பிரியாவுக்கு கோலம் என்றால் ரொம்பப் பிடிக்கும். தாழ்வாரத்தில் அமர்ந்து மணிக் கணக்காய் நட்சத்திரப் புள்ளிகளைச் சுற்றிக் கற்பனைக் கோலம் போட முயன்று கொண்டு இருப்பாள்.
பிரியாவின் தாயார் ஒரு இசைக் கலைஞர். சங்கீதம் பாடவும் வீணை வாசிக்கவும் மிகவும் விரும்புவார். பிரியா தன் அம்மாவின் இசையை ரசித்துக் கேட்பாள். அவர் மிக நேர்த்தியான கோலங்கள் போடுவார். ஆனாலும், அம்மாவின் கோலப் பொடிகளைப் பயன்படுத்த, பிரியாவுக்கு தடை விதித்திருந்தார்.
தீபாவளி நெருங்கிக் கொண்டு இருந்தது. பிரியாவின் அம்மா இனிப்புகள் செய்து கொண்டு இருந்தார். பிரியா, அம்மாவிற்கு ஏதாவது ஒரு வண்ண மயமான பரிசு தர வேண்டும் என்று நினைத்தாள்.
முதலில், அகமது மாமா கடைக்கு சென்று தன் செல்ல அம்மாவுக்கு ஒரு குர்த்தா வாங்க வேண்டும் என்று நினைத்தாள். "மாமா, இந்த பர்ப்பிள் குர்த்தா என்ன விலை?" என்று ஆசையாக கேட்டாள். விலை 1200 ரூபாய் என்றவுடன் கவலையோடு அங்கிருந்து வந்து விட்டாள்.
பிறகு, ஒரு மாமரத்தைப் பார்த்தாள். அம்மாவிற்கு மாம்பழம் பறித்துத் தர நினைத்தாள். மரத்தின் முதல் கிளையில் ஏறி முடிந்த வரை முயற்சித்தாள். ஒரு பழம் கூட அவள் கைக்கு எட்டவில்லை. கவலையோடு அங்கிருந்தும் நடந்தாள்.
தீபாவளியும் வந்துவிட்டது. பிரியா இன்னும் அம்மாவிற்கு எந்த பரிசும் தேர்வு செய்யவில்லை. பிரியாவின்அண்ணன் ராகுல், நான் என் நண்பர்களுடன் காஷ்மீர் போனபோது அம்மாவுக்கு ஒரு புடவை வாங்கி வந்தேன் என்று பெருமையாய் காட்டினான். பிரியாவுக்கு இன்னும் அதிக கவலையாக இருந்தது.
திடீரென்று ஒரு யோசனை. தோட்டத்தில் கொட்டிக் கிடந்த பல வண்ண மலர்களைக் கொண்டு வந்து அத்தையோடு சேர்ந்து ஒரு கோலம் போட்டாள். "அம்மா, அம்மா, சீக்கிரம் வா !" என்று கத்தினாள். கோலத்தை பார்த்து ஆனந்தக் கண்ணீரோடு கட்டி பிடித்துக் கொண்டார் அம்மா. "கண்ணே, இனி நீ என் வண்ணக் கோலப் பொடிகளை எல்லாம் பயன்படுத்தலாம்" என்றார். பிரியா மகிழ்ந்தாள்.
உற்சாகமாக, பிரியா புத்தாடை அணிந்து தீபாவளி விளக்குகள் ஏற்றினாள். அண்ணன் பரிசளித்த புது சேலையை அம்மா அணிந்திருந்தார். அப்படியே கோலத்தை மகிழ்சியாக பார்த்துக் கொண்டு இருந்தார். பிரியா " இனிய தீபாவளி" என்று கத்தினாள்.