எசிகலேனி, அதாவது இரைச்சலான இடம், என்ற பெயருடைய கிராமத்தில் லுங்கிசா வசித்துவந்தான். சில பேர் அந்த கிராமத்தை சுவற்றில் இருக்கும் ஓட்டை என்றும் அழைத்தனர்.
”சுவற்றில் ஏன் ஓட்டை இருக்கிறது?” என்று லுங்கிசா அம்மாவிடம் கேட்டான்.
“கடலில் வசிக்கும் மக்களில் ஒருவர், தான் நேசித்த பெண்ணிடம் போவதற்காக, பெரிய மீன் தலையை வைத்து சுவற்றில் ஓட்டை போட்டார்.”
”சுவாரசியமாக இருக்கிறது” என்றான் லுங்கிசா.
”சுவற்றில் ஏன் ஓட்டை இருக்கிறது?” என்று லுங்கிசா ஆசிரியரிடம் கேட்டான்.
”பல லட்சம் வருடங்களாக அலைகள் பாறைகளின் மேலே மோதிக்கொண்டே இருந்ததால், பாறைகளில் ஓட்டை விழுந்துவிட்டது” என்றார் ஆசிரியர்.
”சுவாரசியமாக இருக்கிறது” என்றான் லுங்கிசா.
”சுவற்றில் ஏன் ஓட்டை இருக்கிறது” என்று லுங்கிசா பாட்டியிடம் கேட்டான்.
”நம் மூதாதையர்கள் நம்மிடம் வருவதற்கான வாசல் அது.”
”சுவாரசியமாக இருக்கிறது” என்றான் லுங்கிசா.
”சுவற்றில் ஏன் ஓட்டை இருக்கிறது?” என்று லுங்கிசா அத்தையிடம் கேட்டான்.
”அது கடவுளைச் சென்றடையும் ஜன்னல்.”
”சுவாரசியமாக இருக்கிறது” என்றான் லுங்கிசா.
”சுவற்றில் ஏன் ஓட்டை இருக்கிறது?” என்று லுங்கிசா தன் தோழியிடம் கேட்டான்.
”ஏனென்றால் சுவற்றில் ஒரு கப்பல் மோதிவிட்டது.”
”சுவாரசியமாக இருக்கிறது” என்றான் லுங்கிசா.
”சுவற்றில் ஏன் ஓட்டை இருக்கிறது?” என்று லுங்கிசா தன் தங்கச்சியிடம் கேட்டான்.
”அப்போதுதானே என் அண்ணன் கேள்விகளாக கேட்டுக் கொண்டிருக்கலாம்” என்றாள் அவள்.
லுங்கிசா சிரித்தான்.
ஆனால் அவன் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தான்.