veedu

வீடு

ஹசீனாவும் அவள் குடும்பமும் மிகவும் மகிழ்ச்சியாக அவர்களின் மழைக் கிராமத்தில் வாழ்ந்து வந்தார்கள். அவர்களுடைய வாழ்க்கையில் திடீரென புயல் அடித்தது. ஹசினாவும் அவள் அம்மாவும் நடைபெற்றுக் கொண்டிருந்த பயங்கரத்திலிருந்து தப்பிக்க மக்கள் வெள்ளத்தில் கலந்து கொண்டார்கள். அவர்கள் தங்களுக்குச் சொந்தமானவைகள் எல்லாவற்றையும் பிரிந்து, புதிய நாட்டில் அகதிகள் ஆனார்கள். இக்கதை வீடு என்பதின் உட்பொருளை ஆராய்கிறது. எப்படி தங்கள் இடத்தில் இருந்து பிரிந்து வந்துவிட்ட பிறகு, மீண்டும் தங்கள் இடத்திற்கு திரும்பிச் செல்ல வழி இல்லாமல் தவிக்கிறார்கள் என்பதையும் விவரிக்கிறது.

- Livingson Remi

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

“டிப் டிப், டுப் டுப்!” மழையோடு சேர்ந்து நானும் பாடினேன். பள்ளியில் இருந்து வீட்டுக்குச் செல்லும் வழியில் சிறு மழைநீர்க் குட்டைகளைத் தாவிக் கடந்து சென்றேன். எங்கள் வீடுகளைப் போர்த்தி இருக்கும் நெளிவு நெளிவான தகரக்கூரைகளும் என்னுடன் சேர்ந்து பாடின. “டிப் டிப்,                                                               டுப் டுப்”.

எனக்கு மழையை மிகவும் பிடிக்கும். சில நேரங்களில் எனக்கு அதைப் பிடிக்காமல் போய்விடும். அது பீட்ரூட் அளவு மோசமானது கிடையாது. இருந்தாலும் வானம் சோகமாக இருக்கிறதா அல்லது மகிழ்ச்சியாக இருக்கிறதா என்று தெரியாதபோது எரிச்சல் வரும். “மறுபடியும் மழையா?” என்று மேகங்களிடம் முறையிடுவேன். மறுபடியும் மேகம், முடிவே இல்லாமல் மழைத்துளிகளைத் தெளித்து ஆற்றைப் போல் ஓட விடும்.

அப்பா சொன்னார், பெயிசெங் கிராமத்தில் பல தலைமுறைகளாக நம் குடும்பம் வசித்து வருகிறது. நம்முடைய தாத்தா பாட்டிகளின் பூட்டிகளின் அவர்களின் பூட்டிகளின் அவர்களின் பூட்ட பூட்டிகளின் அவர்களின் பூட்ட பூட்ட பூட்ட பூட்டிகளின் தலைமுறைகளாக முந்நூறு வருடங்களுக்கு மேல் இங்கே வாழ்ந்து வருகிறோம். வெவ்வெறு வகையான மிகச் சிறந்த துப்பட்டிகளையும் தோள் துண்டுகளையும் நெய்வோம். எனக்கு அப்பா செய்யும் துப்பட்டிகளைத்தான் பிடிக்கும். அது மிகவும் பெரியதாகவும் மென்மையானதாகவும் இருக்கும். அதை என் கைகளுக்கு அடியில் இடுக்கி வைத்துக்கொண்டு தூங்குவேன்.

அம்மா நூல்களுக்கு பதிலாக, வார்தைகளை நெய்வாள். அம்மாதான் ஊரில் சிறந்த கதை சொல்லி. அவர் கதை சொன்னால் நாடகம் பார்ப்பது போல இருக்கும். ஆனால் அபு, வயதான ஆமையைப் போல மெதுவாக கதைகளைச் சொல்வார். எங்கள் ஊரைச் சுற்றி அரிசி வயல்கள் இருந்தன. பச்சைப் பசேலென கண்ணுக்கெட்டின வரை வயல்கள். எங்கள் மூங்கில் வீடுகள் வானத்தின் வெள்ளிகளைப் போல் சிதறிக் கிடந்தன.

