veedu tirumbiya kappal

வீடு திரும்பிய கப்பல்

பல்லவர் காலத்தில் பசவாவும் அவனுடைய சகோதரி சுந்தரியும், துறைமுக நகரமாகிய மாமல்லபுரத்தில் வசித்தனர். மாலுமியாக காம்போஜா சென்ற தங்கள் தந்தை கடல் பயணத்திலிருந்து இன்னமும் திரும்பி வராத காரணம் தெரியாமல் கவலையுடன் இருந்தார்கள். மாமல்லபுரத்து வியாபாரி ஒருவரின் மனைவி அவர்களுக்கு துறைமுகத்திற்குச் சென்று அவர்களுடைய தந்தையின் கப்பலைப் பற்றி விவரம் அறியுமாறு யோசனை சொன்னார். அவர்களும் சென்றனர். அங்கு தங்கள் மொழியறியாத வெளிநாட்டு மாலுமிகளின் மத்தியில் தாங்கள் இருப்பதை உணர்ந்தனர். அவர்களிடம் எந்த முறையில் தொடர்புகொண்டு தங்கள் தந்தையுடைய கப்பலைப் பற்றிய சேதியை அறிந்து கொண்டனர். எப்படி என்று தெரிந்து கொள்ள இந்த வேடிக்கையான சிறுகதையை படியுங்கள்.

- Mahalakshmi

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

பசவாவும் அவனுடைய சகோதரி சுந்தரியும் மணலில் உட்கார்ந்தபடி கடல் மேல் சூரியன் உதிப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தனர். மெல்ல மெல்ல வானம் சாம்பல் நிறத்திலிருந்து நீலமாகவும் மேகங்களின் விளிம்புகள் செம்மஞ்சள் நிறமாகவும் மாறின. தொலைவிலிருக்கும் கீழ்வானக் கோட்டில் வானம் கிண்ணம் போல் வளைந்து கடலைச் சந்திப்பதைப் போல் தோன்றியதை, இருவரும் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அவர்களின் தந்தை ஒரு மாலுமி. அவர் பல மாதங்களுக்கு முன்பு வணிகக் கப்பல் ஒன்றில் பயணம் புறப்பட்டார். சிறுவர்கள் வீடு திரும்புவதற்காக ஆவலுடன் காத்திருந்தனர். ஒவ்வொரு நாளும் சூரியன் உதிக்கும் நேரத்தில் இருவரும் கடற்கரையோரம் காத்திருந்து, தந்தையின் கப்பலின் உயரமான சிவப்பு பாய்மரம், கீழ்வானத்தில் தோன்றுகின்றதா என்று பார்த்து வந்தனர். அவர்கள் மாமல்லபுரம் என்ற துறைமுக நகரத்தில் வசித்ததால் அங்கு நிறைய கப்பல்கள் பல்வேறு தொலைதூர தேசங்களிருந்து வருவதுண்டு. அவை சுமந்து வந்த சரக்குகளும் அற்புதமானவை. பெரும் பெட்டிகளில் பட்டும் மட்பாண்டங்களும், சாடிகள் நிரம்ப மதுபானமும், நறுமணப் பொருட்களும், குதிரைகளும் கூடக் கொண்டுவரப்பட்டன. இந்தக் குழந்தைகளின் தந்தையின் கப்பல் கூட  சந்தனம், செடார் மரத்தின் கட்டைகள், மூட்டை மூட்டையாக அரிசி, நெய் மற்றும் மசாலாப் பொருட்களை ஏற்றிச் சென்றிருந்தது.

“நிறைய மாதங்கள் ஆகிவிட்டன” என்றாள் சுந்தரி, வருத்ததுடன். “அப்பா இவ்வளவு நாட்கள் நம்மை விட்டுச் சென்றதே இல்லை.” “சென்ற வாரம் அடித்த பெரும் புயல் ஞாபகம் இருக்கிறதா?” என்று பசவா கவலையுடன் கேட்டான். “கடலில் அலைகள் எவ்வளவு உயரமாக வந்தன! அப்பாவுடைய கப்பல் பத்திரமாக இருக்கும் என்று நம்புகிறேன்.”

