மானித்தோம். இவ்வாறு, என் கல்யாணத்துக்கு வந்த சிலரையும் விட்டுப் பிரிந்து, கவலை நிறைந்த உள்ளத்துடன் காலை நாலு மணிக்கு ரயில் பாதையோடு நடக்கலானோம். ராஜகோபாலனோ ஒரு வார்த்தையும் பேசவில்லை. எங்களில் யார் எவருக்குத் தேறுதலோ தைரியமோ கூறமுடியும்? பொழுது விடிந்தால் யாரேனும் தடை செய்யப் போகிறார்களோ என அஞ்சி உதயத்துக்கு முன்பாகவே கொள்ளிடம் பாலத்தைக் கடக்கலானோம். 'ஹோ' வென்ற கோஷத்துடனும், பயங்கரமான அலைகளுடனும், முட்டி மோதிக் கொண்டு ஓடிய அப்பெருவெள்ளம், என் உள்ளத்தின் நிலைமையை அப்போது நன்கு பிரதிபலிப்பதாயிற்று.
பாலத்தைத் தாண்டியாயிற்று. பொழுதும் விடிந்தது. வழி நெடுக விசாரித்துக் கொண்டே விரைவாக நடந்தோம். விசாரித்ததில் தெரிந்த செய்திகள் நம்பிக்கையூட்டுவனவாயில்லை. கடைசியில் சீர்காழியைத் தாண்டி அப்பால் இரண்டொரு மைல் தூரம் போனதும், மகா சமுத்திரம் போல் கண்ணுக்கெட்டிய தூரத்துக்கு ஒரே பிரவாகமாக வெள்ளம் ஓடிக் கொண்டிருந்தது கண்டு திக்பிரமை கொண்டவர்கள் போல் உட்கார்ந்து விட்டோம்.
ஆனால், இப்படி நீண்ட நேரம் உட்கார்ந்துவிடவில்லை. என் காதலும், இராஜகோபாலன் அன்பும், எங்களை மேலும் முயன்று பார்க்கச் செய்தன. சீர்காழிக்குத் திரும்பி வந்து கொஞ்சம் உணவு அருந்தி விட்டுப் படகுக்காக விசாரித்தோம். பிரவாகத்தில் அகப்பட்ட கிராமங்களின் ஜனங்களை மீட்பதற்கென்று இரண்டொரு படகுகள் வந்தனவென்றும், ஆனால் வெள்ளத்தை மேற்பார்வை பார்ப்பதற்காக வந்த பெரிய துரையும் அவரது சகாக்களும் வெள்ளக் காட்சிகளைப் புகைப்படம் பிடிப்பதற்காக அப் படகுகளில் சென்றிருக்கின்றனர் என்றும், இன்னும் திரும்பி வரவில்லையென்றும், தெரிய வந்தது. எப்படியாவது இந்த வெள்ளத்தைத் தாண்டி எங்களைக் கொண்டு போய் விடுவோர்க்குக் கேட்ட பணம் தருவதாக அறிவித்தோம். அதன் மீது ஒரு சிலர் மரக்கட்டைகளைக் கட்டித் தெப்பமாக்கி அதில் எங்களை ஏற்றிக் கொண்டுபோய்ச் சேர்ப்பதாக முன் வந்தனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக, நாங்கள் பிரவாகத்தை அடைந்தபோது, எங்கேயோ பிரவாகத்தின் வேகத்தால் கட்டிலிருந்து அவிழ்த்துக் கொண்ட படகு ஒன்று வெள்ளத்தில் மிதந்து வந்து கொண்டிருந்தது. அம் மனிதர்கள் அதைப் பிடித்திழுத்துக் கொண்டு வந்தார்கள். மாலை சுமார் நான்கு மணிக்கு நாங்கள் அப்படகில் ஏறியபோது உயிருடன் பிரவாகத்தைக் கடந்து அக்கரை செல்வோம் என்னும் நம்பிக்கை எனக்கில்லை. எவ்வளவோ இடத்தில் படகு தலை கீழாய்க் கவிழ்ந்துவிடும் போல் இருந்தது. சிலவிடங்களில் கோலுக்கு அண்டாத ஆழம். கரையென்பதே கிடையாது. சற்று நேரத்துக்கெல்லாம் இருளும் வந்து சூழ்ந்தது. கடைசியாக எப்படியோ தட்டுத் தடுமாறி இரவு எட்டு மணிக்கு அக்கரை போய்ச் சேர்ந்தோம். பின்னர் மீண்டும் நடந்து மாயவரம் ஸ்டேஷனையடைந்த போது இரவு பத்து மணியிருக்கும். அங்கிருந்து கடைசி வண்டி போய் ஒரு மணி நேரம் ஆயிற்று என்கிறார்கள்.
