வணக்கம்! நண்பர்களே !
என் பெயர் பார்கவ். எனக்குப் பூச்சிகள் என்றால் மிகவும் பிடிக்கும்.
ஒவ்வொரு இரவும் அம்மாவிடம் கதைக் கேட்பது எனக்கு பிடிக்கும்.
அதிலும், பூச்சிகளைப் பற்றிய கதை என்றால் எனக்கு ரொம்பவேப் பிடிக்கும்.
மேலும், பூச்சிகளைப் பற்றி அறிய பலப் புத்தகங்களைப் படிப்பேன்.
என் நண்பன் ஆதியுடன் எங்கள் வீட்டின் அருகிலுள்ளத் தோட்டத்திற்குச் செல்வேன்.
அங்கு நாங்கள் பல விதமான பூச்சிகளைப் பார்போம்.
என் அப்பாவுடைய இருகண் நோக்கி (பைநாக்குலர்) மூலம் பல விதமான வண்ண வண்ணப் பூச்சிகளைப் பார்க்கலாம்.
இது என்ன பூச்சி?
இது ஒரு சிலந்தி. எட்டுக்கால்களை உடையப் பூச்சி. இது வாழ்வதற்காக சிலந்தி வலை கட்டுகிறது.
இது என்ன பூச்சி?
இவை மின்மினிப் பூச்சிகள். இந்த பூச்சிகள் ஒளிரும் திறன் வாய்ந்தவை.
இது என்ன பூச்சி?
இவை தேனீக்கள் . இவை பூவில் இருந்து தேனை உறிஞ்சி தேனடையில் தேனாக சேகரித்து வைக்கின்றன.
இது என்ன பூச்சி?
இவை எறும்புகள். எறும்புகள் சுறுசுறுப்பாகவும் ஒன்றைப் பின்பற்றி ஒன்றாக செல்லும். இவை புற்றுகளைக் கட்டி வசிக்கும்.
இது என்ன பூச்சி?
இது ஒரு தும்பி / தட்டான் பூச்சி. இப்பூச்சிகளின் வருகை
பருவமழையை தெரிவிக்கும்.
இது என்ன பூச்சி?
இது எனக்கு மிகவும் பிடித்த பட்டாம்பூச்சி. இந்த கண்ணைக் கவரும் வண்ணத்துப்பூச்சி பூக்களில் இருக்கும் தேனைப் பருகும்.
இன்று நான் நிறையப் பூச்சிகளைப் பார்த்தேன். நான் இப்போ பட்டாம்பூச்சியைப் போல பறந்தோடப் போகிறேன்.
ஆதி!!! எங்கே என்னைப் பிடிப் பார்ப்போம். ஹையா.....!!!!
பூச்சிகள் இயற்கையின் பாதுகாவலர்கள். அவற்றை ஒரு போதும் அழிக்கவோ அல்லது அவற்றை கண்டு அஞ்சவோ கூடாது.
பூச்சிகளைப் பற்றிய அறிவியல் அடிப்படையிலான ஆய்வு மேற்க்கொள்வோரைப் பூச்சியியல் வல்லுநர் என்கிறோம்.
பூச்சி வெங்கட் "பூச்சிகளின் உலகம்" எனும் புத்தகம் எழுதியுள்ளார். இதில் பூச்சிகள் பற்றிய தகவல்கள் மட்டுமின்றி, பல வண்ணப் புகைப்படங்களும் உள்ளன.
இறுதியாக பூச்சிகளைப் பற்றிய ஓர் விடுகதை
மாமா போட்ட பந்தல்; மறுபடி பிரிச்சா கந்தல். அது என்ன?
(விடுகதை விடை: சிலந்தி வலை)