"புல் நுனிமேல் நீர்போல் நிலையாமை என்றெண்ணி இன்னினியே செய்க அறவினை" -நாலடியார்
தலை தீபாவளிக்குப் பிறகு இன்னும் இரண்டு தீபாவளிகள் வந்துவிட்டுப் போயின. கார்த்திகை முடிந்து, மார்கழி மாதம் பிறந்தது.
பருவ காலங்கள் எந்தப் பஞ்சாங்கம் அல்லது காலெண்டரை வைத்துக் கொண்டு தேதி பார்க்கின்றனவோ, தெரியவில்லை. அதிலும் மற்றப் பருவங்கள் கொஞ்சம் முன் பின்னாக வந்தாலும் வரும். பனிக்காலம் மட்டும் தேதி தவறி வருவது கிடையாது. கார்த்திகை எப்போது முடியப் போகிறது, மார்கழி எப்போது பிறக்கப் போகிறது என்று பார்த்துக் கொண்டேயிருந்து மார்கழி பிறந்ததும், பனியும் தொடங்கிவிடுகிறது. ஜனங்களும், கம்பளிச் சொக்காய், பனிக் குல்லாய் காஷ்மீர்ச் சால்வை, கோரைப் பாய் ஆகியவற்றைத் தேடத் தொடங்குகிறார்கள்.
அந்த மாதங்களில் அதிகாலையில் எழுந்திருப்பதற்குச் சாதாரணமாய் யாருக்கும் மனம் வருவதில்லை. பட்சிகளின் உதய கீதத்தைக் கேட்டதும் போர்வையை இழுத்துப் போர்த்திக் கொள்ளத்தான் தோன்றும். ஆனால், மார்கழி மாதம் மதி நிறைந்த நன்னாள் என்பதை நினைத்து அதிகாலையில் பஜனை செய்ய விரும்பும் பக்தர்களும், குடுகுடுப்பாண்டிகளும் மட்டும் பனியையும் குளிரையும் இலட்சியம் செய்யாமல் எழுந்து விடுவார்கள்.
ஒரு நாள் அதிகாலையில் சம்பு சாஸ்திரி வழக்கம் போல் விழித்துக் கொண்டார். ஆனால், உடனே படுக்கையிலிருந்து எழுந்திருக்கவில்லை. அவசரமாய் எழுந்து என்ன ஆகவேண்டுமென்று தோன்றியது. மூன்று வருஷத்துக்கு முன்பு வரையில் மார்கழி மாதம் என்றால், நெடுங்கரை கிராமத்தில் பிரமாதமாயிருக்கும். அதிகாலையில் வீதி பஜனை நடக்கும். பிறகு சம்பு சாஸ்திரியின் வீட்டில் பூஜை, ஹாரத்தி, பொங்கல் பிரஸாத விநியோகம் எல்லாம் உண்டு. அதெல்லாம் இப்போது பழைய ஞாபகமாகி விட்டது. சாஸ்திரியைச் சாதிப் பிரஷ்டம் செய்த வருஷத்தில், வீதி பஜனை நின்று போயிற்று. காலை வேளையில் பொங்கல் பிரஸாதத்துக்காகவும் அவர் வீட்டுக்கு யாரும் போகவில்லை. 'ஊரார் சாதிப்பிரஷ்டம் பண்ணியது இந்த ஒரு காரியத்துக்கு நல்லதாய்ப் போயிற்று' என்று மங்களம் மனத்திற்குள் எண்ணிக் கொண்டாள்.
அடுத்த வருஷத்தில் சாதிக் கட்டுப்பாடு தளர்ந்து விட்டது. ஊரில் தீக்ஷிதருடைய கிருத்திரிமங்களைப் பொறுக்க முடியாத சிலர் பகிரங்கமாகவே சம்பு சாஸ்திரியின் கட்சி பேசத் தொடங்கினார்கள். பிறகு, பெயருக்கு ஏதோ பிராயச்சித்தம் என்று நடந்தது. இப்போது அக்கிரகாரத்தில் அநேகர் சாஸ்திரி வீட்டுக்கு வந்து போய்க் கொண்டிருந்தார்கள்.
ஆனால், முன்னைப் போல் சம்பு சாஸ்திரிக்கு வாழ்க்கையில் உற்சாகம் இல்லை; முன் மாதிரி பணச் செலவு செய்வதற்கு வேண்டிய வசதிகளும் இல்லை. சாவித்திரி, புருஷன் வீட்டுக்குப் போகாமலிருந்தது அவருடைய உள்ளத்தில் ஒரு பெரிய பாரமாய் இருந்து கொண்டிருந்தது. ஆகவே, ஏகாதசி பஜனை, மார்கழி பஜனை எல்லாம் நின்று போயின.
ஆனால் சாஸ்திரி அதிகாலையில் எழுந்திருப்பது மட்டும் நிற்கவில்லை. தாம் எழுந்திருக்கும்போது சாவித்திரியையும் எழுப்பி விட்டு விட்டுத் தடாகத்துக்குப் போவார். பனிக் காலத்தில், அதிகாலையில் வெத வெத என்று சூடாயிருக்கும் குளத்து ஜலத்தில் ஸ்நானம் செய்வது ஓர் ஆனந்தமாயிருக்கும். பிறகு, சூரியோதயம் வரை காத்திருந்து சூரிய நமஸ்காரம் செய்வார். பனிக் காலத்தில், சூரியன் கிளம்பிக் கொஞ்ச நேரம் வரையில் பனிப் படலம் சூரியனை மறைத்துக் கொண்டிருக்கும். 'இப்படித்தானே மாயையாகிற பனி ஆத்ம சூரியனை ஜீவனுடைய கண்ணுக்குப் புலப்படாமல் மறைத்துக் கொண்டிருக்கிறது?' என்று வேதாந்த விசாரணை செய்வார்.
அவர் வீட்டுக்குத் திரும்பி வருவதற்குள், சாவித்திரி எழுந்திருந்து, படங்களுக்கு அலங்காரம் செய்து, விளக்கேற்றி வைத்து, பூஜைக்கு எல்லாம் எடுத்து வைத்திருப்பாள். சாஸ்திரி வந்ததும் பூஜை செய்துவிட்டு வேறு காரியங்களைப் பார்ப்பார்.
இன்று, வழக்கம் போல், அதிகாலையில் விழித்துக் கொண்டவர், பழைய நாளில், மார்கழிப் பஜனை எவ்வளவு விமரிசையாய் நடந்தது என்பதைப் பற்றிச் சிறிது நேரம் சிந்தனை செய்து கொண்டிருந்தார். பிறகு, ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு, "அம்மா! சாவித்திரி! எழுந்திரு, அம்மா!" என்றார். அதே சமயத்தில் மனத்திற்குள், 'ஐயோ! இந்தக் குழந்தையின் கஷ்டம் எப்போது தீரப்போகிறதோ, தெரியவில்லையே!' என்று ஏங்கினார்.
அப்போது வாசலில், குடுகுடுப்பாண்டி, "நல்ல சேதி வருகுது, நல்ல சேதி வருகுது! குடுகுடுக் குடுகுடுக்! ஐயா வீட்டுக்கு நல்ல சேதி வருகுது!! குடுகுடுக் குடுகுடுக்!" என்று சொல்லிக் கொண்டு போனான்.
சாஸ்திரியின் குரலைக் கேட்டு சாவித்திரி மட்டும் விழித்துக் கொள்ளவில்லை; மங்களமும் விழித்துக் கொண்டாள். அவள் எழுந்து போகையில், "நல்ல சேதி வரும், நல்ல சேதி வரும்னு இரண்டு வருஷமாய்த்தான் காத்திண்டிருக்கு. வந்த பாட்டைக் காணோம். இந்தத் துக்கிரியின் தலையிலே பகவான் என்ன எழுதியிருக்காரோ?" என்று சொல்லிக் கொண்டே போனாள்.
"ஹே ராமச்சந்திரா!" என்றார் சாஸ்திரியார். பிறகு, "அவள் கிடக்கா, குழந்தை! நீ போய்ப் பூஜைக்கு ஆக வேண்டியதைப் பார்!" என்றார்.
சாவித்திரி புருஷன் வீட்டுக்குப் போகாமலிருப்பது பற்றி மங்களம் இடித்துக் காட்டியது இது முதல் தடவையல்ல; எத்தனையோ தடவை அவள் இந்த மாதிரி சொல்லிச் சொல்லிச் சாவித்திரிக்குக் காய்த்துப் போயிருந்தது. எனவே, சாதாரணமாக அவள் அதை இலட்சியம் செய்வதில்லை. ஆனால், இன்றைய தினம் அவளுடைய மனம் ரொம்பவும் புண்பட்டுப் போயிற்று. ஏனெனில், வாசலில் குடுகுடுப்பாண்டி, "நல்ல சேதி வருகுது; நல்ல சேதி வருகுது!" என்று கூவியபோது, மங்களத்துக்குத் தோன்றிய அதே எண்ணம் சாவித்திரிக்கும் தோன்றியது. 'ஒரு வேளை இன்றைக்கு நல்ல சேதி வரக்கூடாதா? என்னை அனுப்பி வைக்கும்படி அவாளிடமிருந்து கடிதம் வரக்கூடாதா?' என்று அவள் மனம் ஏங்கிற்று. அந்தச் சமயத்தில் மங்களம் அம்மாதிரி இடித்துக் காட்டிய படியால் சாவித்திரிக்குத் துக்கம் அடைத்துக் கொண்டு வந்தது.
முடிந்த வரையில் துக்கத்தை அடக்கிக் கொண்டு சாவித்திரி தந்தையின் பூஜைக்கு ஆக வேண்டிய காரியங்களைப் பார்த்தாள். பிறகு வீட்டு வேலைகளையும் செய்தாள். எல்லாம் ஆன பிறகு, காமரா உள்ளுக்குப் போய்க் காகிதம், பேனா, மைக்கூடு எடுத்து வைத்துக் கொண்டு கடிதம் எழுதத் தொடங்கினாள்.
யாருக்குக் கடிதம் எழுதினாள் என்று சொல்லவும் வேண்டுமா? காரியம் செய்யும்போதும், கதை கேட்கும் போதும், கடவுளைத் தியானிக்கும் போதும், உண்ணும் போதும், உறங்கும் போதும் யாருடைய நினைவாகவே இருந்தாளோ, அந்த மகா-௱-௱-ஸ்ரீ ஸ்ரீதரன் பி.ஏக்குத் தான்.
"என் உயிருக்குயிரான பிராணநாதருக்குத் தங்கம் அடியாள் சாவித்திரி அனந்த கோடி நமஸ்காரம்..."
இப்படி எழுதிச் சாவித்திரி நிறுத்தினாள். இதுவரையில் இம்மாதிரி எத்தனை கடிதம் எழுதியிருக்கிறோம் என்பது ஞாபகம் வந்தது. குறைந்தது, பத்துப் பன்னிரண்டு கடிதங்கள் இருக்கும். அவையெல்லாம் என்ன ஆயின?
மங்களம் அதிகாலையில் சொன்னது ஞாபகம் வந்தது; "இந்தத் துக்கிரியின் தலையெழுத்து எப்படி இருக்கிறதோ?" ஆமாம்; இந்தத் துக்கிரியின் ஜன்மத்தில் தலையெழுத்துச் சரியாயில்லாத போது எத்தனை கடுதாசி எழுதித்தான் என்ன பிரயோஜனம்?
பாவம்! சாவித்திரி, தன்னைப் புக்ககத்துக்கு அழைத்துப் போகாததன் காரணம், ஊரிலே தங்களைச் சாதிப் பிரஷ்டம் பண்ணி வைத்திருந்ததுதான் என்று நம்பியிருந்தாள். தலை தீபாவளிக்கு நாலு நாளைக்குப் பிறகு கல்கத்தாவிலிருந்து கடிதம் வந்தது. அதில், அந்த மாதிரிதான் எழுதியிருந்தது. ஊரார் அவர்களைச் சாதிப் பிரஷ்டம் செய்து வைத்திருப்பதாகச் செய்தி கிடைத்திருக்கிறதென்றும், சாஸ்திரியின் காரியங்கள் தங்களுக்கும் கட்டோ டே பிடிக்கவில்லையென்றும், வீட்டிலே ஒரு பெண் இருக்கிறாளே என்பதை உத்தேசித்தாவது ஜாக்கிரதையாய் நடந்து கொள்ள வேண்டாமா என்றும், இத்தகைய நிலைமையில் தலை தீபாவளிக்கு வரப்பிடிக்காதபடியால் வரவில்லையென்றும் கடிதம் சொல்லிற்று.
இந்தக் கடிதம் வந்த பிறகு, சாவித்திரியின் ஏமாற்றமெல்லாம் ஊராரின் மேல் கோபமாக மாறிற்று. அவர்கள் ஏதோ இல்லாததும் பொல்லாததும் எழுதியிருக்க வேண்டுமென்றும், அதனால் தான் வரவில்லையென்றும், உண்மை விவரங்கள் தெரியும்போது மாப்பிள்ளையும் சம்பந்திகளும் தீபாவளிக்கு வராதது பற்றி வருத்தப்படுவார்களென்றும் அவள் எண்ணினாள். ஆகவே, அப்பாவை விவரமாகக் கடிதம் எழுதும்படி அடிக்கடி தூண்டினாள். அவரும் எழுதினார். ஒரு தடவை, இரண்டு தடவை, மூன்று தடவை எழுதினார். ஒன்றுக்காவது பதில் கிடையாது. பிராயச்சித்தம் செய்து கொண்டு ஊர்க் கட்டுப்பாடு நிவர்த்தியான பிறகு மறுபடியும் கடிதம் எழுதினார். அப்போதும் பதில் இல்லை.
சில நாளைக்குப் பிறகு, சாந்திக் கல்யாணம் எப்போது வைத்துக் கொள்வதாக உத்தேசம் என்று கேட்டு எழுதியதற்கும் அதே கதிதான்.
ஒரு நாளைக்குச் சம்பு சாஸ்திரி, "அம்மா, சாவித்திரி நான் எத்தனையோ கடிதம் எழுதியாச்சு, ஒன்றும் பிரயோஜனம் இல்லை. நீயாவது உன் அகத்துக்காரருக்கு ஒரு கடிதம் எழுதிப் பாரம்மா!" என்றார்.
சாவித்திரியின் உள்ளத்தில் இந்த எண்ணம் வெகு நாளாக இருந்து கொண்டிருந்தது. தகப்பனாரே சொன்னதும், உடனே கடிதம் எழுதத் தொடங்கினாள். ஸ்ரீதரனிடம் தனக்குள்ள அன்பையும், இத்தனை காலமாக அவரைப் பாராததால் தான் அநுபவிக்கும் துக்கத்தையும், உடனே அவரை வந்து அடையத் தன் உள்ளம் துடித்துக் கொண்டிருப்பதையும், அவளால் முடிந்த வரையில் உருக்கமாக எழுதினாள்.
இந்தக் கடிதத்துக்கு உடனே பதில் வருமென்று சாவித்திரி நம்பினாள். தினந்தோறும் தபால்காரன் வரவை ஆவலுடன் எதிர்பார்த்தாள். இரண்டு வாரம் வரையில் பதில் வராமல் போகவே, ஒரு வேளை போய்ச் சேரவில்லையோ என்னவோ என்று மறுபடியும் எழுதினாள்.
இந்த மாதிரி ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி மனத்தைத் தேற்றிக் கொண்டு, சென்ற ஏழெட்டு மாதத்தில் பத்துக் கடிதங்கள் எழுதிவிட்டாள்.
ஆனால், பாவம், இந்தக் கடிதங்கள் எல்லாம் அவள் எதிர்பார்த்ததற்கு நேர் மாறான பலனை அளித்து வந்தன என்பது அவளுக்கு எப்படித் தெரியும்?
ஆம்; அவளுடைய கடிதம் ஒவ்வொன்றும் ஸ்ரீதரனுக்கு அவள்மேல் இருந்த வெறுப்பை அதிகப்படுத்தியே வந்தன. மேல் விலாசத்தில் அவளுடைய குழந்தைக் கையெழுத்தைப் பார்த்ததுமே அவனுக்குக் கோபம் கோபமாய் வரும். 'ஐயோ! இந்தப் பிராப்தத்தைக் கொண்டு வந்து என் கழுத்திலா கட்ட வேண்டும்?' என்று எண்ணுவான். யாராவது பார்த்துவிடப் போகிறார்களே என்ற பயத்துடன், கடிதத்தை அவசர அவசரமாகப் பார்த்து விட்டு, சில சமயம் படிக்காமலேயே, சுக்கு நூறாய்க் கிழித்துப் போட்டு விடுவான். சாவித்திரியின் கடிதங்களில் அவள் காட்டியிருந்த விநயம், பயபக்தி, உருக்கம் எல்லாம் அவன் மனத்தில் அருவருப்பையே உண்டாக்கின.
இதையறியாத சாவித்திரி மேலும் மேலும் மேலும் கடிதம் எழுதிப் போட்டுக் கொண்டேயிருந்தாள். சம்பு சாஸ்திரியும் சலிக்காமல், அம்பாளை வேண்டிக் கொண்டு, அவளுடைய கடிதங்களைத் தபாலில் சேர்த்து வந்தார்.
கடைசியாக சாவித்திரி இன்றைய தினம் கடிதம் எழுத ஆரம்பித்தபோது. இதுதான் அவருக்கு நாம் எழுதும் கடைசிக் கடிதம் என்று தீர்மானித்துக் கொண்டாள். மேஜையின் மீதிருந்த 'ஸெல்லூலாயிட்' பொம்மையைப் பார்த்தவண்ணம், "பாப்பா! இந்தக் கடிதத்துக்காவது அவாளிடமிருந்து பதில் வந்தால் போச்சு இல்லாமற் போனால், நான் "கிணற்றிலோ குளத்திலோ விழுந்து செத்துப் போயிடுவேன். அப்புறம் உன்னோடு யார் விளையாடுவார்கள்?" என்று மனத்திற்குள் சொல்லிக்கொண்டாள். அப்போது, தான் மூன்று வயதிலே கிணற்றில் விழுந்ததாக அப்பா சொன்னது ஞாபகம் வந்தது. 'ஐயோ! அப்போதே நான் செத்துப் போயிருக்கக் கூடாது? பாவி நல்லான் எதற்காக என்னை எடுத்தான்?' என்று நினைத்துப் பெருமூச்சு விட்டாள். பிறகு, மனத்தை திடப்படுத்திக் கொண்டு, ஒருவாறு கடிதத்தை எழுதி முடித்தாள்.
அந்தச் சமயத்தில், சம்பு சாஸ்திரி, "அம்மா, சாவித்திரி! உன் கலி தீர்ந்துவிட்டது அம்மா!" என்று சொல்லிக் கொண்டே உள்ளே வந்தார்.
ராஜாராமய்யரும் அவருடைய நண்பர்களும் நடத்திய ஆவி உலகச் சோதனை அகால மரணத்துக்கு உள்ளான விஷயத்தை நாம் துயரத்துடன் தெரிவிக்க வேண்டியதாயிருக்கிறது. மேஜை ஒரு முழ உயரம் கிளம்பியதற்கு மேல் அவர்களுடைய சோதனையில் வேறு எவ்விதப் பலனும் ஏற்படவில்லை. ஆகவே, எல்லோரும் ஒருவாறு சலிப்பு அடையும் தருணத்தில், இங்கிலாந்திலிருந்து மிஸ் மேரியா ஹாரிஸன் என்னும் பெண்மணி வந்து சேர்ந்தாள். இவள் ஒரு பிரசித்தி பெற்ற 'மீடியம்'; அதாவது, ஆவி உலகவாசிகளைத் தன்னுடைய தேகத்தின் மீது ஆவிர்ப்பவிக்கச் செய்யக்கூடிய சக்தி வாய்ந்தவள். ராஜாராமய்யர் - பீடர்ஸன் சங்கத்தார் இந்த 'மீடியம்' அம்மாளுக்கு வரவேற்பு அளித்தார்கள். இவர்களுடைய ஆராய்ச்சியில் அந்த அம்மாள் மிகவும் சிரத்தை காட்டி, தானே அவர்களுக்கு உதவி செய்வதாகவும் சொன்னாள்.
பலநாள் முயற்சிக்குப் பிறகு ஒரு நாளைக்கு அந்த அம்மாள் தன்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றக்கூடிய நிலைமை ஏற்பட்டது. அதாவது, அவள் பேரில் ஆவிகள் ஆவிர்ப்பவித்து, கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லலாயின. ஆனால், பதில் வாயினால் சொல்லவில்லை; 'மீடிய'த்தின் கையைப் பிடித்துப் பதில்களை எழுதிக் காட்டின.
முதலில், மிஸ்ஸஸ் பீடர்ஸனுடைய ஆவி ஆவிர்ப்பவமாயிற்று. பீடர்ஸன் துரை பூலோகத்தில் தங்களுடைய வாழ்க்கையைப்பற்றிக் கேட்டதற்கு, "அதெல்லாம் எனக்கு மறந்து போய்விட்டது; இந்த உலகத்துக்கு வந்த பிறகு பூலோக விஷயங்கள் ஒன்றும் ஞாபகம் இருப்பதில்லை" என்று ஆவி சொல்லிற்று. பிறகு, தான் இருக்கும் உலகம் அற்புதமான அழகு வாய்ந்தது என்றும், எங்கே பார்த்தாலும் புஷ்பக் காட்சியாயிருக்கிறது என்றும், வானவில்லின் வர்ணங்கள் எங்கும் காணப்படுகின்றன என்றும், எப்போதும் சுகந்தம் வீசுகிறது என்றும், இப்படிப்பட்ட ஆச்சரிய உலகத்துக்குப் பீடர்ஸன் துரையும் சீக்கிரத்தில் வந்து சேரவேண்டுமென்றும் எழுதித் தெரிவித்தது.
இந்த எழுத்து ஒருவாறு தம் மனைவியின் கையெழுத்தைப் போல் இருக்கிறதென்று பீடர்ஸன் துரை சொன்னார்.
பிறகு, ராஜாராமய்யருடைய தகப்பனார், 'மீடியம்' அம்மாளின் மீது ஆவிர்ப்பவித்தார். அவர் எழுதிய கையெழுத்து மிஸ்ஸஸ் பீடர்ஸனின் எழுத்துக்கு முற்றும் மாறாக, ஆண்பிள்ளைக் கையெழுத்தைப் போல் இருந்தது. இதைப் பார்த்ததுமே அங்கே கூடியிருந்தவர்களெல்லாம் அதிசயப்பட்டுப் போனார்கள். ஆனால் ராஜாராமய்யருக்கு அதைவிட ஆச்சரியம் அளித்தது என்னவென்றால், தம்முடைய தகப்பனார் ஓர் அட்சரங்கூட இங்கிலீஷ் தெரியாதவராயிருந்தும், இப்போது இவ்வளவு சுத்தமான் இங்கிலீஷ் எப்படி எழுதுகிறார் என்பது தான். மேலும் வைத்தீசுவரய்யர் தாம் வசிக்கும் உலகத்தைப் பற்றி வர்ணித்ததும், மிஸ்ஸஸ் பீடர்ஸன் வர்ணித்ததும், ஏறக்குறைய ஒரே மாதிரியாகத்தான் இருந்தது. மேலும் அவர், "இந்த உலகத்தில் சாதி, மத வித்தியாசம் ஒன்றும் கிடையாது. கிறிஸ்தவர்களும், ஹிந்துக்களும் ஒன்றுதான். எல்லாரும் பர மண்டலத்திலுள்ள ஏசு பிதாவைத்தான் வணங்குகிறோம்" என்றார். தம் தகப்பனார் உயிர் வாழ்ந்த போது, அவர் கிறிஸ்தவர்களைப் பற்றி எவ்வளவு கேவலமாக நினைத்தார் என்பது ராஜாராமய்யருக்கு ஞாபகம் வந்தபோது, பரலோகத்தில் அவருடைய மாறுதல் ஆச்சரியமாய்த்தான் இருந்தது. ஆனால் இது எல்லாவற்றையும் விட, அவரை அதிசயத்தினால் திகைக்கப் பண்ணிய விஷயம் வேறொன்று: "வருஷாவருஷம் நான் தங்களை உத்தேசித்து சிராத்தம் பண்ணுகிறேனே, அன்று தாங்கள் பூலோகத்துக்கு வருவதுண்டா?" என்று ராஜாராமய்யர் கேட்டதற்கு, வைத்தீசுவரய்யரின் ஆவி எழுதிய பதிலாவது:-"ஆமாம்; வருஷம் ஒரு தடவை நான் என்னுடைய கல்லறைக்கு வருகிறேன். அங்கே நீ போட்டிருக்கும் புஷ்பங்களின் சுகந்தத்தை உட்கொண்டு விட்டுத் திரும்புகிறேன்!"
ராஜாராமய்யர் தம் தகப்பனாரின் உடலுக்குக் கொள்ளி வைத்துக் கொளுத்தியதுமல்லாமல், அவருடைய எலும்புகளைப் பயபக்தியுடன் கொண்டுபோய்க் கங்கையில் போட்டுவிட்டு வந்தவர். எனவே, அவருடைய தகப்பனாரின் ஆவி, "என்னுடைய கல்லறைக்கு வருகிறேன்" என்று சொன்னதும், ராஜாராமய்யருக்கு அளவிலாத வியப்பு உண்டாயிற்று. அதை நினைக்க நினைக்க, இந்த ஆவி உலகச் சோதனையிலே அவருடைய நம்பிக்கை சிதறுண்டு போயிற்று.
இதற்கு நேர்மாறாக, பீடர்ஸன் துரையின் நம்பிக்கை அதிகமாயிற்று. அவர் தம்முடைய மனைவி வசிக்கும் உலகத்துக்குத் தாமும் சீக்கிரம் போகவேண்டுமென்றும் அதற்கு முன்னால் தாம் ஜன்ம தேசத்தையும் ஒரு தடவை பார்த்துவிட வேண்டுமென்றும் தீர்மானித்து உத்தியோகத்திலிருந்து விலகிச் சீமைக்குப் பிரயாணமானார்.
அவர் போன பிறகு, ராஜாராமய்யரின் ஆவி உலக ஆராய்ச்சியும் சமாப்தி அடைந்தது.
இப்போது ராஜாராமய்யர் தமது முழுக் கவனத்தையும் மனோதத்துவ ஆராய்ச்சியில் செலுத்தியிருந்தார். ஹிப்னாடிஸம் என்கிற மனோவசியம், டெலிபதி என்கிற மானிடத் தந்தி ஆகிய கலைகளைப் பற்றி ஏராளமான நூல்களைப் படித்தார். அந்த அப்பியாசங்களைச் செய்வதற்குப் பூர்வாங்கமாக இப்போது காந்த சக்தி தேடிக் கொள்வதில் ஈடுபட்டிருந்தார். தமது அறையின் ஒரு சுவரில், வட்டவடிவமான ஒரு பெரிய கறுப்புப் புள்ளியை எழுதிக் கொண்டு, அதைக் கண் கொட்டாமல் உற்றுப் பார்த்தவண்ணம், "இதோ என் கண்கள் காந்த சக்தி பெற்றுவிட்டன" என்று ஜபிப்பார்.
பிறகு, கண்களை மூடிக் கொண்டு, "இதோ எனக்குக் காந்த சக்தி உண்டாகிறது. என்னைச் சுற்றிலுமுள்ளவர்கள் எனக்குக் கட்டுப்படுகிறார்கள். நான் எது சொன்னாலும் உடனே கேட்கிறார்கள். ஸ்ரீதரா! நான் கட்டளையிடுகிறேன்; நீ கீழ்ப்படிகிறாய்! தங்கம்! நான் சொல்கிறேன்; நீ கேட்கிறாய்!" என்று இந்த மாதிரி திருப்பித் திருப்பிச் சொல்வார்.
இவ்வாறு ஒரு நாள் சாயங்காலம் அவர் மாடி அறையில் காந்த சக்தி அப்பியாசத்தில் ஈடுபட்டிருக்கும் போது தான், வாசலில் கார் வந்து நின்று பலமாக ஹாரன் அடிக்கும் சத்தம் கேட்டது. ராஜாராமய்யர் தமது அப்பியாசத்தை நிறுத்தி ஜன்னல் பக்கமாக வந்து பார்த்தார்.
வாசலில், ஒரு 'ஸ்போர்ட்ஸ் மாடல் கார்' நின்றது. அதில், டிரைவர் ஸ்தானத்தில் ஸ்ரீதரன் உட்கார்ந்திருந்தான். அவனுக்கு அருகில், ஸுஸி அமர்ந்திருந்தாள். அப்போது வீட்டுக்குள்ளிருந்து வேலைக்காரன் வரவே, ஸ்ரீதரன் அவனிடம் தான் ஆபீஸுக்குக் கொண்டு போகும் கைப்பெட்டியைத் தூக்கிக் கொடுத்தான். உடனே, வண்டி விர்ரென்று கிளம்பிப் போய் விட்டது.
ராஜாராமய்யருக்கு இது ஒன்றும் அதிசயம் அளிக்கவில்லை. ஏனென்றால், தீபாவளியின் போது ஸ்ரீதரன் கூட்டிக் கொண்டு வந்த சிநேகிதன் உண்மையில் சிநேகிதி என்பது சீக்கிரத்திலேயே தெரிந்து போயிற்று. தகப்பனாரும் தாயாரும் எவ்வளவு புத்தி சொல்லியும் பயன்படவில்லை. அதைப் பற்றிப் பேச்சு எடுத்தால் ஸ்ரீதரன் உடனே, "நீங்கள் என் சம்மதத்தைக் கேளாமல் பலவந்தமாக ஏன் கல்யாணம் பண்ணி வைத்தீர்கள்? நான் என் இஷ்டம் போல்தான் இருப்பேன்" என்று ஒரே அடியாய் அடித்துவிட்டுப் போய்விடுவான்.
ஸ்ரீதரனை எப்படி நல்ல வழிக்குத் திருப்புவது என்று ராஜாராமய்யர், தங்கம்மாள் இரண்டு பேருக்கும் ஒரே கவலையாயிருந்தது.
ராஜாராமய்யர் முக்கியமாக அதற்காகவே காந்த சக்தி சம்பாதிக்கும் அப்பியாசத்தில் ஈடுபட்டிருந்தார். தங்கம்மாளும் தனக்குத் தெரிந்த வழியில் என்னவெல்லாமோ யோசனை செய்து கொண்டிருந்தாள்.
இன்று சாயங்காலம், ஸ்ரீதரன் வாசலில் நின்றுவிட்டு, வீட்டுக்குள் வராமல் கூடப் போய்விட்டதும், தங்கம்மாள் மேலே ராஜாராமய்யரைத் தேடிக் கொண்டு வந்தாள்.
"ஏன்னா? இப்படி எத்தனை நாளைக்கு இந்தப் பிள்ளையைக் கேள்வி முறையில்லாமே விட்டிருக்கிறது? நீங்களும் ஒரு புருஷாள்னு உட்கார்ந்துண்டு எல்லாத்தியும் பாத்திண்டிருக்கயளே?" என்றாள்.
"அதுக்கு என்னை என்ன பண்ணச் சொல்றே! அவன் அப்பா பிள்ளையாயிருந்தான்னா நான் சொன்னத்தைக் கேட்பான். ஆரம்பத்திலிருந்தே அவனை அம்மா பிள்ளையாய்ப் பண்ணியாச்சு! இப்ப முட்டிண்டு என்ன பிரயோஜனம்?"
"நான் ஒண்ணும் இப்ப முட்டிக்கலை. அப்பவே கூடத்தான் முட்டிண்டேன். கல்கத்தாவிலே நாம் இருந்து வாழ்ந்ததெல்லாம் போதும். குழந்தைக்காவது நம்ம பக்கத்திலே வேலை பண்ணி வைங்கோன்னு சொன்னேன் கேட்டாத்தானே!"
"ஆமாம்; நம்ம பக்கத்திலே உன் பிள்ளைக்கு உத்தியோகம் கொடுக்கிறேன்னு காத்துண்டிருந்தா-நான் வேண்டான்னுட்டேனாக்கும்! உத்தியோகந்தான் போகட்டும்; நம்ம ஊர்ப்பக்கமாப் பார்த்து நீ கல்யாணம் பண்ணிவச்சயே? அது என்ன ஆச்சு?"
"எல்லாம் சரியாத்தான் ஆச்சு. கல்யாணம் பண்ணினதிலே என்ன குறைவாப் போச்சு? நான் ஊருக்குப் போய் மூவாயிரம் ரூபாயோடே அந்தப் பொண்ணை அழைச்சுண்டு வராமல் போனா, என் பெயர் தங்கம்மா இல்லை!"
"குஷாலாய்ப் போய் அழைச்சுண்டு வா! பிள்ளையோடே மல்யுத்தம் பண்ணு!"