அன்றிரவு ஸ்டேஷனில் படுத்திருந்துவிட்டு, மறுநாள் அதிகாலையில் மாயவரத்திலிருந்து புறப்படும் வண்டியில் ஏறி சுமார் பதினொரு மணிக்கு மன்னார்குடி போய்ச் சேர்ந்தோம். அங்கிருந்து இராஜகோபாலன் கிராமம் ஆறு மைல் தூரம். ஒரு குதிரை வண்டி அமர்த்திக் கொண்டு 2 மணி சுமாருக்கு ஊரையணுகினோம். முகூர்த்தம் நிச்சயிக்கப்பட்டிருந்தது 10.30 மணிக்கு. ஊரினருகில் சென்றபோது மேளச் சத்தம் கேட்டது. அப்போது என் இருதயம் அடித்துக் கொண்ட சத்தம் பக்கத்தில் யாராவது இருந்திருந்தால் நன்றாகக் கேட்டிருக்கும். இராஜகோபாலன் முகத்தை நான் பார்க்கவேயில்லை. நேரே வீட்டுக்குச் செல்லாமல், தெருவின் கோடியிலேயே வண்டியை நிறுத்தச் சொல்லி இறங்கினோம். கண்ணில் அகப்பட்ட முதல் பேர்வழியை விசாரித்தோம். குறிப்பிட்ட முகூர்த்தத்தில் சுபத்திரைக்கும், கணபதி ஐயருக்கும் கல்யாணம் நடந்து விட்டதென்றும் திருமாங்கல்யதாரணம் ஆகி அரைமணி நேரம் ஆயிற்றென்றும், அவர் அறிவித்தார்; அப்படியே ஸ்தம்பித்து மரம் போலானோம்.
"ராஜு, நீ தலைவிதி தலைவிதி என்ற போது நான் உன்னை மறுத்துப் பேசினேன். நீ கூறியதே சரி என்று இப்போது எனக்குப் புலனாகிறது. நாம் எவ்வளவோ முயற்சி செய்தோம். பயனென்ன? தலைவிதி வேறு விதமாயிருக்கிறது" என்றேன்.
ஊருக்குப் பக்கத்திலிருந்த ஆற்றங் கரையில் ஒரு தனிமையான இடத்தில் உட்கார்ந்திருந்தோம். மேற்குப் புறத்தில் சற்று தூரத்திலிருந்த அடர்த்தியான தென்னந் தோப்புகளுக்கு பின்னால் செம்பொற் கதிரவன் மறைந்து கொண்டிருந்தான். ஆற்றில் அப்போதுதான் புதிய வெள்ளம் வந்திருந்தது. நீரில் எங்கே பார்த்தாலும் நுரையும், இலையும், பூவும் மிதந்தன. புள்ளினங்களின் இன்னிசையையன்றி வேறு சத்தம் எதுவுமில்லை.
இராஜகோபாலன் கலகலவென்று சிரித்தான்; அந்தச் சிரிப்பு எனக்கு அச்சத்தை விளைவித்தது. அது மனிதர்களுடைய மகிழ்ச்சிச் சிரிப்பாயில்லை. ஏதோ பேயின் சிரிப்பாகத் தோன்றிற்று.
"நல்லது தலைவிதியை ஏற்றுக் கொண்டாய், நானோ உன் பழைய அபிப்பிராயத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறேன். தலைவிதி என்பது இல்லை. எல்லாம் மனிதப் பிரயத்தனமே" என்றான் இராஜகோபாலன்.
பாவம்! மனம் கசிந்துபோய் இப்படிப் பேசுகிறான் என்று நினைத்தேன். அவன் தலையை என் மடி மீது வைத்துப் படுக்கச் செய்தேன். "சுபத்திரையுடன் பேசினாயா?" என்று வினவினேன்.