“அங்கே பார், ஓரு கப்பல் வந்துகொண்டிருக்கிறது” என்று சுந்தரி உற்சாகமானாள். “ஆனால், அதன் பாய்மரம் கண்ணிற்குத் தெரியவில்லை.” அவர்கள் ஆவலுடன் பார்த்திருக்க, அக்கப்பல் கீழ்வானத்தில் தோன்றியது. சிறு புள்ளியாய்த் தெரிந்த அது, நெருங்கி வர வர, மெதுவாகப் பெரிதானது. முதலில் அதன் பாய்மரம் காற்றில் உப்பியது. பிறகு அதன் உயரமான கொடிமரங்களும் முகரியும் தெரிந்தன. ”இல்லை” என்றான் பசவா ஏமாற்றத்துடன். “அப்பாவுடைய கப்பலின் பாய்மரம் சிவப்பு நிறத்தில் இருக்கும். அதில் பறக்கும் கழுகு ஓன்று வரையப்பட்டிருக்கும். இதன் பாய்மரமோ பச்சையும் கருப்புமாய் இருக்கிறது.” ஏமாற்றத்தோடு இருவரும் வீடு திரும்ப முடிவு செய்தனர். அவர்களின் தாயார் வைத்திருந்த காய்கறிக் கடையில் அவர்களுக்கு வேலை காத்துக்கொண்டிருந்தது. அவர்களின் தந்தை அடிக்கடி வீட்டில் இல்லாதிருப்பதால், அவர் கொடுத்துச் செல்லும் பணம் அவர் சென்ற சில நாட்களில் தீர்ந்துவிடும்.

அதனால் அவர்களின் தாய் சந்தையில் காய்கறிகள் விற்றுச் சம்பாதித்து, மூவரும் சாப்பிடுவதற்கு வழி செய்துவந்தார்.

காய்கறிக் கடையில் வேலை செய்வது சுந்தரிக்கும் பிடித்தமானது. சந்தையே ஓரு சுவாரசியமான இடம்தான்! பெரும்பாலும் அவர்களின் வாடிக்கையாளர்கள் வெளிநாட்டவராக இருந்தனர். சிலருக்கு வெளுத்த தோலும், சிறிய சற்றே சரிந்த கண்களும் இருந்தன; சிலருக்குக் கருமையான தோலும், சுருட்டை முடியும் இருந்தன. அவர்களின் ஆடைகளும் ஆபரணங்களும் வித்தியாசமாகவே இருந்தன. அவர்கள் பேசும் மொழிகளோ சுந்தரிக்குப் புரியவே புரியாது!

அன்று காலை பசவா கீரைக் கட்டுகளையும் முட்டைக்கோசுகளையும் அடுக்கிக் கொண்டிருக்கும்போது, வழக்கமான வாடிக்கையாளர் ஒருத்தி காய்கறி வாங்குவதற்கு வந்தாள். ஒரு வியாபாரியின் மனைவி அவள்.

அவளது கணவன் அடிக்கடி வெளிநாடுகளுக்கு வாசனைத் திரவியங்களைக் கப்பல்களில் ஏற்றுமதி செய்பவன். மாமல்லபுரத்தில் வந்து போகும் கப்பல்களைப் பற்றி அனைத்தும் அவளுக்கு அத்துப்படி. முள்ளங்கியையும் பீன்சையும் பொறுக்கியெடுத்தபடி “உங்கள் அப்பாவைப் பற்றி ஏதேனும் தகவல் உண்டா?” என்றாள் அவள். சுந்தரி வருத்தத்துடன் தலையை ஆட்டினாள். “நீங்கள் தோணித்துறையில் ஏன் கேட்கக்கூடாது? அங்குதானே எல்லாக் கப்பல்களும் நிறுத்தப்படுகின்றன” என்றாள் அவள். “என்னவென்று கேட்பது?” என்று பசவா ஆவலுடன் முன்னே சாய்ந்தான்.

