vithai serkkum vilaiyattu

விதை சேர்க்கும் விளையாட்டு!

விதை சேர்க்கச் செல்லும் டூகா, போயி, மற்றும் அவர்களுடைய தோழியான நாய் இஞ்சியுடன் நீங்களும் சேர்ந்துகொள்ளுங்கள். இந்த மூன்று நண்பர்களும் பச்சா எனும் புளியமரத்தைச் சந்திக்கிறார்கள், பல சுவையான விஷயங்களைத் தெரிந்துகொள்கிறார்கள்.

- PSV Kumarsamy

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

பொருட்களைச் சேகரிப்பதென்றால் டூகா, போயி இருவருக்கும் கொள்ளைப் பிரியம். ஆற்றங்கரையில் இருக்கும் வழவழப்பான கூழாங்கற்கள், பள்ளிச் சீருடையிலிருந்து அறுந்து விழுந்திருக்கும் பளீர் சிவப்புப் பொத்தான்கள் என்று எதுவாக இருந்தாலும் டூகா, போயி இருவரும் அவற்றை ஓடிச் சென்று எடுத்துக்கொள்வர்.

தினமும் பள்ளி முடிந்தபிறகு, ஆற்றங்கரையோரமாக வளைந்து நிற்கும் தென்னை மரத்தின் அருகே அவர்கள் இருவரும் தங்களுடைய அருமைத் தோழிக்காக காத்திருப்பார்கள்.

சரியாக மாலை ஐந்து மணிக்கு, ஒரு பழைய பள்ளிப் பேருந்தைப் போல மூச்சிறைத்தபடியே இஞ்சி அங்கு வந்து சேர்வாள். தோழமையான நாயான இஞ்சியின் கண்கள் சாக்லேட் நிறத்திலிருக்கும். அவள் வால் எப்போதும் ஆடிக்கொண்டே இருக்கும்.

டூகா, போயி இருவரும் இஞ்சியுடன் ஒன்றாக நடப்பார்கள். அவர்கள் மூவருடைய தலைகளும் குனிந்தே இருக்கும். சாலையிலும் புல்லின்மீதும் பாசி படிந்த பாறைகளுக்கு இடையேயும் ஏதேனும் சுவாரசியமான பொருட்கள் உள்ளனவா என்று தேடி அவர்களுடைய கண்கள் அலைபாயும். விதைகளைச் சேகரிப்பதுதான் அவர்களுக்கு இருப்பதிலேயே பிடித்தமான விஷயம்.

டூகா, போயி இருவரும் பளபளப்பான செந்நிற விதைகளையும், தங்கள் ஆடையில் வந்து ஒட்டிக் கொண்ட முட்களுடன் கூடிய விதைகளையும் கொன்றை மரத்தின் பெரிய காய்களையும் சேகரிப்பார்கள். அவர்கள் அந்தக் காய்களைக் குலுக்கும்போது, அவற்றுள் இருக்கும் விதைகள் ஒன்றோடொன்று மோதிச் சத்தம்போடும். அதைக் கேட்டு இருவரும் மகிழ்ச்சி அடைவார்கள். அந்த விதைகள் ஏற்படுத்தும் சத்தத்துக்கு ஏற்ப வேடிக்கையான பாடல்களை உருவாக்குவது போயிக்கு மிகவும் பிடிக்கும்.

“இஞ்சிதான் நாய்களிலே ரொம்ப சிறந்தவள். பெரிய மலர்கள், குட்டித் தவளைகளை ரசிப்பவள். பறவைகள், விதைகள், எறும்புகள், நத்தைகளையும்தான். ஆனால், எல்லாவற்றையும் விட அவளுக்குப் பிடித்தது அவளுடைய வால்தான்!’ போயி இதுபோன்ற பாடல்களைத் தொடர்ந்து பாடிக்கொண்டேயிருப்பாள். டூகாஅதைக் கேட்டுச் சிரிப்பான். இஞ்சியும் மகிழ்ச்சியாகக் குரைப்பாள்.

