அந்த காட்டில் இருந்த குட்டி யானைக்கு, தான் வந்த முட்டையின் ஓட்டைப் பார்க்கவேண்டும் என்ற ஆசை வந்தது. அந்த முட்டையின் ஓட்டைத் தேடி நடந்தது.
கோழி, மற்ற பறவைகள் மாதிரி தானும் முட்டையில் இருந்துதான் வந்திருப்போம் என்று நம்பியது!
அந்த பக்கம் வந்த மான் குட்டியிடம் தனது சந்தேகத்தைச் சொல்லி, ஆலோசனை கேட்டது.
யானையின் கேள்வியால் குழம்பிய மான்குட்டி, தெரியாதுன்னு சொல்லிட்டு ஓடிப்போயிடுச்சு.
சோகமாக நடந்த யானைக்கு எதிரில், முயல்குட்டி வந்தது. அதனிடமும் தனது ஆசையைச் சொல்லிச்சு.
அதுவும் யோசிச்சுப் பார்த்துட்டு, தெரியாதே என்று சொல்லியது.
குனிந்து நின்ற யானைக்குட்டியை தாவித் தாண்டி ஓடியது முயல்குட்டி.
நாய் குட்டியிடம் கேட்டது.
அதுவும் தெரியாது என்றது.
காட்டு ராஜா சிங்கத்திடம் கேட்டது. அதுவும் தெரியாது என்றது.
குரங்காரிடம் கேட்டது.
கொஞ்ச நேரம் யோசித்துப் பார்த்து...
அதுவும் தெரியாது என்றது.
அப்போது அங்கே தன் கிளியுடன் விளையாடி விளையாடி, அந்த காட்டுப்பகுதிக்குள் வந்துசேர்ந்தாள் கீதா எனும் சிறுமி.
கிளி முன்னால் பறக்க, கீதா அதைத் துரத்திப் பிடிக்கவேண்டும் என்பது அவர்களின் விளையாட்டு.
அப்படி கிளி பறந்து போனபோது, எதிரில் குட்டியானை வந்தது.
அது கிளியிடம் தனது சந்தேகத்தைச் சொன்னது.
அதற்கு கிளி, ‘பாலூட்டிகள்* முட்டை இடமுடியாது’ என்றது.
அப்படியா என்று கேட்டது யானை.
*பாலூட்டிகள் என்றால் என்ன? அம்மா அப்பாவிடம் கேட்கவும்
பின்னால் சிரிக்கும் சத்தம் கேட்டு, யானை திரும்பிப் பார்த்தது.
அங்கே கீதா நின்றிருந்தாள்.
ஏன் சிரிக்கிறாய் என்று கேட்டது யானை.
”இது தெரியாமல் நீ அலைந்தாயேன்னு நினைச்சு சிரிச்சேன்.
சரி! நீ புதிய தகவலை கற்று இருப்பாய் தானே.. என்னை ஒரு ரவுண்ட் கூட்டிக்கொண்டு போவாயா?” என்று கேட்டாள் கீதா.
யானைக்கும் தெளிவு வந்தது.
அதனால், அதுமகிழ்ச்சியுடன்
கீதாவை தன் முதுகில் ஏற்றிக்கொண்டு
ஜாலியாக ரவுண்ட்ஸ் போனது.
***