இளம் பொறியியல் மாணவியான ஜெய்ஸ்ரீ, தன் இரைச்சலான இயந்திரங்களைப் பார்த்தாள்.
“அய்யோ! எரிச்சலாக வருகிறதே!“ என நினைத்தாள்.
பீப்-பீப் பீப்-பீப் பீப்-பீப்
கிர்ர்ர்ர் கிர்ர்ர்ர் கிர்ர்ர்ர்
பர்ர்ர்ர் பர்ர்ர்ர் பர்ர்ர்ர்ர்
பாட்டியின் தோட்டத்துக்காக அவள் ஏங்கினாள்.
அத்தோட்டத்தில் பறவைகள் இருந்தன.
மரங்கள்
செடிகள்
புற்கள் இருந்தன.
எல்லாவற்றுக்கும் மேலாக,
தோட்டத்தில் அவளது உயிர்த் தோழரான ட்ரீனி இருந்தது.
ட்ரீனியின் கிளைகள் கைகளைப் போல் இருக்கும்.
அவற்றில் அவள் ஏறினாள்,
விளையாடினாள்,
தூங்கினாள்.
ஜெய்ஸ்ரீ தன் தந்தையை அழைத்தாள். “அப்பா, நான் தாவரங்களைப் பற்றிப் படிக்கப் போகிறேன்.”
ஹும்ம்ம்!
பொறியியலாளரான அவர் அதை விரும்பவில்லை. “அப்பாவை பிறகு சமாதானப்படுத்திக் கொள்ளலாம்” என ஜெய்ஸ்ரீ நினைத்தாள்.
தாவரங்களைப் பற்றிப் படிக்க கல்லூரி மாறினாள்.
அவள் படித்தாள். ஐந்து வருடங்களில் இரண்டு பட்டங்கள் முடித்தாள். “ஆனால் என்னிடம் பதிலே இல்லாத பல கேள்விகள் உள்ளன.”
தாவரங்கள் ஒன்றை ஒன்று கவனிக்குமா?
தாவரங்கள் ஒன்றுடன் ஒன்று பேசிக்கொள்ளுமா?
சண்டை போடுமா?
ட்ரீனி என்னுடன் இருப்பதைப்போல, அவை ஒன்றுடன் ஒன்று நட்பாய் இருக்குமா?
ஜெய்ஸ்ரீ பதில்களைத் தேடி பல இடங்களுக்குச் சென்றாள்.
புது டெல்லியிலிருந்து, நியூ யார்க் சென்றவள், அங்கிருந்து மீண்டும் புது டெல்லி வந்தாள்.
துரதிர்ஷ்டவசமாக, எங்கும் பதில்கள் கிடைக்கவில்லை!
பிரான்ஸ் செல்லும் வரை! பிரான்ஸில்தான் அவள் ஒரு கதையைக் கேட்டாள்.
தனிமையான ஒரு கடுகுச் செடியால் மன அழுத்தம் காரணமாக சரியாக வளர முடியவில்லை. வெப்பநிலை மிக அதிகமாக இருந்தாலும் சரி, மிகக்குறைவாக இருந்தாலும் சரி, ஒளி மிகப் பிரகாசமாக இருந்தாலும் சரி, மிகவும் மங்கலாக இருந்தாலும் சரி, மணல் உதிரியாக இருந்தால்கூட சரி, அது எப்போதும் சிறியதாகவும், நோய்வாய்ப்பட்டும் சோகத்துடனுமே இருந்தது.
ஆனால் கடுகுச் செடியின் அருகில் ஒரு தோழமை அமையும் போது- இன்னொரு கடுகுச் செடிதான்- அவை இரண்டும் உயரமாகவும், பசுமையாகவும், மகிழ்ச்சியுடனும் வளர்ந்தன. தனிமையில் பலவீனமான செடிகள் ஒருங்கே வலுவடைந்தன.
ட்ரீனி சிறிய பறவைகளுக்கும் அணில்களுக்கும் உதவியாய் இருந்தது போல, அவை ஒன்றுக்கொன்று உதவியாய் இருந்தன.
ட்ரீனி இளம் தாவரங்களைக் கடுமையான சூரிய ஒளியில் இருந்து பாதுகாத்தது போல அவை ஒன்றுக்கொன்று பாதுகாப்பாய் இருந்தன.
ஆனால் இப்போதும் ஜெய்ஸ்ரீயிடம் பதில்களைக் காட்டிலும் கேள்விகளே அதிகமாக இருந்தன!
