பீப்ரே புற்றிலிருந்து வெளியே எட்டிப் பார்த்தாள். சூரியன் ஆகாயத்தில் பூந்தி லட்டு போலத் தெரிந்தது.
பிஷ்-பூஷ், பிஷ்-ப்லூஷ். பீப்ரே ஒரு பச்சை இலையின் மேல் ஏறினாள்.
ஊஷ்-ஊஷ்… காற்று இலையை மேலே, மேலே, மேலே தூக்கிச்சென்று...
...ஒரு சிவப்பு தபால் பெட்டிக்குள் போட்டது! அதன் உள்ளே இருட்டாக இருந்தது. பீப்ரே ஒரு உறைக்குள் நுழைந்தாள். அதன்மேல் சிவப்பு, நீலம், பச்சை நிறங்களில் தபால் தலைகள் இருந்தன.
கிச்-கிஷ், கசக்-கிஷக்.ஒரு கை எல்லா தபால்களையும் பெரிய பை ஒன்றுக்குள் தள்ளியது.
ஒரு தபால்காரர் அந்தப் பையை தன்னுடைய மோட்டார் சைக்கிளில் எடுத்துச் சென்றார். புட்-புட்-புட், கட-கட-கட.
தொப். பீப்ரே ஒரு விமான அஞ்சலில் இடித்துக் கொண்டாள்.
ஒரு பிறந்தநாள் வாழ்த்து அட்டைக்குள் ஊர்ந்து சென்றாள்.டக-டக-டக.
தபால் பை மேசை மேல் வந்து இறங்கியது. கடிதங்கள் வெளியே வந்து குவிந்தன. பச்சக்-பச்சக், தட்-தட், முத்திரைகள் குத்தப்பட்டன.
கடிதங்கள் கீழே விழுந்தன, விழுந்தன. சொய்ங்-சொய்ங். குவியல்கள் சேர்ந்தன. டெல்லிக்கும் மும்பைக்கும் கோஹிமாவுக்கும் குந்தாபூருக்கும் பூனேவுக்கும் பெங்களூருவுக்கும்.
பீப்ரே வாழ்த்து அட்டையில் தொற்றிக் கொண்டாள். அந்த அட்டை, நிறைய தபால்கள் இருந்த தபால் பைக்குள் விழுந்தது. அந்தப் பை தபால் வண்டியில் போடப்பட்டது. தொம்-தொம், பாம்-பாம்.
தலைகீழாக இருந்த ஒரு தபால் அட்டையைப் படித்தாள் பீப்ரே. ‘உன்னுடைய பள்ளி உனக்குப் பிடித்திருக்கிறதா, டுனு? அன்புடன், தீதிமா.’ ஒரு இளஞ்சிவப்பு அட்டையில் நீல நிறத்தில், ‘ஒரு நிலாப் பாட்டு பாட முடியுமா?’ என்றும் எழுதியிருந்தது.
க்ர்ர்-ரீச்ச்ச். வண்டி நின்றது. கீச்-கடக். கதவுகள் இடித்துக் கொண்டன. ஷ்ஷ்-பட். ஒரு தபால், கதவு இடுக்கு வழியாக உள்ளே விழுந்தது.
ட்ரிங்-ட்ரிங். பீப்ரேவுக்கு மணியோசை கேட்டது. “அம்மா! அஜ்ஜி எனக்கு வாழ்த்து அட்டை அனுப்பியிருக்கிறார்.”