vazhikaattum natchathiram

வழிகாட்டும் நட்சத்திரம்

நைனாவும் மாதவும் தங்களுடைய கருத்து வேறுபாட்டுக்கு விண்வெளியில் சென்று தீர்வு தேடலாமென முடிவெடுக்கிறார்கள். அங்கு, சாப்பிடுவதை நிறுத்த முடியாத ஒற்றைக் கொம்புக் குதிரையில் இருந்து அழுவதை நிறுத்தமுடியாத டிராகன் வரை பல புதுமையான உயிரினங்களைச் சந்திக்கிறார்கள். யார் இந்த ஜொலிக்கும் அதிசய உயிரினங்கள்? இரவு வானின் நட்சத்திரக் கூட்டங்களை அறிமுகப்படுத்தும் ஒரு விண்வெளி சாகசக் கதை.

- Veronica Angel

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

நிலா எதனால் ஆனதென்று நைனாவுக்கும் மாதவுக்கும் இடையில் ஒரே வாக்குவாதம். ஒருவர் சொல்வதை இன்னொருவரால் ஒத்துக்கவே முடியலை. “வேற்றுக் கிரகவாசி வந்து போட்டுட்டு போன முட்டைதான் நிலா” என்று நைனா கூற…

“இல்ல இல்ல.. பாலாடைக்கட்டியில செஞ்ச பந்துதான் நிலா” என்று மாதவ் மறுத்தான்.

அதனால் இருவரும் சேர்ந்து நிலா எதனால் ஆனதென்று கண்டுபிடிக்க முடிவு பண்ணினார்கள்.

“ஆனா இராத்திரி சாப்பாட்டு நேரத்துக்குள்ள நாம எப்படியாவது திரும்பி வந்தாகணும். இல்லன்னா அம்மாவோட கோபம் எதுனால ஆனதுன்னு தெரிஞ்சுக்க வேண்டியதாகிடும்” என்று மாதவ் எச்சரித்தான்.

சரியாக பதினொரு நிமிடங்களில் இருவரும் வழிதவறிவிட்டார்கள்.

“நிலாவுக்கு எப்படிப் போகணும்?” என்று அங்கிருந்த ஓர் ஒளிரும் ஒற்றைக் கொம்புக் குதிரையிடம் வழி கேட்டார்கள். “ஆமா, நீ மட்டும் எப்படி இவ்வளவு பளபளன்னு மின்னுற? கொஞ்சம் சொல்லேன்?” “சரி... உனக்காவது நிலா எதனால ஆனதுன்னு தெரியுமா?” “நீ எதனால ஆன?”

மாதவும் நைனாவும் மாறிமாறி கேட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல அந்த ஒற்றைக் கொம்புக் குதிரைக்கு சுத்தமாக நேரமே இல்லை. ஏனென்றால்... கருக்.. முறுக்.. புளுக்! “நான் சாப்பிடுறத நிறுத்திட்டேன்னா என்னால ஒரு அழகான காண்டாமிருகமா மாறவே முடியாம போயிடும்” என்றது. நைனாவும் மாதவும் அடுத்த கேள்வி கேட்பதற்குள் தூரத்தில் யாரோ தேம்பித்தேம்பி அழும் சத்தம் கேட்டது. ஐய்ய்ய்ய்யோ! ஆய்யியியி!

“எனக்கு ஐய்யோன்னு இருக்கு. இங்கயே வாழ்க்க முழுக்க சிக்கிக்க போறேனா? இங்கிருந்து தப்பிக்க வழியே இல்லையா?” என்று அந்த குரல் புலம்பியது. “கொஞ்சம் உன் அழுகைய நிறுத்துறியா?” என வேறொரு குரல் உறுமியது. “யாருக்கோ நம்ம உதவி தேவைப்படுதுன்னு நினைக்குறேன்” என்று நைனா கூற... “அப்போ நாம அவங்கள காப்பாத்தி இந்த வானத்தோட வீரர்கள் ஆகிடலாம்” என்று மாதவ் பதில் அளித்தான். “வழியில அந்த அன்னப்பறவைக்கிட்ட ஜாக்கிரதையா இருங்க”  என்று எச்சரித்த ஒற்றைக் கொம்புக் குதிரை திரும்பவும் சாப்பிடுவதில் மும்முரமாகியது.

