sykilil oru saagasa payanam

சைக்கிளில் ஒரு சாகசப் பயணம்

ஷிகாரிக்கு தன் அன்றாடப் பணிகள் சலிப்பூட்டின. இதிலிருந்து விடுபட்டு, புத்துணர்வூட்டும் ஒரு பயணத்தை மேற்கொள்ளலாம் என்று யோசித்தான். ஆசிய விளையாட்டுப் போட்டிகளைக் காண பெங்களூரிருந்து டெல்லிக்கு சைக்கிளிலேயே செல்வது என முடிவு செய்தான். ‘கடக் கடக்’. பெடல் சத்தத்துடன் அவனது சைக்கிள் பயணம் துவங்கியது.

- Nivedha

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

ஷிகாரி மிகவும் துடிப்பானவன். கால்பந்து, கபடி, கிரிக்கெட் என அனைத்தையும் ஆர்வத்துடன் விளையாடுவான். ஓரிடத்தில் இருக்க மாட்டான். ஓடுவதும் சைக்கிள் ஓட்டுவதும் அவனுக்குப் பிடித்தமானவை. அவனது இயற்பெயர் சிவப்பிரகாஷ். அவனது சொந்த ஊர் ஷிகாரிபுரா என்பதால் அவனது நண்பர்கள் அவனை ஷிகாரி என்றே அழைத்தனர்.

கல்லூரி முடித்த ஷிகாரி விளையாட்டுப் பொருட்களை விற்பனை செய்யும் கடையில் வேலை பார்த்து வந்தான். அன்றாடப்  பணிகள் அவனைப் பரபரப்பாக வைத்திருந்த போதும், நாட்கள் சலித்துப் போயிருந்தன. அவனது எண்ணமெல்லாம் விளையாட்டு, சாகசம், பயணம் என்றுதான் இருந்தது. தன் வாழ்வின் ஓட்டம் திடீரென வேகமிழந்ததைப் போல உணர்ந்தான் ஷிகாரி.

ஒருநாள் வானொலியில் விளையாட்டுச் செய்தி ஒன்றைக் கேட்டான். “ஆசிய விளையாட்டுப் போட்டியை இந்தியா, டெல்லியில் நடத்தவிருக்கிறது.”

“டெல்லியிலா! இதுவரை அங்கு நான் போனதேயில்லை. எப்படியாவது இந்த முறை ஆசிய விளையாட்டுப் போட்டியைப் பார்க்கவேண்டும்” எனத் திட்டமிட்டான் ஷிகாரி. சட்டென்று ஒரு யோசனை தோன்றியது. ஒரு சாகசப் பயணம்! அதுவும் சைக்கிளில்! “டெல்லி வரை ஏன் சைக்கிளிலேயே பயணிக்கக் கூடாது? முதல் முறையாக அவ்வளவு தூரம் சைக்கிளில் செல்லப்போகிறேன். இதுவரை பார்த்திராத ஊர்களையும் நகரங்களையும் கடப்பது மனதிற்கு எத்தனை உற்சாகமாக இருக்கும்!” பயணத்திற்காக தனது சைக்கிளைத் தர அவனது நண்பர் ரிச்சர்ட் முன்வந்தார்.

சைக்கிள் பயணத்திற்கு அனுமதி கேட்டு ஷிகாரி தன் பெற்றோர்களுக்குக் கடிதம் அனுப்பினான். முதலில் அவர்கள் தயங்கினர். அவ்வளவு நீண்ட தூரப் பயணம்! அந்தக் காலத்தில் உடனடியாகத் தொடர்புகொள்ள கைபேசிகள் எல்லாம் இருக்கவில்லை. ஆனாலும் அவனது பேரார்வத்தைக் கண்ட பெற்றோர், பயணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர்.

ஷிகாரி தனது பயிற்சியைத் துவங்கினான். ஒவ்வொரு வாரமும் 20 கி.மீ. ஓட்டம். ஒவ்வொரு வாரமும் 70 கி.மீ. சைக்கிள் பயிற்சி. தசைகளை வலுவேற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டான். தினசரி பால், பன்னீர், பாதாம் பருப்பு, கொட்டைகள், பழங்கள் சாப்பிட்டான்.

கனமில்லாத பொருட்களாகத் தேர்ந்தெடுத்து தன் பையைக் கட்டினான். ஆசியப் போட்டிக்கு அனுமதிச் சீட்டுகள் வாங்கினான். வரைபடத்தில் பாதையைக் குறித்துக்கொண்டான். புறப்படும் நாளுக்காக ஆவலுடன் காத்திருந்தான். ஒரு வழியாக பயண நாளும் வந்தது!

