"மாரிதான் சிலரை வரைந்து பெய்யுமோ? காற்றுஞ் சிலரை நீக்கி வீசுமோ?" -கபிலர்
சாவித்திரிக்கும் ஸ்ரீதரனுக்கும் கல்யாணம் நடந்த வருஷத்தில், அந்தப் பிரதேசத்தில் வெகு நாள் வரையில் மழை பெய்யவில்லை.
புரட்டாசிக் காய்ச்சல் அந்த வருஷத்தைப் போல் கொடுமையாக எப்போதும் இருந்ததில்லையென்று ஜனங்கள் சொன்னார்கள். ஐப்பசி பிறந்து பத்துத் தேதி ஆயிற்று. அப்படியும் மழை இருக்கிற இடமே தெரியவில்லை.
குடமுருட்டியிலும் ஜலம் குறைந்துவிட்டபடியால், தண்ணீர் மடைச் சண்டைகள் அதிகமாயின.
"சாமி! இந்த மாதிரி இன்னும் நாலு நாள் காய்ஞ்சால் இந்த வருஷம் பஞ்சந்தான். இப்பவே, விளைச்சல் ஒண்ணுக்குப் பாதிதான் எதிர்பார்க்கலாம்" என்றான் நல்லான்.
"இப்படியே இருந்துவிடாதப்பா! பகவான் கிருபை பண்ணுவர். மழை சீக்கிரம் வரும்" என்றார் சம்பு சாஸ்திரியார்.
"மழை எங்கே வரப் போறதுங்க, இந்த ஐயமாரு பண்ணுகிற அக்கிரமத்திலே!" என்றான் நல்லான். ஊரில் அந்த வருஷம் மிராசுதார்களுக்கும், குடியானவர்களுக்கும் மனைக்கட்டுச் சண்டை ஏற்பட்டு, கோர்ட்டில் கேஸ் நடந்து கொண்டிருந்தது. இந்தக் கோபத்தைத்தான் நல்லான் அப்படி வெளியிட்டான்.
"அப்படிச் சொல்லாதே, நல்லான்! ஔவையார் என்ன சொல்லியிருக்கா? 'நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை' அந்த மாதிரி, நீதான் நல்லானாச்சே, உனக்காகத்தான் மழை பெய்யட்டுமே?"
நல்லான் சிரித்துவிட்டு, "என் பேர்தானுங்க நல்லான். உண்மையிலே நான் ரொம்பப் பொல்லாதவனுங்க. ஒரு வேளை, உங்க தர்ம குணத்துக்காக மழை பேஞ்சால்தான் பேஞ்சது. ஏங்க! மகா பாரதத்திலே விராட பர்வம் வாசிச்சா, மழை வரும் என்கிறார்களே!" என்றான்.
"ஆமாமப்பா, நல்லான்! நம் தேசத்துப் பெரியவர்கள் அப்படி நம்பிக்கை வைத்திருந்தார்கள். இந்த நாளில் அதையெல்லாம் யார் நம்புகிறார்கள்? இருந்தாலும், நான் கூட இன்னிக்கு ராத்திரி விராட பர்வம் வாசிக்கலாம்னு நினைச்சுண்டிருக்கேன்" என்றார் சாஸ்திரியார்.
சம்பு சாஸ்திரியார் அன்றிரவு விராட பர்வம் வாசித்ததனால் தானோ என்னவோ, நமக்குத்தெரியாது; மறுநாள் மாலை கீழ்த் திசையில் இருண்ட மேகங்கள் திரண்டு எழுந்தன. மத்தியானத்திலிருந்தே கம்மென்று மிகவும் இறுக்க மாயிருந்தது. "ஒரு வேளை மழை வந்தாலும் வரும்" என்று ஜனங்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். கிழக்கே மேகம் திரளுகிறது என்று அறிந்ததும் எல்லோரும் வீதியில் வந்து பார்க்க ஆரம்பித்தார்கள். அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, மேகங்கள் அதிவேகமாகப் பரவி நாலு திசைகளையும் மூடிக்கொண்டன. காது செவிடுபடும்படியாக இடி இடித்தது. மின்னல் ஒரு திசையின் அடிவாரத்தில் கிளம்பி, கண்ணைப் பறிக்கும் ஒளியுடன் வானத்தைக் குறுக்கே கடந்து சென்று, இன்னொரு திசையின் அடிவரையில் சென்று மறைந்தது.
பிறகு மழை பெய்யத் தொடங்கியது. மழை என்றால் எப்பேர்ப்பட்ட மழை! பிரளய காலத்து மழை என்று தான் சொல்ல வேண்டும். ஆரம்பத்தில் படபடவென்று பெரிய பெரிய மழைத்துளிகள் விழுந்தன. சில நிமிஷத்துக்கெல்லாம் வானத்துக்கும் பூமிக்கும் ஒரே தாரையாகிவிட்டது. பாபநாசம் சிவசமுத்திரம் முதலிய இடங்களில் மலையிலிருந்து அருவி விழுவதைப் பார்த்திருக்கிறீர்களா? அந்த மாதிரியாக, மேகமாகிய மலை முகட்டிலிருந்து ஒரு பெரிய - பிரம்மாண்டமான - கண்ணுக்கெட்டிய தூரம் பரவிய அருவி விழுவது போலவே தோன்றியது. அன்றிரவெல்லாம் இடைவிடாமல் அப்படிப் பெய்து கொண்டிருந்தது. தாலுகா கச்சேரியில் வைத்திருந்த மழை அளக்கும் கருவி, அன்று ராத்திரி எட்டங்குல மழை காட்டியதாகப் பிற்பாடு தெரிய வந்தது.
மறுநாள் பொழுது விடிந்த பிறகும் மழை நிற்கவில்லை. மழையுடன் காற்றும் பலமாக அடித்தபடியால் ஊரில் எல்லாரும் வீட்டைவிட்டு வெளிக்கிளம்பாமல் இருந்தார்கள். ஆனால் நல்லானுக்கு மட்டும் இருப்புக் கொள்ளவில்லை. நேற்று வரை தண்ணீருக்கு ஏங்கிக் கிடந்த வயல்களை இன்று போய்ப் பார்க்க வேண்டுமென்று தோன்றிற்று. கீத்துக் குடலையை எடுத்துத் தலையில் மாட்டிக் கொண்டு கிளம்பினான். ஊரைத் தாண்டி அப்பால் போனதும், எங்கே பார்த்தாலும், ஒரே ஜலப் பிரளயமாயிருந்தது! குளத்திலே ஜலம் அலை மோதிக் கொண்டிருந்தது. வயல்களில் எல்லாம் தண்ணீர் நிறைந்து பெரும்பாலான வரப்புகளை மறைத்துவிட்டது. அவற்றில் நெற்பயிரின் நுனி மட்டும் தெரிந்தும் தெரியாமலும் காணப்பட்டது. வாய்க்கால்களில் ஜலம் கரையைத் தொட்டுக்கொண்டு ஓடிற்று! ஆகா! குடமுருட்டியின் காட்சியை என்னவென்று சொல்வது? அப்போது அந்த நதியில் சுழிகளுடனும் சுழல்களுடனும் ஓடிக்கொண்டிருந்த வெள்ளம் குடத்தை மட்டுந்தானா உருட்டும்? மலையைக் கூடவல்லவா உருட்டிக் கொண்டுபோய்விடும்? ஆனால், மலை என்ற நாமதேயம் தஞ்சாவூர் ஜில்லாவில் இல்லாத காரணத்தினால்தான் போலும், அப்போது அந்நதியில் வேருடன் பிடுங்கப்பட்ட மரங்களும் வைக்கோற் போர்களும் மிதந்து போய்க் கொண்டிருந்தன.
நல்லான் இந்தக் காட்சியைச் சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தான். ஆற்றில் இன்னும் ஒரு சாண் தண்ணீர் அதிகமானால், வெள்ளம் கரை மீறிவிடும் என்று எண்ணினான். பிறகு அங்கிருந்து சற்றுத் தூரத்திலிருந்த சேரியின் வழியாகச் சென்றான். அந்தச் சேரி அப்போது நாலு பக்கம் ஜலத்தினால் சூழப்பட்ட ஒரு தீவைப் போல் விளங்கிற்று. அந்தத் தீவிற்குள்ளும் ஒரு பகுதியில் ஜலம் வழிந்து ஓடத் தொடங்கியிருந்தது. அங்கே, சில ஆட்கள் நின்று மண்ணை வெட்டிப் போட்டு அணை கோலிக் கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்த நல்லான், 'ஐயோ! பாவம்! சாஸ்திரி ஐயா சொல்றாப்பலே, மழை பெய்தா எல்லாருக்குந்தான் பெய்யறது. ஆனால், சில பேருக்கு, அது சாதகமாயிருக்கு; சில பேருக்கு கெடுதலா முடியுறது' என்று எண்ணினான். அதே சமயத்தில் இன்னோர் எண்ணம் அவன் மனத்தில் தோன்றி அவனுக்கு ஒரு க்ஷணம் நடுக்கம் உண்டாக்கிற்று. அந்தச் சேரிக்குக் கொஞ்ச தூரத்தில் குடமுருட்டியில் ஒரு குத்தல் இருந்தது. தப்பித் தவறி அங்கே உடைப்பு எடுத்து விட்டால் சேரி அரோகரா! 'சாமி! ஆண்டவனே! அப்படி ஒண்ணும் வர வேண்டாம்!' என்று பிரார்த்தித்த வண்ணம் நல்லான் வீடு திரும்பினான்.
நல்லானைப் போலவே சம்பு சாஸ்திரியும் அன்று காலை அந்த மழையிலும் காற்றிலும் வெளிப் புறப்பட்டார். ஆனால், அவர் வயல்களுக்குப் போகவில்லை. தடாகத்தில் போய்ப் பிராத ஸ்நானம் செய்துவிட்டு, நந்தவனத்தில் புகுந்தார். அன்று ஏகாதசியாகையால், பஜனை மடத்தில் படங்களின் அலங்காரத்துக்காக அகப்பட்ட வரையில் புஷ்பங்களைச் சேகரித்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார். அப்பாவுக்குப் பெண்ணாகிய சாவித்திரி அந்தப் புஷ்பங்களையெல்லாம் அழகான மாலைகளாகத் தொடுத்து வைத்தாள்.
சாயங்காலம் கொஞ்சம் மழை விட்டிருந்தபோது, சம்பு சாஸ்திரி சாவித்திரியை அழைத்து, "அம்மா! நல்ல வேளையாய் மழை குறைந்திருக்கிறது. சிறு தூற்றல் தான் போடுகிறது. பஜனை மடத்துக்குப் போய்க் கோலம் போட்டு விளக்கேற்றி வைத்துவிட்டு வா, அம்மா! இன்று சீக்கிரமாகவே பஜனையை ஆரம்பித்து முடித்துவிடவேணும்" என்றார். "இதோ போகிறேன், அப்பா!" என்றாள் சாவித்திரி.
பிறகு, "மங்களம்! இன்னிக்கு ஏகாதசின்னு ஞாபகம் இருக்கோல்யோ? சுண்டலுக்குக் கடலை ஊறப் போட்டிருக்கையா?" என்று கேட்டார்.
"ஊறப் போடுவானேன்? அதுதான் மழையிலே ஊறிப் போய்க் கிடக்கே!" என்றாள் மங்களம்.
"வைத்தி! வைத்தி!" என்று இரைந்து கூப்பிட்டார் சாஸ்திரி. அவன் காதில் விழவில்லை. கிட்டப் போய், ஜாடை காட்டிக் கொண்டே, "வைத்தி! அக்கிரகாரத்திலே எல்லாரிட்டயும் போய், இன்னிக்கு ஏழு மணிக்கே பஜனை ஆரம்பிச்சுச் சுருக்க முடிச்சுடலாம்னு சொல்லிட்டு வா!" என்று சொன்னார்.
வைத்தி அவர் சொன்னதை ஒருவாறு தெரிந்து கொண்டு "இந்த மழையிலே வீடு வீடா யார் போறது? என்னால் முடியாது!" என்றான்.
சிறிது நேரத்துக்கெல்லாம் சம்பு சாஸ்திரி தாமே புஷ்பக் குடலை முதலியவற்றை எடுத்துக்கொண்டு கிளம்பினார்.
அக்கிரகாரத்தின் மேலண்டைப்புறத்தில், பெரிய தெருவையும் சின்னத் தெருவையும் சேர்க்கும் பாதை ஒன்று இருந்தது. அந்தப் பாதைக்கு மேற்கே விசாலமான படித்துறைக்குளம் காணப்பட்டது. குளத்தின் வட கரையில் பாதையை யொட்டி பஜனை மடம் இருந்தது.
இந்தப் பஜனை மடத்தில் அன்று இரவு ஏழு மணிக்கு ஜனங்கள் வந்து கூட ஆரம்பித்தார்கள். சங்கரநாராயண தீக்ஷிதர், சாமா ஐயர், ரமணி ஐயர், ராமய்யா வாத்தியார், முத்துசாமி ஐயர் எல்லாரும் வந்தார்கள். குழந்தைகளும், ஸ்திரீகளுங்கூடச் சிலர் வந்து சேர்ந்தார்கள்.
சங்கர தீக்ஷிதர் வந்ததும், கையில் ஓர் ஓட்டை விசிறியுடன் சம்பு சாஸ்திரியிடம் வந்து, "எங்கணும், சாஸ்திரி! ரொம்ப இறுக்கமாயிருக்கே! வேர்க்கிறதோ இல்லையோ?" என்று கிறுதக்காகச் சொல்லிக்கொண்டு, சாஸ்திரியின் மேல் விசிறினார். இந்த மாதிரி விளையாட்டுக்கெல்லாம் சாஸ்திரியின் பதில் புன்னகைதான். அந்தப் பதிலையே இப்போதும் அளித்தார். உடனே தீக்ஷிதர், "ஓய், இன்னிக்குத் திவ்ய நாம சங்கீர்த்தனம் எல்லாம் வைத்துக் கொள்ள வேண்டாம். சீக்கிரமாய் உட்கார்ந்தபடியே நாலு பாட்டுச் சொல்லிப் பஜனையை முடிச்சுடும். மழை பலமாய்ப் பிடிச்சுக்கறதுக்கு முன்னாலே, அவாவாள் வீட்டுக்குப் போய்ச் சேரலாம்" என்றார்.
"அப்படித்தான் உத்தேசம் பண்ணியிருக்கேன். இந்த மழையிலே நீங்கள்ளாம் வந்தேளே, அதுவே பெரிய காரியம்!" என்றார் சாஸ்திரியார்.
ஆனால், சங்கர தீக்ஷிதரின் எண்ணம் பலிக்காமற் போவதற்கே தானோ என்னவோ, பஜனை ஆரம்பித்த சற்று நேரத்துக்கெல்லாம் மறுபடியும் மழை பலமாய்ப் பிடித்துக் கொண்டது.
பஜனை மடத்தின் சுவர்களின் மீதும் கதவுகளின் மீதும் மழையும் புயலும் தாக்கியபோது உண்டான சப்தம் பஜனையின் சப்தத்தையும் மூழ்க அடிப்பதாயிருந்தது. இடையிடையே கதவுகள் படீர் படீர் என்ற சப்தத்துடன் திறப்பதும் மூடுவதுமாயிருந்தன.
அதே சமயத்தில் சம்பு சாஸ்திரியின் வீடும் அல்லோல கல்லோலப் பட்டுக் கொண்டிருந்தது. அடிக்கடி திறந்து கொண்ட ஜன்னல் கதவுகளின் வழியாகக் காற்றும் மழையும் புகுந்து அடித்தன. அந்த வருஷம், கல்யாணச் சந்தடி காரணமாக சாஸ்திரியாரின் வீடு ஓடு மாற்றப்படவில்லை. இதனால் சில இடங்களில் ஏற்கெனவே சொட்டுச் சொட்டென்று சொட்டிக் கொண்டிருந்தது. இப்போது அடித்த பெருங்காற்றிலும் மழையிலும் ஓடுகள் இடம் பெயர்ந்தபடியால், சில இடங்களில் தண்ணீர் தாரையாகக் கொட்டிற்று.
பாவம்! சாவித்திரி, சுண்டல் எடுத்துக்கொண்டு போவதற்காக வந்தவள், வீட்டுச் சாமான்கள் நனையாமல் காப்பாற்றுவதற்குப் பெருமுயற்சி செய்தாள். முகத்தில் வந்து அடித்த மழையைப் பொருட்படுத்தாமல் ஜன்னல் கதவுகளைச் சாத்தினாள். அப்பாவின் புஸ்தகங்கள், கணக்கு நோட்டுகள் முதலியவற்றை எடுத்துப் பத்திரப்படுத்தினாள். ஜலம் தாரையாகக் கொட்டிய இடங்களில் அண்டா, தவலை முதலிய பெரிய பாத்திரங்களைக் கொண்டு வைத்தாள். தரையில் தேங்கியிருந்த ஜலத்தை விளக்குமாற்றால் பெருக்கித் தள்ள முயன்றாள்.
அந்தச் சமயத்தில் அவளுடைய மனம், 'தீவாளிக்கு இவாள் வர்றபோது இப்படியே மழை கொட்டிண்டிருந்தா என்ன பண்றது? இந்த வீட்டைப் பார்த்துட்டுப் பரிகாசம் பண்ணுவாளே? அதற்குள்ளே மழை நின்று போகணுமே, ஸ்வாமி!' என்று வேண்டிக் கொண்டிருந்தது.
அந்தச் சமயம், மங்களம் சமையலறையிலிருந்து கையில் ஒரு கிழிசல் குடையுடன் வந்து, 'ஏண்டி, சாவித்திரி! உங்க அப்பாகிட்டச் சொல்லி இந்தக் குடையை ரிப்பேர் பண்ணி வைக்கறதற்குக்கூட விதியில்லையா? பாக்கிக்கெல்லாம் மட்டும் வாய் கிழியறதே!" என்று சொல்லிக் குடையைத் தொப்பென்று கீழே எறிந்தாள்.