“உங்கள் தந்தையின் கப்பலை இங்கே வரும் வழியில் பார்த்தார்களா என்று மாலுமிகளிடம் கேட்கலாமே? என்னுடைய கணவரின் கப்பல்கள் தாமதமாக வரும்போது அவர் பலமுறை இவ்வாறு கேட்டறிந்திருக்கிறார்.” அன்று மதியம், குழந்தைகள் முக்கியத் தோணித்துறையை நோக்கிச் சென்றார்கள். சந்தை வழியே சென்று, கடலுக்குச் செல்லும் வீதியில் நடந்தனர். வழியிலே ஏற்றுமதிக்கான சரக்குகளை வியாபாரிகள் வைத்திருந்த பண்டக சாலைகளைப் பார்த்தனர்.

பண்டக சாலை ஒன்றில் கூலியாட்கள் மிளகு மற்றும் தனியா அடங்கிய மூட்டைகளை இறக்கி வைத்துக்கொண்டிருந்தனர். இன்னொன்றில், வண்ண வண்ண பருத்தித் துணிக் கட்டுகளை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி வைத்துக்கொண்டிருந்தனர்.

தோணித்துறையில் மூன்று கப்பல்கள் நங்கூரம் பாய்ச்சி நின்றிருந்தன. அவை தடிக்கயிறுகள் மூலம் கரையுடன் இணைக்கப்பட்டிருந்தன. இரண்டு கப்பல்கள் கடலில் காத்துக்கொண்டிருந்தன. சிறு தோணிகள் அங்கும் இங்கும் சென்றவண்ணமிருக்க, அதிலிருக்கும் படகோட்டிகள் பூக்கள், பழங்கள், மணிகள் மற்றும் வேலைப்பாடு கொண்ட மரச் சாமான்கள் என்று பல்வேறு பொருட்களை விற்றுக்கொண்டிருந்தனர்.

அங்கு நிறுத்தியிருந்த கப்பல்களில் காலையில் பார்த்த பச்சையும், கருப்பும் கொண்ட பாய்மரத்துடன் வந்த நங்கூரம் பாய்ச்சியிருந்தது. சாமான்கள் ஏற்றப்படும் கப்பல் ஒன்றை நோக்கிச் சென்றனர். அதை நெருங்கும்போது, ஈட்டி ஏந்திய வீரன் ஒருவன் அவர்களைத் தடுத்தான். “நில்லுங்கள்! எங்கு செல்லுகிறீர்கள் என்று தெரிகிறதா?” என்று சத்தம் போட்டான். “ராஜ அனுமதியின்றி இக்கப்பலில் ஏறக் கூடாது.”

“அனுமதியா?” குழம்பினாள் சுந்தரி, “ஏன்?”

“ஏனெனில் இது அரசின் கப்பல், அசட்டுப் பெண்ணே!” “இது அரசின் கடற்படையைச் சேர்ந்தது என்றா நீங்கள் கூறுகிறீர்கள்?” என்றான் பசவா. ஆச்சர்யத்தில் அவன் கண்கள் விரிந்தன. “நாம் போரிடப் போகிறோமா?” “இல்லை இல்லை! இது ஒரு வணிகக் கப்பல். மாமன்னர் நரசிம்மவர்மனுடைய பல கப்பல்கள் வெகுதூரமுள்ள நாடுகளில் வியாபாரத்திற்கு பயன்படுகின்றன. இந்தக் கப்பல் வடக்கே இருக்கும் தாமரலிபிதி எனும் துறைமுகத்திற்குச் செல்கிறது.”

“நாங்கள் தேடுவது காம்போஜ நாட்டிலிருந்து வந்து இருக்கும் கப்பல்...” என்று சுந்தரி தயக்கத்துடன் பேசத் தொடங்கினாள்.