எங்களுடைய நாடு மிகப் பெரியது, ஆனால் எல்லா இடங்களுக்கும் போய்வர எங்களுக்கு அனுமதி இல்லை. நம்மைப் போன்று இருப்பவர்களின் இடங்களுக்கு மட்டும்தான் போக வேண்டுமென அம்மா சொன்னார். அதிஷ்டவசமாக, எங்கள் கிராமத்தில் எல்லாமும் இருந்தன - என் குடும்பம், நண்பர்கள், விளையாட வயல் வெளிகள். ஆனால் மருத்துவர் மட்டும் இல்லை.

ரயிலின் கூ...கூ சத்தத்தைவிட அதிகமுறை தும்மத் துவங்கினேன். அதனால் அம்மா மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். அவர் மிகவும் தொலைவில் இருந்தார். அங்கு செல்ல இரண்டு மணி நேரம் ஆனது. நாங்கள் மருத்துவமனையை விட்டு வெளியே கிளம்பும்போது, மசூதியின் ஒலிப்பெருக்கியில் வந்த சத்தத்தைக் கேட்டோம். தொழுகை சத்தத்திற்குப் பதிலாக, இமாமின் எச்சரிக்கைக் கூக்குரல் கேட்டது.

“மேற்குப் பக்கமாக ஓடுங்கள், எல்லோரும் மேற்குப் பக்கமாக ஓடுங்கள். கையில் இருப்பதை எடுத்துக் கொண்டு ஓடுங்கள். யாரும் வீட்டுக்குப் போக வேண்டாம். எதற்கும் நேரம் இல்லை. ஆயுதம் ஏந்தியவர்கள் நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வரும் வழியில் எல்லாவற்றையும் தீயிட்டு அழிக்கிறார்கள். அவர்கள் வழியில் குறுக்கிடும் எவரையும் கொன்று விடுவார்கள் என்று பயப்படுகிறோம். மேற்குப் பக்கம் ஓடுங்கள். ஓடுங்கள்.” இமாமின் குரலில் பீதியிருந்தது.

என்னுடைய கையில் இருந்ததெல்லாம் அம்மாவின் கை மட்டுமே. அதை இறுக்கிப் பிடித்துக்கொள்ள மட்டுமே என்னால் முடிந்தது. மற்றவர்கள் அனைவரும் தங்கள் கையில் எதையாவது பிடித்துக்கொண்டோ                         அல்லது யாரையாவது                              சுமந்து கொண்டோ                               வந்தார்கள்.

நாங்கள் ஓடிக்கொண்டிருந்தோம். மேற்குப் பக்கமாக நூற்றுக்கணக்கான மக்களுடன் ஓடிக் கொண்டிருந்தோம்.

சிறு சிறு மழைத்துளிகள் சேர்ந்து ஆற்றை உருவாக்குவது போல், நாங்களும் மேற்குப் பக்கமாக ஓடும் ஆறாக மாறினோம். நடந்தோ, ஓடியோ, தடுமாறிக்கொண்டோ போய்க்கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் ஒரு மழைத்துளி ஆனோம்.

முடிவே இல்லாத அந்த ஆறு, அரிசி வயல்களையும், பழத் தோட்டங்களையும், காடுகளையும், குன்றுகளையும், ஆறுகளையும் தாண்டி ஓடியது. புதிதாக நீர்த்துளிகள் சேர்ந்து கொண்டன. நிறைய பேர் வழியிலே காணாமல் போனார்கள்.

ஆனால், என் நேசத்துக்குரிய நீர்த்துளிகளான - அபு, அப்பா, மாமியும் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த வேறு பலரும் ஆற்றில் சேரவே இல்லை.

அம்மா, எல்லைக்கோடு என்று சொன்ன இடத்தையும் மக்கள் நதி கடந்தது. நாங்கள் புதியதொரு நாட்டில் இருப்பதாகச் சொன்னார் அம்மா. ஆனால் இந்தப் புதிய இடமும் எங்கள் இடத்தைப் போலவே இருந்தது.