"மல்யுத்தம் பண்ணுவானேன்? மாட்டுப் பொண்ணு வந்துட்டா, இவனுக்கு இந்தச் சட்டைக்காரிப் பைத்தியம் கட்டாயம் போயிடும். நீங்க மட்டும் இவன் கிட்ட இப்போ ஒண்ணும் சொல்லி வைக்காதேங்கோ!"
"நான் என்னத்துக்குச் சொல்றேன்? பைத்தியமா?"
"இந்த மாதிரி நான் நரசிங்கபுரத்துக்கு வர்றேன், அங்கே வந்து என்னைப் பார்க்கறதுன்னுட்டு, சம்பு சாஸ்திரிக்கு ஒரு கடுதாசி எழுதுங்கோ."
"அது மட்டும் என்னாலே முடியாது. நீயாச்சு, உன் பிள்ளையாச்சு, மாட்டுப் பொண்ணாச்சு! எப்படியாவது போங்கோ."
ராஜாராமய்யருடைய பிடிவாதத்தை அறிந்திருந்த தங்கம்மாள், அதே தெருவில் குடியிருந்த இன்னொரு தமிழ்நாட்டுக் குடும்பத்தைச் சேர்ந்த பையனை அழைத்துக் கொண்டு வந்து சம்பு சாஸ்திரிக்குக் கடிதம் எழுதச் செய்தாள். தான் சீக்கிரத்தில் நரசிங்கபுரத்துக்கு வருவதாகவும் மாட்டுப் பெண்ணைக் கல்கத்தாவுக்குக் கூட்டிக் கொண்டு போகும் உத்தேசம் இருக்கிறதென்றும், ஆனால் சம்பு சாஸ்திரி முதலில் நரசிங்கபுரத்திற்கு வந்து தன்னைப் பார்த்தால் நேரில் எல்லாத் தகவலும் தெரிவிப்பதாகவும் எழுதுவித்துத் தபாலிலும் போட்டாள்.
மேலே சொன்ன தங்கம்மாளின் கடிதத்தைப் படித்தவுடனே தான், சாஸ்திரியார் அவ்வளவு சந்தோஷத்துடன் வந்து, "சாவித்திரி! உன் கலி தீர்ந்துவிட்டது, அம்மா!" என்றார்.
சாவித்திரிக்கு மயிர்க்கூச்சல் எடுத்தது. திடுக்கிட்டு எழுந்திருந்து, "ஏதாவது கடுதாசி வந்திருக்கா, அப்பா!" என்று கேட்டுக் கொண்டு வந்தாள்.
"ஆமாம்மா! சம்பந்தியம்மாள் நரசிங்கபுரத்துக்குப் பொண்ணைப் பார்க்கிறதுக்கு வர்றாளாம். திரும்பிப் போறபோது கல்கத்தாவுக்கு உன்னைக் கூட்டிண்டு போறாளாம்" என்றார்.
சாவித்திரி நம்ப முடியாத சந்தோஷத்துடன், "நிஜமாகவா, அப்பா!" என்று கூவினாள்.
இந்தச் சம்பாஷணையை ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்துவிட்டுச் சமையலறைக்குப் போனாள் மங்களம்.
"அடி அம்மா! இந்தப் பொண்ணுக்கு விமோசனம் பிறந்துட்டாப்பலேயிருக்குடி!" என்றாள்.
"விமோசனம் பிறந்திருக்கா? அது என்ன?" என்றாள் சொர்ணம்மாள்.
"சம்பந்தியம்மாள் நரசிங்கபுரத்துக்கு வர்றாளாம். இவளைக் கூட்டிண்டு வந்து விடச் சொல்லி எழுதியிருக்காளாம்."
"அந்தப் பெரிய மனுஷிக்கு இங்கே வந்து அழைச்சுண்டு போக முடியலையாக்கும்! உன்னையும் என்னையும் பார்க்க வேண்டியிருக்கலையாக்கும்."
"அது போனால் போகட்டுண்டு, அம்மா! இந்தப் பொண் எப்படியாவது புக்காத்துக்குப் போய்ச் சௌக்கியமாயிருந்தால் சரி! அரசமரத்துப் பிள்ளையாரே! சாவித்திரி புக்காத்துக்குப் போனா, உனக்கு 108 கொழக்கட்டை பண்ணி நைவேத்யம் பண்றேன்" என்றாள் மங்களம்.
"அடி அசடே! புக்காத்துக்குப் போய்த் திரும்பி வராதிருந்தா நைவேத்யம் பண்றேன்னு வேண்டிக்கோ. இது வாயையும் கையையும் வச்சிண்டு, அங்கே போய் வாழணுமே! உன் சம்பந்தி இலேசுப்பட்டவள்னு நெனச்சுக்காதே. என்னத்துக்குத் தான் வராமே இவரைக் கூட்டிண்டு வந்து விடச் சொல்லியிருக்கா, தெரியுமா? அப்பத்தானே இந்தப் பிராமணனை இன்னும் நன்னா மொட்டையடிக்கலாம்!..."
இந்தச் சமயத்தில், செவிட்டு வைத்தி, "அக்கா! அம்மா என்ன சொல்றா?" என்று கேட்டான்.
மங்களம் ஜாடை காட்டிக் கொண்டே, "சாவித்திரி புக்காத்துக்குப் போகப் போறாளாண்டா!" என்றாள்.
"சாவித்திரிதானே? ஆமாம்; கதவைச் சாத்திண்டு ஆம்படையானுக்குக் கடுதாசி எழுதறா, எழுதறா, அப்படியே எழுதறா!"
சொர்ணம்மாள், தாலி கட்டுவதுபோல் ஜாடை காட்டிக் கொண்டு, "இல்லேடா! அவள் ஆம்படையானாத்துக்குப் போகப் போறா!" என்றாள்.
"அதான் நானும் சொல்றேன். அப்பவே எனக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுத்திருந்தா, ராஜாத்தியாட்டமா வச்சிண்டிருப்பனே!"
"சீச்சீ! வாயை மூடிக்கோ!" என்றாள் மங்களம்.
கல்கத்தா கடிதத்தை அப்பாவிடமிருந்து வாங்கிப் படித்ததும் சாவித்திரிக்குக் கொஞ்சம் உற்சாகம் குறைந்தது. இத்தனை நாள் கழித்து வந்த இந்தக் கடிதமாவது மாப்பிள்ளை எழுதினதாயிருக்கக் கூடாதா என்று நினைத்தாள். பிறகு, 'படித்த நாகரிக மனுஷராயிருந்தாலும் தாயார் தகப்பனாருக்கு அடங்கிய பிள்ளை. அவர்களை மீறி ஒன்றும் செய்யமாட்டார் போல் இருக்கிறது. நாமும் புக்காத்துக்குப் போனால், மாமனார் மாமியாருக்கு அடங்கி நடந்து அவரைச் சந்தோஷப்படுத்த வேண்டும்' என்று நினைத்துக் கொண்டாள். "அழைத்துப் போகிற உத்தேசம் இருக்கிறது" என்று மட்டும் தங்கம்மாள் எழுதியிருந்தபடியால், அதற்கு ஒன்றும் தடங்கல் இல்லாமல் இருக்கவேண்டுமேயென்று கவலைப்பட்டாள். எப்படியும் தான் இன்று எழுதிய கடிதத்தைத் தபாலில் சேர்க்க வேண்டிய அவசியமில்லை. அதைப் பத்திரமாய் வைத்திருந்து கல்கத்தாவுக்குப் போன பிறகு மாப்பிள்ளையிடம் காட்ட வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டாள்.
சம்பு சாஸ்திரி குறிப்பிட்ட தேதியில் நரசிங்கபுரத்துக்குப் போனார். அவரிடமிருந்து இரண்டு நாளைக்கெல்லாம் சாவித்திரிக்கு ஒரு கடிதம் வந்தது. "சம்பந்தியம்மாள் உன்னைக் கூட்டிக்கொண்டு போவதாக ஏற்பாடாகிவிட்டது. அடுத்த புதன்கிழமை நாள் பார்த்திருக்கிறது. எனக்கு நாகப்பட்டினத்தில் கொஞ்சம் வேலை இருக்கிறது. பார்த்துக்கொண்டு நாலு நாளில் வருகிறேன். அதற்குள், உன்னை அனுப்புவதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து வைக்கும்படி சித்தியிடம் சொல்லவும்" என்று எழுதியிருந்தது.
சாவித்திரிக்கு உண்டான குதூகலத்துக்கு அளவேயில்லை. "பகவானே! கடைசியில் உன்மனம் இரங்கிற்றா? என்னுடைய பிரார்த்தனையெல்லாம் பலித்ததா? உண்மையிலேயே என் கலி தீரப்போகிறதா? இந்தச் சனியன்களை விட்டுப் போகப் போகிறேனா! கல்கத்தாவுக்குப் போய் என் பிராண நாதருடன் குடித்தனம் நடத்தப் போகிறேனா? கல்கத்தா பட்டணம் எப்படியிருக்கும்? கும்பகோணத்தையும் நாகப்பட்டினத்தையும் விடப் பெரிசாயிருக்குமோ? அங்கேயெல்லாம் தெரு வீதியில் தந்திக் கம்பியிலே வண்டி ஓடுமாமே? அது எப்படியிருக்குமோ?"... ஒரு பக்கம் இம்மாதிரி எண்ணங்கள்.
'அப்பாவைச் சித்தி, பாட்டி, செவிட்டு வைத்தி இவர்கள் கையில் விட்டுவிட்டுப் போகிறோமே. இவர்கள் அவருடைய பிராணனை வாங்கிவிடுவார்களே' என்ற வேதனை மற்றொரு பக்கம். "இந்தச் சமயத்தில்தானா அப்பாவுக்கு நாகப்பட்டினத்திலே வேலை இருக்க வேண்டும்? கிளம்புவதற்கு முன்னால் நாலு நாளைக்கு அவர் ஆத்தில் இருக்கக் கூடாது? இந்த நாலு நாளும் அவருக்குச் சிசுரூஷை செய்தாலாவது மனத்துக்குக் கொஞ்சம் ஆறுதலாயிருக்குமே?" என்ற ஏக்கம் இன்னொரு பக்கம்.
சாவித்திரிக்கு அப்போதிருந்த மனோநிலையில் மங்களத்துடன் கூட உறவு கொண்டாடத் தொடங்கினாள். எவ்வளவு சிரமப்பட்டும், சொர்ணம்மாளிடம் மனத்தைத் திறந்து பேச அவளால் முடியவில்லை. ஆனால், மங்களம் தனியாயிருந்த போதெல்லாம் அவளிடம் வந்து, "சித்தி! புக்காத்திலே எப்படியிருக்க வேண்டும்? மாமனார் மாமியாருக்கு எப்படி சிசுரூஷை செய்யவேண்டும், சொல்லு! அவாள் வீட்டிலே ஒரு வேளை பரிசாரகன் இருந்தா, நான் என்ன காரியம் செய்யறது? என்னால் வெறுமனே உட்கார்ந்திருக்க முடியாதே?" என்றெல்லாம் கேட்பாள். அப்புறம், "சித்தி! என்ன இருந்தாலும் உன்னையும் அப்பாவையும் விட்டுட்டுப் போறது எனக்குக் கஷ்டமாய்த்தான் இருக்கு. நான் கல்கத்தாவிலிருந்தாலும் உங்களைத்தான் அடிக்கடி நினைச்சுண்டிருப்பேன், நீ என்னை நினைச்சுக்குவயோ, மாட்டயோ?" என்பாள்.
மங்களத்துக்கும் அந்தச் சமயத்தில் சாவித்திரியிடம் புது அன்பு தோன்றியிருந்தது. தினம் தலைவாரிப் பூ வைத்து, அலங்காரம் எல்லாம் செய்துவிட்டதோடு, மாமியாராத்தில் அப்படியிருக்கவேண்டும், இப்படியிருக்கவேண்டும் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தாள். "ஏதோ உலகத்திலே எல்லாரையும் போலே சாந்திக் கல்யாணம் என்று பண்ணிப் புக்காத்திலே கொண்டு விட்டுட்டு வர்றத்துக்கு எங்களுக்குக் கொடுத்து வைக்கலை. எப்படியாவது நீ சந்தோஷமாயிருந்தால் சரி" என்று அடிக்கடி கூறினாள். 'நல்ல வேளை! சாந்திக் கல்யாணச் செலவெல்லாம் இல்லாமற்போச்சே' என்ற திருப்தி அவள் மனத்திற்குள் இருந்தது. இதை நினைத்து பெண்ணைப் புக்ககத்துக்கு முதன் முதலில் அனுப்பும் போது செய்ய வேண்டிய சீர்களை அவள் தாராளமாகவே செய்து கொண்டிருந்தாள். பருப்புத் தேங்காய், பக்ஷணம் எல்லாம் பண்ணி வைத்தாள்.
நாலு நாள் கழித்துச் சம்பு சாஸ்திரி வந்தார். மறுநாள் தான் புதன்கிழமை. ஆகையால், பிரயாண ஏற்பாடுகள் எல்லாம் துரிதமாக நடந்தன.
புறப்படும் நாள் நெருங்கிவிடவே, சாவித்திரிக்குத் தகப்பனாரைவிட்டுப் பிரிய வேண்டுமே என்ற எண்ணம் அடிக்கடி தோன்றிக் கொண்டிருந்தது. அன்றிரவு அவள் சாஸ்திரியுடன் தனியாயிருந்தபோது, "அப்பா! நான் போய்ட்டா, நீங்க தனியாயிருக்கணுமே? எப்படியப்பா இருப்பேள்?" என்றாள்.
"அதற்கு என்ன குழந்தை செய்யலாம்? உலகத்தில் பெண்ணைப் பெற்றவர்கள் என்றைக்காவது ஒருநாள் விட்டுப் பிரிய வேண்டியதுதான். நீ எப்படியாவது புக்காத்துக்குப் போய்ச் சௌக்கியமாயிருக்க வேண்டும். அதுதானம்மா முக்கியம்" என்றார் சாஸ்திரி.
புதன்கிழமை காலையில், நல்ல வேளையில் வாசலில் இரட்டை மாட்டு வண்டி வந்து நின்றது. நல்லான் தான் வண்டி கொண்டு வந்திருந்தான். அவன் முகத்திலும் சந்தோஷம் தாண்டவமாடிற்று.
உள்ளே சாஸ்திரி, "ஊம், ஊம், சீக்கிரம்!" என்று அவசரப்படுத்திக் கொண்டிருந்தார். சாமான்கள் ஒவ்வொன்றாய் வண்டியில் கொண்டு வந்து ஏற்றப்பட்டன. சாவித்திரி தன்னால் தவக்கம் ஆகக்கூடாதென்ற எண்ணத்தினால் கையில் கூஜாவை எடுத்துக் கொண்டு, அரைமணி நேரத்திற்கு முன்னாலிருந்து தயாராய் நின்று கொண்டிருந்தாள்.
கடைசியில், சாமான்கள் எல்லாம் வண்டியில் ஏற்றியான பிறகு, புறப்பட வேண்டிய வேளை வந்ததும் சாவித்திரி, சொர்ணம்மாளுக்கும் மங்களத்துக்கும் நமஸ்காரம் செய்தாள். செவிட்டு வைத்திக்குக்கூட, "மாமா! உனக்கும் நமஸ்காரம் பண்றேன்" என்று சொல்லிவிட்டு ஒரு பாதி நமஸ்காரம் பண்ணி எழுந்தாள். வைத்திக்கு சந்தோஷம் தாங்கவில்லை. அவன் அசட்டுச் சிரிப்புடன், "எனக்கு என்னத்துக்கு?" என்றான்.
மங்களம், சாவித்திரியின் நெற்றியில் விபூதி இட்டாள். பிறகு எல்லாரும் வாசலுக்கு வந்தார்கள். சாவித்திரி தெரு வீதியில் இறங்கியதும், மறுபடியும் திரும்பிப் பார்த்து "சித்தி! போய்ட்டு வர்றேன்!" என்றாள். மங்களம் "மகராஜியாய்ப் போயிட்டுவா, அம்மா!" என்றாள்.
ரேழியில் கதவோரமாய் நின்ற அவள் தாயார், "போய்ட்டு வாவாம்! நிஜந்தான்னு மறுபடியும் வந்து வைக்கப்போறது!" என்று முணுமுணுத்தாள்.
சாவித்திரியும் சம்பு சாஸ்திரியும் வண்டியில் எறிக் கொண்டார்கள். வண்டியும் 'ஜில் ஜில்' என்ற மாட்டின் சதங்கைச் சத்தத்துடன் கிளம்பிற்று.
சாவித்திரியின் மனோநிலை அப்போது எப்படி இருந்தது? இத்தனை நாளும் வசித்த ஊரை விட்டுப் போகிறோமே என்று அவள் மனத்தில் வருத்தம் உண்டாயிற்றா? நெடுங்கரையை மறுபடி எப்போது பார்ப்போம் என்று ஏங்கினாளா? அப்படியெல்லாம் ஒன்றும் இல்லையென்பதைத் தெரிவிக்க நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.
'அம்மா! கடைசியிலே, இந்தச் சனியன் பிடித்த நெடுங்கரையைவிட்டுக் கிளம்பியாச்சு! இந்த ஊர் முகத்திலேயே இனிமேல் விழிக்க வேண்டாம்' என்று தான் அவள் எண்ணினாள்.
சாவித்திரி! சாவித்திரி! இந்தச் 'சனியன் பிடித்த நெடுங்கரைக்குத் திரும்பிப் போகமாட்டோ மா' என்று ஒரு நாளைக்கு நீ தாபங் கொள்ளப் போகிறாய்! இப்போது நீ வெறுக்கும் நெடுங்கரை அப்போது உன்னை வரவேற்குமா?
சாவித்திரிக்குச் சம்பு சாஸ்திரி எழுதிய கடிதத்தில் நாகப்பட்டினத்தில் தமக்குக் காரியம் இருப்பதாக எழுதியிருந்ததைப் படித்து, "அது என்ன அவ்வளவு முக்கியமான காரியம்?" என்று சாவித்திரி எண்ணினாளல்லவா? உண்மையிலேயே அவருக்கு மிகவும் முக்கியமான காரியம்?" என்று சாவித்திரி எண்ணினாளல்லவா? உண்மையிலேயே அவருக்கு மிகவும் முக்கியமான காரியம் நாகப்பட்டினத்தில் இருந்தது.
சாஸ்திரியார், சாவித்திரியின் கல்யாணத்துக்காக வாங்கிய கடன் ரூபாய் பத்தாயிரம் வட்டியுடன் சேர்ந்து இப்போது ரூ.13,500 ஆகியிருந்தது. குடமுருட்டி உடைப்பு, அதன் பயனாக ஏற்பட்ட மகசூல் நஷ்டம், மற்ற உபத்திரவங்கள் காரணமாக, வருஷா வருஷம் வட்டி கூடக் கொடுக்க முடியவில்லை. இத்துடன், சாஸ்திரியின் நிலத்திலும் இரண்டு வேலி மண்ணடித்துப் போய்விட்டதென்பது தெரிந்த பிறகு, கடன்காரன் பணத்துக்கு நிர்ப்பந்தப்படுத்த ஆரம்பித்தான். அது ஒன்றும் பயன்படாமல் போகவே, நாகப்பட்டினம் கோர்ட்டில் தாவா செய்து விட்டான்.
மகசூலை விற்றுக் கடனை அடைக்கலாம் என்ற நம்பிக்கை சாஸ்திரிக்கு இப்போது கிடையாது. 'நிலத்தை விற்க வேண்டியதுதான், வேறு வழியில்லை' என்று அவர் எண்ணிக் கொண்டிருந்த சமயம், சம்பந்தியம்மாளை நரசிங்கபுரத்தில் போய்ப் பார்க்கும்படி கல்கத்தாவிலிருந்து கடிதம் வந்தது. அந்தப்படியே சாஸ்திரி நரசிங்கபுரம் போய், சம்பந்தியம்மாளைப் பார்த்தார். அந்த அம்மாள் சாஸ்திரியார் செய்திருக்கும் குற்றங்களுக்கெல்லாம் ஜாபிதா கொடுத்து, அவரைத் திணற அடித்த பிறகு, "என்ன இருந்தாலும், இனிமேல் அவள் எங்காத்துப் பெண். நான் அழைச்சுண்டு போறேன். ஆனால், ஆடி ஆறா மாதம் தீபாவளி முதல் சாந்திக் கல்யாணம் வரையில் செய்ய வேண்டியதுக்கெல்லாம் சேர்த்து, மூவாயிரம் ரூபாய் கையில் கொடுத்துடணும். இல்லாட்டா பெண் உங்காத்திலேயே இருக்க வேண்டியதுதான்" என்று கண்டிப்பாய்ச் சொன்னாள்.
நிலம் விற்பதைப் பற்றி சாஸ்திரிக்கு இருந்த சிறிது சந்தேகமும் இப்போது நிவர்த்தியாகி விட்டது. வேறு வழியில் ரூ.3,000 சம்பாதிக்க முடியாது. மேலும், குழந்தை சாவித்திரி மட்டும் புருஷன் வீட்டுக்குப் போய் விட்டாளானால், அப்புறம் நிலம், நீச்சு, வீடு வாசல் எல்லாம் யாருக்கு வேணும்? தமக்கும் மங்களத்துக்கும் அரை வயிற்றுச் சாப்பாட்டுக்குப் பகவான் படி அளக்காமல் போகிறாரா?
இவ்வாறு எண்ணி சாஸ்திரி நரசிங்கபுரத்திலிருந்து நேரே நாகப்பட்டினத்துக்குப் போனார். கடன் கொடுத்த முதலாளியையும், முதலாளியின் வக்கீலையும் கண்டு பேசினார். கோர்ட்டில் கேஸ் நடத்தி ஏகப்பட்ட பணச் செலவு செய்து கட்டிக்கப் போகிற நிலத்தை இப்போதே கட்டிக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். அதிர்ஷ்டவசமாக, அந்த முதலாளியும் வக்கீலும் ஏற்கெனவே சம்பு சாஸ்திரியிடம் மதிப்பு வைத்திருந்தவர்கள். ஆகவே, சம்பு சாஸ்திரி, அடியோடு அழிந்து போவது அவர்களுக்கும் திருப்தியளிப்பதாயில்லை. கடைசியில், சாஸ்திரிக்கு இன்னொரு ரூ.3,000 ரொக்கம் கொடுத்து, வீட்டையும் முக்கால் வேலி நிலத்தையும் ஒதுக்கி விட்டு, பாக்கியையெல்லாம் கடனுக்கு ஈடாக வாங்கிக் கொள்வதென்று முடிவாயிற்று. அந்தப்படியே பத்திரமும் எழுதி முடிந்து, சாஸ்திரியார் ரொக்கம் ரூ.3000-த்துடன் நெடுங்கரைக்குத் திரும்பினார். நாகப்பட்டினத்தில் அவருக்கிருந்த முக்கியமான காரியம் இதுதான்.
ஆனால் இந்த விவரம் எதுவும் சாவித்திரிக்குத் தெரியாது. வீட்டில் வேறு யாருக்கும் தெரியாது. சாஸ்திரியார் "இதைச் சொல்வதற்கு இப்போது என்ன அவசரம்? எப்படியாவது குழந்தை முதலில் சந்தோஷமாய்ப் புக்ககத்துக்குப் போகட்டும், பிறகு பார்த்துக் கொள்ளலாம்" என்று இருந்தார். ஆகவே, நரசிங்கபுரத்தில், சம்பந்தியம்மாளிடம் சாஸ்திரி ஒரு கவரைக் கொடுத்து. "அம்மா! ரூபாய் மூவாயிரம் மூணு நோட்டாயிருக்கு. பத்திரம்! ஜாக்கிரதையாய் எண்ணி எடுத்து வச்சுக்குங்கோ!" என்று சொன்னபோது சாவித்திரிக்குப் பகீர் என்றது. அப்பா பணம் என்னத்திற்குக் கொடுக்கிறார் என்பதே அவளுக்கு முதலில் புரியவில்லை. "ஏற்கெனவே அப்பாவுக்குக் கடன் உபத்திரவமாயிற்றே! இப்போது இது வேறு சேர்ந்ததா? ஆனால் என்னத்திற்காகப் பணம்?" என்று திகைத்தாள். பிறகு நடந்த சம்பாஷணையின் போது ஒருவாறு அவளுக்கு விஷயம் புரிந்தது.
சாஸ்திரி தங்கம்மாளைப் பார்த்து, "எனக்கு இப்போது சிரமதசை, தொகை என் சக்திக்கு மேற்பட்டதுதான். இருந்தாலும், உங்க மனது கோணப்படாதுன்னு எப்படியோ பணந் தயார்ப்பண்ணிண்டு வந்தேன்" என்றார்.
"சரிதாங்காணும்; ஏதோ பிரமாதமாகச் செய்துட்டதாக நினைச்சுக்க வேண்டாம். ஒவ்வொருத்தர் பொண்களுக்குச் செய்யறதுக்கு இது உறைபோடக் காணாது. அப்படி ஒண்ணும் அதிகமா உம்மை நான் கேட்கலையே. இப்போ, ஒரு சாந்திக் கல்யாணம்னு செய்திருந்தா, ஒரு இரண்டாயிரம் ரூபாய்க்காவது செய்திருக்கணுமோ, வேண்டாமோ?" என்றாள் தங்கம்மா.
"அது கிடக்கட்டும், அம்மா! உலகத்திலே பணந்தானா பெரிய விஷயம்? பணம் வரும், போகும். ஆனா, மனுஷ்யா கிடைக்கமாட்டா. எப்படியோ குழந்தையை உங்க கிட்ட ஒப்படைச்சுட்டேன். சாவித்திரி தாயில்லாப் பெண், அம்மா! இனிமே நீங்கதான் அவளைக் காப்பாத்தணும். உங்க பெண் மாதிரி பார்த்துக்கணும்" என்றார் சாஸ்திரியார்.
உணர்ச்சி மிகுதியினால் சாஸ்திரி உரத்த குரலில் பேசினார். எவ்வளவுக்குச் சத்தம் போட்டு பேசுகிறோமோ, அவ்வளவுக்குத் தங்கம்மாளின் கல்நெஞ்சில் அது பதியும் என்று அவர் எண்ணியது போலிருந்தது.
ஆனால் இது சாவித்திரிக்குப் பிடிக்கவில்லை. 'ஐயோ! என்னத்துக்காக அப்பா இப்படிக் கத்தறார்? செவிட்டு வைத்தியோடு பேசிப்பேசி, அப்பாவுக்குத் தொண்டை பெரிசாய்ப் போயிடுத்து' என்று அவள் நினைத்துக் கொண்டாள்.
சாஸ்திரி சொன்னதற்குத் தங்கம்மாள், "அதுக்கென்னங்காணும்? பேஷாய்ப் பார்த்துக்கறேன், மூணு பொண்ணோட, சாவித்திரி நாலாவது பொண் என்று நினைச்சுக்கறேன். ஆனா நீர் மாத்திரம் முன்னே மாதிரி கவனிக்காம இருந்திடாதேயும், வளைகாப்பு, சீமந்தம் எதெதுக்கு எப்படி எப்படிச் செய்யணுமோ, அதெல்லாம் சரியாய்ச் செய்யணும்" என்றாள்.
இந்த சம்பாஷணை சாவித்திரியின் மனதைப் புண்படுத்தி விட்டது. ஊரிலிருந்து கிளம்பிய போது இருந்த உற்சாகத்தில் பாதி போய் விட்டது. மாமியாரிடம் எவ்வளவோ பயபக்தியுடன் நடந்து கொள்ள வேண்டுமென்று அவள் மனதிற்குள் தீர்மானித்திருந்தாள். ஆனால் இப்போது, 'ஐயோ! இப்படிப்பட்ட மாமியாரிடமிருந்தா நாம் குடித்தனம் பண்ணப் போகிறோம்?' என்ற பயம் மட்டுந்தான் மிஞ்சி நின்றது. இத்தகைய மனுஷியிடம் எப்படி பக்தி கொள்ள முடியும்?
மாமியாருடைய அல்பத்தனத்துடன், அப்பாவின் பெருந்தன்மையையும் சாவித்திரி மனதிற்குள் ஒப்பிட்டுப் பார்த்தாள். ஐயோ! தன்னால் அப்பாவுக்கு இத்தனை நாளும் ஏற்பட்ட கஷ்டம், கவலையெல்லாம் போதாதா? இன்னமும் தன்னால் துயரந்தானா? பணம் எப்படிச் சேகரம் பண்ணினாரோ, தெரியலையே? பழைய கடனுக்கு வட்டி கூடக் கொடுக்க முடியவில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தாரே! ஒருவேளை...நிலம் விற்பதைப் பற்றிப் பிரஸ்தாபமிருந்ததே! விற்று விட்டாரோ?
நாலு வருஷத்துக்கு முன் சம்பு சாஸ்திரிக்கு ஊரில் இருந்த அந்தஸ்தையும், அவருடைய இப்போதைய நிலைமையையும் சாவித்திரி எண்ணி மனம் உருகினாள். நிலத்தையும் விற்று விட்டால் அப்புறம் குடும்பத்தின் கதி என்ன? சித்தியும் பாட்டியும், "உன்னால் தான் இந்தக் குடித்தனம் பாழாச்சு!" என்று அடிக்கடி இடித்துக் காட்டியபோது கோபம் கோபமாய் வந்ததே! அவர்கள் சொன்னதில் என்ன தவறு?
அப்பாவை - இத்தகைய உத்தம குணமுள்ள அப்பாவை - இவாளெல்லாம் இப்படிக் கஷ்டப்படுத்துகிறார்களே, இது தர்மமா? "இவாளெல்லாம்" - என்ற போது, சாவித்திரி தன் கணவனையும் உட்படுத்தியே எண்ணினாள். அவருக்கு என்னதான் தாயார் தகப்பனாரிடம் பக்தி இருக்கட்டும்; அதற்காக நியாய அநியாயம், ஈவிரக்கம் ஒன்றும் பார்க்க வேண்டாமா? அவருக்கு அவருடைய அப்பா அம்மா எப்படியோ, அப்படித்தானே எனக்கும் என் அப்பா? என் அப்பாவைக் கஷ்டப்படுத்தி, அவருடைய தாயார் தகப்பனாரைத் திருப்தி பண்ண வேண்டுமென்று எந்த சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறது?
ஏதோ போனதெல்லாம் போகட்டும்; இனிமேல் அப்பாவுக்குத் தன்னால் எவ்வித கஷ்டமும் உண்டாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சாவித்திரி மனதிற்குள் உறுதி செய்துகொண்டாள். தான் மட்டும் ஸ்ரீதரனுடன் பேசிப் பழக ஆரம்பித்து விட்டால், இந்த மாதிரியெல்லாம் ஒரு நாளும் நேராது. ஒரு வேளை, இப்போது கூட அவருக்கு இந்த மாதிரி அம்மா பணங்கேட்டு வாங்குவதெல்லாம் தெரிந்திருக்காது. அது தெரியும்போது கட்டாயம் அம்மாவைக் கோபித்துக் கொள்வார். அப்போது தான் குறுக்கிட்டு, "போனது போகட்டும், விடுங்கள். எங்கப்பா எனக்குச் செய்யாமல் வேறே யாருக்குச் செய்யப் போகிறார்? இனிமேல் அவரைக் கஷ்டப்படுத்தாமலிருந்தால் சரி!" என்று அம்மாவுக்கும் பிள்ளைக்கும் சமாதானம் பண்ணி வைக்கவேணும் - சாவித்திரிக்கு இப்படியெல்லாம் யோசனை போயிற்று.
அன்றிரவு, சம்பு சாஸ்திரி சாவித்திரியிடம் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தார். மாமனார் மாமியாரிடத்திலும், புருஷனிடத்திலும் அவள் நடந்து கொள்ள வேண்டிய விதத்தைப் பற்றி எடுத்துச் சொன்னார். "குழந்தை! நீ எவ்வளவோ படித்திருக்கிறாய்; கேட்டிருக்கிறாய். புதிதாக உனக்கு நான் ஒன்றும் சொல்லவேண்டாம். இனிமேல் உன் புருஷன் தானம்மா உனக்கு மாதா, பிதா, குரு, தெய்வம் எல்லாம். அந்த நாளிலே நமது தேசத்திலிருந்த சீதை, தமயந்தி, சாவித்திரி, முதலிய பதிவிரதா ரத்னங்களைப் போல் நீயும் புருஷன் மனங்கோணாமல் நடந்து கொள்ள வேண்டும். உன் மாமனார் மாமியாரிடத்திலும் பயபக்தியுடன் நடந்துகொண்டு நல்ல பேர் வாங்கவேண்டும். மனுஷ்யர்கள் என்று இருந்தால் குற்றங் குறைகள் எவ்வளவோ இருக்கும். அதையெல்லாம் பொருட்படுத்தக் கூடாது. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்று ஔவையார் சொல்லியிருக்கிறார். உன்னால், பிறந்த இடத்துக்கும் புகுந்த இடத்துக்கும் பெருமை வரவேண்டும் அம்மா!" என்று பரிவுடன் சொன்னார்.
