umaavum uppumaavum

உமாவும், உப்புமாவும்

உமா, காலைச் சிற்றுண்டியை ஒருபோதும் சாப்பிட மாட்டாள். அதற்கு பதிலாக அதோடு விளையாடுவாள். அவள் சாப்பாட்டுடன் விளையாடுவதைத் தடுக்க ஏதேனும் வழி இருக்கிறதா?

- Uma Sekhar

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

யாராவது ஒரு சுட்டிப் பெண் தோசையில் மூக்கு சிந்துவதைப் பார்த்தால் ஆச்சரியமடையாதீர்கள். அவள்தான் உமா என்று தெரிந்து கொள்ளுங்கள்.

எல்லோரும் சொல்வதுபோலவே அவள் மிக, மிக நல்ல பெண்தான். ஆனால், அவள் மிக, மிக நல்ல பெண்ணாக இருந்தாலும், அவளிடம் ஒரே ஒரு கெட்டப் பழக்கம் இருந்தது.

உமாவுக்கு காலைச் சிற்றுண்டியுடன் விளையாட மிகவும் பிடிக்கும்.

அவளுடைய அம்மா பார்க்காத போது  சிற்றுண்டியை, புத்திசாலித்தனமாய் எப்படியோ மறைத்து மாயமாக்கி விடுவாள்.

அப்படித்தான்அந்த தோசையும் கைக்குட்டை ஆனது!

அதை அழகாக, முக்கோணமாக மடித்துக் கைக்குட்டையாக்கிப் பள்ளிச் சீருடையில் குத்திக் கொண்டாள்.

அம்மா காலைச் சிற்றுண்டிக்கு வடை செய்தால், அதை விரல்களில் மோதிரம் போல் மாட்டிக் கொள்வாள். அவள் பல விலைமதிப்பற்ற வடை-ஆபரணங்களை அணிந்திருக்கும் ராணி போல வலம் வருவாள்.

போண்டாக்கள் மேல் அவளுக்கு ஆசை இல்லை. அவற்றைக் கடைவாய்ப் பக்கங்களில் அடக்கி வைத்துக் கொண்டு அந்த நாலாம் வகுப்புப் பெண் போல கன்னம் உப்பித் தெரிவாள்.

அத்தோடு " போய் வருகிறேன், அம்மா ! " என்பாள்.

உமாவின் அம்மா மிக நன்றாக சமைப்பார். அவர் செய்யும் மெதுமெது இட்லிகளை அந்தக் காலனியில் புகழ்பெற்றவை. ஆனால் உமாவுக்கு அம்மாவின் சமையல் மீதெல்லாம் அக்கறையில்லை.

அந்த மிகவும் மிருதுவான இட்லிகளை அவள் தன் சீருடையின் பைக்குள் திணித்துக் கொண்டு, அதை மெத்தையாக்கி, பள்ளிப் பேருந்தில் அதன் மேல் உட்கார்ந்து கொள்வாள்.

ஊத்தப்பம் அவள் தொப்பியாகி விடும்.

பொங்கலோ அவள் செல்லப் பூனை

மல்லிகைக்கு ஊட்டப்பட்டு விடும்.

அவளை எந்த யுக்தியாலும் காலைச் சிற்றுண்டியை

சாப்பிட வைக்க முடியவில்லை.

ஆனால் இன்று அவளுக்கு ஒரு பிரச்சனை. அம்மா இன்று நன்கு குழைய வேக வைத்த ரவா

உப்புமா செய்து உமாவுக்கு விருப்பமான

தட்டில் போட்டுக் கொடுத்தார்.

உமா இந்த உப்புமாவை என்ன செய்வாள்?

இதை தோசை போல் சீருடையில் குத்திக்

கொள்ள முடியாது. அப்படியே அது நிற்காது. மோதிரம் போல் போட்டு கொள்ள முடியாது.அது விரலில் பொருந்தாது.வாயில் அடைத்து வைத்துக் கொள்ள முடியாது அங்கே அது கரைந்து விடும். இதை மெத்தையாக்கவும் முடியாது.

அதற்கு அது சரி வராது.தொப்பியாக அணிந்து கொள்ள முடியாது.அது விழுந்து விடும். பூனை மல்லிகைக்குக் கொடுக்க முடியாதுஅதற்கு உப்புமா பிடிக்காது என்று

எல்லோருக்கும் தெரியும்.

இந்த உப்புமாவை என்ன செய்வது என்று யோசித்து தலைமுடியை பிய்த்துக் கொண்டவாறே, வேறு வழியில்லாமல் ஒரு தேக்கரண்டி உப்புமாவை வாயில் போட்டுக் கொண்டாள்.

‘ஹையா! வாயில் ஏதோ ஒன்று சுவையாகக்  கடிபடுகிறதே?

ஆஹா! உப்பிட்டு நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு அல்லவா இது?’

மற்றும் ஒரு முந்திரிப்பருப்பு கிடைக்குமென்ற நப்பாசையில் இன்னொரு தேக்கரண்டி உப்புமாவை வாயில் போட்டாள்.

ஆனால் ‘நறுக்’கென பல்லில் கடிபட்டதோ ஒரு சுவையான  கேரட் துண்டு! ம்ம்ம்!

இம்முறை என்ன கிடைக்கும் என்று யோசித்தவாறே உமா இன்னொரு தேக்கரண்டி உப்புமாவை வாயில் வைத்தாள்.

‘ஊஊ! இந்தக் கடினமான, உறைப்பான சிறிய துண்டு என்னது? அட!  இஞ்சி!

உமாவால் ஆர்வத்தை அடக்க முடியவில்லை. சாப்பிட்டுக் கொண்டே இருந்தாள்.

திடீர் என்று  ‘‘ஆ... ஊ...’’ என்று அலறினாள். அவள் கடித்தது ஒரு பச்சை மிளகாய்!

அவள் வாயில் எரிந்த நெருப்பை அணைக்க, உமா ஒரே மூச்சில் தட்டில் இருந்த உப்புமாவை எல்லாம் சாப்பிட்டு விட்டாள்.

நெருப்பு ஒருவழியாக அணைக்கப்பட்டது. அதுமட்டுமா?

அவள் தட்டும் காலியானது!

" உமா! உன் தட்டில் இருந்த காலைச் சிற்றுண்டி இன்றைக்கு எங்கே மாயமானது?" என்று கேட்டார் அம்மா.

"அது என் வயிற்றுக்குள்!"

என்று சிரித்தாள் உமா.

இப்போதெல்லாம் உமா காலைச்சிற்றுண்டியுடன் விளையாடுவதில்லை. அவள் மிக, மிக, மிக நல்ல பெண் ஆகிவிட்டாள். இப்போதெல்லாம் அவளைக் கண்டு எல்லோரும் மகிழ்ந்தனர்.

அவள் செல்லப் பூனை மல்லிகையைத் தவிர! பாவம் அவள்! நீங்கள் யாராவது அவளைப் பார்த்தால், கொஞ்சம் பொங்கலைச் சாப்பிடக் கொடுத்து விடுங்கள்! சரியா?