uyiriyal poonkaavil devin thinam

உயிரியல் பூங்காவில் தேவின் தினம்

தேவ் இரண்டு வயதான குழந்தை. அவனது பெற்றோர் ஞாயிற்றுக்கிழமை உயிரியல் பூங்காவுக்கு அழைத்துச் சென்றனர். அவன் பார்க்கும் அனைத்து விலங்குகளையும், அவற்றை அவன் அழைக்கும் வேடிக்கையான பெயர்களையும் பற்றிப் படியுங்கள். இந்தக் கதை அவனுக்காக அவனது தாயால் எழுதப்பட்டது. மொழிபெயர்ப்பு: ராகவ் பாலா, கவின் நாராயணன்

- Raagav Bala

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

தேவ் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான். இன்று, அவனது பெற்றோர்கள் அவனை உயிரியல் பூங்காவிற்கு அழைத்துச் செல்லப் போகிறார்கள்.

"உயிரியல் பூங்கா!", என்று கத்தினான்.

ஆட்டோவில், அவர்களின் பயணம் நீண்டும் மற்றும் கரடுமுரடானதாகவும் இருந்தது!

"ப்ர்ர்ர்ர்ர்", என்றான் தேவ்.

இறுதியாக அவர்கள் உயிரியல் பூங்காவை அடைந்தார்கள்!

அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது!

தேவின் அப்பா நுழைவுச்சீட்டு வாங்கச் சென்றார்.

அப்பொழுது, தேவின் அப்பா விட்டுப் போய்விடுவார் என்று நினைத்து "அப்பா அப்பா", என்று தேவ் கவலையாகக் கத்தினான்.

அப்பா சீக்கிரமாக நுழைவுச்சீட்டு எடுத்து வந்தார். அவர்கள் சவாரி செல்லப் போகிறார்கள்!

நீண்ட நேரம் காத்திருந்தப் பின், சவாரி தொடங்கியது!

கூண்டுகளில் இருப்பதை விட, வெளியில் இருக்கும் விலங்குகளைப் பார்க்க தேவ் மிகவும் உற்சாகமாக இருந்தான்!

முதலில் பல மான்கள் தண்ணீர் குடிப்பதைப் பார்த்தார்கள்!

"மன், மன்!" என்று தேவ் கத்தினான்.

"அது மன் இல்லை, அது மான், செல்லம்," என்றார் அம்மா.

ஓட்டுநர் சொன்னார், "சத்தம் போடாதே அல்லது விலங்குகள் பயந்து ஓடி விடும்."

அவர்கள் ஓட்டிச் செல்ல செல்ல, ​​ஒரு கரடிக் குட்டியைப் பார்த்தார்கள்!

"கடி, கடி!", என்று கத்தினான் தேவ்.

"அது கரடி, செல்லக் குட்டி!" என்றார் அப்பா.

குட்டிக் கரடி தலையை இடப்பக்கமும் வலப்பக்கமும் அசைப்பதைக் கண்டு தேவ் மிகவும் உற்சாகமடைந்தான்!

அதன் பிறகு, அவர்கள் ஒரு யானை பார்த்தனர்! "யான், யான்!" என்று தேவ் கத்தினான். அது குளித்துக் கொண்டிருந்தது!

தேவின் அம்மா, "பாரு தேவ்! யானை தும்பிக்கையில் தண்ணீரை எடுத்துத் தனக்குமேல் தெளிப்பதைப் பார்க்கிறாயா? இந்த வெயிலில் குளிர்ச்சியாக இருக்க முயற்சிக்கிறது," என்றார்.

தேவ் அவனுடைய குட்டி கைகளை யானை போல் அசைக்கிறான்!

தேவ் காட்டிற்குள் ஒரு சிங்கம் தூங்குவதைக் கண்டு வியப்படைந்தான்.

"சிக, சிக!"

அவன் அம்மா சிரித்தார். "ஆமாம் தேவ், அது ஒரு சிங்கம்."

சிங்கம் அவர்களின் பேருந்தை திரும்பிக்கூட பார்க்கவில்லை! அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தது.

அவர்கள் சென்றபோது, ​​தண்ணீரில் ஒரு புலி படுத்திருப்பதைப் பார்த்தார்கள்!

தேவ் தனக்குள் நினைத்துக் கொண்டான், "இது விலங்குகள் தூங்கும் நேரம் என்று நினைக்கிறேன்".

"புலி தூங்கு."

அவனுடைய அப்பா, "ஆமாம் தேவ், புலி தூங்குகிறது" என்றார்.

அவர்கள் செல்லும்போது, மக்கள் திடீரெனக் கத்த ஆரம்பித்தனர்! என்ன உற்சாகம் என்று பார்க்க தேவ் அருகில் சென்றான்.

அங்கே ஒரு மயில் தன் இறகுகளை விரித்துக்கொண்டு நடந்து கொண்டிருந்தது! அது மிகவும் அழகாக இருந்தது!

அவனும் மயில் போல் ஆட ஆரம்பித்தான். அவனுடைய பெற்றோர்கள் சிரித்தார்கள்.

இரண்டு முதலைகள் வாயைத் திறந்து தரையில் கிடப்பதைக் கண்ட தேவ் தன் இருக்கையில் மேலும் கீழும் குதித்துக்கொண்டிருந்தான்.

அவைகளின் பற்கள் மிகவும் கூர்மையாக இருந்தன!

தேவ் பயந்து தன் தாயை அணைத்துக் கொண்டான்! "முததலை!" அம்மா சிரித்துக்கொண்டே அவனை இறுக்கி பிடித்தாள்.

பல குரங்குகள் "ஓஓஓ" என்று மரங்களில் கத்திக்கொண்டே குதிப்பதைக் கண்டு அவன் இன்னும் பயந்தான்.

அவைகள் மிகவும் வேடிக்கையாக இருந்ததால் தேவ் சிரிக்க ஆரம்பித்தான். "குங்கு. ஓ ஓ!"

ஒரு குட்டிக் குரங்கு தன்னைப் போலவே தன் தாயிடம் ஒட்டிக்கொண்டிருப்பதைக் கண்டான். "பாப்பா!"

தேவ் இந்த நாள் முடிவதை விரும்பவில்லை, ஆனால் சவாரி முடிந்துவிட்டது,

"இது என் வாழ்வின் மகிழ்ச்சியான நாள்!" என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டான்.

அவன் "தேவ் மகிழ்ச்சி மகிழ்ச்சி!" என்று கூச்சலிட்டான், அவனது தந்தை அவனுக்கு ஒரு ஐஸ்கிரீம் வாங்கும்போது கைதட்டினான்.