“பார்வதி, இன்று என்ன தேதி என்று பார்த்தாயா?” வாழைப்பழ விவசாயியான சிருங்கேரி சீனிவாசன் தன் மனைவியிடம் உரத்த குரலில் கேட்டார்.
“இன்று என்னுடைய வருடாந்திர முடி வெட்டும் நாள். எனது வேண்டுதலை நிறைவேற்ற இன்று நான் கண்டிப்பாக முடி வெட்டியே ஆக வேண்டும்!”
“ஐயோ, என்னிடம் உதவி என்று வந்துவிடாதீர்கள்!” பார்வதம்மா உறுதியாகக் கூறிவிட்டார்.
“என்னுடைய வேலைப்பளு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது, தெரியும்தானே. சமையல் வேலை, வீட்டைச் சுத்தம் செய்வது, தோட்ட வேலை. இது போதாதென்று குழந்தைகளுக்கு பாடம் வேறு சொல்லிக் கொடுக்க வேண்டும். இவ்வளவு நீளமான முடியை வெட்ட இன்று கண்டிப்பாக எனக்கு நேரம் இல்லை”
“நீ ஏன் எனக்கு உதவி செய்ய வேண்டும்?” என்று சிருங்கேரி குழம்பினார். “வழக்கம் போல நமது பீமண்ணாவிடமே சென்று வெட்டிக் கொள்கிறேன்.”
ஓ! இப்போது தான் அவருக்கு ஞாபகம் வந்தது. இந்த கோவிட்-19 காரணமாக பீமண்ணாவின் முடிதிருத்தும் கடை மூடப்பட்டிருக்கிறதே. எல்லா இடங்களிலும் ஊரடங்கு அமலில் இருக்கிறது. அண்டை வீட்டு ஷிவண்ணாவின் மாமாவுக்கு நோய்த் தொற்றியிருப்பதால் அவரது குடும்பம் தனிமைப்படுத்தப் பட்டிருக்கிறது.
சார்ஸ்-கோவிட்-2 என்கிற கண்ணுக்குத் தெரியாத ஒரு சிறிய வைரஸ் காரணமாக இந்த கிராமம், இந்த நாடு, ஏன் இந்த உலகம் மொத்தமுமே துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. மிக மிக ஆபத்தான வைரஸ் இது. இதனால் உலகம் முழுக்க எத்தனையோ பேர் நோய்வாய்ப் பட்டிருக்கிறார்கள்.
சிருங்கேரி சீனிவாசன் மெல்ல தன் வீட்டு வாசலிலிருந்து தலையை நீட்டி எட்டிப் பார்த்தார். சாலையில் ஒரு ஈ, காக்காய் கூட இல்லை. தூரத்தில், மூடப்பட்டிருக்கும் முடிதிருத்தும் நிலையம் தெரிந்தது.
சிருங்கேரியின் பிரபலமான சிடுசிடுப்பு மெல்ல அவரது முகத்தில் தோன்றியது. “ஹூம்ம்ம்!” என்று உறுமினார். “ஒரு சின்னஞ்சிறு வைரஸ் எனது வேண்டுதலுக்கு இடைஞ்சலாக இருப்பதா? நடக்கவே நடக்காது. கேட்டீர்களா?” அவர் குழந்தைகளை நோக்கி கர்ஜித்தார். அவர்கள் பயத்தில் ஓடி ஒளிந்து கொண்டார்கள். “ஒருபோதும் நடக்காது.”
அவர் அலைபேசியை எடுத்து பீமண்ணாவை அழைத்தார்.
“எனதருமை நண்பரே, எப்படி இருக்கிறீர்கள்? இன்று என்னுடைய வருடாந்திர முடி வெட்டும் நாள். ஞாபகம் இருக்கிறதா? சென்ற வருடம் போல, இந்த வருடமும் நீங்கள் எனக்கு உதவி செய்ய வேண்டும். செய்வீர்களா?”
அமைதியான குரலில் பீமண்ணாவிடமிருந்து பதில் வந்தது, “சிருங்கேரி அண்ணா, உங்களுக்கே தெரியும். இந்த நிலைமையில் என்னால் உங்களுக்கு உதவி செய்ய முடியாது என்று. இந்த ஊரடங்கு முடிவுக்கு வரும் வரை என்னால் ஒன்றுமே செய்ய முடியாது. அது நம் இருவருக்குமே ஆபத்து. அது மட்டுமல்ல நான் சட்டத்துக்குக் கட்டுப்பட்டு நடக்க நினைக்கிறேன். தயவு செய்து நீங்கள் வேறு ஏதாவது ஏற்பாடு செய்து கொள்ளுங்கள்.”