“எங்கள் தந்தை ஒரு மாலுமி. அவர் காம்போஜா நாட்டுக்குச் சென்று பல மாதங்கள் ஆகிவிட்டன. அவரது கப்பலைப் பார்த்தீர்களா என்று இந்த மாலுமிகளைக் கேட்கவேண்டும்.”

“காம்போஜாவா?” என்று கேட்டான் வீரன். பிறகு கருப்பும் பச்சையும் கொண்ட பாய்மரக் கப்பலைக் காண்பித்துச் சொன்னான் “அந்தக் கப்பல் அங்கிருந்துதான் வந்திருக்கிறது.”

பசவாவும் சுந்தரியும் அக்கப்பலை நோக்கி ஓடிச் சென்றனர். அதன் பாலப் பலகையைத் தாண்டி கப்பலின் மேல் தளத்திற்கு ஏறிச் சென்றனர். அங்கிருந்த எல்லா மாலுமிகளும் வெளிநாட்டவர்களாகவே இருந்தனர். அவர்கள் பேசிக்கொண்டிருந்த மொழியும் புதிதாகவே இருந்தது.

“அடடா!” என்றான் பசவா பெருமூச்சுடன் “இவர்களுக்கு எப்படிப் புரியவைப்பது?”

“சுலபம்தான்!” என்றாள் சுந்தரி சிரித்தபடி. “அம்மா இவர்களிடம் காய்கறி விற்கும்போது எப்படிப் பேசுவாரோ அப்படியே நாமும் பேசலாம்.”

சிரித்த முகம் கொண்ட ஏதாவதொரு மாலுமியைத் தேடி அவர்கள் சுற்றுமுற்றும் பார்த்தனர். கடைசியில் சுற்றிவைத்த கயிற்றுக் கத்தை மீது உட்கார்ந்திருந்த ஒரு மாலுமியிடம் சென்றனர்.

அவர் முதியவராகவும், கறுத்த, வெய்யிலால் காய்ந்து சுருங்கிய முகமுடையவராகவும் இருந்தார். அவரது சுருங்கிய கண்களைச் சுற்றி ஆழ்ந்த வரிகள் இருந்தன. தொள தொள கால்சராயும் கையில்லா சட்டையும் பளிச்சென்ற வளையல்களும் தோடுகளும் அணிந்திருந்தார்.

“காம்போஜா?” என்றாள் சுந்தரி தயங்கியபடி. அம்முதியவர் சந்தோஷமாய்த் தலையாட்டினார், “காம்போஜா!”

பசவா பாய்மரத்தைச் சுட்டிக்காட்டி, சுந்தரியின் சிவப்புநிற பாவாடையையும் காண்பித்துக் கூறினான், “கப்பல்? சிவப்பு பாய்மரம்?” முதியவர் முகம் சுளித்துத் தலையை ஆட்டினார். சுந்தரி விளக்க முயன்றாள். கப்பலின் வெளிப்பக்கத்தைக் கையால் தட்டி “கப்பல்?” என்றாள். அவர் கடலைக் காட்டி அவரது மொழியில் ஏதோ கூறினார்.

“ஆமாம்! சிவப்பு நிறப் பாய்மரம் கொண்ட கப்பல். நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?” என்றாள் சுந்தரி உற்சாகத்துடன். அவரோ புருவத்தை நெறித்துத் தலையை ஆட்டினார்.

“எங்கள் அப்பா!” என்று சுந்தரி மீசை அணிந்த உயரமான மனிதரைப்போல் அபிநயம் புரிந்தாள்.

“ஓ!” என்றார் அந்த வயதான மாலுமி, கைகளை விரித்துப் பறவை பறப்பதைப்போல் செய்தார்.

“ஆமாம்!” என்று குதித்துக் கூச்சலிட்டார்கள் சிறுவர்கள். “அதன் பாய்மரத்தில் பறக்கும் கழுகு வரைந்திருக்கும்.”

