thanneraith thaedi

தண்ணீரைத் தேடி

ரஞ்சுவின் கிராமத்தில் உள்ள நீர்நிலை வறண்டுவிடுகிறது, தண்ணீரைக் கண்டுபிடிக்க அவள் புறப்படுகிறாள். துப்பறிவாளர் ரஞ்சுவுடன் நீங்களும் செல்லுங்கள்.

- S Krishnan

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

ரஞ்சுவின் கிராமத்தில் இருந்த நீர்நிலை ஏறக்குறைய வறண்டுவிட்டது.

அஜ்ஜி(பாட்டி)ழை வேண்டி பிரார்த்திக்கத் தொடங்கினாள். அம்மா, வீட்டிலிருந்த வாளிகளையும் பானைகளையும் மற்ற எல்லா பாத்திரங்களையும் சேகரித்து அவற்றில் தண்ணீரை நிரப்பினார்.“நம்மால் முடிந்த அளவு தண்ணீரை சேமித்து வைக்க வேண்டும்” என்றார் அவர்.

அப்பா கிணற்றை இன்னும் ஆழமாகத் தோண்டத் தேவையான கருவிகளை எடுத்துவந்தார்.“மழைக்காலம் வரும் வரை நமக்குத் தேவையான நீர் இருந்தால் போதும்!” என்றார் அவர்.

ரஞ்சு, அவளுடைய நோட்டுப்புத்தகத்தையும் பென்சிலையும் எடுத்தாள். யோசித்துக்கொண்டே அவள் பெற்றோர்களுடன் குளத்தை அடைந்தாள்.

குளத்தின் படுகையை கவனமாக ஆராய்ந்தாள். அது விரிசல்விட்டு தூசியடைந்திருந்தது. “குளத்துத் தண்ணீர் எங்கே போனது? ஓடிப்போய்விட்டதா? திருடப்பட்டதா? பெரிய மர்மமாக இருக்கிறதே!” என்று அவள் ஆச்சரியப்பட்டாள்.

மர்மங்களுக்குத் தீர்வு காண்பதில் ரஞ்சுவுக்கு எப்போதும் விருப்பம் அதிகம் ஒரு முறை அஜ்ஜி தன் கண்ணாடியைக் காணாமல் தவித்தார். படித்துக் கொண்டிருந்த பக்கத்தில் அடையாளத்திற்காக அவரது புத்தகத்திலேயே வைத்திருந்த கண்ணாடியை ரஞ்சுதான் கண்டுபிடித்துக் கொடுத்தாள்.

இன்னொரு முறை, யானைகள் ஏன் ராகி வயல்களுக்கு வருகின்றன என்று கண்டுபிடித்தாள். யானைகள் தங்களது நீளமான துதிக்கைகளால், சாப்பிடத் தயாராக முதிர்ந்திருந்த தானியங்களின் வாசனையை மோப்பம் பிடித்து வந்தன.

“எப்படியும்  தண்ணீரைக் கண்டுபிடிப்பேன்!” என்று ரஞ்சு உறுதியுடன்சொல்லிக்கொண்டாள்.

ரஞ்சு குளத்தின் அக்கரைக்கு நடந்து சென்றாள். வழியில் மீன்கள் இறந்து கிடந்தன; நாணல்கள் காய்ந்து கிடந்தன.

“தண்ணீர் எங்கே போயிருக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா?” என ரஞ்சு ஒரு மீனவரிடம் கேட்டாள்.

“நீரோட்டத்தின் திசையில்!” என்று சொன்னார் அந்த மீனவர்.

ரஞ்சு, அந்த வறண்ட ஓடையைப் பின்தொடர்ந்து மலையிலிருந்து இறங்கினாள். அதன் முடிவில் மற்றொரு குளம் இருந்தது. அங்கே ஆடுகள் பல காணப்பட்டன. ஆனால் தண்ணீரைக் காணவில்லை.

“தண்ணீர் எங்கே இருக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று ரஞ்சு அந்த ஆடுமேய்ப்பவரிடம் கேட்டாள். “நீரோட்டத்தின் எதிர்த்திசையில்!” என்று ஆடுமேய்ப்பவர் சொன்னார்.

“அங்கிருந்துதான் வருகிறேன். அங்கும் தண்ணீர் இல்லை” என்றாள் ரஞ்சு.