"இல்லை, இல்லை, அவள் முகத்தைப் பார்க்கவும் என்னால் முடியவில்லை. உன்னை விட்டுப் பிரிந்து வீட்டுக்குச் சென்றேனல்லவா? நான் உள்ளே நுழைந்தபோது எல்லாம் முடிந்து ஆலாத்தி சுற்றிக் கொண்டிருந்தார்கள். என் வருகையை உள்ளுணர்வால் அறிந்து கொண்டாளோ என்னவோ, சுபத்திரை நிமிர்ந்து பார்த்தாள், என்னைக் கண்டுவிட்டாள். கலகலவென்று அவள் கண்களினின்றும் நீர் பொழிந்தது, ஆலாத்தியைச் சட்டென்று முடித்து, அவளை உள்ளே அழைத்துக் கொண்டு போனார்கள். பிறகு அவளை நான் பார்க்கவே இல்லை" என்றான் என் நண்பன். மறுபடியும் முன் போல் சிரித்தான். அவன் கண்களில் ஒரு சொட்டுக் கண்ணீர் கூட வரவில்லை. இன்னதென்று தெரியாத ஒருவகை அச்சம் எனக்கு உண்டாயிற்று.
"உனக்கு யாரும் சமாதானம் சொல்ல வில்லையா?" என்று கேட்டேன்.
"அதற்குக் குறைவில்லை. ஒவ்வொருவராக என்னிடம் துக்கம் கேட்க வந்தார்கள் - "பிராப்தம் இப்படி இருக்கும் போது வேறு விதமாய் நடக்குமா?" என்றார் ஒருவர். "ஒருவர் மனைவியை இன்னொருவர் கல்யாணம் செய்து கொள்ள முடியுமா?" என்றார் இன்னொருவர். நேற்றிரவு முழுதும் உறக்கமில்லாமல் நமக்காகக் காத்துக் கொண்டிருந்தார்களாம். இன்று காலை எட்டு மணிக்குத்தான் வெள்ளத்தினால் ரயில் போக்குவரவு நின்றுவிட்டதென்று தெரியவந்ததாம். இனிமேல் வரமாட்டோ ம் என்று நிச்சயம் செய்து கொண்டார்களாம். அதற்கு மேல் ஊரிலுள்ள பிரமுகர்கள் எல்லாம் கூடியோசித்து, இந்த வருஷத்தில் இதுவே கடைசி முகூர்த்த நாள் ஆனபடியால், குறித்த முகூர்த்தத்தில் கணபதி ஐயருக்கே மணம் செய்துவிடுவதைத் தவிர வேறு வழியில்லையென்று தீர்ப்புச் சொல்லிவிட்டார்களாம்."
திடீரென்று அவன் எழுந்து உட்கார்ந்தான். என் தோள்களைப் பிடித்துக் கொண்டு கண்களுக்கு நேரே உற்றுப் பார்த்து, "இதோ பார், தியாகு! ஆண்டவன் ஆணையாகச் சொல். இத்தகைய கொடுமைகளை இந்நாட்டிலிருந்து ஒழிக்க ஏதேனும் செய்யப் போகிறாயா, இல்லையா?" என்றான்.
"தலைவிதி தலைவிதி என்றிருப்பது பேதமை. என் அன்னையின் மரணத்துக்குப் பின்னர் அவ்வெண்ணம் எனக்கு அடியோடு மாறிவிட்டது" என்று தொடர்ந்து கூறினான்.
"உன் அன்னை உயிர் விட்டதால் என்ன பயன் விளைந்தது ராஜு? கடவுளுடைய சித்தம்..."
"வேண்டாம், இந்தக் கொலை பாதகத்துக்குக் கடவுளுடைய பெயரை ஏன் இழுக்கிறாய்? இது கடவுளுடைய சித்தமானால் உலகில் நடக்கும் அக்கிரமங்கள் எல்லாம் கடவுளுடைய சித்தமே. பொய்யும் புலையும், கொலையும் களவும், விபசாரமும் இன்னும் மகாபாதகங்களும் கடவுளுடைய சித்தமே. பின்னர், அவற்றையெல்லாம் ஏன் எதிர்க்க வேண்டும்?"
"நான் என்ன செய்யவேண்டுமென்கிறாய்?"