அப்பாவுக்குத் தன்னால் நேர்ந்த கஷ்டங்களைப் பற்றி சாவித்திரி கொஞ்சம் பிரஸ்தாபித்தாள். "ஏற்கெனவே கடன் அடைக்க முடியாமலிருந்ததே; இந்த மூவாயிரம் ரூபாயும் சேர்ந்தால் எப்படி அடைக்கிறது? நிலத்தை விற்கும்படியாயிருக்குமோ அப்பா!" - என்று கேட்டாள்.
"அதற்கெல்லாம் நீ கவலைப்படாதே, குழந்தை!" என்றார் சாவித்திரி. ஒரு நிமிஷம் சிந்தனையில் ஆழ்ந்திருந்துவிட்டு, "சொந்தமாவது, நிலமாவது? நாம் கொண்டு வந்தோமா? கொண்டு போகப்போகிறோமா? இந்த உலக வாழ்வைப் புல் நுனிமேல் உள்ள பனித்துளிக்கு ஒப்பிட்டிருக்கிறார்கள் நம் பெரியவர்கள். பனிக் காலத்தில் அதிகாலையில் எழுந்து பார்த்தால், புல்லின் நுனியில் நீர்த்துளி நிற்கும். சூரியோதயம் ஆகும்போது, சூரிய கிரணம் அந்தப் பனித் துளியின்மேல் விழுந்ததும், ஒரு நிமிஷ நேரம் அது பளபளவென்று ஜொலிக்கும். அடுத்த நிமிஷம் இருந்த இடந் தெரியாமல் மறைந்து விடும். அந்தப் பனித்துளியைப் போல் நிலையற்றது இந்த வாழ்க்கை. இப்படிப்பட்ட அநித்யமான மனித ஜன்மம் சாபல்யமடைய வேண்டுமானால், சத்தியத்தைச் சொல்ல வேண்டும், தர்மத்தைச் செய்ய வேண்டும், பகவானை ஸ்மரிக்க வேண்டும். ஆனால் ஸ்திரீகளுக்கோ இந்த சிரமம் ஒன்றும் நம்ம பெரியவாள் வைக்கவில்லை. புருஷன் மனங் கோணாமல் நடந்தால் போதும்; ஸ்திரீகள் வேறு ஒரு தர்மமும் செய்ய வேண்டாம்; பகவானைக் கூட நினைக்க வேண்டாம்" என்று தர்மோபதேசம் செய்தார்.
மறுபடியும், "சாவித்திரி! நீ இனிமேல் என்னைக் கூட மறந்துவிட வேண்டும்! நான் என்னமாயிருக்கிறேனோ, எப்படியிருக்கிறேனோ என்றெல்லாம் நினைத்துக் கொண்டு வருத்தப்படாதே. எனக்கு இனி மேல் உலகத்தில் ஒரு கவலையுமில்லை. நீ பச்சைக் குழந்தையாயிருந்த போது உன்னை என் தலையில் சுமத்திவிட்டு உன் தாயார் போய்விட்டாள். அந்தக் காலத்தில் உன்னை நோய் நொடியில்லாமல் வளர்த்து எடுப்பதற்குக் கவலைப்பட்டேன். பிறகு, உன்னை நல்ல இடத்தில் கல்யாணம் செய்து கொடுக்க வேண்டுமேயென்று கவலைப்பட்டேன். அப்புறம், உன்னைப் புக்ககத்திற்கு அனுப்புவதைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். என் தலையில் சுமத்தியிருந்த பாரம் இன்றோடு தீர்ந்தது. இனி மேல் எனக்கு ஒரு கவலையுமில்லை. சந்தோஷமாய் பகவத் பஜனையில் காலத்தைக் கழிப்பேன்" என்றார்.
இப்படியெல்லாம் தர்மோபதேசம் செய்தவருக்கு - வேதாந்த ஞானம் பேசியவருக்கு - மறுநாள் சாவித்திரி ரயிலில் ஏறி உட்கார்ந்ததும், ஏன் அப்படி இருதயம் பதை பதைத்தது?
கல்கத்தாவிலிருந்து கடிதம் வந்தது முதல் ஊருக்குப் போவதில் குதூகலமாயிருந்த சாவித்திரிக்குத்தான் அப்படி ஏன் துக்கம் நெஞ்சை அடைத்துக் கொண்டு வந்தது?
இதோ, மணி அடித்து விட்டார்கள். ரயிலும் ஊதியாயிற்று. "குப்" "குப்" என்று புகை விட்டுக் கொண்டு வண்டி நகரத் தொடங்கி விட்டது. "குழந்தை!..." என்றார் சாஸ்திரி. மேலே "போய் வரயா?" என்று கேட்பதற்கு நா எழவில்லை.
"அப்பா! போய் வரேன்! நீங்க சொன்னதையெல்லாம் ஞாபகம் வச்சுண்டு சமத்தாயிருக்கேன். நீங்கள் கவலைப் படாதேங்கோ. கடுதாசி மாத்திரம் போட்டிண்டிருங்கோ!..." இப்படியெல்லாம் ரயில் புறப்படும்போது சொல்லவேண்டுமென்று சாவித்திரி நினைத்துக் கொண்டிருந்தாள். ஆனால் இவற்றில் "அப்பா!..." என்னும் முதல் வார்த்தை ஒன்று தான் வாயிலிருந்து வந்தது.
அந்தப் பட்டப்பகல் வேளையில், திடீரென்று பனி பெய்து உலகத்தை மறைத்தது போல் சாஸ்திரிக்குத் தோன்றிற்று. சாவித்திரி, தங்கம்மாள், ரயில், ரயிலுக்குப் பின்னாலிருந்த ஸ்டேஷன், ஸ்டேஷனுக்கு அப்பாலிருந்த மரங்கள் - எல்லாம் ஒரு நொடிப் பொழுதில் மங்கி மறைந்தன. உண்மையில் பனி பெய்யவில்லை, தம் கண்ணில் தளும்பிய ஜலம்தான் அப்படிப் பனிப் படலத்தைப் போல் மறைத்தது என்று சாஸ்திரி உடனே தெரிந்து கொண்டு கண்ணைத் துடைத்துக் கொண்டார். மறுபடி அவர் நிமிர்ந்து பார்த்தபோது, ரயில் வெகுதூரம் போய் விட்டது. வண்டிக்குள்ளிருந்து எட்டிப் பார்த்த சாவித்திரியின் முகம் ஒரு விநாடி தெரிந்து, அப்புறம் மறைந்து விட்டது.
சாவித்திரியை ரயிலேற்றி அனுப்பி விட்டுச் சம்பு சாஸ்திரி நெடுங்கரைக்குத் திரும்பி வந்தபோது, அவருடைய வீடு ரகளைப்பட்டுக் கொண்டிருந்தது.
அவர் வருவதற்குச் சற்று முன்னால்தான் நல்லான் வியர்க்க விருவிருக்க விரைவாக நடந்து வந்து அவருடைய வீட்டுக்குள் நுழைந்தான். அப்போது கூடத்தில் உட்கர்ந்து ஏதோ காரியம் செய்து கொண்டிருந்தாள் மங்களம்.
"இது என்ன அம்மா அக்கிரமம்? வயத்தைப் பத்திக்கிட்டு எரியுதே?" என்று நல்லான் அலறினான்.
மங்களத்துக்கு ஒன்றும் புரியவில்லை. நல்லான் எப்போதும் எஜமானுக்கும் குழந்தைக்கும் பரிந்து பேசுவதுதான் வழக்கம். மங்களத்திடம் சில சமயம் அவன் சண்டை பிடிப்பதும் உண்டு. 'பெரியம்மா'வை அதாவது மங்களத்தின் தாயாரை அவனுக்குக் கட்டோ டே பிடிக்காது. 'சொர்ணம்மாள்' என்பதற்குப் பதிலாக 'சொரணை கெட்ட அம்மாள்' என்பான். அவள் வீட்டில் இருக்கும்போது, தாகத்துக்கு மோர்த் தண்ணி கூடக் கேட்க மாட்டான். அப்படிப்பட்டவன் இப்போது வந்து இப்படி அலறியதும், மங்களம் தன்னுடைய தாயார் பேரில் ஏதோ புகார் சொல்லத்தான் வந்திருக்கிறான் என்று எண்ணினாள்.
முகத்தைக் கடுகடுப்பாய் வைத்துக் கொண்டு "என்னடா அக்கிரமம் நடந்து போச்சு! யார் குடியை யார் கெடுத்திட்டா?" என்று கேட்டாள்.
"குடி கெட்டுத்தானுங்க போச்சு! உங்க குடியும் போச்சு; என் குடியும் போச்சு! நன்செய் புன்செய் பத்து வேலியையும் சாஸனம் பண்ண எப்படித்தான் ஐயாவுக்கு மனசு வந்ததோ தெரியலைங்களே!" என்றான்.
இதைக் கேட்டுக் கொண்டே சொர்ணம்மாள் கையிலே வைத்திருந்த தயிர்ச்சட்டியுடன் அங்கு வந்து, "ஐயையோ! பொண்ணே இதென்னடி அநியாயம்?" என்று ஒரு பெரிய சத்தம் போட்டாள். அவள் கையிலிருந்த தயிர்ச் சட்டி தொப்பென்று கீழே விழுந்து சுக்கு நூறாய் உடைந்தது.
மங்களத்துக்குத் தலையில் இடி விழுந்தது போலிருந்தது. "என்னடா, நல்லான்? என்ன சொல்கிறாய்?" என்று திகைப்புடன் கேட்டாள்.
"ஆமாங்க; எசமான் நிலத்தையெல்லாம் வித்துட்டாராம்! இனிமேல், அந்த வயல்வெளிப் பக்கம் நான் எப்படிப் போவேனுங்க?" என்று நல்லான் மறுபடி அலறினான்.
சொர்ணம்மாள், "ஐயையோ! குடி முழுகித்தா? - கிளியை வளர்த்துப் பூனை கையிலே கொடுப்பதுபோலே, இந்தப் பிராமணனுக்கு உன்னைக் கொடுத்தேனே? வேறே ஒண்ணும் இல்லாட்டாலும், சோத்துக்குத் துணிக்காவது பஞ்சமில்லைன்னு நினைச்சுண்டிருந்தேனே! - அதுவும் போச்சே! - இப்படியாகும்னு நான் நினைக்கலையே! - மோசம் பண்ணிட்டானே பிராமணன்!" என்று சொல்லிக் கொண்டே, ஒவ்வொரு பேச்சுக்கும் ஒரு தடவை வயிற்றில் அடித்துக் கொண்டாள்.
இதைப் பார்த்ததும் நல்லானுக்கு, "இதென்னடா சனியன்? இவர்களிடம் வந்து சொல்லப் போனோமே?" என்று தோன்றிவிட்டது.
இந்தச் சமயத்தில், ஏற்கெனவே பாதி திறந்திருந்த வாசற் கதவு நன்றாய்த் திறந்தது. சம்பு சாஸ்திரி வாசற்படியண்டை நின்றார்.
"நல்லான்! இது என்ன இது?" என்று உரத்த குரலில் கேட்டார்.
சாஸ்திரியைப் பார்த்ததும் நல்லானுக்கு மறுபடியும் ஆத்திரமும் துக்கமும் பொங்கிக் கொண்டு வந்தது. அவன் வாசற்படியண்டை நின்று, கை கூப்பிக் கொண்டு, "ஏன் சாமி! எல்லாரும் சொல்றது நிஜந்தானா, சாமி? பத்து வேலி நிலத்தையும் வித்துட்டீங்கன்னு சொல்றாங்களே? பரம்பரையா வந்த பிதிரார்ச்சித நிலமாச்சே! எப்படி சாமி, உங்களுக்கு மனசு வந்தது?" என்று கதறினான்.
சாஸ்திரி, "நல்லான்! இதென்ன நீ கூட இப்படி ஆரம்பிச்சுட்டே? நிலமாவது, நீச்சாவது? பிறக்கிற போது கொண்டு வந்தமா! போறபோது கொண்டு போகப் போறமா? நம் செயலில் என்ன இருக்கிறது, நல்லான்? ஸ்வாமி கொடுத்தார், ஸ்வாமி எடுத்துண்டார்!" என்றார்.
அதற்கு நல்லான், "இதோ பாருங்க. இனிமே, சாமி - பூதம்னு எங்கிட்ட ஒண்ணும் சொல்லாதீங்க. சாமிக்குக் கண் இருக்குதா? சாமிக்குக் கண் இருந்தா இந்த மாதிரியெல்லாம் நடக்குமா?" என்றான்.
சாஸ்திரி, "நல்லான்! உன் மனசு இப்போ சரியான நிலைமையில் இல்லை. வீட்டுக்குப் போய்விட்டு அப்புறம் சாவகாசமாய் வா!" என்றார்.
நல்லான், "போறேனுங்க. ஆனா, ஒண்ணு மாத்திரம் சொல்லிடறேனுங்க உங்ககிட்ட பட்டிக்காரனாய் வேலை பார்த்துட்டு, இந்த ஊரிலே இன்னொருத்தர்கிட்ட நான் வேலை பார்க்கமாட்டேனுங்க. பட்டணத்திலே என் மச்சான் தோட்ட வேலை பார்த்துக்கிட்டு இருக்கானே, அவன் ரொம்ப நாளாய் என்னைக் கூப்பிட்டுக்கிட்டு இருக்கான். அங்கே போயிடறேனுங்க" என்று சொல்லிவிட்டு விரைவாக நடந்து போனான்.
நல்லான் போனதும் சாஸ்திரி உள்ளே வந்தார். அவரைக் கண்டதும், சொர்ணம்மாள் மறுபடியும் வயிற்றில் அடித்துக் கொள்ள ஆரம்பித்தாள். சாஸ்திரி உடனே கடுமையான குரலில், "நீங்கள்லாம் பேசாம இருக்கப் போறயளா, இல்லாட்டா நான் இப்படியே திரும்பிப் போயிடட்டுமா?" என்றார்.
மங்களம் தாயைப் பிடித்துத் தள்ளியபடி, "நீ உள்ளே போடியம்மா! உனக்கென்னடி வந்தது?" என்றாள். சொர்ணம்மாள் கொல்லைக் கட்டுக்குச் சென்று, முணமுணக்கும் குரலில் பலாக்கணம் பாடி அழத் தொடங்கினாள்.
அவள் போன பிறகு சாஸ்திரி மங்களத்தைப் பார்த்து "இதோ பார், மங்களம்! உன்னைச் சோத்துக்குத் துணிக்கு இல்லாமல் நான் விட்டு விடவில்லை. உங்க அம்மா சொல்றதைக் கேட்டுண்டு நீ வீணா மனதைப் புண் பண்ணிக்காதே. இந்த வீடும் பதினைஞ்சு மாநிலமும் பாக்கியிருக்கு. அதையெல்லாம் உன் பேரிலே எழுதி வைச்சுடறேன், நீ கவலைப்படாதே!" என்றார்.
கோபத்துடன் சாஸ்திரியின் வீட்டிலிருந்து சென்ற நல்லானுக்கு, அன்று சாவித்திரி ஊருக்குக் கிளம்பிய சமயத்தில் நடந்த பேச்சு ஞாபகம் வந்தது. சாவித்திரி வண்டியில் ஏறி உட்கார்ந்தாள். இன்னும் சாஸ்திரியார் உட்காரவில்லை. அப்போது நல்லான் மேல் அவள் பார்வை விழுந்தது. "நல்லான்! எசமானை நீதான் ஜாக்கிரதையாக் கவனிச்சுக்கணும். அடிக்கடி வீட்டிலே வந்து விசாரிச்சுக்கோ!" என்றாள். "அதெல்லாம் நீங்க கவலைப்படாதீங்க. குழந்தை! கடவுள் நம்ம ஐயாவுக்கு ஒரு குறையும் வைக்கமாட்டாரு" என்று பதில் சொன்னான் நல்லான். அந்தப் பேச்சு இவ்வளவு சீக்கிரம் பொய்யாய்ப் போய்விட்டதே! கடவுள் இப்படிப் பண்ணிவிட்டாரே!
ராஜாராமய்யர் மிகவும் கோபமாயிருந்தார். இது என்ன உலகம், இது என்ன வாழ்க்கையென்று அவருக்கு ரொம்பவும் வெறுப்பு ஏற்பட்டிருந்தது. அவருடைய மனோவசிய சக்தியானது ஸ்ரீதரன் விஷயத்தில் சிறிதும் பயன்படாமற் போனதுதான் அவருடைய கோபத்திற்குக் காரணம்.
மாட்டுப் பொண்ணை அழைத்து வருகிறேன் என்று தங்கம்மாள் ஊருக்குப் புறப்பட்டுச் சென்றதிலிருந்து ராஜாராமய்யருக்கு ஸ்ரீதரனைப் பற்றிய கவலை அதிகமாயிற்று. 'அவள் பாட்டுக்கு அந்தப் பட்டிக்காட்டுப் பெண்ணை அழைத்துக் கொண்டு வந்து நிற்கப் போகிறாள்! இவனானால் இந்தச் சட்டைக்காரியை இழுத்துக்கொண்டு அலைகிறானே!' என்பதாக அவருடைய மனம் சஞ்சலத்தில் ஆழ்ந்தது. மாட்டுப் பெண் வருவதற்குள் இவனைச் சீர்திருத்தி விடவேண்டும் என்று தீர்மானித்தார்.
ஆகவே, ஒரு நாள் ஸ்ரீதரனை அழைத்துத் தம் எதிரில் நிறுத்திக் கொண்டு, தம்முடைய காந்தக் கண்களின் சக்தியை அவன் பேரில் பிரயோகிக்கத் தொடங்கினார். அவனை விழித்துப் பார்த்த வண்ணம், "ஸ்ரீதரா! உனக்கு இப்போது நல்ல புத்தி வந்து கொண்டிருக்கிறது!..." என்று அவர் ஆரம்பித்ததும், ஸ்ரீதரன் குறுக்கே பேச ஆரம்பித்தான்.
"ஆமாம் அப்பா! எனக்கு புத்தி வந்து கொண்டிருக்கிறது. ஆனால், உங்களுக்குத்தான் புத்தி கெட்டுப் போய் கொண்டிருக்கிறது. நீங்கள் முழிக்கிறதைப் பார்த்தால் பயமாயிருக்கிறது. நான் சொல்றதைக் கேளுங்கள். ஸ்பிரிட் மீடியம், மெஸ்மெரிஸம், ஹிப்னாடிஸம் இந்த கண்றாவியையெல்லாம் விட்டுவிடுங்கள். இந்த மாதிரி மெஸ்மரிஸம், ஹிப்னாடிஸம் என்று ஆரம்பித்தவர்கள் கடைசியில் எங்கே போய்ச் சேர்கிறார்கள் தெரியுமா? லூனடிக் அஸைலத்தில்தான். இந்த ஊர் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் முக்கால்வாசிப்பேர் ஹிப்னாடிஸம், அப்பியாசம் செய்தவர்கள் தானாம். ஜாக்ரதை!" என்று ஒரு பிரசங்கம் செய்துவிட்டு, ராஜாராமய்யர் பிரமித்து போய் நின்று கொண்டிருக்கையிலேயே வெளியேறினான்.
அதற்குப் பிறகு ராஜாராமய்யர் இரண்டு, மூன்று தடவை ஸ்ரீதரனுக்குத் தர்மோபதேசம் செய்யலாமென்று முயன்றார். ஒன்றும் பயன்படவில்லை. அவன் நின்று காது கொடுத்துக் கேட்டால்தானே?
இதனாலெல்லாம் ராஜாராமய்யரின் மனது ரொம்பவும் குழம்பிப் போய் இருந்தது. அவருக்குக் கோபம் கோபமாய் வந்தது. அந்தக் கோபத்தை யார் மேல் காட்டுவது என்றும் தெரியவில்லை. கடைசியில் ஹிந்து சமூகத்தின் மேல் காட்டத் தீர்மானித்தார். ஹிந்து சமூகத்திலுள்ள பால்ய விவாகம், வரதக்ஷணை முதலிய வழக்கங்களைப் பலமாகக் கண்டித்துப் பத்திரிகைகளுக்குக் கட்டுரைகள் எழுத வேண்டுமென்று முடிவு செய்தார்.
ராஜாராமய்யர் இத்தகைய மனோ நிலையில் இருந்த போதுதான் ஒரு நாள் திடீரென்று தங்கம்மாள் சாவித்திரியை அழைத்துக் கொண்டு வந்து சேர்ந்தாள். அவர்களைப் பார்த்ததும் ராஜாராமய்யர், "என்ன தங்கம் வருகிறதைப் பத்தித் தகவலே கொடுக்கலையே! ஒரு கடுதாசி போடக் கூடாதா?" என்றார்.
இதற்குள் சாவித்திரி மாமனாரின் அருகில் வந்து நமஸ்காரம் செய்தாள்.
அதைப் பார்த்த ராஜாராமய்யர், "வாடி அம்மா, வா! இந்த வீட்டுக்கு நீ ஒருத்தி தான் பாக்கியாயிருந்தது. வந்துட்டயோல்யோ? எங்களையெல்லாம் பைத்தியமா அடிச்சுட்டான்; உன்னை என்ன பண்ணப் போறானோ!" என்றார்.
தங்கம்மாள், "சரிதான்; வரத்துக்கு முன்னாலேயே அவளை காபரா பண்ணாதேங்கோ! அவர் கிடக்கார்; நீ மேலே மாடிக்குப் போடி, அம்மா!" என்றார்.
தன்னுடைய மாமனார் பெரிய தமாஷ்காரர் என்றும் எப்போதும் வேடிக்கையும் பரிகாசமுமாய்ப் பேசுவார் என்றும் சாவித்திரி கேள்விப்பட்டிருந்தாள். ராஜாராமய்யர் சொன்னதை அந்த மாதிரி பரிகாசம் என்று அவள் நினைத்தாள். வாய்க்குள் சிரித்துக் கொண்டே அவள் மாடிப்படி ஏறிச் சென்றாள்.
ரயில் பிரயாணத்தின் போது கல்கத்தா நெருங்க நெருங்க சாவித்திரியின் உற்சாகம் அதிகமாகிக் கொண்டிருந்தது. தகப்பனாரைப் பிரிந்த வருத்தத்தைக்கூட மறந்து விட்டாள். "ஆச்சு! நாளைக்கு இத்தனை நேரம் அவாளைப் பார்த்து விடுவோம்," "இன்னும் ஒரு ராத்திரிதான் பாக்கி; பொழுது விடிந்தால் அவாளைப் பார்க்கலாம்" என்று இப்படி எண்ணமிட்டுக் கொண்டிருந்தாள். மாமியாரிடம் "கல்கத்தா ஸ்டேஷனுக்கு எத்தனை மணிக்கு வண்டி போகும்?" "அங்கிருந்து வீடு எவ்வளவு தூரம்?" "எவ்வளவு நேரத்தில் போகலாம்?" "ஸ்டேஷனுக்கு யாராவது வந்திருப்பாளா?" என்று இம்மாதிரி அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தாள்.
ஸ்ரீதரனை முதலில் பார்க்கும் போது என்ன செய்வது எவ்விதம் நடந்து கொள்வது என்று அவள் மனம் சதா யோசனை செய்து கொண்டிருந்தது. முதலில் நாமாகப் பேசக் கூடாது. அவர் தான் பேசுவார். ஏதாவது கேட்பதற்கு நாம் பதில் சொன்னால் போதும் என்று நினைத்தாள். அவர் ஏதாவது கேட்டால்தான் நாம் ஏன் பேச வேண்டும். இரண்டரை வருஷமாய்த் திரும்பிப் பாராமல், போட்ட கடிதங்களுக்குப் பதில் கூடப் போடாமல் இருந்தவரிடம் பேச்சு என்ன வேண்டியிருக்கிறது என்று எண்ணினாள். ஆனால் இந்தக் கோபத்தினால் தான் நாம் பேசாமலிருக்கிறோம் என்பது அவருக்குத் தெரிய வேண்டுமே, வேறு ஏதாவது நினைத்துக் கொண்டு விட்டால் என்ன செய்வது என்று யோசித்தாள். "நீங்கள் தான் இத்தனை நாளாய் என்னைக் கவனிக்காமல் இருந்து விட்டீர்களே! உங்களோடு நான் பேசவில்லை!" என்று பளிச்சென்று சொல்லிவிட்டு, கை விரல்களினால் 'டூ' இட்டுக் காட்டவேண்டுமென்று தீர்மானித்தாள்.
அருகில் வந்து அவர் தன்னைத் தொட்டு விளையாட முயற்சித்தால் என்ன செய்வது? பேசாமல் நிற்கலாமா, அல்லது திமிறிக் கொண்டு ஓடலாமா என்று சிந்தனை செய்தாள். "இருக்கட்டும், இருக்கட்டும்; ஒரு நாளைக்கு அந்த மாதிரி அவர் விளையாட வரும்போது, அவருடைய கன்னத்தைப் பிடித்து நன்றாய்க் கிள்ளி விட்டுவிடுகிறேன்" என்று கர்வங் கட்டிக் கொண்டாள்.
இப்படியெல்லாம் சாவித்திரி மனோ ராஜ்யத்தில் ஆழ்ந்திருந்தவளாதலால், "நீ மேலே மாடிக்குப் போ, அம்மா!" என்று மாமியார் சொன்னதும், "ஒரு வேளை அவாள் மாடியில் இருக்காளோ?" என்ற எண்ணம் தோன்றிற்று. கால்கள் உற்சாகமாகக் குதித்துக் கொண்டு மாடியின் மீது ஏறின. ஆனால், அவளுடைய நெஞ்சு 'திக் திக்' கென்று அடித்துக் கொண்டது. மாடியில் உள்ள அறைகளை ஒவ்வொன்றாய்த் திறந்து பார்த்துக் கொண்டு வந்தாள். அவள் எதிர்பார்த்த மனுஷர் இல்லை. கடைசியாக அவள் திறந்த அறையில் ஸ்ரீதரனுடைய படம் ஒன்று எதிரில் மாட்டியிருக்கவே, அந்த அறைக்குள் நுழைந்தாள்.
சுவரில் ஸ்ரீதரனுடைய படங்கள் இன்னும் சில காணப்பட்டன. கோட் ஸ்டாண்டுகளில் அவனுடைய உடுப்புகளும் தொப்பிகளும் தொங்கின. ஒரு சீட்டுக் கட்டு, ஸிகரெட் டப்பா, நெருப்புப் பெட்டி, இவையும் இருந்தன. சாவித்திரி இவற்றையெல்லாம் பார்த்ததும், இதுதான் ஸ்ரீதரனுடைய அறையாக இருக்க வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டாள். மேஜையின் மீது சிதறிக் கிடந்த புஸ்தகங்களை ஒழுங்காக அடுக்கி வைத்தாள். இதுவரையில் அப்பாவுக்கு சிசுரூஷை செய்தது போல், இனி மேல் நாம் தானே இவாளுக்கு எல்லா சிசுரூஷையும் செய்ய வேண்டுமென்று எண்ணிக் கொண்டாள்.
ஸிகரெட் டப்பாவும், நெருப்புப் பெட்டியும் சாவித்திரிக்கு அதிக வியப்பையளிக்கவில்லை. ஏனெனில், கல்யாணத்தின் போதே "மாப்பிள்ளை சுருட்டுக் குடிக்கிறாராம்" என்ற பேச்சு அவள் காதில் விழுந்திருந்தது. "இதெல்லாம் டவுன் நாகரிகத்தில் சேர்ந்தது" என்று எண்ணி அவள் மனதை சமாதானம் செய்து கொண்டிருந்தாள். இப்போது ஸிகரெட் டப்பாவைப் பார்த்ததும், ஊரிலே கல்யாணத்தின் போது சொன்னது வாஸ்தவந்தான். அதனால் என்ன மோசம்? நாம் நாளடைவில் சொல்லி சரிப்படுத்திவிடலாம்!" என்று நினைத்தாள்.
பிறகு அறையைச் சுற்றிச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டு வந்தவள், தற்செயலாக அலமாரி ஒன்றைத் திறந்து பார்த்தாள். அதற்குள் இன்னும் சில புஸ்தகங்கள் இருந்தன. அப்புறம் ஒரு கைப்பெட்டி இருந்தது. கைப்பெட்டியைத் திறந்தாள். திறந்தவுடன், மேலே கிடந்த புகைப்படம் கண்ணுக்குத் தெரிந்தது. ஐயோ! இது என்ன?
சாவித்திரியின் உற்சாகம், குதூகலம் எல்லாம் எங்கே போயிற்று? ஒரு நொடிப்போதில், இவ்வளவு மனோ வேதனை அவளுக்கு எப்படி ஏற்பட்டது?
கண்ணைக்கூடக் கொட்டாமல் சாவித்திரி அந்தப் படத்தை வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தாள். அது ஒரு வெள்ளைக்காரியின் படம். (வெள்ளைக்காரிக்கும் சட்டைக்காரிக்குமுள்ள வித்தியாசமெல்லாம் அவளுக்கு அப்போது தெரியாது). இந்தப் படம் எதற்காக இவாளுடைய பெட்டிக்குள் இருக்கிறது?
ஏதோ அசுசியான பண்டத்தைத் தொடுவதுபோல், சாவித்திரி அந்தப் படத்தை இடது கை விரலினால் எடுத்து நகர்த்தினாள். அதன் அடியில் இன்னொரு படம் இருந்தது. முகம் அதே வெள்ளைக்காரியின் முகந்தான். ஆனால், இடுப்பில் ஒரு விதமாய் வேஷ்டி கட்டிக்கொண்டு தலையில் குல்லா வைத்துக் கொண்டிருந்தாள். ஐயோ! பயங்கரமே! பார்க்க சகிக்கலையே! - இந்தச் சனி எதற்காக இங்கே இருக்கிறது?
அந்தப் படத்தையும் இடது கையினால் நகர்த்தினால் சாவித்திரி. ஆகா! என்ன தவறு செய்தாள்! முதல் படத்தைப் பார்த்ததுமே பேசாமல் பெட்டியை மூடி விட்டுப் போயிருக்கக் கூடாதா? இரண்டாவது படத்தை நகர்த்தியதும், அடியில் இன்னொரு படம் இருந்தது. அதில், ஸ்ரீதரனும் அந்தச் சட்டைக்காரியும், ஒருவரோடு ஒருவர் இடித்துக்கொண்டு நின்றார்கள்!
சாவித்திரி பெட்டியைத் தடாலென்று மூடினாள். அவள் நெஞ்சை என்னமோ அடைப்பது போலிருந்தது. தொண்டையை யாரோ பிடித்து அமுக்குவது போலிருந்தது. கண்ணில் ஜலம் எங்கிருந்தோ துளித்தது.
அந்த சமயத்தில் கீழே மாடிப்படி ஓரத்தில் பேச்சுக் குரல் கேட்டது. தாயாரும் பிள்ளையும் பேசிக் கொண்டிருந்தார்கள்.
"இதென்ன, அம்மா! திடீர்னு வந்துட்டே! தந்தி, கிந்தி ஒன்றும் அடிக்கலையே?"
"தந்தி அடிச்சாத்தான் என்ன? நீ ஸ்டேஷனுக்கு வந்து அம்மாவை அழைச்சுண்டு வரப் போறயாக்கும்?"
"ஏனம்மா அப்படிச் சொல்றே? பேஷா அழைச்சுண்டு வருவேன். இருக்கட்டும்; ஊரிலேயிருந்து எனக்கு என்ன கொண்டு வந்திருக்கே, சொல்லு!" என்றான் ஸ்ரீதரன்.
"மேலே போய்ப் பாரு! என்ன கொண்டு வந்திருக்கேன்னு தெரியும்" என்றாள் தங்கம்மாள்.
"நிஜம்மா ஏதாவது கொண்டு வந்திருக்காயா என்ன?" என்று சொல்லிக் கொண்டு ஸ்ரீதரன் மாடிப் படியில் ஏறினான். தங்கம்மாளும் அவனைத் தொடர்ந்தாள்.
ஸ்ரீதரன் தன்னுடைய அறைக்குள் நுழைந்தபோது, சாவித்திரி ஒரு ஜன்னல் ஓரத்தில் நின்று கண்ணைத் துடைத்துக் கொண்டிருந்தாள்.
அவள் இன்னாளென்று தெரிந்து கொள்ள ஸ்ரீதரனுக்கு ஒரு நிமிஷம் ஆயிற்று. தெரிந்ததும் அவனுக்குக் கோபம் அசாத்தியமாய் வந்தது. அம்மா தன்னை ஏமாற்றி விட்டாளென்னும் எண்ணந்தான் முன்னால் நின்றது.
