ராஜு நகரத்தில் வசித்து வந்தான். ஆனால் கோடைக்காலத்தில், பள்ளி விடுமுறையின் போது, அவனுடைய தாத்தா வசிக்கும் கிராமத்திற்குப் போய்விடுவான். அப்படி ஒருமுறை கோடையில் சென்றபோது ராஜு நீச்சல் கற்றுக்கொள்ள முடிவு செய்தான்.
தாத்தாவிடம் சென்று, “நீச்சல் கத்துக்கணும் தாத்தா! நீ கத்துக் குடுப்பியா?” என்று கேட்டான். “ரொம்ப நல்ல காரியம்” என்ற தாத்தா, “நான் நாளைக்கு உன்னை ஆற்றுப்பக்கம் கூட்டிகிட்டு போறேன். மல்லண்ணா சார் உனக்கு நீச்சல் சொல்லிக் கொடுப்பார்” என்றார்.
அன்று இரவு ராஜுவின் கனவு முழுவதும் நீச்சல் கற்றுகொள்வது பற்றிய சந்தோஷமான எண்ணங்களே!
அடுத்த நாள் காலை தாத்தாவுடன் ராஜு ஆற்றங்கரைக்குச் சென்றான். அங்கே ஏராளமான குழந்தைகள் நீச்சல் கற்றுக்கொண்டிருந்தனர்.
“நீயும் மல்லண்ணா சார் வகுப்பில் சேர வந்திருக்கிறாயா?” என்று ஒரு சிறுவன் கேட்டான்.
“ஆமாம்” என்றான் ராஜு. “உங்களை மாதிரி நீச்சல் கத்துக்க எனக்கும் ஆசை. ஆனா...எனக்குக் கொஞ்சம் பயமாயிருக்கு..சில சமயம்..” என்று சொல்ல ஆரம்பித்தான் ராஜு “கவலைப்படாதே ! நீயும் கொஞ்ச நாளிலே மீனைப்போல நீந்துவே !” மற்ற குழந்தைகள் சொன்னார்கள்.
பிறகு அவர்கள் உயரமான பாறை ஒன்றின் மீது ஏறி நின்று, ஒருவர் பின் ஒருவராக தண்ணீரில் குதித்தார்கள். நீரில் உடம்பு பட்டதும், நல்ல வலுவோடு நீந்தத் தொடங்கினார்கள்.
ராஜு இன்னும் குதிப்பதற்கு தயாராகவில்லை. ஆகவே ஒரு பாறையின் மீது உட்கார்ந்து கொண்டு, குளுகுளு நீரில் காலைத் தொங்கவிட்டுக் கொண்டிருந்தான். பிறகு திடுக்கென காலை மேலே இழுத்துக் கொண்டான்.
யாரோ பாதத்தை சுரண்டியது போல இருந்தது. நீருக்குள் பார்த்தான், அங்கே சின்னச் சின்ன மீன்கள் ஏராளமாக இருந்தன. பச்சை மீன்கள், மஞ்சள் மீன்கள் மற்றும் பழுப்பு நிற மீன்கள். எல்லா மீன்களுக்கும் ஒல்லியான, நீளமான வால் இருந்தது.
ராஜு அவ்வாறு பார்த்துக் கொண்டேயிருக்கும் பொழுது, வானவில்லின் வர்ணங்களுடன் கூடிய பெரிய மீனொன்று அவனருகில் நீந்தி வந்தது. “இங்கே என்ன செய்கிறாய் ராஜு?” என்று அது கேட்டது.
“நானும் உங்களைப் போல நீந்த கற்றுக் கொள்ளவேண்டும்” பதில் சொன்னான் ராஜு.
“நீங்களெல்லாம் எத்தனை பிரமாதமாக நீந்துகிறீர்கள்!” என்றான். மீன் சிரித்தது. “நீந்தத் தெரியவில்லையென்றால் அவ்வளவுதான்” என்று சொன்னது வானவில் மீன். “நீர் நாங்கள் எப்பொழுதும் இயற்கையாக வாழும் இடம். இங்கு சந்தோஷமாக இருக்கிறோம். மனிதர்கள்தான் வலை போட்டு எங்களைப் பிடித்து, எங்களின் சந்தோஷத்தைக் கலைக்கிறார்கள்.” என்றும் சொன்னது.
“நீ சொல்வது சரிதான். மீனவர்கள் வலை போட்டு உன்னை போன்ற மீன்களை பிடித்து, சந்தையில் விற்பதாக நானும் படித்திருக்கிறேன்” என்றான் ராஜு.
“எங்களைப் பற்றி வேறென்ன படித்திருக்கிறாய்?” கேட்டது வானவில் மீன்.