"நமது சமூகத்தில் இரண்டு கொலை பாதகங்கள் இருக்கின்றன. கன்னி வயதில் கட்டாயமாகக் கல்யாணம் செய்துவிட வேண்டுமென்பது ஒன்று; இளம் வயதில், குழந்தைப் பருவம் நீங்கா முன்னர் கணவனையிழந்த பெண்களுங்கூடத் தங்கள் வாழ்நாள் முழுதும் கைம்பெண்ணாயிருந்து, வாழ்க்கையில் எவ்வித இன்பமுமின்றி, இடிபட்டுக் காலத்தைத் தள்ள வேண்டுமென்பது மற்றொன்று. பேச்சில் பயனில்லை. பருவமடைந்த மங்கையோ, இளம் கைம் பெண்ணையோ கல்யாணம் செய்து கொள்வதாக நீ பிரதிக்ஞை செய்வாயா?"
சற்று யோசனை செய்தேன். பின்னர், "ராஜு இந்த வாழ்க்கையில் இனிக் கல்யாணம் செய்து கொள்ள எனக்கு விருப்பமில்லை. சுபத்திரையை நினைத்த மனம் வேறு பெண்ணைக் கருதுமென்று எனக்குத் தோன்றவில்லை. ஆனால், என் மனம் எப்போதேனும் மாறுதலடைந்து கல்யாணம் செய்துகொள்ளத் தீர்மானித்தால், பருவமடைந்த மங்கையையாவது, கன்னி வயதிலேயே கைம்பெண்ணானவளையாவது மணம் செய்து கொள்வதாகப் பிரதிக்ஞை செய்கிறேன்" என்று பதிலளித்தேன். மாலை வேளைப் பூசைக்காகக் கோயிலில் ஆலாட்சிமணி அடிக்கும் சத்தம் "ஓம் ஓம் ஓம்" என்று ஒலித்துக் கொண்டு மேலக் காற்றில் வந்தது.
அன்றிரவு இராஜகோபாலனுடைய நண்பர் ஒருவருடைய வீட்டில் உணவருந்திவிட்டு அவர் வீட்டுத் திண்ணையிலேயே படுத்துக் கொண்டேன். மறுநாள் அதிகாலையில் எழுந்து சென்னைக்குப் புறப்பட்டுவிட உத்தேசித்தேன். உறக்கம் பிடியாமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தேனென்றால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்களா? வீதி வழியாகப் போவோர் வருவோர் எல்லாம், என்னைச் சுட்டி ஏதேதோ பேசிக் கொண்டு போனார்கள். ஆனால், எனக்கு அதைப் பற்றிச் சிறிதும் கவலை உண்டாகவில்லை. கண்ணீர் ததும்பி ஓடும் சுபத்திரையின் வதனமும் அச்சத்தை ஊட்டும் இராஜகோபாலனின் சிரிப்பும் என் மனக்கண் முன்பு மாறி மாறி வந்து கொண்டிருந்தன. சென்னையில் இராஜகோபாலனை விட்டுப் பிரிந்த அன்று கண்ட கனவு அப்போது நினைவிற்கு வந்தது. என் உடம்பு நடுங்கிற்று. அந்தக் கனவு பொய்யாகிவிட்டதே என்று எண்ணினேன். ஆனால் அடுத்த கணத்தில்...ஓ! எத்தகைய பயங்கரமான உண்மையாயிற்று?
கலகலவென்ற சிரிப்புச் சத்தம் கேட்டுத் திடுக்கென்று எழுந்து உட்கார்ந்தேன். இராஜகோபாலன் திண்ணையின் ஓரமாக நின்று கொண்டிருந்தான். "தியாகு, செய்தி கேட்டாயா?" என்றான். அவன் குரலில் ஏன் அந்த மாறுதல்? "என்ன செய்தி?" என்று கேட்டேன். "என் தாயார் வந்து என்னைக் கூப்பிடுகிறாள், அவளுக்குக் கொடுத்த வாக்குறுதியைப் பாதியளவே நிறைவேற்றி வைத்திருக்கிறேன் என்றும், பாக்கிப் பாதியையும் நிறைவேற்றிவிட்டுச் சரியாக இன்னும் ஒரு வருஷத்தில் வருகிறேன் என்றும் பதில் சொல்லுகிறேன். நீ கொஞ்சம் சிபார்சு செய்யேன்" என்றான். மறுபடியும் அந்த அச்சம் தரும் சிரிப்பு. மங்கலான நிலவின் ஒளியில், அவன் முகத்தை உற்றுப் பார்த்தேன். கண்கள் "திரு திரு"வென்று விழித்தன. அப்போது சட்டென்று உண்மை புலனாயிற்று. கொடிய நாகப்பாம்பு ஒன்று என் நெஞ்சைத் துளைத்து ஊடுருவிச் செல்வது போல் இருந்தது. என் ஆருயிர் நண்பன் 'அருமைத் தோழன்' பித்தனாகிவிட்டான்!
