uyil

உயில்

எப்படி பதினேழு ஒட்டகங்களில் பாதியை ஒருவருக்குக் கொடுப்பது? இந்த கதை, அக்குழப்பத்தைத் தீர்த்து தன் மகன்களிடையே பிளவு ஏற்படாமல் தடுத்த ருகையா காதூன் என்ற ஒரு தாயின் புத்தி கூர்மையையும், அப்துல்லா-பின்-சாத் என்ற ஒரு தந்தையின் விவேகத்தையும் விளக்குகிறது.

- S. Jayaraman

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

எல்லா பாட்டிகளையும் போலவே என் பாட்டியும் எனக்கு பல சுவாரஸ்யமான கதைகளை சொல்வார்.

பல அற்புதமான இந்தியா, அரேபியா, இரான் மற்றும் துரான் நாட்டு கதைகள். அவர் சொன்ன கதைகளில் பல எனக்கு மறந்து விட்டாலும், சில கதைகள் என் மனதில் ஆழமாக பதிந்துவிட்டன. இன்று எனக்கு ’நசீஹத்’ அதாவது ’அறிவுரை’ என்ற ஒரு அழகான கதை நினைவுக்கு வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன் எகிப்து நாட்டின் ஒரு சிறு ஊரில் அப்துல்லா-பின்-சாத் என்ற ஒருவர் வசித்து வந்தார்.

அவர் ஒட்டகங்கள் வளர்த்து வந்தார். அவரிடம் முயலின் மேல் உள்ள மெத்தென்ற முடிகளைப் போன்ற வெண்மையான மென்முடிகளை கொண்ட நல்ல ஜாதி ஒட்டகங்கள் இருந்தன. அப்துல்லா தன் ஒட்டகங்களை சொந்த பிள்ளைகளைப் போலவே நேசித்தார். வருடத்தில் ஒருமுறை அவர் அவைகளில் சிலவற்றை கால்நடை சந்தையில் நல்ல விலைக்கு விற்று கணிசமாக பணம் சம்பாதிப்பார்.  பின் புதிய ஒட்டகங்களை வாங்கி பழைய ஓட்டகங்களோடு வளர்த்து மந்தையை அதிகரித்துக் கொள்வார்.

அப்துல்லா தன் நல்ல, நேர்மையான மனைவி மற்றும் மூன்று மகன்களுடன் தன் குடிசையில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். ஒட்டகத் தொழுவம் குடிசையின் வெளியே இருந்தது. தொழுவத்தில் அவரது அழகான, வெள்ளைநிற ஒட்டகங்கள் பேரிச்சை இலைகளை

அசைபோடும் காட்சி பார்க்க ரம்யமான ஒன்று.

காலம் சென்று கொண்டிருந்தது. அப்துல்லாவும் அவரது மனைவியும் வயதாகி பலவீனமாக உணர்ந்தார்கள்.

ஒருநாள் இரவு உணவு உண்ணும் சமயம், அப்துல்லா-பின்-சாத் தன் மூன்று மகன்களிடம், “பிள்ளைகளே, எனக்கு வயதாகிறது. உடம்பு பலவீனமாக இருப்பதால் அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போகிறது. நான் இறந்து விட்டால் அம்மாவை கவனித்துக் கொள்ளுங்கள். உங்களுக்குள்ளே சண்டை போட்டுக் கொள்ள வேண்டாம். என்னிடம் அதிகம் ஒன்றுமில்லை. ஆனால் நான் ஒரு உயில் எழுதி, அதனை களஞ்சியத்தில் ஒரு பானையில் போட்டு வைத்திருக்கிறேன்” என்று சொன்னார்.

சில காலத்திற்கு பின் ஒருநாள் காலையில் அப்துல்லா தன் படுக்கையில் உயிரற்ற நிலையில் கிடப்பதை அவரது மனைவியும், மகன்களும் கண்டனர். அவர் இறந்த மூன்றாம் நாள் அவரது குடும்பத்தினரின் துக்கம் குறைந்ததும், அவரது உயிலைப் பற்றி நினைத்தார்கள். மகன்கள் களஞ்சியத்தின் எல்லா பானைகளிலும் தேடினார்கள். கடைசியில் பிளாஸ்டிக்கில் சுற்றிய ஒரு காகிதத்தைக் கண்டார்கள். அதனைப் பிரித்து படித்தபோது அது ஒரு உயிலாக இல்லாமல் அப்துல்லா-பின்-சாத் அவர்களின் ஒரு உத்தரவாக இருந்தது.

