veyil mazhaip paattu

வெயில் மழை பாட்டு

மழைநாள் ஒன்றில் வெயில் அடிக்கும்போது, காட்டின் எல்லா விலங்குகளுக்கும் என்ன நடக்கப் போகிறதெனத் தெரியும்: குள்ளநரிகளின் திருமணத்தில் இசையும் மாயாஜாலமும்! திருமண விருந்தினர்கள் ஒவ்வொருவரும் ஒரு ஒலித் துண்டைக் கொண்டுவந்தார்கள். சிலர் தாளத்தையும், சிலர் சுதியையும் கொண்டுவந்தார்கள். பிரபலமான வெயில்-மழைக் கதையின் இந்த வடிவத்தைக் கேட்க வாருங்கள்.

- Praba Ram,Sheela Preuitt

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

“உங்கள் திருமணத்தைப் பற்றித் திரும்பவும் சொல்லுங்கள். காட்டின் இசை, வெயில்-மழை, பாடும் பறவைகள்எல்லாவற்றையும் பற்றிச் சொல்லுங்கள்” என்று இளம் குள்ளநரி தன் அம்மாவிடம் கேட்டது.

“அந்த காலைப்பொழுது இன்னமும் நன்றாக ஞாபகம் இருக்கிறது, என் செல்லக்குட்டியே! நானும், உன் அப்பாவும் வனத்தின் மையத்திலிருந்த திறந்தவெளியில் நின்று வானிலை மாறவேண்டும் என்று வேண்டிக்கொண்டிருந்தோம்.வானம் பொன்னிற, கருப்பு மற்றும் நீல வெள்ளி நிறங்களில்வரிவரியாக இருந்தது.காற்று குளிர்ச்சியாகவும் ஈரமாகவும் இருந்தது.எங்கள் விருந்தினர்கள், பலப்பல ஓசைகளைப் பரிசாக எடுத்துக்கொண்டு வந்துகொண்டிருந்தார்கள்.”

“தங்கள் பெரிய, விரிந்த காதுகளால், யானைகள்தான்முதலில் எங்கள் திருமணத்தைப் பற்றிக் கேள்விப்பட்டன. அவை திறந்தவெளிப் பகுதிக்கு டங் டங் என்று இடி இடிப்பது போல் நடந்து வந்து முழு வனத்தையும் அதிர வைத்தன.”

“யானைகள் தங்கள் மாபெரும் கால்களால் ஓங்கி நிலத்தில் மிதித்தன. தும்பிக்கையால் பிளிறி ஓங்கிக் குரல் எழுப்பின:

பூம்-பூம்-பூம்- ஹுவாஆன்ன்ன்! பூம்-பூம்-பூம்-ஹுவாஆன்ன்ன்!”

“அந்தச் சத்தத்தில் தூக்கத்திலிருந்து எழுந்த குரங்குகள் மேலும் கீழும் குதித்ததில், மரக்கிளைகள் கிறீச்சிட்டன, இலைகள் சலசலவென்று சத்தமிட்டன:

ஷிகி-ஷிகி-ஷிகி-கிராக்! ஷிக்-ஷிக்கி-ஷிக்கி-ஹையீஈஹ்!”

“இது, தத்தமது கூடுகளிலிருந்த மரங்கொத்திகளையும் அணில்களையும் எழுப்பி விட்டது. அவை பதட்டத்துடன், மரங்களின் மீது கொத்தவும் மரப்பட்டையை மெல்லவும் தொடங்கின:

டட்டாரா-டட்டாரா-டட்டாரா-டட்டா-டா! ச்ச்ச்-ச்ச்-ச்சிர்ர்ர்-ச்சிர்ர்ர்! ச்ச்ச்-ச்ச்-ச்சிர்ர்ர்-ச்சிர்ர்ர்!”

“அப்புறம் அந்தப் பறவைகள்?”

“இன்னும் அவை வரவில்லை.”

“அடுத்து வந்தது, பெரிய மாமா கரடி! அவர் தனது விசிலடிக்கும் குழலைக் கொண்டு வந்தார். அதை அவர் காற்றில் ஆட்டிய போது, டி-டீ-டூடலே-டீ! டி-டீ-டூடலே-டீ! என்று சத்தமிட்டது.”

“ஹாஹாஹா, எனக்கு மிகவும் பிடித்த பெரிய மாமா கரடி! பிறகு யார் வந்தது? பாடும் பறவைகள்தானே?”

