துளசி மாடம்
நா. பார்த்தசாரதி
1978 ஜூன் மாதம் முதல் 1979 ஜனவரி மாதம் வரை 'கல்கி' வார இதழில் வெளியான இந்நாவல் இப்போது புத்தக வடிவில் வெளி வருகிறது. சங்கரமங்கலம் என்ற ஒரு சிறிய தமிழ்நாட்டுக் கிராமத்தில் இந்தக் கதை நிகழ்ச்சிகள் நடந்தாலும் இதில் வரும் மனிதர்கள் அல்லது முக்கிய கதாபாத்திரங்கள் அந்தச் சிறிய கிராமத்துக்கு அப்பாலும் - அதைவிடப் பரந்த பெரிய உலகத்தைப் பாதிப்பவர்கள் - பாதித்தவர்கள், பாதிக்கப் போகிறவர்கள் - என்ற கருத்தை இந்த நாவலின் முடிவுரையில் காண்பீர்கள். அதையே இங்கும் முதலில் நினைவூட்ட விரும்புகிறேன். உலகத்தைப் பொறுத்தவரை அழகிய தென்னிந்தியக் கிராமமான சங்கரமங்கலத்தில் விசுவேசுவர சர்மாவின் இல்லத்துத் துளசி மாடத்தில் தொடர்ந்து தீபம் ஏற்றப்படுகிறது என்பது தான் முக்கியம். ஆனால் அந்தக் கிராமத்தைப் பொறுத்தவரையிலோ அந்த தீபம் எந்தக் கைகளால் யாரால் - ஏற்றப்படுகிறது என்பது மட்டுமே மிகவும் முக்கியம்.