“ஐயோ நான் என்ன செய்வேன்? எனக்கு உதவ யாருமே தயாராக இல்லையே. அந்தப் புலியால் கூட இப்போது எனக்கு உதவி செய்ய முடியாது” என்று கதறினார் சிருங்கேரி.
(வருடாந்திர முடி வெட்டும் நாள் கதையில் வரும் புலியை தெரியுமா உங்களுக்கு?)
அப்போது, குட்டி உமா, கோபத்தில் இருக்கும் தன் அப்பாவின் முன் தைரியமாக வந்து நின்றாள்.
“அப்பா, இந்த ஊரடங்கு முடியும் வரை நீங்கள் ஏன் ஒரு புது சிகை அலங்காரம் முயற்சி செய்யக் கூடாது? நாங்கள் உதவுகிறோம்.”
உடனே குழந்தைகள் எல்லோரும் அவரைச் சூழ்ந்தனர். சிவா, இணையத்தில் புதிய வகை சிகை அலங்காரங்களைத் தேடினான். சங்கரி ஒரு நாற்காலியை அவரருகில் இழுத்துப் போட்டுக்கொண்டு கையில் சீப்பையும் கண்ணாடியையும் எடுத்தாள். குட்டி உமா எங்கிருந்தோ சில கொண்டை ஊசிகளையும் ரிப்பனையும் எடுத்து வந்தாள்.
சிருங்கேரியின் அடர்ந்து நீண்ட கேசத்தில் விதவிதமான சிகை அலங்காரங்களைச் செய்து பார்த்து மகிழ்ந்தனர் குழந்தைகள்.
அம்மாவும் அவர்களுக்கு உதவி செய்தார். வருடாந்திர முடிவெட்டும் நாளில் எப்போதும் போல சிடுசிடுப்பாக இல்லாமல் அமைதியாக இருக்கும் கணவரைப் பார்க்க அவருக்கும் மகிழ்ச்சிதான். இந்த ஊரடங்கு நாட்களிலேயே அவர்களது மகிழ்ச்சியான நாள் இதுவாகத்தான் இருக்கும்.
திடீரென்று சிருங்கேரி, நாற்காலியிலிருந்து குதித்து எழுந்தார். கொண்டை ஊசிகளும், ரிப்பனும், சீப்பும் நாலாப்புறமும் பறக்க, அவர் மகிழ்ச்சியில் கூச்சலிட்டார். “எனக்குத் தெரியும்! எனக்குத் தெரியும்! என்ன செய்யவேண்டுமென்று எனக்குத் தெரியும்!”
சிருங்கேரி சீனிவாசன் வீட்டிலிருந்து வெளியே வந்தார். கதவைத் திறந்துகொண்டு வீதிக்கு ஓடினார். அவரது குடும்பத்தினரும் ஒருவர் பின் ஒருவராக அவர் பின்னாடியே ஓடிவந்தனர்.
“கடவுளே! என்னைக் காக்கும் தெய்வங்களே!” அவர் வானத்தை நோக்கி கையைக் கூப்பி வேண்டினார். “நான் ஒரு வழி கண்டுபிடித்துவிட்டேன்.”
சிருங்கேரி சீனிவாசனின் கூச்சல் கேட்டு கிராமத்து மக்கள் அனைவரும் வீட்டிலிருந்து எட்டிப் பார்த்தனர். இளைஞர்கள் முகக்கவசம் அணிந்து வெளியே வந்தனர். பசுக்கள் ஒன்று கூடின. குரங்குகள் மரங்களிலிலிருந்து தாவித்தாவி அருகில் வந்தன. பறவைகள் தாழ்ந்து பறக்கத் துவங்கின. நாய்கள் காதுகளை நிமிர்த்தி கவனித்தன.
எத்தனையோ வாரங்கள் கழித்து கிராமத்தில் சுவாரசியமாக ஏதோ ஒன்று நடக்கிறது என்று எல்லோருக்கும் ஆர்வம் தாங்க முடியவில்லை.
“கடவுளே, இதே தேதியில் ஒவ்வொரு வருடமும் நான் முடி வெட்டிக்கொள்வேன் என்று உங்களுக்கு சத்தியம் செய்திருந்தேன். இதுநாள் வரை எப்பாடுபட்டாவது என்னுடைய வேண்டுதலை நான் நிறைவேற்றி வந்திருக்கிறேன். ஒருமுறை, ஒரு புலியின் உதவியுடன் கூட நிறைவேற்றியிருக்கிறேன்.”