ஒருநாள், டூகா, போயி, இஞ்சி மூவரும் ஒரு புளியமரத்தின் அருகே உட்கார்ந்திருந்தார்கள். அம்மரத்தைச் சுற்றிலும் விழுந்து கிடந்த புளியம்பழங்கள் டூகாவுக்கு மிகவும் பிடிக்கும். அதற்குள் இருக்கும் பளபளப்பான விதைகள் வெளியே வரும்வரை, அந்தப் புளிப்பான பழங்களை உறிஞ்சி ருசித்தான். புளிப்பால் அவனுடைய முகம் கோணலானது. அவனுடைய பிடரி மயிர் குத்திட்டு நின்றது.

அப்போது, “ஹலோ...” என்று ஒரு சிறிய கீச்சுக்குரல் அவர்களுக்குக் கேட்டது. டூகா,போயி இருவரும் குழப்பத்தோடு ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். அங்கு வேறு யாரும் அவர்கள் கண்களுக்குத் தென்படவில்லை. “மேலே பாருங்கள்! மேலே பாருங்கள்!” என்று அந்தக் குரல் கூறியது. டூகா,போயி இருவரும் மேலும் கீழும் பார்த்தனர், சுற்றுமுற்றும் பார்த்தனர். ஆனால் யாரும் அங்கு அவர்களுக்குத் தென்படவில்லை.

“நான்தான் புளியமரம் பேசுகிறேன், என் பெயர் பச்சா.”

இஞ்சி சத்தமாகக் குரைத்து, வழக்கத்தைவிட வேகமாக வாலாட்டினாள். பட்-பட்-பட் என அவள் வால் அடித்துக்கொண்டது.

“அட! ஹலோ, இஞ்சி! உன்னைப் பல நாட்களாக நான் இங்கு பார்க்கவில்லையே” என்றது அந்தப் புளியமரம்.

டூகாவும் போயியும் அதிர்ச்சியில் சிலையானார்கள். அவர்களுடைய கண்கள் அகலமாக விரிந்திருந்தன. அவர்களுடைய வாய்கள் ஆச்சரியத்தில் பெரிதாகத் திறந்திருந்தன.

முடிவாக, போயி ஒரு வெட்கப் புன்னகையுடன், “ஹலோ புளியமரமே! என் பெயர் போயி. உன்னைச் சந்திப்பதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி!” என்றாள். பிறகு, அந்த மரத்தைக் கட்டிப்பிடித்துக்கொண்டாள்.

அந்தப் புளியமரம் கூச்சமாகச் சிரித்தது. “இதற்குமுன் எந்தச் சிறுமியும் என்னைக் கட்டிப்பிடித்ததே இல்லை. எனக்குக் கிச்சுக்கிச்சு மூட்டுவதுபோல் இருக்கிறது!” என்றது.

“எங்களுக்கும் இது புதிய அனுபவம்தான். நாங்கள் பேசும் மரங்களைப் பார்த்ததே இல்லை” என்று டூகா மகிழ்ச்சியாகக் கூறினான். இதைக் கேட்டு அந்த மரம் பெரிதாகச் சிரித்தது. இதனால் அதன் இலைகள் பச்சை நிறத்தில் ஒளிர்ந்தன.

“நீங்கள் இருவரும் இன்று என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?” என்று அந்த மரம் கேட்டது.

“சும்மா, கையில் சிக்கும் பொருட்களையெல்லாம் சேகரித்துக் கொண்டிருக்கிறோம்” என்று டூகா, போயி இருவரும் கூறினர்.

