visiladikkum vinjaana vedikkai

விசிலடிக்கும் விஞ்ஞான வேடிக்கை

பிரஷர் குக்கர் மூன்று விசில் அடித்தவுடன் அடுப்பை அணைக்குமாறு அம்மா நிவியிடம் சொல்கிறார். ஆனால் நிவிக்கோ தன்னுடைய புதிய புத்தகத்தைப் படிப்பதில்தான் ஆர்வம். அவள் புத்திசாலித்தனமாக எப்படி இரண்டையுமே செய்கிறாள் என்று பார்ப்போமே.

- Irulneeki Ganesan

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

“நிவி! குக்கர் மூன்று விசில் அடித்தவுடன் அடுப்பை அணைத்துவிடு, சரியா?” என்றார் அம்மா.

அவர், இரவு சமையலுக்கு காய்கறிகள் வாங்குவதற்காக சந்தைக்குப் போகிறார்.

நிவி மூஞ்சியைத் தூக்கிவைத்துக் கொண்டாள். டப்! படித்துக்கொண்டிருந்த புத்தகத்தை தரையில் வைத்தாள். வே! குக்கரை நோக்கி நாக்கைத் துருத்தி அழகு காட்டினாள்.

நிவி காலால் தரையில் தாளம் போட்டுக்கொண்டு நின்றாள்.

குக்கர் விசிலடிப்பதற்காக காத்திருந்தாள்; காத்துக் கொண்டேயிருந்தாள்.

திடீரென்று அவளுக்கு ஒரு யோசனை தோன்றியது.

நிவி சப்பாத்திக் குழவியை எடுத்து அதை சமையல்வாயு அடுப்பின் விசைக்குமிழின் அருகே வைத்தாள்.

அதன் பின், தக்காளிகளையும் உருளைக்கிழங்குகளையும் வரிசையாக வைத்தாள்.

அடுத்ததாக பருப்பு - ரசம் கலக்கும் கரண்டியை எடுத்தாள். நிவி, அதை குக்கரின் மேலே இருந்த அலமாரியின் ஓரத்தில் மிகக் கவனமாக வைத்தாள்.

அதை ஒட்டி வரிசையாக, அம்மம்மாவின் ஐந்து தேக்கரண்டிகளை குத்திட்டு நிற்க வைத்தாள். இந்தத் தேக்கரண்டிகளைத்தான் அம்மம்மா தன்னுடைய நீர்த்த கிச்சடியைப் பருகப் பயன்படுத்துவார்.

கடைசியாக, நிவி தனக்கு மிகவும் பிடித்த பிளாஸ்டிக் பந்தை பிரஷர் குக்கரின் நீராவி வெளியேறும் வாய்க்கு நேராக பலகையில் வைத்தாள்.

உஷ்! பந்து கொஞ்சம் அசைகிறது.

உஷ்ஷ்! பந்து இன்னும் கொஞ்சம் நகர்கிறது.

உஷ்ஷ்ஷ்! மூன்றாவது முறையாக பந்து உருண்டேவிட்டது.

நிவி மகிச்சியில் துள்ளிக் குதித்தாள்; கைதட்டி, நடனமாடிக்கொண்டு விசில் அடித்தாள்!

உருண்டு வந்த பந்து, அந்தத் தேக்கரண்டிகளை இடித்தது.

தேக்கரண்டிகள் கரண்டியின் மேல் விழுந்தன.கரண்டி பலகையிலிருந்துசுழன்று வீசி விழுந்தது. டொன்டடாய்ங்!

கரண்டி உருளைக்கிழங்குகளை உருட்டியது.

உருளைக்கிழங்குகள் உருண்டு தக்காளிகளைத் தள்ளின.

தக்காளிகள் குழவியின் மேல் குவிந்தன.

குழவி அடுப்பின் விசையைத் தட்டியது.

