இஸ்ஸ்ஸ்... என்ன சப்தம் இது?
இது தேனீக்கள் தங்கள் நண்பர்களை அழைக்கும் சமிக்ஞையா? இல்லை, தேனைக் கண்ட மகிழ்ச்சியில் எழுப்பும் ரீங்காரமா?
பலவகை தேனீக்களும் வண்டுகளும், குறிப்பாக பம்பிள்பீ எனப்படும் துளைவண்டுகளும், பறக்கும்போது உரத்த சப்தம் எழுப்புகின்றன. அவை தங்கள் இறக்கைகளை மேலும் கீழும் ஆட்டும் போதுதான் இந்த சப்தம் எழும்புகிறது. இறக்கைகளின் அளவு சிறியதாக சிறியதாக, தேனீக்கள் பறப்பதற்கு அவற்றை மேலும் மேலும் வேகமாக அடித்துக்கொள்ள வேண்டியிருக்கும். வேகம் அதிகரிக்க அதிகரிக்க சத்தமும் அதிகரிக்கும்.
தேனீக்கள் இன்னொரு மிக உபயோகமான விசயத்துக்கும் ரீங்கரிக்கின்றன. தபால்காரர் வீடுவீடாக கடிதம் கொடுப்பது போல, இவை ஒரு பூவிலிருந்து இன்னொன்றுக்கு மகரந்தத்தை கொண்டு சேர்க்கின்றன.
பூவிலுள்ள மணல் போன்ற துகள்கள்தான் மகரந்தம். இவை செடிகளுக்கு விதைகளை உருவாக்க உதவுகின்றன.தேனீக்கள் மகரந்தச் சேர்க்கைக்கு அருமையாக துணைபுரிபவை. தேனீக்களால்தான் நிறைய புதிய செடிகள் எங்கும் முளைத்து வளர்கின்றன.
தேனீக்களின் கால்களில் மிகச் சிறிய மகரந்த தூள் எப்படி ஒட்டிக்கொள்கிறது?தேன் உறிஞ்சுவதற்காக தேனீக்கள் பூவில் அமரும்போது, அவற்றின் உடலிலும் கால்களிலும் மகரந்தம் ஒட்டிக் கொள்கிறது.
அந்தத் தேனீக்கள் வேறு பூக்களைச் சுற்றி ரீங்காரமிட்டுக் கொண்டே நடனமாடும் போது, அந்த ஆட்டத்தில் மகரந்தத் தூள்கள் பூக்களின் மேல் உதிர்கின்றன. தேனீக்கள் மற்றுமொரு பூவில் அமரும்போது அப்பூவின் மகரந்தம் அவற்றின் மேல் ஒட்டிக்கொள்கின்றது. இது திரும்பத் திரும்ப நடக்கும்.
தாய் மரத்திலிருந்து தூரமாக, புதிய செடிகள் வளரக் காரணமாக உள்ள தேனீக்களே அந்தச் செடிகளின் ’ரீங்காரமிடும் ஞானத் தந்தைகள்’ எனலாம்.
நாம் மூச்சு விடுவதை நாமே கேட்க முடியுமா? பொதுவாக முடியாது! ஆனால் தேனீக்கள் மூச்சுவிடுவதை நம்மால் கேட்கமுடியும். ஏனென்றால் அந்த ரீங்காரம் தேனீக்கள் மூச்சு விடும் சப்தமும் கூடத்தான்! அவற்றின் உடல்கள் சிறுசிறு பகுதிகளின் இணைப்பால் உண்டானவை. எனவே அவை மூச்சுவிடும்போது காற்று உள்ளே சென்று இந்த எல்லா பகுதிகளின் ஏற்ற இறக்கங்களில் நுழைந்து வெளியேறுவதால் சப்தம் உண்டாகிறது. கேட்கவே ஆச்சரியமாக உள்ளது அல்லவா? இந்த சுறுசுறுப்பான தேனீக்கள் மிகவும் அற்புதமானவைதான்!
உங்களுக்குத் தெரியுமா?