நைனாவும் மாதவும் ஓர் ஆச்சரியமான காட்சியைப் பார்த்தார்கள். அங்கே பூட்டப்பட்ட கோட்டை ஒன்றை, ஒரு கோபமான அரசி காவல் காத்துக்கொண்டு இருந்தார். அனல் கக்கும் டிராகன் ஒன்று அழுதபடி ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்துக்கொண்டு இருந்தது. “ஏன் இந்த டிராகன கடத்தி வச்சுருக்கீங்க?” என்று நைனா அரசியிடம் கேட்டாள். “ஏன்னா அவன் எதுக்கும் லாயக்கில்லாத ஒரு திருடன். நான் தூங்கிட்டு இருந்தப்போ என்னோட தலைமுடியைத் தூக்கிட்டுப் போயிட்டான். திருப்பிக் கொடுக்க மாட்டேங்குறான்” என்று அரசி ஆத்திரமாக பதிலளித்தார்.

“என்னால அரசியோட தலைமுடியைத் திரும்ப கொண்டு வர முடியாது. ஏன்னா அது ரொம்ப ஆபத்து” என்று டிராகன் அழுதது. நைனாவின் கண்கள் ஜொலித்தன. “எங்கெல்லாம் ஆபத்து இருக்குதோ அங்கெல்லாம் நிச்சயம் சாகசம் இருக்கும்!”“அப்புறம் ஒவ்வொரு சாகசத்துக்கும் தேவை ஒரு துணிச்சலான வீரன்!” என்று மாதவ் சொல்ல... “வீரர்கள்!” என நைனா திருத்தினாள். “கண்டிப்பா அந்தத் தலைமுடிய மீட்டுட்டு வருவோம்!” அந்த டிராகன் அரசியின் தலைமுடி இருக்குமிடத்தைச் சொல்ல சம்மதித்தது. ஆனால் அங்கே வர மறுத்துவிட்டது.

“அவ்வளவு பெரிய அனல் கக்கும் டிராகன் போயும் போயும் ஒரு அப்பாவி அன்னப்பறவைக்கா பயப்படுது?” என நைனா மாதவிடம் கேட்க... “அந்த அன்னப்பறவைக்கு அது திருட்டு முடின்னு தெரியாம கூட இருக்கலாம்” என்று மாதவ் பதிலளித்தான். “பேசாம அன்னப்பறவைக்கிட்டயே போய் தலைமுடிய திருப்பிக் கொடுக்க சொல்லி கேட்டுப் பாக்கலாம்” என்றாள் நைனா. ஆனால் அவர்களின் திட்டப்படி எதுவும் நடக்கவில்லை. உஸ்ஸ்ஸ்! படபடபட! படக்!

அந்த அன்னப்பறவை சிறகுகளை விரித்து அவர்களது விண்கலத்தைத் தாக்கியது. அப்புறம் அவர்களை அங்கேயும் இங்கேயுமாக வானத்தில் துரத்தியது. ஒருவழியாக அவர்கள் அன்னப்பறவையிடம் இருந்து தப்பி வருவதற்குள் நைனா, மாதவின் வயிறுகளும் பசியில் உரும ஆரம்பித்துவிட்டன. வானத்தில் இருந்த கடிகாரத்தைப் பார்த்ததும் இருவருக்கும் மூச்சே நின்றுவிடும் போல இருந்தது. “ஐய்யோ நேரமாச்சு நேரமாச்சு...” என மாதவ் படபடத்தான்.

விண்கலத்தின் எந்திரத்தை சுற்றவிட்டுப் புறப்பட்டார்கள். டிர்ர்ர்ர்ர்ர் உர்ர்ர் டிர்ர்ர்ர்ர்ர்! எந்திரம் நன்றாக சத்தம் போட்டபின் நின்றுவிட்டது. டிர்ர்ர்ர்ர் தடக் புஸ்ஸ்ஸ்ஸ்!

நைனாவும் மாதவும் பயத்தில் உறைந்து போய்விட்டார்கள். “போச்சு போச்சு! நாம நல்லா மாட்டிக்கிட்டோம்!” “இப்போ எப்படி வீட்டுக்குத் திரும்பி போறது?” “ஆயி ரொம்ப கோபமா இருப்பாங்க.” “எனக்கு வேற ரொம்ப பசிக்குது!” சுற்றிலும் மின்னிக் கொண்டிருந்த நட்சத்திரங்களின் உதவியை நாடினார்கள்.

