varudaanthira thalaimudi vettum naal

வருடாந்திர தலைமுடி வெட்டும் நாள்

சிருங்கேரி ஸ்ரீநிவாஸுக்கு நீண்ட தலைமுடி. வருடாந்திர தலைமுடி வெட்டும் நாளன்று அவர் தனது தலைமுடியை வெட்ட நினைத்தார். ஆனால் எல்லோருமே அன்றைக்கு தங்களது வேலையில் மும்முரமாக இருந்தனர். யார் கடைசியில் அவருக்கு உதவினார் என்று உங்களால் யூகிக்கவே முடியாது! படித்துப் பார்த்து மகிழுங்கள்!

- Ranjani Narayanan

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

இன்றைக்கு சிருங்கேரி ஸ்ரீநிவாஸுக்கு வருடாந்திர தலைமுடி வெட்டும் நாள்.

உள்ளூர்  முடி திருத்துபவரிடம் (நாவிதர்) செல்வதற்காக வீட்டை விட்டு கிளம்பினார்.

ஆனால் அவர் சொன்னார்: ' இன்றைக்கு எனக்கு இத்தனை நீண்ட  தலைமுடியை வெட்ட நேரமில்லை' என்று.

ஸ்ரீநிவாஸ் வருத்தத்துடன் தன் மனைவியிடம் உதவி கேட்கலாம் என்று

வீட்டிற்குத் திரும்பினார்.

ஆனால் மனைவி சொன்னார்:  ' இன்றைக்கு எனக்கு இத்தனை நீண்ட  தலைமுடியை வெட்ட நேரமில்லை' என்று.

கொஞ்சம் கோபத்துடன் சிருங்கேரி ஸ்ரீநிவாஸ் தன் நண்பரான தையற்காரரிடம் சென்றார்.

ஆனால் தையற்காரர் சொன்னார்:  ' இன்றைக்கு எனக்கு இத்தனை நீண்ட  தலைமுடியை வெட்ட நேரமில்லை' என்று.

சற்றே கவலையுடன் சிருங்கேரி ஸ்ரீநிவாஸ் தனது இன்னொரு நண்பர் மர வேலை செய்பவரிடம் (தச்சர்) சென்றார்.

ஆனால் அவர் சொன்னார்:  ' இன்றைக்கு எனக்கு இத்தனை நீண்ட  தலைமுடியை வெட்ட நேரமில்லை' என்று.

பாவம், சிருங்கேரி ஸ்ரீநிவாஸ். இன்று - வருடாந்திர தலைமுடி வெட்டும் நாளன்று - அவரது தலைமுடியை யாரும் வெட்ட மாட்டார்கள் போலிருக்கிறது.

தனியாக, அழுதுகொண்டே அவர்  கிராமத்தை தாண்டி  காட்டை நோக்கி நடந்தார்.

ஒரு குகை அருகே உட்கார்ந்துகொண்டு வாய்விட்டு சத்தமாக அழுதார்.

'இன்றைய நாள் முடியப்போகிறது! இன்றைக்கு முடி வெட்டிக்கொள்வேன் என்ற எனது  வாக்குறுதியை நான் எப்படிக் காப்பாற்றப் போகிறேன்? ஓ! கடவுளே! உதவி செய்!'

குகைக்குள் அமைதியாக தூங்கிக் கொண்டிருந்த புலிக்கு வெளியேயிருந்து வந்த சத்தம் ரொம்பவும் தொந்திரவாக இருந்தது.

அது  உறுமிக் கொண்டே  வெளியே வந்து, சிருங்கேரி ஸ்ரீநிவாஸை பார்த்து   தனது  ராட்சத பாதங்களைத் தூக்கி அசைத்தது.

பாவம், சிருங்கேரி ஸ்ரீநிவாஸ்! புலியைப் பார்த்து பயந்ததில், ரொம்ப பயந்ததில், ரொம்ப ரொம்ப பயந்ததில்................என்ன  ஆயிற்று, தெரியுமா?

அவரது தலையில் இருந்த முடிகள் எல்லாம் கொட்டிவிட்டன!

சிருங்கேரி ஸ்ரீநிவாஸ் காட்டிலிருந்து தனது கிராமத்திற்கே திரும்ப ஓடி வந்தார்.

புலியும் தன் தூக்கத்தை  தொடர்ந்தது.

இப்போ, சிருங்கேரி ஸ்ரீநிவாஸ் நீண்ட நாளைக்கு தன் தலைமுடியை வெட்டத் தேவை இல்லை.