thayaara aam vilaiyaadu

தயாரா? ஆம்! விளையாடு!

கிரிக்கெட்டை நேசிக்கும் அனுவுக்கு, கிரிக்கெட் ஆட வேண்டும் என்பதே கனவு! முதல் போட்டியிலேயே அவள் எப்படி பந்தைப் போட்டு அனைவரையும் வீழ்த்துகிறாள் என்பதைக் காணுங்கள்!

- Rajam Anand

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

அனு தொலைக்காட்சித் திரையை ஆடாமல் அசையாமல் பார்த்துக்கொண்டிருந்தாள். இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையேயான ஆட்டம் நடந்துகொண்டிருந்தது.

“மட்டையின் வெளிப்புற ஓரம்...பிடிபட்டது பந்து... அவுட்!” என்று வர்ணனையாளர் அறிவித்தார்.

“நாம் ஜெயித்துவிட்டோம்! ஏஏ!” என்று கூவியபடி அனு வெற்றி நடனம் ஆடினாள்.

“அம்மா, நான் கிரிக்கெட் விளையாட வேண்டும்!” என்று அறிவித்தாள் அனு. அவளுக்கு கிரிக்கெட் என்றால் மிகவும் பிடிக்கும்.

அனு, இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணித் தலைவி மித்தாலி ராஜின் பெரிய ரசிகையாவாள். அப்போது நுழைவாயில் மணி அடித்தது. அப்பா வந்துவிட்டார்.

“எனக்கு கிரிக்கெட் விளையாடக் கற்றுக் கொடுப்பீர்களா, அப்பா?” என்று கேட்டாள் அனு.

அடுத்த நாள் மாலை, வீடு திரும்பிய அப்பாவின் கையில் ஒரு பெரிய பை இருந்தது. அதில் பந்து, மட்டை, கையுறையுடன், வயிறு, தொடை மற்றும் கைகளுக்கான காப்புறைகளும் இருந்தன.

அனுவின் பள்ளித் தோழிகள் அவள் வீட்டுக்கு வந்தனர். மிருதுளாவும் சாந்தாவும் அனுவைப் போலவே ஓரளவு பார்வை இழந்தவர்கள். அமிதாவோ முழுமையாக பார்வை இழந்தவள். ரூமி மற்ற நால்வரைவிட நன்கு பார்க்கக் கூடியவள்.

கிரிக்கெட் மைதானத்தில் அப்பா விக்கெட்களை (இலக்குக் கட்டைகளை) பிட்சின் (ஆடுகளத்தின்) இரு பக்கங்களிலும் பொருத்தினார். அந்த விக்கெட்கள், குழல் போல உள்ளே வெற்றிடத்துடன் உலோகத்தால் செய்யப்பட்டிருப்பதால், அவற்றின் மீது பந்து பட்டால் அவை எழுப்பும் ஒலியை ஆட்டக்காரர்களால் கேட்க முடியும். டுவாங்!

அப்பா, ஃபைபர் ப்ளாஸ்டிக் பந்தை ஆட்டினார். ஜல் ஜல் ஜல்! பந்தின் உள்ளேயிருந்த உலோகமணிகள் ஓசை எழுப்பின.

“அனு! இந்த ஓசை பந்து எங்கே இருக்கிறது என்று கணிக்க உனக்கு உதவும்” என்றார் அப்பா. சாந்தாவின் கையில் பந்தைக் கொடுத்து, "பந்தைப் போடுவதற்கு முன் ‘தயாரா?’ என்று உரக்கக் கேட்கவேண்டும். அனு ‘ஆம்!’ என்று சொன்னதும், ‘விளையாடு!’ என்று உரக்கக் கூறியபடியே பந்தை எறிய வேண்டும்” என்று சொன்னார்.

அனு தன் இடத்தை சரிபார்த்து நின்றுகொண்டாள். “தயாரா?” “ஆம்!” “விளையாடு!”

ஜல் ஜல் ஜல்! பந்து ஆடுகளத்தில் நான்கு முறை பட்டுக் குதித்து வருகிறது. அச்சோ! அனு பந்தை தவறவிட்டாள்! சாந்தா மறுபடியும் பந்தைப் போட்டாள். த்வாக்! பந்து மைதானத்தின் எல்லைக்குப் பறந்தது! நான்கு ரன்கள்!

அனுவும் தோழிகளும் தினந்தோறும் கிரிக்கெட் பயிற்சி செய்ய ஆரம்பித்து இரண்டு மாதங்கள் ஓடிவிட்டன. அவர்கள் பள்ளிகளுக்கிடையேயான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பார்கள் என விளையாட்டு ஆசிரியர் அறிவித்தார். அனுவும் தோழிகளும் உற்சாகமடைந்தனர்.