தாவரங்கள் ஏன் ஒன்றுக்கொன்று உதவுகின்றன? தாவரங்கள் எவ்வாறு ஒன்றுக்கொன்று உதவுகின்றன?
ஜெய்ஸ்ரீ சிந்தித்தார், சிந்தித்தார், சிந்தித்துக் கொண்டேயிருந்தார். அவர் படித்தார், படித்தார், படித்துக் கொண்டேயிருந்தார்.
அவர் மக்களிடம் பேசினார், அது சில சமயம் பயனளித்தது. சில சமயம் பயனளிக்கவில்லை. ஆனால் யாரிடமும் பதில்கள் இல்லை.
அதிர்ஷ்டவசமாக ஜெய்ஸ்ரீக்கு கடுகுச் செடிகளுடன் வேலை செய்வது மகிழ்ச்சி தருவதாக இருந்தது.
அவற்றை வளர்ப்பது கடினம் அல்ல, அதற்கு ஒரே ஒரு கருவிதான் தேவைப்படும்.
ஒரு பேப்பர் கிளிப்!
ஒவ்வொன்றாக தொடர்ந்து 4000 சிறிய விதைகளை நடுவதற்கு பேப்பர் கிளிப்பை ஜெய்ஸ்ரீ பயன்படுத்தினார்.
இந்த முழுப் பயிற்சியையும் அவள் பலமுறை செய்தார்.
ஆனால் அவர் எல்லா நேரங்களிலும் எல்லா பதில்களையும் பெறவில்லை. அவர் தோல்வியடைந்தார், தோல்வியடைந்தார், தோல்வியடைந்து கொண்டே இருந்தார்.
மொத்தம் 21 தடவை தோல்வியடைந்தார்.
ஜெய்ஸ்ரீ மேலும் கவலை அடைந்தார். கடுகுச் செடிகள் அளவுக்கு மனிதர்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பதில்லை.
அவரிடம் அடிக்கடி தவறான மற்றும் இரக்கமற்ற விஷயங்கள் கூறப்பட்டன.
“இந்தியர்களுக்கு அறிவியல் வராது”
“பெண்களுக்கு அறிவியல் வராது”
“என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள்” என நினைத்துக்கொண்டு, ஜெய்ஸ்ரீ தன் வேலையைத் தொடர்ந்தார்.
இறுதியாக, அவர் வெற்றி பெற்றார்.
“ஓ, நான் கண்டுபிடித்துவிட்டேன்!”
தாவரங்கள் எல்லா நேரங்களிலும் ஒன்றுக்கொன்று உதவியாய் இருப்பதை அவர் கண்டுபிடித்தார்.
சில கடுகுச் செடிகள் தன்னை ஒத்த கடுகுச் செடிகளுக்கு மட்டுமே உதவியாய் இருப்பதை அவர் கண்டுபிடித்தார். மேலும் மற்ற கடுகுச் செடிகள் ஒத்த தன்மை இல்லாத கடுகுச் செடிகளுக்கும் உதவின.
உற்சாகமான பதில்கள் எப்போதும் மேல் அதிகக் கேள்விகளுக்கு வழிவகுக்கும் என்பது ஜெய்ஸ்ரீக்கு தெரியும்!
“ஆர்வமூட்டும் விஷயம். ஏன் சில செடிகள் ஒரு விஷயத்தையும் மற்றவை வேறொரு விஷயத்தையும் செய்ய வேண்டும்? எல்லா செடிகளும் ஏன் ஒன்றுக்கொன்று ஒரே மாதிரியாக உதவ முடியாது?”
அந்நியர்களுடன் வளர்ந்த தாவரங்கள் அந்நியர்களுக்கு உதவக் கற்றுக்கொண்டிருப்பதை அவர் கண்டுபிடித்தார்.
இந்த நடத்தை பல பல ஆண்டுகளாக பரிணாமம் எனப்படும் மற்றொரு ஆர்வமிக்க விஷயத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
“எந்த விதைகள் ஒன்றாக வளர்ந்து, ஒன்றுக்கொன்று உதவி செய்து கொள்கின்றன என்பதை கண்டுபிடிக்க முடிந்தால் எவ்வளவு அருமையாக இருக்கும்!” என ஜெய்ஸ்ரீ நினைத்தார்.
மிகக் குறைந்த நேரத்தில், மிகக்குறைந்த செலவில் நம்மால் பல விதைகளை உற்பத்தி செய்ய முடியும்.
