thollai kodukkum thollai

தொல்லை கொடுக்கும் தொல்லை

தொல்லையைக் காணவில்லை. யார் அது தொல்லை? தொல்லை ஒரு குறும்புக்கார நாய். அப்படி ஒரு குறும்புக்கார நாயை நீங்கள் பார்த்திருக்கவே முடியாது. அவளைக் கண்டுபிடிக்க அபிக்கு உதவுவீர்களா?

- Gireesh

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

என் நாயைப் பார்த்தீர்களா? அவள் பெயர்தான் தொல்லை. பார்க்க பந்து போல உருண்டை, காதுதான் ஒன்று இல்லை.

தொல்லையை எங்கும் காணவில்லை. எங்கே போனாள்? காலையில்தானே இறால் திருடிக் கொண்டிருந்தாள்.

அவளது பெயர் ஏன் தொல்லை என்று கேட்டால், ஒருமுறை தாத்தாவின் பிளாஸ்கை மென்று போட்டாள்.

செய்தித்தாள் வரும்போது காத்திருப்பாள் கதவோரம், கிரிக்கெட் செய்தி மிச்சமிருந்தால் நமக்கு நல்லநேரம்.

தொல்லையே! என் தொல்லையே! எப்போது வீட்டுக்கு வருவாய். கட்டிப்பிடித்து தருவேன் உனக்கு பெரிய எலும்பாய்.

எதற்கு மீண்டும் தொல்லை என்றனர் நண்பர்கள், குளியலறையில் தொல்லை தோண்டிய குழிகள்.

குளியல், வாசனை சோப்பு நுரை என்றால் மிரளுவாள். பதிலாய் அழுக்கு மண்ணில் உருண்டு புரளுவாள்.

அவள் உணவை சாப்பிடக் கொடுத்தால் முறைப்பாள். நாங்கள் சாப்பிடுவதைக் கேட்டு அடம்பிடித்து குரைப்பாள்.

தொல்லையே, என் தொல்லையே! வீட்டுக்கு வா விரைந்து! மதியம் முழுக்க விளையாடுவேன் பந்தை எறிந்து.

அணில், பூனை, பறவைகளைக் கண்டால் துரத்திப் பாய்வாள். தபால்காரர், இஸ்திரிக்காரருக்கு அதிர்ச்சி அளித்து மகிழ்வாள்

“பின்னர் எதற்கு தொல்லை?” என்று உங்களுக்கு வியப்பு. “ஆமாம், தொல்லை பல குழப்பங்களின் தொகுப்பு!”

என் ஷூவையும், சாக்சையும் எடுத்து வைப்பாள். பதிலாய் தலையில் தடவல் மட்டுமே எதிர்பார்ப்பாள்.

நலமின்றி இருந்தால் தொல்லையே எனக்கு மருந்து. அவள் நக்கி, உரசினால் சரியாகிடுவேன் நிமிர்ந்து.

தொல்லையே! என் தொல்லையே! எப்போது வருவாய்! நீ வீட்டுக்கு வந்ததும் காரில் போகலாம் விரைவாய்.

பந்தைக் கீழே போட்டால் கேட்கும் அவள் குரைப்பு, நான் தவறி விழுந்தால் அவளே பாதுகாப்பு.

என் மகிழ்ச்சியும் அவளுக்குத் தெரியும், கோபமும் கூடப் புரியும். சோகமாய் இருந்தால் என்ன செய் வேண்டுமென்றும் தெரியும்.

இங்கே இருக்கிறாயா, தொல்லையே! எங்கே நீ சென்றிருந்தாய்?

ஐயோ! ரமா அத்தையின் பளபள பச்சைக் கீரைகளை ஏன் தின்றாய்?

தொல்லை ஒரு தொல்லை, அதில் சந்தேகமே இல்லை. அவள் மூக்குதான் உலகில் சந்தோசத்தின் எல்லை.

என் வீட்டுப்பாடத்தைத் தின்ன மட்டும் கற்றுக்கொண்டால், உலகின் ஆகச்சிறந்த நாய் நீதான் தொல்லை!