arrow_back

வஞ்சிமாநகரம்

7. குமரன் நம்பியின் திட்டம்

அன்று நள்ளிரவில் உடன் வந்த வீரர்களை நடுக்கடல் தீவில் காத்திருக்கச் செய்துவிட்டுக் கடம்பர்களின் கொள்ளை மரக்கலங்களில் புகுந்து உளவறியச் சென்ற குமரன் நம்பி திரும்பி வரத் தாமதமான ஒவ்வொரு விநாடியும் காத்திருந்த கொடுங்கோளூர்ப் படைக்கோட்டத்து வீரர்கள் கணக்கற்ற சந்தேக நினைவுகளால் குழப்பமடையலானார்கள். ஒரு வேளை குமரன் நம்பி கடம்பர்களின் கையிற் சிக்கிச் சிறைப்பட்டு விட்டானோ என்ற சந்தேகமும் இடையிடையே மனத்தில் தோன்றி அவர்களைப் பயமுறுத்தியது. நல்ல வேளையாக மேலும் அவர்களுடைய பொறுமையைச் சோதிக்காமல் குமரன் நம்பி திரும்பி வந்து சேர்ந்தான்.

வந்ததும் வராததுமாக, "உடனே வந்தது போலவே கரைக்குத் திரும்பி விடுவோம்! கொடுங்கோளூர்ப் படைக் கோட்டத்திற்குச் சென்று மற்றவற்றைச் சிந்திப்போம் என்று அவர்களை விரைவுபடுத்தினான் குமரன் நம்பி. அவன் அவ்வாறு விரைவுபடுத்துவதற்கு ஏதேனும் காரணம் இருக்க வேண்டுமென்று உணர்ந்தவளாக அவர்களும் உடனே அவனோடு படகேறிப் புறப்பட்டனர். படகு கடலில் அலைகள் நிறைந்த பகுதியை எல்லாம் கடந்து பொன்வானி முகத்துவராத்தை அடைகின்றவரை அவர்கள் ஒருவரோடொருவர் அதிகமாக எதுவுமே பேசிக்கொள்ளவில்லை.

கரை சேர்ந்த பின் விடிவதற்குச் சிறிது நேரமே இருந்தது. குமரன் நம்பி உட்பட யாவருமே களைத்திருந்தார்கள். பேசி முடிவு செய்ய வேண்டியவற்றைக் காலையில் பேசிக் கொள்ளலாம் என்ற எண்ணமே அவர்களுக்கு அப்போது தோன்றியது. உறங்குகின்ற மனநிலை யாருக்குமே இல்லையென்றாலும் உடலுக்கு ஓய்வு கொடுக்க வேண்டியிருந்தது. மறுநாள் பொழுது புலர்ந்ததும் படைக்கோட்டத்து வீரர்கள் கலந்து பேசினார்கள். குமரன் நம்பியின் மனம் கொள்ளைக்காரர்களால் கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட அமுதவல்லியின் நிலை என்னவோ, ஏதோ, என்பதைப் பற்றிய கவலையில் ஆழ்ந்திருந்தாலும் வீரர்களிடையே அவன் சில திட்டங்களைக் கூறலானான்.

"பலமுறை நம்முடைய பெருமன்னர் செங்குட்டுவரால் ஓட ஓட விரட்டபட்டிருக்கும் இந்தக் கொடிய கடற் கொள்ளைக்காரர்களான கடம்பர்கள் மறுபடி சமயம் பார்த்து முற்றுகையிட்டிருக்கிறார்கள். நம் மன்னரும் சேர நாட்டுப் பெரும் படைகளும் வடக்கே படையெடுத்துச் சென்றிருப்பதை அறிந்தே கொள்ளைக்காரக் கடம்பர்கள் இந்த ஏற்பாட்டைச் செய்திருக்கிறார்கள். கொடுங்கோளூர்ப் படைக்கோட்டத்திலோ நாம் சிலர் தான் இருக்கிறோம். தலைநகரில் வேளாவிக்கோ மாளிகையிலிருந்து தம்மை வந்து சந்திக்கும்படி அமைச்சர் அழும்பில்வேள் எனக்கு கட்டளையிட்டிருந்தார். அவரைப் போய்ப் பார்த்து வந்தேன். கடற்கரையிலும், பொன்வானி முகத்துவாரத்திலும், கொடுங்கோளூர் நகரிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்துமாறு என்னை அமைச்சர் பெருமான் வேண்டிக் கொண்டிருக்கிறார். மேலும்..." என்று சொல்லிக் கொண்டே வந்த குமரன் நம்பி தயங்கிப் பேச்சை நிறுத்தினான்.

"மேலும் என்ன?... ஏன் சொல்ல வந்ததைப் பாதியிலேயே நிறுத்திவிட்டீர்கள்?" என்று வினாவினான் படைக்கோட்டத்தைச் சேர்ந்த வீரனொருவன். ஆனால் குமரன் நம்பியோ தன் தயக்கத்தைத் தொடர விட்டவனாக மேலும் சிந்தனையில் ஆழ்ந்தான். அவன் சொல்வதற்கிருந்து செய்தியோ கொடுங்கோளூர் இரத்தின வணிகன் மகள் அமுதவல்லி காணாமற் போனதைப் பற்றியது. அதைத் தானே படை வீரர்களிடம் தன் வாய்மொழியினால் சொல்லி விவரிப்பதற்கு அவன் மனம் வேதனைப் பட்டது. என்ன காரணத்தினாலே இவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மீறிக் கொடுங்கோளூரில் அப்படி ஒரு நிகழ்ச்சி நடந்திருக்கும் என்பதை அவன் மனம் நம்ப மறுத்தது.