அன்ன மூட்டிய தெய்வ மணிக்கையின் ஆணைகாட்டில் அனலை விழுங்குவோம்
என்று அவன் உரக்கப் பாடினான். பின்னர் சட்டென்று என் கைகளைப் பிடித்துக் கொண்டு, "தியாகு, உன் நண்பனுக்கு நீ அளித்த பிரதிக்ஞையை நிறைவேற்றி வைப்பாயல்லவா?" என்றான். நான் பதில் சொல்வதற்குள் மீண்டும் "குள்ளநரியைப் பலி கொடுத்தாய்விட்டது உனக்குத் தெரியாதா?" என்று கேட்டான். இவ்வளவுடன் திண்ணையின் தூணில் சாய்ந்து கொண்டு விம்மி விம்மி அழலானான். நான் திகைத்துப் போய் உட்கார்ந்திருக்கையில் சற்று நேரத்துக்கெல்லாம் ஐந்தாறு பேர் நாங்களிருந்த திண்ணைக்கு வந்தார்கள். அவர்களுடைய சம்பாஷணையிலிருந்து கல்யாண மாப்பிள்ளை கணபதிஐயர் மரணாவஸ்தையிலிருப்பதாகவும், டாக்டர்களையும் போலீஸ்காரர்களையும் அழைத்து வருவதற்கு மன்னார்குடிக்கு ஆட்கள் போயிருப்பதாகவும் தெரிந்து கொண்டேன். அன்றிரவு, மாப்பிள்ளை சாப்பிட்டானது கொஞ்சம் தலைவலிக்கிறது என்று சொல்ல, இராஜகோபாலன் உடனே ஏதோ மருந்து கொண்டு வந்து கொடுத்தானென்றும் அதை மாப்பிள்ளை சாப்பிட்டதும் இராஜகோபாலன் பித்தன் போல் கூறிய மொழிகளிலிருந்து அருகிலிருந்தவர்களுக்குச் சந்தேக முண்டாயிற்றென்றும், சில நிமிஷங்களுக்கெல்லாம் மாப்பிள்ளைக்கு உடம்பு அதிகமாகிவிட்டதென்றும் அறிந்தேன். இப்போது எனக்கு எல்லாம் தெளிவாக விளங்கிவிட்டன. சாயங்காலம் என் நண்பன் "தலைவிதி கிடையாது" என்று சொன்னபோது இத்தகைய தீர்மானத்தை மனதில் வைத்துக் கொண்டே சொல்லியிருக்க வேண்டும். அன்னை உட்கொண்டு பாக்கியிருந்த விஷத்தை இப்போது இராஜகோபாலன் உபயோகப்படுத்திவிட்டான். அன்னையைப் போலவே அவனும் தன் உயிரைக் கொடுத்திருப்பான். ஆனால், திருமாங்கல்ய தாரணம் எப்போது ஆகி விட்டதோ, 'இனி, அவன் உயிரை விடுவதால் என்ன நடக்கும்? எனவே, பின்னால் சுபத்திரையின் கதி எப்படியானாலும், இப்போது அவளை விடுதலை செய்து விட வேண்டுமென்று தீர்மானித்தான் போலும்! என்னிடம் அவன் வாங்கிக் கொண்ட வாக்குறுதியின் கருத்தும் இப்போது எனக்குத் தெளிவாயிற்று.
