அது ஒரு வறட்சியான கோடைக்காலம். வர்ஷாவின் வீட்டைச் சுற்றி இருந்த காடுகள் மஞ்சளாகவும் பழுப்பாகவும் மாறிவிட்டன. பெரும்பாலான இலைகள் மரத்தில் இல்லாமல் தரையில் கிடந்தன.
“ரொம்ப சூடா இருக்கு” என்று முறையிட்டாள் வர்ஷா. “நீந்துவதற்குத் தண்ணீர் இருந்தால் நன்றாக இருக்கும்!”
“நமக்கு குடிக்கவாவது தண்ணீர் இருக்கிறது. பல மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் அதுகூட இல்லை” என்றார் அப்பா.
அன்றிரவு வர்ஷாவின் கனவில் தண்ணீர் வந்தது. தடக் – தளக்! என்று சத்தம் கேட்டது. படக்கென்று எழுந்து உட்கார்ந்தாள் வர்ஷா. அவள் இதயம் பட பட பட என்று அடித்துக் கொண்டது. கட்டிலுக்குக் கீழே பார்த்தாள். அங்கே ஒன்றுமில்லை.
இப்போது சத்தமின்றி அமைதியாக இருந்தது. தளக் ப்ளக் ஞியாவ். வர்ஷா சத்தம் போடாமல் ஜன்னல் அருகே சென்று வெளியே பார்த்தாள். தோட்டம் வெறிச்சோடிக் கிடந்தது. தளக் ப்ளக் ஞியாவ்.
மறுநாள் காலை, வர்ஷா தோட்டத்தில் ஒரு தவளையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தபோது ஒரு சத்தம் கேட்டது. க்ரக் – தளக்.
“அப்பா உங்களுக்கு அந்தப் பெரிய தண்ணீர் சத்தம் கேட்குதா?” என்று கேட்டாள்.
“உளறாதே! போய் வீட்டுப்பாடம் செய்” என்றார் அப்பா.
மதிய சாப்பாட்டு நேரத்தில் சத்தம் வேறுமாதிரி கேட்டது. கிர்க் தளக்! ஞியாவ்!
பெரிய நகங்கள் வீட்டின் சுவர்களை பிறாண்டி எடுத்து கிணற்றில் போடுவதாக வர்ஷா கற்பனை செய்தாள்.
“அப்பா! இந்தச் சத்தம் உங்களுக்கு நிச்சயம் கேட்டிருக்கும்!” என்று கத்தினாள்.
“அது நீ சாம்பாரை உறிஞ்சும் சத்தம்” என்றார் அப்பா.
அப்பாவுக்கு காது கேட்கும் கருவி தேவையோ? தோட்டத்தில் ஏதாவது பெரிய தண்ணீர் பூதம் ஒளிந்து இருக்கிறதா? என்றெல்லாம் யோசித்தாள் வர்ஷா.
அன்று முழுக்க வர்ஷாவுக்கு தளக், ப்ளக், களக், ஸ்ஸ், ஞியாவ் என்று சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. அது மாறியபடியும், நகர்ந்தபடியும் இருந்தது. ஆனால் நாள் முழுக்க அப்பாவுக்கு ஒன்றுமே கேட்கவில்லை.
அன்றிரவு வர்ஷாவுக்கு தூக்கம் வரவில்லை. தளக் ப்ளக் , தளக் ப்ளக் என்று சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. ஒரு தண்ணீர் பூதம் அவளை ஆங்காரத்துடன் தாக்க வருவதாக கற்பனை செய்தாள்.
அவளுக்கு ஒரு சிறப்பான யோசனை தோன்றியது! கிணற்றுக்குள் எட்டிப் பார்க்க முடிவு செய்தாள்.
அது பூதம் இல்லை. அது ஒரு சிறுத்தைக் குட்டி - நனைந்து, பசியோடிருந்தது.
“ஏய் குட்டி! நேற்று இரவே நீ கிணற்றுக்குள் விழுந்த சத்தம் கேட்டது. நல்ல பசியுடன் இருப்பாய்” என்றாள் வர்ஷா.
“ஞியாவ்!” என்றது குட்டி.
மறுபடியும் முயற்சி செய்தாள் வர்ஷா. “குட்டி குட்டி, இங்க வாங்க, இங்க வாங்க.” அது நகரவே இல்லை.
வர்ஷா ஓடிப் போய் முதல் நாள் இரவு மீதமான சாப்பாட்டை எடுத்து வந்தாள்.“சிறுத்தைகளுக்கு மீன் பிடிக்குமா?” என்று யோசித்தாள்.
“ஏறி வா, குட்டி!” என்றாள் வர்ஷா. குட்டி ஒரு வரம்பில் நின்றது.
வர்ஷா மீன்களை வரிசையாகக் கட்டி வைத்தாள்.
“மீன், ம்ம்ம்ம்! இந்தா சாப்பாடு” என்று மென்மையாகச் சொன்னாள்.
சிறுத்தைக் குட்டி ஏறி வந்து, மீனை லபக்கென்று தூக்கிக்கொண்டு, கிணற்றின் இருளில் சென்று பதுங்கியது.
“பயப்படாதே” என்றாள் வர்ஷா.
அங்கேயே அசையாமல் குட்டிக்காகக் காத்திருந்தாள். அப்படியே தூங்கிவிட்டாள்.
ஒவ்வொரு மீனாக சாப்பிட்டபடி சிறுத்தைக் குட்டி மேலே வந்தபோது விடிந்திருந்தது. மீன் இருந்த பாத்திரத்தை பார்த்தது.
பசியில் எல்லாவற்றையும் காலிசெய்தது.