“ஆனால் இந்த வருடம் வைரஸ்-கிய்ரெஸ் என்று ஏதேதோ வந்து என்னால் முடி வெட்டிக்கொள்ள முடியவில்லை. உங்களுக்குப் புரியுமென்று நினைக்கிறேன்.” சிருங்கேரி கடவுளிடம் தன் நிலைமையை விளக்கினார்.
“அதனால், கடவுளே, நான் உங்கள் முன் இப்போது ஒரு புதிய சத்தியம் செய்கிறேன். நம்முடைய விஞ்ஞானிகள் இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் வரை நான் முடி வெட்டிக்கொள்ளவே மாட்டேன். இது சத்தியம், சத்தியம், சத்தியம்!”
“என்னுடைய ஒன்றுவிட்ட சகோதரனின் கிராமத்தில் இருக்கும் இராஜ நாகத்தை விட என்னுடைய முடி நீளமாக வளர்ந்தாலும்… ஏன், அதையும் விட... அதையும் விட...”
“அம்மாவின் புடவையை விட நீளமாக...” என்று எடுத்துக்கொடுத்தாள் சங்கரி.
“ஆம்! அவ்வளவு நீளமாக வளர்ந்தாலும் கூட. நம்முடைய விஞ்ஞானிகளின் முயற்சி வெற்றி பெறும்வரை நான் முடி வெட்டிக்கொள்ளவே மாட்டேன். அவர்களுக்கு உதவி செய்ய நன்கொடை கூட தரப்போகிறேன்.” சிருங்கேரி தன் நெஞ்சில் கைவைத்து சத்தியம் செய்தார்.
மொத்த கிராமமும் இதை வரவேற்று கைதட்டியது.
திடீரென்று யாரோ மேளம் இசைக்கத் துவங்கினர். பைரப்பா பாடத் தொடங்கினார். குழந்தைகள் மகிழ்ச்சியில் ஆடத் தொடங்கினர். ஆனாலும் அவர்கள் எல்லோரும் கவனமாக ஒருவருக்கருகே ஒருவர் வராமல் பார்த்துக்கொண்டனர். வைரசிடமிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டுமல்லவா?
எஸ்.எஸ். தோட்டத்தின் வாழைப்பழ அல்வா ஏற்கனவே மக்கள் மத்தியில் மிகப் பிரபலமாகியிருந்தது. மியாவ் மியாவ் என்று பூனைக்குட்டியைப் போல சத்தமிடும் பசு லக்ஷ்மியும் கூட எல்லோருக்கும் செல்லப் பிள்ளை ஆகியிருந்தாள்.
ஊரடங்கு சிறிது தளர்த்தப்பட்ட பின் சிருங்கேரியின் அரிய, நீளமான கூந்தலைப் பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கினர்.
சிருங்கேரியைப் பார்த்து அந்த கிராமத்தில் பலரும் முடியை நீளமாக வளர்க்கத் தொடங்கினர்!
“கடவுளே, சீக்கிரமாகவே நமது விஞ்ஞானிகள் இதற்கு ஒரு மருந்து கண்டுபிடித்தால் நல்லது.” கோவில் வாசலில் நின்று பார்வதம்மா வேண்டிக்கொண்டார்.
“என்னுடைய ஆசையும் அதுதான்.” முடிதிருத்தும் பீமண்ணாவும் மனதிற்குள் இரகசியமாக நினைத்துக் கொண்டார்.
பெருந்தொற்று என்றால் என்ன? உலகம் முழுவதும் அதிவேகமாகப் பரவக்கூடிய நோயை “பெருந்தொற்று” என்பார்கள்.
பாதுகாப்பாக இருப்பதும், கோவிட்-19 பரவாமல் தடுப்பதும் எப்படி? வீட்டிலேயே இருப்பது | வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிவது | சோப்பினால் கைகளைக் கழுவுவது
1. வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த மூக்கையும் வாயையும் மூடும்படி முகக்கவசம் அணியவேண்டும். மேலே உள்ள படத்தில் யார் முகக்கவசத்தைத் தவறாக அணிந்துள்ளார்கள், சொல்லுங்கள்? 2. இவற்றில் எதை நாம் செய்யவே கூடாது? சாலையில் எச்சில் துப்புதல் | சோப்பினால் கைகளை அடிக்கடி கழுவுதல் | தும்மும்போது முழங்கையால் முகத்தை மறைத்தல்3. பக்கம் 16இல் சிருங்கேரிக்கும் தெருவிலிருக்கும் நபருக்கும் இருக்க வேண்டிய இடைவெளி எவ்வளவு? 1 மீ, 10 மீ, 0 மீ.விடைகள்: 1. பாடகர் பைரப்பா 2. சாலையில் எச்சில் துப்புதல் 3. குறைந்தபட்சம் 1 மீ.