அதன் பின்னர் ஒன்றன் பின் ஒன்றாக நடந்த நிகழ்ச்சிகள் எல்லாம், கனவில் கண்டன போலவே எனக்கு இன்னமும் தோன்றுகின்றன. அப்போது நான் திக்பிரமை கொண்டவன் போல் காணப்பட்டேனென்றும், எனக்கும் எங்கே பித்துப் பிடித்துவிடப் போகிறதோ என்று என் தந்தை பயந்தாரென்றும் பின்னால் தெரியவந்தன. ஆகவே அந் நிகழ்ச்சிகளைப் பற்றி விவரமாக என்னால் கூற முடியாது. அன்றிரவு போலீஸ்காரன் வந்ததும் என்னையும் இராஜகோபாலனையும் கைது செய்து மன்னார்குடிக்கும், பிறகு தஞ்சாவூருக்கும் கொண்டு போனதும், என் தந்தைக்கு தந்தி அடித்து வரவழைத்ததும், கணபதி ஐயரை விஷங் கொடுத்துக் கொலை செய்த குற்றத்திற்காக இராஜகோபாலன் மீதும், அவனுக்கு உடந்தையாயிருந்த குற்றத்துக்காக என்மீதும், வழக்குத் தொடர்ந்து, விசாரணை சுமார் ஒரு மாதம் நடந்ததும், கடைசியில் இராஜகோபாலன் பித்தன் என்ற காரணத்தால் அவனுக்குத் தூக்குத் தண்டனையில்லாமல் ஆயுள் பரியந்தம் சிறைவாசத் தண்டனை விதித்ததும், நான் குற்றமற்றவன் என்று விடுவிக்கப்பட்டதும், எல்லாம் முற்பிறப்பில் நடந்த நிகழ்ச்சிகளோவென்று சந்தேகிக்கும் வண்ணம் என் உள்ளத்தில் தெளிவின்றித் தோன்றுகின்றன. எனவே அவற்றைப் பற்றி விரிவாகக் கூறாமல் விட்டுப் போவது குறித்து மன்னிப்பீர்களாக.
ஓராண்டு சென்றது. ஆந்திர நாட்டுக் கலாசாலையொன்றில் நான் ஆசிரியனாக அமர்ந்திருந்தேன். இந்த ஒரு வருஷத்திய எனது வாழ்க்கை விவரத்தைச் சில மொழிகளில் கூறிவிடலாம். வழக்கு முடிந்ததும், நான் சென்னைக்குச் செல்ல விரும்பவில்லை. சட்டக் கலாசாலையில் தொடர்ந்து படிக்கும் நினைவையும் விட்டுவிட்டேன். சமீபத்தில் எனக்கு நிகழ்ந்த பயங்கரமான அனுபவங்களை மறந்திருக்க ஸ்தலயாத்திரை செய்வதே நல்ல உபாயம் என்று தீர்மானித்தேன். என் தந்தை என் மீது இரக்கங் கொண்டிருந்தார். எனவே, வேண்டிய போதெல்லாம் பணம் தவறாது அனுப்பி வந்தார். தமிழ்நாடு முழுதும் சுற்றி விட்டுப் பின்னர் வடநாட்டுக்குச் சென்றேன். இதற்கிடையில், உத்தியோகத்துக்கு விண்ணப்பம் போட்டுக் கொண்டிருந்தேன். யாத்திரை தொடங்கி எட்டு ஒன்பது மாதம் ஆனபோது மேற்சொன்ன கலாசாலையில் மாதம் எழுபது ரூபாய் சம்பளத்தில் சரித்திராசிரியர் வேலை கிடைத்தது. என் அதிர்ஷ்டத்தை வியந்தவனாய் உடனே சென்று அதை ஏற்றுக் கொண்டேன். இராஜகோபான் என்றும், சுபத்திரையென்றும் இருவர் இருந்தனர் என்பதை அடியோடு மறந்துவிடப் பிரயத்தனம் செய்து வந்தேன்.
ஆம், அவர்களைப் பற்றி இந்த ஓராண்டில் நான் எதுவும் கேள்விப்படவில்லை. கொலை வழக்கு நடந்து கொண்டிருக்கையில் கணபதி ஐயர் மரணமடைந்த அன்றிரவே சுபத்திரைக்குச் சுரம் கண்டதாகவும், ஒவ்வொரு சமயம் பிழைப்பது அரிது என்று சொல்லும்படியான நிலைமை ஏற்பட்டிருப்பதாகவும் சுபத்திரையின் தந்தை நிலத்தையும் வீட்டையும் விற்றுவிட்டு, அந்த ஊரைவிட்டே போய்விடத் தீர்மானித்திருப்பதாகவும் கேள்விப்பட்டிருந்தேன். பின்னர், அவர்களைப் பற்றி எனக்கு எத்தகைய விவரமும் தெரியவில்லை. ஆனால், எவ்வளவோ முயன்றும் சுபத்திரையும் இராஜகோபாலனையும் மறத்தல் எனக்கு இயலாத காரியமாயிருந்தது. இரவில் என் அறையில் தன்னந்தனியே உட்கார்ந்து அவர்களை நினைத்துக் கண்ணீர் பெருக்குவேன்.
