theneer koppaiyil

தேநீர்க் கோப்பையில்

தேநீர்க் கோப்பைக்குள் எட்டிப்பார்க்கும் மீரா, ஒரு புதிய அறிவியல் உலகத்தையே அங்கு காண்கிறாள்.

- S Krishnan

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

மீரா மலையின் மீது ஓடினாள். ஆற்றைத் தாண்டி, மரங்களைத் தாண்டி, மலை உச்சியை நோக்கி, மேகங்களைத் துரத்திக்கொண்டு ஓடினாள்.

நில்லாமல், மேலே மேலே உயரமாக ஏறினாள்.

“அம்மா, அப்பா! சீக்கிரம், சூரியன் தூங்கப் போகும் முன்பாக” என்றாள் மீரா.

“ம்ம்ம்... சுத்தமான காற்றின் மணம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது” என்றார் அம்மா.

“பூக்களின் வாசனை எனக்குப் பிடித்திருக்கிறது. காய்ந்த இலைகள் என் காலின் கீழே மிதிபடும் சப்தமும் கூட” என்றாள் மீரா.

அப்பா சொன்னார், “எனக்குப் பிடித்த ஒரு வாசனையும் வருகிறது, பால் கலந்த ஒரு கோப்பை தேநீர்!” தேநீர் மணம் வந்த திசையை நோக்கி அவர் விரைந்தார்.

“எங்களுக்கு இரண்டு கோப்பை தேநீர் கொடுக்கிறீர்களா” என்று கேட்டார் அப்பா. “மீராவுக்கும் ஒரு சிறு கோப்பை தேநீர்” என்றார் அம்மா.

“இதோ உடனே தருகிறேன்” என்றார் தேநீர்க்கடைத் தாத்தா.

ஸ்ஸ்ஸ்க்க்க்… ஒரு தீக்குச்சியைக் கிழித்து அடுப்பைப் பற்றவைத்து நீர் நிரம்பிய ஒரு பாத்திரத்தை அதன் மேல் வைத்தார்.

தண்ணீர் மெல்ல மெல்ல சூடேறியது. சிறிய குமிழிகள் பெரிதாகிக்கொண்டே வந்தன. தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தது.

“அம்மா, பாருங்கள்! பாலின் நிறம் தண்ணீரில் எப்படிக் கலக்கிறது” என்றாள் மீரா.

“இப்போது தேயிலைகளைச் சேர்த்தவுடன் என்ன நடக்கிறது என்று பார்” என்றார் அம்மா.

பொறுமையாக இரண்டு நிமிடங்கள் காத்திருந்த மீரா, தீடீரென்று ஆச்சரியத்துடன் சொன்னாள் “ஓ, அதன் நிறம் மீண்டும் மாறுகிறது.”

“தாத்தா, இப்போது தேநீர் தயாராகிவிட்டதா?” என்று கேட்டாள் மீரா.

“கிட்டத்தட்ட தயார்” என்றார் அவர். சர்ர்ர் சர்ர்ர் சர்ர்ர்!

மூன்று கோப்பைகளில், தேநீரை வடிகட்டி ஊற்றினார். வடிகட்டியில் சொதசொதவென்ற தேயிலைகள் தங்கின.

கடைசியாக, அவர் சர்க்கரையைச் சேர்த்தார். வீட்டில் அம்மாவும் அப்பாவும் தேநீர் தயாரிக்கும்போது, அந்த வேலையை மீராதான் செய்வாள்.

கோப்பையில் ஸ்பூன்கள் உரசும் சப்தம் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. மீரா கோப்பையைப் பார்த்துக்கொண்டிருக்கும் போதே சர்க்கரை மறைந்தது.

“தேநீர் தயார்!” என்றாள் மீரா.

தாத்தா தேநீர் தயாரிப்பதைப் பாருங்கள்

ஒரு கோப்பை சூடான தேநீர் தயாரிக்க, பின்வரும் செய்முறைகளை சரியாக வரிசைப்படுத்த இயலுமா?

கரைதல்: தாத்தா சர்க்கரையைத் தேநீரில் சேர்க்கிறார், அது தேநீரில் கரைந்து மறைந்துவிடுகிறது. அதனால் தேநீர் இனிப்பாகிறது.

இங்கு ஒரு திடப்பொருள் கரைந்து திரவப்பொருளின் பகுதியாக மாறுகிறது.

வடிகட்டுதல்: தாத்தா வடிகட்டி வழியாக தேநீரை ஊற்றுகிறார். தேயிலைகள் வடிகட்டியிலேயே தங்கிவிடுகின்றன.

இது ஒரு வடிகட்டியின் வழியே செலுத்தப்படும் திரவப்பொருளில் உள்ள திடப்பொருட்கள் வடிகட்டியிலேயே தங்கிவிடுவது.

விரவுதல்: தேநீரின் மணம் தாத்தாவின் கடையிலிருந்து காற்றில் பரவி அப்பாவின் மூக்குக்கு வருகிறது.

இங்கு ஒரு பொருள் மற்றொரு பொருளுடன் சீராகக் கலக்கிறது. இந்தப் பொருட்கள் அவை அதிகமாக உள்ள இடத்திலிருந்து குறைவாக உள்ள இடத்திற்கு இடம்பெயர்கின்றன.

வெப்பச்சலனம்: தேநீர் தயாரிக்கும்போது, பாத்திரத்தின் அடியிலுள்ள சூடான நீர் எடையிழந்து மேலே செல்கிறது. மேலே இருக்கும் குளிர்ந்த நீர் அடியில் சென்று, மேலே சென்ற நீரின் இடத்தை எடுத்துக் கொள்கிறது. முழு நீரும் ஒரே மாதிரி சூடாகும் வரை இது திரும்பத் திரும்ப நடக்கும்.

இப்படித்தான் வெப்பம் திரவப்பொருட்களின் ஊடே பரவுகின்றது.

கடத்தல்: தாத்தா ஒரு பாத்திரத்தை அடுப்பின் மீது வைக்கிறார். அடுப்பைப் பற்ற வைக்கிறார். பாத்திரம் சூடாகிறது.

இங்கு வெப்பம் ஒரு திடப்பொருளின் ஊடேயும் திடப்பொருளிருந்து திரவப்பொருளுக்கும் பரவுகிறது.