சட்டென்று திரும்பி, பின்னால் வந்த தங்கம்மாளைப் பார்த்து, "இது என்ன நான்சென்ஸ்! இந்தச் சனியனை யார் அழைச்சுண்டு வரச் சொன்னா?..." என்றான்.
"ஆமாண்டாப்பா! இப்ப நான்ஸென்ஸ், கீன்ஸென்ஸ் என்று தான் சொல்லுவே. கொஞ்ச நாள் போனா, நீங்க ரெண்டுபேரும் ஒண்ணாப் போயிடுவயள்; நான் தான் நான்ஸென்ஸா ஆயிடுவேன். என்னமோப்பா! உன் ஆம்படையாளைக் கொண்டு வந்து ஒப்பிச்சுட்டேன். நீயாச்சு, அவளாச்சு!" என்றாள்.
தங்கம்மாள் இப்படிச் சொல்லிக் கொண்டிருந்த போது, சாவித்திரி தயக்கத்துடன் நாலு அடி நடந்து வந்து, சற்றுத் தூரத்தில் இருந்தபடியே நமஸ்காரம் செய்தாள்.
ஸ்ரீதரன் அதைக் கவனியாமல், "என்ன அம்மா பேத்தறே? ஆம்படையாளாவது ஒப்பிக்கவாவது? யாரைக் கேட்டுண்டு அழைச்சுண்டு வந்தே? ஓகோ! இதுக்காகத்தான் இவ்வளவு மூடு மந்திரம் பண்ணினே போலிருக்கு! அந்த வேலைத்தனமெல்லாம் எங்கிட்டப் பலிக்காது. ராத்திரியே திருப்பிக்கொண்டு போய் ரயிலேத்திவிட்டு வந்து மறு காரியம் பார்! தெரியுமா?" என்றான்.
"வேண்டாண்டா, ஸ்ரீதரா! அப்படியெல்லாம் சொல்லாதேடா" என்றாள் தங்கம்மாள்.
சாவித்திரி விம்மி விம்மி அழுது கொண்டிருந்தாள்.
ஸ்ரீதரன், "ரொம்ப சரி! வர போதே, அழுதுண்டு, வந்துட்டயோன்னோ? மூதேவி! பீடை!" என்றான்.
சாவித்திரி புக்ககம் போன பிறகு நடுவில் ஒரு பனிக் காலம் வந்து போய்விட்டது. மறுபடியும் மாரிக் காலம் சென்று இன்னொரு பனிக் காலம் வந்தது.
கடந்த நாலு வருஷத்தில், சோழ நாட்டிலுள்ள எல்லாக் கிராமங்களையும் போல் நெடுங்கரையும் பெரிதும் க்ஷீணமடைந்திருந்தது. நெல் விலை மளமளவென்று குறைந்து போகவே, ஊரில் அநேகம் பேர், 'இனிமேல் கிராமத்தில் உட்கார்ந்திருந்தால் சரிப்படாது' என்று பிழைப்புத் தேடிப் பட்டணங்களுக்குப் புறப்பட்டார்கள்.
இங்கிலீஷ் படித்து விட்டுச் சும்மா இருந்த வாலிபர்கள் உத்தியோகம் தேடுவதற்காகப் போனார்கள். இங்கிலீஷ் படிக்காதவர்கள், ஏதாவது வெற்றிலைப் பாக்குக் கடையாவது வைக்கலாம், இல்லாவிட்டால் காப்பி ஹோட்டலிலாவது வேலை பார்க்கலாம் என்று எண்ணிச் சென்றார்கள்.
இப்படிப் போகாமல் ஊரிலே இருந்தவர்களின் வீடுகளில் தரித்திரம் தாண்டவமாடத் தொடங்கிற்று.
இந்த மாறுதல் சம்பு சாஸ்திரியின் வீட்டிலேதான் மிகவும் ஸ்பஷ்டமாகத் தெரிந்தது. எப்போதும் நெல் நிறைந்திருக்கும் களஞ்சியத்திலும் குதிர்களிலும், இப்போது அடியில் கிடந்த நெல்லைச் சுரண்டி எடுக்க வேண்டியதாயிருந்தது.
மாட்டுக் கொட்டகை நிறைய மாடுகள் கட்டியிருந்த இடத்தில் இப்போது ஒரு கிழ எருமையும், ஒரு நோஞ்சான் பசுவும் மட்டும் காணப்பட்டன.
தென்னை மரம் உயரம் பிரம்மாண்டமான வைக்கோற் போர் போட்டிருந்த இடத்தில் இப்போது ஓர் ஆள் உயரத்திற்கு நாலு திரை வைக்கோல் கிடந்தது.
நெல் சேர் கட்டுவதற்காக அமைத்திருந்த செங்கல் தளங்களில், இப்போது புல் முளைத்திருந்தது.
ஆனால், குறைவு ஒன்றுமில்லாமல் நிறைந்திருந்த இடம் ஒன்று நெடுங்கரையில் அப்போதும் இல்லாமற் போகவில்லை. அந்த இடம் சம்பு சாஸ்திரியின் உள்ளந்தான். தமது வாழ்க்கையில் ஏற்பட்ட மாறுதலைக் குறித்துச் சாஸ்திரி சிறிதும் சிந்திக்கவில்லை. முன்னை விட இப்போது அவருடைய உள்ளத்தில் அதிக அமைதி குடி கொண்டிருந்தது. பகவத் பக்தியில் முன்னைவிட அதிகமாக அவர் மனம் ஈடுபட்டது.
குழந்தை சாவித்த்ரியைப் பற்றி இடையிடையே நினைவு வரும்போது மட்டும் அவருடைய உள்ளம் சிறிது கலங்கும். ஆனால் உடனே, "குழந்தை புருஷன் வீட்டில் சௌக்கியமாயிருக்கிறாள். நாம் ஏன் கவலைப்படுகிறோம்?" என்று மனத்தைத் தேற்றிக்கொள்வார்.
சாவித்திரி கல்கத்தாவுக்குப்போய் ஐந்தாறு மாதம் வரையில் அடிக்கடி அவளிடமிருந்து கடிதம் வந்து கொண்டிருந்தது. அப்புறம், இரண்டு மாதத்துக்கொரு தரம் வந்தது. இப்போது சில மாதமாய்க் கடிதமே கிடையாது. அதனால் என்ன? கடிதம் வராத வரையில் க்ஷேமமாயிருக்கிறாள் என்றுதானே நினைக்க வேண்டும்? மேலும் இனிமேல் சாவித்திரிக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? அவளுக்கு நாம் என்ன செய்யப் போகிறோம்? நமக்குத் தான் அவளால் என்ன ஆகவேண்டும்? "இனி உனக்கு மாதா பிதா தெய்வம் எல்லாம் புருஷன் தான்" என்று நாம் தானே உபதேசம் செய்து அனுப்பினோம்? எப்படியாவது குழந்தை சந்தோஷமாயிருந்தால் சரி. கடிதம் போடாமல் போனால் என்ன? - இப்படி எண்ணியிருந்தார் சம்பு சாஸ்திரி.
அன்று தை வெள்ளிக்கிழமை. சாஸ்திரி அம்பிகையின் பூஜைக்குப் புஷ்பம் சேகரித்து வைத்துவிட்டு ஸ்நானம் செய்யக் குளத்துக்குப் போயிருந்தார்.
வாசலில் "தபால்" என்ற சத்தம் கேட்டது. சமையலுள்ளில் கைவேலையாயிருந்த சொர்ணம்மாள், "மங்களம்! மங்களம்! சுருக்கப் போய்த் தபாலை வாங்கிண்டு வா!" என்றாள்.
மங்களம் போய்த் தபாலை வாங்கிக் கொண்டு வந்தாள். வரும்போது வாசற்கதவைத் தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு வந்தாள்.
சொர்ணம்மாள், மங்களம், வைத்தி மூன்று பேரும் அடுப்பைச் சுற்றி உட்கார்ந்தார்கள். "வைத்தி! கடுதாசை வாங்கி வாசி!" என்றாள் சொர்ணம்மாள்.
மங்களம், "அடே! சத்தம் போடாமே மெதுவாய் வாசி. உனக்குத்தான் காது செவிடு. எங்களுக்குக் காது கேக்கறது!" என்றாள்.
வைத்தி, "சாவித்திரிதான் போட்டிருக்கா! வேறே யார் போடப் போறா?" என்றான்.
"இப்படி வரிந்து வரிந்து கடுதாசி எழுதறதுக்கு இந்தப் பொண்ணுக்குக் கையைத்தான் வலிக்காதா?" என்றாள் சொர்ணம்மாள்.
வைத்தி வாசிக்கத் தொடங்கினான்:
'மகா-௱-௱-ஸ்ரீ அப்பா அவர்களுக்கு, சாவித்திரி அநேக நமஸ்காரம்.
தாங்கள் என்னைக் கைவிட்டு விட்டீர்களா? நான் போட்ட ஒரு கடிதத்திற்காவது பதில் இல்லையே? இங்கு நான் படுகிற கஷ்டம் சகிக்க முடியவில்லை. வளைகாப்பு, சீமந்தம் எல்லாம் பண்ணிச் சீர் செய்யவில்லையென்று மாமியார் ரொம்பவும் கோபித்துக் கொள்கிறாள். பிரசவத்திற்கு ஊருக்குப் போ போ என்று சொல்லிக் கொண்டேயிருக்கிறாள். தாங்கள் வந்து என்னை உடனே அழைத்துக் கொண்டு போகாவிட்டால் என் பாடு அதோ கதிதான். உங்களுக்குத் துன்பமாகவும் பூமிக்குப் பாரமாகவும் நான் ஏன் பிறந்தேன்?
அப்பா! எனக்கும் நெடுங்கரைக்கு வந்து உங்களையெல்லாம் பார்க்க வேண்டுமென்று ரொம்பவும் ஆசையாயிருக்கிறது. சித்தி கையினால் ஒருவேளையாவது சாப்பிட்டால் என் உடம்பு சொஸ்தமாகும். இந்தக் கடிதத்தைத் தந்தியாகப் பாவித்துத் தாங்கள் புறப்பட்டு வந்து என்னை அழைத்துப் போகவேண்டியது. இல்லாவிட்டால் என்னை நீங்கள் மறுபடியும் உயிரோடு பார்ப்பது நிச்சயம் இல்லை.
இப்படிக்கு, தங்கள் அன்புள்ள புத்திரி சாவித்திரி'
"எழுதுகிற வக்கணயைப் பார்த்தயோல்லியோ?" என்றாள் மங்களம்.
"அதுக்குத்தாண்டி அம்மா பொம்மனாட்டிகளுக்குப் படிப்பு உதவாதுன்னு சொல்றது?" என்றாள் சொர்ணம்மாள். பிறகு, வைத்தியைப் பார்த்து "இன்னொரு தடவை வாசிடா!" என்றாள்.
வைத்தி மறுபடி வாசிக்கத் தொடங்கி, "சித்தி கையால் ஒரு வேளையாவது சாப்பிட்டால், என் உடம்பு சொஸ்தமாகும்..." என்று படித்ததும், சொர்ணம்மாள் அவன் கையிலிருந்து கடிதத்தைப் பிடுங்கிக் கொண்டாள்.
"ஆமாண்டி, அம்மா! சித்தி உனக்குப் பொங்கிக் கொட்டத்தான் காத்திண்டிருக்கா!" என்று சொல்லிக் கொண்டே கடிதத்தைக் கிழித்து நெருப்பில் போட்டாள்.
வைத்தி, "ஏம்மா! சாவித்திரி பிள்ளையாண்டிருக்கிறது அத்திம்பேருக்குத் தெரியாதோன்னோ? வந்த கடுதாசையெல்லாம் நீதான் கிழிச்சுக் கிழிச்சு எறிஞ்சுடறயே" என்றான்.
"சீச்சீ! வாயைப் பொத்திக்கோடா, இரையாதேடா!" என்றாள் சொர்ணம்மாள். பிறகு, "என்னமோ, நினைச்சுண்டா, எனக்கு வயத்தை பத்திண்டுதான் எரியறது. என் பொண் வயத்திலே ஒரு பிள்ளைக் குழந்தைன்னு பிறந்திருந்தா, இப்படியெல்லாம் ஆயிருக்குமா?" என்று பிரலாபிக்கத் தொடங்கினாள்.
இந்தப் பேச்சுப் பிடிக்காத மங்களம், "அது இருக்கட்டண்டி, அம்மா! நீ பாட்டுக்கு இந்த மாதிரி பண்ணிண்டிருக்கயே? அவாளுக்குத் தெரிஞ்சு போய்ட்டா என்ன பண்றது?" என்றாள்.
"ஆகா! வேணும்னாப் பொண்ணைப் பிரசவத்துக்கு அழைச்சுண்டு வந்து பத்தியம் வடிச்சுக் கொட்டேன். நானா வேண்டாங்கறேன்! பணந்தான் இங்கே கிடந்து இறையறது..."
"அதுக்குச் சொல்லலேடி, அம்மா!..."
"பின்னே, எதுக்குச் சொல்றே? அடி போடி பைத்தியமே! பணச் செலவைப் பார்க்காமே, அழைச்சுண்டுதான் வந்து, ராப்பகலா உழைச்சுக் கொட்டறேன்னு வச்சுக்கோ - அந்தப் பொண்ணுக்கு ஏதாவது தலையைக் கிலையை வலிச்சா, ஊரிலே நாலு பேர் என்னடி சொல்வா? நீ வேணும்னு ஏதோ செய்துட்டேன்னுதானேடி சொல்வா?"
"நான் ஒண்ணு கேட்டா, நீ ஒண்ணு சொல்றயே, அம்மா! அவாள் ஆத்திலே இருக்கிறபோது கடுதாசி, கிடுதாசி வந்துட்டா என்ன பண்றதுன்னுட்டுன்னா கேக்கறேன்? இல்லை, கடுதாசிக்குப் பதில் வல்லையேன்னு ஒரு தந்தி அடிச்சு வச்சாள்னு வச்சுக்கோ, அப்போ என்ன செய்யறது?"
"அதுக்கெல்லாம் நான் யோசனை பண்ணி வச்சிருக்கேன்; நீ பேசாமே இரு!" என்றாள் மங்களத்தின் தாயார்.
வழக்கம் போல் அன்று சாஸ்திரி பூஜை செய்து முடியும் சமயத்தில், மங்களமும் அவள் தாயாரும் வந்து நமஸ்காரம் செய்துவிட்டு, தீர்த்தம் வாங்கிக் கொண்டார்கள். "மங்களம்! இன்று தை வெள்ளிக்கிழமையாச்சே! நைவேத்யத்துக்கு ஏன் வடை பாயஸம் பண்ணலை? வெறும் அன்னம் மட்டும் வச்சுட்டே?"" என்றார் சாஸ்திரி.
மங்களம் பதில் சொல்வதற்குள், சொர்ணம்மாள், "அவள் என்ன பண்ணுவள்? நானும் பேசப்படாது பேசப்படாதுன்னு பாத்துண்டிருக்கேன். வடை பாயஸம் பண்ணறதுன்னா இலேசாவா இருக்கு? வெல்லம் வேண்டாமா? பயத்தம் பருப்பு வேண்டாமா? இதெல்லாம் வாங்கறத்துக்குப் பணத்துக்கு எங்கே போறது? மாதம் பிறந்ததும் ரூபாயை எண்ணிக் கொடுக்கறாப்பலே பேசியாயிடறது! இன்னும் கொஞ்ச நாள் போனால் இந்த வெறும் அன்னத்துக்கே ஆபத்து வந்துடும்போல் இருக்கு! ஆனாலும் இப்படி மூக்கைப் புடிச்சுண்டு மணியை ஆட்டிண்டு இருந்தாக்கே, காலட்சேபம் எப்படி நடக்கும்?" என்று மூச்சு விடாமல் பேசினாள்.
"நீங்க என்னத்துக்கு அதுக்காகக் கவலைப்படறேள்? இத்தனை நாளும் காப்பாத்தின ராமன் இன்னமும் காப்பாத்துவன்" என்றார் சாஸ்திரி.
"ஆமாமாம்; 'ராமா ராமா'ன்னு சொல்லிச் சொல்லித்தான் இந்தக் குடித்தனம் இப்படிப் பாலாப் போச்சு. இப்பவாவது நான் சொல்றதைக் கேளுங்கோ. சென்னைப் பட்டணத்திலே எவ்வளவோ பேர் பாட்டுச் சொல்லிக் கொடுத்துப் பணம் சம்பாதிக்கிறாளாம். நீங்களும் போய் ஏதாவது சம்பாதிக்கிற வழியைப் பாருங்கோ!"
சாஸ்திரிக்குத் தம் மாமியாரிடம் விசுவாசமோ மரியாதையோ அதிகம் கிடையாது. மங்களத்தின் தாயார் என்பதற்காகத்தான் அவள் வீட்டில் இருப்பதைச் சகித்துக் கொண்டிருந்தார். ஆனால், இப்போது அவள் சொன்ன வார்த்தை அம்பிகையின் வாக்கு என்றே அவருக்குத் தோன்றிற்று. ஏற்கெனவே, அவருடைய மனம் அமைதி இழந்திருந்தது. எங்கேயாவது யாத்திரை போகவேண்டுமென்று எண்ணியிருந்தார். இப்போது, சொர்ணம்மாள் இப்படிச் சொன்னதும், அவருடைய மனத்திலும் அதே விருப்பம் இருந்தபடியால், "அதற்கென்ன? அப்படியே செய்துட்டாப் போச்சு! ஆனால், மங்களம் இங்கே தனியாயிருக்கவேணுமேன்னுதான் யோசிக்கிறேன்" என்றார்.
அதற்குச் சொர்ணம்மாள், "மங்களத்தைப் பத்தி நீங்க ஒண்ணும் கவலைப்பட வேண்டாம். நான் அவளை என்னோடே ஊருக்கு அழைச்சுண்டு போறேன். கொஞ்ச நாளைக்காவது அவள் கஷ்டப்படாமே எங்களோடே இருக்கட்டும்" என்றாள்.
"மங்களத்தை நீங்க பாத்துக்கறதாயிருந்தா எனக்கென்ன கவலை? ஜாக்கிரதையாய் அழைச்சுண்டு போய் வச்சுக்குங்கோ! நான் நாளைக்கே கிளம்பறேன்" என்றார் சாஸ்திரி.
"பட்டணத்திலே நாலு பெரிய மனுஷாள் வீட்டிலே பாட்டுச் சொல்லிக் கொடுக்கறதுன்னு ஏற்பட்டு, குடித்தனம் போடலாம்னு தோணினாக் கடுதாசி போடுங்கோ; புறப்பட்டு வந்து சேரறோம்."
"அதுக்கென்ன, அப்படியே செய்றேன்" என்றார் சாஸ்திரி. ஆனால், அவர் மனத்தில் மட்டும் சொரேல் என்றது. காசிக்கு போயும் பாவம் தொலையவில்லை என்பார்களே, அந்த மாதிரி பட்டணத்துக்குப் போன அப்புறமும் இவர்களுடன் வாழவேண்டுமா என்று எண்ணிப் பெருமூச்சு விட்டார். 'நம் செயலில் என்ன இருக்கிறது? பகவானுடைய சித்தப்படி நடக்கட்டும்' என்று மனதைத் திடப்படுத்திக் கொண்டார்.
கல்கத்தாவில் ஸ்ரீதரனுடைய வீட்டில் ராஜாராமய்யர் தம்முடைய வீட்டில் உட்கார்ந்து பத்திரிகை படித்துக் கொண்டிருந்தார். வீட்டின் பின்புறத்திலிருந்து 'லொக்கு லொக்கு' என்று இருமுகிற சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது, ராஜாராமய்யரின் கவனம் பத்திரிகையில் செல்லவில்லை. "தங்கம்; தங்கம்!" என்று கூப்பிட்டார்.
"ஏன் கூப்பிட்டேள்?" என்று கேட்டுக் கொண்டே தங்கம் அறைக்குள் வந்தாள்.
"ஏண்டி! இந்தப் பொண்ணு இப்படி வாய் ஓயாமல் இருமிண்டிருக்கே! பிள்ளைத்தாச்சிப் பொண்ணை இப்படிக் கவனிக்காம வச்சுண்டிருந்தா, ஏதாவது இசை கேடா முடியப்போறதேடி!" என்றார் ராஜாராமய்யர்.
"இதுக்கு நான் என்ன பண்ணுவேன்? அந்த எழவு, சம்பந்திப் பிராம்மணன் வந்து பொண்ணை அழைச்சுண்டு போனான்னா தேவலை? உலகத்திலே ஒரு தகப்பனும் இப்படி இருக்கமாட்டான். இந்தப் பொண்ணு பத்து நாளைக்கு ஒரு கடுதாசி போடறதிலே குறைச்சலில்லை. ஒண்ணுக்காவது பதில் கிடையாதாம்.
"அங்கே அவருக்கு என்ன தொல்லையோ, என்னமோ?"
"என்ன தொல்லை வந்துடுத்து, உலகத்திலே இல்லாத தொல்லை? பணச்செலவுக்குச் சோம்பிண்டுதான் இப்படி வாயை மூடிண்டு இருக்கார்! வீட்டிலே இரண்டு லங்கிணிகள் இருக்காளே, அவா போதனையாயிருந்தாலும் இருக்கும்."
"சரி, அதுக்காக நாம் என்ன பண்றதுங்கறே?"
"நாக்பூர்லேருந்து செல்லத்தை வேறே இங்கே பிரசவத்துக்கு அனுப்பப் போறாளாம்! இரண்டு பிள்ளைத்தாச்சிகளை வைச்சிண்டு நான் என்ன பண்றது? சாஸ்திரத்துக்கும் விரோதம். இந்தப் பொண்ணானா, என்னை ரயிலேத்தி விட்டுடுங்கோ, நான் ஊருக்குப் போறேன்னு சொல்லிண்டிருக்கா, அனுப்பிச்சுடலாமான்னு பார்க்கறேன்."
"என்னடி இது? நிஜமா தானே போறேன்னு சொல்றாளா?"
"நிஜமா வேறே, அப்புறம் பொய்யா வேறயா? உங்களோட எழவு, பொய் சொல்லி இப்ப எனக்கு என்ன ஆகணும்?"
"கோவிச்சுக்காதேடி! அந்தப் பொண்ணு தைரியமாய்ப் போறேன்னு சொன்னா, திவ்யமாப் போகச் சொல்லு, அது ரொம்பத் தேவலை. இங்கே இருந்தா நீங்க ரெண்டு பேருமாச் சேர்ந்து அவளைக் கொன்னே விடுவயள். குரங்கு கையிலே பூமாலையாட்டமா, உன் கையிலும், உன் பிள்ளை கையிலும் ஆப்புட்டுண்டாளே பாவம்! பெண்டாட்டியாம், பிள்ளையாம்! தூத்தேரி!" என்று சொல்லிக் கொண்டே ராஜாராமய்யர் எழுந்திருந்து கையிலிருந்த பத்திரிகையைத் துண்டு துண்டாகக் கிழித்துப் போட்டுவிட்டு வெளிக் கிளம்பிச் சென்றார்.
தங்கம்மாள் அங்கிருந்து நேரே பின்கட்டுக்குப் போனாள். அங்கே அடிக்கடி இருமிக் கொண்டே, இரும்பு உரலில் மிளகாய்ப் பொடி இடித்துக் கொண்டிருந்தாள் சாவித்திரி.
"ஏண்டி அம்மா, என்னத்திற்காக இப்படி வாய் ஓயாமே இருமறே? வேணும்னு இருமறாப்பலேன்னா இருக்கு?" என்றாள் தங்கம்மாள்.
"இல்லேம்மா! ஏற்கனவே, இருமிண்டிருக்கோன்னோ? ஏன் மிளகாய்ப் பொடி இடிக்கலைன்னு கேட்டேளேன்னு இடிச்சேன். மிளகாய்க் காரத்தினாலே ஜாஸ்தியா இருமறது."
"அப்படி என் மேலே பழியைப் போடு. இஷ்டம் இல்லைன்னா, முடியாதுன்னுட்டுப் போயேன். என்னத்துக்காகப் பொய் சாக்குப் போக்கெல்லாம் சொல்றே?"
"பொய் இல்லேம்மா, இருமி இருமி மாரெல்லாம் வலிக்கிறதம்மா, தலையைக் கூடச் சுத்தறது."
"இப்படி வெறுமனே உடம்பு உடம்புன்னு என் பிராணனை வாங்காதே! சாயங்காலம் அழைச்சுண்டு போய் ரயில்லே ஏத்தி விட்டுடறேன்; பேசாமே பொறந்தாத்துக்குப் போய்ச் சேரு."
"பொறந்தகம் சவரணையாயிருந்தா நான் ஏன் அம்மா இப்படி இருக்கேன்? போட்ட கடுதாசி ஒண்ணுக்காவது தான் அப்பா பதிலே போடலையே? அது தான் நீங்க பரிகாசம் பண்றயள்."
"பரிகாசமில்லேடி! உன்னோடு வந்து நான் பரிகாசம் பண்றேனாக்கும்? நான் கூடச் சொல்லலே. எல்லாம் உன் மாமனார் உத்தரவு! நீ லொக்கு லொக்குனு இருமறது அவருக்குச் சகிக்கவில்லையாம். இன்னி ராத்திரியே ரயில் ஏத்தி அனுப்பிவிடச் சொல்கிறார். நகை நட்டுன்னு ஒண்ணும் எடுத்துண்டு போகப்படாது. பிழைச்சுக் கிடந்து வந்தால் பூட்டிக்கலாம். மாத்திக் கட்டிக்கறதற்கு ஒரு புடவையை எடுத்துண்டு கிளம்பறத்துக்குத் தயாராயிரு"
இதைக் கேட்டதும் சாவித்திரியின் முகத்தில் வியப்பும் துயரமும் ஒருங்கே தோன்றின. "என்ன அம்மா! நிஜமா, மாமாவா என்னைத் தனியா ரயிலேத்திவிடச் சொன்னார்?" என்றாள்.
"இதென்னடி எழவு! எல்லாருக்கும் என்னைப் பார்த்தா பொய் சொல்றவ மாதிரி தோணறாப்பலே இருக்கே!" என்றாள் தங்கம்மாள்.
"இல்லை, அம்மா! அவர் ஒண்டிக்காவது என் பேரிலே கொஞ்சம் இரக்கம் இருந்ததுன்னு நினைச்சுண்டிருந்தேன். அதனாலே கேட்டேன்" என்று சாவித்திரி சொன்னபோது அவள் குரலில் துயரமும் கோபமும் கலந்திருந்தன.
தங்கம்மாள் உடனே ஆங்காரமான குரலில், "ஓகோ! அப்படியா நினைச்சுண்டிருக்கே மனஸிலே! மாமனார் மகராஜன், மாமியார் மூதேவின்னு நினைச்சுண்டிருக்கயாக்கும்! அதான் ஸ்வாமி உன்னை இந்த நிலைமையிலே வச்சிருக்கார். இல்லாட்டா, உலகத்திலேயெல்லாம் ஆம்படையான் பொண்டாட்டின்னு சவரணையாயில்லையோ? அவன் ஏன் உன் மூஞ்சியைக்கூடப் பார்க்கப் புடிக்கல்லே என்கிறான்? உன்னைத் தாலி கட்டினதிலேயிருந்து சனியன் புடிச்சுதடிம்மா, புடிச்சுது!" என்றாள்.
நெடுங்கரையிலிருந்து சாவித்திரி கல்கத்தாவுக்குக் கிளம்பி வந்தபோது என்னவெல்லாமோ ஆகாயக் கோட்டை கட்டிக்கொண்டு வந்தாள். அந்தக் கோட்டை சென்ற இரண்டு வருஷ காலத்தில் ரொம்பவும் இடிந்து சிதைந்து போயிருந்தது. இப்போது அது அஸ்திவாரம் உள்படப் பெயர்ந்து விழுந்து மண்ணோடு மண்ணாயிற்று!
சாவித்திரி புருஷன் வீட்டில் கிருகப் பிரவேசம் செய்த அன்றே அவளுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியைப் பார்த்தோம். அந்த வரவேற்பு அவளுக்கு அளவற்ற ஏமாற்றத்தையும் துயரத்தையும் அளித்தது. ஆனாலும், அவள் அடியோடு தைரியத்தை இழந்துவிடவில்லை. தன்னுடைய நடத்தையினால் எல்லாவற்றையும் சரிப்படுத்தி விடலாமென்று மனத்தைத் தேற்றிக் கொண்டாள்.
மாமியார், மாமனார், புருஷன் - இந்த மூன்று பேருடைய பிரியத்தையும் எப்படியாவது சம்பாதித்து விட வேண்டும் என்று சங்கல்பம் செய்துகொண்டு சாவித்திரி புக்கத்தில் தன் வாழ்க்கையை ஆரம்பித்தாள். ஐயோ! இது எவ்வளவு அசாத்தியமான - ஒன்றோடொன்று முரண்பட்ட - காரியம் என்பது அந்தப் பேதைப் பெண்ணுக்குத் தெரிந்திருக்கவில்லை.
இந்த வீட்டில் மாமியார் தான் முக்கியமானவள் என்பதை சாவித்திரி முதலிலேயே அறிந்து கொண்டாள். எனவே, அவளுடைய பிரியத்தைச் சம்பாதிப்பதிலேயே அதிகமாகக் கவனம் செலுத்தினாள். வீட்டுக் காரியங்களைச் சரிவரச் செய்வதிலும், மாமியாருக்குச் சுசுரூஷை புரிவதிலும் முழு மனத்துடன் ஈடுபட்டாள்.
இதனால், ஆரம்பத்தில் சில நாள் வரை மாமியாரின் பிரியத்தைச் சம்பாதித்துவிட்டதாகக் கூட அவளுக்குத் தோன்றிற்று. ஆனால், இது வெறும் பிரமை என்பது சீக்கிரத்திலேயே தெரிந்தது.
சாவித்திரி எவ்வளவுதான் பணிவாயிருக்கட்டும், சிசுரூஷை செய்யட்டுமே? என்ன பிரயோஜனம்? அவள் தகப்பனார் எதற்காக இப்படி அச்சுப்பிச்சாயிருக்க வேண்டும்? உலகத்திலே எல்லாத் தகப்பனார்களையும் போல் பெண்ணுக்குச் சவரணையாய் சீர் செனத்தி ஏன் செய்யவில்லை? - இதைப்பற்றித் தங்கம்மாளின் குறை தீராத குறையாயிருந்தது.
"நெடுங்கரைப் பட்டிக்காட்டிலே போய்க் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு அப்பவே பிள்ளையாண்டான் முட்டிண்டான். நான் தான் பிடிவாதமாகக் கல்யாணத்தைப் பண்ணி வைச்சேன். அந்த நன்னி எந்த நாய்களுக்காவது இருக்கோ? - என்னெல்லாம் ஊர் சிரிக்க அடிச்சுட்டான் பிராமணன்! பறையனையெல்லாம் வீட்டுக்குள்ளே அழைச்சுண்டு வந்து - ஊரிலே எல்லோரும் சாதியைவிட்டுத் தள்ளிவைச்சு - ஐயையோ! இந்த அவமானத்துக்காகவே ஊர்ப் பக்கம் இத்தனை நாளாய் நான் தலை காட்டலை! - அப்புறம், போனாப் போறது, தகப்பன் பைத்தியமா இருந்தா, பொண்ணு என்ன பண்ணும்னு மனசு இரங்கிப் போய் அழைச்சுண்டு வந்தேன். அப்படியாவது என்னடி அம்மா வந்தது? - கொஞ்சம் வாயைத் திறந்தால் போரும், என் பிள்ளைக்குப் பெண் கொடுக்க நான் நீ என்று ஓடி வருவா. ஏதடா, அப்படியெல்லாம் பண்ணாதிருக்காளேன்னு யாருக்காவது நன்னி விசுவாசம் இருக்கோ? - ராங்கியிலே குறைச்சலில்லை, ராங்கி!" என்று தங்கம்மாள் இப்படி ஏதாவது சொல்லிக் கொண்டேயிருப்பாள்.
சாவித்திரியிடம் இந்த ஒரு குறை உண்டு என்பதை நாம் முன்னமே பார்த்திருக்கிறோம். அவள் ரோஸக்காரி; கொஞ்சம் வாய் அதிகம். அதிலும் அவளுடைய தகப்பனாரைப் பற்றி யாராவது ஏதாவது சொன்னால் அவளுக்குப் பொறுக்கவே பொறுக்காது. மாமியார் ஏசிக்காட்டுவதையெல்லாம் சகித்துச் சகித்துப் பார்ப்பாள். கடைசியில், சகிக்க முடியாமல் போய், "என்னை என்ன வேணாலும் சொல்லுங்கோ, அம்மா! எங்க அப்பாவை ஒண்ணும் சொல்லாதேங்கோ. அவர் மாதிரி எல்லாரும் இருந்தாப் போரும். அவர் எனக்குச் செய்தாப்பலே எல்லாரும் அவாவா பொண்ணுக்குச் செய்தால் போரும்" என்று ஏதாவது சொல்லி வைப்பாள். இந்த மாதிரி, பேச்சு வளரும். இதனால், போகப் போக, தங்கம்மாளுக்கு மாட்டுப்பெண் பேரில் எரிச்சல் அதிகமாகிக் கொண்டு வந்தது. இந்த எரிச்சலை அதிகமாக்கும்படியான இரண்டொரு சந்தர்ப்பங்களும் ஸ்ரீதரனால் ஏற்பட்டன.
