arrow_back

வஞ்சிமாநகரம்

21. வெற்றி மங்கலம்

வேளாவிக்கோ மாளிகைக்குள்ளேயே படைத்தலைவன் குமரன் நம்பியை அழைத்துச் சென்றவுடன் அமைச்சர் அழும்பில்வேள் தெளிவான குரலில் அவனிடம் வினாவினார்.

"கடற் கொள்ளைக்காரர்களாகிய கடம்பர்களைத் துரத்திக் கொடுங்கோளூரையும், சேர நாட்டுக் கடற்கரை நகரங்களையும் காப்பாற்றுமாறு, உனக்கு நான் கட்டளையிட்டதில் எந்த இடத்தில் எந்த விதத்தில் தந்திரம் இருக்குமென்று நீ அநுமானித்தாய்? உன்னை நான் கருவியாக மட்டுமே பயன்படுத்திக் கொண்டேன் என்று நீ எவ்வாறு கூற முடியும்?"

"தக்க காரணங்களோடு கூற முடியுமாயினும் - உங்களுடைய இந்தக் கேள்விக்கு மறுமொழி கூறுமுன் உங்களை நான் சில கேள்விகள் கேட்கவேண்டும். அதற்கு வாய்ப்பளிப்பீர்கள் அல்லவா?" என்று அமைச்சரைப் பதிலுக்கு வினாவினான் கொடுங்கோளூர்ப் படைக்கோட்டத்துத் தலைவன்.

அமைச்சர் அழும்பில்வேள் சில கணங்கள் தயங்கியபின், "என்னைக் கேள்விகள் கேட்க உனக்கு உரிமையில்லை என்று நான் கூறமுடியாது. உன் கேள்விகளை நீ இப்போதே என்னைக் கேட்கலாம்" என்றார்.

உடனே அங்கு நிலவிய அமைதியைத் தொடர்ந்து அந்த அமைதியைக் கிழிப்பது போன்ற உரத்த குரலில் குமரன் நம்பி பேசலானான்.

"மகோதைக் கரையில் கடற்கொள்ளைக்காரர்களின் பயம் அதிகமாகியதும் முதன்முறையாக நீங்கள் என்னை இதே வேளாவிக்கோ மாளிகைக்கு அழைத்து அனுப்பினீர்களே; அப்போது இங்கே நம்மிருவருக்கும் இடையே நிகழ்ந்த சில உரையாடல்களை இன்று மீண்டும் நினைவூட்ட வேண்டிய நிலையிலிருக்கிறேன்.

"கொடுங்கோளூரிலேயே அழகிற் சிறந்த பெண்ணொருத்தியைக் கடற்கொள்ளைக்காரர்கள் கொண்டு போய் விட்டார்கள். அதை நினைக்கும் போதுதான் வருத்தமாக இருக்கிறது" என்று கூறி அன்றைக்கு இருந்தாற் போலிருந்து என்னைப் பரபரப்படையச் செய்தீர்கள்.

"அப்படி ஒன்றும் நடந்திருப்பதற்கே சாத்தியமில்லையே? ஏனென்றால் நான் அங்கிருந்து புறப்படும் போதே கொள்ளை மரக்கலங்கள் கடலில் வெகு தூரத்தில் அல்லவா இருந்தன?" என்று பரப்பரப்போடு உங்களைக் கேட்டேன் நான்.

"என்ன நடந்தது? எப்படி அந்தப் பெண்ணைச் சிறைப்பிடித்துக் கொண்டு போனார்கள் என்றே தெரியவில்லை. கடற்கரைப் பக்கமாக உலாவச் சென்ற இரத்தின வணிகர் மகள் அமுதவல்லியைக் கடம்பர்கள் பிடித்துக் கொண்டு போய் விட்டதாக நகர் முழுவதும் பரபரப்பாக இருக்கிறது" என்று உறுதியாகக் கூறினீர்கள் நீங்கள்."

"ஆம்! நான் அவ்வாறு சொல்லி முடிப்பதற்குள்ளேயே பதற்றமடைந்த உன் வாயிலிருந்து 'ஆ' வென்ற அலறல் வெளிப்பட்டு விட்டது. அதையும் நான் கவனித்தேன். 'ஏன் இவ்வளவு பதற்றமடைகிறாய் குமரா! உனக்குக் கொடுங்கோளூர் இரத்தின வணிகர் மகள் அமுதவல்லியைத் தெரியுமா?' என்று கூட நான் கேட்டேன்."

"ஆம்! நீங்கள் என்னைக் கேட்டீர்கள். ஆனால் என்னிடம் அப்போது நீங்கள் கூறியதில் ஒன்றும் மட்டும் பொய். கொடுங்கோளூர் நகருக்குள் கடம்பர்கள் வரவும் இல்லை; யாரையும் கடத்திக் கொண்டு போகவும் இல்லை. அப்படி எல்லாம் ஏதோ நடந்ததாக நீங்கள் என்னிடம் ஏன் கூறினீர்கள் என்பதுதான் எனக்குப் புரியவில்லை. கடம்பர்களை நான் வென்று அவர்கள் மரக்கலங்களைச் சோதனையிட்டதில் யாருமே அவர்களிடம் சிறைப்பட்டிருக்கவில்லை என்பதை தெரிந்து கொண்டேன். நீங்களோ அப்படி ஒரு செய்தியைக் கூறி என் ஆவலைத் தூண்டினீர்கள். ஏன் அவ்வாறு செய்தீர்கள் என்பதை நான் அறியவேண்டும்" என்றான் குமரன்.