“குழந்தைகளே, நீங்கள் மூவரும் அம்மாவைப் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் தீர்மானங்களை அவளிடம் சொல்லுங்கள். ஊருக்கு சென்றால் முன்னதாகவே அவளிடம் தெரிவியுங்கள். அகமத், நீ பெரியவன் எனவே உனக்கு அதிக பொறுப்புகள் உண்டு. நீ உன் தம்பிகள் முகமத் மற்றும் முகர்ரம் இருவரையும் கவனித்துக் கொள்ள வேண்டும். அகமத், நீ மூத்தவனாக இருப்பதால் குடும்பத்தில் நடக்கும் கல்யாணம், சாவு மற்றும் பிற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டும். முகமத், நீ இருவருக்கும் நடுவில் பிறந்தவன் எனவே நீ உன் அண்ணனை மதிக்க வேண்டும், உன் தம்பியை கவனித்துக் கொள்ள வேண்டும்.

நீ உன் தாயிடம் அன்பாக, மரியாதையுடன் இருக்க வேண்டும். முகர்ரம், நீ இளையவன் மற்றும் தாய்க்கு நெருங்கியவன். எனவே நீயும் உன் சகோதரர்களும் சேர்ந்து உன் அம்மாவின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும். உன் சகோதரர்களிடம் மரியாதையுடன் நடந்து கொள். ஏனெனில் எனக்குப்பின் அவர்கள்தான் உனக்கு பெரியவர்கள். என்று அதில் எழுதியிருந்த்து.

மகன்கள் அந்த பக்கத்தை மேலிருந்து கீழ் படித்துவிட்டு, ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். தங்களின் தகப்பனார் ஒரு “வசீஹத்” அதாவது உயிலை எழுதாமல், ஒரு “நசீஹத்” அதாவது அறிவுரை எழுதியுள்ளாரே என்று திகைத்தனர். பின்னர் அவர்களது தாய் ருகையா, தன் கணவர் அந்த இரவு, இரண்டு தாள்களில் ஏதோ எழுதியதாகச் சொன்னார். இவர்கள் ஒரு தாளை மட்டுமே படித்திருந்தனர்.

தாய் அவர்களிடம் முதல் தாளுடன் இரண்டாம் தாள் ஒட்டிக் கொண்டு இருக்கிறதா என்று பார்க்க சொன்னார். அகமத் அந்த தாளை ஓரத்தில் உரசியபோது, அதனோடு மற்றொரு தாள் ஒட்டி இருப்பதை கவனித்தான். மகன்களின் முகம் பிரகாசமானது. மூத்தவன் அகமத், “நல்லவேளை! அப்பா இந்த தாளில் உயில் எழுதியிருக்கிறார்” என்றான். முகமத், முகர்ரம் இருவரும், “படி சீக்கிரம் சீக்கிரம்” என்றனர்.

அகமத் படிக்க ஆரம்பித்தான்.

“அல்லாவின் சாட்சியுடன், நான் எழுதுவது: என் இறப்புக்குப்பின் என் வீடு என் மனைவி ருகையா காதூனை சேரும். வீட்டை தன் மகன்களுக்கு கொடுப்பதோ அல்லது விற்பதோ அவளது இஷ்டம். அந்த முடிவை என் மனைவிக்கே விட்டுவிடுகிறேன்.

இந்த வீட்டைத் தவிர என்னிடம் எந்த சொத்தும் இல்லை. எனினும், என் இறப்புக்குப்பின் என் ஒட்டகங்களை என் மனைவி மற்றும் மகன்கள் பங்கிட்டுக் கொள்ள வேண்டும். மிக ஆரோக்கியமான, அழகான ஒட்டகம் என் மனைவிக்கு. மீதியுள்ள ஒட்டகங்களை என் மகன்கள் பிரித்துக் கொள்ளலாம். என் மனைவி எடுத்துக் கொண்ட பின் மீதமுள்ள ஒட்டகங்களில் பாதி அகமதை சேரும். முகமதுக்கு

மூன்றில் ஒரு பங்கும், முகர்ரமுக்கு ஒன்பதில்

ஒரு பங்கும் சேரும்.”