அக்டோபர் 1982

நாள் 01

பெங்களூர், கர்நாடகா

ஒரு விடியற்காலை, தன்னுடய சைக்கிள் பயணத்தைத் துவங்கினான் ஷிகாரி. அவனது பெற்றோரும் நண்பர்களும் அவனை வழியனுப்ப வந்தனர். அந்த நெடும் பயணம் ஆரம்பமானது. கடக் கடக். க்ரீச். கடக் கடக்

நாள் 02

கௌரிபிதனூர், கர்நாடகா

மூட்டை முடிச்சுகளுடன் வந்தடைந்த ஷிகாரியை நகர மக்கள் வரவேற்றனர். முந்தைய வருடம் சைக்கிளில் இந்தியாவைச் சுற்றி வந்த பசவராஜை ஷிகாரிக்கு

அறிமுகம் செய்து வைத்தனர். “இப்பயணத்தில் நீங்களும் என்னுடன் வரலாமே?” என அழைத்தான் ஷிகாரி. உற்சாகத்துடன் “வருகிறேன்” என்றார் பசவ். பசவராஜின் துணை ஷிகாரிக்கு மகிழ்ச்சியளித்தது. இரண்டு நாட்கள் கழித்து இருவரும் டெல்லி நோக்கிய பயணத்தைத் தொடங்கினர்.

நாள் 06

பெனுகொண்டா, ஆந்திரா

ஷிகாரியும் பசவும் அதிகாலையிலே கிளம்பினர். மிதமான சிற்றுண்டி அருந்திவிட்டு, சைக்கிளை ஓட்ட ஆரம்பித்தனர். கடக் கடக், கடக் கடக் மதிய உணவு இடைவேளைக்குப் பின்னர் மீண்டும் தொடர்ந்தது பயணம். கடக் கடக். கடக் கடக்! நடுவில் ஒரு குட்டித் தூக்கம் போட்டவர்கள், அதன் பிறகு அந்தி சாயும் வரை சைக்கிளை மிதித்தனர். கடக் கடக், க்ரீச் கடக் கடக்

நாள் 10

கர்னூல், ஆந்திரா

இருவரும் தினமும் நூறு கிலோமீட்டர்கள் ஓட்டினர். கடக் கடக், கடக் கடக் செல்லும் வழியில் இரயில் நிலையங்கள், விடுதிகள், கோயில்கள், அன்பான ஊர்மக்கள் சிலரின் வீடுகள் என கிடைக்கும் இடங்களில் இரவுகளைக் கழித்தனர். ஒவ்வொரு நாளும் ஒரு புது அனுபவமாக இருந்தது.

நாள் 14

ஹைதராபாத், ஆந்திரா

வானில் கருமேகங்கள் சூழ்வதை ஷிகாரியும் பசவும் கவனித்தனர். புஸ்ஸ் புஸ்ஸ் என்று பேரிரைச்சலுடன் காற்று பலமாக வீசியது. இடியுடன் கூடிய கனமழை பொழிய ஆரம்பித்தது. நொடிப்பொழுதில் இருவரும் புயல் மழையில் சிக்கிக்கொண்டனர்.

அவர்கள் மழைச்சட்டைகளும் கொண்டுவரவில்லை. நாமே சொந்தமாக மழைச்சட்டை செய்து அணிந்துகொள்ளலாமே என்று தோன்றியது. அருகிலிருந்த கடை ஒன்றில் பெரிய பிளாஸ்டிக் விரிப்பு ஒன்றை வாங்கி, தலைக்கும் கைகளுக்கும் ஓட்டைகள் வெட்டி தற்காலிகமாக ஒரு மழை கோட் தயார் செய்துவிட்டனர்.

சைக்கிளின் ஓட்டம் தொடர்ந்தது. கடக் கடக் க்ரீச். கடக் கடக் க்ரீச்.

நாள் 16

நாக்பூர், மகாராஷ்டிரா

ஏற்றமான சாலைகளைக் கடக்கும்போது, சைக்கிளை விட்டு இறங்கி தள்ளியபடி சென்றனர்.

காட்டுப் பாதையில் பயணிக்கும் போது பாம்புகள், காட்டெருமைகள், காட்டுப்பூனைகள், மான்கள் எனப் பல விலங்குகளைக் கண்டனர். கடக் கடக். கடக் கடக்

நாள் 18

நரசிங்கப்பூர், மத்தியப் பிரதேசம்

அன்று வங்கி விடுமுறை நாள். பசியும் களைப்புமாக இருந்த இரு நண்பர்களின் கையிலும் பணம் காலியாகி இருந்தது. சோர்வும் பசியும் அவர்களை வாட்டின. இதைப் பார்த்த அங்கிருந்த சைக்கிள் கடைக்காரர், “இருவரும் எங்கு சென்று கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார்.