முன்னமே சொன்னதுபோல் இவ்வாறு ஒரு வருஷம் சென்றது. ஒரு நாள் கலாசாலியில் மாணாக்கர்களுக்குப் பாடஞ் சொல்லிக் கொண்டிருக்கையில், தந்திச் செய்தியொன்று எனக்கு வந்தது. யார் தந்தியனுப்பியிருக்கக் கூடுமென்று ஆச்சரியத்துடன் பிரித்துப் பார்த்தேன். "இராஜகோபாலன் மரணத் தருவாயிலிருக்கிறார். உம்மைப் பார்க்க விரும்புகிறார். உடனே புறப்படவும்" என்று எழுதியிருந்தது. திருச்சிராப்பள்ளி பெரிய சிறைக்கூடத் தலைவர் அச்செய்தியை அனுப்பியிருந்தார். அதைப் படித்தபோது என் கண்களில் நீர் ததும்பியது. உடனே தலைமை ஆசிரியரிடம் சென்று, விடுமுறை பெற்றுக் கொண்டேன். அடுத்த வண்டியில் புறப்பட்டேன்.
திருச்சிராப்பள்ளி சேர்ந்ததும், நேரே சிறைக்கூடத்துக்குச் சென்று, சிறைக்கூடத் தலைவரைப் பார்த்தேன். "நல்ல வேளை! இன்னும் ஒரு மணி நேரங்கழித்து வந்திருந்தால் அவரை உயிருடன் பார்த்திருக்க மாட்டீர்கள்" என்றார். அவர் ஓர் ஐரிஷ்காரர். நிரம்ப அனுதாபத்துடன் பேசினார். இராஜகோபாலனைப் பற்றிய விவரங்கள் அறிந்து நிரம்பப் பரிதாபப்பட்டதாகவும், ஒரு மாதமாக அவன் சிறைக்கூட வைத்தியசாலையில் படுத்த படுக்கையாயிருக்கிறானென்றும், ஒரு வாரத்துக்கு முன்புதான் அவன் அறிவு தெளிவடைந்து எனக்குத் தந்திச் செய்தியனுப்பச் சொன்னதாகவும், முதலில் விலாசம் தெரிந்து கொண்டு எனக்கு தந்தியடித்ததாகவும் கூறினார். உடனே என்னை இராஜகோபாலனிடம் அழைத்துப் போகும்படி சிறைக் காவலன் ஒருவனை அனுப்பினார்.
அங்கே எனக்கு இன்னும் ஆச்சரியம் காத்திருந்தது. படுக்கையில் இராஜகோபாலனருகில் உட்கார்ந்திருந்தவர் யார் என நினைக்கிறீர்கள்? சுபத்திரையும், அவள் தந்தையுமே. ஆனால், இந்த வியப்பு ஒரு கணங்கூட என் மனதில் நிலைத்திருக்கவில்லை. எலும்புந் தோலுமாய் அப்படுக்கையில் கிடந்த இராஜகோபாலனைக் கட்டிக் கொண்டு 'கோ' வென்று கதறி அழுதேன். ஐயோ! கட்டழகனாய்ச் சுந்தரவடிவனாய்க் காண்போர் கண்களைக் கவர்ந்து உலாவிய இராஜகோபாலன் இவன் தானோ?
"தியாகு அழாதே" என்று ஈன சுரத்தில் அவன் கூறியது யாரோ கிணற்றுக்குள் இருந்து பேசியது போல் கேட்டது. அருவிபோல் பெருகிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டேன்.
"எங்கு நீ வருவதற்குள் போய்விடுவேனோவென்று இவ்வளவு நேரம் கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன்! பகவான் இந்தப் பாவியை முற்றிலும் கைவிட்டுவிடவில்லை..."
அப்போது மீண்டும் எனக்கு அழுகை வந்து விட்டது. சுபத்திரையும் அவள் தந்தையும் விம்மி அழலானார்கள்.
"வேண்டாம், ஏன் அழுகிறீர்கள்? அதற்குப் பதிலாக இந்தப் பாவியை மன்னிக்கும்படி ஆண்டவனிடம் முறையிட்டுக் கொள்ளுங்கள். கொலைஞன் என்று பகவான் என்னை அருவருக்கமாட்டாரா?"
