தந்தையும் மகனும்
அமரர் கல்கி
தேச சரித்திரம் படித்தவர்கள் 'சிவாஜி' என்னும் பெயரைக் கேள்விப்பட்டிருப்பார்கள். சிவாஜி என்றால் ஓர் எலியா அல்லது புலியா என்பதைப் பற்றிச் சரித்திரக்காரர்களிடையே அபிப்பிராய பேதம் உண்டு. 'புலி நகம் படைத்த ஓர் எலி' என்பதாகவும் சிலர் சமரசமான தீர்ப்புக் கூறியிருக்கின்றனர். நம்மைப் பொறுத்தவரையில், ஓர் எலியாவது புலியாவது எந்தக் காலத்திலும் ஒரு மகா சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்ததாக நாம் கேள்விப்பட்டிராதபடியால், சிவாஜியை ஒரு வீர சிம்மமென்றே கொள்கின்றோம். [கடைசியில் நாமும் அவரை ஒரு வனசரமாகவே குறிப்பிட வேண்டியிருக்கிறது.]