“அதற்கும் மேலே இருக்குமோ? அங்கிருந்துதான் தண்ணீர் வருகிறது” என்றார் அந்த ஆடுமேய்ப்பவர்.

ரஞ்சு குளத்தை நோக்கி ஏறினாள். பின் மலையின் மேலே இன்னும் சிறிது தூரம் ஏறிச்சென்றபிறகு, அங்கு ஒரு ஏரியைக் கண்டாள். அங்கே தண்ணீரும் இல்லை; பறவைகளும் இல்லை. ஒரே ஒரு ஆள் மட்டும்தான் அங்கே இருந்தார்.

“சப்னா, என்னால் தண்ணீரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அது எங்கே போயிருக்கும் என்று உனக்குத் தெரியுமா?” என்று ரஞ்சு கேட்டாள். சப்னா அவளுடைய பள்ளியில்தான் படிக்கிறாள்.

“நீரோட்டத்தின் திசையில்!” என்று சப்னா பதில் சொன்னாள்.

ரஞ்சுவுக்குக் கோபம் வந்துவிட்டது. அவள் காலைத் தூக்கி தரையில் உதைத்தாள்.

“இல்லை!” என்று கத்தினாள். “பல இடங்களில் தேடிப் பார்த்துவிட்டேன். நீரோட்டத்தின் திசையிலும் இல்லை, நீரோட்டத்தின் எதிர்த்திசையிலும் இல்லை. புரிந்ததா?”

“அதோ! அங்கே மேலே?” என்று கேட்டாள் சப்னா. ரஞ்சுவும் சப்னாவும் மேலே வானத்தைப் பார்த்தனர். சூரியன் அவர்கள் மீது தன் வெப்ப அலையை வீசிக்கொண்டிருந்தான். எல்லாமே கண்ணைக்கூசும் வெளிச்சமாக, தூசுமயமாக இருந்தது.

“இல்லை, அங்கே தண்ணீர் இல்லை!” என்று இருவரும் ஒப்புக்கொண்டனர்.

தாமரைத்தண்டை கடித்துக்கொண்டிருந்த சப்னாவுடன் படகின் மீது தொப்பென உட்கார்ந்தாள் ரஞ்சு. அவளுக்கு வெக்கையாகவும் சோர்வாகவும் இருந்த்து.

“மஞ்சுவின் பெற்றோர் கிராமத்தை விட்டு வெளியேறி, தண்ணீர் உள்ள நகரத்துக்குச் சென்றுவிட்டனர்.நாம் எல்லோரும்கூட போகவேண்டுமோ?” என்றாள் ரஞ்சு.

“நீ போ!” என்று எரிச்சலுடன் சப்னா சொன்னாள். “உன்னை இங்கு இருக்கும்படி யாரும் சொல்லவில்லை.”

“சரி!” என்றாள் ரஞ்சு. அவள் ஓட்டமும் நடையுமாக வீட்டுக்குத் திரும்பினாள்.

ஆனால் அது சரியாக இல்லை! இன்னும் தண்ணீர் இல்லை, மழையும் இல்லை.

அடுத்த நாள், ஒரு சிறிய குடுவையில் அழுக்கடைந்த குளத்துத் தண்ணீரைக் கொண்டு பல் துலக்கிக்கொண்டிருந்தாள் ரஞ்சு.

“தூ!” என்று துப்பினாள் அவள். பள்ளியில் பாதி வகுப்பறை காலியாக இருந்தது. பல குடும்பங்கள் அந்தப் பகுதியை விட்டு வெளியேறியிருந்தன.

ரஞ்சுவால் அதைச் சகித்துக்கொள்ள முடியவில்லை. தன் நண்பர்களுக்காக அவள் ஏங்கினாள்!

அவள் சுற்றுச்சூழல் கல்வி வகுப்பின்போது வெளியேறி, பள்ளியை விட்டு ஓடினாள்.

மூச்சிரைக்கும் வரை ஓடிய அவள், பிறகு சாலையின் ஒரு ஓரமாக உட்கார்ந்தாள்.

“தண்ணீரைக் கண்டுபிடித்தே ஆகவேண்டும்!” என்று மூச்சு வாங்கிக்கொண்டே சொன்னாள் அவள்.