இந்த இரண்டு வருஷ காலத்தில் சாவித்திரியின் விஷயமாக ஸ்ரீதரனுடைய மனோபாவம் இரண்டு மூன்று தடவை மாறுதல் அடைந்துவிட்டது.
ஆரம்பத்தில் கொஞ்ச நாள், தன்னைக் கேட்காமல் தங்கம்மாள் அவளை அழைத்துக் கொண்டு வந்த காரணத்தினால் அவனுக்கு வெறுப்பும் கோபமுமாயிருந்தது. போகப் போக, "சரிதான்; இந்தப் பிராரப்தத்தைக் கட்டிக் கொண்டுதான் மாரடித்தாக வேண்டும் போல் இருக்கிறது. ஆனால் நமக்கென்ன கஷ்டம் வந்தது? அவள் பாட்டுக்கு வீட்டில் அம்மாவுக்கு ஒத்தாசையாயிருந்து விட்டுப் போகிறாள்" என்று ஒரு மாதிரி முடிவுக்கு வந்திருந்தான்.
சில நாளைக்கெல்லாம் சாவித்திரியிடம் அவனுக்கு கொஞ்சம் சிரத்தை உண்டாகத் தொடங்கிற்று. சிரத்தை உண்டானதும், அவளைத் தன் தாயார் படுத்துகிற கஷ்டத்தைப் பார்த்து இரக்கமும் ஏற்பட்டது. ஸ்ரீதரனுடைய இரக்கம் சாவித்திரிக்கு ஆபத்தாய் முடிந்தது.
ஒரு தடவை சாவித்திரி கஷ்டமான காரியம் செய்வதைப் பார்த்து, ஸ்ரீதரன் அம்மாவிடம், "ஏனம்மா இந்த வேலையெல்லாம் அவளைச் செய்யச் சொல்கிறாய்?" என்றான். தங்கம்மாளுக்கு ஆத்திரம் வந்துவிட்டது. "ஆமாண்டாப்பா, உன் ஆம்படையாள் காரியம் செய்யலாமோ? தேஞ்சுன்னா போயிடுவள்? நீ வேணா பூட்டி வைச்சுட்டுப்போ! இல்லாட்டா, பின்னோட அழைச்சுண்டு போயிடு" என்று கத்தினாள். அவன் வெளியே போன பிறகு, சாவித்திரியிடம், "ஏண்டி பொண்ணே! ஆம்படையானிடம் கோழி சொல்ல ஆரம்பிச்சுட்டயோல்லியோ? நீ காரியம் செய்யலாமோடி? மிராசுதார் பொண்ணாச்சே! போய் மெத்தையை விரிச்சுப் போட்டுண்டு படுத்துக்கோ! நான் தான் ஒத்தி இருக்கேனே இந்த வீட்டிலே காரியம் செய்யறதற்கு!..." என்று சரமாரியாய்ப் பொழியத் தொடங்கினாள்.
இம்மாதிரி சாவித்திரிக்கு ஸ்ரீதரன் பரிந்து பேசிய ஒவ்வொரு தடவையும் அவளுக்கு அதனால் கஷ்டமே நேர்ந்தது. ஒரு நாள் சாவித்திரி மாவு இடித்துக் கொண்டிருந்தபோது ஸ்ரீதரன் பார்த்துவிட்டான். "உன்னை யார் மாவு இடிக்கச் சொன்னது? வீட்டிலே வேலைக்காரியில்லையா?" என்று ஸ்ரீதரன் கோபமாய்க் கேட்டான். சாவித்திரி, அவனுடைய கோபத்தைத் தணிக்கும் நோக்கத்துடன், "அம்மாதான் இடிக்கச் சொன்னார்" என்று சொல்லி விட்டாள். ஸ்ரீதரன் அம்மாவிடம் போய், "இதென்ன அம்மா நான்ஸென்ஸ்? இவளை என்னத்துக்காக மாவு இடிக்கச் சொன்னாய்?" என்று கேட்டான். "அப்படிச் சொல்லு தகடிகை!" என்றாள் தங்கம்மாள். "நான் என்னடா அப்பா சொன்னேன்! கொஞ்ச நாள் போனா, ஆம்படையானும் பொண்டாட்டியும் ஒண்ணாப் போயிடுவயள்; நான் தான் நான்ஸென்ஸாப் போயிடுவேன்னு சொன்னேனோ இல்லையோ? என் வாக்குப் பலிச்சுதா?" என்று கூச்சலிட்டாள். பிறகு, சாவித்திரியைக் கூப்பிட்டு, "ஏண்டி பொண்ணே! நானாடி உன்னை மாவு இடிக்கச் சொன்னேன்; என் மூஞ்சியைப் பார்த்துச் சொல்லடி!" என்று கேட்டாள். சாவித்திரி பயந்துபோய்ப் பேசாமல் இருந்தாள். பார்த்தயோல்லியோடா கள்ள முழி முழிக்கிறதை!" என்றாள் தங்கம்மாள். ஸ்ரீதரனுக்கு ரொம்பக் கோபம் வந்து விட்டது. "ஏண்டி! பொய்யா சொன்னே?" என்று சாவித்திரியின் கன்னத்தில் ஓர் அறை அறைந்துவிட்டுப் போய்விட்டான்.
சாவித்திரி அழுதுகொண்டே மாவு இடிக்கத் தொடங்கினாள். தங்கம்மாள், "என் பிள்ளைக்கும் எனக்கும் ஆகாமலடிக்க வந்துட்டயாடி அம்மா, மகராஜி! என்ன சொக்குப் பொடி போட்டிருக்கயோ, என்ன மருந்து இட்டிருக்கயோ, நான் என்னத்தைக் கண்டேன்!" என்று புலம்பத் தொடங்கினாள்.
இந்த நாளில் சாவித்திரி சரியான வழியில் முயற்சி செய்திருந்தால் ஒருவேளை ஸ்ரீதரனுடைய அன்பைக் கூடப் பெற்றிருக்கலாம். ஆனால், அந்தச் சரியான வழி அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை. மாமியாரைத் திருப்தி செய்வது தான் கணவனைத் திருப்தி செய்யும் வழி என்று அவள் நினைத்தாள். அவன் பகலில் எப்போது வீட்டுக்கு வந்தாலும் அவள் அடுப்பங்கரையில் ஏதாவது காரியம் செய்து கொண்டிருப்பாள். இரவில் அவன் வரும் போது அவள் ஒன்று, பகலெல்லாம் உழைத்த அலுப்பினால் படுத்துத் தூங்கிப் போய் விடுவாள்; அல்லது மாமியார் சொன்னது எதையாவது நினைத்து அழுது கொண்டிருப்பாள். "சனியன்! சனியன்! எப்ப பார்த்தாலும் ஒரே அழுகைதானா? மூதேவி! பீடை!" என்று ஸ்ரீதரன் எரிந்து விழுவான். இதனால் அவளுடைய அழுகை அதிகமாகும். ஸ்ரீதரனுடைய வெறுப்பும் வளரும்.
சாவித்திரி ரொம்பவும் அழுது விசிக்கும் சமயங்களில் ஸ்ரீதரன் அது சகிக்காமல், "ஏண்டி அம்மா! இந்தப் பீடையை உன்னை யார் அழைச்சுண்டு வரச் சொன்னா? நான் தான் வேண்டாம் வேண்டாம்னு முட்டிண்டேனே! ஊருக்கு அனுப்பிச்சுத் தொலைச்சுட்டு மறு காரியம் பாரு!" என்பான். அவன் தாயார், "ஆமாண்டாப்பா! என் பேரில் தப்புத்தான்! என் புத்தியை விளக்குமாத்தாலே அடிச்சுக்கணும். ஆனா, இப்ப என்ன முழுகிப் போச்சு? இவளுக்கு என்ன, கடுதாசி எழுதத் தெரியாதா? உனக்கு அந்தக் காலத்திலே எட்டு நாளைக்கு ஒரு கடுதாசி எழுதிண்டிருந்தாளே? அப்பாவுக்குக் கடுதாசி எழுதி அழைச்சுண்டு போகச் சொல்லட்டுமே?" என்று பதில் சொல்வாள்.
இத்தகைய நிலைமையில்தான், சாவித்திரி கர்ப்பமானாள். இதனால் அவளுடைய மனத்தில் ஒரு புதிய உற்சாகத்துடன் குதூகலம் உண்டாயிற்று. இனிமேல், தனக்கு இந்த வீட்டில் அதிக கௌரவம் ஏற்படும், புருஷனும் மாமியாரும் முன்னைவிடப் பிரியமாயிருப்பார்கள் என்ற ஆசையும் எழுந்தது. கூடிய சீக்கிரத்தில் இந்த ஆசை நிராசையாயிற்று.
ஸ்ரீதரனுக்குச் சில புதிய கஷ்டங்கள் அப்போது ஏற்பட்டிருந்தன. சில காலமாகவே ஸ்ரீதரனை அலட்சியம் செய்யத் தொடங்கியிருந்த ஸுஸி அப்போது பகிரங்கமாய் அவனை நிராகரிக்கத் தொடங்கினாள். அதுமட்டுமல்ல, ஐயாயிரம் ரூபாய் பணம் கொடுக்காவிட்டால் அவன்மேல் கேஸ் போடுவதாகப் பயமுறுத்திக் கொண்டிருந்தாள். பாங்கில் அவனுடைய வேலை திருப்திகரமாயில்லையென்று மேலதிகாரிகள் கருதி, அவனுடைய சம்பளத்தைக் குறைத்து விட்டார்கள். இந்தக் கோபத்தையெல்லாம் ஸ்ரீதரன் பேதை சாவித்திரியின் மேல் காட்டினான்.
தங்கம்மாளுக்கோ ஏற்கெனவே இருந்த குறைகள் எல்லாம் போதாதென்று, வளைகாப்பு, சீமந்தம் பண்ணவில்லை, சம்பு சாஸ்திரி கடுதாசி கூடப் போடாமல் இருக்கிறார் என்ற குறையும் சேர்ந்து கொண்டது. ஆகவே நாளுக்கு நாள் சாவித்திரியின் கஷ்டங்கள் அதிகமாகிக் கொண்டு வந்தன.
இவ்வளவு கஷ்டங்களுக்கும், வேதனைகளுக்குமிடையில் சாவித்திரி தன்னுடைய மாமனார் ஒருவரைத்தான் நம்பியிருந்தாள். அந்த வீட்டில் தன்னிடம் பச்சாதாபப்படுகிறவர் அவர் ஒருவர் தான் என்றும், ஏதாவது ஆபத்து என்றால் அவர் தான் தன்னைக் காப்பாற்றக்கூடியவர் என்றும் எண்ணியிருந்தாள். அவர் இந்த மாதிரித் தன்னை தனியாக ரயிலேற்றி அனுப்பிவிடச் சொன்னார் என்றதும், அவளுக்கு 'இனிமேல் என்ன இருக்கிறது?' என்று தோன்றிவிட்டது. குழந்தைப் பருவத்திலிருந்து அவளுக்குப் பகவானிடம் இருந்த அசையாத நம்பிக்கையும் தளர்ந்துவிட்டது. "ஸ்வாமியாவது? பூதமாவது? எல்லாம் பொய் போல் இருக்கிறதே!" என்று எண்ணலானாள்.
ஒரு மனம் இப்படி நினைத்தது; ஆனால் அதே சமயத்தில் சாவித்திரியின் இன்னொரு மனம், 'நிஜமாகவே நாம் நெடுங்கரைக்குக் கிளம்பப் போகிறோமா?' என்று குதூகலத்தினால் துள்ளிக் குதித்தது!
"அப்பா! எனக்கும் நெடுங்கரைக்கு வந்து உங்களையெல்லாம் பார்க்க வேண்டும் என்று ஆசையாயிருக்கிறது" என்று சாவித்திரி எழுதிய போது அவளுடைய இருதயத்தில் உண்மையாகவே பொங்கிக் கொண்டிருந்த ஆசையையே வெளியிட்டிருந்தாள்.
கர்ப்ப ஸ்திரீகளுக்கு 'மசக்கை' வரும் என்றும், சில சில பொருள்களின்மேல் பிரத்தியேகமான ஆசை உண்டாகுமென்றும் சொல்கிறார்கள் அல்லவா? சாவித்திரியின் மசக்கை, அவளுக்கு நெடுங்கரைக்குப் போக வேண்டுமென்று அளவிலாத ஆசை கொள்ளச் செய்தது.
நெடுங்கரையில் தன்னுடைய வாழ்க்கையை நினைத்தாலே அவளுக்கு இப்போது சந்தோஷமாயிருந்தது. அந்தக் காலத்தில் அவள் அங்கே பட்ட கஷ்டங்களையும், அநுபவித்த துயரங்களையும் அடியோடு மறந்துவிட்டாள். நெடுங்கரையைப் பற்றிய சந்தோஷமான ஞாபகங்கள் மட்டுமே அவள் மனத்தில் இப்போது இருந்தன.
நெடுங்கரை வீதிதான் எவ்வளவு அழகாயிருக்கும்? வாசலில் தென்னை மரங்களின் நிழல் எவ்வளவு குளிர்ச்சியாயிருக்கும்? அந்த வீதியில் வில் வண்டி பூட்டி வரும் போது, மாடுகளின் சதங்கை ஜில் ஜில் என்று சப்திப்பது எவ்வளவு இனிமையாயிருக்கும்?
ஆகா! நெடுங்கரை வீட்டை எப்போது பார்ப்போம்? முன்போல் மறுபடியும் எப்போதாவது அப்பாவின் பஜனைக்குப் புஷ்பம் எடுத்துக்கொண்டு வருவோமோ? மாலை தொடுத்துப் படங்களுக்குப் போடுவோமோ?
அப்பா! அப்பா! நீங்கள் பஜனை பண்ணி நான் மறுபடியும் கேட்பேனே? சித்தி! உன் கையால் சாதம் பிசைந்து போட்டு நான் சாப்பிடுவேனா?
ஐயோ! சித்தி! உன்னை என்னவெல்லாம் பாடுபடுத்தி வைத்தேன்? உன் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்ட பாவந்தான் இப்படி என்னைப்படுத்தி வைக்கிறதோ?... சாவித்திரி இவ்வாறெல்லாம் எண்ணமிடுவாள். தங்கம்மாளுடன் ஒப்பிட்டபோது, மங்களம் தன்னிடம் அபாரமான பிரியம் வைத்திருந்ததாகச் சாவித்திரிக்குத் தோன்றிற்று.
ஆகவே, அவள் அப்பாவுக்குத் தன்னை வந்து அழைத்துப் போகும்படி கடிதம் எழுதியபோது, அடங்காத ஆர்வத்துடன் தான் எழுதினாள். தன்னுடைய கடிதங்களுக்குப் பதில் வராததனால் அவள் அடைந்த ஏமாற்றத்துக்கு அளவில்லை. ஒரு வேளை கடுதாசி போய்ச் சேர்ந்திராதோ, அப்பா ஒரு வேளை ஊரில் இல்லையோ, அல்லது அவர் சரியாய் விலாசம் எழுதாதபடியால் அவருடைய பதில்தான் இங்கே வந்து சேரவில்லையோ என்று எண்ணாததெல்லாம் எண்ணிக்கொண்டிருந்தாள். ஒவ்வொரு சமயம் சப்பட்டை கட்டிக்கொண்டு நெடுங்கரைக்குப் பறந்து போய்விடலாமா என்று அவளுக்குத் தோன்றும்.
இத்தகைய மனோ நிலையில் அவளை ரயிலேற்றி ஊருக்கு அனுப்பி விடுவதாகச் சொன்னபோது, 'என்ன இரக்கமற்றவர்கள் இவர்கள்!' என்ற வெறுப்பும், தனியாகப் போக வேண்டுமே என்ற துணுக்கமும் அவள் அடைந்தாலும், மனத்தின் ஒரு பக்கத்தில் சந்தோஷமும் இருந்தது. ஊருக்குக் கிளம்பும் நேரம் ஆக ஆக அவள் உற்சாகம் அதிகரித்தது.
சாவித்திரி, மாமனார் விஷயத்திலும் தான் ஏமாற்றமடைந்ததாக எண்ணியது மட்டும் சரியல்ல. உண்மையில், ராஜாராமய்யர் சாவித்திரியின் மேல் இரக்கங்கொண்டே, "அவள் ஊருக்குப் போவதாயிருந்தால் போகட்டும்" என்று சொன்னார். தங்கம்மாளின்மேல் வந்த கோபத்தைத் தம் கையில் இருந்த பத்திரிகையின் மேல் காட்டி விட்டு அவர் வெளியே போனதுகூடச் சாவித்திரியின்மேல் இருந்த கருணையினால்தான். கல்கத்தாவிலிருந்து வேறொரு குடும்பத்தார் மறுநாள் சென்னைக்குப் புறப்படுவதாக அவர் கேள்விப்பட்டிருந்தார். அதைப்பற்றி விசாரித்துத் தகவல் தெரிந்து கொள்வதற்குத்தான் அவர் வெளியேறினார். விசாரித்ததில் அவர் கேள்விப்பட்டது உண்மைதானென்று தெரிந்தது. மறுநாள் புறப்படுவதற்கு இருந்தவர்கள் திருநெல்வேலி ஜில்லாக்காரர்கள், ரொம்பவும் நல்ல மனுஷர்கள். "ஆகா! சாவித்திரியை பேஷாய் அழைத்துக் கொண்டு போகிறோம்" என்று சொன்னார்கள்.
இந்தச் செய்தியைக் கேட்டுக் கொண்டு ராஜாராமய்யர் திரும்பி வீட்டுக்கு வந்ததும் நெடுங்கரைச் சம்பு சாஸ்திரிக்கு ஒரு கடிதம் எழுதினார். தம்முடைய சம்பந்திக்கு அவர் இதுவரையில் தம் கையினால் கடிதம் எழுதினது கிடையாது. அவர் சாஸ்திரிக்கு எழுதிய முதல் கடிதம் இதுதான். பாவம், அவர் எழுதிய கடைசிக் கடிதமும் இதுவாகவே ஆயிற்று!
சில முக்கியமான காரணங்களினால் சாவித்திரியைக் கல்கத்தாவில் பிரசவத்துக்கு வைத்துக்கொள்ள முடியவில்லையென்றும், இங்கிருந்து திருநெல்வேலிக்கு வரும் தகுந்த மனுஷ்யாளுடன் கூட்டி அனுப்பியிருப்பதாகவும், சென்னைப் பட்டணத்துக்கே சாஸ்திரி வந்திருந்து குழந்தையை அழைத்துப் போகவேண்டுமென்றும், சென்னைப் பட்டணத்துக்கு ஒருவேளை வர முடியாவிட்டால், குறிப்பிட்ட வண்டிக்குப் புதுச்சத்திரம் ஸ்டேஷனுக்கு வந்திருந்து அழைத்துப் போகவேண்டுமென்றும் கடிதத்தில் எழுதினார். பிறகு, தாமே அந்தக் கடிதத்தை எடுத்துக்கொண்டு போய்த் தம் கையாலேயே தபால் பெட்டியில் போட்டார். தபால் பெட்டியின் விளிம்பில் எழுதியிருந்த மணிக்கணக்கைப் பார்த்துவிட்டு, "சரி, இன்று தபாலில் கட்டாயம் போய்விடும்" என்று நிச்சயம் செய்துகொண்டு திரும்பினார்.
ராஜாராமய்யர் நம்பியபடியே, கடிதம் அன்று தபாலிலேயே சேர்ந்து வழியில் எங்கும் விழுந்து விடாமல் பிரயாணம் செய்து, போட்ட மூன்றாம் நாள் மேலமங்கலம் தபாலாபீஸுக்குப் போய்ச் சேர்ந்தது. நெடுங்கரைக்குக் கடிதத்தை எடுத்துக் கொண்டு வந்த தபால்காரன், சம்பு சாஸ்திரியின் வீடு பூட்டியிருப்பதைப் பார்த்தான். ஒரு நிமிஷம் யோசனை செய்தான். பிறகு "சரிதான், எங்கேயாவது போயிருப்பார்கள்; வந்து எடுத்துக் கொள்வார்கள்" என்று முடிவு செய்து, காமரா அறையில் ஜன்னல் வழியாகக் கடிதத்தை உள்ளே எறிந்து விட்டுப் போய்ச் சேர்ந்தான்.
அவன் எறிந்த இடத்திலேயே ராஜாராமய்யரின் கடிதம் அநாதையாய்க் கிடந்தது!
சாவித்திரியை அழைத்துக்கொண்டு போகிறோமென்று சொன்ன திருநெல்வேலி ஜில்லாக்காரர்கள் உண்மையிலேயே ரொம்பவும் நல்ல மனுஷர்கள். புருஷன், மனைவி, குழந்தை, புருஷனுடைய தாயார் இவர்கள்தான். தாயார் விதவை. புருஷனுக்கு முப்பது வயதும், மனைவிக்கு இருபது வயதும் இருக்கும். குழந்தை மூன்று வயதுப் பையன். அவர்களில் யாரும் பார்ப்பதற்கு அவ்வளவு லட்சணமாயில்லை. கணபதி அவனுடைய பெயருக்கு ஏற்றது போலவே கட்டைக் குட்டையாயும், கொஞ்சம் இளந் தொந்தி விழுந்தும் காணப்பட்டான். கறுப்பு நிறந்தான். முகம், கன்னமும் கதுப்புமாய்ச் சப்பட்டையாயிருந்தது. ஜயம் அவனைவிடச் சிவப்பு; ஆனால் முகத்தில் அம்மை வடு. போதாதற்கு, மேல் வாய்ப்பல் இரண்டு முன்னால் நீண்டு வந்திருந்தது. இதை மறைப்பதற்காக ஜயம் அடிக்கடி உதட்டை இழுத்து மூடிக்கொண்டாள். அவள் நாலைந்து மாதமாக 'ஸ்நானம் செய்ய'வில்லையென்றும் தோன்றிற்று. இந்தக் குடும்பத்தார் ஒருவரோடொருவர் கொண்டிருந்த அந்யோந்யம் சாவித்திரிக்கு அளவிலாத ஆச்சரியத்தை அளித்தது. என்ன அன்பு! என்ன அக்கறை!
ஐந்து நிமிஷத்துக்கொரு தடவை, "ஜயம்! ஏதாவது வேணுமா?" என்று கணபதி கேட்டுக் கொண்டிருந்தான். "ஏண்டாப்பா! பிள்ளைத்தாச்சிப் பொண் பட்டினியாயிருக்காளே! ஏதாவது வாங்கிண்டு வந்து கொடேண்டா!" என்று தாயார் அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பாள். "நான் தான் வெறுமனே சாப்பிட்டுண்டே இருக்கேனே! அம்மாதான் பச்சை ஜலம் வாயிலே விடாமே இருக்கார். அவருக்கு ஏதாவது பழம், கிழம் வாங்கிக் கொடுங்கோ!" என்பாள் ஜயம்.
ஜயம் எதற்காவது எழுந்து நின்றால், சொல்லி வைத்தாற்போல், கணபதி, அவனுடைய தாயார் இரண்டு பேரும் எழுந்திருந்து, "என்ன வேணும், ஜயம்?" என்று கேட்பார்கள். கொஞ்ச நேரம் அவள் உட்கார்ந்திருந்தபடியே வந்தால், "இந்தாடி அம்மா! ரொம்ப நேரம் உட்கார்ந்திருந்தாக் காலைக் கொரக்களி வாங்கும். சித்தே காலை நீட்டிண்டு படுத்துக்கோ!" என்பாள் மாமியார். அஸ்தமித்தால் போதும்; ஜன்னல் கதவுகளையெல்லாம் சாத்திவிடச் சொல்வாள். வண்டியிலுள்ள மற்றவர்கள் ஆட்சேபித்தால், "கொஞ்சம் கோவிச்சுக்காதீங்கோ. பிள்ளைத்தாச்சிப் பொண்ணு. பனி உடம்புக்காகாது" என்பாள்.
அவர்கள் ஒருவரோடொருவர் அந்யோந்யமாயிருந்ததல்லாமல், சாவித்திரியையும் மிகப் பரிவுடன் கவனித்துக் கொண்டார்கள். சில சமயம் அந்த அம்மாள், சாவித்திரியின் கஷ்டங்களைப் பற்றியும் பேச ஆரம்பித்து விடுவாள். "ராஜாத்தி மாதிரி இருக்கா. இவளை ஆத்திலே வச்சுட்டு அந்த மூடம் எங்கெல்லாமோ சுத்தி அலையறானே?" என்றும், "நல்ல மாமியார் வாச்சாடி அம்மா, உனக்கு! இப்படி எட்டு மாதத்துக் கர்ப்பிணியைத் தனியா அனுப்பறதுக்கு எப்படித்தான் மனம் வந்ததோ?" என்றும் சொல்வாள். கணபதி, "பேசாமலிரு, அம்மா!" என்று அடக்குவான். "நீ சும்மா இருடா! என்னமோ, அந்த துஷ்டைகளுக்குப் பரிஞ்சு பேசறதுக்கு வந்துட்டே? உனக்கென்ன தெரியும், ஊர் சமாசாரம்? இந்தச் சாதுப் பெண்ணை அந்த ராட்சஸி படுத்தி வச்சது. ஊரெல்லாம் சிரிப்பாய்ச் சிரிச்சுது! பாவம்! இவளுக்குப் பொறந்தகமும் வகையில்லைபோல் இருக்கு. அவாதான் வந்து தலைச்சம் பிள்ளைத்தாசியைப் பாத்துட்டு அழைச்சுண்டு போகவேண்டாமோ?" என்பாள்.
மாமியார் இப்படி ஏதாவது பேசும்போதெல்லாம், மாட்டுப் பெண்ணின் முகத்தில் பெருமை கூத்தாடும். அவளுக்குப் புக்ககத்தைப் போலவே பிறந்த வீடும் நன்றாய் வாய்த்திருந்தது என்று சம்பாஷணையில் சாவித்திரி தெரிந்து கொண்டாள். ஜயத்தின் தகப்பனாருக்கு இரண்டு மாதமாய் உடம்பு சரியில்லை என்று தகவல் வந்ததாம். "ஒரு வேளை நான் பிழைக்கிறேனோ, இல்லையோ, என் பெண்ணையும் மாப்பிள்ளையையும் ஒரு தடவை பார்த்துவிட்டால் தேவலை" என்று அவர் சொன்னாராம். அதன் பேரில்தான் இப்போது இவர்கள் திருநெல்வேலிக்குப் போய்க் கொண்டிருந்தார்கள்.
இந்தக் குடும்பத்தையும், இவர்கள் ஒருவரிடம் ஒருவர் காட்டும் அன்பையும் பார்க்கப் பார்க்கச் சாவித்திரிக்கு ஆச்சரியம் அதிகமாகிக் கொண்டிருந்தது. 'உலகத்தில் இப்படியும் மனுஷ்யாள் இருக்கிறார்களா? இந்த மாதிரி இடமாகப் பார்த்து நம்மையும் அப்பா கொடுத்திருக்கக் கூடாதா? இவ்வளவு மோசமான இடத்தில் கொண்டு போய்த் தள்ளினாரே?' என்று ஒரு நிமிஷம் நினைப்பாள். 'அப்பா பேரில் என்ன தப்பு? அவர் எவ்வளவோ பணத்தைக் காசைச் செலவழித்து, நாம் ஒசத்தியாயிருக்க வேண்டுமென்று ஒசந்த இடமாய்ப் பார்த்துத்தான் கொடுத்தார். நம் தலையெழுத்து இப்படியிருந்தால், அதற்கு அப்பா என்ன பண்ணுவா?' என்று எண்ணுவாள் அப்புறம், கணபதியின் சப்பட்டை மூஞ்சியையும் அசட்டுச் சிரிப்பையும் அவன் பெண்டாட்டிக்குச் செய்யும் உபசாரங்களையும் பார்க்கும்போது, 'நல்ல வேளை! அப்பா நம்மை இந்த மாதிரி ஆம்படையானைப் பார்த்துக் கொடுக்காமலிருந்தாரே?' என்று தோன்றும். ஸ்ரீதரனின் களையான முகத்தையும், நாகரிகமான தோற்றத்தையும் அவள் நினைத்துப் பார்த்துப் பெருமை கொள்வாள். ஆனால், அடுத்த நிமிஷமே, அவனும் ஸுஸியுமாய் எடுத்துக் கொண்ட போட்டோ படம் மனக்கண் முன்னால் வந்து நிற்கும். அவளுடைய பெருமை சிதறிப் போகும். 'அசடாயிருந்தாலென்ன? அவலட்சணமாயிருந்தாலென்ன? ஜயம் அதிர்ஷ்டசாலி, அவளுக்கு அகமுடையானின் அன்பு இருக்கிறது. நாம் தான் கொடுத்து வைக்காத பாவி' என்று நினைத்துக் கண்ணில் துளித்த கண்ணீரை மற்றவர்கள் பார்க்காதபடி துடைத்துக் கொள்வாள்.
ஜயத்தின் தகப்பனாருக்கு உடம்பு சரியில்லையென்ற விஷயத்தைக் கேட்டதும் சாவித்திரிக்கு, 'ஒரு வேளை நம் அப்பாவுக்கும் உடம்பு ஏதாவது அசௌகரியமாயிருக்குமோ? அதனால்தான் கடிதம் போடவில்லையோ?' என்று தோன்றியது, 'ஐயோ! அவர் சுரம் கிரமென்று படுத்துக் கொண்டால் சித்தியும் பாட்டியும் அவரைச் சரியாய்க் கவனித்துக் கொள்வார்களா? அந்த மாதிரி சமயங்களில் நாம் பக்கத்தில் இருந்தால் அவருக்கு எவ்வளவு ஆறுதலாயிருக்கும்? ஐயோ! நாம் பெண் பிறந்து அப்பாவுக்குக் கஷ்டத்தைத் தவிர வேறென்ன? இந்த வயதில் ஒரு பிள்ளையிருந்தால் அவருக்கு எவ்வளவு ஒத்தாசையாயிருக்கும்? பாழும் பெண் ஜன்மம் ஏன் எடுத்தோம்? பிள்ளையாகப் பிறந்திருக்கக் கூடாதா?' என்றெல்லாம் எண்ணிப் பெருமூச்சு விடுவாள்.
இப்படியெல்லாம் நினைக்க நினைக்க தகப்பனாரையும், நெடுங்கரையையும் பார்க்க வேண்டுமென்ற அவளுடைய ஆவல் பத்து மடங்கு, நூறு மடங்காகப் பெருகிக் கொண்டிருந்தது. மணிக்கு முப்பது மைல் வேகத்தில் ரயில் போய்க் கொண்டிருந்தபோதிலும், அதிலிருந்த ஒவ்வொரு நிமிஷமும் சாவித்திரிக்கு ஒரு யுகமாகத் தோன்றிற்று.
கணபதியின் குடும்பத்தார் சென்னைப்பட்டணத்தில் இறங்கி இரண்டு நாள் சிரம பரிகாரம் செய்து கொண்டு பிறகு திருநெல்வேலிக்குக் கிளம்ப உத்தேசித்திருந்தார்கள். ஒரே பிரயாணமாகப் போனால் பிள்ளைத்தாச்சிப் பெண்ணுக்கு உடம்புக்கு ஆகாதென்று கணபதியின் தாயார் சொல்லிவிட்டாள். ஆகவே, சென்னையில் அவர்களுக்குத் தெரிந்தவர்கள் வீட்டில் தங்கிவிட்டுப் போகத் தீர்மானித்தார்கள். சாவித்திரியையும் தங்களுடன் இருந்துவிட்டுப் போகும்படி சொன்னார்கள். அவள் அதற்கு இணங்கவில்லை.
இந்த நல்ல மனுஷர்கள் காட்டிய அபிமானத்தினாலும் அநுதாபத்தினாலுமே அவர்களைச் சாவித்திரிக்குப் பிடிக்காமல் போயிருந்தது. அவளுடைய துரதிர்ஷ்டத்தைப் பற்றிக் கணபதியின் தாயார் அடிக்கடி பேசியதும், அதைக் கணபதியும் ஜயமும் தடுக்க முயற்சித்ததும் சாவித்திரிக்குப் பரம சங்கடத்தை அளித்தன. இவர்களே தனக்கு முன்பின் தெரியாதவர்கள். இனிமேல் இவர்களுக்குத் தெரிந்தவர்கள் வீட்டுக்கும் போய் அவர்களுடைய பரிதாபத்துக்கும் ஆளாக வேண்டுமா? - மேலும் நெடுங்கரைக்குப் போய்ச் சேரும் ஆவலும் சாவித்திரிக்கு அளவில்லாமல் இருந்தது. ஆகையால் தன்னைப் பெண்பிள்ளைகள் வண்டியில் ஏற்றிவிட்டு விட்டால், போய்விடுவதாக அவர்களிடம் சொன்னாள். தங்களுடன் தங்கிப் போகலாமென்று அவர்கள் எவ்வளவு சொல்லியும் கேட்காமற் போகவே, அப்படியே அவளை ரயில் ஏற்றி விட்டார்கள்.