சிரித்துகொண்டே மாலுமி அவர்களின் கையைப் பிடித்து கப்பலின் மறுபகுதிக்கு அழைத்துச் சென்றார். பின்னர் கீழ்வானத்தைக் காட்டினார். அங்கு சிவப்பு நிறப் பாய்மரம் காற்றில் பெருமையுடன் வீச, ஒரு கப்பல் மெதுவாக அவர்களை நோக்கி மிதந்து வந்துகொண்டிருந்தது. பசவாவும் சுந்தரியும் பேச்சற்று நின்றனர்! அப்பா அவர்கள் கண்ணெதிரே, அவர்களுக்கு பழக்கப்பட்ட உயரமான கொடிமரங்கள், வளைந்த பாய்மரக் கம்பம், பறக்கும் கழுகுகள் வரையப்பட்ட சிகப்பு பாய்மரம்…

“உங்கள் அப்பா மாலுமியா?” என்று அவர் மென்மையாக அவர்களது மகிழ்ச்சிமிகுந்த முகங்களைப் பார்த்துக்கொண்டே கேட்டார். “அந்தக் கப்பலில்தான் இருக்கிறாரா?” “ஆ!” என்று சிறுவர்கள் அதிசயித்து அவரைப் பார்த்தனர்.

“நீங்கள் எங்களின் மொழி பேசுகிறீர்கள்!” என்றாள் சுந்தரி. “கொஞ்சம் கொஞ்சம்” என்று சிரித்தார் பெரியவர். ”நான் மாமல்லபுரத்திற்கு அடிக்கடி வருவதுண்டு. ஆனால் நீங்கள் செய்த அபிநயம் எனக்கும் மிகவும் பிடித்தது, குறிப்பாக உயரமான, மீசை அணிந்த மனிதர் என்று காண்பித்த விதம் அருமையாக இருந்தது.”

பசவாவும் சுந்தரியும் அவர்களுடைய மாலுமித் தோழருக்குப் பல புது வார்த்தைகள் கற்பித்தனர், வீடு திரும்பும் கப்பலை எதிர்நோக்கி தோணித்துறையில் மகிழ்ச்சியோடு நின்றனர்.

1. பசவாவும் சுந்தரியும் 1200 ஆண்டுகளுக்கு முன்னே மாமன்னன் நரசிம்ம வர்மனின் நாட்டில் வசித்தனர். அவர் பல்லவ அரசர்களில் ஒருவர். பல்லவ நாடு இன்றைய தமிழ்நாட்டின் எல்லை முழுவதுமாய்ப் படர்ந்திருந்தது.

2. மாமல்லபுரம் என்ற ஊர் சென்னைக்கு அருகே உள்ளது. கோவில்களுக்கு அது பெயர் பெற்றது. ஒரு காலத்தில் துறைமுகமாக இருந்த அவ்வூரிலிருந்து, காம்போஜா, பர்மா, இந்தோனேசியா போன்ற தொலைதூர நாடுகளுக்கு கப்பல்கள் அனுப்பப்பட்டன. காம்போஜா என்று இன்றைய கம்போடியாவைக் கூறுவார்கள். தாமரலிபிதி என்ற துறைமுகம் வங்காளத்தில் இருந்தது.

3. பல்லவர்கள் காலத்துப் பள்ளிகளில் குழந்தைகள் என்ன படித்தார்கள்? கணிதம், பகுத்தறிவு, சட்டம், இலக்கணம், பொருளியல், வானியல், தத்துவம், வேதங்கள், மற்றும் அரசியல்.

4. பெண்கள், குறிப்பாக மேலிடத்தவர்கள், கல்வி கற்றவர்களாக இருந்தனர். ஆனால் அவர்கள் வேதங்கள் படிப்பதற்குத் தடை இருந்தது.

5. பல்லவ நாட்டு மக்கள் முடியில் வர்ணங்கள் இட்டுக்கொள்வதுண்டு. கூந்தலுக்கு வாசனைத் தைலமும், நறுமணப் பொருட்களும் உபயோகிப்பதுண்டு. அவர்கள் சாப்பாட்டுக்குப் பிறகு பல்குச்சி உபயோகிப்பதும் உண்டாம்.