இறப்பதற்கு முன் அப்துல்லா-பின்-சாத் பதினெட்டு ஒட்டகங்கள் வைத்திருந்தார். சிறந்ததொரு ஒட்டகம் ருகையா காதூன் சேர்ந்தது. என்பதால் மீதமிருந்தது பதினேழு ஒட்டகங்கள்.

அகமத் தனக்கு பாதி பங்கு வேண்டுமென்றான். ஆனால் எட்டரை ஒட்டகங்களை எப்படி எடுத்துக் கொள்வது? அரை ஒட்டகம் எங்கு கிடைக்கும் என்று அவர்கள் யாருக்கும் தெரியவில்லை. அதேபோல முகமது தனக்கு மூன்றில் ஒரு பங்கும், முகர்ரம் தனக்கு ஒன்பதில் ஒரு பங்கும் வேண்டுமென்றனர். அதன்படி ஒட்டகங்களை பிரிப்பது சாத்தியமில்லை. மூவரும் தன் பங்கு முழுமையாக வேண்டும் என்று சண்டை போட்டார்கள். மூவருமே விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை.

தந்தையை இப்பொழுதுதான் புதைத்திருக்கிறார்கள் அதற்குள் இப்படி சண்டை போடுகிறார்களே என்று அவர்களது தாய் வருந்தினார்.

இளையவனான முகர்ரம் இந்த சண்டையினால் தன் தாய் வருந்துவதைக் கண்டான். தந்தையின் அறிவுரையைப் பற்றி எண்ணினான்.

“அம்மா, நீ விவேகமுள்ளவள், நாங்கள் என்ன செய்ய

வேண்டும் என்று நீ ஏன் சொல்லக் கூடாது?” என்று கூறினான்.

தந்தை எழுதியிருந்த அறிவுரையை நினைத்த முகமது,

தன் தம்பி சொல்லியதை ஆமோதித்து, “ஆமாம் அம்மா,

நீ என்ன நினைக்கிறாய்?” என்றான்.

அகமத் தாயின் விருப்பத்தை முதலில் மதிக்க வேண்டும் என்று தன் தந்தை சொல்லியதை அப்போது உணர்ந்தான். அவனும் “சொல் அம்மா. உன் விருப்பம் என்ன?” என்றான்.

அம்மா சற்று நேரம் சிந்தித்தார். பின்னர்,

“என் ஒட்டகத்தையும் மீதமூள்ளதோடு

சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது

மொத்தம் எவ்வளவு ஒட்டகங்கள்

உள்ளன?” என்று கேட்டார்.

“பதினெட்டு” என்று மகன்கள் சொன்னார்கள். அம்மா சொன்னார், “மிக சரி. அகமது, நீ பெரியவன் உயில்படி நீ பாதி எடுத்துக்கொள். உனக்கு ஒன்பது ஒட்டகங்கள். முகமது, உயில்படி உனக்கு மூன்றில் ஒரு பங்கு. எனவே நீ

ஆறு ஒட்டகங்களை எடுத்துக்கொள். முகர்ரம், அப்பாவின் உயில்படி உனக்கு ஒன்பதில் ஒரு பங்கு. எனவே உனக்கு இரண்டு ஒட்டகங்கள்.

விஷயம் இப்போது தீர்வாகிவிட்டது என்று சொன்னார் அம்மா.

அகமது, “ஆமாம் அம்மா. எனக்கு ஒன்பது, முகமதுக்கு ஆறு மற்றும் முகர்ரமுக்கு இரண்டு. அட! மொத்தம் பதினேழு ஒட்டகங்கள். எனவே

அம்மா, உன் ஒட்டகம் உன்னிடமே இருக்கும்!” என்றான்.

அம்மா புன்னகை செய்து, “உங்கள் தந்தை பாரபட்சமற்ற, நேர்மையான

மனிதர்” என்றார்.