பிறகு அவர்கள் மலர்களும் கூழாங்கற்களும் புளியம்பழங்களும் நிறைந்த தங்கள் பையைத் திறந்து காட்டினார்கள். அவற்றை ஆர்வத்துடன் பார்த்த அந்த மரம், “நீங்கள் விதைகளைச் சேகரிப்பது அருமையான விஷயம்” என்றது. “உங்களுக்குத் தெரியுமா? உங்கள் பையிலிருப்பது போன்ற சிறிய புளியவிதைகளில் ஒன்றிலிருந்துதான் நான் உருவானேன். இப்போது என்னைப் பாருங்கள், பல கிளைகளோடு பெரிதாக வளர்ந்திருக்கிறேன். அணில்கள், குருவிகள், காக்கைகளின் குடும்பங்களெல்லாம் என்மீது வாழ்ந்துகொண்டிருக்கின்றன.”

“அப்படியா?” என்று டூகா வியப்புடன் கேட்டான். “நீ இத்தனை சிறிய விதையிலிருந்தா பிறந்தாய்?” அப்போது, இஞ்சி ‘லொள்! லொள்! லொள்!’ என்று உற்சாகமாகக் குரைத்தாள். ஆனால் டூகாவுக்கு அது ‘சொல்! சொல்! சொல்!’ என்று கேட்டது. “நீங்கள் சேகரித்துக் கொண்டிருக்கின்ற அந்த விதைகள் எல்லாம் மரங்களின் குழந்தைகள்” என்று அந்தப் புளியமரம் விளக்கியது.

போயி தன் புருவங்களைச் சுருக்கிக்கொண்டு, “அப்படியா? எல்லா விதைகளும் புளியமரங்களாக வளருமா?” என்று கேட்டாள். “புளியமரங்கள் மட்டுமில்லை, மற்ற மரங்கள், செடிகள், கொடிகள்… எல்லாம் விதைகளிலிருந்து வரும்!” என்றது பச்சா. “உங்கள் பையில் ஏதேனும் பழங்கள் இருக்கின்றனவா?” என்று அந்த மரம் கேட்டது. டூகா ‘ஆமாம்’ என்று தலையசைத்தான். பிறகு, தன் பையிலிருந்து ஒரு சின்ன, சிகப்பு ஆப்பிளையும் ஒரு பழுத்த வாழைப்பழத்தையும் எடுத்தான்.

“பிரமாதம்!” என்று அந்த மரம் உற்சாகத்தோடு கூறியது. “இப்போது அந்த ஆப்பிளைக் கடித்தால் அதன் மையப் பகுதியில் இருக்கும் சிறிய, பழுப்பு நிற விதைகளை உங்களால் பார்க்கமுடியும்.”

சட்டென்று ஆப்பிளைக் கடித்தாள் போயி, பிறகு அதை உன்னிப்பாகப் பார்த்து, “ஆமாம், இந்த விதைகள் பளபளப்பான, சிறிய பூச்சிகளைப்போல இருக்கின்றன!” என்றாள்.

“அவை மிகவும் அழகாக இருக்கின்றன, இல்லையா? அந்தச் சிறிய விதைகள் ஆப்பிள் மரங்களாக வளரும்” என்று அந்தப் புளியமரம் கூறியது.

“இப்போது அந்த வாழைப்பழத்தை இரண்டாகப் பிய்த்து அதனுள் என்ன இருக்கிறது என்று பாருங்கள்” என்றது அந்த மரம்.

“வாழைப்பழ விதைகள்!” என்று மகிழ்ச்சியுடன் கூறினான் டூகா. “இவையெல்லாம் தூங்கிக்கொண்டிருக்கின்ற ஒரு மரவட்டையைப் போல இருக்கின்றன!”

“பல்வேறு வடிவங்களிலும் பல்வேறு அளவுகளிலும் விதைகள் இருக்கின்றன” என்று அந்தப் புளியமரம் கூறிக் கொண்டிருந்தபோது, எஞ்சிய ஆப்பிளை இஞ்சி கபளீகரம் செய்துவிட்டாள்.

“இவை எல்லாமே மரக் குழந்தைகளா?” என்று போயி கேட்டாள்.