பகவானுடைய பக்தியில் ஈடுபட்டவர்கள் தங்களுடைய குடும்ப காரியங்களைச் சரியாகக் கவனிப்பதில்லையென்பது நமது நாட்டில் தொன்றுதொட்ட சம்பிரதாயமாயிருந்து வந்திருக்கிறது. அந்தப் பரம்பரையில் வந்த சம்பு சாஸ்திரி மட்டும் இந்த வழக்கத்துக்கு விரோதமாயிருக்க முடியுமா? ஆகவே, மங்களம் அவர்மேல் எரிந்து விழுவதற்குக் காரணம் இல்லாமற் போகவில்லை.
ஆனாலும், சாவித்திரி விட்டுக் கொடுக்காமல், "அப்பா கிட்டச் சொன்னேன், அவருக்கு ஞாபகம் இல்லைபோல் இருக்கு. நாளைக்கே ரிபேர் பண்ணிவிடலாம், சித்தி!" என்றாள். பிறகு, அந்தப் பேச்சு வளராமல் இருக்கும் பொருட்டு, "பஜனை முடியற சமயம் ஆச்சே, சித்தி! விநியோகத்துக்கு எல்லாரும் காத்திண்டிருப்பாளே! சுண்டலை எடுத்துண்டு போவமா?" என்று கேட்டாள்.
மங்களம், "உனக்கும் வேலையில்லை, உங்க அப்பாவுக்கும் வேலையில்லை. மழையிலேயும் இடியிலேயும் பஜனை என்ன வேண்டியிருக்கு பஜனை! நான் வல்லை சுண்டலை எடுத்துண்டு. நீயே, தொலைஞ்சுட்டு வா!" என்றாள். இப்படிச் சொல்லிக்கொண்டே உள்ளே போய், சுண்டல் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு வந்து, தரையில் 'நக்'கென்று வைத்தாள்.
அதே சமயத்தில் வானத்தில் ஒரு பேரிடி உண்டாகி நாலு திசையும் குமுறும்படி இடித்தது.
சாவித்திரி, அப்பா சொல்லிக் கொடுத்திருந்தபடி "அர்ச்சுனப் பல்குனப் பார்த்தனக் கிரீடி..." என்ற மந்திரத்தை மனத்தில் ஜபித்த வண்ணம் சுண்டல் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, அந்த ஓட்டைக் குடையைப் பிரித்துக் கொண்டு பஜனை மடத்துக்குக் கிளம்பினாள்.
பஜனை மடத்தில் சம்பு சாஸ்திரி கலைந்துபோன தம்புராவைச் சுருதி கூட்டிக் கொண்டிருந்தார். பஜனையிலிருந்து எழுந்து வந்து மடத்தின் தாழ்வாரத்தில் சங்கர தீக்ஷிதரும் இன்னும் நாலைந்து பேரும் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள்.
சில வருஷங்களுக்கு முன்னால், சம்புசாஸ்திரி பஜனை ஆரம்பித்த புதிதில், ஊரில் எல்லாரும் அதில் சிரத்தையுடன் ஈடுபட்டார்கள். நாளடைவில் சாஸ்திரியாரைத் தவிர மற்றவர்களுக்குப் பஜனையில் சிரத்தை குறைந்து வந்தது. இப்போதெல்லாம் பெரும்பாலும் பொழுது போக்குக்காகவும், சுண்டல் வடை விநியோகத்தை உத்தேசித்துமே பஜனைக்கு வந்தார்கள் என்று சொல்லலாம். இப்போதைக்குக் குழந்தைகளுக்குத்தான் பஜனையில் அதிக சிரத்தையிருந்தது. பெரியவர்களோ ஒரு பக்கம் பஜனை நடந்து கொண்டிருக்கும்போது தாங்கள் பாட்டுக்கு வம்பு வளர்த்துக் கொண்டிருப்பார்கள்.
அதிலும் இன்று மழையும் காற்றும் பிரமாதமாக அடித்துக் கொண்டிருந்தபடியால், யாருக்குமே பஜனையில் மனம் செல்லவில்லை. இன்னும் ஏன் சுண்டல் வரவில்லையென்றுதான் எல்லாரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
தீக்ஷிதர், பொடி டப்பியைத் தட்டி, பொடி எடுத்து உறிஞ்சிவிட்டு, "என்னடா இது? இந்தச் சம்பு சாஸ்திரி இலேசிலே பஜனையை நிறுத்தாது போல் இருக்கே! சட்டுப்புட்டுனு முடிச்சா, சுண்டலை வாங்கித் தின்னுட்டுப் போகலாம்னு பார்த்தா..." என்று இழுத்தார்.
சாமாவய்யர், அப்போது அங்கே வந்த வைத்தியைப் பார்த்து, "அடே வைத்தி! உங்க அத்திம்பேர் கிட்டச் சொல்லிச் சீக்கிரம் பஜனையை நிறுத்தச் சொல்லேண்டா! இந்த மழையிலேயும் இடியிலேயும் பஜனை என்னடா, வேண்டியிருக்கு?" என்றார்.
"நான் தானே? வந்து நாலு நாள் தான் ஆச்சு!" என்றான் வைத்தி.
தீக்ஷிதர், "நாசமாப் போச்சு! அவனுக்குச் சாதாரண நாளிலேயே காது கேக்காது. இந்த மழையிலும் இடியிலும் காது கேட்டாப்பலேதான்!" என்றார்.
"ஏண்டா வைத்தி! வாசலிலே இடி இடிக்கிறதே! உன் காதிலே விழறதா?" என்று ராமய்யா வாத்தியார் உரத்த குரலில் கத்தினார்.
அதற்கு வைத்தி, "பிரஸாதந்தானே? சுண்டலும் வடையுந்தான். எனக்குத் தெரியாதா, என்ன? எங்க அக்காதானே பண்ணினாள்?" என்றான். எல்லாரும் சிரித்தார்கள்.
முத்துசாமி ஐயர், "ஏன், ஸ்வாமி? குடமுருட்டியிலே பிரமாத வெள்ளம் வந்திருக்காம். உடப்பு எடுத்துக்கும் போலிருக்காமே, வாஸ்தவமா? யாருக்காவது தெரியுமா?" என்று கேட்டார்.
"குடமுருட்டிதான் உடைச்சுக்கட்டும், மானமே இடிஞ்சு விழட்டும். இந்தச் சம்பு சாஸ்திரி மட்டும் பஜனையை நிறுத்தாது போலிருக்கு" என்றார் தீக்ஷிதர்.
இந்தச் சமயத்தில் சாவித்திரி, சுண்டல் பாத்திரத்துடன் உள்ளே வரவே, "சரி, சரி, பிரஸாதம் வந்துடுத்து, பஜனையை முடிக்கச் சொல்லலாம்" என்று கூறிக் கொண்டு, எல்லாரும் அவரவர்கள் இடத்துக்குப் போனார்கள்.
இரவு சுமார் எட்டு மணிக்கு, நல்லான் தன்னுடைய வீட்டில் கோரைப் பாயை விரித்து அதில் படுத்துக் கொண்டான். தூக்கம் என்னவோ வரவில்லை. பஜனை மடத்துக்குப் போய்ப் பஜனை கேட்கலாமாவென்று ஒரு கணம் நினைத்தான். அப்புறம், 'இந்த மழையிலே யார் போறது?' என்று எண்ணினான். இரவு பூராவும் இப்படியே மழை பெய்தால், வயல்களில் எல்லாம் ரொம்ப ஜலம் கட்டி நிற்கும், அதிகாலையில் எழுந்து போய் வடிய விட வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டான். ஆனால், வாய்க்கால்களில் ஜலம் ததும்பப் போய்க் கொண்டிருந்தால், எப்படி வடிய விடுகிறது என்று யோசனை உண்டாயிற்று. விராட பர்வம் படித்தால் மழை வரும் என்பது போல், மழையை நிறுத்துவதற்கும் ஏதாவது வழி இருக்கிறதா என்று சாஸ்திரியாரைக் கேட்க வேண்டுமென எண்ணினான்.
அப்போது நல்லானுடைய பாம்புச் செவியில் மழையின் 'சோ' என்ற சத்தத்தையும், காற்றின் 'விர்' என்ற சப்தத்தையும் தவிர, வேறு ஏதோ ஒரு சப்தம் கேட்டது.
அது, ஜலம் கரையை உடைத்துக் கொண்டு பாயும் சப்தம் என்று அவனுக்குத் தெரிந்து போயிற்று. உடனே குடமுருட்டியின் குத்தல் ஞாபகம் வந்தது. அவ்வளவுதான்; போர்த்திக் கொண்டிருந்த துப்பட்டியை எடுத்து விசிறி விட்டு, அவசரமாக எழுந்தான். ஓலைக் குடலையை எடுத்துத் தலையில் மாட்டிக் கொண்டு அந்தக் கொட்டுகிற மழையில் மின்னல் வெளிச்சத்தின் உதவியினால் சேரியை நோக்கி விரைந்து சென்றான்.
நல்லான் தட்டுத் தடுமாறி, இரண்டு மூன்று இடத்தில் தடுக்கி விழுந்து எழுந்திருந்து கடைசியாக சேரியை அடைந்தபோது, சேரி அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது. காலையில் மண்ணை வெட்டி வரப்புப் போட்டுக் கொண்டிருந்தார்களல்லவா? அந்த வரப்பெல்லாம் போய்விட்டது. ஒரே வெள்ளமாக ஜலம் சேரியில் புகுந்து கொண்டிருந்தது. மழை, காற்று, பாய்கின்ற ஜலம் இவற்றின் 'ஹோ' என்ற இரைச்சலுக்கு இடையிடையே, "ஐயோ! கொழந்தையைக் காணமே!" "ஏ குட்டி! எங்கடி போய்ட்டே!" "ஆயா! ஆயா! ஐயோ! ஆயா போய்ட்டாளே!" "அடே கருப்பா! மாட்டை அவிழ்த்துவிடுறா!" "ஐயோ! என் ஆடு போயிடுச்சே!" என்று இந்த மாதிரி பரிதாபமான அலறும் குரல்கள் தீன ஸ்வரத்தில் கேட்டன.
மின்னல் வெளிச்சத்தில் நல்லானைப் பார்த்ததும், சேரி ஜனங்கள் வந்து, அவனைச் சூழ்ந்து கொண்டார்கள். "ஐயோ! சாமி! குடிமுழுகிப் போச்சுங்களே! குடமுருட்டி உடைப்பு எடுத்துக்கிட்டதே! நாங்க என்ன செய்வோம்? எப்படிப் பிழைப்போம்?" என்று கத்தினார்கள்.
நல்லான் உரத்த குரலில், "அடே! நீங்கள் எல்லாரும் ஆம்புளைகள் தானாடா! உடைப்பு எடுத்தா, ஓடிப்போய் மண்ணைக் கிண்ணைக் கொட்டி அடைக்கிறதுக்குப் பார்க்காமே, பொம்புளை மாதிரி அழுதுகிட்டு நிக்கறீங்களேடா?" என்றான்.
"உடைப்பையாவது, அடைக்கவாவதுங்க! கிட்ட ஆள் அண்ட முடியாதுங்க. அவ்வளவு பெரிய உடைப்பு சாமி!" என்றான் தலையாரி வீரன்.
"குடிசையெல்லாம் விழுந்து எல்லாம் பாழாய்ப் போச்சுங்க. இனிமே உடைப்பை அடைச்சுத்தான் என்ன பிரயோஜனம்? புள்ளை குட்டிங்களைக் காப்பாத்தறதுக்கு ஒரு வழி சொல்லுங்க!" என்றான் இன்னொருவன்.
"புள்ளை குட்டி போனாலும் பரவாயில்லை. ஆடு மாடெல்லாம் இருந்த இடந்தெரியலைங்களே!" என்றான் மூன்றாவது ஆள்.
அப்போது இடி முழக்கத்துடன் பளீரென்று மின்னிய மின்னலின் வெளிச்சத்தில் நல்லானுக்கு முன்னால் ஒரு கணப் பொழுது தோன்றிய காட்சி அவனுடைய நெஞ்சைப் பிளப்பதாயிருந்தது. கொஞ்ச தூரத்தில் குடமுருட்டியின் கரை உடைத்துக்கொண்டு, ஜலம் ஒரே நுரை மயமாகப் பாய்ந்து கொண்டிருப்பதையும், சேரியெல்லாம் ஜலம் புகுந்திருப்பதையும், குடிசைகள் இடிந்து விழுந்து கொண்டிருப்பதையும், பெண் பிள்ளைகளும், பிள்ளை குட்டிகளும் அலறுவதையும் அவன் அந்த ஒரு க்ஷண நேரக் காட்சியில் கண்டான்.
உடனே, அவன் ஆவேசம் வந்தவனைப் போல், "அட பாவிகளா! தடிப்பசங்கள் மாதிரி சும்மா நிக்கறீங்களேடா? இன்னும் கொஞ்சம் நாழி போனா அத்தனை பேரும் வெள்ளத்திலே போயிடுவாங்களே! ஓடுங்க! ஓடுங்க! பொம்புளைகளை யெல்லாம் சேர்த்து, பிள்ளை குட்டிகளோடு அக்கிரகாரத்துக்கு ஓடச் சொல்லுங்க!" என்றான்.
"என்ன, சாமி குருட்டு யோசனை சொல்றீங்க? அக்கிராகாரத்துக்கு நாம் போனா அய்யமாரு விடுவாங்களா?" என்றான் தலையாரி வீரன்.
"குருட்டு யோசனை ஒண்ணும் இல்லேடா! ஓடிப் போய் சாஸ்திரி ஐயா காலிலே விழுந்தா ஏதாவது வழி சொல்லிக் காப்பாத்துவாரு. அநேகமா, பஜனை மடத்திலே தான் இப்ப இருப்பாரு. பஜனை மடத்துக்கு ஓடச் சொல்லுங்க பொம்புளைகளை. ஆம்புளைகளெல்லாம் ஆடு மாடைக் காப்பாத்தறதுக்கு வழி பாருங்க!" என்றான் நல்லான்.
"பட்டிக்கார ஐயாவே சொல்லச்சே நமக்கு என்ன வந்தது? ஓடுங்க எல்லாரும் பஜனை மடத்துக்கு!" என்றான் தலையாரி வீரன்.
பிறகு, நல்லானும் சாம்பானும் குடமுருட்டியில் உடைப்பு எடுத்துக்கொண்ட இடத்தைப் பார்க்கப் போனார்கள்.
பஜனை முடிந்தது. சாஸ்திரியார் ஸ்வாமிக்கு நைவேத்தியம் செய்து கற்பூர ஹாரத்தி காட்டினார். எல்லோரும் சேர்ந்து மங்களம் பாடினார்கள்.
பிறகு, தீக்ஷிதர் எழுந்திருந்து பிரஸாத விநியோகம் செய்ய ஆரம்பித்தார். பஜனையில் இந்தப் பணியை அவர் தான் ஏற்றுக் கொள்வது வழக்கம். விநியோகம் செய்து வரும்போது, தம்முடைய பிள்ளைகளுக்கு மட்டும் தெரிந்தும் தெரியாமலும் இரண்டு மூன்று தடவை சுண்டல் கொடுப்பார். அந்தப் பிள்ளைகளும் தகப்பனாரின் நோக்கத்தை அறிந்தவர்களாய் மூலைக்கு மூலை வந்து சுண்டல் வாங்கி மடி நிறையக் கட்டிக் கொண்டு போவார்கள்.
இன்று வழக்கம்போல் தீக்ஷிதர் சுண்டல் கொடுத்துக் கொண்டிருக்கையில் திடீரென்று மடத்தின் வாசலில் ஏதோ கூக்குரல் கேட்டது. மழை, காற்று சப்தத்துக்கிடையே பலர் ஓடிவரும் சத்தம் போல் இருந்தது. 'இது என்னவாயிருக்கலாம்?' என்று யாரும் யோசிப்பதற்கு முன்னால், படீரென்று மடத்தின் வாசல் கதவு திறந்தது. திறந்த கதவு வழியாக திமுதிமுவென்று சொட்ட நனைந்திருந்த பெண்பிள்ளைகளும் குழந்தைகளும் உள்ளே பிரவேசித்தார்கள். அவர்களைப் பின் தொடர்ந்து மழைச் சாரலும் உள்ளே புகுந்து அடித்தது.
பஜனை மடத்தில் உட்கார்ந்திருந்தவர்கள் அவ்வளவு பேருடைய கண்களும் ஏககாலத்தில் வாசற்படி பக்கம் திரும்பி இந்தக் காட்சியைக் கண்டன. அவர்களில் பலருக்குக் கண் விழி பிதுங்கிவிடும் போல் இருந்தது.
அதே சமயத்தில், உள்ளே புகுந்த பெண் பிள்ளைகளும் இவர்களைப் பார்த்துவிட்டுப் பயப் பிராந்தி கொண்டவர்களைப் போல் திகைத்து நின்றார்கள். பின்னால் வருகிறவர்களுக்குக் கூட இடங்கொடாமல் அவர்கள் வாசற்படியண்டை நின்றுவிட்டார்கள்.
ஒரு கண நேரம், இந்தக் காட்சி. அடுத்த கனத்தில், "ஐயையோ! இது என்னடா இது! சேரிப் பொம்பிளைகள் போலிருக்கே!" என்று முத்துசாமி அய்யர் ஒரு கூச்சல் போட்டார்.
"அட கிரகசாரமே! இது என்ன கூத்து?" என்று சாமா அய்யர் அலறிப் புடைத்துக் கொண்டு எழுந்திருந்தார்.