“என்னது இது” என்று கத்தினார் அப்பா. சிறுத்தை தாவி மரத்தில் ஏறிக்கொண்டது.
“ஆஆ” என்று கொட்டாவி விட்டாள் வர்ஷா. “அப்பா, இது ஒரு சிறுத்தை. கிணற்றுக்குள் இருந்தது.”
அந்தக் குட்டி மெலிதாகச் சீறியது .
“இது ஒரு காட்டு விலங்கு. இதனால் நீ சிறைக்கு போகலாம்! அது உன்னை சாப்பிட்டுவிடலாம்!” என்று சத்தம் போட்டார் அப்பா.
“இது கிணற்றுக்குள் மாட்டிக் கொண்டு பசியுடன் இருந்தது” என்று திருப்பிக் கத்தினாள் வர்ஷா.
“நான் வனத்துறையினரைக் கூப்பிடுகிறேன்” என்றார் அப்பா.
வனத்துறையினர் சிறுத்தைக் குட்டியை மரத்திலிருந்து இறக்குவதற்குள் முழுதாக ஒரு நாள் ஆகி விட்டது.
“என் சிறுத்தையை கொடுக்க மாட்டேன்” என்று அப்பாவிடம் முணுமுணுத்தாள் வர்ஷா.
“இது உன்னுடையது இல்லை. காட்டைச் சேர்ந்தது. இதை வைத்திருந்தால்நீ சிறைக்கு போகவேண்டி வரலாம்” என்றார் வனக்காவலர்.“மிகவும் சரி. சிறைக்குப் போகாமல் இருப்பதுதான் வர்ஷாவின் இந்த வருட பிறந்தநாள் பரிசு” என்றார் அப்பா.
“ஞியாவ்” என்று ஒத்துக்கொண்டது அந்தச் சிறுத்தை.
“டாட்டா, குட்டி” என்றாள் வர்ஷா. அந்த வண்டி போகும் வரையில் கையசைத்துக் கொண்டிருந்தாள்.
அந்த வனக்காவலர் ஜீப்பில் ஏறினார். “இந்த வாரத்தில் காப்பாற்றப்பட்ட மூன்றாவது வனவிலங்கு இது. கோடையில் தண்ணீர் தேடி விலங்குகள் காட்டை விட்டு வெளியேறுகின்றன” என்றார்.
“உங்கள் கிணற்றில் நிறைய தண்ணீர் இருக்கிறது. அதன் பக்கத்தில், ஒரு குளம் வெட்டினால், வனஉயிர்கள் பாதுகாப்பாக வந்து தண்ணீர் குடித்துச் செல்லும்” என்றார்.
வர்ஷா அப்பாவின் பக்கம் திரும்பினாள்.
“அப்பா நாம் ஒரு குளம் வெட்டலாமா?” என்று கேட்டாள்.
“உன் வீட்டுப்பாடத்தை செய்” என்று பதிலளித்தார் அப்பா.
“தாகத்துடன் வரும்
விலங்குகள் கிணற்றுக்குள்
விழாது. நானும் அவற்றை
அனுமதி இல்லாமல்
வைத்துக்கொள்ள மாட்டேன்.
எனக்காக செய்யலாமே,
அப்பா” என்றாள் வர்ஷா.
“சரி. ஆனால் எல்லா
வேலைகளையும் நீதான்
செய்ய வேண்டும்” என்றார்
அப்பா.
வர்ஷா அவளுடைய மீதமிருந்த விடுமுறை முழுவதும் வெட்டினாள், வெட்டினாள், வெட்டிக்கொண்டே இருந்தாள்.
“இது… தான்… உன்னுடைய.... பிறந்தநாள்… பரிசு” அப்பாவுக்கு மூச்சிரைத்தது. “சிறைக்குப் போகாமல் இருப்பதுதான் என்னுடைய பிறந்தநாள் பரிசு என்று நினைத்தேன்” என்றாள் வர்ஷா. சோர்ந்து போயிருந்த அப்பாவால் பதில் சொல்ல முடியவில்லை.
“இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!” என்று சொல்லி, பைனாகுலர் ஒன்றைக் கொடுத்தார் அப்பா. “அந்தக் குளம்தான் என்னுடைய பிறந்தநாள் பரிசென்று நினைத்தேன். இருங்கள் இருங்கள், சிறைக்குப் போகாமல் இருப்பதுதான் பிறந்தநாள் பரிசு என்று நினைத்தேன்” என்றாள் வர்ஷா. “அவ்வளவுதான். இதற்கு மேல் எதுவும் கிடையாது, இதுதான் கடைசிப் பரிசு“ என்றார் அப்பா.
இருண்ட மேகங்களுடனும் இடியுடனும் மழைக்காலம் தொடங்கியது. அதற்கு பிறகு ஒரு வாரம் கழித்து வர்ஷாவின் பிறந்தநாள்.
அந்த பைனாகுலரை வைத்து வர்ஷாவால் குளம் முழுவதையும் பார்க்க முடிந்தது. குளம் நிரம்பி இருந்தது. தவளைகள் கத்தின. செம்பருந்து ஒன்று பசியுடன் சத்தம் எழுப்பியபடி தண்ணீரின் மேல் பறந்தது.
“எனக்கு இது எதுவுமே கேட்கவில்லை” என்று வருத்தத்துடன் சொன்னார் அப்பா.
“உங்களுக்கும் ஒரு பரிசு இருக்கிறது, அப்பா. அடுத்த வாரம் காது மருத்துவரைப் பார்த்து வரலாம்” என்றாள் வர்ஷா. “பிறக்காத நாளுக்கு வாழ்த்துக்கள்!”