“ஆமாம்! இவை எல்லாவற்றுக்குள்ளும் ஒரு சிறிய செடி இருக்கிறது. அந்தச் செடிகள் விரைவில் வெளியே வந்து இவ்வுலகைப் பார்க்க ஆவலாகக் காத்துக்கொண்டிருக்கின்றன” என்று அந்தப் புளியமரம் கூறியது.

அன்று மாலை டூகா, போயி, இஞ்சி மூவரும் தங்கள் வீட்டை நோக்கி நடந்தபோது, சாலை நெடுகிலும் இருந்த மரங்கள் அனைத்தையும் அவர்கள் மிகவும் உன்னிப்பாகக் கவனித்தபடி சென்றனர்.

காற்றில் அசைந்தாடும் தென்னைமர இலைகள் எவ்வளவு அழகாக இருக்கின்றன!

செம்மயிற்கொன்றை மரத்தின் சிகப்பு மலர்கள் இந்தப் பளீர் நீலநிற வானத்தின் பின்னணியில் எவ்வளவு அழகாக மலர்ந்திருக்கின்றன!

மாமரத்தின் பட்டைகள் எவ்வளவு அருமையாகவும் சொரசொரப்பாகவும் இருக்கின்றன!

இத்தனை பெரிய மரம் ஒரு சின்னஞ்சிறிய விதையிலிருந்து முளைத்தெழுவது எவ்வளவு அற்புதமாக இருக்கிறது!

அதன்பிறகு டூகா, போயி, இஞ்சி மூவரும் தினமும் மாலையில் சந்தித்துக்கொள்ளும்போது, அவர்கள் தேடும் விஷயமே மாறிவிட்டது.

இப்போதெல்லாம் அவர்கள் விதைகளை நட்டுவைப்பதற்குப் பயன்படக்கூடிய பொருட்களைதான் தேடிக் கண்டுபிடிக்கின்றனர். பழைய காலணிகள், தேங்காய் சிரட்டைகள், பழைய பிளாஸ்டிக் பாட்டில்கள் போன்ற எல்லாவற்றையும் அவர்கள் தங்கள் விதைகளுக்கான தொட்டிகளாக ஆக்கிக்கொண்டனர்.

இப்போது, பச்சாவும் அவர்களுடைய நெருங்கிய நண்பனாகிவிட்டது!

பச்சாவின் விதைக் கையேடுஹலோ! என் பெயர் பச்சா. நான் ஒரு புளியமரம். எனக்குப் பல பெயர்கள் இருக்கின்றன. ஹிந்தியில் ‘இம்லி’ என்று என்னை அழைக்கின்றனர். தமிழில் என் பெயர் ‘புளி’, வங்காள மொழியில் என் பெயர் ‘தென்துல்.’ அறிவியலறிஞர்கள் என்னை ‘டாமரின்டஸ் இன்டிகா’ என்று அழைக்கின்றனர்.என்னுடைய விதை நண்பர்கள் சிலரை நான் உங்களுக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறேன். அவர்களை நீங்கள் உங்கள் சாப்பாட்டுத் தட்டுகளில் பார்த்திருப்பீர்கள்.

மிளகாய்

பொதுப் பெயர்: சிவப்பு மிளகாய்அறிவியல் பெயர்: காப்சிகம் ஆனம்மிளகாய்கள் பல்வேறு வடிவங்களிலும் அளவுகளிலும் நிறங்களிலும் வருகின்றன. இவை உலகம் நெடுகிலும் பயிரிட்டு வளர்க்கப்படுகின்றன.

காபிபொதுப் பெயர்: காபிஅறிவியல் பெயர்: காபியா அராபிகாதினமும் காலையில் உங்கள் பெற்றோர்கள் பருகும் காபி எதிலிருந்து வருகிறது தெரியுமா? காபி பெர்ரிகளில் இருந்துதான்! அந்த பெர்ரிகளின் விதைகள் சேகரிக்கப்பட்டு, வறுக்கப்பட்டு, பிறகு பொடியாக்கப்படுகின்றன. காபி புதர்கள் தென்னிந்தியாவின் மலைப்பகுதிகளில் மிகச் சிறப்பாக வளர்கின்றன.