‘பூவா? தலையா?’ நாணயத்தைச் சுண்டியதில், ‘பூ’ விழுந்தது. ‘பூ’வைத் தேர்ந்தெடுத்திருந்த அனுவின் அணியினர் பந்து வீச முடிவு செய்தனர். அனுதான் முதல் ஓவரை வீசுகிறாள். “தயாரா?” என்று கத்தினாள். “ஆம்!” அனு ஆழமாக மூச்சிழுத்து, ஓடிவந்து கத்தினாள். “விளையாடு!”

ஜல் ஜல் ஜல்! பந்து ஜல்ஜல் ஒலியோடு ஆடுகளத்தில் துள்ளிக்குதித்து ஓடியது. மட்டையாடும் சோனி, பந்தை வேகமாக அடித்தாள். த்வாக்! எகிறிப் பறந்த பந்து, எல்லைக்கோட்டைத் தாண்டி விழுகிறது. நடுவர் “ஆறு” என்று அறிவித்தார். பார்வையாளர்கள் ஆரவாரித்தனர்.

அனு உறுதிகொண்டாள். இந்த விக்கெட்டை வீழ்த்தியாக வேண்டும் என்று அவளுக்குத் தெரியும். த்வாக்! மட்டையில் பட்டு மேலே எழும்பிய பந்தை மிருதுளா பிடித்துவிட்டாள்!

புது ஆட்டக்காரியான பவுலா, விளையாட ஆயத்தமாக நின்றாள். அனு ஓடி வந்து பந்தைப் போட்டாள்.

டுவாங் டுவாங்! “இன்னொரு விக்கெட்!” என்று நடுவர் அறிவித்தார்.

இரண்டு விக்கெட்கள் வீழ்ந்துவிட்டன. பார்வையாளர்கள், “ஹாட்-ட்ரிக்! ஹாட்-ட்ரிக்!” என்று ஆரவாரித்தனர்.

அனுவால் தொடர்ந்து மூன்றாவது விக்கெட்டை வீழ்த்த முடியுமா?

இந்த முறை மட்டையாடப் போகிறவள் ஸோயா. அனுவின் இதயம் வேகமாகத் துடிக்கத் துவங்கியது! வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறப்பதைக் கண்டுகொள்ளாமலிருக்க முயன்றபடியே அனு பந்து வீசினாள்.

ஸோயா பந்தைத் தவறவிட்டு விட்டு, ஒரு ஓட்டம் எடுக்க கிரீஸை விட்டு முன்னே நகர்ந்தாள். விக்கெட்டுகளின் பின்னால் நின்றிருந்த ரூமி, பந்தைப் பிடித்து விக்கெட்டை நோக்கி எறிந்தாள்.

விக்கெட்! இதெப்படி! “ஹாட் ட்ரிக்! ஹாட் ட்ரிக்! ஹாட் ட்ரிக்!” பார்வையாளர்களின் சத்தம் விண்ணைப் பிளந்தது.

பார்வையற்றோர் கிரிக்கெட்

ஓரளவு அல்லது முழுமையாக பார்வை இழந்தவர்களுக்காக, மாற்றியமைக்கப்பட்டதே பார்வையற்றோர் கிரிக்கெட். பொதுவாக ஆடப்படும் கிரிக்கெட் விதிமுறைகளிலிருந்து பார்வையற்றோர் கிரிக்கெட் ஆட்டத்தின் விதிமுறைகள் சற்று மாறுபட்டவை. ஒவ்வொரு அணியிலும் 11 ஆட்டக்காரர்கள் இருப்பார்கள்.

இவை 4 அல்லது அதற்கு அதிகமான முழுமையாக பார்வை இழந்தோரைக் கொண்ட கலப்பு அணிகளாக இருக்கும். முக்கியமான வேறுபாடு பந்துதான். அது பெரிதாகவும் உலோகமணிகள் நிரப்பப்பட்டு ஒலியெழுப்புவதாகவும் இருக்கும். விக்கெட் கட்டைகள் உலோகக்குழாயால் செய்யப்பட்டு பிரகாசமான ஆரஞ்சு வண்ணம் பூசப்பட்டிருக்கும். நடுவர்களும் ஆட்டக்காரர்களும் ’சொல் அறிவுறுத்தல்’களைப் பயன்படுத்துவார்கள். எடுத்துக்காட்டாக, பந்து போடுபவர் பந்தைப் போடும்போது “விளையாடு!” என்று கத்துவார்.