taatha meenum vaanolipettiyum

தாத்தா மீனும் வானொலிப் பெட்டியும்

மீன் குடும்பத்தினரிடம் ஒரு பெரிய பழைய ரேடியோ இருந்தது. ஆனால் இளைய மீன்கள், தவளைகள் மற்றும் ஆமைகள் ரேடியோவை தாங்கள் மட்டுமே உபயோகித்துக் கொண்டு, தாத்தா மீனை செய்திகள் கேட்கவிடாமல் செய்து வந்தனர். இதெல்லாம் தாத்தா மீன் ஒரு நாள் ரேடியோ செய்தி கேட்டே ஆகவேண்டுமென்று தீர்மானமாகச் சொல்லி, அதில் வந்த செய்தியை கேட்கும்வரைதான். பிறகு...

- S. Jayaraman

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

முன்னொரு காலத்தில், ஒரு சிறிய கிராமம் இருந்தது. அந்தச் சிறிய கிராமத்தில் ஒரு சிறிய நீரோடை இருந்தது.

அந்த நீரோடையில் பல தவளை, ஆமை மற்றும் மீன் குடும்பங்கள் சேர்ந்து கூட்டமாக, மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். அவற்றில் மீன்கள் குடும்பம்தான் மிகப்பெரியது.

மீன்கள் குடும்பத்தைதான் எல்லோரும் மிகவும் மதித்தார்கள்.

காரணம்? நீருக்கடியில், அவர்கள் வீட்டில் பெருமையாக, பிரதானமான இடத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு பெரிய பருமனான ரேடியோதான்.

தாத்தா மீன்தான் மீன் குடும்பத்தின் தலைவர். எல்லா இளைய மீன்கள் மட்டுமின்றி, தவளை மற்றும் ஆமைக் குடும்பங்களும் பெரும்பாலான விஷயங்களில் அவரை மதித்து, அவர் சொற்படி நடப்பார்கள்.

ஆனால், ஒரு விஷயத்தில் மட்டும் அவர் பேச்சுக்கு எந்த மதிப்பும் இல்லை: அதுதான் அந்தக் குடும்ப ரேடியோ.

தாத்தா மீனுக்கு செய்திகள் கேட்க வாய்ப்பே கிடைப்பதில்லை.

இளைய மீன்கள், தவளைகள் மற்றும் ஆமைகளுக்கு சினிமாப் பாடல்கள் என்றால் உயிர். ஆகவே அவை முடியும்வரை ரேடியோவை விட்டு நகர மாட்டார்கள்.

வழக்கமாக அவர்களிடமெல்லாம் பேசி அவர்களை ஒப்புக்கொள்ள வைப்பதற்குள் மிக்க தாமதமாகிவிடும். பல சமயங்களில், செய்தி வாசிப்பாளர் “இத்துடன் செய்திகள் முடிவடைந்தன” என்று சொல்வதை மட்டுமே கேட்கவேண்டியிருப்பது தாத்தா மீனுக்கு ஒரே எரிச்சலாக இருக்கும்.

ஒருநாள், தாத்தா மீன் வழக்கத்தைவிட சீக்கிரமாகவே இளைஞர்களை எல்லாம் ஒப்புக்கொள்ள வைத்துவிட்டார். விரைந்து சென்று ரேடியோவை செய்திகள் ஒலிபரப்பும் அலைவரிசைக்குத் திருப்பினார். செய்தி வாசிப்பவர், “செய்திகள் முடிவடையும் முன், மீண்டும் தலைப்புச் செய்திகள்”

என்று சொல்லிக்கொண்டிருந்தார்.

அன்று காலை ஆற்று வானொலி அலைவரிசையின் முக்கியச் செய்திகள் மிகவும் அச்சமூட்டுவதாக இருந்தன. “மனிதர்களின் கூட்டம் ஒன்று மிக அதிக எண்ணிக்கையில் மீன்களைப் பிடிக்க, புதிய வழி ஒன்றை கண்டுபிடித்துள்ளது” என்றார் செய்தி வாசிப்பவர்.

“அவர்கள் ஒவ்வொரு நதியாக விஷத்தைக் கலக்கிறார்கள்! அதனால் மீன்கள் இறக்கும்போது, அவற்றை வலைகளில் பிடித்து எடுத்துச் செல்கிறார்கள்! அவர்கள் உங்கள் நதியைத் தேடியும் விரைவில் வரலாம்!”

தாத்தா மீன் திகைத்து நின்றுவிட்டார்.

பிறகு உடனே அந்தச் செய்தியை மற்ற மீன்களுக்கும் நதிவாழ் உயிரினங்களுக்கும் சொன்னார். பயத்தினால் உறைந்து, அடுத்து என்ன செய்வது என்ற யோசனையில் எல்லா உயிரினங்களும் அமைதியாக இருந்தனர். யாருக்கும் இப்போது சினிமாப் பாடல் கேட்கும் மனநிலை இல்லை.

இதற்கிடையே, அந்த கிராமத் தலைவரின் மகள் நதியில் தண்ணீர் எடுத்துச் செல்ல வந்தாள். கிராமத் தலைவரும் தாத்தா மீனும் நீண்டகால நண்பர்கள்.

ஆகவே தாத்தா மீன் உடனடியாக நீரின் மேற்பரப்புக்கு நீந்தி வந்து, கிராமத் தலைவர் மகளிடம் அவசரமான நிலையொன்று ஏற்பட்டிருப்பதைச் சொல்லி, “தயவுசெய்து உன் தந்தையிடம் என்னை வந்து உடனே பார்க்கச்சொல்” என்று பதட்டத்துடன் சொன்னார்.

கிராமத் தலைவர் உடனே வந்தார். தாத்தா மீன் தன் நண்பருக்கு ஒரு கோப்பை காபி கொடுத்து, நல்லபடியாக உபசரித்தார். அதன்பின்னரே ரேடியோவில் கேட்ட அச்சமூட்டும் செய்தியை அவரிடம் சொன்னார். இப்போது கிராமத் தலைவரும் கவலையுற்றார்.

வேகமாக யோசித்து, கிராமத்திலுள்ள நதியும் அதில் வாழும் உயிரினங்களும் பத்திரமாக இருக்க, கிராமத் தலைவர் ஒரு திட்டத்தை உருவாக்கினார்.

பிறகு கிராமத் தலைவர், தாத்தா மீனுக்கும் மற்ற அனைவருக்கும் நம்பிக்கையூட்டினார். “தாத்தா மீனே! எதுக்கும் கவலைப்படாதீங்க! உங்களுக்கும் உங்க கூட இருக்கிற உயிரினங்களுக்கும், இந்த மோசமான மனிதர்களாலே எந்தத் தீமையும் ஏற்படாம நான் பார்த்துக்கறேன்” என்று உறுதியளித்தார்.

இளைய மீன்களும் தவளைகளும் ஆமைகளும், தாத்தா மீன் மட்டும் அன்று ரேடியோவில் வந்த செய்தியைக் கேட்காமலிருந்திருந்தால், அவர்கள் எல்லோருக்கும் எத்தனை பெரிய துன்பம் ஏற்பட்டிருக்கும் என்பதை உணர்ந்துகொண்டார்கள்.

தங்களுடைய பழைய நடத்தைக்காக வெட்கப்பட்டனர்.

இனிமேல் தவறுகளை திருத்திக்கொண்டு நடக்க உறுதிபூண்டனர்.

உங்கள் விருப்பப்படி வண்ணம் தீட்டுங்கள்.

உங்கள் விருப்பப்படி வண்ணம் தீட்டுங்கள்.