பலாப்பழம்பொதுப் பெயர்: பலாப்பழம்அறிவியல் பெயர்: ஆர்ட்டோகார்ப்பஸ்ஹெட்டெரோஃபைலஸ்பெர்ரி, ஆப்பிள், வாழைப்பழம், தர்பூசணி, பலாப்பழம் ஆகிய அனைத்துப் பழங்களுக்குள்ளும் விதைகள் இருக்கின்றன. சில விதைகளை நம்மால் உண்ண முடியாது. மாங்கொட்டை அதற்கு ஓர் எடுத்துக்காட்டு. பலாப்பழக் கொட்டைகள் போன்ற சில கொட்டைகள் நீரில் ஊற வைக்கப்பட்டு சமைக்கப்படுகின்றன.

தேங்காய்

பொதுப் பெயர்: தேங்காய்அறிவியல் பெயர்: கோகோஸ் நூசிஃபெராதேங்காய் கடினமானது, பழுப்பு நிறம் கொண்டது. கிட்டத்தட்ட அதன் ஒவ்வொரு பகுதியும் பயனுள்ளதாக இருக்கிறது. தேங்காயின் வெளிப்புறத்தில் உள்ள நார்கள் கயிறுகளை உருவாக்கப் பயன்படுகின்றன. உட்புறம் இருக்கின்ற மிருதுவான தேங்காய் சமையலில் பயன்படுத்தப்படுகிறது. தேங்காய்த் தண்ணீர் மிகவும் சுவையானது. குறிப்பாக, கோடைக்காலத்தில் அதைப் பருகுவோருக்கு அது புத்துணர்ச்சி அளிக்கிறது. நீங்கள் உங்கள் தலையில் தேய்க்கும் எண்ணெயும் இந்தத் தேங்காயில் இருந்துதான் எடுக்கப்படுகிறது.வேர்க்கடலைபொதுப் பெயர்: நிலக்கடலைஅறிவியல் பெயர்: அராக்கிஸ் ஹைப்போகியாஎல்லாத் தாவரங்களும் மண்ணை நேசிக்கின்றன. ஆனால் நிலத்திற்கு அடியில் விளையும் அளவுக்கு வேர்க்கடலைகள் மண்ணை மிகவும் நேசிக்கின்றன. இச்சிறிய விதைகளில் ஏகப்பட்டச் சத்துக்கள் நிரம்பியுள்ளன. சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும் இக்கடலைகளைப் பச்சையாகவோ, வேக வைத்தோ, அல்லது வறுத்தோ சாப்பிடலாம்.

நெல்

பொதுப் பெயர்: அரிசிஅறிவியல் பெயர்: ஓரிசே சட்டீவாஅரிசி மிகப் பிரபலமான ஒரு தானியம். வேறு எந்தவொரு விதையைக் காட்டிலும் இந்தியாவில் அரிசிதான் அதிகமான வீடுகளில் சாப்பிடப்படுகிறது.சாக்லேட்பொதுப் பெயர்: சாக்லேட்அறிவியல் பெயர்: தியோபுரோமா கொக்கோவா (கடவுளின் உணவு என்று பொருள்)அரிசி மிகப் பிரபலமான விதையாக இருக்கலாம். ஆனால், கொக்கோவா விதைதான் எல்லோருக்கும் மிகவும் பிடித்தமானது. குறிப்பாக, ராமுவுக்கும் மீனாவுக்கும். இந்த விதையில் இருந்துதான் சாக்லேட் தயாரிக்கப்படுகிறது. ஒவ்வொரு கொக்காவோ பழத்திலும் சுமார் 30-50 விதைகள் இருக்கும். அவை வறுக்கப்பட்டு, சர்க்கரையும் பாலும் கலக்கப்பட்டு ருசிகரமான சாக்லேட்டுகள் தயாரிக்கப்படுகின்றன.