ஸ்திரீகள் வண்டியில் அன்று அதிகம் பேரில்லை. மொத்தம் ஐந்தாறு பேர் தான் இருந்தார்கள். ஆகையால் இடம் தாராளமாயிருந்தது. சாவித்திரி தனியாக ஒரு மூலையில் போய்ப் பெட்டியை வைத்துக் கொண்டு உட்கார்ந்தாள். அவளுக்கு எதிர்ப் பெஞ்சில் உட்கார்ந்திருந்த ஒரு ஸ்திரீ சற்று நேரத்துக்கெல்லாம் சாவித்திரியிடம் பேச்சுக் கொடுத்தாள். அவள் யார், எந்த ஊர், எங்கிருந்து எங்கே போகிறாள், ஏன் தனியாகப் போகிறாள் என்றெல்லாம் விசாரித்தாள். சாவித்திரி சுருக்கமாகப் பதில் சொல்லிக் கொண்டு வந்தாள். "ஐயோ பாவம்! பிள்ளைத்தாச்சிப் பெண்ணைத் தனியா அனுப்பிச்சுட்டாங்களே!" என்று அந்த ஸ்திரீ ரொம்பவும் பரிதாபப்பட்டாள். பிறகு, "கல்கத்தாவிலிருந்து கண்ணை முழிச்சுண்டு வந்திருக்கே! பொட்டியை எடுத்துக் கீழே வச்சுட்டுப் படுத்துக்கோ, அம்மா!" என்றாள்.
சாவித்திரிக்கும் தூக்கம் கண்ணைச் சுழற்றிக் கொண்டு வந்தது. பெட்டியைத் திறந்து ஒரு புடவையை எடுத்துத் தலைமாட்டில் வைத்துக்கொண்டு படுத்தாள். இரண்டு நிமிஷத்துக்கெல்லாம் தூங்கிவிட்டாள்.
சாவித்திரி கனவு கண்டாள். அவளுக்குக் குழந்தை பிறந்துவிட்டது. குழந்தை, மனுஷ்யக் குழந்தை மாதிரியே இல்லை. தெய்வலோகத்துக் குழந்தை மாதிரி இருக்கிறது. அதன் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தால் போதும் பசி, தாகம் ஒன்றும் தெரியாது. அது சிரிக்கிற அழகைத் தான் என்னவென்று சொல்வது! - சாவித்திரி குழந்தையை மடியில் வைத்துக் கொஞ்சிக் கொண்டிருக்கிறாள். அவளைச் சுற்றிலும் எல்லாரும் வந்து நின்று கொண்டிருக்கிறார்கள். அப்பா, சித்தி, பாட்டி, மாமனார், மாமியார் எல்லாருந்தான். மாமியாருக்குப் பின்னால் இவரும் சங்கோசப்பட்டுக் கொண்டு நிற்கிறார். எல்லாரும் குழந்தையை எடுத்துக் கொள்ள ஆவலாயிருக்கிறார்கள். "சித்தெக் கொடுடி குழந்தையை! பாத்துட்டுக் கொடுத்துடறேன்" என்று தங்கம்மாள் கெஞ்சுகிறாள். "நான் உன் குழந்தையை ஒண்ணும் பண்ணிட மாட்டேண்டீ; தேஞ்சு போயிடாதேடி, கொடுடி" என்கிறாள் மங்களம்.
அவர்களைப் பார்த்துச் சாவித்திரி, "நீங்கள்ளாம் என் குழந்தையைப் பார்க்க வேண்டாம். என்னை என்ன பாடு படுத்தி வச்சயள்? இப்ப மாத்திரம் குழந்தையை எடுத்துக்கிறதற்கு வந்துட்டேளாக்கும்? எங்க அப்பாகிட்ட மாத்திரந்தான் கொடுப்பேன், வேறொத்தரும் என் குழந்தையைப் பார்க்க வேண்டாம். போங்கோ!" என்கிறாள்.
சட்டென்று சாவித்திரி கண்ணை விழித்துக் கொண்டாள். "மாயவரம்! மாயவரம்!" என்று போர்ட்டர் கூவுவது கேட்டது. "மாயவரம் வந்துட்டதா? இன்னும் கொஞ்ச நேரத்துக்கெல்லாம் புதுச்சத்திரம் வந்துடுமே?" என்று எண்ணிச் சாவித்திரி எழுந்து உட்கார்ந்து, தலைமாட்டில் வைத்திருந்த புடவையை எடுத்துப் பெட்டிக்குள் வைக்கப் போனாள். பெட்டியைக் காணவில்லை!
எதிரிலிருந்த ஸ்திரீயையும் காணவில்லை. அந்தண்டைப் பக்கத்திலிருந்தவர்களைப் பார்த்து, "ஏனம்மா! இங்கேயிருந்த என் பெட்டியைக் காணோமே? யாருக்காவது தெரியுமா?" என்று கேட்டாள். அவர்களில் ஒருத்தி, "ஐயையோ! உன் பெட்டியா அது? உன் எதிரிலே உட்கார்ந்திருந்தாளே அந்த அம்மா அதை எடுத்துண்டு சிதம்பரத்திலேயே இறங்கி விட்டாளே!" என்றாள்.
சாவித்திரி அதிகாலையில் புதுச் சத்திரம் ஸ்டேஷனில் வந்து இறங்கினாள். இன்னும் பனிபெய்து கொண்டிருந்தபடியால், ஸ்டேஷன் கட்டிடம், அதற்கப்பாலிருந்த சாலை, தூங்குமூஞ்சி மரங்கள் எல்லாம் மங்கலாகக் காணப்பட்டன.
தன்னை அழைத்துப் போக அப்பா வந்திருக்கிறாரோ என்று ஆவலுடன் சுற்று முற்றும் பார்த்தாள். பிளாட்பாரத்தில் ஒரு பிராணியும் இல்லை. வெளியே ஒரு வண்டி மட்டும் கிடந்தது. அதிகாலையானதால் ஒரு வேளை நல்லானை மட்டும் வண்டியுடன் அனுப்பியிருப்பார் என்று சாவித்திரி எண்ணினாள்.
நல்ல வேளையாக, அவளிடமிருந்த கொஞ்சம் பணத்தையும், டிக்கட்டையும் பெட்டியில் வைக்காமல் ஒரு பர்ஸில் போட்டு இடுப்பில் செருகிக் கொண்டிருந்தாள். ஆகையால் அவை கெட்டுப் போகாமல் பிழைத்தன.
சாவித்திரி, டிக்கட்டை எடுத்துக் கொடுத்தபோது, தனக்குத் தெரிந்த பழைய ஸ்டேஷன் மாஸ்டரோ என்று ஒரு க்ஷணம் உற்றுப் பார்த்தாள். இல்லை. அவர் இல்லை. இவர் யாரோ புதுசு! மீசையும் கீசையுமாயிருக்கிறார். சாவித்திரி வெளியில் போன பிறகு அவர் டிக்கட் குமாஸ்தாவிடம், "வர வரப் பெண்பிள்ளைகள் எல்லாம் துணிந்து போய்விட்டார்கள்! கொஞ்ச நாள் போனால், நாமெல்லாம் சேலை கட்டிக்க வேண்டியதுதான்" என்றார்.
அதற்கு டிக்கட் குமாஸ்தா, "ஆமாம், ஸார்! ஆனால் குழந்தை பெறுகிற காரியம் மட்டும் அவர்கள்தானே செய்ய வேண்டும் போலிருக்கு!" என்று நகைச்சுவையுடன் பதில் அளித்தார்.
இதைக் கேட்டுக்கொண்டே வெளியில் போன சாவித்திரி, அங்கே கிடந்த ஒரே வண்டியின் அருகில் சென்றாள். வண்டிக்காரன், "எங்கே, அம்மா, போகணும்? வண்டி பூட்டட்டுமா?" என்றான். அவன் நல்லான் இல்லை. வண்டி, நெடுங்கரை வண்டியும் இல்லை. அது ஓர் ஒற்றை மாட்டு வண்டி.
"ஏனப்பா, நெடுங்கரையிலிருந்து வண்டி ஒன்றும் வர்றலையா?" என்று சாவித்திரி கேட்டாள்.
"இன்னிக்கு வர்றலீங்க; ஒருவேளை நாளைக்கு வருமோ, என்னமோ!" என்றான் வண்டிக்காரன்.
சாவித்திரிக்கு ஆத்திரமும் அழுகையுமாய் வந்தது. அப்பாவா இப்படி அலட்சியமாயிருக்கிறார்? நம்பவே முடியவில்லையே? ஒருவேளை அவருக்கு ஏதாவது ஆபத்தாயிருக்குமோ? இல்லாமற் போனால் இப்படி இருக்கமாட்டாரே?
வண்டியைப் பூட்டச் சொல்லி, சாவித்திரி அதில் ஏறிக் கொண்டு நெடுங்கரைக்குப் பிரயாணமானாள்.
வண்டி நெடுங்கரை அக்கிரகாரத்துக்குள் நுழைந்த போது, சாவித்திரிக்கு நெஞ்சு திக் திக்கென்று அடித்துக் கொண்டது. நெடுங்கரையை மறுபடி பார்க்க வேண்டுமென்று அவள் எவ்வளவு ஆவல் கொண்டிருந்தாள்? புறப்படும்போது எவ்வளவு குதூகலமாயிருந்தாள்? அந்தக் குதூகலம் இப்போது எங்கே போயிற்று? நெடுங்கரைக்கு வந்ததில் ஏன் கொஞ்சங் கூடச் சந்தோஷம் உண்டாகவில்லை?
சாவித்திரியின் கண்களுக்கு நெடுங்கரை அக்கிரகாரம் இப்போது பழைய தோற்றம் கொண்டிருக்கவில்லை. வீடுகள், தென்னை மரங்கள், கோவில், மண்டபம் எல்லாம் முன் மாதிரியேதான் இருந்தன. ஆனாலும், வீதி மட்டும் களை இழந்து காணப்பட்டது.
வீடு நெருங்க நெருங்க அவளுடைய மனம் அதிகமாகப் பதைபதைத்தது. அப்பாவை எப்படிப் பார்ப்பது, என்ன சொல்வது? சித்தியின் முகத்தில் எப்படித்தான் விழிப்பது? ஒரு வேளை ஆத்தில் பாட்டியும் இருப்பாளோ? இருந்தால், அவள் ஏதாவது வெடுக்கென்று சொல்வாளே? அப்புறம் ஊரார்தான் என்ன சொல்வார்கள்? என்ன நினைத்துக் கொள்வார்கள்? தெருவில் பந்து விளையாடிக் கொண்டிருந்த பசங்களை ஏறிட்டுப் பார்க்கக்கூடச் சாவித்திரிக்கு வெட்கமாயிருந்தது.
இதோ, வீடு வந்து விட்டது, "நிறுத்தப்பா!" என்றாள் சாவித்திரி. வண்டி நின்றது. தன்னுணர்ச்சி இல்லாமலே சாவித்திரி வண்டியிலிருந்து இறங்கினாள். சற்று விரைவாகவே வீட்டை நோக்கிச் சென்றாள்.
வாசற் கதவு பூட்டியிருந்ததைப் பார்த்ததும், ஒரு நிமிஷம் சாவித்திரிக்கு இருதயமே நின்றுவிட்டதுபோல் தோன்றிற்று! அப்படியே ஸ்தம்பித்து நின்றுவிட்டாள்.
நெடுங்கரை தன்னை எப்படி வரவேற்கும் என்பது பற்றி சாவித்திரி என்னவெல்லாமோ எண்ணமிட்டுக் கொண்டிருந்தாள். ஆனால், இந்த மாதிரி வரவேற்பை அவள் எதிர்பார்க்கவேயில்லை. வீட்டுக் கதவு பூட்டியிருக்குமென்று அவள் நினைக்கவேயில்லை.
சாவித்திரிக்கு யோசனை செய்யும் சக்தி வருவதற்குச் சில நிமிஷம் பிடித்தது. ஒருவரும் ஊரில் இல்லைபோல் இருக்கிறது. ஆனால், எங்கே போயிருப்பார்கள்? அப்பா ஊரில் இல்லாததனால் தான் தன்னுடைய கடிதங்களுக்குப் பதில் இல்லையோ?
இந்தச் சமயத்தில் வீதியில் பசங்கள் விளையாடிக் கொண்டிருந்த பந்து சாவித்திரிக்கு அருகில் வந்து விழுந்தது. பந்தைத் தொடர்ந்து ஒரு பையன் ஓடி வந்தான். அவனைப் பார்த்துச் சாவித்திரி, "ஏண்டாப்பா, குழந்தை, இந்தாத்து மாமா எல்லாரும் எங்கே?" என்று கேட்டாள். அந்தப் பையன் விளையாட்டின் சுவாரஸ்யத்தில், "எனக்குத் தெரியாது, அம்மாமி! அதோ தீக்ஷிதர் மாமா இருக்கார் கேளுங்கோ!" என்று சொல்லி, பந்தை வீசி எறிந்து, "அடே பிடிடா!" என்று கூவிக் கொண்டே ஓடிவிட்டான்.
அப்போது அறுவடைக் காலமாதலால், சாவித்திரி வந்த நேரத்திற்கு அக்கிரகாரத்தில் புருஷர்கள் எல்லாரு வயல் வெளிக்குச் சென்றிருந்தார்கள். தீக்ஷிதருக்கு அந்த உபத்திரவம் ஒன்றும் இல்லாதபடியால் அவர் மட்டும் வீட்டில் இருந்தார். வாசலில் வண்டிச் சத்தத்தைக் கேட்டு வெளியில் வந்தார். சாவித்திரி தனியாக வண்டியிலிருந்து இறங்குவதைப் பார்த்ததும், அவருக்கு ஆச்சரியமாய்ப் போயிற்று. 'இது என்ன கூத்து?' என்று எண்ணிக் கொண்டே இந்த வேடிக்கையைப் பூராவும் பார்த்து விடுவதற்காக அவருடைய வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து கையில் ஜப மாலையுடன் ஜபம் செய்யத் தொடங்கினார்.
சாவித்திரி கையில் ஒரு கொசுவிய புடவையுடன் மட்டும் இறங்கிப் போனது அவருக்கு இன்னும் வியப்பையளித்தது. அவள் இருந்த கோலமோ சொல்ல வேண்டியதில்லை. 'சரிதான், சரிதான். நாம் நினைத்தபடிதான் ஆயிற்று. இந்தப் பெண் புக்ககத்திலே இருந்து பேர் சொல்லாது என்று நாம் அப்போதே சொல்லவில்லையா? அது பலிச்சுப் போச்சு. ஏதோ கெட்ட நடவடிக்கியிலே இறங்கியிருக்கவேண்டும். இவளாகத்தான் கிளம்பிவிட்டாளோ, அவாளேதான் அடிச்சு விரட்டிட்டாளோ, தெரியலை. இதையெல்லாம் ஒரு மாதிரி தெரிஞ்சுண்டு தான், சம்பு சாஸ்திரி ரொம்ப நாளாய்ப் பொண்ணு என்கிற பேச்சை எடுக்காதிருந்தான் போலிருக்கு...' என்று எண்ணமிட்டுக் கொண்டிருந்தார் தீக்ஷிதர்.
வீட்டின் கதவு பூட்டியிருப்பதைப் பார்த்துவிட்டு சாவித்திரி திரும்பியபோது அவள் முகத்தில் தோன்றிய ஏமாற்றமும் துக்கமும் தீக்ஷிதருக்கு மிக்க மகிழ்ச்சியளித்தன. 'வேண்டும், வாயாடிக் கழுதைக்கு நன்றாய் வேண்டும்' என்று நினைத்துக் கொண்டார்.
இதற்குள் சாவித்திரி வீதியைக் கடந்து அவர் இருந்த இடத்துக்கு வந்தாள். "தீக்ஷிதர் மாமா, எங்ககம் ஏன் பூட்டிக் கிடக்கு? எங்க அப்பா எல்லாரும் எங்கே?" என்று கேட்டாள்.
"உங்கப்பன் எங்கே போனானோ, நான் என்னத்தைக் கண்டேன்? எங்கிட்டச் சொல்லிண்டா போறான்?" என்றார் தீக்ஷிதர்.
சாவித்திரிக்கு அழுகை வரும்போல் இருந்தது. அப்பா எங்கே என்பதை எப்படியாவது தெரிந்து கொள்ள அவள் மனம் துடிதுடித்தது. தீக்ஷிதருக்கும் தெரியும், ஆனால், சொல்ல மறுக்கிறார் என்பதும் ஒருவாறு தெரிந்தது.
அவளுடைய ஆங்காரத்தையெல்லாம் அடக்கிக் கொண்டு, பரிதாபமான குரலில், "தீக்ஷிதர் மாமா! எங்கப்பா மேலே உங்களுக்கு ஏதாவது கோபம் இருந்தாலும் எனக்காகவாவது சொல்லப்படாதா?" என்றாள். அப்புறம் இன்னொரு பயங்கரமான எண்ணம் தோன்றவே, "எங்கப்பாவுக்கு... உடம்பு கிடம்பு...ஒன்றுமில்லையே?" என்று கேட்டாள்.
"அவனுக்கும் எனக்கும் உடம்புக்கு என்ன வரப் போகிறது? போன சனிக்கிழமை கூட இருந்தான் கொட்டறாப்புளி மாதிரி. சென்னைப் பட்டணத்துக்குப் போறதாகச் சொல்லிண்டிருந்தான். ஒரு வேளை அங்கேதான் போயிருப்பான்."
"சென்னைப் பட்டணத்துக்கா? என்னத்துக்கு மாமா?"
"பாட்டுச் சொல்லிக் கொடுத்து, பணம் சம்பாதிச்சுண்டு வரப்போறானாம், பணம்!"
உடனே சாவித்திரிக்குப் பழைய ஞாபகம் உண்டாயிற்று. அப்பா ஏற்கெனவே கடன்பட்டிருந்தது, மறுபடியும் தன்னைக் கல்கத்தாவுக்குக் கூட்டி அனுப்பப் பணம் வாங்கிக் கொண்டு வந்தது, அப்போதே நிலத்தை விற்றிருப்பாரோ என்று தான் சந்தேகித்தது - எல்லாம் நினைவுக்கு வந்தன. ஆனால் இதையெல்லாம் பற்றி இவரைக் கேட்பதற்கு மனம் வராமல், "எங்க சித்தி? - அவ கூடவா பட்டணத்துக்குப் போயிருக்கா?" என்று கேட்டாள்.
"உங்க சித்தி - பிறந்தாத்துக்குப் போய்ட்டா, பிறந்தாத்துக்கு" என்று சொல்லிவிட்டு, தீக்ஷிதர் எழுந்திருந்தார்.
இவ்வளவு நேரமும் வாசலில் வண்டி நின்று கொண்டிருந்தது. தான் சவாரி ஏற்றிக் கொண்டு வந்த அம்மாளின் நிலைமையைப் பார்த்ததும், சத்தம் வருமோ வராதோ என்ற சந்தேகம் வண்டிக்காரனுக்கு உண்டாகி விட்டது.
"என்னம்மா, எத்தனை நேரம் அம்மா காத்திருக்கிறது?" என்று அவன் கேட்டான்.
சாவித்திரி வண்டியை நோக்கி நடந்தாள். சட்டென்று மறுபடியும் திரும்பி வந்து, வீட்டுக்குள் போய்க் கொண்டிருந்த தீக்ஷிதரிடம், "மாமா, பட்டணத்திலே, எங்கப்பா விலாசம் தெரியுமா?" என்று கேட்டாள்.
"விலாசம் யார் கண்டா? எங்கிட்டச் சொல்லிட்டா போயிருக்கான்? அங்கே போய், பாட்டு வாத்தியார் சம்பு சாஸ்திரி வீடுன்னு விசாரிச்சா தானே தெரியறது!" என்று சொல்லிவிட்டுத் தீக்ஷிதர் உள்ளே போய்ச் சேர்ந்தார்.
இன்னும் கொஞ்ச நேரம் அவளிடம் பேச்சுக் கொடுத்தால், அப்படி இப்படி என்று உறவு கொண்டாடிக் கொண்டு சாப்பாட்டுக்கு உட்கார்ந்துவிடப் போகிறாளே என்று அவருக்குப் பயம். ஒரு வேளைச் சாப்பாடு போடுவது ஒன்றும் பிரமாதமில்லை; வாஸ்தவந்தான். ஆனால் இந்த மாதிரி சாதி கெட்டு, நெறி கெட்டு ஓடி வந்திருப்பவளுக்குச் சாப்பாடு எப்படிப் போடுவது? போட்டுவிட்டு அந்தப் பாவத்தை எங்கே கொண்டுபோய்த் தொலைப்பது?
சாவித்திரி மறுபடியும் வண்டியில் ஏறிக் கொண்டாள். வண்டி திரும்பி வந்த வழியோடு போயிற்று. இதற்குள் சமாசாரம் எப்படியோ பரவி, அக்கிரகாரத்தில் பல வீடுகளில் ஸ்திரீகள் வாசற்படியண்டை நின்று எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்களில் யாரும் வண்டியினருகில் வந்து விசாரிக்கவில்லை. இதுவும் ஒரு காலமா என்று ஆச்சரியப்படும் மனோபாவம் அவர்களுடைய முகத்தில் பிரதிபலித்தது.
வண்டி அக்கிரகாரத்தைத் தாண்டிச் சென்று அப்பால் இருந்த குடியானத் தெருவின் ஒரு முனை வழியாகப் போயிற்று. சாவித்திரிக்கு அப்போது நல்லானின் ஞாபகம் வந்தது; வண்டியை நிறுத்தச் சொல்லி, அங்கே நின்ற ஒரு குடியானவ ஸ்திரீயிடம், "பட்டிக்கார நல்லான் ஊரிலேயிருக்கானா?" என்று கேட்டாள். அந்த ஸ்திரீ, "இது யாரு? நம்ப சாஸ்திரி ஐயா பொண்ணு சாவித்திரி மாதிரியில்லேயிருக்கு?" என்று சொல்லிக் கொண்டே அருகில் வந்தாள். இதைக் கேட்டு இன்னும் சில ஸ்திரீகளும் வண்டியின் பக்கம் வந்தார்கள். மறுபடியும், சாவித்திரி நல்லானைப் பற்றிக் கேட்டாள். "அவரு அப்பவே ஊரைவிட்டுப் போய்ட்டாரே, அம்மா. உனக்குத் தெரியாதா? சாஸ்திரி ஐயா நிலத்தை வித்தாரோ, இல்லையோ, இந்த ஊர்லே இனிமே இருக்க மாட்டேன்னு போய்ட்டாரு. இப்ப சாவடிக் குப்பத்திலே, அவரு மச்சானோடேயல்ல இருக்காரு!" என்றாள் அந்தக் குடியானவ ஸ்திரீ.
சாவித்திரிக்கு இப்போது நிலைமை ஒருவாறு தெரிந்தது. அப்பா நிலத்தை விற்றுவிட்டார். வேறு வருமானமும் இல்லை. ஆகையால், தன்னை வந்து அழைத்து வரக் கையில் பணம் இல்லாமையால் தான் வரவில்லை. சங்கோசப்பட்டுக் கொண்டு, போட்ட கடுதாசிக்குப் பதில் போடாமல் இருந்துவிட்டார். இப்போது பாட்டுச் சொல்லிக் கொடுத்துப் பணம் சம்பாதிக்கப் பட்டணத்துக்குப் போயிருக்கார். அப்பா! அப்பா! ஒருவேளை என்னை அழைத்து வருவதற்குத் தான் பணம் சம்பாதிக்கப் புறப்பட்டீர்களோ?
தகப்பனாரைப் பார்க்கும் ஆவல் சாவித்திரிக்கு இன்னும் அதிகம் ஆயிற்று. "வண்டியை ஓட்டப்பா!" என்றாள்.
குடியானவ ஸ்திரீகள் கொஞ்ச தூரம் வண்டி பின்னால் நடந்து கொண்டே, "ஏம்மா எங்கே வந்தே?", "இப்படித் தனியா வந்துட்டுப் போறயே?", "பாவம்! அப்பா ஊரிலே இருக்காருன்னு நினைச்சுட்டு வந்தயாக்கும்!", "பட்டினியாப் போறே போல் இருக்கே", "ஆனாலும் இந்தப் பாப்பாரச் சாதியைப்போல பார்த்ததில்லை. வந்த பொண்ணைச் சாப்பிட்டயான்னு கேக்காத கூட அனுப்பிச்சுட்டாங்களே?", "கொஞ்சம் இறங்கி ஒரு குவளை மோராவது சாப்பிட்டுட்டுப் போயேம்மா!" என்று இந்த மாதிரி சொல்லிக் கொண்டு வந்தார்கள்.
சாவித்திரி, "ஒன்றும் வேண்டாம், அம்மா! எனக்குப் பசிக்கவே இல்லை. ஊருக்குப் போய்ச் சாப்பிட்டுக்கிறேன். எங்க அப்பாவை அவசரமாய்ப் பார்க்கணும். அதுக்காகத்தான் போறேன்" என்று சொல்லி, அவர்களை நிற்கச் செய்தாள்.
மேலே வண்டி போனபோது, "இந்தக் குடியானவ ஸ்திரீகள் சொன்னது எவ்வளவு உண்மை! இவர்களுக்கு இருக்கிற ஈவிரக்கம், பச்சாதாபம் அக்கிராகாரத்திலே யாருக்கும் இல்லையே? யாராவது வந்து 'தீர்த்தம் வேண்டுமா?' என்று கூடக் கேட்கவில்லையே?" என்று சாவித்திரி எண்ணமிட்டாள்.
அதே சமயத்தில் அக்கிரகாரத்து ஸ்திரீகள், ஒருவருக்கொருவர், "ஏண்டி, அம்மா! அவள் பெரிய மனுஷியோல்லியோ! பெரிய இடத்திலே பிறந்தவள்; பெரிய இடத்திலே வாழ்க்கைப்பட்டவள். நம்மை எல்லாம் இலட்சியம் பண்ணி வண்டியை விட்டிறங்கி வந்து ஒரு வார்த்தை பேசுவளோ?" என்று பேசிக்கொண்டார்கள்.
சம்பு சாஸ்திரி நெடுங்கரையை விட்டுக் கிளம்பிய போது அவருடைய மனம் எண்ணாததெல்லாம் எண்ணிற்று.
அவரை ஊரார் சாதிப் பிரஷ்டம் பண்ணி வைத்து, தீபாவளிக்கும் மாப்பிள்ளை வராமற் போனதிலிருந்து சாஸ்திரி மனம் சோர்ந்து போயிருந்தார். சாவித்திரியைப் புக்ககத்துக்கு அனுப்பிய பிறகு அவருடைய மனச் சோர்வு அதிகமாயிற்று. வீட்டிலே சாவித்திரி இல்லை. வெளியிலே நல்லான் இல்லை. முன்னைப் போல் பஜனைகளும் உற்சவங்களும் நடப்பதில்லை. இதனாலெல்லாம் நெடுங்கரை வாசமே அவருக்கு வெறுத்துப் போயிருந்தது. ஆனாலும் ஊரை விட்டுக் கிளம்பும்போது, அவருடைய இருதயம் ஏன் இவ்வளவு வேதனை அடையவேண்டும்?
'கூடாது; இத்தகைய பாசம் கூடாது, நம்மை இந்தப் பாசத்திலிருந்து விடுவித்து ரக்ஷிப்பதற்காகத்தான் அம்பிகை இவ்வாறு மாமியாரின் வாக்கின் மூலமாக ஆக்ஞாபித்திருக்கிறாள்' என்று எண்ணி மனத்தை உறுதிப் படுத்திக் கொண்டு கிளம்பினார்.
க்ஷேத்திர யாத்திரை செய்ய வேண்டுமென்ற விருப்பம் சாஸ்திரிக்கு வெகு காலமாக இருந்தது. அந்த விருப்பம் நிறைவேறுவதற்கு இப்போது சந்தர்ப்பம் வாய்த்தது. சிதம்பரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் முதலிய க்ஷேத்திரங்களுக்குச் சென்று அங்கெல்லாம் இரண்டு மூன்று நாள் தங்கி ஸ்வாமி தரிசனம் செய்துகொண்டு கடைசியாகச் சென்னைப்பட்டினம் வந்து சேர்ந்தார்.
சென்னையில் முதலில் அவருக்குத் திக்குத் திசை தெரியவில்லை. அப்புறம், கோவில்களை வைத்து ஒருவாறு அடையாளம் கண்டுபிடிக்கத் தெரிந்துகொண்டார். கபாலீசுவரர் கோயில், பார்த்தசாரதி கோவில், கந்தசாமி கோவில், ஏகாம்பரேசுவரர் கோவில் ஆகியவற்றில் ஸ்வாமி தரிசனம் செய்து பரவசமானார். அப்புறம் வந்த காரியத்தைக் கவனிக்கத் தொடங்கினார்.
சம்பு சாஸ்திரி கிராமத்தில் பெரிய மிராசுதாராயிருந்தவர். எல்லாருக்கும் உதவிசெய்து அவருக்குப் பழக்கமே தவிர, ஒருவரிடம் போய் நின்று ஓர் உதவி கேட்டு அறியாதவர். மேலும் இயற்கையிலேயே சங்கோச சுபாவமுடையவர். அடித்துப் பேசிக் காரியத்தை முடித்துக் கொள்ளும் சக்தி அவருக்குக் கிடையாது.
அப்படிப்பட்டவர், முன்பின் தெரியாதவர்களின் வீடு ஏறிச்சென்று அவர்களிடம் ஒரு காரியத்தைக் கேட்பது என்றால், இலேசான காரியமா? ஆனாலும், சாஸ்திரி பகவான்மேல் பாரத்தைப் போட்டு, நெஞ்சைத் திடப் படுத்திக் கொண்டு, இந்தக் காரியத்தைத் தொடங்கினார்.
காரியத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை மட்டும் அவருக்கு இல்லை. "நாகரிகம் மிகுந்த இந்தப் பட்டணத்திலேயாவது, பட்டிக்காட்டு மனுஷனாகிய நமக்குப் பாட்டு வாத்தியார் வேலை கிடைக்கவாவது?' என்ற அவநம்பிக்கை அவருடைய மனத்துக்குள் கிடந்தது. அவருக்கே தம்மிடம் நம்பிக்கை இல்லாதபோது மற்றவர்களுக்கு எப்படி நம்பிக்கை உண்டாகப் போகிறது?
சிலர் சம்பு சாஸ்திரியின் தோற்றத்தைப் பார்த்ததுமே அவருக்குச் சங்கீதம் எங்கே வரப்போகிறது என்று தீர்மானித்துவிட்டார்கள். ஒரு பெரிய மனுஷர் சம்பு சாஸ்திரியை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, "ஏன் ஸ்வாமி உங்க ஊரிலே சங்கீதத்தைத் தராசிலே நிறுத்துக் கொடுக்கிறதா, மரக்காலிலே அளந்து கொடுக்கிறதா?" என்று கேட்டார்.
இந்தக் கேள்வி சம்பு சாஸ்திரியின் மனத்தை ரொம்பவும் உறுத்திற்று. கர்நாடக சங்கீதத்தின் ஜீவஸ்தானமாகிய சோழநாட்டில் அவர் பிறந்தவர். குழந்தைப் பிராயத்திலிருந்து மகா வித்வான்களுடைய சங்கீதத்தைக் கேட்டுக் கொண்டே வளர்ந்தவர். அப்படிப்பட்டவரைப் பார்த்து, இந்த மெட்ராஸ்காரன், தன்னிடம் பணம் இருக்கிற திமிரினால் தானே இப்படிக் கேட்டான்? "ஆமாம்; சங்கீதத்தைப் பணங் கொடுத்து வாங்குகிற இடத்திலே, மரக்காலில் அளந்தோ தராசில் நிறுத்தோதான் கொடுப்பார்கள். எங்கள் ஊரில் இப்படிக் கிடையாது." - இந்த மாதிரி சம்பு சாஸ்திரி சொல்லவில்லை; அந்த வீட்டைவிட்டுப் போகும் போது மனத்திற்குள் நினைத்துக் கொண்டு போனார்.