“நான் உதவட்டுமா?“ என்று ஒரு குரல் கேட்டது. ரஞ்சு பள்ளியிலிருந்து ஓடியதைப் பார்த்து, பின்தொடர்ந்து வந்த சப்னாவின் குரல்தான் அது.

ரஞ்சு மலர்ச்சியுடன், “நிச்சயமாக!” என்றாள்.

“நாம் இதைச் சரியாகச் செய்யவேண்டும். உண்மையான சுகாதாரப் பொறியாளர்களைப் போல” என்றாள் சப்னா.

“யாரைப் போல?” என்று கேட்டாள் ரஞ்சு.

“சுகாதாரப் பொறியாளர்கள் போல! அவர்கள் குழாய்கள், குளங்கள் மற்றும் கழிவுநீர்க் குழாய்களைக் கட்டுபவர்கள். நான் வளர்ந்த பிறகு ஒரு சுகாதாரப் பொறியாளர் ஆகப் போகிறேன்,” என்றாள் சப்னா.

ரஞ்சுவும் சப்னாவும் அவர்களுடைய கிராமத்தின் நிலப்படம்(Map) ஒன்றை வரைந்தனர். அதில் குளங்களும், ஓடைகளும், தண்ணீர் செல்லக்கூடிய எல்லாப் பாதைகளும் இருந்தன.

தண்ணீர் எங்கே சென்றிருக்கக் கூடும்?

இறுதியாக, அவர்கள் உட்கார்ந்து அந்த நிலப்படத்தை ஆராய்ந்தனர். “நாம் இன்னும் அந்த ஏரியைப் பார்க்கவில்லை” என்று ரஞ்சு அவர்கள் வரைந்த ஒரு ஏரியைக் காண்பித்தாள். ஆமோதித்த சப்னா,  “வா, போகலாம்” என்று சொல்லிக்கொண்டே எழுந்தாள். ரஞ்சுவும் சப்னாவும் மலைமேல் ஏறத்தொடங்கினர். அங்கேயும் ஓடை வறண்டே கிடந்தது.

“நாம் வகுப்பைத் தவறவிட்டிருக்கக்கூடாது என்று நினைக்கிறேன். இந்த ஏரியும் வறண்டிருக்கலாம்” என்று சப்னா வருத்தத்துடன் சொன்னாள்.

ஆனால், அங்கு சென்றவுடன் ரஞ்சுவும் சப்னாவும் தங்கள் கணிப்பு தவறு என்பதை உணர்ந்தனர்.  அந்த ஏரி நிரம்பியிருந்தது.

சப்னா அந்த ஏரியின் மூலையில் இருந்த சிறிய மோட்டர் பம்ப் ஒன்றைச் சுட்டிக் காட்டினாள். அந்த ஏரிக்கரையை ஒட்டி கீழே ஒரு தண்ணீர் வண்டி நின்றுகொண்டிருந்தது. ஏரியிலிருந்து வெளிவரும் தண்ணீரை அது சேகரித்துக்கொண்டிருந்தது. ஒரு மனிதன் வண்டியின் அருகில் நின்று அதைக் கவனித்துக்கொண்டிருந்தான்.

“மர்மம் விலகியது!” என்று ரஞ்சு இரைந்தாள். எந்த மர்மத்திற்கும் தீர்வு கண்ட பிறகு அவளுக்குக் கோபம் வந்ததில்லை.

“எங்கள் தண்ணீரை எங்கே எடுத்துச் செல்கிறாய்?” என்று ரஞ்சு கேட்டாள்.

“நகரத்திற்கு! அங்கே நிறைய மனிதர்கள் உள்ளனர். அதனால் அங்கே அதிகம் தண்ணீர் தேவைப்படுகிறது” என்றான் அந்த மனிதன்.

“இது நியாயம் இல்லை!” என்றாள் சப்னா.

அந்த மனிதன் தோள்களைக் குலுக்கி, “அதெல்லாம் அப்படித்தான்” என்றான்.

“என் தோழி ஒரு சுகாதாரப் பொறியாளர். எது சரி என்று அவளுக்குத் தெரியும்” என்று ரஞ்சு கத்தினாள்.

