arrow_back

வஞ்சிமாநகரம்

3. ஆந்தைக்கண்ணன்

மேற்கே கடலில் கண்ணுக்கெட்டிய தொலைவில் தீப்பந்தங்களோடு கூடிய கொள்ளைக்காரர்களின் படகுகள் தெரிவதாகக் கடற்கரைப் பாதுகாப்புப் படையினர் வந்து தெரிவித்த போது கொடுங்கோளூரில் பரபரப்பு அதிகமாகிவிட்டது. அந்த நிலையில் குமரனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அமைச்சர் பெருமானுடைய அழைப்பை ஏற்று உடனே வஞ்சிமா நகர் செல்வதா அல்லது கொடுங்கோளூரிலேயே தங்கிக் கடற்படையிலும், முகத்துவாரத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகமாக்குவதா? எதைச் செய்வது என்று சிந்தித்து மனம் குழம்பினான் அவன். அமைச்சருடைய கட்டளையை அலட்சியம் செய்தது போலவோ, புறக்கணித்தது போலவோ விட்டுவிடுவதும் ஆபத்தில் வந்து முடியும் என்பது அவனுக்குத் தெரியும். அமைச்சர் பெருமானைச் சந்தித்துவிட்டு இரவோடிரவாகத் திரும்பிவிடலாமென்று அவன் எண்ணினான். படைக் கோட்டத்திலிருந்த வீரர்களையெல்லாம் ஒன்று சேர்த்து உடனே செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகளை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு வஞ்சிமா நகர் புறப்பட்டான் அவன். புறப்படுவதற்கு முன் எப்படியாவது அமுதவல்லியைச் சந்திக்க வேண்டும் என்று அவன் முயன்ற முயற்சி வீணாகிவிட்டது. அந்த அகாலத்தில் இரத்தின வணிகருடைய மாளிகையைத் தேடிச் சென்று அவளைக் காண்பது முடியாத காரியம். தான் வஞ்சிமா நகர் புறப்படுகிற செய்தியையும் அவளறியச் செய்வதற்கு வாய்ப்பில்லை என்பதை உணர்ந்தான். முகத்துவாரத்திலிருந்து கூப்பிடு தூரத்தில் கொள்ளை மரக்கலங்கள் நெருங்கிவிட்டதாகத் தகவல் பரவிக் கொண்டிருந்தது. எனவே தலைநகருக்குப் புறப்படுவதற்கு முன் கொடுங்கோளூர்க் கடற்கரைக்குச் சென்று நிலைமையை நேரில் கண்டறிய வேண்டுமென்று தோன்றியது குமரனுக்கு. அவன் தலைநகருக்குப் புறப்பட்ட பயணத்தின் போதே போகிற வழியில் கடற்கரைப் பக்கமாகத் திரும்பினான். வாத்தியங்களின் ஒலிகளும், கீதங்களும் கேட்கும் கலகலப்பான கொடுங்கோளூர் வீதிகள் அன்று இருண்டு கிடந்தன. எங்கும் வெறிச்சோடிப் போயிருந்தது. கடற்கரை ஓரத்துச் சோலைகளும், மணல் வெளிகளும் கூட ஆளரவமற்று இருந்தன. கொடுங்கோளூர்ச் சேரமான் படைக்கோட்டத்தைச் சேர்ந்த வீரர்கள் மட்டும் ஆங்காங்கே புதர்களில் மறைந்து காவல் புரிந்தவண்ணம் இருந்தனர். படைக்கோட்டத் தலைவனான குமரனைப் பார்த்ததும் அவர்களில் சிலர் ஓடி வந்து வணக்கம் செலுத்தினர். கடலில் தொலை தூரத்தில் செம்புள்ளிகளாகத் தீப்பந்தங்கள் எரியும் மரக்கலங்கள் இருளில் மிதந்து வரும் ஒரு நகரம் போல் தெரிந்தன. பயந்த மனப்பான்மையோடு பார்ப்பவர்களுக்குக் கொள்ளிவாய்ப் பூதங்களே வாழும் பயங்கரமான தீவு ஒன்று மெல்ல மெல்ல கரையை நோக்கி நகர்ந்து வருவது போல் தோன்றியது. அப்போது அந்த கொள்ளை மரக்கலங்கள் இருந்த இடத்தில் இருந்து கரையை நெருங்க எவ்வளவு காலமும் என்னென்ன முயற்சிகளும் தேவை என்பவற்றையும் அனுமானம் செய்து தான் கரையிலே செய்திருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் ஒப்பு நோக்கிச் சிந்தித்த பின்பு தான் தலைநகருக்குப் போய்விட்டு வர அவகாசம் இருப்பதைத் தெளிந்தான் குமரன். கொடுங்கோளூரிலிருந்து வஞ்சிமா நகரத்துக்குப் பயணம் செய்யும் வேளையில் வாயு வேகமாகப் பறக்கும் புரவி மீது அமர்ந்திருந்தாலும் மனம் அமைதி இழந்திருந்தது. சேரநாட்டுப் பேரமைச்சர் அழும்பில்வேள் என்ன கட்டளையிடுவாரோ - எவ்வெவ்வாறு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யச் சொல்வாரோ என்றெல்லாம் சிந்தித்துக் கொண்டே சென்றபடியினால் பயணத்தில் நினைவு அழுந்திருக்கவில்லை. முன்னால் சென்ற தூதர்களான வலியனும், பூழியனும் அமைச்சர் பெருமானிடம் என்ன கூறியிருப்பார்களோ என்ற தயக்கமும், அச்சமும்கூடக் குமரனிடம் இருந்தது. பேரரசரும் பெரும் படைத்தலைவரும் கோ நகரிலிருக்கும் சமயமாயிருந்தால் இப்படி அமைச்சர் பெருமான் தன் வரைக்கும் கீழிறங்கிக் கட்டளையிடத் துணிந்திருக்க மாட்டார் என்பதைக் குமரன் உணர்ந்துதான் இருந்தான்.