இவர்களின் நிலையைக் கேட்டறிந்த பின் தேநீரும் உணவும் வாங்கிக் கொடுத்தார். கூடவே வழிச்செலவுக்கு நூறு ரூபாய் பணமும் கொடுத்தனுப்பினார். “உங்கள் உதவிக்கு நாங்கள் எவ்வாறு ஈடு செய்யப்போகிறோம் எனத் தெரியவில்லை” என்று கண்ணீர் மல்க நன்றி கூறினான் ஷிகாரி. பின்னர் இருவரும் பயணத்தின் அடுத்த இலக்கை நோக்கி முன்னேறினர். கடக் கடக். கடக் கடக்

நாள் 23

டெல்லி

கடக் கடக் க்ரீச், கடக் கடக்

ஷிகாரி மற்றும் பசவின் சைக்கிள்கள் கம்பீரமான இந்தியா கேட் பகுதியைக் கடந்தன. ஆம்! ஒரு வழியாக அவர்கள் தலைநகர் டெல்லியை அடைந்து விட்டனர். வெயில், மழை என பல்வேறு இடையூறுகளுக்கு இடையில் பயணித்ததால் ஏற்பட்ட வலிகள்கூட இலக்கை அடைந்ததும் காணாமல் போயின. பரபரப்பான டெல்லியும் விறுவிறுப்பான விளையாட்டுப் போட்டிகளும் அவர்களுக்காகக் காத்திருந்தன.

நவம்பர் 1982

நாள் 27 டெல்லி

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கோலாகலமாகத் துவங்கின. இருவரும் குத்துச்சண்டை போட்டிகளை ரசித்துப் பார்த்தனர். இறகுப் பந்தாட்டத்தையும் பார்த்தனர். சர்வதேச வீரர்கள் மல்யுத்தம், ஜிம்னாஸ்டிக்ஸ் போன்றவற்றில் அசத்தியதையும் கண்டனர். டென்னிஸ், வாலிபால் போட்டிகளையும் கண்டுகளித்தனர். அவ்வாண்டின் ஆசியப் போட்டிச் சின்னமான அப்பு, மைதானச் சுவர்களிலிருந்து அவர்களை நோக்கி புன்னகைத்துக் கொண்டிருந்தது. பளுதூக்கும் வீரர்களின் வலிமையும் நீச்சல் வீரர்களின் வேகமும் அவர்களை வியப்பில் ஆழ்த்தின.

மகளிர் ஹாக்கி போட்டியின், விறுவிறுப்பான இறுதிச் சுற்றில் இந்தியாவும் தென்கொரியாவும் மோதிக்கொண்டிருந்தன. ஆரம்பம் முதலே ஷிகாரி சீட்டின் நுனியில் அமர்ந்தபடி பார்த்துக் கொண்டிருந்தான். இந்தியா வென்றுவிட்டது. பெரும் மகிழ்ச்சி அடைந்த ஷிகாரி, வீடு திரும்புவதைப் பற்றி யோசிக்கத் தொடங்கினான்.

யார் இந்த ஷிகாரி?

ஷிவப்பிரகாஷ் ஹொன்னஷெட்டர், 1982 ஆம் வருட ஆசிய விளையாட்டுப் போட்டியைக் காண பெங்களூரிலிருந்து டெல்லி வரையிலான ஒரு கடினமான சைக்கிள் பயணத்தை மேற்கொண்டவர். அப்போது அவருக்கு வயது 25. அவரது பயணத்தைத் தழுவியே இக்கதை எழுதப்பட்டது. பெங்களூரில் உள்ள புனித ஜோசப் உயர்நிலைப் பள்ளியின் விளையாட்டுச் செயலராக பணிபுரிந்த ஷிவப்பிரகாஷ் சமீபத்தில் பணியிலிருந்து ஓய்வு பெற்றிருக்கிறார்.

உத்தரப் பிரதேசம்

ஜான்சி

ஆக்ரா

ஷிகாரியின் சைக்கிள் பெங்களூரில் இருந்து டெல்லி வரை பயணித்த பாதை:

டெல்லி

கர்நாடகா பெங்களூர் கௌரிபிதனூர்

அன்றைய ஆந்திரப் பிரதேசம்

ஹிந்துப்பூர் பெனுகொண்டா கூட்டி தோனி கர்னூல் மஹபூப் நகர் ஹைதராபாத்

மகாராஷ்டிரா நாக்பூர்

மத்தியப் பிரதேசம்

சாகர்

குவாலியர்