இன்னொரு பெரிய வக்கீலின் வீட்டில் பாட்டு வாத்தியார் வேண்டுமென்பதாகக் கேள்விப்பட்டுச் சம்பு சாஸ்திரி அந்த வீட்டுக்குள் சென்றார்.
வக்கீல் அவரைப் பார்த்ததும், யாரோ பட்டிக்காட்டிலிருந்து வந்திருக்கும் கட்சிக்காரர் என்று நினைத்துக் கொண்டார். "என்ன, ஐயா! ஏதாவது கேஸ், கீஸ் உண்டா?" என்று கேட்டார்.
"இல்லை - வந்து - கொஞ்சம் எனக்குச் சங்கீதம் தெரியும். ஆத்திலே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கச் சொன்னால்..."
வக்கீலுக்குக் குஷி பிறந்துவிட்டது. "என்ன சங்கீதமா? நீரா? நாசமாய்ப் போச்சு!" என்று அவர் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்துவிட்டார்.
அவருடைய சிரிப்பின் தாத்பர்யத்தைச் சம்பு சாஸ்திரி தெரிந்துகொண்டு, "வேணும்னா, பாடிக் காட்டுகிறேன்" என்றார்.
"பாடிக் காட்டுகிறீரா? நீரா?" என்றார் வக்கீல். உடனே, "சௌந்தரம்! சௌந்தரம்! இங்கே வா! ஒரு பிராமணன் பாடறேன்னு வந்திருக்கார்" என்றார். இந்த வேடிக்கையைத் தாம் மட்டும் அநுபவிப்பதில் அவருக்குத் திருப்தி இல்லை, தமது மனைவியும் கூட இருந்து அநுபவிக்க வேண்டும் என்று எண்ணினார்.
அவருடைய மனைவி வந்தாள். கூட அவளுடைய புதல்வியும் வந்தாள். "இவரா பாடப் போகிறார்?" என்று சௌந்தரம் கேட்டாள்.
"ஆமாம்! எங்கே உம்ம பாட்டை அவிழ்த்து விடுங்காணும்!" என்றார் வக்கீல்.
சம்பு சாஸ்திரி ஒரு கீர்த்தனம் பாடினார். அக்ஷர சுத்தமாகவும், சாஸ்திராரீதியாகவும், உருக்கம் கொடுத்தும் அற்புதமாய்ப் பாடினார்.
பாட்டின் போது ஒரு தடவை தாயாரைப் பார்த்துப் பெண் சிரித்தாள். ஏனென்றால், அந்தக் கீர்த்தனத்தை ஏற்கெனவே அந்தப் பெண் ஒரு பாட்டு வாத்தியாரிடம் கற்றுக் கொண்டிருந்தாள். அந்த மாதிரி இல்லாமல் இவர் தப்பாய்ப் பாடுகிறார் என்று பெண் சமிக்ஞையாகச் சிரித்தாள். தாயார், சமிக்ஞையிலேயே, "பேசாமலிரு" என்று பெண்ணை அடக்கினாள்.
பாட்டு முடிந்ததும், வக்கீல் நிதானமாக, "ஏன் ஸ்வாமி! நீர் இப்ப பாடியது பாட்டா, தெவச மந்திரமா?" என்று கேட்டார். அவருடைய மனைவி "வித்வானைப் பார்த்து அப்படியெல்லாம் சொல்லாதேயுங்கோ! உங்களுக்குப் பிடிக்கலேன்னா, வேண்டான்னுட்டுப் போங்களேன்!" என்றாள். சம்பு சாஸ்திரி எழுந்து வெளியே சென்றார்.
மற்றொரு பெரிய மனிதர் வீட்டில், சாஸ்திரிக்கு ஆர்மோனியப் பெட்டி வாசிக்கத் தெரியுமா என்று கேட்டார்கள். தெரியாது என்றதும் போகச் சொல்லி விட்டார்கள். ஒரு செட்டியார், "பிளேட் கிளேட் கொடுத்திருக்கீமா? ரேடியோவிலோ, கீடியோவிலோ பாடியிருக்கீமா?" என்று கேட்டார். சாஸ்திரி, "இல்லை" என்றதும், "சரிதான், போய் வாரும்" என்று சொல்லி விட்டார்.
இம்மாதிரி வீடு வீடாகவும் பங்களா பங்களாவாகவும் நுழைந்து வெளியே வந்து சாஸ்திரி ரொம்பவும் அலுத்துப் போனார். அவர் மனம் ரொம்பவும் சோர்ந்து விட்டது. ஒரு நாள் அவர் ஒரு பெரிய பங்களாவுக்குள் நுழைந்த போது, 'இதுதான் கடைசி தடவை; இந்த இடத்தில் நமக்கு வேலை கிடைக்காவிட்டால், பகவானுக்கு விருப்பமில்லை என்று தீர்மானிக்க வேண்டியதுதான்' என்று எண்ணிக் கொண்டு சென்றார்.
அந்தப் பங்களாவின் எஜமானர் அப்போது பங்களாவின் முன் வாசல் தோட்டத்தில் தம் சிநேகிதருடன் உட்கார்ந்து சிற்றுண்டி அருந்திக் கொண்டிருந்தார். சம்பு சாஸ்திரியை அங்கேயே உட்காரச் சொல்லி, "எங்கே, பாடுங்கள், பார்க்கலாம்" என்றார்.
இவர்களுக்கு என்ன பாட்டுப் பாடினால் பிடிக்கும் என்று சாஸ்திரி சற்று யோசித்தார். கடைசியில் அம்பிகையைத் தியானம் செய்து கொண்டு "சிருங்கார லஹரி" என்ற கீர்த்தனத்தைப் பாடி, அதற்கு ஸ்வரமும் விஸ்தாரமாகப் பாடத் தொடங்கினார்.
பங்களாவின் எஜமானர் பாட்டை நடுவிலேயே நிறுத்திவிட்டார். "இந்தக் காலத்திலே உங்க சங்கீதமெல்லாம் செல்லாது, ஸ்வாமி! இப்போ 'டேஸ்டெ'ல்லாம் மாறியிருக்கு. கொஞ்சம் இந்துஸ்தானி - கிந்துஸ்தானி அப்படியிருக்க வேண்டும்; போய் வாரும்" என்று சொல்லி அனுப்பினார்.
ஆனால், சாஸ்திரி அங்கே பாடிய பாட்டை ஓர் ஆத்மா அநுபவித்துப் பரவசப்பட்டுக் கொண்டிருந்தது. அவன், நல்லானுடைய மைத்துனன் சின்னசாமிதான். இந்தப் பங்களாவில் சின்னசாமி தோட்ட வேலை செய்து கொண்டிருந்தான், பாட்டைக் கேட்டுவிட்டு அருகில் வந்து பார்த்து, 'நம்ம நெடுங்கரை சாஸ்திரி ஐயா!' என்று அவன் தெரிந்து கொண்டு, 'இவர் எப்படி இங்கே வந்தாரு?' என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தான்.
ஆகவே, சாஸ்திரி திரும்பி வெளியே சென்று கொண்டிருந்தபோது, அவன் ஓடிவந்து விழுந்து நமஸ்காரம் செய்து, "சாமி! சாமி! என்னைத் தெரியுதுங்களா?" என்று கேட்டான்.
சாஸ்திரிக்கு அந்தப் பங்களாவில் உண்டாகியிருந்த ஏமாற்றத்தினால், மனம் குழம்பிப் போயிருந்தது. இவனை எங்கே அடையாளம் தெரியப் போகிறது?
"யார் தெரியவில்லையே, அப்பா!" என்றார்.
"நான் தானுங்க, நல்லானுக்கு மச்சான், சின்னசாமி. இப்பத் தெரியுதுங்களா?" என்றான்.
"ஞாபகம் வருகிறது. நல்லான் எங்கே அப்பா இருக்கான்? சௌக்கியமாயிருக்கானா?" என்று சாஸ்திரி கேட்டார்.
"நாங்க எல்லோரும் சாவடிக் குப்பத்திலே இருக்கோமுங்க. அவரு எப்போதும் உங்களைப் பத்தியும் உங்க நல்ல குணத்தைப் பத்தியுமே பேசிக்கிட்டிருப்பாருங்க. நீங்க அவசியம் வந்துட்டுப் போகணுங்க!" என்றான்.
"அதுக்கென்னப்பா, பார்க்கலாம்! எங்கே இருந்தாலும் சௌக்கியமாயிருந்தால் சரி" என்று சாஸ்திரி சொல்லிவிட்டு மேலே நடந்தார்.
"சாவடிக்குப்பங்க, கட்டாயம் வர்றணுங்க" என்று சின்னசாமி கூவினான்.
'ஸ்வாமி! ஸ்வாமி! இந்தத் திக்கற்ற நிலைமையில் நான் பட்டிக்கார நல்லானிடத்திலே போக வேண்டுமா? அவனிடம் என்னை வைத்து ரக்ஷிக்கும்படி கேட்க வேணுமா? வேண்டாம்! வேண்டாம்! இந்த உலக வாழ்க்கையே இனிமேல் வேண்டாம்! பூனூலை அறுத்து எறிந்துவிட்டுக் காஷாயம் கட்டிக்கொள்ள வேண்டியது; சாப்பாடு கிடைத்த இடத்தில் சாப்பிட வேண்டியது; திறந்த வெளியில் தூங்க வேண்டியது; பகவானுடைய பெயரைச் சொல்லிக் கொண்டு ஊர் ஊராகப் போக வேண்டியது. க்ஷேத்திரங்களைத் தரிசிக்க வேண்டியது. இத்தனை நாளும் கிருகஸ்தாசிரமம் நடத்தியதெல்லாம் போதும்; மற்றவர்களுக்காகக் கவலைப் பட்டதும் போதும், இனிமேலாவது நாம் போகிற வழிக்குக் கதி தேடிக் கொள்வோம்.'... இந்த மாதிரி யோசனை செய்து கொண்டு சாஸ்திரி மேலே நடந்தார்.
சாவித்திரி நெடுங்கரைக்கு வந்து வீடு பூட்டியிருப்பதைப் பார்த்துவிட்டுத் திரும்பி இருபது நாளைக்கு மேலாயிற்று. இப்போது அவள் சென்னையில் மீனாக்ஷி ஆஸ்பத்திரியில் படுத்துக் கொண்டிருந்தாள். அவளுடைய கட்டிலுக்குப் பக்கத்திலிருந்த சிறு தொட்டிலில் கையால் இலேசாக ஆட்டக்கூடிய தொட்டிலில் ஒரு பெண் குழந்தை கிடந்தது. கனவில் அல்ல; உண்மையாகவேதான். மூக்கும் முழியுமாய்க் குழந்தை நன்றாயிருந்தது. பிறந்து பத்து நாள்தான் ஆகியிருந்தாலும் ஒரு மாதத்துக் குழந்தை போல் தோன்றியது.
குழந்தை அப்போது தன்னுடைய வலது கையின் விரல்களை ருசி பார்த்து அநுபவித்துக் கொண்டிருந்தது. அதிலிருந்து உண்டான 'த்ஸு' 'த்ஸு' என்ற சப்தம் சாவித்திரியின் காதில் விழுந்தபோது அவளுடைய முகம் சிறிது மலர்ந்தது. உடனே, திரும்பிக் குழந்தையைப் பார்த்தாள். மலர்ந்த முகம் சுருங்கிற்று. இந்தக் குழந்தையின் காரணமாக என்னென்ன கஷ்டங்களையெல்லாம் அநுபவிக்க நேர்ந்தது? அவையெல்லாம் ஒரு மகா பயங்கரமான சொப்பனத்தைப் போல் சாவித்திரியின் நினைவில் வந்தன. அந்தச் சம்பவங்களை மறந்து விடுவதற்கு அவள் எவ்வளவோ முயன்று பார்த்தாள். அவற்றை நினைத்துப் பார்ப்பதில்லையென்று பல்லைக் கடித்துக்கொண்டு மனத்தை உறுதி செய்து கொண்டாள். அது ஒன்றும் பயன்படவில்லை. திரும்பத் திரும்ப அந்த நினைவுகள் வந்து கொண்டுதான் இருந்தன.
நெடுங்கரையிலிருந்து சாவித்திரி உடனே திரும்பிச் சென்னைக்கு டிக்கட் வாங்கிக் கொண்டு ரயில் ஏறியபோது அவளுடைய மனத்தில் கவலையும் பயமும் இல்லாமலில்லை. 'அந்தப் பெரிய பட்டணத்தில் போய் அப்பாவை எப்படித் தேடுவோம்? அதுவும் இந்தப் பலஹீனமான ஸ்திதியில்?' என்று அவளுடைய நெஞ்சு பதைபதைத்துக் கொண்டுதான் இருந்தது. ஆனாலும் இவ்வளவு பயங்கரமான கஷ்டங்களை எல்லாம் அநுபவிக்க நேரிடுமென்று லவலேசமும் அவள் எதிர்பார்க்கவில்லை.
"பாட்டு வாத்தியார் சம்பு சாஸ்திரி வீடு தெரியுமா?" என்று எத்தனை இடங்களில் எத்தனை பேரைக் கேட்டிருப்பாள்? அவர்களில் சிலர், "பாட்டு வாத்தியாரையும் தெரியாது; சம்பு சாஸ்திரியையும் தெரியாது; போ! போ!" என்று கடுமையாகப் பதில் சொன்னார்கள். இம்மாதிரி பதில்களைக் கேட்கும்போதெல்லாம், 'ஜனங்கள் ஏன் இவ்வளவு இரக்கமற்றவர்களாயிருக்கிறார்கள்?' என்று சாவித்திரி ஆச்சரியப்படுவாள். பட்டணங்களிலே வசிக்கும் ஜனங்களின் இடைவிடாத வேலைத் தொந்தரவும், அதனால் சின்னஞ் சிறு விஷயங் கூட அவர்களுக்கு எரிச்சல் உண்டு பண்ணிவிடுவதும் சாவித்திரிக்கு எவ்வாறு தெரியும்? மேலும், பூரண கர்ப்பவதியான ஓர் இளம் பெண் இந்த மாதிரி தன்னந்தனியாக அலைவதைக் கண்டவுடனேயே, ஜனங்களுக்கு அவள் பேரில் இல்லாத சந்தேகங்கள் எல்லாம் ஏற்பட்டு அருவருப்பு உண்டாவது சகஜம் என்பதைத்தான் சாவித்திரி எப்படி அறிவாள்?
ஆனால், எல்லாருமே இப்படி நடந்து கொள்ளவில்லை, சிலர் அவளிடம் இரக்கமும் காட்டினார்கள். "நீ யாரம்மா? எந்த ஊர்? இந்த நிலைமையிலே ஏன் இப்படி அலையறே?" என்றெல்லாம் விசாரித்தார்கள். ஜனங்களுடைய கோபத்தையும் கடுமையையுமாவது சகித்துக்கொள்ளலாம் போல் இருந்தது; ஆனால், இந்த இரக்கத்தைச் சாவித்திரியினால் சகிக்கமுடியவில்லை. அவர்களுடைய விசாரணைக்குப் பதில் சொல்லவும் அவளுக்குப் பிடிக்கவில்லை.
'அப்பா இருக்கிற இடந்தெரிந்தால் சொல்லட்டும்; இல்லாமற்போனால் பேசாமலிருக்கட்டும். இவர்களை இதையெல்லாம் யார் விசாரிக்கச் சொன்னது?' என்று எண்ணினாள்.
கடைசியில், அவளை அந்த மாதிரி விசாரித்த இடம் ஒரு போலீஸ் ஸ்டேஷன், இங்கே அவள் எப்படி வர நேர்ந்தது என்பதும், ஸ்டேஷனில் நடந்தவையும் அவளுக்கு ஏதோ பூர்வ ஜன்மத்து ஞாபகம் போல் தெளிவின்றித் தோன்றின.
பாட்டு வாத்தியார் சம்பு சாஸ்திரியைத் தேடித் தேடி அலைந்து, கால் கை சோர்ந்து, கண்ணும் இருளடைந்து வந்த சமயத்தில், சாவித்திரி மேலே நடக்க முடியாமல் ஒரு வீட்டின் வாசற்படியில் உட்கார்ந்தாள். அந்த வீட்டிற்குள்ளே குழந்தைகளுக்குப் பாட்டுச் சொல்லிக் கொடுக்கும் சத்தம் கேட்டது. ஒரு க்ஷணநேரம், 'ஒரு வேளை அப்பா தானோ?' என்று நினைத்தாள். பாட்டு வாத்தியாரின் குரல் அப்பா இல்லையென்பதைத் தெரிவித்தது. ஆனாலும், சாவித்திரி எழுந்து உள்ளே சென்றாள். அங்கே இரண்டு குழந்தைகளுக்குப் பாட்டுச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தவரைப் பார்த்து, "ஸ்வாமி! உங்களுக்குப் பாட்டு வாத்தியார் சம்பு சாஸ்திரிகள் விலாசம் தெரியுமா?" என்று கேட்டாள்.
"சம்பு சாஸ்திரிகளா?" என்று ஒரு கணம் யோசித்தார் பாட்டு வாத்தியார்.
சாவித்திரிக்கு கொஞ்சம் உயிர் வந்தது; "நெடுங்கரை சம்பு சாஸ்திரிகள்" என்றாள்.
"நெடுங்கரை சம்பு சாஸ்திரிகளா? தெரியாதே அம்மா! தபால்காரனைக் கேட்டுப் பாருங்கள்; ஒருவேளை தெரிஞ்சிருக்கும்" என்று சொல்லி விட்டு, பாட்டு வாத்தியார், மறுபடியும், "ஸா நீ பா...." என்று ஆரம்பித்தார். அவருக்கு, பாவம், பாட்டுச் சொல்லிக் கொடுக்க இன்னும் மூன்று வீடுகள் பாக்கியிருந்தன. வழிப்போக்கர்களோடு பேசிக் கொண்டிருந்தால் காரியம் எப்படி ஆகும்?
சாவித்திரி அங்கிருந்து தட்டுத் தடுமாறிப் போய்க் கொண்டிருக்கையில் ஒரு வீட்டிலிருந்து தபால்காரன் ஒருவன் வெளியில் வந்து கொண்டிருந்தான். "போஸ்ட்மான்! பாட்டு வாத்தியார் சம்பு சாஸ்திரி வீடு எங்கே இருக்கு, தெரியுமா?" என்று கேட்டாள். தபால்காரன் கொஞ்சம் வயதானவன். பிள்ளை குட்டிக்காரன். சாவித்திரியைப் பார்க்க அவனுக்குப் பரிதாபமாயிருந்தது. ஆனால், ஒரு நிமிஷம் நிற்பதற்குக் கூட அவனுக்கு அவகாசமில்லை. "அப்படி ஒத்தரும் இந்த டிவிஷன்லே இருக்கிறதாத் தெரியலே, அம்மா! போலீஸ் ஸ்டேஷனிலே போய்ச் சொல்லு, கண்டுபிடிச்சுக் கொடுப்பாங்க" என்று கூறிவிட்டு, மேலே நடந்தான்.
சாவித்திரி போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றாள். போகும்போதே அவளுக்கு உடம்பெல்லாம் நடுங்கிக் கொண்டிருந்தது. அவளுடைய நிலைமையையும் தோற்றத்தையும் கண்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் கூடச் சிறிது மருண்டு போனார். அவளை உட்காரச் சொல்லி, "என்ன அம்மா விஷயம்?" என்று கேட்டார். சாவித்திரி "எங்க அப்பா சம்பு சாஸ்திரியைத் தேடிண்டு வந்தேன். ஊரெல்லாம் அலைஞ்சு பார்த்தாச்சு. அகப்படலை. போலீஸிலே சொன்னா கண்டு பிடிச்சுக் கொடுப்பான்னு கேள்விப்பட்டேன்..." என்றாள். இப்படிச் சொன்ன போதே அவளுக்கு மூச்சு வாங்கிற்று; கண் சுழன்றது.
போலீஸ் இன்ஸ்பெக்டர் அவசர அவசரமாய், "ஆகட்டும், அம்மா! கண்டுபிடிக்கப் பார்க்கிறேன். அது வரையிலே நீ யாராவது தெரிஞ்சவா வீட்டிலே இருந்துக்கோ!..." என்றார்.
"தெரிஞ்சவாளா? எனக்குத் தெரிஞ்சவாளா?" என்று தனக்குத்தானே முணுமுணுத்துக் கொண்டாள் சாவித்திரி.
இன்ஸ்பெக்டருடைய பயம் அதிகமாகிக் கொண்டிருந்தது. அவர் பரபரப்புடன், "இந்த ஸ்திதியிலே நீ இப்படி அலையக் கூடாது அம்மா! உன் ஹஸ்பெண்டு அட்ரெஸ் என்ன?" என்று கேட்டார்.
அப்போது, சாவித்திரிக்கு, திடீரென்று என்ன வந்துவிட்டது? அது அவளுக்கே தெரியவில்லை. ஜன்னி கின்னி பிறந்து விட்டதோ? அல்லது பைத்தியமே பிடித்துவிட்டதோ? சொப்பனத்தில் எழுந்திருப்பது போல் எழுந்து நின்றாள். தன்னையறியாமல் சிரிப்பு வந்தது. அவளுடைய பற்கள் நறநறவென்று கடிபட்டன.
"இன்ஸ்பெக்டர்!..." என்றாள் அவளுடைய குரலின் தொனி பயங்கரத்தையளித்தது. "ஹஸ்பெண்டு, ஹஸ்பெண்டு!" என்று கூச்சலிட்டாள். "ஹஸ்பெண்டினால்தான் எனக்கு இந்தக் கதி!" என்று இன்னும் உரத்த குரலில் கூவினாள். நாலு அடி எடுத்து வைத்தாள். ஒரு நிமிஷம் இன்ஸ்பெக்டர், மேஜை, ஸ்டேஷன், தான் - எல்லாரும் ஒரே சுழலாகச் சுழலுவது போல் தோன்றியது. அடுத்த நிமிஷம் சாவித்திரி ஸ்மரணை இழந்து கட்டையைப் போல் தரையில் விழுந்தாள்.
சாவித்திரி பயங்கரமாய்க் கூச்சலிட ஆரம்பித்ததிலிருந்து, இன்ஸ்பெக்டர் அவளைப் பார்த்தது பார்த்தபடி ஸ்தம்பமாய் உட்கார்ந்திருந்தார். தான் ஏதாவது சொன்னாலும் செய்தாலும், அவளுடைய ஹிஸ்டீரியா அதிகமாகி விடலாமென்றும், எப்படியாவது அவள் வெளியே போனால் போதுமென்றும் அவர் எண்ணினார். அவள் கீழே விழுந்த அப்புறந்தான் அவருக்குச் சுறுசுறுப்பு வந்தது. டெலிபோனை மேலுங் கீழுமாய்த் திருப்பி மீனாக்ஷி ஆஸ்பத்திரிக்கு அவசரமாய் டெலிபோன் பண்ணினார்.
சாவித்திரிக்கு மறுபடி பிரக்ஞை வந்தபோது, தான் முன்பின் பார்த்திராத இடத்தில் கட்டிலில் கிடப்பது தெரிந்தது. அவளுடைய தலைமாட்டில் நின்று யாரோ இரண்டு பேர் பேசிக் கொண்டிருந்தார்கள். அவளைப் பற்றித்தான் பேசினார்கள்.
"கடுமையான ஹிஸ்டீரியா கேஸ்; பிழைத்தது புனர் ஜன்மம்" என்று ஒரு பெண் குரல் சொல்லிற்று.
"யார், என்னவென்று ஒரு தகவலும் இல்லையா?"
"ஒன்றும் தெரியலை. போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து யாரோ சாஸ்திரின்னு பேர் சொல்லி விலாசம் விசாரிச்சாளாம். ஹஸ்பெண்டு யாருன்னு கேட்டதும் கூச்சல் போட்டுட்டு விழுந்துட்டாளாம். உடனே ஆஸ்பத்திரிக்கு போன் பண்ணனும் என்று அந்த இன்ஸ்பெக்டருக்குத் தோணித்தே. அதுவே பெரிய காரியம்."
"இந்த நிலைமையிலே - பிரசவம் வேறே ஆகணும்; கஷ்டமான கேஸா இருக்கும் போலிருக்கு; ரொம்ப ஜாக்கிரதையாய்க் கவனிக்கணும்."
இந்தச் சம்பாஷணையிலிருந்து சாவித்திரிக்குத் தான் ஆஸ்பத்திரியில் இருக்கிறோம் என்பதும், எவ்வாறு அங்கு வந்தோம் என்பதும் ஒருவாறு தெரிந்தன.
இன்னும் அறிவு நன்றாகத் தெரிந்தபோது, 'ஆகா! அநாதையாகிய எனக்கு அடைக்கலம் அளிக்கும் இடமும் ஒன்று இருக்கிறதா?' என்று சாவித்திரி எண்ணி எண்ணி உருகினாள்.
அவளுடைய பிறந்த வீட்டிலாவது, புகுந்த வீட்டிலாவது அவளை அவ்வளவு ஆதரவுடன் யாரும் கவனித்தது கிடையாது. 'கடைசியில் பகவான் மனம் இரங்கி நம்மை இந்த இடத்தில் கொண்டு வந்து சேர்த்தாரே?' என்று நினைத்து நினைத்துச் சந்தோஷப்பட்டாள்.
ஆனால் அவளுடைய கஷ்டம் அத்துடன் தீர்ந்து போய் விடவில்லை. நாலு ஐந்து நாளைக்கெல்லாம் அவள் அது வரையில் அநுபவித்து அறிந்திராத வேதனையும் வலியும் உண்டாயின. நிமிஷத்துக்கு நிமிஷம் வேதனை அதிகமாகி வந்தது. கொஞ்ச நேரத்துக்கெல்லாம் வலி பொறுக்க முடியாமல் போயிற்று. இன்னும் சிறிது நேரத்துக்கெல்லாம், 'ஐயோ! என்னத்துக்காக இந்தப் பெண் ஜன்மம் எடுத்தோம்?' என்று நோகவும், தன்னைப் படைத்த கடவுளையே சபிக்கவும் ஆரம்பித்தாள். இத்தகைய நிலைமையில், டாக்டர்களும், நர்ஸுகளும் கும்பலாக வந்து அவளைச் சூழ்ந்து கொண்டார்கள். என்னத்தையோ மூக்கினருகில் கொண்டு வந்து பிடித்தார்கள். மூச்சுத் திணறத் தொடங்கியது. 'நாம் படுகிற துன்பத்தைக் கண்டு சகிக்காமல் நம்மைக் கொன்று விடுகிறார்கள் போல் இருக்கிறது. ரொம்ப நல்லதாய்ப் போயிற்று. பராசக்தி! என்னை உன் பாதத்தில் சேர்த்துக் கொள்!' என்று வேண்டினாள்.
ஆனால், உண்மையில் அது சாவில்லை என்பது சாவித்திரிக்கு மறுபடியும் நினைவு வந்தபோது தெரியவந்தது. தான் சாகாததோடு மட்டுமில்லை, தன்னை இவ்வளவு கொடுமையான கஷ்டங்களுக்கெல்லாம் உள்ளாக்கிய ஜீவன், பக்கத்தில் தொட்டிலில் கிடந்து அழுது கொண்டிருந்தது. 'அழு, அம்மா! அழு! இந்த உலகத்தில் அழுவதற்குத்தான் நான் பிறந்தேன்; அழுவதற்குத்தான் நீயும் பிறந்திருக்கிறாய்! அழு!'
குழந்தையை எடுத்துக் கொள்ள வேண்டுமென்றும், மார்போடு சேர்த்து அணைத்துக் கொள்ள வேண்டுமென்றும் சாவித்திரிக்கு அளவிலாத தாபம் பொங்கி எழுந்தது. அடிக்கடி அதனுடைய முகத்தைப் பார்க்க வேண்டுமென்று ஆசை உண்டாயிற்று. ஆனால் அந்தத் தாபத்தையும் ஆசையையும் அவள் சிரமப்பட்டு அடக்கிக் கொள்ள முயன்றாள். 'நாம் அடைந்த இவ்வளவு கஷ்டங்களுக்கும் காரணம் இந்தக் குழந்தைதானல்லவா?' என்று நினைத்து அதனிடம் கோபங் கொண்டாள். குழந்தையின் முகச்சாயல் அவளுடைய கோபம் வளர்வதற்கு ஒத்தாசை செய்தது! ஏனெனில், அது அவளுக்கு ஸ்ரீதரனை ஞாபகம் படுத்திற்று.
இதற்கு முன்பெல்லாம் ஸ்ரீதரனிடம் அவளுக்குக் கோபம் வந்தாலும், வெறுப்பு உண்டானது கிடையாது. கல்யாணத்தின்போது அவனிடம் அவள் கொண்ட அளவிலாத அன்பைக் கல்கத்தாவில் அவள் பட்ட கஷ்டங்கள் எல்லாம் மாற்றிவிடவில்லை. நெடுங்கரைக்கு அவள் தனியாக ரயில் ஏறி வந்தபோது கூட அவளுடைய உள்ளத்தில் அவனிடம் அன்பு வைத்திருந்தாள். என்றைக்கோ ஒரு நாள் அவனுடைய மனம் மாறும், தன்னுடைய அன்பும் சாபல்யமாகும் என்ற நம்பிக்கை இருந்தது.
ஆனால் இப்போது அவளுடைய மனோநிலை அடியோடு மாறிவிட்டது. தன்னை இவ்வளவு சகிக்க முடியாத கஷ்டங்களுக்கெல்லாம் உள்ளக்கிவிட்டு அந்தப் பாவி கவலையின்றியிருக்கிறான்! 'அவனும் மனுஷ ஜன்மமா! அப்படிப்பட்ட மனுஷனிடமா நாம் அவ்வளவு அன்பும் பக்தியும் வைத்திருந்தோம்? சீச்சீ! என்ன பேதைமை!
'பதியாம்! பக்தியாம்! புருஷனைத் தெய்வமாகப் பாவிக்க வேண்டுமாம்!' - கல்கத்தாவுக்குப் புறப்படும் போது தகப்பனார் செய்த உபதேசம் சாவித்திரிக்கு ஞாபகம் வந்தது. 'நல்ல தகப்பனார்! நல்ல உபதேசம்! இங்கே வந்து பாருங்கள், அப்பா! நீங்கள் தேடிக் கொடுத்த தெய்வம் என்னை என்ன செய்கிறது வந்து பாருங்கள்!
'ஆனால், நீங்கள் ஏன் வரப்போகிறீர்கள்? நீங்கள் ஏன் பார்க்கப் போகிறீர்கள்? இந்த உபத்திரவம் எல்லாம் வேண்டாம் என்று தான், கடுதாசும் போடாமல், கதவையும் பூட்டிக்கொண்டு போய்விட்டீர்களே! நான் எக்கேடு கெட்டால் உங்களுக்கென்ன? இந்தக் குழந்தையைக் கையில் எடுத்துக் கொண்டு நான் தெருத் தெருவாய்ப் பிச்சை வாங்கினால் தான் நீங்கள் எங்கே பார்க்கப் போகிறீர்கள்!...'
இவ்வாறு சாவித்திரி தன்னுடைய மனம் யார் யாரிடம் அன்பு கொண்டிருந்ததோ அவர்கள் எல்லாரையும் வெறுத்து, துவேஷம் கொள்ளும் நிலைமையை அடைந்திருந்தாள்.
அவளுடைய வெறுப்பும் துவேஷமும் நூறு மடங்கு அதிகமாகும்படியான சந்தர்ப்பம் சீக்கிரத்திலேயே நேரிட்டது.
ஆஸ்பத்திரியில் சாவித்திரிக்கு நன்றாய்ச் சுயஞாபகம் வந்ததிலிருந்து, அவள் தான் ஏற்கெனவே பட்ட கஷ்டங்களைப்பற்றி எண்ணியதோடு வருங்காலத்தைப் பற்றியும் எண்ணத் தொடங்கினாள். இந்தத் துர்ப்பாக்கியவதியின் தலையில் பகவான் ஒரு குழந்தையை வேறே கட்டி விட்டார். இனிமேல் என்ன செய்வது? எங்கே போவது?
கல்கத்தாவுக்குப் போவது என்ற நினைப்பே அவளுக்கு விஷமாக இருந்தது! குழந்தைப் பிராயத்தில் அவளை ஒரு சமயம் ஒரு தேனீ கொட்டிவிட்டது. அப்போது அது ரொம்பவும் வலித்தது. இன்று சாவித்திரி கல்கத்தாவில் தான் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றி நினைத்துக்கொண்டால், ஏக காலத்தில் ஆயிரம் தேனீக்கள் தன் தேக முழுவதும் கொட்டிவிட்டது போல் அவளுக்கு அத்தனை வேதனை உண்டாயிற்று. போதும், ஏழேழு ஜன்மத்துக்கும் போதும். மறுபடியும் கல்கத்தாவுக்குப் போய் அவர்களுடைய முகத்தில் விழிப்பது என்பது இயலாத காரியம். முடியவே முடியாது!