நான் ஏதோ பதில் சொல்லப் போனேன். அவன் கையமர்த்தி மீண்டும் சொன்னான்:- "என் உயிரையும் விட மேலாக என் அன்னையை நேசித்தேன். அவள் காலஞ்சென்றாள். மரணத்தறுவாயில், அவளுக்கு ஒரு வாக்குறுதி கொடுத்தேன். அதை இன்னமும் முற்றும் நிறைவேற்றி வைக்கவில்லை. இந்நிலைமையில் நான் இறந்தால் என் ஆன்மா சாந்தியுறுமா? இப்போது இவ்வுலகில் என் அன்புக்குரியவர்கள் நீங்கள் மூவருமே. நான் நிம்மதியாக உயிர்விடுவதற்கு நீங்கள் உதவி செய்யமாட்டீர்களா? அப்பா, உங்கள் மனம் இப்போதேனும் இரங்குமா?"
அப்போதுதான், இராஜகோபாலனுடைய தந்தையையும் சுபத்திரையையும் நான் கவனித்தேன். அவர், இளைத்து மெலிந்து பாதி உடம்பாயிருந்தார். சுபத்திரை துக்கமே உருவெடுத்ததுபோல் உட்கார்ந்திருந்தாள். விதவைக்குரிய கொடுமைகள் அவளுக்குச் செய்யப்படவில்லையென்பதையும் கண்டேன். "குழந்தாய், இன்னமும் எனக்குப் புத்தி வரவேண்டுமா? உன் விருப்பத்தின்படியே செய்கிறேன். கவலைப்படாதே" என்று தந்தை கண்ணீர் விட்டுக் கொண்டே சொன்னார்.
பின்னர் இராஜகோபாலன் என்னைப் பார்த்தான். அந்தப் பார்வையில் நான் எல்லாம் அறிந்து கொண்டேன். "உனக்குக் கொடுத்த வாக்குறுதியை நானும் மறக்கவில்லை ராஜு! ஆனால், வாக்குறுதி மட்டுமன்று. இவ்விஷயத்தில் நம்மிருவர் விருப்பமும் ஒத்தே இருக்கிறது. சுபத்திரையில்லாத வாழ்வு பாலைவனம்போல் எனக்குக் காணப்படுகிறது" என்றேன். அப்போது இராஜகோபாலனின் முகம் எவ்வாறு மலர்ச்சியுற்றது? அந்த ஒரு கணத்தில் அவன் பழைய இராஜகோபாலனாகக் காணப்பட்டான். மெலிந்து சுருண்ட தனது கையால் சுபத்திரையின் தாமரைக் கரங்களைப் பிடித்து என்னுடைய கையில் வைத்தான். அவன் கண்களில் ஆனந்த பாஷ்யம் துளிர்ப்பதைக் கண்டேன். என்னுடைய உணர்ச்சியைப் பற்றியோ யென்றால் - துன்ப சாகரத்தில் முழுகிப் போகும் தருவாயிலிருந்த என்னைத் திடீரென்று சுவர்க்க போகங்களுக்கிடையே போட்டுவிட்டது போலிருந்தது; மன்னியுங்கள். அப்போது என் மனோநிலையை வருணிக்கப் புகுதல் வீண் முயற்சியேயாகும். சற்று நேரத்துக்கெல்லாம் இராஜகோபாலன் நிம்மதியாக ஸ்ரீராம நாமத்தை உச்சரித்த வண்ணம் இப்பூவுலக வாழ்வை நீத்துச் சென்றான்.
"நேயர்களே! உங்களில் பலருக்கு இராஜகோபாலன் சரித்திரம் ஏமாற்றமளித்திருக்கலாம். முன்னுரையில் அவனைப்பற்றிக் காணப்பட்ட புகழுரைகளுக்கு அவன் தகுதியற்றவன் என்று நீங்கள் கருதலாம், கொலைஞன் என்று நீங்கள் அவனை வெறுக்கலாம். எப்படியும் அவன் என் ஆருயிர் நண்பன்; என் அருமைச் சுபத்திரையின் சகோதரன். ஈ எறும்பு முதலிய ஜந்துக்களும் துன்பப்படச் சகியாத இளகிய மனம் படைத்த என் நண்பன், சுபத்திரையின் சுகவாழ்வை முன்னிட்டன்றோ கொலை செய்யத் துணிந்தான்? அவன் பாவத்தை மன்னித்தருளும்படி ஆண்டவனிடம் மன்றாடுங்கள்."