"ஓகோகோ! கலி முத்திப் போச்சு!" என்றார் ராமய்யா வாத்தியார்.
நாணு கனபாடிகள் வாயிலிருந்த சுண்டலை விழுங்கிக் கொண்டே, "விழட்டு! விழட்டு! எல்லாழுமா உக்காந்திழுக்கயளே!" என்று கூவினார்.
ஐந்தாறுபேர் எழுந்திருந்து, கையை ஓங்கியவண்ணம் வாசற்படியை நோக்கிச் சென்றார்கள். அவர்களுக்கெல்லாம் முன்னால், கையில் விசிறிக் கட்டையுடன் தீக்ஷிதர் சென்றார்.
"அபஸ்மாரங்களா!"
"மூதேவிகளா!"
"இங்கே எங்கே வந்தயள்?"
"அவ்வளவு தைரியங் கொடுத்துப் போச்சா?"
"போ! போ! போ!"
"பீடை! தரித்திரம்!"
இப்படி இவர்கள் விரட்டி அடிக்க, அந்தப் பெண் பிள்ளைகள் தங்களுடைய குழந்தை குட்டிகளைக் கையினால் வளைத்துப் பின்னால் தள்ளிய வண்ணம் தாங்களும் பின்னால் போய்க் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய முகத்தில் ஏக்கமும் பீதியும் குடிகொண்டிருந்தன. அவர்களில் ஒரு ஸ்திரீ சற்றுத் துணிச்சலாக நின்று, "சாமி! கோவிச்சுக்காதிங்க. தெரியாம வந்துட்டோ ங்க!" என்றாள்.
"தெரியாத வந்துட்டீங்களா? திமிரைப் பார்த்தயோல்லியோ திமிரை! அக்கிரகாரத்துக்குள் வரக்கூடாதுன்னு தெரியாதா?
"இல்லேங்க! பட்டிக்கார ஐயா, பஜனை மடத்துக்குப் போன்னு சொன்னாங்க. அதைக் கேட்டு வந்துட்டோங்க."
"என்ன! பட்டிக்காரன் சொன்னானா? அவன் தான் இந்த சாஸ்திரி இடங் கொடுத்துக் கொடுத்துத் திமிர் பிடிச்சுக் கிடக்கானே? அவன் சொன்னா, நீங்க வந்துடறதோ?"
"அவ்வளவு துணிச்சலா உங்களுக்கு வந்துடுத்து?"
"நாளைக்கே சேரியிலே நெருப்பை வச்சுக் கொளுத்தச் சொல்றேன் பாரு!"
"சாமி, சேரியிலே நெருப்பு வைக்கிறதுக்கு ஒண்ணுமில்லிங்க; எல்லாம் வெள்ளம் அடிச்சுட்டுப் போயிட்டுதுங்க!"
"போயிடுத்தா? போயிடுதோல்லியோ? நீங்கள்ளாம் இப்படித் திமிர்புடிச்சு அலைஞ்சாக்கே, ஸ்வாமியே பார்த்துத் தண்டிச்சுடறார்."
இதற்குள்ளாக, அந்த ஸ்திரீகள், குழந்தைகள் எல்லாரும் மறுபடியும் வாசற்படியைத் தாண்டி மடத்துக்கு வெளியே கொட்டுகிற மழையில் சென்றார்கள்.
மேற்சொன்னதவ்வளவும் இரண்டு நிமிஷ நேரத்திற்குள் நடந்தது. சேரி ஜனங்கள் உள்ளே வந்தபோது, சம்பு சாஸ்திரி தம்புராவை எடுத்து அதனுடைய உறையில் போட்டுக் கொண்டிருந்தார். சாவித்திரி, பூஜை சாமான்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். இரண்டு பேரும் அப்படியே பிரமித்து நின்று, நடந்ததையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். கடைசியில் நடந்த சம்பாஷணை அரை குறையாக அவர்கள் காதில் விழுந்தது.
சேரி ஜனங்கள் மறுபடி வெளியில் போனதும், சாஸ்திரி, சாவித்திரியைப் பார்த்து, "குழந்தை! சேரியிலே ஏதோ ஆபத்துபோல் இருக்கிறது. இல்லாவிட்டால் இவர்கள் இப்படி வந்திருக்க மாட்டார்கள். நாம் போய் விசாரிக்கலாம், வா!" என்றார்.
அவர்களை வெளியிலே விரட்டிவிட்டுத் திரும்பி வந்தவர்கள் சாஸ்திரியைச் சூழ்ந்து கொண்டார்கள்.
"ஓய் சாம்பு சாஸ்திரி! பார்த்தீரோல்லியோ; எல்லாம் உம்மால் வர்றதுதான் காணும்" என்றார் தீக்ஷிதர்.
"அதிலே என்ன சந்தேகம்? இந்த மனுஷன் இடங்கொடுத்துக் கொடுத்துத்தான் ஊரே இப்படி கெட்டுப் போச்சு!" என்றார் முத்துசாமி அய்யர்.
"ஓய்! உம்ம பட்டிக்காரன் தான் இங்கே வரச் சொன்னானாங்காணும் அந்தப் பயலை ஒழிச்சுட்டு மறுகாரியம் பாரும்னா, நீர் கேக்கறீரா? அவனைத்தான் தலைமேலே தூக்கி வச்சுக்கிறீரே?" என்றார் சாமா அய்யர்.
"உம்ம பஜனையிலே இடி விழ!" என்று தீக்ஷிதர் முத்தாய்ப்பு வைத்தார்.
சாஸ்திரிகள் சாவதானமாக, "என்மேலே என்னத்துக்குக் கோவிச்சுக்கறயள்? நல்லானும் அப்படியெல்லாம் தப்புத்தண்டாவா ஒரு காரியம் செய்றவனில்லை. என்ன ஆபத்தோ, என்னமோ; நான் போய் விசாரிக்கிறேன். நீங்கள்ளாம் அவாவா ஆத்துக்குப் போய்ப் பேசாம தூங்குங்கோ! போது விடிஞ்சாப் பாத்துக்கலாம்!" என்றார். பிறகு சாஸ்திரியும், சாவித்திரியும் பஜனை மடத்தை விட்டு வெளியில் சென்றார்கள்.
அன்றிரவு சுமார் நடுநிசிக்கு, சம்பு சாஸ்திரியாரின் மாட்டுக் கொட்டகையில் ஒரே கலகலப்பாயிருந்தது. அந்தக் கொட்டகை நாலு பக்கமும் தாழ்வாரமும், நடுவில் பெரிய முற்றமுமாக அமைந்தது. ஒரு தாழ்வாரத்தில் நெல் குதிர்கள் வைத்திருந்தன. மற்ற மூன்று தாழ்வாரங்களில் எப்போதும் மாடு கட்டியிருப்பது வழக்கம். இன்று மேலண்டைத் தாழ்வாரத்திலேயே கொண்டு வந்து நெருக்கியடித்துக் கட்டியிருந்தார்கள். மாடுகளுக்கும் பாஷை உண்டு, அவை ஒன்றோடுடொன்று பேசிக்கொள்ளும் என்று சொல்வது உண்மையானால், சம்பு சாஸ்திரியாரின் மாடுகள் அப்போது பின்வருமாறுதான் பேசிக் கொண்டிருந்திருக்க வேண்டும்.
"ஹம்மா! இந்த மனுஷப் பிராணிகளைப் போலச் சுயநலம் பிடித்த பிராணிகளை நான் பார்த்ததேயில்லை."
"ஏற்கெனவே மழையிலும் குளிரிலும் அவஸ்தைப்படுகிறோம். பாதி நிசிக்கு வந்து நம்மைத் தூக்கத்திலிருந்து எழுப்பித் தொந்தரவு செய்கிறார்களே?"
"முற்றத்தின் வழியாக வந்தபோது மேலே மழை பெய்ததில் சொட்ட நனைந்து போனேன்."
"உனக்கென்ன கேடு! என் குழந்தைக்கு உடம்பு குளிரினால் நடுங்குகிறது, பார்!"
"உங்கள் கஷ்டத்தையே நீங்கள் சொல்கிறீர்களே தவிர, அந்த மனுஷர்களின் அவஸ்தையைப் பார்க்கவில்லை. முற்றத்தில் சற்று நனைந்ததற்கு இப்படிப் புகார் செய்கிறீர்களே? இவர்கள் ஆற்றங்கரை மேட்டிலிருந்து நனைந்து கொண்டே வந்திருக்கிறார்களே?"
"ஹாமாம்! இவர்கள் எதற்காக அங்கிருந்து ஓடி வந்திருக்கிறார்கள்?"
"இது தெரியாதா? இவர்கள் இருந்த கூரைக் குச்செல்லாம் மழையிலே விழுந்திருக்கும். நம்மைப் போல இந்த ஜனங்களுக்கு ஓடு போட்ட வீடு இருக்கிறதா, என்ன?"
"அதற்காக, பிச்சைக்காரன் குடிசையிலே சனீசுவரன் புகுந்தாற் போல், இவர்கள் நம்முடைய இடத்தைப் பங்கு போட்டுக் கொள்ள வந்து விட்டார்களாக்கும்?"
"காலையிலே எஜமான் வரட்டும். அவரிடம் நான் புகார் சொல்கிறேனா இல்லையா, பார்!"
"இவர்களாக ஒன்றும் வந்திருக்க மாட்டார்கள். எஜமான் சொல்லித்தான் வந்திருப்பார்கள்."
"போகட்டும்; இவர்கள் வந்ததுதான் வந்தார்கள். நம்முடைய இடத்தையும் பிடுங்கிக் கொண்டார்கள். எதற்காக இப்படிக் கூச்சல் போடுகிறார்கள்? இரையாமலிருந்து தொலைந்தால் நாம் தூங்கலாமல்லவா?"
"ஹொஹ்ஹோ! உனக்கு அது தெரியாதா? மனுஷ ஜாதியினிடத்தில் அதுதான் பெரிய குறை. அவர்களுக்குச் சத்தம் போடாமல் பேசவே தெரியாது. அவர்கள் மேல் குற்றம் இல்லை. சுவாமி அப்படி அவர்களைப் படைத்துவிட்டார்!"
மேற்கண்டவாறு மாடுகள் நிஜமாகவே பேசிக் கொண்டனவா என்று நமக்குத் தெரியாது. ஆனால் அப்போது உண்மையில் கீழண்டைத் தாழ்வாரத்தில் மட்டும் கூச்சல் பலமாகத்தான் இருந்தது. சேரி ஜனங்கள், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் - அவ்வளவு பேரும் அங்கே இருந்தார்கள். சிலர் துணிகளை உலர்த்திக் கொண்டிருந்தார்கள். சிலர் பசியினால் கத்திய குழந்தைகளைச் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.
பட்டிக்கார நல்லானும் அங்கே காணப்பட்டான். அவன் ஒரு குதிரின் இடுக்கிலிருந்து பெரிய சாக்குச் சுருள் ஒன்றை எடுத்துக் கொண்டு வந்து, "ஏ பிள்ளைகளா! கொழந்தைகளைக் கொன்னுடாதீங்க. தலைக்கு ஒரு சாக்கை விரிச்சுப் போடுங்க!" என்றான்.
அந்தச் சமயத்தில், மாட்டுக் கொட்டகையின் வாசற் கதவு திறந்தது. சம்பு சாஸ்திரியும் சாவித்திரியும், கையில் ஹரிகேன் லாந்தருடனும் பீத்தல் குடையுடனும் உள்ளே பிரவேசித்தார்கள். அவர்களைக் கண்டதும் மாடு கன்றுகள் எல்லாம், "ஹம்மா! ஹம்மா!" என்று கத்தின. அவர்களை வரவேற்பதற்காகத்தான் அப்படிக் கத்தினவா அல்லது தங்களைத் தொந்தரவுபடுத்தியது பற்றி எஜமானனிடம் புகார் சொல்லிக் கொண்டனவா என்று நமக்குத் தெரியாது.
அதே சமயத்தில், கீழண்டைத் தாழ்வாரத்திலும் கலகலப்பு ஏற்பட்டது. "சாமி! சாமி! நீங்க மவராசரா இருக்கணும். இந்த மழையிலும் குளிர்லேயும் தங்க இடங் கொடுத்தீங்களே? இல்லாட்டா, எங்க கதி என்ன ஆயிருக்கும்? பிள்ளை குட்டிங்கள்ளாம் செத்துப் போயிருக்குமே?" என்று தலையாரி வீரன் சொன்னான். "சாமி! நீங்க நல்லாயிருக்கணும்!" என்று பல குரல்கள் ஏக காலத்தில் கூவின. சிலர் தரையில் விழுந்து நமஸ்காரம் செய்தார்கள்.
பட்டிக்காரன் நல்லான், "இந்தக் கழுதைகளுக்கு இடங் கொடுத்ததே பிசகுங்க. இப்பக்கூட விரட்டியடிச்சுடலாமான்னு தோணுது. 'பஜனை மடத்திலே சாஸ்திரி அய்யா இருப்பாரு, போய்க் காலிலே விழுங்க'ன்னு நான் சொன்னா, இதுங்க பஜனை மடத்துக்குள்ளேயே பூந்துட்டுதுங்களே! பெரிய எழவால்ல போச்சு!" என்றான்.
"நீ பின்னோட வந்திருக்க வேணும், நல்லான். பொம்பிளைகள் என்னத்தைக் கண்டார்கள்? அதிலும் இந்த மழையிலும் காத்திலும்? பாவம், ஒண்ணுமே தெரியாமே திகைச்சுப் போய் நின்றார்கள். அப்புறந்தான் எனக்கு இந்த யோசனை தோணித்து. ராத்திரி மாட்டுக் கொட்டாயிலே யிருந்தால், பொழுது விடிஞ்சு பாத்துக்கலாம் என்று..."
"இதுக்குக் கூட நம்ம அக்கிரகாரத்து ஐயாமாரெல்லாம் நாளைக்கு என்ன சொல்லப் போறாங்களோ?"
"ஒண்ணும் சொல்ல மாட்டார்கள், நல்லான்! ஆபத்துக்குத் தோஷமில்லைன்னு அவாளுக்குத் தெரியாதா? இல்லாட்டா, நடு ராத்திரியிலே இந்த ஜனங்கள் குழந்தைகளையும் குட்டிகளையும் வைத்துக் கொண்டு என்ன பண்ணுவார்கள்?"
இந்தச் சமயத்தில், குழந்தை ஒன்று 'வீல்' என்று கத்துகிற சத்தம் கேட்டது.
"ஏ காத்தாயி! ஏன் பிள்ளையைப் போட்டு அடிக்கிறே!" என்றான் நல்லான்.
"பின்னே என்னாங்க! உயிர் பிழைச்சதே புண்ணியம் இப்போ, வவுத்தைப் பசிக்குதுன்னா, நான் என்ன செய்றது?" என்றாள் காத்தாயி.
இதைக் கேட்ட சாவித்திரி, "அப்பா! நான் ஆத்துக்குப் போய் அவல் இடிச்சிருக்கே, அதிலே கொஞ்சம் எடுத்துண்டு வரட்டுமா? குழந்தைகள் பசி, பசின்னு கத்தறது பரிதாபமாயிருக்கே!" என்றாள்.
"சித்திக்குத் தெரிஞ்சால், 'லொள்ளு'ன்னு விழுவாளே, அம்மா! இருந்தாலும் பாதகமில்லை. போய்க் கொண்டு வா! ஜாக்கிரதையாய் சேத்திலே கீத்திலே விழுந்துடாமே வா!" என்றார்.
அப்போது பட்டிக்காரன் நல்லான், "நாளைக்கு இத்தனைக்கித்தனை ஊரிலே வம்பும் தும்பும் வந்து சேரப் போகிறது" என்று முணுமுணுத்துக் கொண்டான்.
நல்லான் எதிர்பார்த்தது வீண் போகவில்லை. மறுநாள் காலையில் சுமார் பத்து மணிக்கு, கொஞ்சம் தூற்றல் நின்று வானம் வெளி வாங்கியிருந்த போது வம்பும் தும்பும் கும்பலாகச் சேர்ந்து சம்பு சாஸ்திரியின் வீட்டு வாசலைத் தேடிக் கொண்டு வந்தன. சங்கர நாராயண தீக்ஷிதரை முன்னிட்டுக்கொண்டு, முத்துசாமி அய்யர், சாமாவய்யர், ரமணி அய்யர், பஞ்சவய்யர், ராமய்யா வாத்தியார், பென்ஷன் ஸப் ரிஜிஸ்ட்ரார் சினிவாச அய்யங்கார், பஞ்சாங்கம் பசுபதி ஜோசியர், குமாரசாமி குருக்கள், நாராயண கனபாடிகள், அர்ச்சகர் வரதய்யங்கார் எல்லாரும் வந்து சேர்ந்தார்கள்.
அப்போது வாசலில் நின்ற செவிட்டு வைத்தியைப் பார்த்து, தீக்ஷிதர், "அடே! உன் அத்திம்பேரைக் கூப்பிடு!" என்று வாயாலும் கத்தி, கையாலும் ஜாடை காட்டினார். செவிட்டு வைத்தி, அவ்வளவு பேரும் கும்பலாய் வருவதைப் பார்த்து ஏற்கெனவே மிரண்டு போயிருந்தான். இப்போது, நெஞ்சு படக் படக்கென்று அடித்துக் கொள்ள உள்ளே சென்று, பூஜை அறையில் இருந்த சாஸ்திரியிடம், "எல்லாரும் வந்திருக்கா; உங்களைக் கூப்பிடறா!" என்றான். பிறகு, சமையலறைப் பக்கம் சென்று, "அக்கா! அக்கா! ஊரிலே எல்லாருமாகச் சேர்ந்து அத்திம்பேரை அடிக்க வரா! நாம் இங்கே இருக்க வேண்டாம், ஊருக்குப் போய்விடுவோம், வா!" என்றான். ஆனால் மங்களம் அப்போது கொல்லையில் குளித்துக் கொண்டிருந்தபடியால், அவள் காதில் அவன் சொன்னது விழவில்லை. அதற்குப் பதிலாக அம்மியில் ஏதோ அரைத்துக் கொண்டிருந்த சாவித்திரியின் காதில் விழுந்தது. அவள் உடனே எழுந்து பரபரப்புடன் கையை அலம்பினாள்.