அழுது அழுது, டிராகனுக்கு ஒரே மூக்கடைப்பு. அதனால் அதன் தீப்பிழம்பில் சவாரி செய்து போக முடியாது. பறக்கும் குதிரை தன் இறக்கைகள் இரண்டையும் உலர் சலவைக்கு அனுப்பி வைத்திருந்தது. எனவே குதிரையாலும் இவர்களை வீட்டில் விட முடியவில்லை. விண்வெளியிலேயே மிகப்பெரிய பலசாலிக்கும் கையில் எலும்பு முறிவு. அவராலும் இவர்களை வீட்டில் விட முடியாத சூழ்நிலை. “அவ்வளவுதான். நாம தொலஞ்சோம்!“ டிராகனுக்கு வேறு ஒரு யோசனை தோன்றியது.

இரண்டு குழந்தைகளும் ஒரு அம்பு மேல் ஏறிக்கொண்டனர். குதிரைக்கால் மனிதர் தன் கையில் வைத்திருந்த அந்த அம்பை கவனமாவும் துல்லியமாவும் நைனா – மாதவ் வீட்டு வாசலை நோக்கி குறி வைத்து எறிந்தார்.

“நிலா எதனால ஆனதுன்னு நாம கடைசிவரை கண்டுபிடிக்கவே இல்ல” என்று மாதவ் சொல்ல... “அது எதனால ஆனதா இருந்தா நமக்கென்ன? எனக்கு இப்போ நட்சத்திரங்கள் எல்லாம் எதனால ஆனதுன்னு தெரிஞ்சுக்கணும்” என்றாள் நைனா. கண்கள் மின்ன, அவள் அடுத்த சாகசத்துக்கு தயாராகிவிட்டாள்.

1

2

3

4

5

6

7

8

9

நட்சத்திர உருவகங்களைச் சந்தியுங்கள்.

1. மோனோசிரஸ் - ஒற்றைக் கொம்புக் குதிரை

2. டிராகோ - அனல் கக்கும் டிராகன்

3. கேசியோப்பியா – அரசி

4. பெரினசெஸின் முடி – அரசியின் தலைமுடி

5. சைக்னஸ் – அன்னப்பறவை

6. ஹோரோலோஜியம் – கடிகாரம்

7. பெகாசஸ் - பறக்கும் குதிரை

8. ஹெர்குலஸ் - பலசாலி மனிதன்

9. சாகிட்டேரியஸ் – குதிரைக் கால் மனிதர்

வானில் மின்னும் வடிவங்கள்:

நாம் வானத்தைப் பார்க்கும்போது தெரிகின்ற கற்பனை வடிவங்களை உருவாக்கும் நட்சத்திரக் கூட்டங்களைத்தான் கான்ஸ்டெலேஷன் என்று சொல்லுவோம்.

இருப்பதிலேயே பிரகாசமான நட்சத்திரங்கள் எல்லாம் சேர்ந்துதான் இந்த வடிவங்களை உருவாக்குகின்றன. மிருகங்கள், பொருட்கள், புராண மனிதர்கள், கடவுள்கள், உயிரினங்கள் மற்றும் பழங்காலத்து கதைகளில் வருகிற காட்சிகள், இப்படி எந்த சாயல்களில் வேண்டுமானாலும் இந்த வடிவங்கள் இருக்கலாம்.

1922ஆம் ஆண்டு, வானவியலாளர்கள் வானத்தை 88 நட்சத்திரக் கூட்டங்களாகப் பிரித்தனர்.

ஒவ்வொரு நட்சத்திரக் கூட்டமும் மிகவும் பயனுள்ளது. அவை வானத்தில் உள்ள நட்சத்திரங்களை மனிதன் அடையாளம் கண்டுகொள்ள உதவுகின்றன. பழங்காலத்தில் நட்சத்திரக் கூட்டத்தை கவனித்தும், பின்தொடர்ந்தும் மனிதர்கள் அதை நாட்காட்டியாக உபயோகித்தார்கள். அதை வைத்துதான் எப்போது விதைப்பது, எப்போது அறுவடை செய்வது என்று தெரிந்துகொண்டு செய்தார்கள். பயணிகளும் கப்பலில் போகும் மாலுமிகளும் நட்சத்திரக் கூட்டங்களையே தங்களுக்கு பாதைகாட்டும் வழிகாட்டியாக பயன்படுத்தினர்.

வானத்தில் இந்த வடிவங்களைத் தேடும்போது கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்படாதீர்கள். நட்சத்திரங்கள், நீங்கள் எதிர்பார்க்கும் அதே வடிவங்களில் இருக்காது. நட்சத்திர வடிவங்களைக் கண்டுபிடிக்க உங்களுக்கு வரைபடத்தின் உதவி தேவைப்படலாம்.