அடுப்பின் விசை சுழன்றது. அடுப்பும் அணைந்தது. சில நிமிடங்களுக்குப் பின், நிவி பிரஷர் குக்கரை கவனமாகத் திறந்தாள். உள்ளே சரியான பதத்தில் வெந்த, ருசியான சோறு! யம்ம்!

நிவி மகிழ்ச்சியுடன் மீண்டும் தன் புத்தகத்தைப் படிக்கத் துவங்குகிறாள்.

உங்களுடைய மேதாவித்தனத்தினால்நீங்களே ஒரு இயந்திரத்தை நிறுவுங்கள்

நிவி, ‘ரூப் கோல்டுபெர்க்’ என்றழைக்கப்படும் ஒரு வகை

இயந்திரத்தை நிறுவுகிறாள். இது ‘செயலும் விளைவும்’ என்னும் கொள்கையின் அடிப்படையில் இயங்குகிறது. நீங்கள் ’கேரம் போர்டி’ல் ஒரு வில்லையை அடிப்பானால் அடிக்கும்போது, எப்படி அது இன்னொரு வில்லையின் மேல் மோதி, அந்த இரண்டாவது வில்லையை நகர்த்தி பைக்குள் போய் விழச்செய்கிறதோ, அதே போலத்தான்இது இயங்குகிறது!

ஒரு ‘ரூப் கோல்டுபெர்க்’ இயந்திரத்தில், எளிதான பணிகளைச் செய்ய ஏவப்பட்டு அணிவகுத்து நிற்கும் பொருட்கள் அனைத்தும் சேர்ந்து, ஒரு பொது இலக்கை சிக்கலான வழியில் அடைகின்றன. ஆம், சில செயல்களை எளிமையாக செய்துவிடலாம் தான். ஆனால், அதைச் செய்ய ஒரு இயந்திரத்தை நிறுவுதல் வேடிக்கை நிறைந்த செயல் அல்லவா?

ஒரு தேக்கரண்டியை விழச்செய்ய நீங்களே ஒரு ’ரூப் கோல்டுபெர்க்’ இயந்திரத்தை நிறுவலாம். இதோ இப்படித்தான்:

தேவையான பொருட்கள்:

உருளை போல் சுருட்டப்பட்ட ஒல்லியான புத்தகம் 1, சரிவாக வைத்திட வழவழப்பான குச்சிகள் 2, தடிமனான புத்தகங்கள் 2, அளவுகோல்கள் 2, மார்க்கர் 1, அழிப்பான் 1, பந்து 1, நோட்டுப்புத்தகங்கள் 3, இலேசான பிளாஸ்டிக் ஜாடி 1, கயிறு ஒரு பந்தளவு, தேக்கரண்டி 1, பாத்திரம் 1, மெலிதான கோல் 1.

புத்தக உருளையை அந்தச் சரிவில் உருட்டுங்கள். உருளை, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இரண்டு புத்தகங்களை இடிக்கும். புத்தகங்கள், மார்க்கரின் மேல் தராசு போல் சமநிலையில் வைக்கப்பட்டுள்ள அளவுகோல் மேல் விழும். இதனால் பந்து இலேசாகத் தட்டப்படும்.

இப்போது, பந்து மூன்று நோட்டுப் புத்தகங்களைத் தாக்கும். அவை அழிப்பானின் மேல் தராசு போல் சமநிலையில் வைக்கப்பட்டுள்ள இரண்டாவது அளவுகோலின் நுனியில் விழும். அளவுகோலின் இன்னொரு நுனியில் வைக்கப்பட்டுள்ள ஜாடி, ஒரு துண்டுக் கயிறுடன் இணைக்கப்பட்டிருக்கும்.

துண்டுக்கயிறு மேலேயுள்ள மெல்லிய கோலைத் தாண்டித் தொங்கும்.  அளவுகோலின் மீது மூன்றாவது நோட்டுப்புத்தகம் விழும்போது ஜாடியை மேலே எழுப்பி, கயிற்றை கீழேயிறக்கி, தேக்கரண்டியை  பாத்திரத்தினுள் விழச்செய்யும்.