இதற்குள் சாஸ்திரி வாசற்பக்கம் வந்து, கும்பலாக வந்திருப்பவர்களைப் பார்த்து, "என்ன விசேஷம்? எல்லாருமா வந்திருக்கயளே! பூஜை பண்ணுகிறதற்கு உட்கார்ந்தேன்" என்றார்.
"உம்ம பூஜையைக் கொண்டு போய்க் குடமுருட்டி உடைப்பிலே போடுங்காணும்; உமக்குப் பூஜை வேறே வேண்டியிருக்கா, பூஜை!" என்றார் தீக்ஷிதர்.
"என்ன தீக்ஷிதர்வாள், கோவிச்சுக்கறயளே? நான் என்ன தப்பு செய்துட்டேன், தெரியலையே?"
"என்ன தப்பு செய்துட்டீரா? நீர் ஒரு தப்பும் செய்யலைங்காணும்! தப்பு எங்க பேரிலேதான்!" என்றார் சாமாவய்யர்.
"அவ்வளவு நெஞ்சு ஆண்மையாங்காணும் உமக்கு? அந்த நெஞ்சிலே உப்பை வச்சு நெரடினா என்னன்னு கேக்கறேன்?" என்றார் முத்துசாமி அய்யர்.
"இதென்ன பாவமான்னா இருக்கு!" என்றார் சாஸ்திரி.
"ஆமாம், பாவந்தான்! பாவத்தையும் புண்ணியத்தையும் ரொம்பக் கண்டவரோல்லியோ, நீர்?"
சம்பு சாஸ்திரி வாயை மூடிக்கொண்டு மௌனமாயிருந்தார்.
"என்னங்காணும் ஊமைக் கோட்டான் மாதிரி சும்மா இருக்கீர்? சொல்லுமேங்காணும்?"
"என்ன சொல்லச் சொல்றயள்; அதுதான் தெரியலை?"
"தெரியலையா? உமக்கு ஏன் தெரியப் போறது? பாவம்! பச்சைக் குழந்தை! வாயிலே விரலை வைச்சாக் கடிக்கக் கூடத் தெரியாது."
"போருங்காணும், வேஷம்! பதில் சொல்லுங்காணும்! தீண்டாதவங்களை எப்படிங்காணும் அக்கிரகாரத்திற்குள் விட்டீர்?"
"நீர் பிராம்மணனாங்காணும்? பூணலை அறுத்து எரியுங்காணும்!"
"இந்த மாதிரி கர்ம சண்டாளன்கள் உலகத்திலே இருக்கிறதனால் தானே மழை பெய்யமாட்டேங்கறது!"
"அப்படிப் பெய்தாலும் ஒரேயடியாக கொட்டி வெள்ளமாய் அடிச்சுடறது!"
"கனபாடிகளே! கொஞ்சங் கோவிச்சுக்காமே கேளுங்கோ. ஆபத்துக்குத் தோஷமில்லைன்னு பெரியவாள் சொல்லியிருக்கா..."
"ஆபத்துக்குத் தோஷமில்லையா? ஆமாம், யாருக்கு ஆபத்து வந்தா தோஷமில்லை? நமக்கு ஆபத்து வந்தா, தோஷமில்லை. இந்த நீசன்களுக்கு ஆபத்து வந்தா, நமக்கென்னன்னு கேக்கறேன்."
"அப்படியே அவன்களுக்கு ஆபத்து வந்தது. ஒத்தாசை செய்யணும்னா, அதுக்கோசரம், அவன்களை அக்கிரகாரத்துக்குள்ளே விட்டுடறதா?"
"செய்றதையும் செய்துட்டு சாஸ்திரம் பேசறதைப் பார்ரா!"
"தான் கெட்டதுமல்லாமல் சந்திர புஷ்கரணியையும் சேர்த்துக் கெடுத்து விட்டீரே, ஓய்! இப்போ அக்கிரகாரத்திலே எல்லாரும்னா பிராயச் சித்தம் பண்ணிக்க வேண்டியிருக்கு?"
"கோவிலுக்குப் புண்யாவாசனம் பண்ணணும், இல்லாட்டா பூஜை பண்ணமாட்டேன் என்கிறாரே, குருக்கள்?"
"இது எல்லாத்துக்கும் யார் பணம் அழறதுன்னு கேக்கறேன்!"
"தயவு செய்து நான் சொல்றதைக் கொஞ்சம் கேளுங்கோ! என் மனசாட்சிக்குச் சம்மதமா, நான் ஒன்றும் தப்புப் பண்ணலை. அப்படி நீங்கள் நினைக்கிற பட்சத்தில்..."
"அடேயப்பா! பெரிய மனச்சாட்சிடா இவருக்கு!"
"அப்படித்தான் உம்ம மனச்சாட்சி பாதி ராத்திரிலே வந்து, நீசன்களையெல்லாம் அக்கிரகாரத்துக்குள்ளே விடலாம்னு சொல்லித்தே; நாங்க இவ்வளவு பேரும் உயிரோடே தானே இருந்தோம்? எங்களை ஒரு வார்த்தை கேட்டீராங்காணும்?"
"ஏற்கனவே சேரி தலைகீழா நிக்கறது. இனிமே எங்களை ஒரு பயல் மதிப்பானா? எங்க பேச்சைத்தான் யாராவது கேப்பானா?"
சம்பு சாஸ்திரி இதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் சும்மா நிற்க, தீக்ஷிதர், கையை ஓங்கிய வண்ணம், "முழிக்கிறதைப் பார்ரா முழிக்கிறதை!" என்றார்.
இதுவரை ரேழிக் கதவண்டை நின்று கேட்டுக் கொண்டிருந்த சாவித்திரி அப்போது குறுக்கே வந்து, "என்ன மாமா, கையை ஓங்கறயள்? எங்க அப்பாவை அடிச்சுடுவேள் போலிருக்கே?" என்று ஆத்திரமாய்க் கேட்டாள்.
தீக்ஷிதர், "ஆமாண்டி அடிக்கத்தான் போறேன்! நீ யாரடி கேக்கறது?" என்று மறுபடியும் கையை ஓங்கினார்.
"ரொம்பத் திமிர் புடிச்ச குட்டிங்காணும். முதுகிலே வையுங்காணும் இரண்டு!" என்று முத்துசாமி அய்யரும் கையை ஓங்கிக் கொண்டு வந்தார்.
சம்பு சாஸ்திரி சாவித்திரியைச் சட்டென்று அணைத்துக் கொண்டார். அதே சமயத்தில், பின்னால், ஒரு பெரிய கனைப்புச் சத்தமும், தடியை ஓங்கித் தரையில் குத்துகிற சத்தமும் கேட்டது. எல்லாரும் திரும்பிப் பார்த்தார்கள். வாசலில் சற்றுத் தூரத்தில் பட்டிக்காரன் நல்லான் வந்து ஒரு பெரிய தடியை ஊன்றிக் கொண்டு நிற்பது தெரிந்தது.
"ஓஹோஹோ! இந்தச் சிப்பாய் தடியைத் தூக்கிண்டு வந்துட்டானா? நம்மையெல்லாம் அடிச்சாலும் அடிச்சுடுவான்" என்றார் சாமாவய்யர்.
"ஏன் அடிக்க மாட்டான்? பேஷாய் அடிப்பான்! இந்தப் பதிதனுடைய வீட்டு வாசல்லே வந்து நாம் நிக்கறோமோல்லியோ?"
"வாங்கய்யா, போகலாம்!"
"கிளம்புங்கோ!"
"ஏன் இன்னும் நிற்கறயள்? வாங்கோ!"
எல்லாரும் திரும்பிப் போக ஆரம்பித்தார்கள். ஆனால், பத்து அடி போனதும், முத்துசாமி அய்யர் மறுபடி நின்று திரும்பிப் பார்த்து, "இவன் அப்பன் திவசத்துக்கு இவனை நான் திண்டாட விடாட்டா, நான் போட்டிருக்கிறது பூணூல் இல்லை" என்றார்.
"அதோடே விடக்கூடாதுங்காணும். அந்தக் கல்கத்தாக்காரன் கிட்டச் சொல்லி, இந்தக் குட்டியைத் தள்ளி வைக்கப் பண்ணி வாழாவெட்டியா அடிக்கிறேனா இல்லையா, பாரும்!" என்றார் தீக்ஷிதர்.
"அவன் பேரிலே என்னடா தப்பு? நாம் தானேடா இடங்கொடுத்துக் கொடுத்துக் கெடுத்துவிட்டோ ம்? மாமாங்கத்துக்குப் போய்ட்டு வந்து, மீனா செத்துப் போய்ட்டாள்னு ஒரே புளுகாப் புளுகினானே, அப்பவே இவனை சாதிப் பிரஷ்டம் பண்ணியிருக்கணும்."
"அப்படிச் செய்திருந்தா, இவன் பொண்ணுக்குக் கல்யாணமே ஆகாமே, திண்டாடியிருப்பான்."
சம்பு சாஸ்திரியின் காதில் இதெல்லாம் விழுந்தது. அவர் நல்லானைப் பார்த்து, "நல்லான்! நீ என்னத்துக்கு இப்போது இங்கே வந்தே? போ, வேலையைப் பாரு!" என்று சொல்லிவிட்டு, உள்ளே பூஜை அறைக்குள் சென்றார். அம்பிகையின் விக்கிரகத்தின் முன்னால் உட்கார்ந்து, 'அம்பிகை! தாயே! என் அருமை மீனாவை நான் மறக்க முயன்றாலும், இவர்கள் மறக்க விட மாட்டேனென்கிறார்களே!' என்று எண்ணிக் கண்ணீர் விடுத்தார்.
அவரைப் பின் தொடர்ந்து சென்ற சாவித்திரி, 'ஸ்வாமி! பகவானே! தீபாவளிக்கு இவர் வரப்போற சமயத்திலேதானா, இந்தச் சங்கடமெல்லாம் வர வேணும்?' என்று எண்ணி ஏங்கினாள். அவளுடைய கண்களிலும் ஜலம் ததும்பிற்று.
நெடுங்கரையில் சாவித்திரி, 'தீபாவளி சமயத்தில் தானா இப்படியெல்லாம் வரவேணும்?' என்று சங்கடப்பட்டுக் கொண்டிருக்கையில், கல்கத்தாவில் ஸ்ரீதரனும் தீபாவளியை நினைத்துப் பெரிதும் சங்கடப்பட்டுக் கொண்டிருந்தான்.
கல்யாணம் ஆன இரண்டு மாதத்துக்கெல்லாம் ஸ்ரீதரனுக்குக் கல்கத்தாவில் பெரிய உத்தியோகம் ஆனபோது, தன்னுடைய அபாரமான புத்திசாலித்தனத்துக்காகத்தான் மேற்படி வேலை தனக்குக் கிடைத்தது என்று அவன் நினைத்தான்.
சாவித்திரியைக் கல்யாணம் பண்ணின முகூர்த்தந்தான் ஸ்ரீதரனுக்கு வேலை கிடைத்தது என்றும், அவளுடைய அதிர்ஷ்டந்தான் காரணமென்றும் தங்கம்மாள் சொன்னாள்.
ராஜாராமய்யர் ஒன்றும் நினைக்கவும் இல்லை, சொல்லவும் இல்லை. ஏனெனில், உத்தியோகம் எப்படிக் கிடைத்ததென்பது அவருக்கு நன்றாய்த் தெரியும். கல்கத்தாவில் ராஜாராமய்யர் உத்தியோகம் பார்த்தபோது அவருக்கு மேலதிகாரியாயிருந்த ஆங்கில துரை அவரிடம் மிகவும் விசுவாசம் வைத்திருந்தார். ஆனால், அவருடைய மனோதத்துவ சோதனைகள், ஆவி உலக ஆராய்ச்சிகள் இவற்றைப் பரிகாசம் செய்து வந்தார். ராஜாராமய்யர் உத்தியோகத்திலிருந்து விலகி ஊருக்கு வந்த பிறகு, மேற்படி துரையின் அருமை மனைவி இறந்து போனாள். இதன் காரணமாக, துரைக்கும் ஆவி உலக ஆராய்ச்சிகளில் சிரத்தை உண்டாயிற்று. ஒரு வேளை ராஜாராமய்யரின் நம்பிக்கையில் உண்மையிருக்குமோ, சாத்தியமாயிருக்குமோ என்றெல்லாம் அவருக்குச் சபலம் உண்டாயிற்று. ராஜாராமய்யருடன் கடிதப் போக்குவரவு தொடங்கினார். பிறகு, ராஜாராமய்யர் கல்கத்தாவுக்கே வந்துவிட்டால் தான் அந்த ஆராய்ச்சிகளை நன்கு நடத்த முடியுமென்று தோன்றியது. எனவே, ராஜாராமய்யரைக் கல்கத்தாவுக்கு வரப் பண்ணுவதற்காக, துரை அவருடைய பிள்ளை ஸ்ரீதரனுக்கு கே அண்டு ஓ பாங்க் என்னும் பிரசித்திபெற்ற இங்கிலீஷ் பாங்கின் கல்கத்தா கிளை ஆபீஸில் உதவி மானேஜர் வேலை செய்து வைத்தார்.
ஆகவே, ஆனி மாதத்திலேயே ராஜாராமய்யருடைய குடும்பம் கல்கத்தாவுக்குப் போக வேண்டியதாயிற்று. கல்கத்தாவில் தென்னிந்தியர் வசித்த பகுதியில் ஒரு தனி வீடு எடுத்துக் கொண்டு குடித்தனம் தொடங்கினார்கள். ஸ்ரீதரன் அப்படி ஒன்றும் அசடு இல்லையாதலால், உத்தியோகத்தைத் திறமையாகப் பார்த்து, துரைக்குத் திருப்தியளித்து வந்தான்.
தங்கம்மாளுக்கு மட்டும் ஒரு மனக்குறை இருந்து கொண்டுதான் இருந்தது. ஆடி, ஆறாம் மாதம், ஆவணியவிட்டம் இவற்றுக்கெல்லாம் நெடுங்கரைக்குப் போய் அதிகாரம் பண்ணிச் சீர்செனத்தி கொண்டு வரவில்லையே யென்பது தான் அந்தக் குறை. ஆனால், எல்லாவற்றுக்கும் சேர்த்து வைத்து, தலை தீபாவளிக்குப் போய்க் கொண்டு வந்துவிடலாமென்று அவள் ஆசைப்பட்டுக் கொண்டிருந்தாள். தீபாவளிக்கு ஒரு மாதத்துக்கு முன்னாலிருந்தே பிள்ளைக்கு அவள் உரையேற்ற ஆரம்பித்து விட்டாள்.
ஸ்ரீதரனுக்கோ இது கொஞ்சங்கூட இஷ்டமில்லை. ஏற்கனவே, அவனுக்கு இந்தக் கல்யாணம் பிடிக்கவில்லை; சாவித்திரியை நினைத்தால் அவனுக்கு அருவருப்பாயிருந்தது; நெடுங்கரையையும், சம்பு சாஸ்திரியையும் எண்ணினால் அவனுடைய உடல் குன்றியது. இவ்வளவுடன் இப்போது ஒரு புதிய காரணமும் சேர்ந்திருந்தது.
ஸ்ரீதரன் உத்தியோகம் பார்த்த பாங்கில் டைப் அடிக்கும் வேலைக்கு ஆங்கிலோ-இந்தியப் பெண்கள் அமர்த்தப்பட்டிருந்தார்கள். ஸ்ரீதரன் வேலைக்குப் போன அன்று, அவர்களில் ஒருத்தி அவனுடைய அறைக்குள் வந்தாள். "ஆர் யூ மிஸ்டர் ஸ்ரீதர்?" என்று கேட்டாள். அந்தக் குரல் ஸ்ரீதரனுக்கு தேவகானம் போல் இருந்தது. கண்கொட்டாமல் அவளைப் பார்த்தபடி, ஆம் என்பதற்கு அறிகுறியாகத் தலையை அசைத்தான் ஸ்ரீதரன். "வாட் எ லவ்லி நேம்!" என்றாள் அந்தப் பெண். ஸ்ரீதரனுக்கு அப்போது தன் பெற்றோர்கள் மீது மிகவும் நன்றி உண்டாயிற்று. தனக்கு எத்தனையோ விதத்தில் அவர்கள் கெடுதல் செய்திருந்தாலும், இவ்வளவு அழகான பெயரைக் கொடுத்தார்களே என்று எண்ணினான். பிறகு, அந்தப் பெண், ஸ்ரீதரனுடைய கடிதங்களை டைப் அடிப்பதற்குத் தன்னை நியமித்திருப்பதாகவும், அவன் கூப்பிடும்போது வருவதாகவும் சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.
