தூங்கு மூஞ்சிப் பீமா
பீமாவுக்கு எப்போதும் நித்திரை கொள்ளத்தான் விருப்பம், அதனால் நேரத்தோடு எழுந்திருக்க முடியாது. துணி துவைக்கும் ராமு அடிக்கடி பீமாவை திட்டுவார்.
ஒரு நாள் பசு கௌரி, ‘பீமா நீ ஏன் கவலையோடு இருக்கிறாய்?‘ என்று கேட்டது.
அதற்குப் பீமா, ‘என்னால் நேரத்திற்கு எழும்ப முடியவில்லை, ராமு எந்த நாளும் என்னைத் திட்டுகிறார். நீ என்னை ஒவ்வாரு நாளும் காலையில் தயவு செய்து எழுப்பி விடுவாயா? என்று கேட்டது.
‘ஆம் நான் செய்வேன்‘ என்றது கௌரி. அடுத்தநாட் காலை கௌரி பெரிதாகக் கத்தியது, ஆனால் பீமா எழுந்திருக்க வில்லை.
பின்னேரம் பீமா ஆற்றிலிருந்து வீட்டுக்கு வரும்போது நாய்க்குட்டி மோட்டியைக் கண்டது.
பீமா அதனிடம், ‘என்னால் காலையில் நேரத்திற்கு எழும்ப முடியவில்லை நீ என்னை எழுப்பி விடுவாயா?‘ என்று கேட்டது.
‘ஆம் நான் செய்கிறேன்.‘ என்றது மோட்டி. அடுத்த நாள் காலையில் அது மீண்டும் மீண்டும் குரைத்தது ஆனால் பீமா எழுந்திருக்க வில்லை.
அன்று பின்னேரம் பீமா சேவல் சீனுவை சந்தித்தது., ‘
பீமா சீனுவிடம், ‘நீ காலையில் கூவுகிறாய், எல்லோரும் விழித்துக் கொள்கிறார்கள், என்னையும் எழுப்பி விடுவாயா?‘ என்று கேட்டது.
சீனுவும் ஒப்புக்கொண்டது. அடுத்தநாள் காலை, சீனு நீண்ட நேரம் உரத்துக் கூவியது, ஆனால் பீமா எழுந்திருக்கவில்லை.
அடுத்த நாட்காலை, பீமா காகம் காலுவைக் கண்டது. காகம் சந்தோசமாகக் கரைந்து கொண்டிருந்தது.
பீமா காலுவிடம் ‘என்னை நீ காலையில் தயவு செய்து எழுப்பி விடுவாயா? என்று கேட்டது.
காலுவும் ‘என் முடியாது? நான் கரைந்து கரைந்து உன்னை எழுப்பி விடுவேன்.‘
என்றது. ஆனால் பீமா காகம் கரைந்தும் எழும்பவில்லை.
பீமாவுக்குக் கவலை.
அடுத்த நாட்காலை ஒரு பூச்சி வந்து பீமாவின் மூக்கில் குந்தியது.
பீமா, ‘ஆ!.... சூ!..... அச்சூ! .... என்று பெரிதாகத தும்மியபடி துடித்தெழுந்தது.
‘வாவ் நான் எழுந்து விட்டேன். எப்படி நான் எழுந்தேன்?‘ என்று பீமா அதிசயித்தபடி கூறியது,
‘நான்தான் உன்னை எழுப்பினேன்,‘ என்றது பூச்சி. ‘ஒவ்வொரு நாளும் அதிகாலையில் என்னை இப்படி எழுப்பி விடுவாயா?‘ என்று கேட்டது பீமா.
‘ஆம் நிச்சயமாக,‘ என்றது பூச்சி. பீமாவுக்கு மகிழ்ச்சி. இனி அதற்கு காலையில் நேரத்தோடு கண் விழிக்கப் பிரச்சினையில்லை.