ஆறுகளுக்கு தாங்கள் எல்லையைக் கடந்துவிட்டோம் என்று தெரியுமா? இல்லை, அவற்றுக்கு எல்லை என்றால் என்னவென்றே தெரியாதோ?

நாங்கள் திறந்த வானத்தின் கீழ் ஒரு தரிசு நிலத்தில் இருந்தோம்.

ஒரு பக்கம் தொடுவானத்துக்கு அப்பால் என் வீடு இருக்கின்ற திசையில் நெல் வயல்கள். இன்னொரு பக்கம் நகரம் ஒன்று சமுத்திரத்தில் போய் முடிகிறது.

வெறும் நிலத்தில் குடில்களும் கூடாரங்களும் முளைக்கத் தொடங்குகின்றன.

உணவு இங்கே விளைவதில்லை. மக்கள் எங்களுக்குத் தந்து உதவுகிறார்கள். தண்ணீர் கிணற்றில் இருந்து வருவதில்லை. அதற்குப் பதிலாக பெரிய பார வண்டிகளில் வருகிறது.

அம்மா நாங்கள் இங்கே பத்திரமாக இருப்பதாக சொல்கிறார். ஆனால் அபு, அப்பா, மாமி இவர்களுக்கு என்ன ஆனது? அவர்கள் பத்திரமாக இருக்கிறார்களா?

என்னைச் சுற்றி பார்த்துக் கொண்டேயிருக்கிறேன். பத்திரமாக இருப்பது என்பது திறந்த வெளியில் கண்ணுக்குத் தெரியாத கவசத்தால் பாதுகாக்கப்படுவது போல.

இங்கிருந்து என்றாவது ஒரு நாள் தங்கள் வீட்டுக்குப் போவோம் என்ற நம்பிக்கையில் பலர் வாழ்கிறார்கள்.

வீடு இல்லாமல் பத்திரமாக இருப்பதாக உணரமுடியுமா, என்ன? என் குடும்பத்தினரும், நண்பர்களும் இன்றி பத்திரமாக உணர முடியுமா?

இப்பொழுதெல்லாம், எங்கள் வீடு எங்கே இருக்கிறது என்று நினைத்து ஆச்சரியப்படுகிறேன்?

வீடு இங்கே இருக்கிறதா?

இல்லை என்னுடைய குடும்பம் இருக்கும் இடத்தில் இருக்கிறதா?

இரண்டு இடங்களிலும் ஒரே நேரத்தில் வீடு இருக்க முடியுமா? என் இதயத்தின் ஒரு பகுதி பெயிசெங்கில் இருக்கிறது. அங்கே திரும்பிப் போகப் போவதில்லை என்றாலும் அது வீடாக இருக்க முடியுமா?

பள்ளி தொடங்கியது. இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. அபு, அப்பா, மாமி என நான் நேசிக்கும் எவரும் வரவில்லை.

அம்மாவும் நானும் இன்னும் இங்கேயே இருக்கிறோம். நாங்கள் இந்த முகாமை விட்டு வேறு எங்கேயும் செல்லக் கூடாது என உத்தரவிட்டிருக்கிறார்கள். ஆனால் எல்லோரும் இங்கே நிரந்தரமாகத் தங்க முடியாது என்று சொல்கிறார்கள்.

ஒரு பக்கம் பெயிசெங்கிற்கு செல்லும் சாலை இருக்கவே இருக்கிறது. இன்னொரு பக்கம் கடல். சில நேரங்களில் எங்களுக்கு அங்கிருந்து தப்பிவிடத் தோன்றும். ஆனால் இன்று, எனக்குப் பள்ளிக்கூடம் இருக்கிறது.

“ஹசீனா! உன் புத்தகங்களை ப்ளாஸ்டிக் உறையில் போட்டாயா?” அம்மா, நான் பள்ளிக்கு மழையில் நனைந்து ஓடத் தொடங்கும்போது கத்தினார்.

“ஆமாம் அம்மா, போட்டுவிட்டேன்” என்று நான் கத்தினேன். வீடுகளை மூடியிருக்கும் உறைகளின் மேல் மழை பாடிக்கொண்டிருந்தது. “டிப் டிப்,                 டுப் டுப்.”