இதுவரையில் தான் கனவு கண்டு கொண்டிருந்த கந்தர்வப் பெண் இவள் தான் என்று ஸ்ரீதரன் அந்த நிமிஷமே தீர்மானித்துவிட்டேன். நாளுக்கு நாள் அவனுக்குப் பித்தம் தலைக்கேறிக் கொண்டிருந்தது. ஒரு நாள் சாயங்காலம் ஸ்ரீதரன் ஆபீஸை விட்டுக் கிளம்பிய நேரமும் மிஸ் ஸுஸி கிளம்பிய நேரமும் சரியாயிருந்தது. அப்போது ஸ்ரீதரன் ஆபீஸுக்குப் போய் வருவதற்கு மோட்டார் சைக்கிள் வைத்திருந்தான். அவன் சைக்கிளில் ஏறி உட்கார்ந்துகொண்டு, ஸுஸிக்குப் பின் ஸீட்டில் உட்கார்ந்து வரத் தைரியமிருந்தால், அவளுடைய ஜாகையில் கொண்டு போய் விடுவதாய் விளையாட்டாகச் சொன்னான். அந்தப் பெண் மிகவும் துணிச்சல் உள்ளவள். அவன் சொல்லி வாய் மூடிவதற்கு முன்னால் பின் ஸீட்டில் ஏறி உட்கார்ந்து விட்டாள். அதிகம் வளர்த்துவானேன்! அது முதல், ஸ்ரீதரனும் அந்த ஆங்கிலோ-இந்தியப் பெண்ணும் 'ஓருயிரும் ஈருடலும்' என்பார்களே, அந்த மாதிரி ஆகிவிட்டார்கள்.
இந்த நிலைமையில், தங்கம்மாள் தலை தீபாவளிப் பேச்சை எடுத்ததிலிருந்து ஸ்ரீதரனுக்கு அடிக்கடி மனச்சோர்வு உண்டாயிற்று. கோபம் கோபமாய் வந்தது. அந்தப் பாழும் கல்யாணம் மட்டும் ஆகாதிருந்தால் இப்போது எவ்வளவு சௌகரியமாயிருக்கும்! தன்னுடைய சந்தோஷத்துக்கு ஓர் எல்லையே யிராதல்லவா! ஸ்ரீதரனுடைய மனோ சஞ்சலத்தைக் கண்ட மிஸ் ஸுஸி, "என்ன சமாசாரம்?" என்று அவனை அடிக்கடி வற்புறுத்திக் கேட்டாள்.
ஸ்ரீதரன் அப்போது உண்மையைச் சொன்னான். தன்னுடைய கல்யாண விஷயத்தை அவளிடம் சொல்லிவிட வேண்டுமென்ற எண்ணம் அவனுக்கு முன்பே இருந்தது. அதை மறைத்து வைப்பதால் பின்னால் சங்கடம் ஏற்படும் என்று அவன் எண்ணினான். இந்த மாதிரி விளைந்த சங்கடங்களைப்பற்றி அவன் நாவல்களிலும், கோர்ட் விவரங்களிலும் படித்திருந்தான். ஆகவே இதுதான் தக்க சமயம் என்று தீர்மானித்து, தன் பெற்றோர்களுடைய வற்புறுத்தலினால் தான் கல்யாணம் செய்து கொள்ள நேர்ந்ததையும், ஆனால், அந்தப் பீடையின் முகத்தில் விழிக்கவே தனக்கு விருப்பமில்லையென்பதையும், இப்போது தலை தீபாவளிக்குப் போக வேண்டுமென்று தாயார் தொந்தரவு செய்து கொண்டிருப்பதையும் கூறினான். இடையிடையே, ஹிந்துக்களுக்குள் கல்யாண விஷயத்தில் அநுசரிக்கப்படும் முறை எவ்வளவு அநாகரிகமானது என்பதைப்பற்றித் தன்னுடைய சொந்த அபிப்பிராயத்தையும் காரமான மொழிகளில் தெரிவித்து வந்தான்.
இப்படியெல்லாம் உண்மையைச் சொல்லி அந்தப் பெண்ணின் அநுதாபத்தைப் பெறலாமென்று ஸ்ரீதரன் எதிர்பார்த்தான். ஆனால், அந்த அநுதாபத்தை உடனே அவன் பெறவில்லை. பிறகு இரண்டு மூன்று நாளைக்கு அந்தப் பெண் அவனுடன் பேசவும் இல்லை; அவன் முகத்தை ஏறெடுத்துப் பார்க்கவுமில்லை. இதனால் ஸ்ரீதரன் வெறி கொண்டவன் போல் இருந்த நிலைமையில், அவளாக அவனைத் தேடிக்கொண்டு வந்து சமாதானப் படுத்தினாள். அவன் தன்னை ஏமாற்றியதை மன்னித்துவிடுவதாகச் சொன்னாள். ஆனால் ஒரு நிபந்தனையின் பேரில்தான். "உமது மனைவியை நான் பார்க்க வேண்டும்!" என்றாள்.
அவள் சமாதானம் அடைந்ததில் ஸ்ரீதரனுக்கு ஒரே குதூகலம். எனவே, "அதென்ன பிரமாதம்? அவள் இங்கே வரும்போது - எப்போதாவது வந்தால் - நீ கட்டாயம் பார்க்கலாம்" என்றான் ஸ்ரீதரன்.
"அதெல்லாம் முடியாது; இப்போதே பார்க்க வேண்டும்" என்றாள் ஸுஸி.
"அது எப்படி சாத்தியம்? இப்போது எப்படிப் பார்க்கிறது?"
"தீபாவளிக்கு நீர் கிராமத்துக்குப் போகிறீர் அல்லவா? உம்முடன் நானும் வருகிறேன்" என்றாள்.
ஸ்ரீதரன் திகைத்து நிற்கும்போதே, அவள் அவனுடைய கன்னத்தை ஒரு தட்டுத் தட்டி, "பயந்து போகாதேயும். நான் இப்படியே வரவில்லை. ஆண் வேஷம் போட்டுக் கொண்டு வருகிறேன். உம்முடைய சிநேகிதன் என்று சொல்லி, என்னை அழைத்துக் கொண்டு போம்!" என்றாள்.
"சபாஷ்!" என்றான் ஸ்ரீதரன். ஏற்கெனவே மிஸ் ஸுஸியை ஆண் உடையில் அவன் பார்த்திருக்கிறான். வேஷம் பொருத்தமாயிருக்கும். சந்தேகமில்லை. தீபாவளிக்கு மாப்பிள்ளைத் தோழன் ஒருவனை அழைத்துப் போவது வழக்கமல்லவா? இவளை மாப்பிள்ளைத் தோழனாக அழைத்துப் போகலாமே? பிரயாணமும் வெகு குஷியாயிருக்கும்! - இப்படி எண்ணி "சபாஷ்! சரியான யோசனை! அப்படியே செய்வோம்!" என்றான் ஸ்ரீதரன்.
சில நாள் ஊடல் கொண்டிருந்த பிறகு மறுபடியும் அவள் சிநேகிதமான குதூகலத்தில் ஸ்ரீதரன் அவ்வாறு வாக்குக் கொடுத்துவிட்டான். ஆனால், அப்புறம் அதைப் பற்றி யோசிக்க யோசிக்க அவனுக்கு அதிலுள்ள சங்கடங்களும், அபாயங்களும் தெரிய வந்தன. அம்மாவும் கூட வரப்போகிறாளே! பிரயாணத்தின்போது நடுவில் அம்மாவுக்குத் தெரியாமலிருக்குமா? அல்லது, நெடுங்கரையில்தான் இவள் எப்படி இருக்க முடியும்? அந்தப் பட்டிக்காட்டில் இவளுக்குத் தனியாயிருக்க இடம் எங்கே கிடைக்கும்? தெரிந்துவிட்டால் எவ்வளவு அவமானம்! ஏதாவது விபரீதமாக முடிந்தாலும் முடியலாம் அல்லவா? - இதையெல்லாம் நினைக்க நினைக்க ஸ்ரீதரனுக்குப் பயம் அதிகமாகி வந்தது.
ஒரு வேளை ஸுஸி விளையாட்டுக்காகச் சொல்லியிருக்கலாம் என்று தோன்றியது. அவளிடம் அம்மாதிரி பிரஸ்தாபிக்கவும், அவள் நிஜமாகவே தான் வரப்போவதாக வற்புறுத்தினாள். பிராயாணத்துக்கு வேண்டிய ஆயத்தங்கள் செய்வதும் ஸ்ரீதரனுக்குத் தெரிந்தது. அதன் மேல் ஸ்ரீதரன் அந்தப் பைத்தியக்கார யோசனை வேண்டாம் என்றும், அதில் ரொம்ப அபாயம் இருக்கிறதென்றும், தானும் தீபாவளிக்கே போகவில்லையென்றும் சொல்லிப் பார்த்தான். ஸுஸி கேட்கவில்லை. ஸ்ரீதரனை பயந்தாங்கொள்ளி என்று பரிகாசம் செய்ய ஆரம்பித்தாள். "உம் மனைவியை நான் பார்க்கக் கூடாது என்பதுதானே உம் எண்ணம்?" என்று கண்ணீர் விடத் தொடங்கினாள்.
இந்தத் தர்ம சங்கடமான நிலைமையில் என்ன செய்வதென்று தெரியாமல் ஸ்ரீதரன் தத்தளித்துக் கொண்டிருந்தான். ஒரு பக்கம் தங்கம்மாளும் இன்னொரு பக்கம் ஸுஸியும் பிரயாணத்துக்குத் தயார் செய்து கொண்டிருந்தார்கள். எனவே, ஸ்ரீதரனும் புறப்படுவதற்கான ஏற்பாடுகளைச் செய்தான். ஆனால் அவனுடைய மனம் மட்டும் என்ன நேரிடுமோ என்னவோ என்று பதைபதைத்துக் கொண்டிருந்தது.
நெடுங்கரையில் பெருமழை நின்றது. ஆனால் மழை அடியோடு நிற்கவில்லை. சில நாள் காலையிலும் சில நாள் மாலையிலும், இன்னும் சில நாள் இரவிலுமாக விட்டு விட்டுப் பெய்து கொண்டிருந்தது.
குடமுருட்டியில் வெள்ளமும் குறைந்து, அதிகாரிகளும் பெரு முயற்சி செய்ததன் பேரில் ஒரு வாரத்தில் அடைப்பு அடைபட்டது.
சம்பு சாஸ்திரியின் மாட்டுக் கொட்டகையில் அடைக்கலம் பெற்ற சேரி ஜனங்கள் இரண்டு நாளைக்குள் களத்துத் திடலில் கொட்டகை போட்டுக் கொண்டு அங்கே போய்விட்டார்கள். உடைப்பு அடைபட்டதும், சேரியில் மறுபடியும் குடிசைகள் போடத் தொடங்கினார்கள். இதற்கு வேண்டிய மூங்கிற் கழி, கீத்து எல்லாம் பெரும்பாலும் சாஸ்திரியார்தான் அவர்களுக்குக் கொடுத்தார்.
உடைப்பினால் சேரி ஜனங்களுக்கு மிகவும் துன்பம் ஏற்பட்டதாயினும், அந்தத் துன்பத்தின் மூலமாகக் கடவுள் அவர்களுக்கு ஒரு நன்மையையும் அளித்தார். சேரியின் ஒரு பக்கத்தில் உடைப்பு வெள்ளம் பாய்ந்த வேகத்தினால், ஒரு பெரிய பள்ளம் ஏற்பட்டு அதில் ஜலம் தேங்கி நின்றது. அந்தப் பள்ளம் ஒரு பெரிய மூங்கில் கழி ஆழம் இருந்தபடியால், சேரி ஜனங்களுக்கு என்றும் ஜலம் வற்றாத ஒரு குளம் ஏற்பட்டது.
இதனாலும், பழைய குடிசைகளுக்குப் பதில் புதிய குடிசைகள் கிடைத்தபடியாலும் சேரி ஜனங்களுக்கு மொத்தத்தில் உடைப்பினால் நன்மை ஏற்பட்டதென்றே சொல்லலாம். இரண்டு மூன்று நாள் பட்ட கஷ்டங்களையெல்லாம் அவர்கள் அடியோடு மறந்து, வாழ்க்கையைப் புதிய குதூகலத்துடன் தொடங்கினார்கள்.
குடமுருட்டி உடைப்பு சேரி ஜனங்களுக்குக் குளம் பறித்துத் தந்ததல்லவா? அப்படிப் பறித்தெடுத்த மண்ணையெல்லாம் வெள்ளம் என்ன செய்தது என்று கேட்டால், சேரிக்கு அருகிலிருந்த சம்பு சாஸ்திரியின் வயல்களில் கொண்டு போய்த் தள்ளிற்று. சாஸ்திரியின் நன்செய் நிலத்தில் ரொம்பவும் உயர்தரமான இரண்டு வேலி நிலம் இதனால் பாழாய்ப் போயிற்று!
ஊரிலே வேறு யாருக்கும் இவ்வளவு அதிக சேதம் கிடையாது. சாஸ்திரிக்கு மட்டும் இம்மாதிரி நேரவே ஊரார், "பார்! இவன் செய்த காரியம் பகவானுக்கே பொறுக்கவில்லை. வாயிலே மண்ணைப் போட்டு விட்டார்!" என்றார்கள்.
இந்த உலகத்தில் பகவான் தம்முடைய அத்தியந்த பக்தர்களைத்தான் அதிகமாய்ச் சோதிப்பதைக் காண்கிறோம். இது ஓர் அதிசயம் என்றால், இதைவிடப் பெரிய அதிசயம் இன்னொன்று இருக்கிறது. உலகில் ரொம்பவும் நல்ல மனிதர்களுக்கே கொடுமையான விரோதிகள் ஏற்படுகிறார்கள்! சம்பு சாஸ்திரியின் நிலைமை இப்படித்தான் இருந்தது. அந்தப் பரம பக்தரைப் பகவான் பலவிதத்திலும் சோதனை செய்தார். அந்த நல்ல மனுஷருக்குத்தான் ஊரில் விரோதிகளும் அதிகமாயிருந்தார்கள். அவருடைய நல்ல குணமும், தயாள சுபாவமுமே அக்கிரகாரத்தில் ரொம்பப் பேரை அவருக்கு விரோதிகள் ஆக்கியிருந்தன. இந்த வருஷத்தில் குடியானவர்கள் தகராறு காரணமாக அந்த விரோதம் முற்றிப் போயிருந்தது. ஆகவே, வெள்ளத்தின்போது சேரி ஜனங்களுக்கு மாட்டுக் கொட்டகையில் இடங்கொடுத்ததை வியாஜமாக வைத்துக் கொண்டு, ஊரார் அவரைச் சாதிப் பிரஷ்டம் செய்தார்கள். அவர் வீட்டுக்கு நீர் நெருப்புக் கொடுக்கக் கூடாதென்றும், அவர் வீட்டில் நடக்கும் சுபாசுப காரியங்களுக்குப் போகக் கூடாதென்றும் கட்டுப்பாடு செய்தார்கள்.
அக்கிரகாரத்தில் எல்லாருமே இந்த நடவடிக்கைகளை விரும்பினார்கள் என்பதில்லை. பாதிப்பேருக்கு மனத்திற்குள் சம்பு சாஸ்திரியின் பேரில் அன்பும் அநுதாபமும் உண்டு. ஆனால் அப்படிப்பட்டவர்கள் சாதுக்களாயும், பயந்த சுபாவமுடையவர்களாயும் இருந்தார்கள். தீக்ஷிதர், சாமாவய்யர், முத்துசாமி அய்யர் முதலியவர்களை எதிர்த்து நின்று சண்டை போட அவர்களுக்குத் தைரியமில்லை. "ஊரோடு ஒக்க" என்று அவர்கள் வாயை மூடிக் கொண்டு பேசாதிருந்தார்கள்.
சம்பு சாஸ்திரி தமது நிலம் மண்ணடித்துப் போனதை அவ்வளவாய்ப் பொருட்படுத்தவில்லை. அந்த செய்தி தெரிந்த அன்று இரவு அவர், "என் செயலாலாவது யாதொன்றுமில்லை, இனித் தெய்வமே, உன் செயலேயென்றுணரப் பெற்றேன்" என்பதாகப் பாடி மனத்தை நிம்மதி செய்து கொண்டார். ஆனால், ஊரார் தம்மைச் சாதிப் பிரஷ்டம் செய்தது குறித்து அவருடைய மனம் சிறிது புண்பட்டது. அதுவும் தம்மைப் பற்றியல்ல; 'ஐயோ! இவர்கள் இவ்வளவு தயாளமற்றவர்களாயும் ஞானமற்றவர்களாயும் இருக்கிறார்களே!' என்றுதான். இந்த எண்ணங்களுக்கிடையில், "நல்ல வேளையாய், குழந்தைக்குக் கல்யாணம் ஆகிவிட்டதே! இதெல்லாம் போன வருஷம் நடந்திருந்தால் எவ்வளவு தொல்லையாயிருந்திருக்கும்?" என்று நினைத்து அவர் ஆறுதல் அடைந்தார்.
சாவித்திரிக்கோ கோபம் கோபமாய் வந்து கொண்டிருந்தது. கதையில் வரும் கண்ணகிக்கு இருந்த சாப சக்தி சாவித்திரிக்கு இருந்திருக்குமானால், நெடுங்கரையில் அப்போது மண்மாரி பொழிந்து ஊரே நாசமாகியிருக்கும்! அப்படிப்பட்ட சக்தி தனக்கு இல்லையே என்று அவள் பொருமினாள். 'நல்ல வேளை! இந்தச் சனியன் பிடித்த ஊரைவிட்டுச் சீக்கிரம் போய்விடப் போகிறோம்' என்று எண்ணியபோது அவளுக்குக் குதூகலம் உண்டாயிற்று. தீபாவளிக்கு ஸ்ரீதரன் வரும்போது எப்படியாவது இரண்டு நிமிஷம் தனியாகப் பார்த்துப் பேச வேண்டும்; அப்போது தன்னைச் சீக்கிரம் அழைத்துக் கொண்டு போகும்படி சொல்ல வேண்டும் என்று அவள் அடிக்கடி எண்ணமிட்டாள். ஸ்ரீதரனைத் தனியாகப் பார்த்துப் பேசுவதற்கு அநேக யுக்திகளை அவளுடைய உள்ளம் ஓயாமல் கண்டு பிடித்துக் கொண்டிருந்தது.