நெடுங்கரையிலோ வீடு பூட்டிக் கிடக்கிறது. திறந்திருந்தால் தான் என்ன? அங்கே எத்தனை நாளைக்கு இருக்க முடியும்? அப்பா சம்மதித்தாலும் சித்தியும் பாட்டியும் தன்னை வைத்துக்கொண்டிருக்கச் சம்மதிப்பார்களா? ஒவ்வொரு நிமிஷமும் தன்னை ஏசிக் காட்ட மாட்டார்களா? "போ! போ!" என்று பிடுங்கி எடுத்துவிட மாட்டார்களா? அப்பாவையும் அவர்கள் வதைத்து விடுவார்களே? தன்னால் அப்பாவுக்கு இத்தனை நாளும் நேர்ந்த கஷ்டமெல்லாம் போதாதா?
அப்பாவுக்குக் கஷ்டம்! தன்னால்! - இதை நினைத்துச் சாவித்திரி தன் மனத்திற்குள் சிரித்துக் கொண்டாள். தன்னால் அப்பாவுக்குக் கஷ்டம் என்ற எண்ணம் இந்த நிமிஷம் வரையில் அவள் மனத்தில் இருந்தது. இப்போது அது மாறிற்று. 'என்ன? அப்பாவுக்கு என்னால் கஷ்டமா? அவரால் எனக்குக் கஷ்டம் இல்லையா?' என்று எண்ணினாள். தான் அநுபவித்த இத்தனை துன்பங்களுக்கும் யார் காரணம்? அப்பாதான் இல்லையா? 'என்னைக் கல்யாணம் பண்ணிக்கொடு என்று நான் அழுதேனா? இந்த ஸ்ரீதரனுக்குத்தான் வாழ்க்கைப்படுவேன் என்று இவரிடம் சொன்னேனா? இவரை யார் என்னை இப்படிப்பட்ட புருஷனுக்குக் கல்யாணம் செய்து கொடுக்கச் சொன்னது? அறியாத பிராயத்தில் என்னை இப்படிப்பட்ட கதிக்கு ஆளாக்கினாரே? கல்யாணம் செய்ததற்குப் பதில் என்னைப் படிக்க வைத்து இதோ இந்த ஆஸ்பத்திரியில் உள்ள நர்ஸுகளைப்போல் என்னையும் ஒரு நர்ஸாகச் செய்திருக்கப்படாதா?..."
ஆம்; சாவித்திரிக்கு உணர்வு தெளிந்ததிலிருந்து அவள் இந்த நினைவாகவே இருந்தாள். ஆகா! இந்த நர்ஸுகள் எவ்வளவு உற்சாகமாயிருக்கிறார்கள்? எவ்வளவு சுதந்திரமாக இருக்கிறார்கள்? சுயமாகச் சம்பாதித்து ஜீவனம் செய்வதைப் போல் உண்டா? இவர்களுக்குக் கவலை ஏது? பிறருடைய கையை எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இல்லையல்லவா? ஒருவரிடம் பேச்சுக் கேட்கவேண்டிய அவசியமும் இல்லை யல்லவா? பெண் ஜன்மம் எடுத்தவர்களில் இவர்கள் அல்லவா பாக்கியசாலிகள்?
இப்படிச் சதாகாலமும் சிந்தனை செய்துகொண்டிருந்தாள் சாவித்திரி. சிந்தனை செய்யச் செய்ய அவர்களைப் போல் தானும் சுதந்திர வாழ்க்கை வாழ வேண்டுமென்ற ஆசை அவள் மனத்தில் அபரிமிதமாக வளர்ந்து கொண்டிருந்தது. இனிமேல், தான் பிறந்த வீட்டிலேயோ, புகுந்த வீட்டிலேயோ போய் வயிறு வளர்ப்பதில்லையென்னும் திடசங்கல்பம் அவளுடைய மனத்தில் ஏற்பட்டது. உயிர் வாழ்ந்தால், இந்த நர்ஸுகளைப் போல் சுய ஜீவனம் செய்து சுதந்திரமாக வாழவேண்டும்; இல்லாவிடில் எந்த வகையிலாவது உயிரை விட்டுவிடவேண்டும். பிறர் கையை எதிர்பார்த்து, பிறருக்கு அடிமையாகி வாழும் வாழ்க்கை இனிமேல் வேண்டாம். சாவித்திரி இவ்வாறு சங்கல்பம் செய்து கொள்ளும் சமயத்தில் தொட்டிலில் கிடக்கும் குழந்தை விரலை ருசி பார்த்துச் சப்புக்கொட்டும் சத்தம் கேட்கும். 'ஐயோ! இந்தச் சனியன் ஒன்றை ஸ்வாமி நம் தலையில் கட்டி விட்டாரே? நாம் செத்துப் போவதாயிருந்தால் இதை என்ன செய்வது?' என்ற ஏக்கம் உண்டாகும்.
சாவித்திரிக்குக் குழந்தை பிறந்து இருபது நாளாயிற்று. அன்று நர்ஸ் சம்பங்கி சாவித்திரியிடம் வந்து, "சாவித்திரியம்மா! உங்களுக்கு உடம்பு கம்ப்ளீட்டா சொஸ்தமாயிடுத்து. நாளைக்கு உங்களை ஹாஸ்பிடல்லேயிருந்து அனுப்பி விடணுமென்று மேட்ரன் சொல்லிவிட்டாங்க. கிளம்பறத்துக்கு ரெடியாயிருங்க; யாருக்காவது சொல்லியனுப்ப வேணும்னா, சொல்லியனுப்பிச்சுடுங்க" என்றாள்.
சாவித்திரிக்கு இடி விழுந்ததுபோல் இருந்தது. 'ஐயோ! ஆஸ்பத்திரியை விட்டுப் போக வேண்டுமா?' தாயின் அன்பு என்பதைத் தன் வாழ்நாளில் அநுபவித்தறியாதவள் சாவித்திரி. ஆனால் மற்றப் பெண்களிடம் அவர்களுடைய தாய்மார்கள் காட்டும் அன்பையும் ஆதரவையும் பார்த்திருக்கிறாள். அத்தகைய அன்பையும் ஆதரவையும் இந்த ஆஸ்பத்திரியில் தான் சாவித்திரி முதன் முதலில் கண்டாள். அப்படிப்பட்ட இடத்தை விட்டா நாளைக்குப் போக வேண்டும்? எங்கே போவது?
மறுபடியும் அந்தப் பக்கம் நர்ஸ் வந்த போது, "நர்ஸு அம்மா! இங்கே கொஞ்சம் உட்காருங்கள். ஒரு விஷயம் கேட்கிறேன். சொல்லுங்கள்" என்றாள்.
நர்ஸ் உட்கார்ந்ததும், "இந்த ஆஸ்பத்திரியிலேயே நானும் உங்களையெல்லாம்போல் நர்ஸா இருக்கேன்னு சொன்னா, மேட்ரன் என்னை எடுத்துக்குவாங்களா?" என்று கேட்டாள்.
வேறு நர்ஸாயிருந்தால் சிரித்திருப்பாள். ஆனால், சம்பங்கிக்குச் சாவித்திரியிடம் அநுதாபம் உண்டாகியிருந்தபடியால், அவள் சிரிக்கவில்லை; பரிதாபப்பட்டாள்.
"அம்மா, நர்ஸ் ஆகிறது அவ்வளவு சுலபமில்லை. முதலில், இங்கிலீஷ் பத்தாவது வகுப்பு வரையில் படித்திருக்க வேண்டும். அப்புறம் மூணு வருஷம் டிரெயினிங் ஆக வேண்டும். மேலும், உனக்குக் கைக்குழந்தை வேறு இருக்கு; சான்ஸே கிடையாது. இந்த ஆசையை விட்டுடு, அம்மா!" என்றாள்.
சாவித்திரி இம்மாதிரி பதிலை ஒருவாறு எதிர்பார்த்தாள். ஆகையால் ரொம்ப ஏமாற்றம் அடையவில்லை.
"அது சரி, ஸிஸ்டர்! நீங்க முன்னயே இரண்டொரு தடவை என்னுடைய பந்துக்கள் அட்ரஸ் கேட்டயள். நான் திக்கற்றவள் என்று சொன்னேன். என்னைப் போன்றவள் வேலை செய்து ஜீவனம் செய்யவேணுமென்றால், அதற்கு ஒரு வழியும் இல்லையா? நீங்கள் ஏதாவது எனக்கு ஒத்தாசை செய்யப்படாதா?" என்றாள்.
"நான் என்ன பண்ணுவேன், சாவித்திரியம்மா! நீ முன்னே சொன்னதிலிருந்து நான் ஐந்தாறு பெரிய மனுஷா வீட்டிலே விசாரிச்சேன், உன்னை ஏதாவது வேலைக்கு வச்சுக்கறாங்களான்னு. கைக் குழந்தைக்காரின்னா வேண்டாங்கறாங்க எல்லாரும். நான் சொல்றதைக் கேளு, அம்மா! இந்த ஆசையெல்லாம் உனக்கு வேண்டாம். கல்யாணம்னு பண்ணிண்டுட்டா, புருஷன் எப்படி இருந்தாலும், அவனைக் கட்டிண்டுதான் மாரடிச்சாகணும். நீ ஒருத்திதான் இப்படிக் கஷ்டப்படுறதாக எண்ணிக்காதே! நம் தேசத்திலே உன் மாதிரி எத்தனையோ பேர். யாருக்காவது கடுதாசி எழுதணும். இல்லாப் போனா தந்தியடிக்கணும்னா சொல்லு, அடிக்கிறேன்" என்றாள்.
சாவித்திரி தன்னைப்பற்றி ஒரு விவரமும் சொல்லாவிட்டாலும், அவள் புருஷனுடன் ஏதோ சண்டை போட்டுக் கொண்டு ஓடி வந்திருக்க வேண்டும் என்று சம்பங்கி ஊகம் செய்திருந்தாள். அதனால்தான் மேற்கண்டவாறு சொன்னாள்.
சாவித்திரி இதற்குப் பதில் சொல்லாமல், முகத்தைக் கைகளினால் மூடிக்கொண்டு விம்மத் தொடங்கவே, நர்ஸ் அங்கிருந்து போய்விட்டாள்.
அன்று சாயங்காலம் நர்ஸ் சம்பங்கி, கையில் ஒரு பிரித்த பத்திரிகையுடன் சாவித்திரியிடம் விரைவாக வந்தாள். "சாவித்திரி அம்மா! உனக்கு வேலை வேணுமென்று சொன்னாயே? இதோ ஒரு விளம்பரம் இருக்கிறது, கேள்" என்று சொல்லி வாசிக்கத் தொடங்கினாள்:
"தேவை : பம்பாயிலுள்ள ஓர் உயர் குடும்பத்து எஜமானிக்குத் தோழியாக இருக்க ஒரு தமிழ் நாட்டுப் பெண் தேவை. தக்க சம்பளம் கொடுக்கப்படும்..."
இவ்வளவு வாசித்த நர்ஸ், இங்கே சட்டென்று நிறுத்தி, "ஐயையோ! இதிலேயும், குழந்தை உள்ளவர்கள் விண்ணப்பம் போட வேண்டாமென்று எழுதியிருக்கே!" என்றாள். பிறகு, சாவித்திரியைப் பார்த்து, "உன் அதிர்ஷ்டம் அவ்வளவுதானம்மா! வேண்டாத புருஷனைக் கட்டிண்டு மாரடிக்கணும்னுதான் உன் தலையிலே எழுதியிருக்கு" என்று சொல்லிவிட்டு, அந்தப் பத்திரிகையை அங்கேயே போட்டுவிட்டுப் போனாள்.
ஆனால், அதே சமயத்தில் சாவித்திரி பல்லைக் கடித்துக் கொண்டு, 'என்ன கதி நேர்ந்தாலும் வேண்டாத புருஷனுடன் நான் மாரடிக்கப் போவதில்லை' என்று மறுபடியும் சங்கல்பம் செய்து கொண்டாள். சம்பங்கி எறிந்துவிட்டுப் போன பத்திரிகையை எடுத்து அந்த விளம்பரத்தைப் பார்த்தாள். அதைத் திரும்பித் திருப்பி நூறு தடவை படித்தாள். 'குழந்தை உள்ளவர்கள் விண்ணப்பம் போட வேண்டியதில்லை' என்ற வாக்கியம் அவளுடைய நெஞ்சில் பழுக்கக் காய்ந்த இரும்புக் கரண்டியினால் எழுதியது போல் பதிந்து புண்ணாக்கிற்று.
மறுநாள் சாவித்திரியை ஆஸ்பத்திரியை விட்டு அனுப்பி விட்டார்கள். இரண்டாவது தடவையும் சாவித்திரி சென்னையின் வீதிகளில் அநாதையாய் அலையும்படி ஆயிற்று. ஆனால் இந்தத் தடவை அவள் தனியாக அலையவில்லை; கையில் குழந்தையுடன் அலைந்தாள். மேலும் இம்முறை சம்பு சாஸ்திரியைத் தேடி அலையவில்லை; ஜீவனத்துக்கு வேலை தேடி அலைந்தாள். அவளுடைய அலைச்சல் இந்த முறை வெகு சீக்கிரமாகவும் முடிவடைந்து விட்டது.
முதலில் பெரிய மனுஷர்கள் வீடுகளைத் தேடிப் போனாள். ஒரு வீட்டில் எஜமானியம்மாள், "கையிலே குழந்தையை வைச்சுண்டு, வேலைக்கு வர்றயே? வேலையைப் பார்ப்பயா, குழந்தையைப் பார்ப்பயா? போ! போ" என்றாள். இன்னும் சில வீடுகளில், அவளுடைய நடத்தையைப் பற்றிச் சந்தேகித்துக் கேள்வி கேட்டார்கள். "நீ கைம் பெண்ணா, வாழுகிறவளா?" என்று வேறு சிலர் கேட்டார்கள். ஹோட்டல்களில் வேலை செய்து பிழைக்கலாம் என்று சாவித்திரி முன் எப்போதோ கேள்விப்பட்டிருந்தாள். ஒரு ஹோட்டலுக்குள் நுழைந்து, அந்த ஹோட்டல்காரனை, "வேலை கிடைக்குமா?" என்று கேட்டாள். அவன் சாவித்திரியைத் தனியாக அழைத்துச் சென்று, "இந்தக் குழந்தையை எங்கேயாவது தொலைச்சுட்டு வந்துடு. உன்னை நான் ஜில்லுனு வச்சுக்கறேன்" என்றான். சாவித்திரிக்கு, 'நாம் இன்னது செய்கிறோம்' என்றே தெரியவில்லை. அந்த ஹோட்டல்காரனுடைய கன்னத்தில் பளீரென்று ஓர் அறை அறைந்தாள். உடனே அவளைப் பயம் பற்றிக் கொண்டது. ஹோட்டலிலிருந்து வெளிக் கிளம்பி ஓடினாள்.
கையில் குழந்தையுடன் ஒரு ஸ்திரீ நடுரோட்டில் ஓடுவது விசித்திரமல்லவா? சாலையோடு போனவர்கள் அவளை வெறிக்கப் பார்த்தார்கள். அவர்களுடைய முகங்கள் மனிதர்கள் முகங்களாகவே சாவித்திரிக்குத் தோன்றவில்லை. ராட்சதர்கள், பேய்கள், பிசாசுகளின் முகங்களாகத் தோன்றின. ஆகவே இன்னும் விரைவாக ஓடினாள்.
மனத்தில் பொங்கிக் கொண்டிருந்த கோபமும் பயமும் வெறியும் அவளுடைய தேகத்திற்குப் பலத்தைக் கொடுத்து ஓடச் செய்தன. ஆனால், குழந்தை எப்படித் தாங்கும்? அது சிணுங்கி அழத் தொடங்கியது. சாவித்திரி நின்று, குழந்தையின் முகத்தைப் பார்த்து, "என் கண்ணே! வேண்டாம்" என்றாள். 'இந்தப் பாவி இன்னும் எத்தனை நேரம் உயிரோடிருக்கப் போகிறேனோ, என்னமோ? அதற்குள் உன்னைக் கஷ்டப்படுத்துவானேன்?' என்று எண்ணினாள்.
அப்போது கொஞ்ச தூரத்தில் யாரோ, "மண்ணாலானா இந்தக் காயம்-" என்று பாடிக்கொண்டு போனது காதில் விழுந்தது.
சாவித்திரி கையிலிருந்த குழந்தையைப் பார்த்து, "கண்ணே! நீயும் மண்; நானும் மண். இரண்டு பேரும் தண்ணீரில் இறங்கிக் கரைந்து போய்விடுவோம்!" என்று சொல்லிச் சிரித்தாள். குழந்தைப் பிராயத்தில் தான் கொல்லைக் கிணற்றில் விழுந்த செய்தி ஞாபகத்தில் வந்தது. 'ஐயோ! அப்பா! உங்கள் பெண் இந்த மாதிரியெல்லாம் திண்டாட வேண்டுமென்பதற்காகவா கிணற்றில் விழுந்தவளை எடுத்துக் காப்பாற்றினீர்கள்? அப்போதே நான் செத்துப்போய் எங்கம்மா போன இடத்துக்குப் போயிருக்கக் கூடாதா?'
குழந்தை அப்போது தன் பட்டுப்போன்ற மிருதுவான விரல்களால் தாயின் மார்பைத் தொட்டது. சாவித்திரி குனிந்து குழந்தையை முத்தமிட்டாள். "என் கண்ணே! உன்னை நான் விட்டுவிட்டுப் போய்விடுவேன் என்று பயப்படுகிறாயா? என் அம்மாவும் அப்பாவும் என்னைப் பிறந்த பின் கைவிட்டார்கள்; உன் அப்பா உன்னை, பிறப்பதற்கு முன்பே கைவிட்டார். ஆனால் நான் உன்னைக் கைவிடமாட்டேன். இந்த உலகத்தில் நீ வளர்ந்து பெரியவளானால் என்னைப் போலவேதானே கஷ்டப்படுவாய்? அப்போது என்னைத்தானே நோவாய்? வேண்டாம். இந்த உலக வாழ்க்கை உனக்கு வேண்டாம். வா, இரண்டு பேருமாய்ப் போகலாம்" என்றாள். பிறகு, நிர்மானுஷயமான ஜலப் பிரதேசத்தைத் தேடி நிதானமாக நடந்து சென்றாள்.
சாவித்திரி! நீயும் உன் குழந்தையும் நீண்ட காலம் வாழ்ந்து உலகின் சுகதுக்கங்களை அநுபவிக்க வேண்டுமென்று பிரம்மதேவன் உங்கள் தலையில் எழுதியிருக்கிறானே? நீ அதை மீற நினைப்பதில் என்ன பிரயோஜனம்?
நல்லானின் மச்சான், சம்பு சாஸ்திரியைப் பார்த்த அன்று இரவு வெகு உற்சாகமாகச் சாவடிக் குப்பத்தில் தன் வீட்டுக்குப் போனான். அந்தச் செய்தியை நல்லானுக்குச் சொன்னால் அவன் ரொம்பவும் சந்தோஷமடைவானென்று அவனுக்குத் தெரியும்.
"இன்னிக்கு நான் ஒத்தரைப் பார்த்தேன்! அது யாருன்னு சொல்லு பார்க்கலாம்" என்றான் நல்லானிடம்.
"நீ யாரைப் பார்த்தா என்ன, பாக்காட்டி என்ன? எனக்குச் சாஸ்திரி ஐயாவைப் பார்க்காமே ஒரு நிமிஷம் ஒரு யுகமாயிருக்கு. நெடுங்கரைக்கு ஒரு நடை போய் அவங்களைப் பார்த்துட்டு வந்தாத்தான் என் மனசு சமாதானம் ஆகும். இல்லாட்டி, நான் செத்துப் போனேன்னா என் நெஞ்சு கூட வேவாது" என்றான்.
"அப்படியானா, நெடுங்கரைக்குப் போயிட்டு வர்ற பணத்தை எங்கிட்டக் கொடு" என்றான் சின்னசாமி.
"என்னத்திற்காக உங்கிட்டக் கொடுக்கிறது?"
"கொடுத்தேன்னா, சாஸ்திரி ஐயாவை நான் இவ்விடத்துக்கே வரப் பண்றேன்."
"என்னடா ஒளற்றே!" என்று நல்லான் கேட்டான்.
"நான் ஒண்ணும் ஒளறலை. சாஸ்திரி ஐயா இப்போது நெடுங்கரையில் இல்லை. இந்த ஊரிலேதான் இருக்காரு. இன்னிக்கு அவரைத்தான் பார்த்தேன்" என்றான்.
நல்லான் தூக்கி வாரிப் போட்டுக்கொண்டு எழுந்திருந்தான். "அடே இந்த வெஷயத்திலே மட்டும் எங்கிட்ட விளையாடாதே! நெஜத்தை நடந்தது நடந்தபடி சொல்லு!" என்றான்.
சின்னசாமி விவரமாகச் சொன்னான். அவன் எதிர் பார்த்தபடியே நல்லானுக்குச் சந்தோஷம் உண்டாயிற்று. கடைசியில் "போவட்டும்; இந்த மட்டும் ஐயாவைப் பார்த்துப் பேசறத்துக்கு ஒனக்குத் தோணித்தே; அது நல்ல காரியந்தான். ஐயா எவ்விடத்திலே இறங்கியிருகாருன்னு கேட்டுண்டாயா?" என்றான்.
"அது கேக்க மறந்துட்டேன்; ஆனா, ஐயாவைத்தான் நான் சாவடிக் குப்பத்துக்குக் கட்டாயம் வரணும்னு சொல்லியிருக்கேனே?"
"அட போடா, முட்டாள்! நீ சொன்னதுக்காக ஐயா வந்துடுவாங்களா? அவங்களுக்கு ஏற்கெனவே என் மேலே கோபமாச்சேடா, அவங்க பேச்சைத் தட்டிண்டு நான் பட்டணத்துக்கு வந்ததுக்காக? என்னைத் தேடிக்கிட்டு எங்கேடா வரப்போறாரு?" என்றான் நல்லான்.
ஆகவே, முடிவில் சின்னசாமிக்கு அவன் சாஸ்திரியாரைப் பார்த்து வந்ததன் பலனாக வசவுதான் கிடைத்தது. நல்லானுடன் அவனுடைய மனைவியும் சேர்ந்து கொண்டு தன் தம்பியைத் திட்டினாள். "மறந்துட்டேன், மறந்துட்டேங்கறயே வெக்கமில்லாமே? சோறு திங்க மறப்பயா?" என்று அவள் கேட்டாள்.
பிறகு இரண்டு நாள் நல்லானும் அவன் மச்சானுமாகச் சேர்ந்து, அந்தப் பக்கத்திலுள்ள பிராம்மணாள் ஹோட்டலில் எல்லாம் போய், "நெடுங்கரை சம்பு சாஸ்திரியார் இருக்காரா?" என்று கேட்டார்கள். "நெடுங்கரையையும் காணும், சம்பு சாஸ்திரியையும் காணும்" என்ற பதில் தான் வந்தது.
நல்லானுக்கு இதே கவலையாய்ப் போயிற்று. "கைக்கெட்டினது வாய்க்கெட்டாமல் போச்சே, இந்த முட்டாளாலே! எங்கே தங்கியிருக்கீங்கன்னு ஒரு வார்த்தை கேக்காமே வந்துட்டானே?" என்று ஒரு நாளைக்கு முப்பது தடவை அவன் சொல்லிக்கொண்டிருந்தான். ஒரு நாள் அதிகாலையில் அவன் எழுந்திருந்து வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்துகொண்டு, 'சாஸ்திரி ஐயாவை ஒருவேளை இந்த ஜன்மத்திலே காண முடியாமலேயே போய்விடுமோ?' என்று யோசித்துக் கொண்டிருந்தான். அப்போது பின்பனிக் காலமாகையால், பொழுது விடிந்திருந்தும் பனி பெய்து கொண்டிருந்தது.
திடீரென்று அவனுக்குப் பின்னால், "அப்பா! நெடுங்கரை நல்லான் என்பவன் வீடு இங்கே எங்கிருக்கு?" என்று ஒரு குரல் கேட்டது. அந்தக் குரல் அவனுக்குத் தெரியாமல் போய்விடுமா? திடுக்கிட்டு எழுந்திருந்து திரும்பிப் பார்த்தான். சாஸ்திரி ஐயாதான்!
"சாமி! சாமி! இந்த ஏழையைத் தேடிக்கிட்டு வந்தீங்களா?" என்று நாத் தழுதழுக்கக் கூறினான்.
அப்போது அவனுடைய பார்வை சாஸ்திரியின் கைகளில் ஏந்தியிருந்த பொருளின் மேல் விழுந்தது. அது ஒரு சின்னஞ்சிறு குழந்தை!
"இது என்னங்க? கொழந்தை ஏதுங்க?"
"நல்லான்! இந்த உலகத்தைத் துறந்து சந்நியாசியாகலாம் என்றிருந்தேன். அப்போது பகவான் இந்தக் குழந்தையைக் கொடுத்தார். எனக்கு வேறு போக்கிடம் இல்லாததால் உன்னைத் தேடிக்கொண்டு வந்தேன், அப்பா!" என்றார் சாஸ்திரியார்.
"அப்படிச் சொல்லாதீங்க, சாமி! உங்களுக்கா போக்கிடமில்லை? நான் பூர்வ ஜென்மத்திலே செய்த பாக்கியம், நீங்க வந்தீங்க" என்று நல்லான் சொல்லி, "நிக்காதீங்க, உக்காந்து எல்லாம் வெவரமாய்ச் சொல்லுங்க" என்றான்.
சாஸ்திரியார் மடியில் குழந்தையுடன் அந்தக் குடிசையின் திண்ணையில் உட்கார்ந்தார். எல்லாம் விவரமாய்ச் சொன்னார். சாவித்திரியும் நல்லானும் ஊரை விட்டுப் போனபிறகு நெடுங்கரை வாழ்க்கை தமக்குப் பிடிக்காமற் போனதும், இந்தச் சமயத்தில் பெரியம்மா, பட்டணத்துக்குப் போய்ப் பாட்டுச் சொல்லிக் கொடுத்துப் பணம் சம்பாதிக்கும்படி யோசனை சொன்னதும், அதை ஒரு சந்தர்ப்பமாக வைத்துக்கொண்டு தான் கிளம்பிவந்ததும், பட்டணத்தில் அநேக வீடுகளில் பாட்டு வாத்தியார் வேலைக்காக அலைந்ததும், எங்கும் வேலை கிடைக்காததும், கடைசியில் உலக வாழ்க்கையை விட்டுச் சந்நியாசியாகலாமென்று தீர்மானித்ததும், அந்தத் தீர்மானத்துக்குப் பிறகு இவ்விடம் போகிறோம் என்ற உத்தேசமில்லாமல் கால்போன வழியில் நடந்து சென்றதும், நடந்ததனால் களைப்பு அடைந்து ஓரிடத்தில் உட்கார்ந்ததும், உட்கார்ந்த இடத்தில் தூக்கம் வந்து படுத்துத் தூங்கியதும் - எல்லாம் சொல்லிவிட்டு, கடைசியில், "அப்பா! தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டபோது பக்கத்தில் குழந்தை அழும் குரல் கேட்டது. யாராவது அக்கம் பக்கத்தில் இருப்பார்களோ என்று பார்த்தேன். சுற்றுமுற்றும் தேடினேன். சத்தம் போட்டும் பார்த்தேன். ஒருவரும் ஏனென்றும் கேட்கவில்லை. 'சரி, நாம் உலகத்தைத் துறப்பது பராசக்திக்கு விருப்பமில்லை, ஆகையால்தான் இந்தப் பந்தத்தை நமக்கு அளித்திருக்கிறாள்' என்று தீர்மானித்துக் கொண்டேன். உன் மைத்துனன் 'சாவடிக் குப்பம்' என்று சொல்லியிருந்தது ஞாபகத்தில் இருந்தது. விசாரித்துக் கொண்டு வந்து சேர்ந்தேன். நல்லான்! உன் மச்சான் என்னை உன் வீட்டுக்கு வரும்படி அழைத்தபோது, 'கேவலம் நல்லானிடம் போயா ஒத்தாசை கேட்பது?' என்று எண்ணினேன். அப்படி நான் கர்வப்பட்டது பிசகு என்று பகவான் புத்தி கற்பித்துவிட்டார்" என்றார்.
நல்லான், "சாமி! அப்படிச் சொல்லவே சொல்லாதீங்க. சாவடிக் குப்பம் கொடுத்து வச்சுதுங்க, நீங்க வர்றதுக்கு. அதனாலே வந்தீங்க. இங்கே உங்களுக்குத் தனியா ஒரு குடிசை போட்டுத் தர்றோமுங்க. அதிலே நீங்களும் குழந்தையுமா இருந்துகிட்டு, எங்களுக்கெல்லாம் கதை புராணம் சொல்லிக் கடைத்தேற்றுங்க!" என்றான்.
அன்று மத்தியானத்துக்குள் சாஸ்திரியாருக்காக ஒரு தனிக் குடிசை போட்டாயிற்று. நல்லான் மனைவி வந்து குடிசையில் குழந்தைக்காக ஒரு தூளி போட்டுக் கொடுத்தாள். நல்லான், குழந்தைக்குப் பாலுக்காக ஓர் ஆடு கொண்டு வந்து கட்டினான்.
சாயங்காலம் புதுக் குடிசையின் வாசலில் சாஸ்திரியும் நல்லானும் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது, கொஞ்ச தூரத்தில் ஏதோ கலாட்டா நடந்து கொண்டிருந்தது. ஐந்தாறு பேர் கும்பலாக நின்று சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். காதால் கேட்க முடியாத துர்ப்பாஷையில் அவர்கள் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டிருந்தார்கள்.
"சாமி! இந்த ஜனங்கள் எல்லாம் உங்களாலேதான் சீர்திருந்தணும்" என்று நல்லான் சொன்னான்.
சாஸ்திரி சுற்று முற்றும் பார்த்தார். தெருவெல்லாம் ஒரே குப்பையும் அசிங்கமுமாயிருந்தது. அந்தக் குப்பைக்கும் அசிங்கத்துக்குமிடையில் குழந்தைகள் சிலர் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய பரட்டைத் தலையும் அழுக்கு உடம்பும், கந்தல் துணியும் பார்க்க முடியாதபடி இருந்தன. நாலு பக்கத்திலிருந்தும் துர்நாற்றம் வந்து கொண்டிருந்தது.
இத்தனைக்கும், சாவடிக் குப்பம் இருந்த இடம் அழகும் வசதியும் பொருந்தியது. சுற்றிலும் மரங்கள் அடர்ந்து நிழல் தந்துகொண்டிருந்தன. தெரு விஸ்தாரமாக இருந்தது. பட்டணத்தின் எல்லைக்கு வெளியே சற்றுத் தூரத்தில் இருந்தபடியால், இவ்வளவு விஸ்தாரமாக அவர்கள் குடிசை கட்டிக்கொள்ளுவது சாத்தியமாயிற்று. இவ்வளவு சௌகரியமான இடத்தைத்தான், நாளெல்லாம் மற்றவர்களுடைய பங்களாக்களைச் சுத்தமாக்கி அழகுபடுத்திவிட்டு வந்த அதே ஏழை ஜனங்கள் அவ்வளவு ஆபாசமாக வைத்துக் கொண்டிருந்தார்கள்.
சாஸ்திரி இதையெல்லாம் பார்த்தார். இந்தச் சாவடிக் குப்பத்து ஜனங்களுக்குச் சேவை செய்வதற்காகவே, பகவான் ஒரு குழந்தையைக் கொடுத்துத் தம்மை மறுபடியும் சம்சாரியாக்கி அவ்விடம் அனுப்பியிருப்பதாக அவர் மனத்தில் தோன்றிற்று. இது தனக்குப் புனர்ஜன்மம் என்றும், இனிமேல் பழைய வாழ்க்கைக்கும் தமக்கும் சம்பந்தமில்லையென்றும் தீர்மானித்துக் கொண்டார்.
அன்றிரவு, சம்பு சாஸ்திரி தமது புதுக் குடிசையில் பஜனை செய்ய ஆரம்பித்தார். நல்லானும் அவர் மனைவியும் மைத்துனனுந்தான் முதலில் பஜனைக்கு வந்தார்கள். நாளடைவில் சாவடிக் குப்பத்து ஜனங்கள் ஒவ்வொருவராகப் பஜனைக்கு வர ஆரம்பித்தார்கள்.
ஆறு வருஷ காலத்தில் சாவடிக் குப்பம் அடையாளமே தெரியாதபடி மாறுதல் அடைந்தது. குப்பத்து ஜனங்களின் வாழ்க்கை முறையும் அடியோடு மாறிற்று.
இந்தக் காலத்தில், பராசக்தி சம்பு சாஸ்திரிக்கு அளித்த குழந்தை சாருவும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்தாள்.