vaanavil aaru

வானவில் ஆறு

வானத்தில் வானவில் எப்படி வந்ததென ஒரு அம்மா, தன் குழந்தைகளுக்கு கதை சொல்கிறார்.

- Vetri | வெற்றி

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

ஊடூ, எர்டூ, எர்யும் என்ற மூன்று உடன்பிறப்புகளும் மழை பெய்யும் இசையைக் கேட்டுக் கொண்டிருந்தனர். அதில் போய் ஆட வேண்டுமென்று விரும்பினர். வானத்தில் வரும் வானவில்லையும் தொட நினைத்தனர். அம்மா சொன்னார்: “கூடாது!”

அவர் மனதை மாற்றுவதற்காக மூவரும் அழுதனர். அது வேலைக்காகவில்லை. எர்யும் மெல்ல நழுவிச் சென்று வானவில்லைப் போய்ப் பார்க்கவும் முயன்றான்.

வீட்டை விட்டு வெளியே போகும் முன் அம்மா அவனைப் பிடித்துவிட்டார். அவன் சகோதரிகளுக்கும் கேட்க வேண்டுமென குரலை உயர்த்தி அம்மா சொன்னார்:

“உனக்கு சளி பிடித்துவிடும். அப்படிப் பிடித்தால், உனக்குப் பிடிக்காத அந்த மிளகு சூப்பைக் குடிக்கவேண்டும்.”அதைச் சொல்லிவிட்டு அம்மா சிரித்தார்.

அவர்கள் கதை கேட்பார்கள் என்ற நம்பிக்கையில், அம்மா சொன்னார்: “வானவில், குணப்படுத்தும் சக்திகளைக் கொண்ட ஒரு மாய ஆறு. ஆனால் அது வானத்தில் உயரத்தில் இருப்பதால் நம்மால் அதைத் தொடமுடியாது. எனவே, சளி பிடித்துவிட்டால் வானவில்லால் நமக்கு உதவ முடியாது.”

குழந்தைகள் அதைப் பற்றி யோசித்துப் பார்த்தனர்.

”அம்மா, அம்மா! அந்த வானவில் கதையைச் சொல்லுங்களேன்” என்றாள் எர்டூ.

“ஆமாம், அம்மா. எனக்கும் கேட்கணும்” என்றான் ஊடூ.

”நானும் நானும்” என்று மூன்று விரல்களைக் காட்டியபடி சேர்ந்துகொண்டாள் எர்யும்.

“சரி, பார்க்கலாம். ம்ம்ம்ம். என் செல்லங்களா, வாங்க. கதைசொல்லும் அம்மா வந்தாச்சு!” என்றார் அம்மா.

எர்டூ, நாஹா என்ற உருட்டினால் சத்தம் வரும் இசைக்கருவியை எடுத்துவந்து அம்மாவிடம் கொடுத்தாள். அவர்களது கதைகளுக்கு அதுதான் பின்னணி. எர்யும் அம்மாவின் தலைப்பாகையை எடுத்துவந்தாள். அதை அணிந்தாலே அம்மா பாத்திரமாகவே மாறிவிடுவார்.

பலமுறை கேட்ட அந்தக் கதையை மீண்டும் கேட்பதற்காக மூவரும் அமைதியாக உட்கார்ந்திருந்தனர். அம்மாவை ஆரம்பிக்கச் சொல்லி ஊடூ விசில் ஊதினான். கதை ஆரம்பித்தது.

”முன்னொரு காலத்தில், வானவில் ஒரு மாய ஆறாக இருந்தது. ம்பாடேடேயின் பசுமையான காடுகளுக்கு உள்ளே ஒளிந்திருந்தது. அதற்கு குணப்படுத்தும் சக்திகள் இருந்ததால் அதை காவல்காத்து வந்தனர்.

உடம்பு சரியில்லாவிட்டால், அதன் தண்ணீரை எடுத்துக் குடித்தால்போதும். வானவில்லுக்குப் பகிர்ந்து கொள்வதில் எப்போதும் மகிழ்ச்சிதான். ஆனால் தவறாக நடந்துகொள்பவர்களை அதற்கு சுத்தமாகப் பிடிக்காது.”