“பறவைகள் இன்னும் மலைகளின் மேலேதான் பறந்து வந்து கொண்டிருந்தன. அடுத்ததாக தங்கள் கொம்புகள் மீது சிக்கியிருந்த நாணல் புற்களோடு மான்கள் வந்தன. அவை தங்கள் கொம்புகளை, பூச்செடிப் புதர்கள் மீது இடித்தபோது, முட்கள் அந்த நாணற்புற்களைச் சுண்டி இழுத்ததால், ஒரு வித்தியாசமான ஒலி எழும்பியது:

த்வாங் - த்வாங்-டோய்ய்ய்ங்! டோய்ய்ய்ங் -த்வாங்-டோங்ங்!”

“அப்பொழுதுதான் அந்தப் பறவைகள் வந்தன.”

“அப்பாடி, ஒருவழியாக!”

“கருப்புப் பறவைகள், நீலப் பறவைகள், சிவப்புப் பறவைகள் மற்றும் மஞ்சள் பறவைகள். பெரிய மற்றும் சிறிய பறவைகள்.

அவர்கள் சுழன்று சுழன்று, சுற்றிப் பறந்து, எங்கள் மீது இறகுகளைப் பொழிந்தனர்.

பின்னர் அவர்கள் பாடினார்கள்! ஓ! என்ன அற்புதமாகப் பாடினார்கள், தெரியுமா?!”

“விரைந்து செல்லும் காற்றின் பாடல், விடியற்காலைச் சூரிய ஒளியின் பாடல், மழையின் பாடல் போன்றவற்றைப் பாடினார்கள். பின்னர் தங்கள் பாடல்களை ஒரே நேரத்தில், ஒன்றோடொன்றைப் பின்னியும் இணைத்தும் பாடினார்கள். அதை ஒரு குளிர்ந்த-வெதுவெதுப்பான மெல்லிசையாக மாறும்வரை பாடினார்கள்.”

“வெயில்-மழைப் பாடல்!”

“ஆமாம்! அதேதான், என்னருமை செல்லக்குட்டியே!”

“பறவைகள் பாடி முடித்ததும் சீரிகைப்பூச்சிகள்,  வெட்டுக்கிளிகள் மற்றும் சில்வண்டுகள் மண்ணிலிருந்து வெளிவந்து

கைத்தட்டி ரீங்காரமிட்டு ஆரவார ஓசை எழுப்பின:

ர்ர்ர்ர்....க்ரீஈஈஈஈ.......ட்ரீரீரீரீ... ப்ர்ர்ர்ர்ர்...கீஈஈஈஈ......ர்ர்ர்ர்!”

“தவளைகளும் தேரைகளும், ஒருவர் மீது ஒருவர் தாவிக்குதித்து, இடறி விழுந்து, ஆமோதிப்பாக ஆரவாரித்தனர்: கய்-கய்-க்குவா-க்குவா-க்குவா! கய்-கய்-க்குவா-க்குவா-க்குவா!

அவர்கள் எல்லோருக்குமே அந்தப் பாடலின் அர்த்தம் தெரியும் - அது, முதல் கோடைமழை வருகிறது என்பதே!

“பாடல் முடிந்து மூச்சுவாங்கி முடிப்பதற்குள், வானம் இருட்டி உருட்டி, முக்கி முனகி, பொழியத் தொடங்கியது. அந்த மழைத்துளிகளின் வழியாக சூரிய ஒளி பாய்ந்து, வண்ணமயமான கதிர்களாகி, வானில் வில் போல் வளைந்து நின்றது.”

“அம்மாடியோவ்!”

“ஆமாம்! இப்படித்தான், நானும் உன் அப்பாவும் திருமணம் செய்துகொண்டோம்.”

“பறவைகள் எனக்காகவும் வருகை தருமா, அம்மா? என் திருமணத்திலும் வெயில்-மழை பெய்யுமா? வானத்தை வண்ணங்கள் நிறைக்குமா?”

“விரைவில் தெரிந்துவிடும், என் செல்லக்குட்டியே” என்று அம்மா குள்ளநரி கூறியது.

“வெளியே சென்று உன்னுடைய முதல் விருந்தினர்கள் வந்துவிட்டார்களா என்று பார்க்கலாம், வா!”