thalaikeel ulagam

தலைகீழ் உலகம்

ஆகாஷுக்கு ‘டிக்டிக்’ என்று ஒரு நண்பன் இருந்தான். டிக்டிக்கின் உலகம் நம்முடைய உலகத்திலிருந்து மாறுபட்டது. ஏனென்றால் அது தலைகீழ் உலகம்! அதைப் பார்க்க நீங்களும் வாருங்கள்!

- Thilagavathi

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

ஒரு காலத்தில் சூரியன் மலையின் அடிவாரத்திலிருந்து உதயமானது.

ஒரு ஆறு மரஉச்சிகளின் மேலாக ஓடியது.

எல்லாக் குழந்தைகளும் கால்களால் தொங்கிக் கொண்டிருந்தனர்.

அவர்களது குட்டி மூக்குகள் கண்களுக்கு மேலே இருந்தன.

“ஆகாஷ்! உன் கதை ஏன் தலைகீழாக இருக்கிறது?”

என்று ஆசிரியர் கேட்டார்.

அதற்கு அவன், “இது ‘டிக்டிக்’கின் உலகம்! இது தலைகீழாகத்தான் இருக்கும், டீச்சர்!’’ என்றான்.

“யாரது டிக்டிக்? அவன் என்ன செய்கிறான்?”

என்று ஆசிரியர் கேட்டார்.

“டிக்டிக் உள்கூரையில் இப்படி... குறுக்காக ஓடுவான்’’ என்று ஆகாஷ் காண்பித்தான்.

“ஆகாஷ்! யாராலும் உள்கூரையில் ஓட முடியாது. விழுந்து விடுவார்கள்!” என்றார் ஆசிரியர்.

“ஆனால் டிக்டிக் விழமாட்டான். அவன் சுவரில் ஓடுவான். கண்ணாடி ஜன்னலில் ஏறுவான். உள்கூரையின் குறுக்கே நடப்பான்.

என் தலைக்கு மேலே தாண்டிச் செல்வான். அவன் ஒருபோதும் விழுந்ததில்லை!” என்றான் ஆகாஷ்.

“டிக்டிக்கால் தலைகீழாக ஓட முடியும் என்றால், என்னால் ஏன் ஓட முடியாது? நீங்களே சொல்லுங்கள், டீச்சர்!” என்று கேட்டான் ஆகாஷ்.

“ஏனென்றால், டிக்டிக் ஒரு பல்லி. ஆனால் நீ... பல்லி இல்லையே!” என்றார் ஆசிரியர்.

“பல்லிகளின் காலடியில் உன்னால் பார்க்க இயலாத ஒரு காடே உள்ளது.

அது பல கோடி மிக நுண்ணிய முடிக்கற்றைகளால் ஆனது.”

“ஈரமான, உலர்ந்த மற்றும் வழுக்கும் என எல்லா விதமானப் பரப்புகளிலும், ஒவ்வொரு சிறிய புள்ளியின் மேலும் இந்த முடிகள் அழுத்தும்.

பின் பசக்கென பிடித்துக்கொண்டு, பல்லி ஒட்டிக்கொள்ள உதவுகின்றன” என்று ஆசிரியர் மேலும் விளக்கினார்.

ஆகாஷுக்கு ஒரு யோசனை வந்தது!

“டீச்சர்! நான் வளர்ந்து பெரியவனானதும், டிக்டிக்கின் பாதத்தில் உள்ளது போன்ற முடிக்காடுகள் உள்ள காலணிகளை உருவாக்குவேன்!” என்றான்.

“அதன் பிறகு நானும் உள்கூரையின் மீது நடப்பேன்.

மேலும் என்னுடைய தலைகீழ் உலகத்தை நிஜமாக்குவேன்!’’ என்றான் ஆகாஷ்.

டிக்டிக்கின் பாதங்களைப் பார்த்து புதிய கண்டுபிடிப்புகளை மக்கள் உருவாக்குவார்கள் என்று நினைக்கிறாயா?

‘பசக்’ என பிடித்துக் கொள்ளும் பொருட்கள்?

பாதங்களின் அடியில் முடிக்காடுகள் கொண்ட பொருட்கள்?

பிசுபிசுக்காத பசைநாடா

சுவரில் சுவடு ஏற்படுத்தாத திரைப்படச் சுவரொட்டிகள்

பிய்க்கும் போது வலிக்காத பிளாஸ்திரி

தென்னைமரத்தில் ஏறி தேங்காய் பறிக்கும்

பாபுவிற்கு  காலணிகள்

தற்போது பசைநாடா, பிளாஸ்திரி, மற்றும் திரைப்படச் சுவரொட்டி போன்றவை பசையோடு இருப்பதனால் ஒட்டிக் கொள்ளுகின்றன. ஆனால், கொஞ்சம் கற்பனை செய்து பார்! பல்லிகளின் காலில் இருப்பதைப் போன்ற முடிக்காடுகள் அவற்றில் இருந்தால், அவற்றை எப்போது வேண்டுமானாலும் ஒட்டவோ எடுக்கவோ முடியும் அல்லவா?