thaalam podum thanneer

தாளம் போடும் தண்ணீர்

குட்டிப் பையன் குடு எல்லாவற்றுக்கும் நடனம் ஆடுவான். இன்று நம் குடு நீரோடையை ஒட்டி இறங்கிப் போகும்போது வெவ்வேறு நீர்நிலைகளைக் கடக்கிறான். தண்ணீரின் இசையை உணர்ந்த அவன் அதற்கு ஏற்ப அழகாக நடனம் ஆடுகிறான். நாமும் குடுவுடன் சேர்ந்து நடனமாடித் தண்ணீரைக் கொண்டாடுவோம், வாங்க!

- Veronica Angel

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

குடுவுக்கு ஆடப் பிடிக்கும். மாடு கத்தும் சத்தத்திலிருந்து யாராவது சாப்பிடும் சத்தம்வரை எதற்கு வேண்டுமானாலும் நடனம் ஆடுவான்.

சொட் சொட் டொப் டொப் சொட் டொப்! “தாளம் போடும் தண்ணீரே, நீ இன்னும் என்னெல்லாம் செய்வாய்?”

சலசல கலகல சலசல ஜல்“கொஞ்சம் மெதுவாக ஓடு நீரோடையே! இந்த வேகத்துக்கு என்னால் ஆட முடியாது.”

கடகட தடபுட கடகட விருட் “அட நதிதான் மெல்ல தாளம் போடுது. துள்ளி அதனுடன் ஆடுவேன் பாரு!”

உஷ் உஷ் ஊஊஊ பூம்ம் புஸ்ஸ் “பெருங்கடல் பார்க்க அமைதியாய் இருக்கும். அதன் அலைகள் நிறைய சேட்டைகள் செய்து, கூச்சல் போடும்.”

சடசட படபட சடசட சர்ர்ர் “பேரிரைச்சல் போடும் மழையே, உன் துளிகள் விழுதே வேகவேகமாய்.”

டாடும் டமடம டாடும் டமடம டம்!

“அட்டகாசம் பண்ணும் அருவியே, ஏன் இவ்வளவு சத்தம் போடுகிறாய்?”

“குளத்து மேல கல்லைச் சுழட்டி எறியுறாங்க அம்மா. குளத்துக்கும் ராகம் உண்டோ என்னவோ?”

தத்தித் தாவி

தாவித் தத்தி தொப்

தத்தித் தாவி

“இங்க ஏதும் இசையே இல்லையே, குடு!நீ எதுக்கு ஆடுற?” என்று எல்லோரும் கேட்டனர்.“நல்லா காது கொடுத்துக் கேளுங்க. பாட்டு, தாளம் எல்லாமே தண்ணிக்குள்ள இருக்குங்க!”