ஒரு நாள் சாவித்திரி மேற்கண்டவாறு எண்ணமிட்டுக் கொண்டிருந்தபோது வாசலில் வண்டி நின்ற சத்தம் கேட்டது. தீபாவளிக்கு இன்னும் இரண்டு மூன்று நாள் இருந்தது. தீபாவளிக்கு முதல் நாள் தான் மாப்பிள்ளை வருவார் என்று சாவித்திரிக்குத் தெரியும். ஆனாலும், ஆசைக்கு அளவில்லையல்லவா? ஒருவேளை இவர்தான் கொஞ்சம் முன்னாலேயே வந்திருக்கலாமோ என்று எண்ணி, பரபரப்புடன் எழுந்து சென்று வாசற் கதவைத் திறந்தாள். மங்களத்தின் தாயார் சொர்ணம்மாள் வண்டியிலிருந்து இறங்கி, மூட்டை முடிச்சுக்களுடன் வந்து கொண்டிருந்தாள்!
பகவான் பிரத்தியட்சமாவார் என்று எதிர்பார்த்தவனுக்கு முன்னால், கோரமான பிசாசு தோன்றினால் எப்படியிருக்கும்? சாவித்திரிக்கு அவ்வளவு ஏமாற்றமாயும் அருவருப்பாயும் இருந்தது. ஆனாலும் புத்திசாலிப் பெண்ணாகையால், அந்த ஏமாற்றத்தைக் காட்டிக் கொள்ளவில்லை. சொர்ணம்மாள் வாசற்படி தாண்டி உள்ளே வந்ததும், "வாங்கோ, பாட்டி!" என்று சொல்லி நமஸ்காரம் பண்ணினாள். எழுந்திருந்து, பாட்டி எடுத்துக் கொண்டு வந்த கூடையையும் மூட்டையையும் வாங்கிக் கொண்டு உள்ளே வைக்கப் போனாள்.
இதற்குள் மங்களமும் வந்து தாயாரைச் சமையலறைக்கு அழைத்துச் சென்றாள். சமையலறைக்குள் போய் உட்கார்ந்தாளோ, இல்லையோ, சொர்ணம்மாள், "ஏண்டி பொண்ணே! இதென்னடி நான் கேள்விப்படறது? உங்களைச் சாதியை விட்டுத் தள்ளி வச்சிருக்காமே?" என்றாள்.
"ஆமாண்டி, அம்மா! ஆமாம். உன் மாப்பிள்ளை இன்னும் என்னெல்லாம் பண்ணி என்னைச் சந்தியிலே நிறுத்தப் போறாரோ, அந்தப் பகவானுக்குத்தான் தெரியும்" என்றாள் மங்களம்.
"யாராவது தீண்டாதவாளை அக்கிரகாரத்துக்குள்ளே வரச் சொல்லுவாளா? அதிசயமாயிருக்கே? இந்தப் பிராமணனுக்கு ஏண்டி இப்படிப் புத்தி கெட்டுப் போச்சு!" என்றாள் தாயார்.
இந்தச் சமயத்தில், காமரா உள்ளில் மூட்டையைக் கொண்டு வைக்கப்போன சாவித்திரி, திரும்பிச் சமையலறைக்கு வந்தாள். சொர்ணம்மாள் சொன்னது அவள் காதில் விழுந்தது.
அப்பாவுக்குப் புத்தி கெட்டுப் போச்சு என்று பாட்டி சொன்னது சாவித்திரிக்குச் சகிக்கவில்லை. அவளுக்குத் தன்னையறியாமல் கோபம் வந்தது. வழக்கத்தை விட உரத்த குரலில் சொன்னாள்:
"எங்க அப்பாவுக்கு ஒண்ணும் புத்தி கெட்டுப் போகலை, பாட்டி! ஊரிலே இருக்கிறவாளுக்குத்தான் புத்தி கெட்டுப் போச்சு! வீடு வாசல்லாம் வெள்ளத்திலே போய் மழையிலே நனைஞ்சுண்டிருந்தவாளுக்கு இருக்க இடங்கொடுத்தால், அது ஒரு குத்தமா? - சித்தி! ஊரார்தான் இப்படியெல்லாம் சொல்றான்னா, நீ கூட இப்படிப் பேசறது நன்னாவேயில்லை."
இவ்வாறு சொல்லி விட்டுச் சாவித்திரி சட்டென்று வெளியே சென்றாள்.
சொர்ணம், இரண்டு கையையும் ஒரு தடவை தட்டி, மோவாய்க் கட்டையில் ஒரு கையை வைத்துக் கொண்டு, "ஏண்டி, மங்களம்! இந்தப் பெண்ணுக்கு இவ்வளவு வாயும் கையும் எப்போடி வந்தது?" என்றாள்.
"ஏற்கனவே, வாய்த் துடுக்கு ஜாஸ்தி, கல்யாணம் ஆனதிலிருந்து தலைகீழாய்த்தான் நிக்கறது" என்றாள் மங்களம்.
"ஐயையோ! இது புக்காத்திலே போய்க் குடித்தனம் பண்ணி எப்படிக் குப்பை கொட்டப் போறதோ, தெரியலையே?"
"முதல்லே புக்காத்துக்குப் போகணுமேடி, அம்மா! அதைச் சொல்லு! ஊரிலே யாரோ சம்பந்தியாத்துக்குக் கடிதாசி எழுதிப் போட்டிருக்கான்னு சொல்றா. என்ன நடக்கப் போகிறதோ, என்னமோ?"
இந்த மாதிரி இவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது, சாவித்திரி பூஜை அறைக்குள் போய் அம்பிகைக்கு நமஸ்காரம் செய்தாள். பிறகு தலைநிமிர்ந்து கைகூப்பிக் கொண்டு, "அம்பிகே! தாயே! அப்பாவை ஊரார்தான் கரிக்கிறார்கள் என்றால், உற்றாரும் கரிக்க வேண்டுமா? ஐயோ! நான்கூடச் சீக்கிரத்தில் கல்கத்தாவுக்குப் போய் விடுவேனே? அப்புறம், அப்பாவுக்கு யார் இருக்கிறார்கள்? அம்பிகே! சித்தியையும், பாட்டியையும் நல்லவாளாய் ஆக்கிவிடக் கூடாதா? எங்க அப்பாவை இப்படிக் கரிக்காமல் செய்யக் கூடாதா?" என்று பிரார்த்தித்தாள்.
ராஜாராமய்யரின் ஆவி உலகச் சோதனைகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. அவரும், மிஸ்டர் பீடர்ஸன் துரையும், "ஸ்பிரிட் ஒர்ல்ட்" பத்திரிகாசிரியர் சியாம் பாபுவும், இன்னும் நாலைந்து பேரும் வாரத்தில் ஒரு நாள் இரவில் சந்தித்து, இறந்தவர்களுடைய ஆவிகளை வரவழைத்துப் பேச முயன்று கொண்டிருந்தார்கள். ஒரு நீளமான மேஜையை சுற்றி இவர்கள் உட்காருவார்கள். விளக்கை அணைத்து விடுவார்கள். பிறகு, ஒவ்வொருவரும் தமது இறந்து போன உறவினர் யாரையேனும் மனத்தில் நினைத்து, 'அவருடைய ஆவி வரவேண்டும்' என்று தியானிப்பார்கள்.
ஆவி உலகம் சம்பந்தமாக அப்போது வெளியாகியிருந்த புத்தகங்களில் மேற்கண்ட முறைதான் கூறப்பட்டிருந்தது. இந்த மாதிரி தொடர்ந்து செய்து வந்தால், சில நாளைக்கெல்லாம் குறிப்பிட்ட ஆவி, அல்லது ஆவிகள் அருவமாக அந்த அறைக்குள் வரும். வந்து, தியானம் செய்பவர்கள் தொட்டுக் கொண்டிருக்கும் மேஜையை மெள்ள மெள்ள உயரத் தூக்கும். அப்புறம் சில விசேஷ சப்தங்கள் எல்லாம் உண்டாகும். நாளடைவில், ஆவி, புகை போன்ற உருவம் எடுத்துக் கண்ணுக்குப் புலனாகத் தொடங்கும். கடைசியாக, அது பேசத் தொடங்கி, கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லும் - இம்மாதிரி மேற்படி புஸ்தகங்களில் சொல்லப்பட்டிருந்தது.
இப்போது ராஜாராமய்யரும், அவருடைய சகாக்களும் செய்த சோதனையில், மேஜையானது உயரக் கிளம்ப ஆரம்பித்திருந்தது. முதலில் ஓர் அங்குலம், அப்புறம் இரண்டு அங்குலம் - இப்படியாக அபிவிருத்தியடைந்து இப்போது ஒரு முழ உயரம் வரை கிளம்பிக் கொண்டிருந்தது. உண்மையில், அங்கே தியானத்தில் அமர்ந்தவர்கள் ஒவ்வொருவரும், ஆவிகளுக்கு ஒத்தாசை செய்யும் நோக்கத்துடன் கொஞ்சம் கொஞ்சம் இலேசாக மேஜையைத் தூக்கிவிட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் ஒருவருக்காவது மற்றவர்களும் அப்படிச் செய்கிறார்கள் என்பது தெரியாதாகையால், அருவமான ஆவிகள் தான் வந்து மேஜையைத் தூக்குகின்றன என்று மனப்பூர்வமாக நம்பினார்கள்.
அம்மாதிரி பரிபூரண நம்பிக்கை கொண்டிருந்தவர்களில் ராஜாராமய்யரும் ஒருவர். தமது வாழ்நாளெல்லாம் கனவு கண்டு கொண்டிருந்த காரியம் இப்போது உண்மையிலேயே நிறைவேறப் போகிறதென்று எண்ணி அவர் அளவிலாத உற்சாகத்தில் ஆழ்ந்திருந்தார். உலக விஷயங்கள் ஒன்றுமே அவருக்கு இலட்சியமாயில்லை. தீபாவளிக்குத் தம் மனைவியும் பிள்ளையும் நெடுங்கரைக்குப் போகும் விஷயம் அவருக்கு மிகவும் திருப்தியளித்தது. 'அப்பா! ஒரு பத்து நாளைக்காவது இவர்களுடைய தொல்லையில்லாமல் இருக்கலாம்' என்று அவர் எண்ணினார். அத்துடன், இப்போது அவர்கள் சோதனை நடத்திக்கொண்டிருந்த இடம் அவ்வளவு வசதியில்லாமலிருந்தபடியால், தங்கம்மாளும் ஸ்ரீதரனும் ஊருக்குப் போனால் தமது வீட்டிலேயே ஒரு நாள் நடத்திப் பார்க்கலாம் என்ற எண்ணமும் அவருக்கு இருந்தது. சோதனை நடக்கும் போது நம்பிக்கையற்றவர்கள் யாரும் அருகில் இருக்கக் கூடாதாதலால், தங்கம்மாளும் ஸ்ரீதரனும் இருக்கும்போது வீட்டில் அந்தச் சோதனை நடத்த அவர் விரும்பவில்லை.
இப்படியாக ராஜாராமய்யர் தம் மனைவியும் புதல்வனும் தீபாவளிக்கு ஊருக்குப் போவதை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில், நெடுங்கரையிலிருந்து அவர் பேருக்கு ஒரு தபால் வந்தது. அதைப் பிரித்துப் படித்துப் பார்த்ததும் அவர் ஒரே கலவரமடைந்து போனார். அப்போது அவர் 'ஸ்பிரிட் ஒர்ல்ட்' பத்திரிகைக்குத் தமது ஆவி உலக அநுபவங்களைப் பற்றி ஒரு கட்டுரை எழுதிக் கொண்டிருந்தாராயினும், அதை அப்படியே விட்டு விட்டுத் தங்கம்மாளைத் தேடிக் கொண்டு போனார்.
அன்று இரவுதான் நெடுங்கரைக்குப் பயணப்படுவதாக உத்தேசித்திருந்தபடியால், தங்கம்மாள் பெட்டியில் சாமான்களை எடுத்து வைத்துக் கொண்டும், வேலைக்காரனைப் படுக்கை கட்டச் சொல்லிக் கொண்டும் இருந்தாள். அப்போது, ராஜாராமய்யர், கையில் பிரித்த கடிதத்துடன், "தங்கம்! தங்கம்! கேட்டாயா சமாசாரம்?" என்று கேட்டுக் கொண்டு வந்தார்.
"என்ன பிரமாதமான சமாசாரம்? எள்ளுக்குள் எண்ணெய் இருக்குன்னு எனக்குத் தெரியுமே?" என்றாள் தங்கம்.
"இல்லேடி! உன் பிள்ளையாண்டான், தீபாவளிக்கு மாமனார் ஆத்துக்குப் போக மாட்டேன்னு மூக்கால் அழுதுண்டிருந்தானோல்லியோ? அங்கேயும் அதுக்குத் தகுந்தாப்பலே ஒரே ரகளையா இருக்கு. சம்பு சாஸ்திரிக்குத் திடீர்னு பைத்தியம் புடிச்சுடுத்தாம்..."
"இது என்ன கூத்து?"
"பைத்தியம்னா, நிஜப் பைத்தியமில்லை! ஒரு நாளைக்குத் தீண்டாதவன்களையெல்லாம் அக்கிரகாரத்துக்குள்ளே அழைச்சுண்டு வந்துட்டாராம். அதுக்காக, ஊரார் அவரை 'பாய்காட்' பண்ணி வச்சிருக்காளாம்..."
"அடபாவிப் பிரமாணா! இப்படிப் பெரிய கல்லாத் தூக்கிப் போட்டுட்டாரே! ஆடி, ஆறாம் மாதம் ஒண்ணுக்குந்தான் போகலை - தீபாவளிக்காவது போய்த் துணிமணி, பாத்திரம் பண்டம் வாங்கி நகத்திண்டு வரலாம்னு ஆசைப்பட்டுண்டு இருந்தேனே? - ஏன்னா? நெஜமாத்தான் அப்படி எழுதியிருக்கா? நீங்களா வெறுமனைக்கோசரம் சொல்றயளா?"
"சரியாப் போச்சு! எனக்கு வேறே வேலை கிடையாதாக்கும்! தீக்ஷிதரும், இன்னும் நாலைஞ்சு பேரும் கையெழுத்துப் போட்டுக் கடுதாசி எழுதியிருக்கா. ஒரு நாளைக்குப் பலமா மழை பேஞ்சபோது, சேரியிலே வெள்ளம் புகுந்துடுத்துன்னு, சேரி ஜனங்கள் எல்லாரையும் அக்கிரகாரத்துக்கு அழைச்சுண்டு வந்து இரண்டு நாள் வச்சிருந்தாராம். ஊரார், வேண்டாம்னு எவ்வளவோ சொல்லியும் கேக்கலையாம். ரொம்ப ரஸாபாஸமாய்ப் போச்சாம். அதுக்கு மேலேதான் அவாத்துக்கு யாரும் போகக்கூடாது; நீர் நெருப்புக் கொடுக்கக் கூடாதுன்னு கட்டுப்பாடு பண்ணியிருக்காளாம். இந்தச் சமயத்தில் நாம் அங்கே தீபாவளிக்கு வரக்கூடாதுன்னு ஊரார் கேட்டுக்கறாளாம். 'அப்புறம் உங்க இஷ்டம்; நாங்க இதுக்கு மேலே சொல்றதுக்கில்லை'ன்னு லெட்டர் முடியறது. நீ என்ன சொல்றே!"
"நான் என்னத்தைச் சொல்றது? பார்த்தா, வைதிகமா, விபூதியும் துளசி மாலையுமா இருக்காரேன்னு நினைச்சேன். உங்களைப் போலேயெல்லாம் கிராப்புத் தலையும், பாழும் நெத்தியுமா இல்லையேன்னு சந்தோஷப்பட்டுண்டு இருந்தேன். இப்படிப் பைத்தியம் பிடிச்சுப் பாயைப் புரண்டப் போறார்னு நான் கண்டேனா?"
"அதைக் கேக்கலை, நான் இப்போ! தீபாவளிக்கு போறயா, இல்லையான்னுதான் கேக்கறேன்."
"அது எப்படிப் போறது? நன்னாயிருக்கே! இன்னிக்கு நாம்ப புடவைக்கும் வேஷ்டிக்கும் ஆசைப்பட்டுண்டு போய்ட்டா, நாளைக்கு நம்ப பொண்களைக் கொடுத்திருக்கிற இடத்திலே சும்மா இருப்பாளா? - அதெல்லாம் யோசனை பண்ணித்தான் செய்யணும்."
ராஜாராமய்யரும் தங்கம்மாளும் இப்படிப் பேசிக் கொண்டிருந்த போது, வாசலில் வண்டி நின்ற சத்தமும், ஸ்ரீதரனும் அவனுடைய 'தோழ'னும், இறங்கி உள்ளே வந்த சத்தமும் அவர்கள் காதில் விழவில்லை. அடுத்த அறையில் வாசற்படிக்கு அருகில் நின்றபடி ஸ்ரீதரன் அவர்களுடைய சம்பாஷணையைச் சற்று நேரம் ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்தான். 'பெரிய சங்கடத்தில் மாட்டிக் கொண்டு விட்டோ மே? எப்படியாவது இந்தப் பிரயாணம் தடைப்பட்டு விடக்கூடாதா?' என்று எண்ணிக் கொண்டிருந்தவனுக்கு, "அது எப்படிப் போறது?" என்று தங்கம்மாள் சொன்னதைக் கேட்டதும் அளவிலாத குதூகலம் உண்டாயிற்று. ஆனால், அதைச் சிறிதும் வெளியில் காட்டிக் கொள்ளாமல், முகத்தைக் கடுகடுப்பாக வைத்துக் கொண்டே அப்பாவும் அம்மாவும் இருந்த அறைக்குள் வந்தான். ஒரு வார்த்தையும் பேசாமல், அப்பாவையும் அம்மாவையும் வெறிக்கப் பார்த்துவிட்டு, "ஒரு பிள்ளைக்கு அவன் தாயார் தகப்பனாரே சத்துருக்களாயிருந்தால், என்னதான் செய்கிறது?" என்றான்.