“உலகத்தில் எத்தனை வகையான மீன்கள் இருக்கிறது என்று உனக்கு தெரியுமா?” எனக் கேட்டது.
“ஓரளவு தெரியும். எங்கள் பள்ளிக்கூடத்தில் ஒரு பருமனான புத்தகத்தில் நூற்றுக்கணக்கான மீன்களின் படங்களை பார்த்திருக்கிறேன்” என்றான் ராஜு.
“அப்படியானால், மனிதர்கள் எங்களை அலங்காரமாகக் கண்ணாடி நீர்த் தொட்டிகளில் அடைத்து வைப்பதும் உனக்குத் தெரியுமென்று நினைக்கிறேன்” என்றது வானவில் மீன்.
“மீன் தொட்டிகளைச் சொல்கிறாயா?” ராஜு கேட்டான். “எனக்கு அதைப்பற்றித் தெரியும். எங்கள் நகரத்தில் மீன் காட்சியகம் என்று ஒன்று உண்டு. அங்கு ஏராளமான கண்ணாடித் தொட்டிகளில் வண்ண வண்ண மீன்கள் இருக்கும்”.
ஏன், என் வீட்டிலேயே ஒரு மீன் தொட்டி வைத்திருக்கிறேன்.
அதில் அழகான சின்ன மீன்கள் நிறைய இருக்கின்றன என்று சொன்னான் ராஜு. வானவில் மீன் பெருமூச்சு விட்டது.
“ஆமாம் ராஜு! இயற்கை அன்னை எங்களுக்கு அற்புதமான நிறங்களையும், வடிவங்களையும் வழங்கியுள்ளாள். நாங்கள் யாருக்கும் எந்தத் தீமையும் நினைப்பது கூட இல்லை”.
நாங்கள் வேண்டுவதெல்லாம், எங்கள் ஆறுகள், ஏரிகள், கடல்கள் மற்றும் மகாசமுத்திரத்தில், யாருடைய தொல்லையுமின்றி அலைவது மட்டும்தான்.
“ஆனால் உங்கள் மனித இனம் எங்களை, சுதந்திரமாக பயமின்றி வாழவிடுவதில்லை” சொன்னது வானவில் மீன். “வானவில் மீனே! நீ சொல்வது மிகவும் சரி!” ராஜு ஒப்புக்கொண்டான்.
“நீயே சொல் ராஜு! ஒரு சின்னக் கண்ணாடித் தொட்டியில் உனக்கு வாழப்பிடிக்குமா? இதில் ஓடியாடவே இடமில்லை, இயற்கையான உணவுமில்லை. பார்க்கும் தொலைவில் நண்பர்களில்லை, உறவினர்களில்லை. ஆகவே எங்களுக்கு இதில் வாழ விருப்பமில்லை. இதை வெறுக்கிறோம்.
ஆனால் மனிதர்களாகிய உங்களுக்கு இது புரிவதில்லை!” என வானவில் மீன் தொடர்ந்து சொன்னது.
ராஜு யோசனை செய்து பார்த்தான். ஒரு சின்னக் கண்ணாடித் தொட்டியில் அடைபட்டு வாழ்வது அவனுக்கு பிடிக்குமென்று கண்டிப்பாகத் தோன்றவில்லை. வாழும் உயிரினம் எதையும் சிறைப்படுத்தி வைப்பது மோசமான செயல்
என்றும் தோன்றியது.
வானவில் மீனுக்காகவும் அதன்
இனத்திற்காகவும் மிகவும் வருத்தப் பட்டான்.
ராஜு வானவில் மீனைப் பார்த்து, “ நான் என் ஊருக்கு சென்றதும், என்னுடைய மீன் தொட்டியிலுள்ள எல்லா மீன்களையும் விடுதலை செய்வேன்” என வாக்குறுதி தந்தான்.
“அதோடு என் நண்பர்கள் அனைவரிடமும் இதையே செய்யச் சொல்லுவேன். இப்பொழுது மகிழ்ச்சிதானே?” என்று கேட்டான். “நிச்சயமாக ராஜு!” மீன் சிரித்தது.
“நீ விஷயங்களைப் புரிந்து கொள்ளக்கூடிய பையன். இரக்கம் நிரம்பிய இதயம் கொண்டவன். உனக்கு நன்றி!” என்றது வானவில் மீன். எல்லா மீன்களும் ராஜுவின் கால் பக்கமாக நீந்தி வந்து விடைபெற்றுக்கொள்வது போல், கடைசியாக வருடிவிட்டு, பிறகு ஆற்றின் ஆழத்திற்குள் மீண்டும் மூழ்கி மறைந்தன.
உங்களுக்குப் பிடித்த வகையில் வண்ணம் தீட்டுங்கள்.
உங்களுக்குப் பிடித்த வகையில் வண்ணம் தீட்டுங்கள்.