ஆனால் எந்த விதைகள் ஒன்றாக வளரும்? அவை எவ்வாறு வளர்க்கப்பட வேண்டும்?
உடன், வேறு கேள்விகளும் உள்ளன.
செடிகள் புத்திசாலிகளா? அவை எந்த அளவுக்கு புத்திசாலிகள்?
ஜெய்ஸ்ரீ இக்கேள்விகளுக்கு விடைகளைத் தேடும் பயணத்தில் இருக்கிறார். இதற்கிடையில், அவர் ஒவ்வொரு நாளும் தனக்கு உதவும் தாவரங்களிடம் இருந்து கற்றுக் கொள்கிறார்.
“மனிதர்களும் ஒருவருக்கொருவர் உதவிகரமாய் இருந்தால், இந்த உலகம் எவ்வளவு அற்புதமான இடமாக இருக்கும்!”
நீங்கள் இன்று தாவரங்களிடம் இருந்து என்ன கற்றுக்கொண்டீர்கள்?
H ஜெய்ஸ்ரீ சுப்ரமணியம் அவர்களை உங்களுக்குத் தெரியுமா?
டாக்டர் H ஜெய்ஸ்ரீ சுப்ரமணியம் புது டெல்லியில், தனது குழந்தைப் பருவத்திலிருந்தே தாவரங்கள் மீது ஆழ்ந்த ஈர்ப்பு கொண்டவர். தாவரவியல் படிப்பதற்காகவே தனது பொறியியல் படிப்பை விட்டு பாதியில் வெளியேறினார். 2017-ம் ஆண்டு, ஜெய்ஸ்ரீ தனது முனைவர் படிப்பை பிரான்சில் தொடங்கினார்.
அவரது ஆராய்ச்சி, செடிகளின் பிறர்நலன் பேணும் பண்புகளை மையமாகக் கொண்டது. மன அழுத்தத்தின்போது செடிகள் ஒன்றுக்கொன்று உதவி செய்து சிறப்பாக வளர்கின்றன என்பதை கடுகுச் செடிகளை (அரபிடோப்சிஸ் தலியானா) பயன்படுத்தி
ஜெய்ஸ்ரீ கண்டுபிடித்தார். பல இலட்சம் ஆண்டுகளாக “அந்நியர்களை” சுற்றி வளர்ந்த செடிகள் தம்மைச் சுற்றியுள்ள அனைத்து செடிகளுக்கும் உதவி செய்யக் கற்றுக்கொண்டுள்ளன. மற்ற செடிகளோ, தம்மை ஒத்த செடிகளுக்கு மட்டுமே உதவி செய்கின்றன என்பதை அவர் ஆராய்ச்சி விளக்குகிறது.
2021-ஆம் ஆண்டில், மதிப்புமிக்க மேரி கியூரி ஃபெல்லோஷிப்பிற்கு (மிக முக்கியமான பெண் விஞ்ஞானி மேடம் மேரி கியூரியின் பெயரிடப்பட்டது ) தனது முதுகலை ஆராய்ச்சியைத் தொடர்வதற்காக ஜெய்ஸ்ரீ தேர்ந்தெடுக்கபபட்டார்.
அவரது இந்தப் பயணம் எளிதாக இருக்கவில்லை. ஜெய்ஸ்ரீ தனது வேலையில் பல முறை இன வெறி மற்றும் பாலின வேறுபாட்டை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் தடைபடாத முயற்சியின் மூலமாக தன் வேலைகளைத் தொடர்ந்து செய்து வருகிறார். பரிசோதனைக் கூடங்களில் இருந்து அறிவியலை விடுவித்து அனைத்துத் தரப்பு மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். அவர் ஒரு சமூக செயல்பாட்டாளரும்கூட. பெண்களுக்கு அறிவியலில் சம வாய்ப்பையும் சுதந்திரமான சூழலையும் உருவாக்க முயற்சி செய்து வருகிறார். தாவரங்களிடமிருந்து மனிதர்கள் நிறைய கற்றுக் கொள்ள முடியும் என அவர் நம்புகிறார். முக்கியமாக மனஅழுத்தத்தின் போது சுயநலமின்றி ஒருவருக்கு ஒருவர் எப்படி உதவிகரமாக இருக்க முடியும் என்பதை தாவரங்களிடமிருந்து கற்றுக்கொள்ளலாம்.