1. தேனீக்கள் கடின உழைப்பாளிகள். அவை குளிர்காலத்தில் ஒன்பது மாதங்கள் வரையிலும் வாழக்கூடும்; ஆனால் கோடையில் இரு மாதங்களே வாழ முடியும். விளையாட்டே இன்றி உழைத்துக்கொண்டே இருப்பது, அவற்றைமந்தமாக்குவதில்லை!2. ஒரு விந்தையான செய்தி என்னவென்றால், முதிய தேனீக்கள் ஒரு இளைய தேனீ செய்யவேண்டிய வேலையைச் செய்யும்போது, அவற்றின் மூளை மூப்படைவதை நிறுத்திவிடுகிறது. மேலும், அது ஒரு இளைய தேனீயின் மூளையைப் போலவே வேலைசெய்ய ஆரம்பித்துவிடுகிறது. இப்போது உங்களுக்கும் தேனீக்களாக மாற ஆசையாக இருக்கிறதா?
3. மனிதர்களைப் போலவே தேனீக்களும் முகங்களை அடையாளம் கண்டு கொள்ளக்கூடியவை. முகத்தை ஒவ்வொரு பாகமாக தனித்தனியே பதிவு செய்து கொண்டு, முழுமையாக இணைத்து வைத்துக் கொள்ளக் கூடியவை. ஆகவே, தேனீக்களின் கோபத்துக்கு ஆளாகாதீர்கள்!
4. தீங்கு விளைவிக்கும் பூச்சிகள் அண்டாமல் இருக்க, செடிகள் கேஃபைன்(Caffeine) என்ற இரசாயனத்தை உற்பத்தி செய்கின்றன. இதன் வாசனையை வைத்து தேனீக்கள், பூக்கள்ருக்கும் இடத்தை நினைவில் வைத்துக்கொள்கின்றன. இது தேனீக்களை இரண்டாம் முறை வர அழைப்பு விடுக்கிறது.5. பம்பிள்பீ எனப்படும் துளைவண்டுகள் ஒருவகையான தேனீக்களாகும். இவை தேனீக்கள் மற்றும் பிற தேனீ வகைகளை விடப் பெரியவை. கூடுகளில் வாழும் இவை, சேர்ந்து வாழ விரும்புபவை. பெரும்பாலான துளைவண்டுகள் கொட்டுபவையல்ல. அவை அதிகம் தேன் உண்டாக்குவதில்லை என்றாலும் மகரந்தச் சேர்க்கைக்கு மிகவும் உதவுகின்றன.
தேனீயாகலாம் வாருங்கள்!
1. ஒரு தேனீ, தனது நடனத்தினால் பிற தேனீக்களுக்கு தேன் எங்கிருக்கிறது எனக் காட்டுகிறது. நீங்களும் சில நடன அசைவுகளின் மூலம் உங்கள் நண்பர்களை நீங்கள் சொல்வதைப் புரிந்துகொள்ள வைக்க முடிகிறதா என்று பாருங்களேன்!
2. தேனீயைப் போல ரீங்காரமிட முயலுங்கள். கைகளை மேலும் கீழும் ஆட்டினால் ரீங்கார சப்தம் கேட்கிறதா என்று பாருங்கள்.
3. தேன்கூடு தேனீக்களின் வீடு. இது ஒரு மகத்தான பொறியியல் படைப்பு. ஏனென்று தெரியுமா? தேன்கூட்டில் உள்ளது போல சரியான அறுகோணங்களை வரைய முயலுங்கள். இல்லை காலி அட்டைப் பெட்டிகளை வைத்து தேன்கூட்டின் மாதிரியை செய்யப் பாருங்கள். அப்போது உங்களுக்கே விடை புரியும்!
4. பல்வேறு பூக்களை கவனமாக முகர்ந்து பாருங்கள். அப்போது, வெவ்வேறு பூக்களிலிருந்து கிடைக்கும் தேன் வெவ்வேறு சுவை கொண்டிருக்கும் என்பதை உங்களால் அப்போது கற்பனை செய்துபார்க்க முடியும்.