ராஜாராமய்யர், "என்னடா உளர்றே? நான் என்னடா பண்ணினேன் உனக்கு?" என்றார்.
"ஆமாம், அப்பா! நீங்க ஒண்ணும் பண்ணலை! இந்தக் கல்யாணமே வேண்டாம்னு நான் அப்பவே அடிச்சுண்டேனா, இல்லையா? கல்யாணத்தன்னிக்குக் காலம்பரக்கூட, இந்தப் பட்டிக்காட்டுச் சம்பந்தம் வேண்டாம், புறப்பட்டுப் போயிடுவோம்னு முட்டிண்டேன். இரண்டு பேருமாச் சேர்ந்து பணத்துக்கு ஆசை பட்டுண்டு பலவந்தமாப் பண்ணி வச்சயள்."
"அடே, என்னைப் பார்த்துச் சொல்லு! கல்யாண விஷயமாய் ஒரு வார்த்தையாவது உங்கிட்ட நான் சொன்னேனாடா? அம்மாவாச்சு பிள்ளையாச்சு, எப்படியாவது செய்துக்குங்கோன்னு நான் தான் பேசாமலிருந்துட்டேனே?"
"அம்மாதான் இருக்காளே, அம்மா! என்னைக் கெடுக்கறதுக்குன்னு பிறந்திருக்காளே!" என்றான் ஸ்ரீதரன்.
ஏற்கனவே, தங்கம்மாளுக்குத் தீபாவளிக்குப் போக முடியவில்லையேயென்று துக்கம் அடைத்துக் கொண்டு வந்தது. இப்போது, பிள்ளையாண்டான் மனம் வெறுத்துப் பேசினதைக் கேட்டதும், அவள் விசித்துக் கொண்டே, "அப்படி ஏண்டா சொல்றே, குழந்தை! உனக்கு என்னடா இப்போ வந்துடுத்து? நாளைக்கே நினைச்சா இன்னொரு கல்யாணம் என் குழந்தைக்கு நான் பண்ணிவைக்க மாட்டேனா? எத்தனையோ பேர் 'நான் நீ' என்று பெண் கொடுக்கக் காத்துண்டிருப்பாளே?" என்றாள்.
அதற்கு, ஸ்ரீதரன், "என்ன? இன்னொரு கல்யாணமா? சபாஷ்! ஒரு தடவை மரப்பாச்சியைக் கல்யாணம் பண்ணி வச்சாச்சு! இன்னொரு புதுச்சேரிப் பொம்மையையும் கல்யாணம் பண்ணி வச்சுட்டா, ரொம்ப பேஷாய்ப் போய்விடும். அது வேறே நினைச்சுண்டிருக்கயா, நீ" என்றான்.
ராஜாராமய்யர், "சரிதாண்டா, சரிதான். வேறே வேலை இருந்தாப் பாரு! ஊருக்குப் போகலை, லீவு வேண்டாம்னு துரைக்கு உடனே எழுதிப் போட்டுடு" என்று சொல்லிவிட்டு, தமது அறைக்குச் சென்றார்.
"அப்பாவுக்கு என்ன, சுலபமாய்ச் சொல்லிவிட்டுப் போயிடறார். என் சிநேகிதனை அழைச்சுண்டு வந்திருக்கேனே, அதுக்கு என்ன பண்ணறது? அவா வீட்டிலே போய் ஏன் போகலேன்னு 'எக்ஸ்ப்ளெயின்' பண்ணியாகணும்" என்றான் ஸ்ரீதரன்.
அதே சமயத்தில், அவனுடைய 'சிநேகிதன்' உள்ளே வரவே, தங்கம்மாள் அவனை ஏற இறங்கப் பார்த்து விட்டு, "ஏண்டாப்பா? இவன் என்ன சாதிப் பையன்? முகத்தைப் பார்த்தால் களையாயிருக்கு. தமிழ் பேசத் தெரியுமா?" என்றாள்.
"அவனுக்குத் தமிழ் பேசத் தெரியாது. இங்கிலீஷும் பெங்காலியுந்தான் தெரியும். இந்த ஊர்க்காரன் தான். ஆத்திலேயெல்லாம் சொல்லிண்டு வந்துட்டான். இப்போ எப்படிம்மா அவனைத் திரும்பிப் போகச் சொல்றது?"
"போகச் சொல்வானேன்? தீபாவளிக்கு நம்ம ஆத்திலேயே வேணா இருந்திட்டுப் போகட்டுமே? உனக்கும் துணை வேணுமோல்லியோ?" என்றாள் தங்கம்மாள்.
"ரைட்டோ , அம்மா! ரொம்ப தாங்க்ஸ்!" என்று சொல்லிவிட்டு, அவனுடைய சிநேகிதனைக் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு மேல் மாடிக்குப் போனான். அங்கே, ஸுஸிக்கு நல்ல வார்த்தைச் சொல்லிச் சமாதானப்படுத்துவதற்குள் அவன் ரொம்பவும் சிரமப்பட்டுப் போனான் என்று சொல்ல வேண்டுமா?
தீபாவளிக்கு முதல் நாள் காலையில் சாவித்திரி தூக்கத்திலிருந்து எழுந்திருக்கும்போதே, 'நாளைப் பொழுது விடிந்தால் தீபாவளி' என்று எண்ணிக்கொண்டு எழுந்தாள். 'இன்னிக்கு ராத்திரி இவாள் வரப்போறா!' என்ற எண்ணமும் கூட வந்து, அவளுக்கு என்றும் இல்லாத உற்சாகத்தையும் சுறுசுறுப்பையும் அளித்தது. இரண்டு நாளாகக் கடும் மழை விட்டுச் சற்று நேரம் இளம் வெயில் எரிப்பதும் சற்று நேரம் சிறு தூற்றல் போடுவதுமாக இருந்தது. தீபாவளிக்கு மாப்பிள்ளை வரப் போவதை உத்தேசித்துத்தான் இப்படி இருப்பதாகச் சாவித்திரி எண்ணிக் கொண்டாள். ஆனால், மழை பலமாகப் பெய்தாலும் அவளுக்கு இப்போது பயம் கிடையாது. ஏனென்றால் அப்பாவினிடம் அடிக்கடி சொல்லி, பெருமழையின் போது ஒழுகிய இடத்தையெல்லாம் ஓடுமாற்றிச் செப்பனிடும்படி செய்துவிட்டாள்.
அன்று காலை நேரமெல்லாம் சாவித்திரி, வீட்டின் மூலை முடுக்குகளையெல்லாம் சுத்தம் செய்வதிலும், அழகுபடுத்துவதிலும் ஈடுபட்டிருந்தாள். சுவரில் மாட்டியிருந்த படங்களை இங்கிருந்து அங்கும், அங்கிருந்து இங்குமாக மாற்றிக் கொண்டிருந்தாள். இன்னும், கோட் ஸ்டாண்டுகள், நிலைக் கண்ணாடிகள் - இவையெல்லாம் எங்கெங்கேயிருந்தால் நன்றாயிருக்குமென்று பார்த்துப் பார்த்து மாட்டினாள். சுவர் மூலையில் எங்கேயாவது கொஞ்சம் ஒட்டடை காணப்பட்டால், உடனே அதை எடுத்துக் கொல்லையில் தூரக் கொண்டுபோய்ப் போட்டுவிட்டு வந்தாள். அலமாரியில் புத்தகங்களை ஒழுங்காக எடுத்துத் தட்டி அடுக்கி வைத்தாள். இடையிடையே, முற்றத்தில் காக்காய் கத்தும் சத்தம் கேட்டால், ஓடிப் போய்க் காக்காயைப் பார்த்து, "ஓகோ! இன்னிக்கு மாப்பிள்ளை வரப்போறார்னு உனக்குத்தான் அதிசயமாய்த் தெரியுமோ? எனக்குத் தெரியாதோ?" என்று அதனுடன் பேசிவிட்டு வந்தாள். குறுக்கே நெடுக்கே செவிட்டு வைத்தி போனால், அவனைப் பார்த்து, "அடே! இரண்டு நாளைக்கு கண்ட இடத்தில் எல்லாம் மூக்கைச் சிந்திப் போடாமலிரு! உனக்குப் புண்ணியமாய்ப் போகட்டும்!" என்றாள்.
ஆயிற்று; சூரியன் உச்சி வானத்தைக் கடந்து மேற்புறம் சாயத் தொடங்கிற்றோ, இல்லையோ, சாவித்திரியின் பரபரப்பும் பதின்மடங்கு அதிகமாயிற்று. சம்பு சாஸ்திரியிடம் போய், "அப்பா! ஸ்டேஷனுக்கு வண்டி அனுப்ப வேண்டாமா?" என்று கேட்டாள். அவர், "நீ கவலைப்படாதே, அம்மா! எனக்குத் தெரியாதா? நானே ஸ்டேஷனுக்குப் போய் மாப்பிள்ளையை அழைச்சுண்டு வர்றேன்!" என்றார். ஆனாலும் இன்னும் அரை மணி ஆனதும், சாவித்திரி மறுபடியும் அவரிடம் வந்து, "ஏனப்பா! வண்டி ஓட்டிண்டு போறதுக்கு நல்லான் இன்னும் வர்றலையே?" என்று கேட்டாள்.
"வந்தாச்சு, அம்மா! வண்டி பூட்டிண்டு வர்றதுக்குத் தான் போயிருக்கான்" என்றார் சாஸ்திரியார்.
சுமார் மூன்று மணிக்குச் சம்பு சாஸ்திரியார் வண்டியில் ஏறிக்கொண்டு புதுச்சத்திரம் ஸ்டேஷனுக்குக் கிளம்பிய பிறகுதான் சாவித்திரியின் மனம் கொஞ்சம் நிம்மதி அடைந்தது. வண்டி தெருக்கோடி வரையில் சென்று மறைந்த பிறகு சாவித்திரி உள்ளே வந்து, அவசர அவசரமாகத் தன்னை அழகுபடுத்திக் கொள்ளத் தொடங்கினாள்.
கல்யாணத்தின்போது, "பெண் ரொம்பப் பட்டிக்காடு; அதனால் மாப்பிள்ளைக்குப் பிடிக்கவில்லை" என்ற பேச்சு சாவித்திரியின் காதில் விழுந்ததென்று சொன்னோமல்லவா? "அதெல்லாம் ஒன்றுமில்லை" என்று அப்போது சாஸ்திரி சொன்னதை அவள் பூரணமாய் நம்பினாள். ஆனால், கல்யாணத்திற்குப் பிறகும் ஊரில் சிலர் இம்மாதிரி பேசிக் கொண்டுதான் இருந்தார்கள். ஆகையால், இந்த ஞாபகம் அடிக்கடி சாவித்திரிக்கு வந்து கொண்டிருந்தது. நினைத்துப் பார்க்கப் பார்க்க, ஊரார் சொல்வது வாஸ்தவந்தானே என்றும் தோன்றிற்று. மாப்பிள்ளையின் நாகரிகத்தையும், தன்னுடைய பட்டிக்காட்டு நடை உடை பாவனைகளையும் அவள் ஒப்பிட்டுப் பார்த்துப் பார்த்து வெட்கம் அடைந்தாள். கல்யாணமாகி நாலாம் நாள் அன்று ஸ்ரீதரன் 'புல் ஸுட்' அணிந்திருந்த போது எடுத்த போட்டோ படம் ஒன்று வீட்டில் இருந்தது. அதை எடுத்து வைத்துக் கொண்டு சாவித்திரி அடிக்கடி பார்ப்பாள். கல்யாணத்தின்போது தனக்குச் செய்திருந்த கர்நாடக அலங்காரத்தை நினைத்தால் அவளுக்குக் கோபம் கோபமாய் வந்தது. 'அவாளுடைய நாகரிகம் எங்கே? இந்தப் பட்டிக்காட்டுக் கர்நாடகம் எங்கே? என்னைப் பட்டிக்காடு என்பதாக அவாள் வெறுத்தால்தான் எப்படிப் பிசகு ஆகும்?' என்று எண்ணுவாள். அதே புருஷனுக்குத் தகுந்த மனைவியாக வேண்டுமென்றும் தீர்மானித்துக் கொள்வாள்.
ஆனால், நாகரிகம் கற்றுக் கொள்வதற்குச் சாவித்திரிக்கு அதிக வசதி இருக்கவில்லை. அந்தத் தாயில்லாப் பெண்ணுக்கு, பட்டிக்காட்டு வழக்கப்படி அழகு செய்து விடுபவர்களே கிடையாது. "தலைவாரிப் பின்னி விடறயா?" என்று கேட்டாலே சித்தி எறிந்து விழுவாள். கல்யாணத்துக்கு முன்னெல்லாம் சாவித்திரி இதை அதிகமாகப் பொருட்படுத்தவில்லை. அப்போது தன்னுடைய சொந்த அலங்காரத்தில் அவளுக்குக் கவனமே கிடையாது. பூஜை அறையை அழகு படுத்துவதிலும், படங்களுக்கு அலங்காரம் செய்வதிலுமே அவளுடைய புத்தியெல்லாம் சென்று கொண்டிருந்தது. கல்யாணத்திற்குப் பிறகுதான் தன்னை அழகு செய்து கொள்வதில் சிரத்தை உண்டாயிற்று. தான் புடவை கட்டிக் கொண்டால் நன்றாயிருக்கிறதா, அல்லது பாவாடையும் தாவணியும் அணிந்து கொண்டால் நன்றாயிருக்கிறதா, தலைப் பின்னலைத் தொங்கவிட்டுக் கொண்டால் அழகாயிருக்கிறதா எடுத்துக் கட்டிக் கொண்டால் அழகாயிருக்கிறதா என்றெல்லாம் நேரம் போவதே தெரியாமல் அவள் சிந்தனை செய்து கொண்டிருப்பாள்.
எங்கேயாவது கல்யாணம், கார்த்திகைக்குப் போனால், டவுனிலிருந்து வந்திருக்கும் பெண்கள் யாராவது இருக்கிறார்களா என்று அவளுடைய கண்கள் உடனே தேடத் தொடங்கும். அப்படி யாராவது இருந்தால், அவர்கள் எப்படித் தலைவாரிப் பின்னிக் கொண்டிருக்கிறார்கள், எப்படி ஆடை ஆபரணங்கள் அணிந்து கொண்டிருக்கிறார்கள் என்று கவனமாய்ப் பார்ப்பாள். ஒரு தடவை, அத்தகைய பட்டணவாசத்துப் பெண் ஒருத்தி தலை மயிரைக் கோணலாக வகிடு எடுத்துப் பின்னிக் கொண்டிருப்பதைப் பார்த்தாள். அது ரொம்ப அழகாயிருந்தது. வீட்டுக்குப் போனதும், காமிரா உள்ளின் கதவைச் சாத்திக் கொண்டு அந்தப் பெண் மாதிரி தானும் கோண வகிடு எடுத்துக் கொண்டாள். ஆனால், அந்தப் பெண்ணுக்கு அது அழகாயிருந்ததே தவிர, தனக்கு அவ்வளவு அழகாயில்லையென்று தோன்றிற்று. வேறு யாரிடமாவது கேட்கலாமென்றால், யாரைக் கேட்பது? சித்தியிடம் போய்க் கேட்டால், கட்டாயம் விறகுக் கட்டையால் அடி விழும். 'அம்மா, அத்தை, பெரியம்மா, பாட்டி யாராவது ஒருவர் எனக்கு இருக்கக் கூடாதா? என் அதிர்ஷ்டம், எல்லாரும் போய்விட வேண்டுமா?' என்று அப்போது அவளுக்கு ஏக்கம் உண்டாகும்.
மேலும், நாகரிக வாழ்க்கையென்றால் இலேசாயிருக்கிறதா? பணம் செலவழிக்காமல் சாத்தியமாகும் காரியமில்லையே? தனக்கு வேண்டிய சாமான்களைப் பற்றி அப்பாவிடம் பிரஸ்தாபிப்பதற்கும் சாவித்திரிக்கு ரொம்ப சங்கோசமாய்த்தான் இருந்தது. ஆனாலும், அப்பா கும்பகோணம் அல்லது தஞ்சாவூர் போனால், வரும் போது விநோலியா ஸோப்பு, தலை பின்னிக் கொள்வதற்கு டேப்பு - இதெல்லாம் வாங்கிக் கொண்டு வரச் சொல்வாள். அவரும் மறக்காமல், துணியில் முடிச்சுப் போட்டு வைத்திருந்து, குழந்தை கேட்டதை வாங்கிக் கொண்டு வருவார். அவளுடைய கையில் ஏற்கனவே போட்டுக் கொண்டிருந்த தங்கக் காப்பு, கொலுஸு எல்லாவற்றையுங்கூட அழித்துவிட்டு மெல்லிய தங்க வளைகளாகப் பண்ணிப் போட்டுவிட்டார். இப்படியாக சாவித்திரி நாகரிக வாழ்க்கையில் அபிவிருத்தியடைந்து கொண்டு வந்தாள்.
யாரை உத்தேசித்து, யார் பார்த்துச் சந்தோஷப்படவேண்டுமென்பதற்காக, சாவித்திரி ஆடை அலங்காரங்களில் இவ்வளவு கவனம் செலுத்தினாளோ, அப்படிப் பட்டவர் இன்று ராத்திரி வருவதற்கு இருந்தார். எனவே சாவித்திரி பூமியிலேயே நிற்காமல் குதித்துக் கொண்டிருந்ததில் ஆச்சரியமில்லையல்லவா?