”ஆற்றின் மாயாஜாலத்தால், அதன் கரைகளில் ஐஸ்கிரீம் இருக்கும்! தண்ணீர் குடிக்க வரும் எல்லோரும் ஐஸ்கிரீமை ரசித்து சாப்பிடுவார்கள், குறிப்பாக குழந்தைகள்.

ஆற்றிலிருந்து வரும் ஐஸ்கிரீம் சிகப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, நீலம், ஊதா, கருநீலம் ஆகிய நிறங்களில் இருக்கும்.”

”ஒருநாள் ம்போம் என்ற ஒரு குறும்புக்கார கிழவி தொலைத்தூரத்து ஊர் ஒன்றிலிருந்து வந்தார். வந்ததும் ஒரு பாதுகாவலரைப் பார்த்தார். பாதுகாவலருக்கு கிழவியைப் பற்றி எதுவும் தெரியாது. ஆனால் ஏதோ வித்தியாமாகத் தோன்றியது. இருந்தாலும் அவர் தன் உணர்வை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. பாதுகாவலர் காட்டைக் காட்டி, கிழவியிடம் ஆற்றுக்கு மரியாதை கொடுக்குமாறு சொல்லி அனுப்பினார். ம்போம் சரி என்று சொல்லிவிட்டு ஆற்றிடம் போனார்.”

”ஒரு கை நிறைய தண்ணீர் அள்ளிக் குடித்ததும் கிழவி குணமாகிவிட்டார். சுற்றிமுற்றி யாரும் பார்க்கிறார்களா என்று பார்த்தார்.

இல்லையென்று தெரிந்ததும், ஒரு கல்லைத் தூக்கி ஆற்றில் போட்டார். கல் மெதுவாக திரும்பி மேலே வந்து சில அலைகளை ஏற்படுத்தியது. ஒரு குச்சியைத் தூக்கிப் போட்டார், மீண்டும் அதே மாதிரி நடந்தது.”

”ம்போம் டபக்கென்று ஆற்றில் குதித்தார்! சாகா வரம் கிடைத்துவிடும் என்று நம்பியிருந்தார். ஆனால் அவர் குதித்ததும், ஆறு மேலே பறந்துவிட்டது. வானத்தில் உயரமாகப் போய்விட்ட அது, திரும்ப ம்பாடேடேக்கு வரவேயில்லை. ஆனால் சிலசமயம், மழை வந்தபின் வானவில்லும் வரும். ஆறு மாதிரி இருந்து பார்க்குமாம்.

அத்தோடு கதை சரியாம்” என்றார் அம்மா.

”என் செல்லக்குட்டிகளா, இந்தக் கதையை சொல்லச்சொல்லி அடிக்கடிக் கேட்கிறீர்களே? இந்தக் கதை ஏன் உங்களுக்கு அவ்வளவு பிடித்திருக்கிறது” என்று கேட்டார் அம்மா.

”என் உணர்வுகளுக்கு கவனம் அளிக்கவேண்டுமென ஞாபகப் படுத்துவதால் எனக்குப் பிடித்திருக்கிறது” என்றான் ஊடூ. “வானவில்லின் வண்ணங்களை நினைவு வைத்துக்கொள்ள உதவுகிறது” என்றால் எர்டூ.

”எனக்கு ஐஸ்கிரீமை ஞாபகப் படுத்துவதால் பிடித்திருக்கிறது. இப்போ கொஞ்சம் ஐஸ்கிரீம் கிடைக்குமா, அம்மாஆஆஅ?” என்று கெஞ்சிப் பார்த்தாள் எர்யும்.

“ம்ம்ம்ம். இப்போ குளிராக இருக்கிறது. நாளைக்கு ஐஸ்கிரீம் சாப்பிடலாம், சரியா? அடுத்த முறை வானவில் முடியும் இடம் பற்றி ஒரு கதை சொல்கிறேன்” என்றார் அம்மா.