அந்த மனிதன் சிரித்தான். “சுகாதாரப் பொறியாளரா? நீங்கள் குழந்தைகள்!” என்றான்.

சப்னா, “இருக்கலாம்! ஆனால் நீங்கள் இப்படித் தண்ணீரை எடுத்துச் செல்லக்கூடாது என்று எனக்குத் தெரியும்” என்று அமைதியாகச் சொன்னாள்.

“பேசாமல் வீட்டுக்குப் போங்கள்! உங்களால் எதையும் மாற்ற முடியாது!” என்றான் அந்த மனிதன்.

“நாங்கள் உங்களுடைய பம்ப்பை உடைக்கப்போகிறோம்!” என்று கூவினாள் ரஞ்சு. பம்ப்பை நோக்கி ஒரு குச்சியுடன் ஓடவும் செய்தாள்.

“ஆஹா! சுகாதாரப் பொறியாளர்கள் பம்ப்புகளை உருவாக்குபவர்கள்! உடைப்பவர்கள் அல்லவே?” என்றான் அந்த மனிதன்.

சப்னா வருத்தத்துடன், “ஆமாம்… ஆனால் இல்லை… இப்படி இல்லை...” என்றாள்.

ஆனால் ரஞ்சுவோ, “நான் ஒரு துப்பறிவாளர்! நான் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும்” என்றாள்.

ரஞ்சுவுக்கு அதைவிட ஒரு நல்ல யோசனை தோன்றியது. அவள் பம்ப்பை அணைத்துக்கொண்டாள்.

“இப்போது நீங்கள் இதை இயக்க முடியாது!” என்று சப்னாவும் ஓடிச்சென்று பம்ப்பை அணைத்துக்கொண்டாள்.

“ஏய்!” என்ற அந்த மனிதன் இப்போது மிகவும் கோபத்துடன், “சீக்கிரம் வீட்டுக்கு ஓடிப் போங்கள்” என்றான்.

அப்போது மேகங்கள் திரண்டன. இடி இடித்தது. மின்னல் வெட்டியது.மழை கொட்டியது. சப்னா சிரிக்கத் தொடங்கினாள்.

“பருவமழைக்காலம் வந்துவிட்டது!” என்று ரஞ்சு மகிழ்ச்சியுடன் கூவினாள்.

“நீங்கள் போனாலும் போகாவிட்டாலும், நான் வீட்டுக்குப் போகிறேன்” என்றான் அந்தத் தண்ணீர் வண்டிக்காரன்.

மழை கொட்டோ கொட்டென்று கொட்டியது.

ஊஷ்ஷ்! அந்த ஏரியின் கரை நிரம்பி வழிந்தது. ஓடை நீர் அவர்களை நனைத்துக்கொண்டு கீழ்நோக்கி விரைந்தது.

“தண்ணீர் கண்டுபிடிக்கப்பட்டு விட்டது! மர்மம் விலகியது!” என்றாள் ரஞ்சு.

“ஊஊ...!” என்று அவர்கள் மகிழ்ச்சியாகக் கூவினர்.

தண்ணீர் வார்த்தைகள்

நீர்நிலை: இவை மனிதர்களால் தண்ணீரைச் சேகரிப்பதற்காக உருவாக்கப்பட்ட இடங்கள். இதன் அளவைப் பொறுத்து அவை சிறிய குட்டைகள், குளங்கள் முதல் பெரிய ஏரிகள் வரை வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படும்.

கரை: இது நீர்நிலையைச் சுற்றி மண் அல்லது கற்களால் கட்டப்பட்டிருக்கும் ஒரு சிறிய சுவர். இது தண்ணீரை ஒரு நீர்நிலையில் சேமித்து வைப்பதற்குப் பயன்படும்.

ஓடை: தண்ணீர் செல்லக்கூடிய ஒரு சிறிய பாதை.

ஊற்று: தண்ணீர் பூமியின் அடியில் இருந்து மேல்மட்டத்திற்கு வரக்கூடிய இடம்.

நிலத்தடி நீர்மட்டம்: நிலத்திற்கு அடியில் உள்ள நீரின் அளவைக் குறிப்பது. தண்ணீரைப் பெறுவதற்கு இந்த மட்டத்தைத் தொடும் அளவு ஆழமாக கிணறுகள் தோண்டப்பட வேண்டும்.