அவாள் வருவதற்காக 'ஸ்பெஷ'லாய் அலங்காரம் செய்து கொண்டதாகவும் இருக்கக்கூடாது. ஆனால் அவாள் பார்த்ததும், 'இது யாரோ புது சாவித்திரி' என்று பிரமித்துப் போகும்படியாகவும் இருக்க வேண்டும் என்று சாவித்திரி எண்ணினாள். ஏற்கனவே, வாரிப் பின்னியிருந்த தலையை மறுபடியும் வாரிவிட்டுச் சரிப்படுத்திக் கொண்டாள். காலையிலிருந்து முப்பது தடவை அலம்பியான முகத்தை மறுபடி ஸோப்புப் போட்டுத் தேய்த்து அலம்பிக் கொண்டாள். முதலில் சாந்துப் பொட்டு இட்டுக் கொண்டு கண்ணாடியில் பார்த்தாள். அதை அழித்துவிட்டுக் குங்குமப் பொட்டு வைத்துக் கொண்டாள். அது பெரிதாய்ப் போய்விட்டதென்று அழித்துவிட்டு மறுபடி சின்னதாய் இட்டுக்கொண்டாள். பாவாடை, தாவணியை அவிழ்த்து எறிந்துவிட்டுக் கல்யாணப் புடவையை எடுத்துக் கட்டிக்கொண்டாள். அப்புறம், அவாள் வரும் போது பதினெட்டு முழப் புடவையைப் புஸு புஸு என்று கட்டிக்கொண்டு நிற்கவேண்டாம், காலையில் தான் எப்படியும் புதுப் புடவை கட்டிக் கொள்ள வேணுமே யென்று எண்ணி மறுபடியும் பாவாடை தாவணியையே உடுத்திக் கொண்டாள். ஐந்து நிமிஷத்துக்கொரு தடவை சுவரில் மாட்டியிருந்த நிலைக் கண்ணாடியின் முன்னால் நின்று அழகு பார்த்துக் கொண்டாள்.
இப்படி என்னவெல்லாமோ செய்தும் பொழுது போகிற வழியாயில்லை. அப்போது பட்டாசுக் கட்டு ஞாபகம் வந்தது. பட்டாசு, மத்தாப்பூ என்றால் சாவித்திரிக்கு அளவில்லாத பிரியம். அவாள் வந்த பிறகு பட்டாசு கொளுத்தலாமோ, என்னமோ? அவாளுக்குப் பிடிக்குமோ பிடிக்காதோ? மேலும் அவாள் மட்டும் தனியாய் வரவில்லையே? மாமியாரும் கூட வருகிறாள் அல்லவா? "பச்சைக் குழந்தையா பட்டாசு கொளுத்துவதற்கு?" என்று மாமியார் கோபித்துக் கொண்டாலும் கோபித்துக் கொள்ளலாம். ஆகையால், இப்போதே கொஞ்சம் பட்டாசுக் கட்டுகளை எடுத்துக் கொளுத்திப் போட்டாள். அவை படபடவென்று வெடித்த போது அவளுக்கு வெகு உற்சாகமாயிருந்தது. அப்புறம் தீபாவளிக் கொண்டாட்டத்தைப் பற்றி அவள் இட்டுக்கட்டியிருந்த பாட்டைப் பாடிக்கொண்டே மத்தாப்புக்களைக் கொளுத்தினாள். அப்போதுதான் சூரியன் அஸ்தனமாகி விளக்கு ஏற்றும் சமயமாயிருந்தபடியால், மத்தாப்பூக்கள் அவ்வளவு பிரகாசமாய் எரியவில்லை. 'இன்னும் கொஞ்ச நேரமானால் இருட்டி விடும்; மத்தாப்பூ நன்றாக எரியும்' என்று எண்ணிக் கொண்டாள். இருட்டிச் சற்று நேரத்திற்கெல்லாம் ஸ்டேஷனுக்குப் போன வண்டியும் வந்துவிடும் என்பது ஞாபகம் வந்தது. வண்டி வாசலில் வந்து நின்று, மாப்பிள்ளை வண்டியிலிருந்து இறங்கும்போது, இரண்டு பட்டாசுக் கட்டை முற்றத்தில் கொளுத்திப் போட்டுப் படபடவென்று வெடிக்கப் பண்ணலாமா என்ற எண்ணம் தோன்றியபோது அவளுக்குக் கலகலவென்று சிரிப்பு வந்தது.
இப்படி எண்ணியதும், உடனே இன்னொரு ஞாபகமும் உண்டாயிற்று. மாப்பிள்ளை வந்து இறங்கியதும் அவரை வீதியில் நிற்க வைக்காமல் உடனே ஆலாத்தி எடுக்க வேண்டுமே? சித்தி மஞ்சள் நீர் கரைத்துத் தயாராய் வைத்திருக்கிறாளோ, என்னவோ? போய் விசாரிக்கலாம் என்று நினைத்து, சாவித்திரி சமையலறைக்குச் சென்றாள்.
சமையலறையில் மங்களமும், சொர்ணம்மாளும் குஞ்சாலாடு பிடித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்குப் பக்கத்தில் செவிட்டு வைத்தி, புதுவேஷ்டி - புதுப்புடவைப் பொட்டணங்களைப் பிரித்து வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான். புது வேஷ்டி - புதுப்புடவைகளை அவன் கையால் தடவித் தடவிப் பார்த்து அவற்றின் மிருதுத் தன்மையை அநுபவித்துக் கொண்டிருந்தான்.
சொர்ணம்மாள், "நான் சொன்னபடியே ஆச்சா, இல்லையா, பார்த்துக்கோ! பொண்ணுக்கு அறுபது ரூபாய்க்குப் புடவை, உனக்குப் பன்னிரண்டு ரூபாயிலே புடவை, மாப்பிள்ளைக்கு முப்பத்தைந்து ரூபாயிலே வேஷ்டி; மச்சினனுக்கு ஒண்ணரை ரூபாயிலே வேஷ்டி. இதென்னடி வெட்கக் கேடு! உடம்புக்குப் பால் குடிக்காட்டாலும், ஊருக்காவது குடிக்க வேண்டாமா? நீயும் பேசாம இருக்கயே?" என்றாள்.
அதற்கு மங்களம், எரிச்சலாக, "என்னை என்னடி அம்மா பண்ணச்சொல்றே! அப்பவே கிணத்துலே குளத்திலே என்னைப் பிடிச்சுத் தள்ளி விடறதுதானே? இந்த அழகான மாப்பிள்ளையைப் பார்த்து நீதானே என்னைக் கொண்டு வந்து கொடுத்தே?" என்றாள்.
"நான் எல்லாம் சரியாத்தான் பார்த்துக் கொடுத்தேன். எதிலே குறைவாய்ப் போச்சு? சொத்தில்லையா, பணமில்லையா, வயது தான் அப்படி ரொம்ப ஜாஸ்தியா? உன்னைப் போலே இளையவளா வாழ்க்கைப்பட்டவாளெல்லாம் ராஜாத்தி மாதிரி இருக்கலையா? நீ எல்லாத்துக்கும் வாயை மூடிண்டு இருந்து இருந்துதான் இப்படி இடங்கொடுத்துப் போச்சு. இல்லாட்டா, ஒரு பொண் கல்யாணத்துக்கு யாராவது பத்தாயிரம் ரூபாய் செலவழிப்பாளோ?"
"அதோடே போனாத் தேவலையே? இப்போ, அவா கல்கத்தாவிலேயிருந்து தீபாவளிக்கு வந்துட்டுப் போற செலவெல்லாம் உன் மாப்பிள்ளைதான் கொடுக்கப் போறாராம்!"
"ஐயையோ! நெஜந்தானாடி? இதென்ன அநியாயம்? இந்தக் குடித்தனம் உருப்படறதா, இல்லையா, தெரியலையே? இன்னும், திரட்சி, வளைகாப்பு, சீமந்தம்னு நெடுக வந்துண்டே யிருக்குமே?"
"கல்யாணத்திலே பத்தாயிரம் ரூபாய் கடன். நிலத்திலே இரண்டு வேலி மண்ணடிச்சுப் போயிடுத்து. ஐயாயிரம் ரூபாய் செலவழிச்சாத்தான் மறுபடி நிலமாகுமாம். எப்படிக் கடனடைக்கப் போகிறாரோ, பாக்கி என்ன மிஞ்சப் போறதே, ஸ்வாமிக்குத்தான் தெரியும்"
"நான் சொல்றேன் கேளு, மங்களம்! இத்தனை நாளும் போனதெல்லாம் போகட்டும். இனிமே, பொட்டிச் சாவியை நீ வாங்கி வைச்சுக்கோ. ஒரு காலணாச் செலவழிக்கிறதாயிருந்தாலும், உன்னைக் கேட்டுண்டுதான் செலவழிக்கணும்னு சொல்லிடு. இல்லாட்டா எல்லாருமாச் சந்தியிலே நிக்க வேண்டியதுதான்"
இப்படி இவர்கள் பேசிக் கொண்டிருக்கையில், செவிட்டு வைத்தி புடவைகளையும், வேஷ்டிகளையும் ஒவ்வொன்றாய்ப் பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். நடுவில் நடுவில், "அக்கா! இது யாருக்கு? இது உனக்கா? இதுதான் மாப்பிள்ளைக்கா?" என்று கேட்டுக் கொண்டிருந்தான். மாப்பிள்ளைக்கு வாங்கியிருந்த சேலம் மயில்கண் வேஷ்டியைப் பார்க்கப் பார்க்க, அதைத் தான் உடுத்திக்கொண்டால் எப்படியிருக்குமென்று அவனுக்கு யோசனை தோன்றி விட்டது. வேஷ்டியை ஒவ்வொரு மடிப்பாகப் பிரித்து, கடைசியில் இரட்டை மடிப்புக்கு வந்ததும், எழுந்து நின்று அதைக் கட்டிக் கொள்ள முயன்றான்.
இந்தச் சமயத்தில், ஆலாத்திக்கு மஞ்சள் நீர் கரைத்து வைத்திருக்கிறதா என்று விசாரிப்பதற்காகச் சாவித்திரி அங்கே வந்து சேர்ந்தாள். "ஏன், சித்தி! வண்டி வரலாச்சே..." என்று சொல்லிக் கொண்டே வந்தவள் மாப்பிள்ளைக்கு வாங்கியிருந்த வேஷ்டியைச் செவிட்டு வைத்தி கட்டிக்கொள்வதைப் பார்த்ததும், மற்றதையெல்லாம் மறந்துவிட்டாள்; இரண்டே எட்டில் செவிட்டு வைத்தி அருகில் சென்று, "சீ" என்று ஓர் அதட்டல் போட்டு, அவன் உடுத்திக்கொள்ள முயன்ற வேஷ்டியைப் பிடுங்கினாள்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சொர்ணம்மாளுக்கு வயிற்றெரிச்சல் பொங்கிக்கொண்டு வந்தது. "ஏண்டி சாவித்திரி! உனக்கு என்னடி வந்துடுத்து இவ்வளவு ராங்கி! அந்த வேஷ்டியை அவன் பார்த்தா ஊசியா போயிடும்? இல்லாட்டா, அவன் தொட்டாத் தீட்டுப்பட்டுப் போயிடுமா? அவனைச் சாதியை விட்டுத் தள்ளி வச்சிருக்கா?" என்றாள்.
இந்த வார்த்தைகள் சாவித்திரியின் செவியில் சுருக்கென்று பாய்ந்தன. ஊரார் தங்களைச் சாதிப் பிரஷ்டம் பண்ணியிருப்பதைத்தான் பாட்டி அந்த மாதிரி சுட்டிக் காட்டுகிறாள் என்று அவளுக்குத் தெரிந்தது. ஆனால், அதற்குப் பதில் சொல்லத் தெரியவில்லை. ஆத்திரம் தொண்டையை அடைக்க, நாத் தழுதழுக்க, "இந்தாருங்கோ, பாட்டி! என் புடவையை வேணாலும் சித்தி எடுத்துக்கட்டும். எனக்குப் புதுப் புடவை வேணுங்கறது இல்லை. ஆனால், அவாளுக்கு வாங்கியிருக்கிற வேஷ்டியை இன்னொருத்தர் கட்டிக்கிறது எனக்குக் கொஞ்சங்கூடப் பிடிக்கலை" என்று சொல்லிவிட்டு, வைத்தியிடமிருந்து பிடுங்கிய வேஷ்டியை எடுத்துக்கொண்டு விரைவாக அங்கிருந்து சென்றாள்.
மங்களம், போகின்றவளை ஒரு தடவை விழித்துப் பார்த்துவிட்டு, "ஸ்வாமி! பகவானே! இன்னும் என்னவெல்லாந்தான் என்னைச் சோதிக்கப் போகிறாயோ?" என்று சொல்லி, ஒரு குஞ்சலாடுவை முழுசாக எடுத்து வாயில் போட்டுக் கொண்டாள்.
காமரா உள்ளில் சாவித்திரி, மாப்பிள்ளையின் வேஷ்டியை மடித்துக் கொண்டிருந்தாள். பிரித்தது தெரியாதபடி முன்போலவே மடிக்க அவள் பிரயாசைப்பட்டாள். அவள் கடைசி மடிப்பு மடித்துக் கொண்டிருந்தபோது, வாசலில் வண்டிச் சத்தம் கேட்டது. 'ஓகோ! வண்டி வந்துடுத்து போலிருக்கே! ஆலாத்தி தயாராயிருக்கிறதோ என்னமோ தெரியலையே?' என்று எண்ணிய வண்ணம் வேஷ்டியை அப்படியே வைத்துவிட்டு அறையிலிருந்து வெளியில் வந்தாள்.
அப்போது வண்டிச் சப்தத்தை மங்களமும் கேட்டு, கையில் மஞ்சள் நீருள்ள தாம்பாளத்தை எடுத்துக் கொண்டு சமையலறையிலிருந்து கிளம்பினாள். ஆனால், அதே சமயத்தில் குறுக்கே வந்த செவிட்டு வைத்தியின் காதில் வண்டிச் சத்தமும் கேட்கவில்லை; இவர்கள் எழுந்து வருவதையும் அவன் பார்க்கவில்லை. 'சாவித்திரியை மட்டும் நமக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுத்திருந்தால் இப்படி அவள் நம்மிடம் துடுக்காக இருப்பாளா?' என்று எண்ணிய வண்ணம், ஆகாசத்தைப் பார்த்துக்கொண்டு நடந்தவன், கையில் ஆலாத்தியுடன் வந்த மங்களத்தின் மீது மோதிக் கொண்டான். ஆலாத்தித் தாம்பாளம் கீழே 'டணார்' என்ற சத்தத்துடன் விழுந்தது. "ஐயையோ" என்றாள் மங்களம்.
சாவித்திரி இந்தக் காட்சியைப் பார்த்துவிட்டு, 'நல்ல சமயத்தில் தான் இவர்கள் இப்படிச் செய்வார்கள்' என்று மனத்திற்குள் வைத்தியையும் மங்களத்தையும் வைது கொண்டே, ரேழிப் பக்கம் சென்று, கதவோரத்தில் நின்று பார்த்தாள். வாசலில் வண்டி வந்து நின்றது. அதனுள்ளிருந்து, சம்பு சாஸ்திரி இறங்கினார்; அடுத்தாற்போல் மாப்பிள்ளை இறங்குவாரென்று சாவித்திரி பதை பதைப்புடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். அவர் இறங்குவதைப் பார்த்துவிட்டுத் தான் உள்ளே ஓடிப் போவதற்கு அவள் தயாராயிருந்தாள். ஆனால், சம்பு சாஸ்திரிக்குப் பிறகு யாரும் வண்டியிலிருந்து இறங்கவில்லை. வண்டி கடக், கடக் என்ற சப்தத்துடன் ஒரு வட்டம் அடித்துவிட்டுத் திரும்பிச் சென்றது.
வண்டியிலிருந்து இறங்கிய சாஸ்திரி வீட்டுக்குள் பிரவேசித்தார். சாவித்திரி அவருக்கு முன்னாலேயே உள்ளே சென்று கூடத்தில் நின்றாள். சாஸ்திரி வந்ததும் அவருடைய முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள். சாஸ்திரி, அவளுடைய பரிதாபமான முகத்தைப் பார்த்துவிட்டு, தழதழத்த குரலில், "மாப்பிள்ளை வரவில்லை, அம்மா!" என்று சொன்னார். அப்போது அவர் கண்களிலிருந்து ஜலம் பெருகிற்று.
சாவித்திரி, "நீங்கள் என்ன செய்வேள், அப்பா! அழாதேங்கோ, அப்பா!" என்றாள். அவ்வளவுதான்; அவளுக்கும் தன்னை அறியாமல் துக்கம் பொங்கிக் கொண்டு வந்து விட்டது. எவ்வளவு அடக்கிப் பார்த்தும் முடியவில்லை. விம்மிக் கொண்டே அங்கிருந்து சென்று தாழ்வாரத்தில் போட்டிருந்த கயிற்றுக் கட்டிலின் அருகில் போய் மண்டியிட்டுக் கொண்டு உட்கார்ந்தாள். கட்டிலில் முழங்கையை ஊன்றிக் கொண்டு தேம்பித் தேம்பி அழுதாள்.
சாஸ்திரி அவளைப் பின் தொடர்ந்து வந்து, அவளுடைய தலையைத் தம் கைகளால் தடவிக் கொடுத்துக் கொண்டு நின்றார்.
வீட்டு முற்றத்தில் கூடல்வாய் முனையிலிருந்து மழை ஜலம் சொட்டுச் சொட்டென்று விழுந்து கொண்டிருந்தது.
வீட்டுக்கு வெளியே, மழைக் காலத்துத் தவளைகள் ஏகமாய்ச் சத்தம் போட்டுக் கொண்டிருந்தன. அந்த சத்தம், சோகக் குரலில் "மாப்பிள்ளை வரலை!" "மாப்பிள்ளை வரலை!" என்று கதறுவதுபோல் இருந்தது.