thiruvizhavum kanakkum

திருவிழாவும் கணக்கும்

36 மாணவர்கள் கொண்ட தனது வகுப்பினரோடு லீலு ஒரு திருவிழாவுக்குப் போகிறாள். யாரும் தொலைந்து போகாமல் இருக்கவும், எத்தனை நுழைவுச்சீட்டுகள் வாங்க வேண்டும் என்று கணக்கிடவும் ஆசிரியர் தொடர்ந்து எண்ண வேண்டி இருக்கிறது. 36 வரை வேகமாக எண்ண 1, 2, 3 என்று எண்ணுவது தவிர வேறு வழி இருக்கிறதா? ஜோடி ஜோடியாக எண்ணுவதன் மூலம் வாய்ப்பாடுகளின் அடிப்படையை இக்கதை அறிமுகம் செய்கிறது.

- Vetri | வெற்றி

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

லீலுவோடு சேர்த்து நான்காம் வகுப்பில் மொத்தம் 36 மாணவர்கள் இருந்தனர். அத்தனை பேரும் திருவிழாவுக்கு வந்திருக்கிறார்கள். “பொம்மை ரயிலில் யார் எல்லாம் போறீங்க, கை தூக்குங்க!” என்று ஆசிரியர் கேட்கிறார். “நான், சார்... நான்!” என்று அனைவரும் கத்துகிறார்கள்.

ஆசிரியர் கைகளை எண்ணத் தொடங்குகிறார்.

அவர் 36 எண்ணுவதற்குள் பொம்மை ரயில் நிரம்பி விடுகிறது.

சத்தமாக ‘‘ஊ...’’ என விசில் அடித்தபடி கிளம்புகிறது.

ரயில் அடுத்த சுற்று வரும் வரை நான்காம் வகுப்பினர்

காத்திருக்க வேண்டும்.

அடுத்து பெரிய ராட்டினத்தில் செல்லும் நேரம்.

ராட்டினத்தின் ஒவ்வொரு ஆடும் பெட்டியிலும் இரண்டு இருக்கைகள் இருக்கின்றன.

ஒரு நுழைவுச்சீட்டுக்கு இரண்டு பேர் போகலாம் என்பதை லீலு கவனிக்கிறாள்.

ஆசிரியர் ஒவ்வொருவராக எண்ணத் தொடங்குகிறார். அதற்குள் லீலு வேகமாக தன் வகுப்பினரை

இரண்டிரண்டாக எண்ணுகிறாள்:

“2, 4, 6, 8, 10, 12, 14…36.”

நுழைவுச்சீட்டு கொடுப்பவர் கேட்கிறார், “எத்தனை சீட்டுகள்?”

லீலு பதில் சொல்கிறாள், “18”.

அடுத்தது ரங்கராட்டினம், ஒவ்வொரு குதிரையிலும் மூன்று இருக்கைகள் இருக்கின்றன.

பிட்டு, தனது வகுப்பினரிடம் தன் புத்திசாலித்தனத்தை

காண்பிக்க விரும்புகிறான்.

எனவே அவன் மூன்று மூன்றாக எண்ணத் தொடங்குகிறான்:

“3, 6, 9...36!”

ஆசிரியர் கேட்கிறார், “நமக்கு எத்தனை குதிரைகள் வேண்டும்?’’

பிட்டு பெருமையாக பதில் சொல்கிறான், “12”.

மாலை நேரம் ஆகி விட்டது. எல்லோரும் சோர்வாக இருக்கிறார்கள். 36 குழந்தைகளும் பாதுகாப்பாக பேருந்துக்குத் திரும்பிவிட்டார்களா என்று ஆசிரியர் பார்க்க விரும்புகிறார். இப்போது டிடூ எண்ண விரும்புகிறாள். பேருந்தின் ஒவ்வொரு வரிசையிலும் நான்கு சீட்டுகள் இருப்பதைக் கவனிக்கிறாள். அதனால் நான்கு நான்காக சத்தமாக எண்ணுகிறாள்.

“4, 8, 12, 16, 20, 24, 28, 32…”

என்று எண்ணிவிட்டு, ‘36’ என்று சொல்லுவதற்கு முன்பு நிறுத்துகிறாள்.

“சார் இரண்டு பேரைக் காணவில்லை போல் இருக்கிறது. அவர்கள் பேருந்தில் இல்லை!” என்று வாயைப் பிளக்கிறாள்.

பேருந்து ஓட்டுநர், டிடூ, ஆசிரியர் என மூவரும் தூங்கி வழிந்து கொண்டிருக்கும் வகுப்பினரை மீண்டும் எண்ணுகிறார்கள்.

யார் காணாமல் போயிருக்கக் கூடும்?

“அப்பாடா...! இங்க பாருங்க! வாங்க! காணாம போனதில ஒரு ஆள்!”

ஓட்டுநர் பேருந்தின் கடைசியிலிருந்து கூப்பிடுகிறார்.

கடைசி வரிசையில் மோன்ட்டு குறட்டை விட்டபடி படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கிறான்.

ஆனால் அப்படியும் 35 குழந்தைகள்தான் இருக்கிறார்கள்.

ஆசிரியர் காணாமல் போனவரைத் தேட வெளியே போக, டிடூ கத்துகிறாள், “சார் திரும்பி வாங்க... அவளைக் கண்டுபிடிச்சிட்டோம்!”

“யார் அந்தக் குறும்புக்காரி?” ஆசிரியர் கோபமாகக் கேட்கிறார்.

டிடூ தன்னையே காட்டி, “நான்தான் சார். என்னை எண்ண மறந்து விட்டேன்!”

என்று வெட்கத்துடன் சிரித்தாள்.

எண்களோடு ஒரு வேடிக்கை விளையாட்டு

இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக எண்ண நீங்கள் திருவிழாவுக்குத் தான் போக வேண்டும் என்றில்லை. நம்மைச் சுற்றிலும் ஜோடி ஜோடியாக எண்ண, நிறைய விஷயங்கள் இருக்கின்றன. உங்கள் வகுப்பில் எத்தனை கால்கள் என்று இரண்டிரண்டாக எண்ணிப் பாருங்கள்!