துரை ஒரு துப்பறிவாளனாக மாறியிருந்தான்.
பின்னே? அவன்தான் கடைக்குச் சென்று ஒரு டார்ச் விளக்கும் பூதக்கண்ணாடியும் வாங்கிவிட்டானே. இனிமேல் எதையாவது துப்பறியவேண்டியதுதான் பாக்கி!
துரையின் தாத்தா, ‘நிஜமாவே ஒரு துப்பறியும் சிங்கம்மாதிரி இருக்கேடா’ என்று அவனைக் கொஞ்சினார். அதைக் கேட்டு அவன் வெட்கத்தோடு சிரித்தான்.
கிராமத்தில் அவர்களுடைய வீட்டின் அருகே ஒரு காடு இருந்தது. அங்கே எதையாவது துப்பறியலாமா என்று தேடத் தொடங்கினான் துரை.
புல்தரை ஈரமாக இருந்தது. அதைப் பார்த்த துரை, ‘இங்கே கொஞ்சநேரம் முன்னாடி மழை பெஞ்சிருக்குன்னு நினைக்கறேன்’ என்று யோசித்தான்.
பரவாயில்லை, டார்ச்சும் பூதக்கண்ணாடியும் பிரமாதமாக வேலை செய்கின்றன! காட்டுக்குள் நுழைந்ததும் அங்கே மழை பெய்திருக்கிற விஷயத்தைத் துப்பறிந்து கண்டுபிடித்தாகிவிட்டது. அடுத்து என்ன?
திடீரென்று, தரையிலிருந்த சில சிவப்புப் பொருள்களைப் பார்த்தான் துரை. ‘இதெல்லாம் என்ன?’
அவை சாதாரணக் காளான்களைப்போலதான் தோன்றின. ஆனால், ஒரு துப்பறிவாளன் இப்படிப் பார்த்ததை உடனே நம்பிவிடலாமா? ஆராய்ந்து உறுதிப்படுத்தவேண்டாமா?
துரை மெதுவாக நடந்து அந்தப் பொருள்களை நெருங்கினான். தன்னுடைய பூதக்கண்ணாடியை வெளியில் எடுத்து, அதன்மூலம் அவற்றைக் கூர்ந்து கவனித்தான்.
அட! அங்கே ஒரு சிறு பெண் சிவப்புக் குடை பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.
துரை அவளைப் பூதக்கண்ணாடிவழியே பார்த்துவிட்டு, தைரியமான குரலில் கேட்டான், ‘ஏய் பொண்ணே, யார் நீ? இங்கே என்ன பண்ணிகிட்டிருக்கே?’
அவனுடைய கனமான குரலைக் கேட்டு அந்தக் காளான் பெண் பயந்துவிட்டாள். போதாக்குறைக்கு, அவனுடைய கண்கள் பூதக்கண்ணாடியில் இன்னும் பெரிதாகத் தெரிந்தன.
ஆகவே, அவள் பயத்தில் பின்னே நகர்ந்தாள், அவளுடைய குடை விலகி ஓடியது.
அவள் பயந்திருப்பதைப் பூதக்கண்ணாடியில் பார்த்துத் தெரிந்துகொண்டான் துரை. அன்பான குரலில், ‘கவலைப்படாதே, நான் உன்னை எதுவும் செய்யமாட்டேன். நாம நண்பர்களா இருப்போம்’ என்றான்.
அந்தப் பெண் அவனை நம்பமுடியாமல் பார்த்தாள். பிறகு, மென்மையான குரலில், ‘மழை இன்னும் பெய்யுதா?’ என்று கேட்டாள்.
‘மழை எப்பவோ நின்னுடுச்சு’ என்றான் துரை, ‘இனிமே உனக்கு அந்த அழகான சிவப்புக் குடை தேவையில்லை, உன் நண்பர்களையும் குடையை மடக்கச்சொல்லு.’
அந்தப் பெண் துரையின் தொப்பிமேல் ஏறி நின்றபடி சிரித்தாள், ‘என் பேர் லலிதா, இவங்க என்னோட அம்மா, அப்பா, அத்தை, தாத்தா, பாட்டி... நாங்க எல்லாரும் இந்தக் காட்டுலதான் வாழறோம்’ என்றாள்.
‘எங்களுக்கு வீடு கட்டத்தெரியாது. அதனால, எப்பவாச்சும் மழை பெஞ்சா, இந்தமாதிரி குடையை விரிச்சுகிட்டுத் தரையில உட்கார்ந்துடுவோம்.’
அதைக் கேட்டதும் துரை பெரிதாகச் சிரித்தான், ‘கவலைப்படாதே லலிதா, வீடு கட்டறது எப்படின்னு உங்களுக்கு நான் சொல்லித்தர்றேன்’ என்றான், ‘உனக்குத் தெரியுமா? நான் ஒரு பெரிய கட்டடக்கலை நிபுணர்ன்னு எங்கப்பா அடிக்கடி சொல்லுவார்.’
அதோடு, துரையின் துப்பறியும் கனவு நிறைவடைந்தது, அடுத்த கனவு தொடங்கியது.